28 September 2015

தேடுவோம் கண்டடைவோம்.
கேளுங்கள் தரப்படும், 
தட்டுங்கள் திறக்கப்படும், 
தேடுங்கள் கண்டடைவீர்கள் 
என்பது விவிலிய வாக்கு. இன்றைய நம் வாழ்க்கை தேடலை முன்னிறுத்தியே அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.. தேதியாகட்டும்.. கிழமையாகட்டும்… தொலைபேசி எண்களாகட்டும், முகவரிகளாகட்டும், கூட்டல் கழித்தல் கணக்காகட்டும்… வாழ்வியல் தேவையாகட்டும்.. எதையுமே நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்.. மூளையின் செயல்பாட்டுக்குள் நாம் வைத்துக்கொள்வதில்லை.. அந்தக்காலமெல்லாம் கனாக்காலமாகி கனகாலமாகிவிட்டது. இப்போது உள்ளங்கைக்குள் அடங்கிக்கிடக்கிறது உலகம்.. விரல் நுனியில் தொக்கிக்கொண்டிருக்கிறது தேடல்..

நம் வாழ்வின் அங்கமாகிவிட்ட இணையத்தேடல் குறித்தானதுதான் இப்போது பகிரவிருக்கும் என் ஆதங்கம். இணையத்தேடல்களில் தமிழின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கப்படவேண்டும்; தவறான தகவல்கள் தரப்படுவது அடியோடு நிறுத்தப்படவேண்டும்; தவறான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் பிறிதொரு தகவல் முந்தைய தகவலைச் சரியென்றாக்கிவிடும் சாத்தியங்கள் அதிகமிருப்பதால் அப்படியொரு ஆபத்தான நிலை தமிழுக்கு உருவாவதைத் தவிர்த்திட நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்னும் எண்ணங்களே இப்பதிவின் உருவாக்கம்.

இணையவெளிகளில் தமிழ்ச்சொற்களுக்குரிய உருவாதாரங்கள் மிகவும் குறைவு. நான் மட்டுமல்ல… இணையத்தேடலில் உரிய படங்கள் கிடைத்திராது சோர்ந்துபோன பலரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. உதாரணத்துக்கு, தமிழ்நாட்டின் மாநிலப்பறவையான மரகதப்புறா என்ற பெயரை கூகுள் படங்களில் இட்டுத் தேடிப்பார்ப்போமே… கிடைத்திருக்கும் சுமார் 250 படங்களுள் பத்தே பத்துப் படங்கள்தாம் மரகதப்புறாவின் படங்கள். மற்றவையெல்லாம் கத்தரிக்காய், மிதிவண்டி, கோயில், குதிரை என்று தேடலுக்குத் தொடர்பில்லாதவை. அதாவது மரகதப்புறா என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ள பதிவில் இணைக்கப்பட்டுள்ள பிற படங்கள். ஆனால் இதே மரகதப்புறாவை ஆங்கிலத்தில் emerald dove என்று தேடினால் சுமார் எழுநூற்றைம்பது படங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் எழுநூறு படங்கள் மரகதப்புறாக்கள். இப்போது தெரிகிறதா.. தமிழ்ச்சொல் சார்ந்த படத்தேடலில் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது.

சமீபத்தில் முருக்கம்பூ பற்றிய ஒரு பதிவை எழுதியிருந்தேன். Erythrina என்ற தாவரக்குடும்பத்தில் உள்ள 130 வகையுள் முருக்குமரமும் ஒன்று என்றறிந்தேன். மேலதிகத் தகவல்களைத் திரட்டியபோது முருக்கு என்பதும் முள்முருக்கு என்பதும் ஒன்றே என்ற தகவல் கிடைக்க.. அதைப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மேலும் ஆஸ்திரேலியாவில் காணப்பட்ட எரைத்ரினா பூக்கள் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முருக்கம்பூவின் தன்மையையும் நிறத்தையும் ஒத்திருந்ததால் பதிவில் அப்படங்களை இணைத்திருந்தேன். ஏனெனில் இணையத்தேடலில் முள்முருக்கம்பூக்களின் படங்கள் ஓரளவு கிடைத்தாலும் முருக்கம்பூக்களின் பிரத்தியேகப் படங்கள் கிடைக்கவே இல்லை..

