22 September 2015

பெண்ணறம் காக்கும் பேராண்மை
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்பது கவிமணியின் மணியான வரிகள். மாதவத்தின் பலனாகத்தான் மங்கையராய்ப் பிறந்திருக்கிறோமா? மங்கையரெல்லோருமே மாதவப் பலன்கள்தாமா?

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலும் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கேட்டுப்பெறாமல் கிடைக்கிறதா? பெண் என்னும் காரணத்துக்காகவே பணியிடங்களிலும் பதவி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் ஒடுக்கப்படும் நிலைமை குறைந்திருக்கிறதா? கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் பெண்கள், திருமணபந்தத்துக்குள் நுழைந்தபிறகு காணாமல் போகும் நிலை மாறியிருக்கிறதா? குடும்பப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பின் முன், தங்களுடைய பணி, பதவி மற்றும் வாழ்க்கை இலட்சியங்களைப்பற்றி ஒரு பெண் சிந்திப்பதே தவறென்னும் சமூகத்தின் அழுத்தமானப் பார்வையில் சிறிதேனும் மாற்றமேற்பட்டிருக்கிறதா? திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் கீழாகச் சித்தரிக்கப்படும் பெண்மீதான கண்ணோட்டம் மாறுபட்டிருக்கிறதா? அவ்வளவு ஏன்? சராசரி குடும்பங்களிலேயே பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்துவாழும் நிலையிலுள்ள பெண்களின் நிலை மேம்பட்டிருக்கிறதா? பொருளாதார சுதந்திரம் இருக்கட்டும், அவர்களுடைய பொதுவெளி சுதந்திரம் அங்கீகரிக்கப்படுகிறதா? அவர்களுடைய கருத்துகளும் ஆலோசனைகளும் உதாசீனப்படுத்தப்படாமல் பரிசீலனைக்காவது ஏற்கப்படுகின்றனவா? பொருளாதாரச் சுதந்திரம் உள்ள பெண்களும், தாங்கள் சம்பந்தபட்ட முடிவுகளைத் தாங்களே தீர்மானிப்பதிலும், சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் தற்சார்புடையவர்களாய் இருக்கிறார்களா? மொத்தத்தில் பெண் என்பது வரமா? சாபமா? முட்டிக்கிளைத்து வருகின்றன கேள்விகள்.. விடைகள்தாம் கண்களுக்கு மறைவாய்.. காணாத்தொலைவில்!

கருவொன்று பெண்ணுருக் கொள்வதிலிருந்தே பெண்சார்ந்த பிரச்சனைகள் துவங்கிவிடுகின்றன. பெண்சிசுக்கொலை என்பது சட்டப்படி குற்றம் என்றபோதிலும் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் சத்தமில்லாமல் இக்கொலைகள் நடந்தேறுவது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரம் பெண்சிசுக்கொலைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வறுமையும் வரதட்சிணைப் பிரச்சனைகளும்தான், பெண்சிசுக்கொலைக்கு, பெற்றவளே உடந்தையாகும் கொடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. கருவிலேயே பெண்சிசுவைக் கண்டறிந்து அழிப்பதான செயல், சட்டத்தின் தண்டனைகளுக்குப் பயந்து ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, பெண்குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு கள்ளிப்பால் புகட்டியோ, நெல்மணி கொடுத்தோ கொல்லப்படும் மாபாதகச்செயல் மட்டும் இன்றும் தொடர்ந்தவாறிருப்பது கொடுமை.

சோதனையான இக்கட்டத்தையும் மீறி வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் சரியான போசாக்கின்மையாலும் படிப்பறிவின்மையாலும், உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மிகவும் பின்தங்கி வறியதொரு வாழ்க்கையை வாழநேரிடுவது ஒரு துர்பாக்கியம்.

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

என்னும் மகாகவியின் வரிகளுக்கேற்ப பெண்மக்கள் வீட்டுப்பொந்தில் ஒளிவதை விடுத்து, பள்ளிக்குச் சென்று பாடம் பயிலத் தலையெடுத்தால், அதற்கும் முட்டுக்கட்டை போட முனைகிறது ஒரு காமாந்தக வெறிநாய்க்கூட்டம். பச்சிளம் பெண்குழந்தைகளின் மழலைப் பருவத்திலிருந்தே துவங்கிவிடும் பாலியல் பயங்கரவாதங்கள், பள்ளி, கல்லூரி, பணியிடம், பொது இடம் என்று பல்வேறு நிலைகளிலும் பெண்ணைத் தொடர்ந்து அவளை முன்னேறவிடாமல் துரத்தியடித்து மீண்டும் அவளை மூலையில் முடக்கப் பார்க்கின்றன. பெற்றவர்தம்வயிற்றில் அன்றாடம் அமிலஞ்சுரக்கவைக்கும் இத்தகைய அச்சுறுத்தல்களால், இதுவரை வயது வந்த பெண்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே கவலைப்பட்டு வந்த நாம், இப்போது பச்சிளம்சிசுக்களின் பாதுகாப்பான வீடுதிரும்பலுக்காகவும் பரிதவிப்போடு காத்திருக்கவேண்டிய நிலை வந்துவிட்டது..

காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பணிந்து
கையில் விரித்த குடை தூக்கி – நல்ல
கல்விக்கழகமதை நோக்கி – காய்ச்சும்
பாலுக்கு நிகர் மொழிப்பாவை நீ செல்லுவதைப்
பார்க்கும் இன்பந்தானடி பாக்கி.

என்றொரு தாயின் ஆவலைப் பாடிய பாரதிதாசனார் இன்றிருந்தால்… செல்லுவதை மாத்திரம் அல்ல… நல்லபடியாக சென்று நல்லபடியாகவே வீடு திரும்பிவருவதையும் பார்க்கும் இன்பம் வேண்டுமென பாடியிருப்பார்.  

குழந்தைகளிடத்தில் நல்ல தொடுகை, தீய தொடுகை பற்றியெல்லாம் கற்றுக்கொடுத்து எச்சரிக்கையாயிருந்தாலும், சிற்சில சந்தர்ப்பங்களில் நம்முடைய பெருத்த நம்பிக்கைக்குரியவர்களே குழந்தையின் பால்யத்தை சிதைக்கும் செய்திகளை எவ்வளவு பார்க்கிறோம்.. கேட்கிறோம்.  கண்ணையும் கருத்தையும் இழந்துவிட்ட காமுகர்களுக்கு குழந்தையும் குமரியும் கிழவியும் ஒன்றாகத்தோன்றும் கீழான மனநிலையில் அவ்வரக்கர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்ப்பதென்பது அத்துணை எளிதன்று. சோதனைமிகுந்த அந்தக் கட்டத்தையும் தாண்டி பெண்குழந்தைகள் வளர்ந்து படித்து பட்டம்பெற்று பணியில் அமர்ந்தபிறகும், இச்சமுதாயத்தில் ஒரு பெண்ணாய் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சொல்லிமாளா.

வயதும் அறிவும் முதிர்ந்த ஒரு பெண்,  தன் மனத்துக்குப் பிடித்தவனை,  அவன் தன் சாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கும்பட்சத்தில், அவனைத் தன்  வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறதா இச்சமூகத்தில்? சாதிமத இனவெறி பிடித்த சண்டாளர்களின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகும் காதலர்களின் கதையை நித்தமும் செய்தியாகக் கேட்டு, ‘உச்சுகொட்டிக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது நம் இயல்பு வாழ்க்கை. சாதீயத்தின் ஆதிக்கத்துக்கு இன்றும் பெண்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டிய நிலையிருப்பது மறுக்கமுடியாத உண்மை. அதேசமயம், ஒரு பெண், தனக்குப் பிடிக்காத ஒருவனை வாழ்க்கைத்துணையாக ஏற்க மறுக்கும் சுதந்திரத்தையாவது பெற்றிருக்கிறாளா என்றால் அதுவுமில்லை. அமில வீச்சுகளும் கழுத்தறுப்புகளும் காவு வாங்கிய அப்பாவிப் பெண்களை அத்தனை எளிதில் நம்மால் மறந்துவிடமுடியுமா?

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சிபெறச் செய்து வாழ்வமடி..

என்று பாரதியும்

மாவடு நிகர்விழிச் சின்னஞ்சிறுமியே நீ
மங்கை எனும் பருவம் கொண்டுகாதல்
வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு காட்டித்
‘தேவை இவன்’  எனவே செப்பும் மொழி எனக்குத்
தேன்! கனி! தித்திக்கும் கற்கண்டு.

என்று பாரதிதாசனும் பாடிவைத்தனர் அன்று.

என்னதான் ஒரு பெண், பொருளாதார ரீதியாக தன் சொந்தக்காலில் நிற்கும் திறமும், சுயமாய் சிந்திக்கும் அறிவும் பெற்றிருந்தாலும், இன்றும் அவளுடைய வாழ்க்கைப்பாதையைத் தீர்மானிக்கும் பொறுப்பும், தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையும் அவள்வசத்தில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

அடுத்து, பணியிடங்களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள். ஆண் பெண் ஊதிய பேதம் முதலாவது. இது உலகளாவிய அளவிலேயே பெண்ணினத்துக்கு எதிராக நடைபெறும் ஒரு பெரும் அநியாயம். அடிமட்டக் கூலிவேலை பார்க்கும் பெண்கள் முதல் உயர்மட்டத் தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் வரை எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சம தகுதியுள்ள ஆண்களை விடவும் பெண்களுக்கு 34 சதவீதம் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்று ஒரு ஆய்வின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆணுக்கு நிகராகப் பாடுபடும் பெண்ணுக்கு அவளுடைய உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படுவது என்ன நியாயம்?

