14 May 2018

உலகப் பழமொழிகள் தொகுப்பு (1-20)


பழமொழிகள் என்பவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. நம் வீடுகளில் பார்த்தாலே தெரியும், பெரியவர்கள் பலர் பழமொழியில்லாமல் பேசவே மாட்டார்கள். பழமொழிகள் என்பவை பாடங்கள். தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு சார்ந்த அனுபவங்களிலிருந்து தோன்றும் பாடங்களே பழமொழிகளாகின்றன. பழமொழிகளே அடுத்தவர்க்குப் பாடமாகின்றன. 

ஒரு நாட்டில் தலைமுறை தலைமுறையாக வழங்கப்படும் பழமொழிகள் வாயிலாக அந்நாட்டின் மற்றும் சமூகத்தின் நிலைப்பாடு, வாழ்வியல், சிந்தனைப்போக்கு, நல்லெண்ண வெளிப்பாடு, பொது குணாதிசயம், பழைமைவாதம், மூட நம்பிக்கை, பெண்களின் நிலை, திருமண பந்தம், தொழிலியல்பு, போர்க்குணம், என பலவற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. மொத்தத்தில் ஒரு நாட்டின் தரத்தை பழமொழிகள் அல்லது சொலவடைகளே நிர்ணயிக்கின்றன.

என் தாத்தாவை நினைத்துக் கொள்கிறேன். எத்தனை எத்தனைப் பழமொழிகள்! தொகுத்துவைக்காமல் போனேனே என்று ஆதங்கமாக உள்ளது.

வைர ஊசிங்கிறதாலே வயித்துல குத்திக்க முடியுமா?
படுத்துட்டு எச்சி துப்பினா மார்மேல தானே விழும்?
ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தானே குடிக்கணும்?
நரி இடம் போனா என்ன? வலம் போனா என்ன? மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி.
ஏரி மேல கோவிச்சுகிட்டு எவனோ கால் அலம்பாம போனானாம்.
மூட்டப்பூச்சிக்கு பயந்து வீட்டக் கொளுத்த முடியுமா?
தோ.. தோ.. ன்னா மூஞ்சிய நக்குமாம் நாக்குட்டி.
முசப் புடிக்கிற நாயை மூஞ்சியப் பார்த்தாலே தெரியாதா?
நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்.. நீ அழுவுற மாதிரி அழுங்கிறது.
உடையவன் பார்க்காத பயிர் ஒரு மொழம் கட்டை.
கட்டிக்குடுத்த சோறும் சொல்லிக் குடுத்த சொல்லும் எத்தனை நாளுக்கு வரும்?
மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்காது.

தாத்தா பேச்சுக்கிடையில் பயன்படுத்தியப் பழமொழிகளை இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் உலகநாடுகள் பலவற்றிலும் புழங்கப்படும் பழமொழிகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தபோது கிடைத்த சில சுவாரசியப் பழமொழிகள் அவற்றைப் பகிரும் எண்ணத்தைத் தோற்றுவித்தன. அவற்றுக்கு நிகராக தமிழ் உள்ளிட்ட வேறு மொழிகளில் இருந்த பழமொழிகள் ரசிக்கவைத்தன. ஒரே மாதிரியான பழமொழிகள் வெவ்வேறு நாடுகளில் புழங்குவது ஆச்சர்யமளித்தது. என் வியப்பையும் ரசனையையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் உலகப் பழமொழிகளைத் தேடித்தேடி தமிழில் மொழிபெயர்த்துவருகிறேன். 

பெண்களைத் தாழ்த்தும், உருத்தோற்றத்தை இகழும், மாற்றுத் திறனாளிகளைக் கேலிசெய்யும், அடுத்த நாட்டு மக்களைக் கேவலப்படுத்தும், மதம் சார்ந்து ஒரு சாராரின் மனத்தைப் புண்படுத்தும் பழமொழிகள் இப்போதும் புழக்கத்தில் இருக்கின்றன. காலத்துக்கு ஒவ்வாத அவற்றைக் கவனமாகத் தவிர்த்துவருகிறேன். சுவாரசியமாக இருந்தாலும் அவற்றைப் பகிர்வதில் எனக்கு உடன்பாடில்லை. 

ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வரும் உலகப்பழமொழிகளை வலைப்பூவிலும் தொகுப்பாய்த் தரவிருக்கிறேன். விளையாட்டாய்த் தொடங்கிய இம்முயற்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்வளிக்கிறது. வேறு விளையாட்டில் மனம் சொக்கும்வரை தொடர்வேன். :)))



























28 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete

  2. மின்னூல் அல்ல ரியல் புத்தகமாக வெளியிடலாம்.. இப்படி நீங்கள் புத்தகமாக வெளியிட்டால் அதை கிப்டாக வாங்கி தரும் பெருமையை இப்பத்தகம் பெரும் என்பது நிச்சயம் ஒரு பக்கத்திற்கு ஒரு பழமொழி அதற்கு ஏற்றவாறு நல்ல படங்களையும் சேர்த்து வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் போடும் அளவுக்குப் பழமொழிகளைத் தொகுக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். அப்படி ஓரளவு சேர்ந்துவிட்டால் நிச்சயம் போடுவோம். ஆலோசனைக்கு நன்றி மதுரைத் தமிழன்.