புலியின் இரத்தந்தோய்ந்த நகங்களைப் போன்றிருப்பதால் புலிநகக்கொன்றை என்று மற்றொரு பெயர் இதற்கு இருப்பதாக ஒரு தளம் சொல்ல… வேறொரு தளம் புலிநகக்கொன்றை என்பது மஞ்சள் நிறக் கொன்றை மலர்களெனக் குறிப்பிடுகிறது. இலக்கியத்தில் ஞாழல் என்று சொல்லப்படுவது இந்த மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட மரம் என்ற தகவலை வெளியிடும் மற்றொரு தளம், செவ்விய முள்முருக்குப் பூக்களை காந்தள் மலர்களெனக் காட்டும்போது இணையதளங்களின் நம்பகத்தன்மையில் நமக்கு ஐயம் உண்டாகிறது. புலிநகக்கொன்றை என்று இணையவெளிப்படங்களில் தேடினாலோ பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் எழுதிய புலிநகக்கொன்றை நாவலின் அட்டையையும் எழுத்தாளரையுமே தேடல் முன்னிறுத்திக் காண்பிக்கிறது. ஆங்கிலத்தில் tiger’s claw tree என்று தேடினால் முள்முருக்கின் சிவந்த மலர்களைக் காட்டுகிறது. இப்போது உண்மையான முருக்கின் பூக்களையும் புலிநகக்கொன்றை மலர்களையும் யாராவது ஆதாரத்துடன் காட்டினால் அன்றி நம்முடைய ஐயம் விலகப்போவதில்லை.

முருக்கம்பூ பற்றிய தெளிவில்லாத நிலையில், என் பதிவில் முருக்கு, முள்முருக்கு, முள்முருங்கை, கல்யாண முருங்கை, புலிநகக் கொன்றை, கவிர் என்றெல்லாம் அழைக்கப்படும் முருக்கம்பூ என்று குறிப்பிட்டிருந்தபோது.. மனவிழி பதிவர் நண்பர் சத்ரியன், முருக்கு வேறு, முள்முருக்கு வேறு என்று குறிப்பிட்டுத் திருத்தம் சொன்னார். இரண்டுமே எரைத்ரினா வகை என்று அறிந்தாலும் இரண்டுக்குமான தமிழ்ப்பெயர்கள் வேறு என்பதை அவர்மூலம் அறிந்தேன். இணையத்தேடல் என்னைத் தவறாக வழிநடத்தியதைப் புரிந்துகொண்ட அவர், தன்னுடைய ஆதங்கத்தையும் பதிவுவழி வெளிப்படுத்தி… இயற்கையைப் படம்பிடிக்கும் புகைப்படக்கலைஞர்களுக்கு முகநூல் வழியே ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அதை இங்கே பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சத்ரியன்.

பறவைகளையும், விலங்குகளையும், இயற்கை காட்சிகளையும் விதவிதமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு (குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ளோர்) ஒரு வேண்டுகோள்.

நம் தமிழ்மொழி காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு இன்றைய சர்வ வல்லமைக் கொண்ட இணையஊடகத்திற்கு இடம்பெயர்ந்து இளையோரின் கைகளில் சென்று சேர்ந்திருக்குப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதே வேளையில், நம் இலக்கியங்களில் பதியப்பட்டிருக்கும் பூவினங்கள், பறவையினங்கள், மரவகைகள், செடிக்கொடி வகைகள் இவை யாவற்றையும் (கூடுமான வரையில் இன்றும் காணக்கிடைப்பவற்றை) படம் பிடித்து சரியான பெயர்களுடன் கூகுளில் பதிவேற்றம் செய்வது நம் சந்ததியினருக்கு சான்றாகவும், உதவியாகவும் இருக்கும்.

இத்தகவலைக் காணும் நண்பர்கள், உங்களின் நட்புப் பட்டியலில் இருக்கும் புகைப்பட ஆர்வர்களுக்கும் சென்றுச்சேர உதவுங்கள்.

