3 March 2015

ஒண்டவந்த பிடாரிகள் -3 (கரும்புத் தேரைகள்)ஆஸ்திரேலியாவின் பிரதானப் பணப்பயிர் கரும்பு. கரும்பின் குருத்துக்களை அழிக்கும் பூச்சிகளான கரும்பு வண்டுகளை அழிப்பதற்காக ஹவாய் தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்டன தென்னமெரிக்காவைச் சேர்ந்த சில தேரைகள். கரும்பு வண்டுகள் கரும்பின் குருத்தைத் தின்று வாழும் என்றால் மண்ணுக்குள்ளிருக்கும் அவற்றின் லார்வாக்களோ கரும்பின் வேர்களைத் தின்று வளரும். அதனால் கரும்பின் விளைச்சல் பாதிப்புறுவதால் 1935 இல் கிட்டத்தட்ட நூறு இளம் தேரைகள் கொண்டுவரப்பட்டு குவீன்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வயல்களில் விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. ஆனால் எவரும் எதிர்பாராத அளவுக்கு அவற்றின் இனம் பல்கிப்பெருகி இன்று இருபது கோடியைத் தாண்டிவிட்டதாம். இப்போது இவைதாம் பள்ளி கல்லூரிகளில் உயிரியல் பாடத்துக்கு உதவும் சோதனைத்தவளைகள்.

தேரை என்றால் சாதாரணமாய் நாம் பார்க்கும் சிறிய அளவுத் தேரைகள் அல்ல, பெரியவை, மிகப்பெரியவை. ஒவ்வொன்றும் 19 முதல் 23 செ.மீ. நீளமும் தோராயமாக ஒன்றேமுக்கால் முதல் இரண்டு கிலோ வரை எடையும் கொண்டவை.  எதிரிகளிடமிருந்து தற்காக்க, இவற்றின் காதின் பின்னால் ஒரு நச்சு சுரப்பி உண்டு. அதன் நச்சுக்கு மனிதர்களைக் கொல்லும் அளவு வீரியம் இல்லை என்றாலும் கண் எரிச்சல், கை கால்கள் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.  ஆனால் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்றவை நச்சால் பாதிக்கப்பட்டால், வலிப்பும் மாரடைப்பும் ஏற்பட்டு இறந்துவிடும் அபாயமுள்ளது.  
நச்சினால் எதிரிகளை நெருங்கவிடாமல் விரட்டுவது போதாதென்று சில சமயங்களில் எதிரியை எதிர்கொள்ள தன் உடலை உப்பலாக்கி, பூனைகளைப் போல நான்கு கால்களால் நின்று உடலை உயர்த்தி எதிரிகளை பயமுறுத்தி ஓடச்செய்யும் வித்தையும் கற்றுவைத்திருக்கின்றன இந்தத் தேரைகள்.   

இந்த தேரைகளின் அபரிமிதப் பெருக்கத்தால் உள்நாட்டு தவளைகளும் தேரைகளும் பல்லி போன்ற சிறிய உயிரினங்களும் அவற்றின் வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டும் இதற்கு இரையாகியும் அழிகின்றன.
பரிணாம வளர்ச்சியினால் இத்தனை வருடங்களில் தவளைகளின் கால்களின் நீளம் அதிகரித்திருக்கிறதாம். அதனால் இடப்பெயர்வு இன்னும் விரைவாக நடந்து பக்கத்து மாநிலங்களுக்கும் பரவி விட்டனவாம். குவீன்ஸ்லாந்து இந்த கரும்புத் தேரைகளை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்சனைகளால் எரிச்சலடைந்த பக்கத்து மாநிலமான நியூ சௌத் வேல்ஸ் மக்கள் குவீன்ஸ்லாந்து மக்களையும் கரும்புத் தேரைகள் என்று சில சமயங்களில் கேலி செய்வதும் உண்டு.ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளும் இவற்றால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பூச்சிகளை அழிக்கவென்று இருபது புதிய நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த தென் அமெரிக்கத் தேரைகள் அந்நாடுகளின் இயற்கை சமன்பாட்டை சீர்குலைத்து பெரும் தலைவலியாகிவிட்டனவாம்.  இப்போது இவற்றைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் அழிக்கவும் முடியாமல் தலையைச் சொறிந்துகொண்டு நிற்கின்றன  அனைத்து நாடுகளும்.  

இந்தத் தேரைகள் தங்கள் நாட்டுக்குள் எந்த வழியிலும் வந்துவிடக்கூடாது என்று மிகுந்து எச்சரிக்கையுடன் இருக்கும் நியூஸிலாந்துக்கு ஒற்றைத் தவளையின் வரவும் தலைப்புச்செய்தியாகிவிடுகிறது. ஆஸியின் கெய்ன் (Cairn)மலைப்பகுதிகளுக்கு மலையேற்றத்துக்காக வந்த பயணி ஒருவரின் மலையேற்றப் பாதணிக்குள் பதுங்கி மறைந்து நியூஸி வரை பறந்துவிட்டது ஒரு கரும்புத்தேரை.  நியூஸியில் விமானநிலையத்தில் பைகளைப் சோதனையிட்டபோது அதற்குள்ளிருந்து பாய்ந்து வெளிவந்த தேரையைப் பக்குவமாய்ப் பிடித்து கருணைக்கொலை செய்துவிட்டனர் அதிகாரிகள்.  ஒற்றைத்தேரைக்கும் அவ்வளவு பயம். வேலியில் போகிற ஓணானை எடுத்து வீட்டுக்குள் விட்டுவிட்டு அண்டைநாடு படும் அவதியைப் பார்த்தாலே பயம் தானாகவே வந்துவிடும் அல்லவா?

