11 May 2013

அன்னையர் தினம்


 நான் அன்னையர் தினத்தை எதிர்நோக்கி அப்படியொன்றும் ஆவலுடன் காத்திருக்கவில்லை. மாறாக, அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன்  என்பதைப் பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தவித்துக்கொன்டிருந்தேன். 
மூன்று வருடங்கள் மட்டுமே விதிக்கப்பட்டிருந்த குறுகிய கால சந்தோஷ வாழ்க்கையில், கிறிஸ்துமஸ் மற்றும் பிறந்தநாட்களுக்கான மாபெரும்  கொண்டாட்டங்களுடன் ஆலிஸ்க்கு இந்த அன்னையர் தினமும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. 
ஆலிஸ், அன்பு அம்மாவுக்கென்று (அப்பாவின் உதவியுடன் தான்) அனுப்பியிருக்கும் வாழ்த்து அட்டைகளைக் கொண்டே அதன் முக்கியத்துவத்தை எவரும் உணரமுடியும். 
இப்போது அவற்றை மீளவும் பார்க்கும் ஆர்வமெழவே, என் பொக்கிஷங்களை ரகசியமாய்ப் பாதுகாக்கும் அலங்காரக் கண்ணாடி மேசையின் கடைசி இழுப்பறையைத் திறந்து, அவற்றை வெளியிலெடுத்தேன். 
இது இப்போது வேண்டாத வேலையென்று உள்மனம் எச்சரித்தாலும், என்னை நானே கட்டுப்படுத்த இயலாத நிலையிலிருந்தேன். 
மூன்று வாழ்த்தட்டைகள்தாம் என்றாலும் ஒவ்வொன்றும் என் இதயத்துடன் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன. 
முதலட்டையில் பெரிய புஸு புஸுவென்ற முயல் குட்டியொன்று முத்தங்களுடன் ஒரு வாசகத்தையும் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. 
"இந்த உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்கு" 
இதைப்படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. இதே வாசகத்தைத் தாங்கி எத்தனை எத்தனை வாழ்த்தட்டைகள் எத்தனை எத்தனை அன்னையரிடம் அளிக்கப்படுகின்றன? 'இந்த உலகிலேயே தலைசிறந்த' அம்மாக்கள் என்று எத்தனை பேர்தான் இருக்கக்கூடும் 
அதன் கீழ் "இன்றைய தினம் அற்புதமாய் அமையட்டும், ஏனெனில் நீ கோடிகளில் ஒருத்தி!" என்று எழுதியிருந்தது. கீழே ஆலிஸின் பெயர். ஆனாலும் இதன் அர்த்தத்தை ஆலிஸ் அன்று அறிந்திருப்பாளா என்றால் நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும் அன்னையர் தினத்தைப் பற்றியெல்லாம்? 
அந்த சுகமான தருணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பல ஏமாற்றங்களுக்கும், அவநம்பிக்கைகளுக்கும் பிறகு, நாங்களும் ஒரு குழந்தைக்குப் பெற்றோரானோம், அதுவும் அன்னையர் தினத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் என்பதே அந்நாளில் நம்பமுடியாத உண்மையாக இருந்தது.
இரண்டாவது அட்டை ரோஜா நிறத்தில் பளீரிடும் நாடாக்களால் ஒரங்கள் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரமாதமாய் இருந்தது.