இணையத்தமிழின் இன்வளர்ச்சிக்கு உதவும் இத்தகு முயற்சிகளுக்கு நம்மாலான பங்களிப்பை எல்லா வகையிலும் வழங்குதல் வேண்டும். புகைப்படக் கலைஞர்களுக்கு பறவை, விலங்கு, தாவரங்கள் பற்றிய பொது அறிவோ, இலக்கிய அறிவோ இருக்கவேண்டும் என்னும் அவசியமில்லை. ஆனால் அவர்கள் எடுத்தப் புகைப்படங்களைப் பொதுவில் சமூக வலைத்தளங்களிலோ, வலைப்பூக்களிலோ… இணையதளங்களிலோ பதிவிட்டு அடையாளங்கோருவதன் மூலம் அவற்றைக் குறித்தத் தகவல் அறிந்தவர்கள் இது இன்னதுதான் என்று அறுதியிட்டு அவற்றின் பெயரை ஆவணப்படுத்த இயலும். வருங்காலத் தலைமுறைக்கு உதவும்வகையில் படங்கள் யாவும் உரிய தலைப்புகளுடன் ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும். அதற்கு பல்வேறு இயற்கை ஆய்வாளர்களின் நூல்களையும் கையேடுகளையும் வாசித்தறிதல் அவசியம்.

அயல்நாட்டிலிருந்துகொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தாய்மண்ணை மிதிக்கும் எனக்குத் தற்சமயம் இம்முயற்சியில் பங்கேற்பது அசாத்தியம் என்றாலும் என்னளவிலான முயற்சிகளைத் தவறவிடுவதில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். பறவையியல் வல்லுநர் சலீம் அலி அவர்கள் எழுதிய பறவை உலகம் நூலை வாசித்தபிறகுதான் moorhen என்பது தாழைக்கோழி என்றும் coot என்பது நாமக்கோழி என்றும் purple swamphen என்பது நீலத்தாழைக்கோழி என்றும் அறிந்தேன். ஆஸ்திரேலியாவில் படம்பிடிக்கப்பட்டப் பறவைகளானாலும் அவை தமிழ்நாட்டிலும் காணக்கூடிய பறவை வகைகள் என்பதறிந்து அப்பெயரால் அவற்றைச் சுட்டினேன். தாழைக்கோழி, நாமக்கோழி குறித்தான இணயத்தேடல்களில் முதல் பத்து படங்களுள் என்னுடைய படங்களும் இருப்பது மகிழ்வளிக்கிறது.

பறவைப் பெயர்களுக்கான கையேடுகளில் என் மனத்துக்கு உடன்படா விஷயம் ஒன்று உள்ளது. அது, முக்குளிப்பான் (little grebe), தவளைவாயன் (frogmouth), கரண்டிவாயன் (அ) துடுப்புவாயன் (spoon bill), அரிவாள்மூக்கன் (ibis) போன்ற ஆண்பாற்பெயர்கள். அவற்றின் இனத்தில் பெண்பறவைகளை எப்படிக் குறிப்பிடுவது? தவளைவாயன் இனத்தில் பெண்பறவையைக் குறிப்பிட பெண் தவளைவாயன் என்றால் நன்றாகவா இருக்கிறது? தவளைவாயள்? சரிவரவில்லை… எனவே பறவைப்பெயர்களை ஆவணப்படுத்தும்போது முக்குளிவாத்து, தவளைவாய்ப் பறவை, கரண்டிவாய்ப் பறவை போன்றப் பொதுப்பெயர்களால் குறிப்பிடுவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

அதேபோல வண்ணத்துப்பூச்சிகளின் பெயர்களும்… தமிழ்நாட்டில் காணப்படும் 319 வகை வண்ணத்துப்பூச்சிகளும் அழகிகள், வெள்ளையன்கள், வரியன்கள், நீலன்கள், தாவிகள் என ஐந்து பிரிவுகளாக அடையாளங்காட்டப்படுகின்றன.