      Delete
  3. அருமை கீதா. இன்னும் பல பழமொழிகளை மொழிபெயர்த்து எழுதுங்க. அத்தனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக ப்ரியா. நிறைய தேடல்களைத் தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம் எவ்வளவு தேறுகிறதென்று. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா.

      Delete
  4. தொடர்க... சேமித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  5. துளசிதரன்: மிகவும் சிறப்பாக இருக்கிறது. நல்லதொரு ஆக்கம்.


    கீதா: ஆஹா! என்ன அருமையான பழமொழிகள். இரண்டாவதுசீனப்பழமொழி பொது முற்றம் எவராலும் பெருக்கப்படுவதில்லை எவ்வளவு பொருந்தும் இல்லையா லிட்ரெலி அப்படியே எடுத்துக் கொண்டால் நம்மூருக்கு ரொம்பவே பொருந்தும் அங்கு வழங்கப்படுகிறது என்றால் அங்கும் அப்படித்தான் போலும்...

    புது விளக்குமார் மற்றும் பழைய விளக்குமார் பற்றியது நம்மூரிலும் வழங்கப்படும் ஒன்று இல்லையா...ஓல்ட் இஸ் கோல்ட் என்பதும் பொருந்தும் இல்லையா..

    எல்லாமே அருமை ரசித்தோம்...சேமித்து வைத்துக் கொண்டோம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.

      ஆமாம் கீதா.. பழமொழிகளைப் பற்றி அறிந்தபோது உங்களைப் போலவே தான் நானும் வியந்தேன். நாடு, மதம், மொழி, இனம் எல்லாம் மாறினாலும் மனித இயல்பு ஒன்றுதான் என்பதை சொல்லாமல் சொல்கின்றன அல்லவா இப்பழமொழிகள். :)))

      Delete
  6. உங்கள் முயற்சி வெற்றி அடையும் நல்ல பாமொழிகள் தொகுப்புக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. அத்தனையும் அருமை.. சிலதைக் களவெடுப்பேன்ன்:) காக்கா போயிடுங்கோ.. பீஸ் எல்லாம் கேய்க்கப்பூடா:))

    ReplyDelete
    Replies
    1. எடுத்துக்கோங்க.. உங்களுக்கு இல்லாததா? பூஸானந்தாவின் பொன்மொழிகளுக்கு ஈடாகுமா இவையெல்லாம்? :))

      வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அதிரா.

      Delete
  8. ஃபேஸ்புக்கிலும் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இங்கும் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ராஜி.

      Delete
  9. அற்புதமான பழமொழிகள் முக நூலில் தனித்தனியாகப் படித்தபோதே தொகுத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்குமே என நினைத்தேன்.தொடர்ந்தால் மகிழ்வோம் வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. முடிந்தவரை தொடர விருப்பம் உள்ளது. வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  10. Replies
    1. வருகைக்கும் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் நன்றிங்க பழமைபேசி.

      Delete
  11. முக நூலிலேயே வாசித்து ரசித்தேன். முகநூலிலிருந்து படங்களாகக் கொடுக்காமல் எழுத்துகளாகக் கொடுத்திருக்கலாமோ!

    ReplyDelete
    Replies
    1. படங்களாகவே கொடுத்தால் ரசனையாக இருக்கும் என்று சில நட்புகள் வழங்கிய ஆலோசனையின் பேரில் அப்படியே எடுத்துக் கொடுக்கப்பட்டன. :))

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  12. பயனுள்ள தொகுப்பு கீதா.
    இவற்றுக்குச் சமனான சில தமிழ் பழமொழிகள் நினைவுக்கு வந்து போகின்றன... உதாரணத்துக்கு
    இரவல் சீலையை நம்பி இடுப்பிற் கந்தையை எறியாதே
    கடப்பாரையை விழுங்கி விட்டு சுக்குநீர் குடித்தால் தீருமா?
    அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்
    பாத்திரமறிந்து பிச்சையிடு
    சுரைக்காய் கால்பணம் சுமைக்கூலி முக்கால் பணம்
    காகம் திட்டி மாடு சாகாது
    ஆசை வெட்கம் அறியாது
    உண்டு கொழுத்தால் நண்டு வளையில் தங்காது
    .............
    உடனே நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.
    தொடர்ந்து தாருங்கள் கீதா....அறிய ஆவல்...

