நம் மனம்தான் நமக்கு உற்ற நட்பும் பகையும். அதை நம்மோடு
இணக்கமாய்ப் பேணுவதற்கே நாம் இன்னும் கற்றபாடில்லை. இந்த லட்சணத்தில் எங்கே
மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது?
அதையும் மீறி நாம் ஒருவருக்கொருவர் அறிவுரைகளை அள்ளி வழங்கிக்கொண்டுதான்
இருக்கிறோம். இதோ இப்போதும் கேட்டால் கேளுங்க என்று அறிவுரை வழங்க வந்துவிட்டேன், துணைக்கு
கண்ணதாசனின் வரிகளையும் அழைத்துக்கொண்டு.
பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா..
யாரும் இருக்குமிடத்தில்
இருந்துகொண்டால் எல்லாம் சௌக்யமே
கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது
யாரும் எதுவும்
இருக்குமிடத்தில் இருந்தால்தான் சிறப்பு. அது சொற்களுக்கும் பெரிதும் பொருந்தும். வாய்க்குள்
இருக்கவேண்டியவை வெளியில் குதித்துவிட்டாலோ, வெளிப்பட வேண்டியவை வாய்க்குள் தேங்கிக்
கிடந்தாலோ மதிப்பிழந்துபோதல் நிச்சயம். தேவைப்படும் சொற்களுக்கே இந்நிலை என்றால் தேவைப்படாத
அறிவுரைகளுக்கு? கேட்கவிரும்பாத செவிகளுக்குள் செலுத்தப்படும் அறிவுரைகள், செவிடன்
காதில் சங்கூதுவது போல விரயம் என்று அறிந்திருந்தாலும் ஊதுற சங்கை ஊதிவைப்போம் என்ற
எண்ணத்தில்தான் பல அறிவுரைகள் ஓதப்பட்டுவருகின்றன.
அறிவுரைகள் அவசியப்படுவோர்க்குக் கூட நேரடியாக அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. நம்மைப் போன்ற படைப்பாளிகளுக்கு இருக்கவே இருக்கின்றன கதைகளும் கவிதைகளும்.
அவற்றின் வாயிலாக சொல்ல வேண்டியவற்றை சொல்வது ஒருவகையில் வசதியும் கூட. என் பிள்ளைகள் சிறுகுழந்தைகளாக இருக்கும்போதும் இந்த யுத்திதான் பெரிதும் கைகொடுத்தது. அவர்கள் தவறு செய்யும்போது நேரடியாக கண்டிக்காமல் அறிவுரை சொல்லாமல் கதைகள் மூலம் திருத்தினேன். இவர்கள் செய்யும் தவறுகளை கதையில் வரும் குழந்தைகள் செய்வதாகச் சொல்லி, அதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளால் குழந்தைகள் மனந்திருந்துவது போல கதைகளை உருவாக்கிச் சொல்வேன். நேரடியாக அறிவுரை சொல்வதை விடவும் கதைகள் மூலம் சொல்வதில் பலன் அதிகமாக இருந்தது.
சொல்லென்றும் மொழியென்றும்
பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு
விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை…
என்னைக் கேட்டால்
சொல்லாத சொல்லுக்கும் விலை உண்டு என்றுதான் சொல்வேன். ஆம் என்பதை அழுத்தமாய் ஆமோதிக்கும்
அதே சமயம், இல்லை என்பதையும் வாய்திறந்து மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயம், தயக்கம்,
கூச்சம், முகத்தாட்சண்யம், நாகரிகம், இங்கிதம் இன்னபிற காரணங்களால் நமக்கு உடன்பாடற்றவற்றை
மறுக்கத் துணியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மௌனம்
காப்பதுண்டு. மௌனம் எந்தக்காலத்திலும் நம் எதிர்ப்பை பதிவு செய்யாது. மௌனம் சம்மதம்
என்ற பொதுவிதியின்படி எதிராளிக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
பிரச்சனைகள் இல்லாத
வாழ்க்கை அமையவேண்டும் என்றுதான் நாம் அனைவருமே ஆசைப்படுகிறோம். ஆனால் அமைகிறதா? பிரச்சனை
மேல் பிரச்சனை என்றுதானே வாழ்க்கை ஓடிக்கொண்டோ நகர்ந்துகொண்டோ இருக்கிறது? சிலர் தம்
பிரச்சனை மட்டுமல்லாது அடுத்தவர் பிரச்சனைகளையும் அடித்துப்பிடித்து வாங்கி தங்கள்
தோள்களில் போட்டுக்கொண்டு அல்லாடுவார்கள். இன்பமோ, துன்பமோ அவரவர் வாழ்க்கையை அவரவர்
வாழ்வதுதானே நியாயம்.