கத்திவால் அழகி (spot swordtail), மரகத அழகி (Tailed jay), மலபார் அழகி (Malabar rose), கறுப்பு அழகி (red helen), கறிவேப்பிலை அழகி (common Mormon), எலுமிச்சை அழகி (lime butterfly), கொன்னை வெள்ளையன், (catopsilia pomono), கண்ணாடி வரியன் (glassy tiger), நீல வரியன் (blue tiger), பனைச்சிறகன் (common palmfly), ஐந்து வளையன் (common fivering) போன்ற பெயர்கள் தமிழின் அழகியல் தன்மையோடு இருந்தாலும் ஆவணப்படுத்துதலின்போது இயல்புகெடாமல் இருக்கவேண்டியது அவசியமன்றோ? குழந்தைகளிடத்தில், ஒட்டுமொத்தமாக இன்னின்ன வகையெல்லாம் ஆணென்றும் இன்னின்ன வகையெல்லாம் பெண்ணென்பதுமான தட்டையான புரிதலுண்டாகும் சாத்தியத்தை நாம் ஏற்படுத்தலாமா?

கத்திவால் வண்ணத்துப்பூச்சி, நீலப்பட்டை வண்ணத்துப்பூச்சி, புலிவரி வண்ணத்துப்பூச்சி, காக்கைக்கருப்பு வண்ணத்துப்பூச்சி என்ற பொதுப்பெயர்களால் குறிப்பிட்டுப் பழகுவோமே… வண்ணத்துப்பூச்சிகளை விரட்டி விரட்டிப் படமெடுப்பதோடு நம் வேலை முடிந்துவிட்டதாக எண்ணாமல் வண்ணத்துப்பூச்சிகளின் படங்களை உடனுக்குடன் இணையமேற்றி அவற்றுக்கான பெயர்களுடன் பதிவு செய்தல் நம் கடமை என்பதையும் வருங்காலத் தலைமுறையின் தமிழார்வத்துக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் நாம் வகுத்துக்கொடுக்கும் பாதை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இலக்கியம், வாழ்க்கை, இயற்கை, கலை, பாரம்பரியம், இன்னபிற துறைகள் சார்ந்து நாம் எடுக்கும் படம் ஒவ்வொன்றையும் அதற்கான தமிழ்ப்பெயர்களோடும் தலைப்போடும் சரியான தகவல்களோடும் எல்லையில்லா இணையப்பெருவெளியில் தப்பாமல் பகிர்வோம். இணைய ஊடகங்கள் வாயிலாய் தமிழில் பதிவேற்றப்படும் படங்கள் யாவும் நம் தமிழ்ச்சொல் சார்ந்த தேடலின் சிரமம் குறைப்பதோடு, தமிழின் வளர்ச்சிக்குத் தக்கதொரு ஆவணக்காப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. தமிழில் படங்களை ஆவணப்படுத்துவோம். நம் உருவாதாரத்தேடல்களை இலகுவாக்குவோம்.


தேடுவோம்.. கண்டடைவோம்.
************* 

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது. வகை(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப்போட்டிக்கென எழுதப்பட்ட இக்கட்டுரை, என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். – கீதா மதிவாணன்

(படம்: நன்றி இணையம்)

42 comments:

 1. மிக மிக அற்புதம்
  ஆழமான அலசலுடன் அற்புதமாக்ச் சொல்லிப்போனது

  மனம் கவர்ந்தது
  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் உடனடி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

   Delete
 2. ஆஹா அருமையான தேடல்,
  தாங்கள் இதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்பது வாசிப்பில் அறிந்தேன். வாழ்த்துக்கள்.
  வெற்றிப் பெற உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மகேஸ்வரி.

   Delete
 3. தங்களின் சூழலியல் பார்வை பிரமிப்பூட்டுகிறது.
  வெற்றிபெற வாழ்த்துகள்.

  முந்தைய பதிவுகளையும் தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விஜி சார்.

   Delete
 4. அருமை சகோ போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி கில்லர்ஜி.

   Delete
 5. அந்த முள் முருக்கன் பதிவு படிக்கையிலேயே எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அதே சமயம் எனக்கும் இது குறித்த தெளிவு இல்லை! புலிநகக் கொன்றை மரம் என் சிறு வயதில் என் தாத்தா ஊரில் பார்த்து இருக்கிறேன்! அந்த பூ கொத்தாக இருக்காது தனியாக இருக்கும் மஞ்சள் நிறமாக பார்த்ததாக நினைவு. முருக்கன் வகையிலும் அந்த பூ இருக்கலாம் என்று உங்கள் பதிவின் வாயிலாக ஊகித்தேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்... கிராமத்தில் உள்ளவர்கள் விரைவில் முருக்கம்பூவைப் படமெடுத்து பதிவேற்றுவார்கள் என்று நம்புவோம். அப்போதுதான் உண்மையான முருக்கம்பூவைப் பற்றி அறிய இயலும். புலிநகக்கொன்றைக்காகவும் காத்திருக்கிறேன்.