    ReplyDelete
    Replies
    1. அட... பழமொழிகள் அனைத்தும் அருமை. உலகின் வெவ்வேறு நாடுகளில் புழங்கப்படும் ஒத்தக் கருத்துள்ள பழமொழிகள் வியக்கவைக்கின்றன. விரைவில் இதன் தொடர்ச்சியைத் தருவேன். ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி தோழி.

      Delete
  13. இந்தப் பதிவைக் கண்டு நானும் ஞாபகம் வந்ததிலே சிலதை எழுதி வைச்சன்.
    உதெல்லாம் ஊரிலை ஒருநேரம் பாவிச்ச பழமொழி.
    ந.குணபாலன்

    கோழி மேய்ச்சாலும் கோறணமேந்திலே(Governmet) வேலை.
    வந்தார்க்கும் வரத்தார்க்கும் பூத்தாயோ புன்னைமரம்?
    கண்டால் கட்டாடி, காணாட்டில் வண்ணான்.
    அஞ்சு பணத்துக்கு குதிரையும் வேணும், ஆறு கடக்கப் பாயவும் வேணும்.
    பலமரம் கண்ட தச்சன், ஒருமரமும் வெட்டான்.
    ஆடான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அழ,
    சொத்தியாடு சோடி இல்லையெண்டு அழுததாம்.
    தெய்வமான தெய்வமெல்லாம் விளக்குக்கு எண்ணெயில்லாமல் தவண்டையடிக்க ,
    சனீசுவரன் சக்கரைப்புக்கை இல்லையெண்டு சண்டை பிடிச்சுதாம்.
    தனக்கடாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.
    அழுதாலும் அவள் தானே பெறவேணும்.
    நிண்ட வெள்ளத்தை வந்த வெள்ளம் தள்ளிக்கொண்டு போனதாம்.
    ஒரு எறியிலை ஒம்பது மாங்காய் விழுத்து.
    சிவன் சொத்து குல நாசம்.
    மலையான மலையெல்லாம் போச்சாம், மண்ணாங்கட்டி போனாலென்ன?
    சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது.
    நாமடங்க நம் குலமடங்க.
    உடையவன் இல்லெங்கில் ஒரு முழம் கட்டை.
    ஊருக்கு மட்டும் உபதேசம், உனக்கும் எனக்குமில்லை.
    சிங்காரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குதாம் ஈரும், பேனும்.
    வளர்த்தால் குடும்பி, அடிச்சால் மொட்டை.
    பேயுக்கு பெண்டாட்டி எண்டால் புளியமரம் ஏறத்தானே வேணும்?
    எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.
    குரு குசுவினால் குற்றமில்லை.
    மாமியார் உடைச்சால் மண்குடம், மருமகள் உடைச்சால் பொன்குடம்.
    தாயும் பிள்ளையும் தான் எண்டாலும், வாயும் வயிறும் வேறை வேறை.
    சும்மா கிடந்த அம்மையாருக்கு, அரைப் பணத்துக்கு தாலி பத்தாதாம்.
    ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
    ஆனைக்கும் அடி சறுக்கும்.
    எறும்பூரக் கல் குழியும்.
    அள்ளுவாரோடை குடியிருக்கலாம், கிள்ளுவாரோடை குடியிருக்கேலாது.
    நாயுக்கு செக்கென்ன?, சிவலிங்கமென்ன?
    கண்டதும் கற்றவன் பண்டிதனாவான், கண்டதும் திண்டவன் வண்டியனாவான்.
    சொல்லுவார் சொன்னால் கேட்பாருக்கு என்ன மதி?
    அகத்தி ஆயிரங்காய் காய்ச்சலும் பிறத்தி பிறத்தி தான்.
    அப்பன் மாண்டால் தெரியும் அப்பன் அருமை.
    புளியங்கொட்டை நட்டு புன்னை மரமே முளைக்கும்?
    வேரோடி விளாத்தி முளைச்சாலும் தாய்வழி தப்பாது.
    படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவங்கோயில்.*
    எள்ளு காயுது எண்ணெய்க்கு, எலிப்புழுக்கை ஏன் காயுது?
    தடி குடுத்து அடி வாங்காதே.
    தன்னாலே தான் கெட்டதுக்கு அண்ணாவியார் என்ன செய்யிறது?
    சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
    இளகின இரும்பெண்டால் கொல்லன் கிளப்பி கிளப்பி அடிப்பானாம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்தாழமான பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி.

      அட...அட.. எத்தனைப் பழமொழிகள். பல நான் இதுவரை கேட்டறியாதவை. ஒரு நாட்டின்... இனத்தின்... சமூகத்தின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளவும், மொழியின் வளமையைப் புரிந்துகொள்ளவும் பழமொழிகள் பெரிதும் உதவுகின்றன என்பது எவ்வளவு உண்மை. புதிய பழமொழிகள் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  14. கீதமஞ்சரியின் புதிய வாசகன் நான். தொடர்ந்து படித்து கருத்திடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் கீதமஞ்சரியைத் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.