உனக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு
கண்ணதாசனின் இவ்வரிகளில்
பலருக்கும் உடன்பாடு இருப்பதில்லை. ஆனால் இவ்வரிகளை நான் பாசிடிவாகவே
பார்க்கிறேன்.
நமக்கும் கீழே இருப்பவனோடு
ஒப்பிட்டு நம் நிலைமை அவனை விடவும் மேல் என்று மகிழ்வது என்ன மாதிரியான சாடிஸ்டிக்
மனோநிலை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். வரிகளை உற்றுக்கவனியுங்கள். அது மகிழ்ச்சி
அடையச்சொல்லவில்லை. நிம்மதி நாடச்சொல்கிறது. கண்முன் ஒரு விபத்து நடக்கிறது. ஐயோ என்று
பதறுகிறோம். யாருக்கும் அடிபடவில்லை என்று தெரிந்ததும் உள்ளுக்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு
பரவுமோ.. அப்படியான நிம்மதிதான் அது. ஓட்டுவீட்டில் வசிப்பவனுக்கு பங்களாவாசியைப் போல
வாழ ஆசை வருவதில் தவறில்லை. ஆசைகள் தானே முன்னேற்றம் என்னும் இலக்கு நோக்கி நம்மை நெம்பித்தள்ளும்
நெம்புகோல்கள். இலக்கை அடைவதற்கான முயற்சியில் இறங்குவதை விட்டுவிட்டு பணக்காரனைப்
பார்த்து ஏங்கித்தவிப்பதிலேயே தனக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையின் அருமை தெரியாமல்
வீணடித்துக் கொள்பவர்களுக்கான அறிவுரையாகவும் கொள்ளலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி
நடக்கிறது என்று வெம்பி உச்சபட்ச தாழ்வுணர்வில் புழுங்கித்தவிக்கும் உள்ளங்களை ஆசுவாசப்படுத்தும்
ஆறுதலுரையாகவும் இருக்கலாம். உன்னிலும் மேலானவனைப் பார்த்து பொருமிக் கொண்டிராமல் உன்னிலும்
கீழான நிலையில் வாழ்பவனைப் பார்த்து அவன் நிலையை விடவும் என் நிலை பரவாயில்லை என்று
நினைத்து, கிடைத்திருக்கிற வாழ்க்கையை நல்லபடியா வாழ் என்பதை சாடிஸமாக என்னால் நினைக்க
முடியவில்லை. அடுத்தவன் வாழ்க்கை குறித்த பொருமல், பொறாமை போன்ற கண்பட்டைகளைக் கழட்டினால்தான்
சொந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் புலப்படும்.
நம்மை வருத்தும்
துயரிலிருந்து, நம்மை நாமே உந்தி வெளிக்கொணர ஒரு மனோவசிய மந்திரம் அவசியம் தேவை. கிட்டத்தட்ட
இருகோடுகள் தத்துவம் போல், நடந்த துயரோடு நடக்காத ஆனால் நடக்க சாத்தியமுள்ள பெருந்துயர்
ஒன்றைப் பக்கத்தில் இருத்தி, ஒப்பிட்டு நிம்மதி அடைவதும் அழகானதொரு
மனச்சமாதானம்.