   Delete
 6. இலக்கியம், வாழ்க்கை, இயற்கை, கலை, பாரம்பரியம், இன்னபிற துறைகள் சார்ந்து நாம் எடுக்கும் படம் ஒவ்வொன்றையும் அதற்கான தமிழ்ப்பெயர்களோடும் தலைப்போடும் சரியான தகவல்களோடும் எல்லையில்லா இணையப்பெருவெளியில் தப்பாமல் பகிர்வோம். இணைய ஊடகங்கள் வாயிலாய் தமிழில் பதிவேற்றப்படும் படங்கள் யாவும் நம் தமிழ்ச்சொல் சார்ந்த தேடலின் சிரமம் குறைப்பதோடு, தமிழின் வளர்ச்சிக்குத் தக்கதொரு ஆவணக்காப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. தமிழில் படங்களை ஆவணப்படுத்துவோம். நம் உருவாதாரத்தேடல்களை இலகுவாக்குவோம்.

  சிறப்பானதொரு யோசனையினை
  முன் வைத்திருக்கிறீர்கள் சகோதரியாரே
  எண்ணத்தைச் செயலாக்குவோம்
  நன்றி
  வெற்றி பெற வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

   Delete
 7. அருமையான தேடல்கள் அதிக நேரம் செலவழித்து தொகுத்துள்ளீர்கள் பாராட்டுக்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இனியா.

   Delete
 8. அருமையான கட்டுரை வெற்றிபெற வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.

   Delete
 9. மரியாதைக்குரியவரே,
  வணக்கம். தாங்கள் சமூகத்தின் மீது வைத்துள்ள அக்கறை போற்றத்தக்கது.உதாரணமாக, ''
  நம் தமிழ்மொழி காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு இன்றைய சர்வ வல்லமைக் கொண்ட இணையஊடகத்திற்கு இடம்பெயர்ந்து இளையோரின் கைகளில் சென்று சேர்ந்திருக்குப்பது மகிழ்ச்சியளிக்கிறது.அதே வேளையில், நம் இலக்கியங்களில் பதியப்பட்டிருக்கும் பூவினங்கள், பறவையினங்கள், மரவகைகள், செடிக்கொடி வகைகள் இவை யாவற்றையும் (கூடுமான வரையில் இன்றும் காணக்கிடைப்பவற்றை) படம் பிடித்து சரியான பெயர்களுடன் கூகுளில் பதிவேற்றம் செய்வது நம் சந்ததியினருக்கு சான்றாகவும், உதவியாகவும் இருக்கும்.'' என்று வரிகளாக பதிவிட்டு, அழிய அல்லது மறந்துவிடக்கூடிய சூழலில் இருப்பனவற்றை வெளிக்கொணருவதற்காக அனைவருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளீரே!. உமது தமிழ்ப்பற்று,சமூகப்பற்று வாழ்க,வளர்க என வாழ்த்தும்,
  அன்பன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்-638402

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள வேண்டுகோள் வரிகள் நண்பர் சத்ரியன் அவர்களுடையது. பாராட்டுகள் அவருக்கே உரித்தானவை.

   Delete
 10. மலர்கள், தாவரங்கள் ஆகியவற்றைச் சரியான பெயர்களுடன் பதிவு செய்து வளரும் தலைமுறைக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. போட்டியில் வென்றிட வாழ்த்துக்கள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

   Delete
 11. உண்மைதான், பல விஷயங்களை தமிழில் எழுதி தேடுவதைவிட ஆங்கிலத்தில் தேடும்போதுதான் அதிக பக்கங்கள் தொடர்புடையவையாகக் கிடைக்கின்றன!!