இந்தப் பதிவில் தாவும் கரும்புத்தேரைகள் பற்றி அறிந்தோம். பறக்கும் கரும்புத்தேரைகள் என்றால் என்னவென்று தெரியுமா? காத்திருங்கள், அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(தொடரும்)
(படம் : நன்றி இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 2 (ஒட்டகங்கள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 4 (மைனாக்கள்)

24 comments:

 1. பயம் சரி தான்... அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 2. எழுந்து நிற்கும் தேரை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
  அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரியாரே
  தம 2

  ReplyDelete
  Replies
  1. என்னாலும் வியக்காமல் இருக்கமுடியவில்லை. நானும் இப்போதுதான் பார்க்கிறேன். புதிய தகவல்களாக இருப்பதாலேயே அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 3. ஒற்றை யானை பயம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒற்றைத் தேரைக்கும் பயம் என்று இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒற்றையாய் வந்தாலும் எத்தனையாய் பெருகுமோ என்ற பயம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன்.

   Delete
 4. lதலைப்பு சரியானதே! நலமா சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. நலமே ஐயா. தங்கள் வருகைக்கும் கனிவான விசாரிப்புக்கும் மிக்க நன்றி. தாங்கள் நலம்தானே ஐயா?

   Delete
 5. இந்தத் தேரையினத்தை உண்ணும் மக்கள் இருக்கிறார்களா. ?எங்கோ தேரைகளை உண்ணும் மக்கள் இருக்கிறார்கள் என்று படித்த நினைவே இக்கேள்வி கேட்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தேரைகளை உண்ணும் மக்கள் இருக்கலாம். ஆனால் இந்தத் தேரைகள் விஷத்தேரைகள். இவற்றை முகர்ந்தாலே நாய் பூனை போன்றவை இறந்துவிடும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   Delete
 6. /19 முதல் 23 செ.மீ. நீளமும் தோராயமாக ஒன்றேமுக்கால் முதல் இரண்டு கிலோ வரை எடையும் கொண்டவை/ ஆச்சரியமான பல தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி. பறக்கும் தேரைகள் பற்றி அறியக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் அடுத்த தொடரை பதிகிறேன். வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 7. இரண்டு கிலோ எடையுள்ள தேரையா? வியப்பாய் இருக்கிறது. கரும்பின் வண்டை ஒழிக்கத் தேரையைக் கொண்டுவந்து விட்டு இப்போது தேரையை ஒழிக்க முடியாமல் திணறும் ஆஸ்திரேலியாவைப் பார்த்துப் பரிதாபமாகத் தான் இருக்கிறது. சுவையான தகவல்கள்! பறக்கும் தேரையைப் பற்றியறிய காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. பரிதாபம்தான் அக்கா. எவ்வளவு செலவு தெரியுமா? இதுபோன்று அந்நிய உயிரினங்களின் வரவால் சொந்த மண்ணின் பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. சில அழிவின் விளிம்பில் உள்ளன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

   Delete
 8. //1935 இல் கிட்டத்தட்ட நூறு இளம் தேரைகள் கொண்டுவரப்பட்டு குவீன்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வயல்களில் விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. ஆனால் எவரும் எதிர்பாராத அளவுக்கு அவற்றின் இனம் பல்கிப்பெருகி இன்று இருபது கோடியைத் தாண்டிவிட்டதாம்.//

  ஹைய்யோ !

  //வேலியில் போகிற ஓணானை எடுத்து வீட்டுக்குள் விட்டுவிட்டு அண்டைநாடு படும் அவதியைப் பார்த்தாலே பயம் தானாகவே வந்துவிடும் அல்லவா?//

  நிச்சயமாக பயம் வரத்தான் செய்யும். :)

  சுவாரஸ்யமான தகவல்கள் ....... தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கோபு சார்.

   Delete
 9. இந்த முட்டாள்தனங்களை ஆஸ்த்ரேலியா அரசு மட்டும் அல்ல, சீன அரசும் செய்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. உணவுச்சங்கிலி என்பதை எப்போதான் இவங்க புரிஞ்சுக்க போறாங்களோ:(( அருமையா விளக்கியிருகிறீர்கள் அக்கா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மைதிலி. நான் ஆஸ்திரேலிய நாட்டைப் பற்றி மட்டும்தான் சொல்கிறேன். உலகின் பல நாடுகளும் இந்தத் தவறை செய்துள்ளன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.

   Delete
 10. அப்பப்பா! என்ன ஒரு பயமான கொடுமையான தகவல்.
  நல்லதை நினைத்தால் ஏதோ நடந்துள்ளது.
  தகவலிற்கு நன்றி.
  நல்ல விபரத் தொகுப்பு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. துயர்மீண்டு வந்திருக்கும் தங்கள் வருகை மகிழ்வூட்டுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

   Delete
 11. நிற்கும் தேரையைப் பார்த்தால் பயமாக இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா.. பயமுறுத்தத்தானே அந்தப் போஸ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.

   Delete
 12. எழுந்து நிற்கும் தேரை.... அப்பாடி - என்னவெல்லாம் செய்கிறது!

  சில முடிவுகளை எடுக்கும்போது அவை தவறென்று தெரிவதில்லை.... எத்தனை பெரிய தொல்லையைக் கொடுத்துவிட்டது 100 தேரைகளை கொண்டு வந்த முடிவு! இல்லை தொடக்கமோ?

  ReplyDelete
  Replies
  1. இனி எந்தக்காலத்திலும் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்ற அளவுக்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது. அனுபவித்துதானே ஆகவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.