Happiness is found along the way, not at the end of the road என்பது அடிக்கடி
என் நினைவுக்கு வரும் பொன்மொழி. வாழ்க்கையில் இலட்சியங்கள் அவசியம். ஆனால் இலட்சியங்களை
அடைவது மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடக்கூடாது. தங்கத்தைத் தேடி அலைபவன் வழியில் தென்படும்
வைரங்களையும் வைடூரியங்களையும் புறக்கணிப்பது எவ்வளவு பேதைமையோ அவ்வளவு பேதைமை வாழ்க்கையின்
பெரும் இலட்சியங்களின் பொருட்டு சின்னச்சின்ன சந்தோஷங்களைத் தொலைப்பது. அன்றலர்ந்த
மலர், அழகிய வானவில், பஞ்சாரத்துக் கோழிக்குஞ்சுகள், சடசடக்கும் மழைத்தூறல், மழை கிளர்த்தும்
மண்வாசனை, மழலையின் குழறுமொழி, குழந்தைகள் குறும்பு, இளந்தம்பதியர் இணக்கம், மனந்தொடும்
மெல்லிசை, ரசனைக்குரிய திரைப்படம், வாசனை மாறா புதுப்புத்தகம், சிறகு கோதும் சிறுபறவை,
சரசரக்கும் அரசிலைகள், காற்றசையும் கொடி, கால் நனைக்கும் அலை, குடும்ப ஒன்றுகூடல்,
கூடத்து விருந்து, ஒரு குறும்பயணம், தோளணைக்கும் தோழமை, ஆசீர்வதிக்கும் முதுகரம், அறியா
முகத்தரும்பும் புன்னகை என நம் வாழ்வில் எவ்வளவு
பெரிய வேதனையையும் கணநேரம் மறக்கச் செய்துவிடும் மகிழ்தருணங்கள் எத்தனையோ உண்டல்லவா?
(மதுரைத்தமிழன் ஆரம்பித்த இத்தொடர்பதிவினைத் தொடருமாறு தோழி இளமதி விடுத்த அழைப்பின்
பேரில் எழுதப்பட்டது.)
சில நாட்களாக வலைப்பக்கம் வராமையால் யார் தொடர்ந்திருக்கிறார்கள் யார் தொடரவில்லை என்று தெரியவில்லை. அதனால் யாரையும் இங்கே குறிப்பிடவில்லை. இதுவரை எழுதாதவர்கள் இனிதே தொடரலாம்.
அறிவுரை யாருக்கு சொல்கிறோமோ அவர்கள் நிச்சயம் கேட்பத்தில்லைதான் ஆனால் அறிவுரைகளைத் தேடுபவர்களுக்கு அது சரியாக கிடைப்பத்தில்லை அதனால்தான் நாம் இணையம் மூலம் சொல்லி வைத்தால் தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்தானே
ReplyDeleteநிச்சயமாக.. உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன். தண்ணீரில் மூழ்கவிருப்பவனுக்கு கையில் கிடைக்கும் சிறு மரக்கட்டையும் நம்பிக்கை கொடுத்து உயிர்மீட்க உதவும். இப்படியொரு தலைப்பை சிந்தித்தற்காகவே உங்களுக்கு என் பாராட்டுகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரைத்தமிழன்.
Deleteவணக்கம் தோழி கீதா!
ReplyDeleteமுதலில் என் வேண்டுகோளைச் செயற்படுத்தியதற்கு அன்புகலந்த என் நன்றிகள்!
சகோதரர் மதுரைத் தமிழனின் சிந்தனையை எண்ணித் தற்போது உள்ளம் சிலிர்த்தேன்!
அப்பப்பா..எத்தனை எத்தனை அனுபவங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைக்கப் பெறுகிறது!