  நல்லதொரு கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். அருமையான எழுத்தும் சிறப்பான விளக்கமும் பரிசு நிச்சயம் என உறுதிபடுத்துகின்றன. வாழ்த்துகள்!! :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஹூஸைனம்மா.

   Delete
 12. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

  இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

  நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. காலக்கெடுவை மேலும் இருநாள் நீட்டித்திருப்பது மகிழ்வளிக்கிறது. எழுத நினைத்து எழுத முடியாமல் போன பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

   Delete
 13. சிறப்பானதோர் பதிவு.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

   Delete
 14. பயனுள்ள பதிவு கீதா.

  // அந்தக்காலமெல்லாம் கனாக்காலமாகி கனகாலமாகிவிட்டது.// அழகாய் இருக்கு வசனம்.

  இணையத்தில் இருப்பவை எல்லாம் வெறும் தகவல்கள் தான். அவை யாவும் உண்மை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை கீதா. குறிப்பிட்ட மூல ஆதாரத்தோடு ஏதேனும் பகிரப்பட்டிருந்தால் மாத்திரம் அதன் மூலத்தையும் பரிசீலனை செய்து உண்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் பயன் படுத்துவது தான் உபயோகமானது.

  உங்கள் புகைப்படங்கள் பற்றிய கரிசனை மிக சரியானது. அதனை யாரேனும் ஒரு பட்டத்துக்கான ஆய்வாகவே செய்யலாம். தமிழுக்கான ஒரு சேவையாகவும் அது இருக்கும். குறிப்பாகக் கபிலர் பூக்கள் 99 மற்றும் பெயர் அறியா ஏனைய பூக்கள் பற்றி யாரேனும் இலக்கிய பின்னணியோடும் பூக்களின் புகைப்படங்களோடும் நவீன ஆங்கில ஆதாரங்களோடும் அந்த ஆய்வைச் செய்தால் அந்தப் புத்தகம் எவ்வளவு “அழகாய்” அது இருக்கும்?! கீதா கூட செய்யலாம் அதை!!

  இணையத்தில் உள்ள மற்றவை எல்லாம் சும்மா வாசிக்க..... அதற்கு மேலே ஒன்றுமில்லை. இதனை நான் குறையாகச் சொல்லவில்லை. யதார்த்தத்தைச் சொன்னேன். யாரும் என்னைக் கோவித்துக் கொள்ளாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிகவும் நன்றி மணிமேகலா. தமிழுக்கான சேவையாக இலக்கியம் சார்ந்த பதிவுகளை இட்டாலும் அவற்றை இணையத்தில்தானே ஏற்றுகிறோம்... இணையத்தில் உள்ளவை எல்லாம் சும்மா வாசிக்க என்னும் உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. இணையத்தில் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம். வெகுகாலமாய் நான் அறிய ஏங்கிக்கொண்டிருந்த சங்க இலக்கியங்களை எனக்கு வாரிவாரித் தருவது தமிழ் இணையவழிக் கல்விக்கழகம்தான். ஆஸ்திரேலியா சார்ந்த அதிசய உயிரினங்களைப் பற்றி அளவிலாத விவரங்களை இணையதளங்கள் அதுவும் முக்கியமாக ஆஸ்திரேலிய வனத்துறை சார்ந்த நம்பகமான இணையதளங்கள் மூலமாகவே பெறுகிறேன். எனவே என்னைப் பொறுத்தவரை இணையத்தின் பயன்பாடு முறையாக அமைந்தால் நம் நேரமும் தேடலும் பயனுள்ளதாக இருக்கும்.

   Delete
 15. மிகவும் நன்றி தனபாலன்.

  ReplyDelete
 16. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா.