பொருளாதாரச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை, பணிபுரியும் பெண்கள் அனைவருக்குமே முழுமையாக அது கிடைத்துவிட்டது என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. இன்றும் பல பெண்கள், தனக்காகவோ, தன்னைப் பெற்றவர்களுக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ செலவு செய்யும் உரிமை மறுக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்கும் தங்கள் கணவர்களிடம் கணக்கு காட்டவேண்டியவர்களாயிருப்பது, இன்னும் அவர்களுடைய நிலை மேம்படவில்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் வாசித்த, தோழி மு.கீதா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

பெண்கள் கையில இருக்குற கரண்டிய பிடுங்கிட்டு 
கல்விய கொடுன்னார் பெரியார்...
கல்வியும் கொடுத்து கரண்டியும் பிடுங்காம 
ரெட்டை சுமை சுமக்க வைத்துவிட்டார்கள்.

எவ்வளவு உண்மை.… அலுவலகப்பணி, வீட்டுப்பணி என்று இரட்டைக்குதிரை சவாரி செய்யும் பெண்களை எண்ணி கழிவிரக்கம்தான் பெருகுகிறது. இத்துடன் குழந்தைவளர்ப்பும் அவள் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமை. பணியிடத்தில் முதுகொடிய வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் பெண், வந்தவுடன் ஆணைப் போல ‘அப்பாடா’ என்று ஒருநாளாவது அமரமுடிகிறதா? வரும்போதே, வந்தவுடன் இன்னின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்று மனக்கணக்குப் போட்டபடியேதானே வருகிறாள். பணிக்குச் செல்லும் மனைவிகளும் தங்களைப் போலத்தானே என்பதை என்றைக்குக் கணவர்கள் புரிந்துகொண்டு, மேலைநாடுகளைப்போன்று இங்கும் வீட்டுப்பணிகளிலும், குழந்தை வளர்ப்பிலும் தங்களைத் தயக்கமின்றி ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ அன்றைக்குதான், பெண் தன் முன்னேற்றப்படிக்கட்டுகளில் ஒரு படி மேலேறியிருக்கிறாள் என்று சொல்லலாம். இதையெல்லாம் நாங்கள் செய்யாமலா இருக்கிறோம் என்று சிலர் கேட்கலாம். அங்கொன்று இங்கொன்று என்பதெல்லாம் பொதுநடைமுறைக்கு உதாரணங்களாகா அன்றோ?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

என்றார் பாரதி. ஆனால் திறம்பிவிடுகின்றனர் பல மாதர்.

சமீபத்தில் நிகழ்ந்துள்ள பெண் காவலதிகாரியின் மரணம் ஒரு சான்று. ஒரு பெண் எவ்வளவு உயரிய பதவியில் இருந்தாலும், ஆணுக்கு நிகரான மதிப்பு ஒருபோதும் இச்சமுதாயத்தில் அவளுக்கு வழங்கப்படுவதே இல்லை.. தமக்குக் கீழே பணிபுரியும் பெண்ணை, பெண்தானே என்று இளக்காரமாய் நோக்குவதும்… தமக்கு மேலே பணிபுரியும் பெண்ணை, ஒரு பெண் தம்மை ஆள்வதா என்ற பொருமலுடன் நோக்குவதுமான ஆணின் பொதுப்புத்தி, உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவளைத் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த அச்சுறுத்தல், பல நேரங்களில் பதவியோடு அவள் வாழ்க்கையையும் பலிகொண்டுவிடுகிறது.

என்னைப் போன்ற பெண் அதிகாரிகள் அனைவரும், உயரதிகாரிகளின் நெருக்குதலால், தவறான வழிகாட்டுதலால் சுதந்திரமாக செயல்பட முடியாதபடி உள்ளோம் என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுக்கிறார் ஒரு பெண் காவலதிகாரி. இதுவா பெண் முன்னேற்றம்? பெண் என்னும் காரணத்துக்காகவே பணியிடத்தில் தங்களின் செயல்பாடுகள் முடக்கப்படும் சூழலைப் பெண்கள் மனவுறுதியுடன் எதிர்கொள்வதே ஒரு மாபெரும் சவால். 

தந்தை பெரியார் சொல்கிறார்,

‘வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது – வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.’