யாருக்கு உதவுகிறதோ இல்லையோ எனக்கு மிக மிக உதவியாக இருக்கிறது இவையெல்லாம்.
அவ்வகையில் இன்று இதோ உங்களிடமிருந்தும்.... அடடா... எத்தனை விசயங்கள்!..
ரொம்ப இலகுவாக அமைதியாக ஓடும் அருவிபோல உங்களின் அனுபவங்கள் + அட்வைஸ்கள்
என்னை அரசர வைத்து அரவணைத்துக் கொண்டு போகிறது!..
உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டால் என்னுடையதெல்லாம் ஒன்றுமே இல்லை. அவ்வளவு அனுபவங்களை அள்ளிகொணர்ந்து எங்கள்முன் கொட்டியிருக்கிறீர்கள். எல்லாமே முத்துக்கள். உங்களைத் தொடர்வதில் எனக்கு மகிழ்ச்சியே தோழி. அன்பும் நன்றியும் உங்களுக்கு.
Deleteகண்ணதாசனின் வரிகளில் பெற்ற அட்வைஸ்
ReplyDelete//உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு// இதே விதமாக என்னுள்ளும் கேள்வி எழுந்து, அதற்கு நீங்கள் கூறியது போலவே பாசிடிவாகவே நானும் அதனைப் பார்க்கிறேன். ஒருத்தருக்கு ஏற்பட்ட பெருந்துயரத்தைவிட எனக்கு அப்படி இல்லையே இறைவா அதற்கு என் நன்றிகள் என கொஞ்சம் ஆறுதல் படக்கூடிதாக இருக்கிறது. அவர்களின் துயரம் மனத்தினை வாட்டும் , அதற்காகத் துயரப்படுவேன் அது வேறு விடயம்.
எனக்குத்தான் இப்படித் துன்பம், இன்னல் என்று புலம்பாமல் உன்னைவிட இப்படிக் கொடுந்துயர் அனுபவிப்பவர்களைப் பார். அவர் துயரத்திற்கு ஆறுதலாயிரு என்று என்னை நான் தேற்றிக்கொள்ளக் கண்ணதாசனின் இவ்வரிகள் எனக்கும் உதவுகின்றன.
நீங்கள் கூறும் “மனோவசிய மந்திரம்” சூப்பர்! என்னைக் கவர்ந்தது தோழி!
அடுத்து இலட்சியத்திற்காகச் சந்தோஷத்தைத் தொலைப்பது உண்மையில் அறிவீனமே!
நானும் கடந்தகாலங்களில் என் இலட்சியம் என்று கிடைத்த சின்னச் சின்னச் சந்தோஷங்களையெல்லாம் பெரும்பாலும் தவறவிட்டவளே!.. இறுதியில் பார்த்தால் இலட்சியமும் நிறைவேறாமல் அவ்வப்போது சிரிக்கக்கூட மறந்த சென்மமானேன்..:’(
நீங்கள் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் என்று இங்கிட்ட பட்டியலில் தோழணக்கும் தோழமைகளைகளை மட்டுமே நான் இவ்வலையுலகால் பெற்றேன் தோழி! உங்களையும் சேர்த்து! இதுவென்றாலும் கிடைத்ததே!.. ஆண்டவனுக்கு என் நன்றி!
மீண்டும் சொல்கிறேன் சகோதரர் மதுரைத்தமிழனின் நல்ல முயற்சி இந்தத் தொடர்!
உளமார்ந்த நன்றி சகோதரரே!
இனிய பல விடயங்களைப் பகிர்ந்தீர்கள். நானும் அட்வைஸாக இங்கிருந்து என் மனத்தில் சேகரித்துக் கொண்டேன்! மிக்க மிக்க நன்றி தோழி! வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
அன்பு இளமதி, நன்னட்புகள் அமைவது வரம் எனில் அதைத் தொடர்ந்து தக்கவைப்பது சாதனை. என்னுடைய தயக்கம் மற்றும் கூச்சம் காரணமாக, பள்ளிக்காலம் தொட்டே நல்ல தோழமைகளைத் தவறவிட்டிருக்கிறேன். அது இப்போதும் தொடர்கிறது. உங்கள் நட்பு வட்டம் எத்தகு வலியது என்பதைத் தங்கள் பதிவு வாயிலாக அறிகிறேன். தொடரட்டும் அன்புத்தோழமைகள்.