அபோதெல்லாம் எங்கு வெளியில் சென்றாலும் ஆலிஸுக்கு ரோஜா நிற உடை உடுத்தியே எடுத்துச் செல்வது வழக்கம். இயல்பாகவே அமைந்த வட்டவடிவ முக அமைப்பு அவளை ஒரு ஆண்பிள்ளையென்றே பிறரை எண்ணச்செய்தது. அந்த எண்ணத்தை விரட்ட ரோஜா நிற உடைகள் உதவின. 
ஆலிஸுக்கு அப்போது இரண்டு வயது. அவ்வட்டையில் அவளே தன் கையால் ரோஜா நிற ஜெல் பேனா கொண்டு ஏதேதோ கிறுக்கியிருந்தாள். 
"அம்மா" என்ற வார்த்தையே ஆயிரம் கதை சொல்லும்போது அவளுக்கென்று தயாரிக்கப்படும் வாழ்த்தட்டைகளில் ஆயிரமாயிரம் கற்பனை பீறிட்டு வாராதோ?  ஒரு சிறுமியை தாய் அணைத்திருக்க, அவர்களைச் சுற்றிலும் ஏராளமான இதயங்கள்! 
ஆலிஸ் வெகுவிரைவிலேயே நடக்கத் தொடங்கிவிட்டாள். விடுவிடுவென்று விரைவாகவும் நடப்பாள். எங்கள் கூட்டு வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதல்ல, அவகாசத்தின்பேரில் அளிக்கப்பட்டது என்று எப்போது எங்களுக்குத் தெரியவந்ததோ, அப்போதிருந்து அவள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தி எங்களுடனேயே தக்கவைக்க பெரும்பாடு பட்டோம்.  
அதனாலேயே இந்த மூன்றாவது வாழ்த்தட்டை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. திறந்தால் இசைபாடும் அந்த அட்டையை நான் திறந்துகாட்டியதுதான் தாமதம், ஆலிஸ் அதை திறப்பதும் மூடுவதுமாய் நாள்முழுவதும் இசையை ஒலிக்கச்செய்த அந்நாட்கள் நினைவுக்கு வந்தன.
"நீ அதை வீணடிக்கத்தான் போறே!" 
என் எச்சரிக்கையை அவள் லட்சியம் செய்யவே இல்லை. ஒரு கள்ளப்புன்னகையுடன் என்னைப் பார்த்தபடியே அவள் அந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாள்.
இந்த அட்டையில் அவளே அவள் பெயரை எழுதியிருந்தாள். அந்தப் பொன்னான தருணங்களை மீட்டெடுத்துக் கொண்டிருந்தன, அட்டைகள். வாழ்த்தட்டை அதுவே கூறிய வாழ்த்து போதாதென நினைத்தோ, என்னவோ ஆலிஸ் தன் பங்குக்கு இன்னும் எழுதியிருந்தாள். 
"அன்புள்ள அம்மா! எனக்கு அம்மாவாய் இருப்பதற்கு உனக்கு அளவிலா நன்றிகள்!" அழகாய் அவள் கைப்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. 
நான்காவது அட்டையும் வரக்கூடும். ஆனாலும் சென்ற முறை கிடைத்த வாழ்த்தட்டையின் பெருமையை இனி வருபவை பெறுமா என்பது சந்தேகமே. 
கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. சட்டென சுயநினைவுக்கு வந்த நான், என்னை ஒரு முட்டாளைப் போல் உணர்ந்தேன். 
எவரிடமிருந்தும் அதிகம் வாழ்த்தட்டைகள் வரப் பெற்றிருக்காத, இனியும் பெற இயலாத பரிதாபத்துக்குரிய பழங்கால பாட்டிமார்கள் போன்று நானும் இவ்வளவு நேரம் இருந்திருப்பதை எண்ணி என்னை நானே நொந்துகொண்டேன். அவர்கள் தங்களுக்கு பல வருடங்களுக்கு முன் வந்திருக்கக்கூடிய ஒரு சில வாழ்த்தட்டைகளை வைத்துக்கொன்டு பழங்கதை பேசி அதில் திளைப்பது வாடிக்கைதானே!  