  //குறிப்பிட்ட மூல ஆதாரத்தோடு ஏதேனும் பகிரப்பட்டிருந்தால் மாத்திரம் அதன் மூலத்தையும் பரிசீலனை செய்து உண்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் பயன் படுத்துவது தான் உபயோகமானது.//

  //இணையத்தில் உள்ளவை எல்லாம் சும்மா வாசிக்க//

  ’மற்றவை எல்லாம்’ என்று சொல்லி இருந்தேன் கீதா. எத்தனையோ நூலகங்கள், பல்கலைக் கழகங்கள், அகராதிகள்...நம்பகத் தன்மையோடும், சேவை மனப்பாண்மையோடும், பயன்பாட்டு தன்மையோடும் இருக்கின்றன என்பதற்கு மாற்று அபிப்பிராயம் இருக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் மணிமேகலா... நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். நம்பகத்தன்மை இல்லாத தளங்களைக் கண்டறிந்து விலக்குவது ஒரு பெரிய பொறுப்புமிகு பணி. மறுவரவுக்கும் தெளிவுபடுத்தலுக்கும் மிக்க நன்றி.

   Delete
 17. அறியாத பல அறிந்து கொண்டேன். ஆழமான கருத்துக்கள்.
  'தட்டையான புரிதல்' - அருமையான சொல்லாடல்.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவு பற்றியக் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அப்பாதுரை சார்.

   Delete
 18. உங்கள் தேடலின் ஆழம் பதிவில் தெரிகிறது ,உங்கள் சொல்லாடல் அருமை
  சிறப்பானதோர் பதிவு வெற்றிபெற வாழ்த்துக்கள்=சரஸ்வதிராசேந்திரன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சரஸ்வதி மேடம்.

   Delete
 19. //... பதிவு செய்தல் நம் கடமை என்பதையும் வருங்காலத் தலைமுறையின் தமிழார்வத்துக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் நாம் வகுத்துக்கொடுக்கும் பாதை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

  என் எண்ண ஓட்டத்தில் இருந்ததை இக்கட்டுரையில் பார்க்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். பதிவர் அறிமுகம் பகுதியில் இணையத்தில் தமிழ் தேடுதலைக் குறித்து பேசினேன். அருமையான இக்கட்டுரையை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. மரகதப்புறா எனத் தேடுவது இருக்கட்டும், அம்மா எனத் தேடினால் இணையத்தில் தமிழில் தேடுவதை நிறுத்தி விடுவோம். எனது "வலைப்பூ நமது தொடக்கமென்றால் முடிவு விக்கிபீடியாவில் இருக்கட்டும்" பதிவிற்கு கூடுதல் விளக்கம் சேர்க்கும் இக்கட்டுரைக்கு இணைப்பு தந்து மகிழ்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் தமிழின் வளர்ச்சி குறித்த அருமையானதொரு மனமொத்தக் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 20. இக்கட்டுரை இப்போது தான் கண்டேன் அக்கா. மிக ஆழமான அவசியமா அலசல்.

  நானும் இவை குறித்து பல தடவை நினைத்திருக்கின்றேன். தமிழ் வளர்ந்து விட்டது என சொல்கின்றோம், ஆனால் தமிழில் ஆவணப்படுத்தப்பட்டவையும் மொழிபெயர்க்கப்பட்டவையும் மிக மிக சொற்பமே!

  அதிலும் ஆங்கிலம், ஜேர்மன் மொழியோடு தமிழையும் கோர்த்து தேடும் எனக்கு பல நேரம் தலையே சுற்றும். விக்கிமீடியாவில் கூட மொழி பெயர்க்கிறோம் என சரியான முழுமைப்படுத்தல் இல்லை.

  சங்க கால பூக்கள், மரங்கள், பறவைகள் தேடலில் நான் ஜேர்மன் மொழி யிலும் அதன் தாவரப்பெயர்கள் கொண்டு தேடிய போது ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். எத்தனை விதமான தகவல்கள் படங்கள் அங்கே குமிந்திருக்கின்றன. நம் மொழியில் நாம் எத்தனை பின் தங்கி இருக்கின்றோம்.எனும் கவலை எனக்குள்ளும் உண்டு.

  இதற்கெல்லாம் தீர்வு என்ன?