Deleteதங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தோழி.
இந்தபொபதிவில் என்னைக் கவர்ந்த வரிகள்/
ReplyDeleteஎன்னைக் கேட்டால் சொல்லாத சொல்லுக்கும் விலை உண்டு என்றுதான் சொல்வேன். ஆம் என்பதை அழுத்தமாய் ஆமோதிக்கும் அதே சமயம், இல்லை என்பதையும் வாய்திறந்து மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பயம், தயக்கம், கூச்சம், முகத்தாட்சண்யம், நாகரிகம், இங்கிதம் இன்னபிற காரணங்களால் நமக்கு உடன்பாடற்றவற்றை மறுக்கத் துணியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். சிலர் தங்கள் எதிர்ப்பைக் காட்ட மௌனம் காப்பதுண்டு. மௌனம் எந்தக்காலத்திலும் நம் எதிர்ப்பை பதிவு செய்யாது. மௌனம் சம்மதம் என்ற பொதுவிதியின்படி எதிராளிக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்./
தங்கள் வருகைக்கும் பதிவில் கவர்ந்த பத்தியை மேற்கோளிட்டுக் காட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅனைத்தும் சிந்தனையில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.
Deleteஅட்டகாசமான பதிவு சகோதரி/தோழி...
ReplyDeleteமிக மிக ரசித்தோம்.
கீதா: //உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு// இது அருமையான வரிகள்!!! நானும் உங்களைப் போலவே பாசிட்டிவாகப் பார்க்கிறேன்...ஆம்! உங்கள் கருத்துகளை ஆமோதிக்க்றேன்...நல்ல கருத்துகள் அனைத்துமே
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்கநன்றி துளசி சார் & தோழி கீதா.
Deleteவாழ்வின் பல அசௌகரியங்களை சௌகரியங்களாக மாற்றியிருக்கின்றன இந்த ஆழ்மனம் தொட்ட வரிகள்.
சிந்தனையை தூண்டும் பதிவு,வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் பதிவை வாசித்துக் கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி விமலன்.
Deleteநேர்த்தி..
ReplyDeleteகுறிப்பாக நிம்மதி நாட சொல்லிய வரிகளை விளக்கிய விதம்
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மது. எனக்கு அந்த வரிகள் பலவிதங்களில் வாழ்க்கையை சீர்செய்யவும் சமன்செய்யவும் உதவியிருக்கின்றன.
Deleteஅடுத்தவன் வாழ்க்கை குறித்த பொருமல், பொறாமை போன்ற கண்பட்டைகளைக் கழட்டினால்தான் சொந்த வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் புலப்படும். ///அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனிமரம். பலரையும் பார்க்கிறேன் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றிப் புலம்புவதிலேயே வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். சொந்தவாழ்க்கையில் ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருந்தும்.
Deleteகண்ணதாசன் வரிகளோடு சொல்லியிருக்கும் குறிப்புகள் மிக உண்மை, சுவாரஸ்யம்.
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.
Deleteமிக அருமையாக தொகுத்து இருக்கீங்க பதிவை சிந்திக்க வேண்டிய வரிகள் பல கொடுத்து வாழ்த்துக்கள் சிஸ்
ReplyDeleteவருகைக்கும் பதிவை ரசித்து இட்டக் கருத்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.