நானும் ஆலிஸின் பழைய வாழ்த்தட்டைகளை வைத்துக்கொண்டு, கடந்தகால நினைவுகளில் மூழ்கி, நிகழ்கால சிந்தனையற்று  உட்கார்ந்திருப்பதை யாரேனும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? 
நிச்சயம் அவர்கள் வாயைத் திறந்து எதுவும் சொல்லமாட்டார்கள், எனக்குத் தெரியும். 
ஒரு பரிதாபப் பார்வையை வீசிவிட்டு, பேச்சை வேறுபக்கம் திசைதிருப்ப முயற்சிப்பார்கள். பெரும்பாலானோர் இப்படித்தானே செய்கிறார்கள், அந்த சம்பவத்துக்குப் பிறகு? 
மறுபடியும் கதவு தட்டப்பட்டது. இம்முறை பொறுமையற்று பலமாக தட்டப்பட, கதவுக்கு வெளியில் யாரென்பது திறக்காமலேயே விளங்கியது. 
அவசரமாக, இழுப்பறையில் அட்டைகளைப் பதுக்கிவிட்டு, கதவைத் திறந்தேன். குட்டி ஏவுகணையொன்று விருட்டென்று வீட்டுக்குள் புகுந்து என் கால்களைக் கட்டிக்கொண்டது. பின் அங்கிருந்து விடுபட்டு நேரே வரவேற்பறை பாய்ந்து தொலைக்காட்சியை முடுக்கி கண்களை மேயவிட்டது. 
"முதல்லே ஷூவைக் கழற்று, ஆலிஸ்!" 
என் வழக்கமான கத்தலுக்கு வழக்கம்போலவே அவள் செவிசாய்க்கவில்லை. பார்ப்பவர்கள் இந்த வீட்டின் எஜமானி அவள்தான் என்று நினைக்கக்கூடும். 
" ஹாய்!" 
தெரஸா, ஆலிஸின் மெய்க்காவலாளி (?) எதையோ சொல்ல விரும்புபவள் போல் இன்னும் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். 
தெரஸா மட்டும் இல்லையென்றால் என் கதி என்னவாகியிருக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அதுவும் பள்ளி விடுமுறை நாட்களில்
ஆலிஸை தெரஸாவின் பொறுப்பில் விட்டுவிட்டு கவலையில்லாமல் அலுவலகம் போகமுடிகிறது. பணி முடிந்து வரும் வழியில் தினமும் அவளை தெரஸா வீட்டிலிருந்து அழைத்து வருவேன். 
இன்று, தெரஸாவே ஆலிஸை அழைத்து வருவதாக சொன்னாள். மேலும் என்னிடம் எதையோ தரவேண்டுமென்றும் சொன்னாள். 
அவள் கையிலிருந்த கடித உறைகளைப் பார்த்த நொடியே எனக்குள் பயம் அப்பிக்கொண்டது. அவள் தன்னுடைய பொறுப்பிலிருந்து விடுபட முன்கூட்டியே கடிதம் தரப்போகிறாள். 
இது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன். தெரஸா திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். படிப்பு முடிந்து வேலை கிடைக்கும்வரைதான் ஆலிஸை அவளால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்திருந்தேன். 
"நான் உள்ள வரலாமா? இதை உங்களிடம் கொடுக்கணும்,"
அவள் என்னைப் பார்த்து வித்தியாசமாய் சிரிப்பது போலிருந்தது.
நான் தயங்கியபடியே பின்வாங்கினேன். "தயவுசெய்து...இப்போது இது வேண்டாமே, தெரஸா!" 