  ReplyDelete
 21. இணையத்தில் இறைந்து கிடப்பதெல்லாம் நம்பத்தகுந்ததல்ல எனும் போக்கு நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் இனி வரும் எதிர்கால சந்ததி இணையத்தில் இருப்பதை வைத்து மட்டும் தான் முடிவெடுக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கின்றோமா? மரபுக்கவிதையில் வெண்பா இயற்றுதலும், நாவல் எழுதுதலும் ,ஹைக்கூக்களை எழுதுபவனும் தான் நல்ல எழுத்தாளர் எனும் கருத்து கொண்ட சமுகம் இங்கொன்றுண்டு. அவைகளுக்கு இவைகள் குறித்து ஆராய்ந்தறிய நாம் செலவிடும் நேரங்கள், மணிகள் அல்ல நாட்கள் என்பது புரியாது போகின்றதே என கவலையடைந்திருக்கின்றேன்.

  இந்த மாதிரி தமிழில் எதிர்கால சந்ததிக்காக பல மொழிகளில் ஆராய்ந்து மொழிபெயர்த்து தட்டச்சு செய்ய் ஒரு பூவுக்கு,பறவைக்கு,பல நாட்கள் கூட செலவாகும் என நான் அனுபவ பூர்வ்மாக உணர்ந்திருக்கின்றேன். ஆனால் இப்படியான சமூதாய் எதிர்னோக்கு சிந்தனைக்கான பயன் இன்று என்ன அக்கா?

  நாம் வளரணும், நம் தமிழ் வளரணும்,எனில் நம் தேடல் விசாலமாக்கபட்டு நீண்ட கூரிய நோக்குடனான பல மொழிகளை ஆராய்ந்து எழுத வேண்டும். அதை யார் செய்வது?

  எங்கள் பிள்ளைகள் இருவரும் பிறந்ததும் வளர்வதும், சுவிஸில் தான். அவர்களை நான்காம் வயதில் கிண்டர்கார்டன் கொண்டு விட்டபோது ஆசிரியர் சொன்ன வார்த்தை இன்றும் மறக்கவில்லை.

  யானைபொம்மையை காட்டி அதை ஜெர்மனில் சொல்லி கொடுத்து விட்டு அதற்கு தமிழில் என்ன என கேட்டால் என் மகன் எலிபண்ட் என சொல்லி இருக்கின்றான். ஆதற்கு அவ அது ஆங்கில வார்த்தை. உன் தாய் மொழியில் சொல் என கேட்டால் என் மகனுக்கு தெரியவில்லை. அம்மா சொல்லி தரவில்லையா என கேட்டிருக்கின்றார். இல்லை என சொன்னதும் அதை குறித்து வைத்து அடுத்த பெற்றார் ஆசிரியர் கூட்டத்தில் முதலில் உன் மகனுக்கு உன் சொந்த மொழியை சொல்லி கொடு. அவனுக்கு பல மிருகங்களுக்கு தமிழில் சொல்ல தெரியவில்லை எனும் போது நான் வெட்கப்பட்டேன்.

  நாம் தமிழை பேச வெட்கப்படுகின்றோம்.என்பது எத்தனை நிஜம்.

  ReplyDelete
  Replies
  1. விரிவான அலசலுக்கும் இணையத்தமிழின் எதிர்காலம் குறித்த ஆதங்கத்துடனான பின்னூட்டத்துக்கும் நன்றிம்மா நிஷா. நம்மால் இயன்றவரை தமிழில் படத்துடன் பெயர்ச்சொற்களை ஆவணப்படுத்த முயற்சி செய்வோம்.. குழந்தைகளுக்கும் தமிழில் கற்றுத்தருவோம்.. உங்கள் மகனின் ஆசிரியர் சொன்னது மிகவும் வரவேற்கத்தக்கது. என் மகனும் சற்று விவரம் தெரிந்த நாளில் கேட்டான்... டிவி, ச்சேர், ஃபேன் இதெல்லாம் தமிழ் வார்த்தை இல்லையா... நான் இவ்வளவுநாள் இவையெல்லாம் தமிழ் என்றே நினைத்திருந்தேன் என்றான். அப்போதுதான் என்னுடைய தவறும் எனக்குப் புரிந்தது. பிறகு ஒவ்வொரு பொருளுக்கும் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் சொல்லிக்கொடுத்தேன். இரண்டு தமிழர்கள் சந்தித்தால் தமிழை விடுத்து ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்று கேலியாகச் சொல்வார்கள். உண்மையும் அதுதான். பல இடங்களில் பார்த்திருக்கிறேன். வருத்தம் தரும் உண்மை அது.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.