Deleteபழைய அர்த்தமுள்ள திரைப்பாடல்களுடன் இணைத்துத் தொகுத்து கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை யும் "ஐ !கேட்டுத்தான் பார்ப்போமே " என்று சொல்லவைக்கும் பதிவு
ReplyDeleteஉற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி அபயாஅருணா. எனக்கு உதவிய இவை வேறு யாருக்கும் உதவினால் கூடுதல் மகிழ்ச்சிதானே.
Deleteவழிகாட்டுவதல்ல நட்பு வழித்துணையாய் வருவதே நட்பு என்பது என்னுடைய கருத்து.குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும்..அவர்களை கைப்பிடித்து அரவணைத்து அழைத்துச் செல்லவேண்டும்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துக்கும் நன்றி.
Deleteஉனக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற வரிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஆமாம். பல சமயங்களில் நம்மைத் தூக்கி நிறுத்த இதுபோன்ற வரிகளால் முடிகிறது.
Deleteஅறிவுரை உண்மையில் நீங்கள் சொல்வதுபோல் மிகப்பெரிய விஷயம்தான் கீத் .எப்படிக்கையாள்கிறோம் என்பதில்தான் பலமும் பலவீனமும் ஏற்படுது.
ReplyDeleteநீங்கள் சொல்லியதுபோலதான் அம்மா நமக்கு ஒரு அடி அடித்தது கிடையாது பூரா பழமொழியும் கருத்தும் குட்டிக்கதைகளுமாகத்தான் கிடைச்சது .
அந்தக்கதைல வரும் முயலோ நாய்க்குட்டியோ நான் செய்த அல்லது அடுத்து செய்ய சாத்தியமுள்ள தவறை செய்திருக்கும்
உண்மைதான் சுரேஜினி. குழந்தைகள் விஷயத்தில் அறிவுரைகளை விடவும் அவங்களோடு நட்பாக நாம் பேசும் வார்த்தைகளும் சொல்லும் கதைகளும் அதிக பலனைத் தரும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.
Deleteஅழகிய வானவில், பஞ்சாரத்துக் கோழிக்குஞ்சுகள், சடசடக்கும் மழைத்தூறல், மழை கிளர்த்தும் மண்வாசனை, மழலையின் குழறுமொழி, குழந்தைகள் குறும்பு, இளந்தம்பதியர் இணக்கம், மனந்தொடும் மெல்லிசை, ரசனைக்குரிய திரைப்படம், வாசனை மாறா புதுப்புத்தகம், சிறகு கோதும் சிறுபறவை, சரசரக்கும் அரசிலைகள், காற்றசையும் கொடி, கால் நனைக்கும் அலை, குடும்ப ஒன்றுகூடல், கூடத்து விருந்து, ஒரு குறும்பயணம், தோளணைக்கும் தோழமை, ஆசீர்வதிக்கும் முதுகரம், அறியா முகத்தரும்பும் புன்னகை என நம் வாழ்வில் எவ்வளவு பெரிய வேதனையையும் கணநேரம் மறக்கச் செய்துவிடும் மகிழ்தருணங்கள் எத்தனையோ உண்டல்லவா?//
ReplyDeleteமகிழ்தருணங்க்களை நினைத்து கவலைகளை மறந்து இருக்கும் எத்தனை எத்தனை நெஞ்சங்கள் இருக்கிறது. அவர்களுக்கு உங்கள் பதிவு மிக ஆறுதலை தரும்.
வாழ்த்துக்கள் கீதமஞ்சரி
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் போதும். வாழ்க்கை வண்ணமயமாகிவிடும். :)) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி மேடம்.
Deleteமுடிவிலியாய் பெருகிடும் மகிழ்தருணங்கள் பட்டியல் அருமை தோழி! சலித்தெடுக்கும் சல்லடையில் கீழிறங்கியதா அல்லது மேல் நிற்பதா எது நமக்கானது என்ற புரிதல் இருப்பவர்கள் நன்மை அடைவர்.
ReplyDeleteமிக அழகான கண்ணோட்டம் தோழி. வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும்.
Delete