"ஏன்?" அவள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே சொன்னாள். "இதிலே என்ன இருக்குன்னு உங்களுக்குத் தெரியாது." 
"எனக்குத் தெரியும்னு நான் நினைக்கிறேன்." 
"நிஜமாவா?" 
அவள் இரண்டு கடித உறைகளையும் நீட்டினாள்.
"ஒண்ணு, உங்களுக்காக ஆலிஸ்கிட்டேயிருந்து. இதை அவளே தயாரிச்சா. மற்றது நான் உங்களுக்குக் கொடுக்கிறது."
எங்கள் உரையாடலைக் கவனித்த ஆலிஸ் வரவேற்பறையிலிருந்து துள்ளிக்குதித்து ஓடிவந்தாள். 
"என்னோடதுதான் முதல்லே......என்னோடதுதான் முதல்லே......" 
நான் அப்படியே செய்தேன். 
"உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்காக!" வாசகங்களைக் கண்டதும் என் கண்கள் பனித்தன.  
"இதை மத்த அட்டைகள் வச்சிருப்பீங்களே, யாருக்கும் தெரியாம, கடைசி டிராயர்ல! அங்கேயே வச்சிடவா? அப்பதான் இது தனியா இருக்காது!" 
ஆலிஸ் உரக்கக் கேள்வியெழுப்பினாள். எதுவும் சொல்ல இயலாமல் மெளனமாய் தலையசைத்தேன். அமைதியாய் அடுத்ததைப் பிரித்தேன். 
"பிரிச்சிப் பாருங்க.....பிரிச்சிப் பாருங்க......"ஆலிஸ் நிலைகொள்ளாமல் மேலும் கீழும் குதித்துக்கொண்டே உற்சாகத்துடன் பாடினாள். 
அது சென்ற வருடத்து அட்டையை அப்படியே ஒத்திருந்தது, அதே இசையைப் பாடியது. ஆனால் ஒரு சிறிய வித்தியாசமிருந்தது. 
"அன்புள்ள அம்மா" என்பதில் 'அம்மா' என்ற வார்த்தையின் குறுக்காக ஒரு கோடு கிழிக்கப்பட்டு அதற்குப் பதில் 'அப்பா' என்று எழுதப்பட்டிருந்தது. 
"இதெல்லாம் ஆலிஸோட யோசனைதான். நீங்க எதுவும் தப்பா நினைக்கமாட்டீங்கன்னு நம்புறேன்." 
தெரஸா அமைதியாய் புன்னகைத்தாள். 
"ரொம்ப அழகா இருக்கு!" என்னை நானே சமாளிக்க பெரும் பிரயத்தனப்பட்டேன். 
"அப்பா.... அப்பா! அம்மா மேலேயிருந்து இந்த கார்டையெல்லாம் பாப்பாங்களா?" 
"நிச்சயமா பார்ப்பாங்க, கண்டிப்பா பார்ப்பாங்க!" 
"இப்படிதான் தெரஸா ஆன்ட்டியும் சொன்னாங்க!" 
ஆலிஸ் உற்சாகத்துடன் கூறினாள். 
என் கையிலிருந்த உறையிலிருந்து எதுவோ நழுவிக் கீழே விழ, குனிந்து எடுத்தேன். 
திரையரங்கில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கட்டுகள். 
வியப்புடன் ஒன்றும் புரியாமல் தெரஸாவை ஏறிட்டேன். நாணத்தால் முகம் சிவந்துபோனது அவளுக்கு. 
"அது.... அது வந்து.... நீங்க என்னோட வருவீங்களான்னு தெரியல...... இருந்தாலும்..... ஒருவேளை... இன்னைக்கு வேற எந்த வேலையும் இல்லைனா..... வருவீங்கன்னு...." 
அவள் முடிக்கமுடியாமல் தடுமாறினாள். 
"ரொம்ப நன்றி, தெரஸா!"  
நான் பெரிதாய்ப் புன்னகைக்க, ஆலிஸ் தன் பிஞ்சுக்கரங்களை எங்கள் இருவரது கரங்களுடன் பின்னியபடியே எங்களுக்கிடையில் ஊஞ்சலாடினாள். 
இந்த அன்னையர் தினம் மிகப் பிரகாசமானதாகத் தோன்றியது எனக்கு. 
********************************

(மூலம்: Sophie King எழுதிய Mother's Day என்ற ஆங்கிலச் சிறுகதை.
தமிழாக்கம் மட்டுமே நான்)
படம்: நன்றி இணையம்.

31 comments:

 1. மிகவும் பொறுமையாக ரஸித்துப்படித்தேன். மிகவும் அழகாக உணர்ச்சி பூர்வமாக எழுதியுள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. முதலில் காட்டியுள்ள படத்தேர்வு அழகோ அழகு. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. மிகவும் அற்புதமாக நீங்கள் படிதா கதையை உயிரோட்டத்துடன் எழுதியிருக்கீங்க கீதா .
  கதை மனதை மனதின் ஆழத்தை தொட்டுவிட்டது .மிக அருமை அதற்க்கு பொருத்தமான படம் .
  அதை இங்கிருந்து மெதுவாக எடுத்துக்கொண்டேன் ..:))

  ReplyDelete
 4. முடிவில் பரவசம்... தமிழாக்கத்திற்கு நன்றி...

  அன்னையர் தின அன்பு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete


 5. மிக மிக அழகான ,மெல்லிய மனவோட்டங்களை அருமையாய் சொல்கிறது கதை


  ReplyDelete
 6. மென்மையான சிறுகதை! அருமையான தமிழாக்கத்திற்கு பாராட்டுக்கள்! அந்த உயிரோவியம் மிக அழகு!

  ReplyDelete
 7. "உலகிலேயே தலைசிறந்த அம்மாவுக்காக!" வாசகங்களைக் கண்டதும் என் கண்கள் பனித்தன.//
  என் கண்களும் தான்.
  அருமையான கதை.
  அழகாய் தமிழாக்கம் செய்து தந்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.
  அன்னையர் தின வாழ்த்துக்கள்.
  ஓவியம் அருமை.

  ReplyDelete
 8. நான் பெரிதாய்ப் புன்னகைக்க, ஆலிஸ் தன் பிஞ்சுக்கரங்களை எங்கள் இருவரது கரங்களுடன் பின்னியபடியே எங்களுக்கிடையில் ஊஞ்சலாடினாள்.
  இந்த அன்னையர் தினம் மிகப் பிரகாசமானதாகத் தோன்றியது எனக்கு.
  இந்த இன்பம் என்றும் தொடர வாழ்த்துக்கள்
  என் தோழி !.........

  ReplyDelete
 9. அன்னையர் தின வாழ்த்துகள்!

  நல்ல கதை. மிக அருமையான தமிழாக்கம் கீதா.

  ReplyDelete
 10. நெகிழ்வான கதை. அன்னையர்தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. "இதை மத்த அட்டைகள் வச்சிருப்பீங்களே, யாருக்கும் தெரியாம, கடைசி டிராயர்ல! //

  மிகவும் நெகிழ்வுடன் ரசிக்கும் படியான மொழியாக்கம்!! பாராட்டும் வாழ்த்தும் தோழி... தங்களுக்கு!!

  ReplyDelete
 12. ஒரு நல்ல கதையை தமிழாக்கம் செய்து பகிர்ந்ததற்கு நன்றி கீதமஞ்சரி ..அருமை

  ReplyDelete

 13. அன்னையர் தின வாழ்த்துக்களெல்லாம் என் மனைவிக்குப் போய்ச் சேரும். எனக்கு எந்த காலத்திலும் அன்னையை வாழ்த்த வாய்ப்பிருக்கவில்லை. உங்கள் கதையில் வரும் ஆலிஸ் ஒரு வயதிலிருந்தே அன்னையர் தின வாழ்த்தட்டைகள் அனுப்பத் துவங்கி விட்டாளா. அன்னை அன்பு அறியாத நான் எழுதிய ஒரு பதிவை நீங்கள் படிக்க வேண்டுமே.
  gmbat1649.blogspot.in/2011/06/blog-post_18.html ஊரில் இல்லாததால் கால தாமதம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் ரசித்துப் படித்துப் பாராட்டியமைக்கும் மகிழ்வான நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 15. @வை.கோபாலகிருஷ்ணன்

  படத்தைக் கவனித்துப் பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி சார். படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. பாராட்டுகள் உரியவரையே சாரும்.

  ReplyDelete
 16. @angelin

  வருகைக்கும் கதை மற்றும் கதைக்கான படம் பற்றிய பாராட்டுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.
  நான் இந்த அழகிய படத்தை இணையத்திலிருந்தே எடுத்தேன். உங்கள் கைகளில் கிடைத்தால் அது இன்னும் அழகாக உருவாகும் என்று அறிவேன்.

  ReplyDelete
 17. @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் கருத்துக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

  ReplyDelete
 18. @ பூங்குழலி

  வருகைக்கும் கதைபற்றிய கருத்துக்கும் மகிழ்வான நன்றி பூங்குழலி.

  ReplyDelete
 19. @மனோ சாமிநாதன்

  வருகைக்கும் கதை மற்றும் கதைக்கான படத்தேர்வு பற்றியப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.

  ReplyDelete
 20. @கோமதி அரசு

  தங்கள் வருகைக்கும் நெகிழ்வானப் பின்னூட்டத்துக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி மேடம்.

  ReplyDelete
 21. @அம்பாளடியாள்

  வருகைக்கும் கனிவானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

  ReplyDelete
 22. @ராமலக்ஷ்மி

  வருகைக்கும் தமிழாக்கம் பற்றியப் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 23. @மாதேவி

  வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கும் அன்பான நன்றி மாதேவி.

  ReplyDelete
 24. @நிலாமகள்

  வருகைக்கும் ஊக்கம் தரும் இனிய மறுமொழிக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி நிலாமகள்.

  ReplyDelete
 25. @கிரேஸ்

  வருகைக்கும் கதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

  ReplyDelete
 26. @G.M Balasubramaniam

  தாமதமானாலும் தவறாது வந்து கருத்தளித்து ஊக்கமளிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. தங்கள் பதிவை விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி.

  ReplyDelete
 27. இந்தக் கதையைப் பாராட்டிய அனைவருக்கும் என் அன்பான நன்றி. இந்தக் கதையில் ஒரு எதிர்பாராத திருப்பமொன்று இருப்பதை எவரும் கவனித்தீர்களா என்று தெரியவில்லை. யாருமே அதைப் பற்றிக் குறிப்பிடாததால் எனக்கு இந்த சந்தேகம். கதையை சொல்வது ஆலிஸ் என்னும் குழந்தையின் அன்னை என்பதுபோல் துவங்கி இறுதியில் அது அன்னையல்ல, தந்தை என்று வெளிப்படுத்துவார் கதாசிரியர். ஒரு இடத்தில் குழந்தை, "அப்பா.... அப்பா! அம்மா மேலேயிருந்து இந்த கார்டையெல்லாம் பாப்பாங்களா?" என்று கேட்கும். அந்தவரியில்தான் நமக்குத் தெரியவரும் இதுவரை கதை சொல்வது குழந்தையின் தந்தை என்று. இறுதியில் தெரசா ஆலிஸின் தந்தையை சிறு நாணத்தோடு திரையரங்கு அழைப்பதன் மூலம் அவள் ஆலிஸ்க்கு அன்னையாக விரும்புகிறாள் என்றும் புரியும். இதைப் படித்தபோது இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாராததால் மனம் நெகிழ்ந்துபோனது. தாயில்லாக் குழந்தையின் நிலை கண்முன் வந்து வருத்தியது. அதனாலேயே இந்தக் கதையை மொழிபெயர்க்கும் ஆவல் எழுந்தது. கதையை வாசித்துக் கருத்திட்ட அனைவர்க்கும் அன்பான நன்றி. மனத்தில் தாய்மை சுமக்கும் யாவர்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. அனனையர் தின சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  மூலக்கதை கூட இவ்வளவு நேர்த்தியாகச்
  சொல்லப்பட்டிருக்குமா என சந்தேகம்
  கொள்ளத் தக்க வகையில் மிகச் சிறப்பாக
  இருந்தது தங்கள் மொழிபெயர்ப்பு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. அனனையர் தின சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  மூலக்கதை கூட இவ்வளவு நேர்த்தியாகச்
  சொல்லப்பட்டிருக்குமா என சந்தேகம்
  கொள்ளத் தக்க வகையில் மிகச் சிறப்பாக
  இருந்தது தங்கள் மொழிபெயர்ப்பு
  வாழ்த்துக்கள்

  அன்புத் தம்பி இரமணியின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்!

  ReplyDelete
 30. @Ramani S

  ஊக்கமூட்டும் மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 31. @புலவர் இராமாநுசம்

  தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.