ஆண்மக்கள் இக்கருத்தை ஒப்புக்கொள்ளும்நாள் வரை பெண்கள் தொடர்ந்து போராடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். சிலர் இதற்கு மாறுபடலாம், இன்று படித்து கைநிறைய சம்பாதிக்கும் இளம்பெண்கள் எல்லாம் முன்போலவா இருக்கிறார்கள் என்று கேள்வியெழுப்பலாம்; தன்னிச்சையாக செயல்படுவதோடு, பெண் சுதந்திரம் என்பதன் பொருளைத் தாறுமாறாகப் பிரயோகிக்கிறார்களே என்று ஆத்திரம் கொள்ளலாம். அளவுமீறிய சுதந்திரமும் தன்னிச்சைப்போக்கும் அவர்களைத் திசைதிருப்புகிறதே என்று ஆற்றாமையடையலாம்.

இன்றைய இளம்பெண்கள் சிலர் அவ்வாறிருப்பது உண்மையே.. மறுக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக அழுத்திவைக்கப்பட்ட ஒரு இனம், காலப்போக்கில் மெல்ல மெல்லத் தலையெடுக்க முயலும்போதெல்லாம் தட்டித்தட்டி வைக்கப்பட, பார்த்துக்கொண்டிருந்த ஒரு தலைமுறை சட்டென்று பீறிட்டுக் கிளைத்தெழுவதான ஒரு எழுச்சிதான் தற்போதைய இளம்பெண்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றம். பிறவிக் குருடனுக்கு திடீரென்று பார்வை கிட்டினால் எதைப் பார்ப்பது, எதை விடுப்பது என்று ஏற்படும் தடுமாற்றத்தைப்போன்றதுதான் இந்த இளந்தலைமுறையின் தடுமாற்றமும். சற்றே நிதானப்பட்டுவிட்டால் சமனிலை கிடைத்துவிடும். அதுவரையில் பல விமர்சனங்களையும் அவள் எதிர்கொள்ளத்தான் வேண்டும். காலங்காலமாய் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி அடக்கிவைத்திருந்த இனத்துக்கு இது மாபெரும் திடுக்கிடல்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள அந்த இனத்துக்கு இன்னும்சில தலைமுறைகள் தேவைப்படலாம்.

பொறுமை, தியாக உணர்வு, குடும்ப நல்லிணக்கம், உறவுபேணுந்திறன் போன்ற குணங்கள் பெண்ணுக்குத் தேவைதாம். ஆனால் அவற்றையே வேலிகளாகப் போட்டுக்கொண்டு சிறிய வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட பெண்கள் இடங்கொடுக்கக்கூடாது. சின்னச்சின்ன ரசனைகளுக்கும், தேவைகளுக்கும் அவளுடைய வாழ்வில் இடமிருக்கவேண்டும். தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் பிறரது தலையீட்டைத் தவிர்த்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அறியாமை என்னும் இருளில் மூழ்கி வாழும் அவலவாழ்வை வெறுத்துதறித் தள்ளி வெளியேற வேண்டும். அதுவே பெண்ணறம் என்கிறார் பாரதி.

அமிழ்ந்து  பேரிருளாம் அறியாமையில்
அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்

பெண்களின் மனத்தில் பெண்ணறம் இன்னதெனும் புரிதல் வேண்டும் என்றுகூறும் அதே வேளை, அந்தப் பெண்ணறத்தைப் பேணுவது அச்சமுதாயத்தின் ஆண்மக்கள் வீரமே என்றும் உரைக்கிறார் பாரதி.

பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயிற் பிறகொரு தாழ்வில்லை

அப்படியான வீரமிகு ஆண்மக்கள் வாழும் நாட்டில் பெண்ணுக்கு என்றும் தாழ்வில்லை என்று உறுதியளிக்கிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இக்கருத்தை வலியுறுத்தும் நிலையில்தான் நம் சமுதாயம் உள்ளது என்று எண்ணும்போது அந்நிதர்சனம் நெஞ்சைச் சுடத்தான் செய்கிறது.

ஆண்குழந்தைகளுக்கு வளர்பருவத்திலிருந்தே பெண்ணை மதிக்கவும், அவளுடைய உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், பெண்ணின் உடல் மற்றும் உளம் சார்ந்த பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், பெண்குழந்தைகளுக்கும் தங்கள் மீதான மதிப்பையும் தங்களுடைய உரிமைகளையும் புரிந்துகொள்ளக் கற்றுக்கொடுப்பதும். ஆண் பெண் பேதவொழிப்பு நம் வீடுகளின் அடுக்களையிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். நல்ல புரிதலுடன் அது தொடருமானால், பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொதுவெளி, சமுதாயம், நாடு என்று பரவலாகப் பாலின பேதம் மறைந்து ஆணும் பெண்ணும் நட்புறவுடன் கைகோர்த்து, வருந்தலைமுறை யாவும் நலமாய் வாழ நல்லதொரு பாதை உதயமாகும்.

*******
(படம்: நன்றி இணையம்)
  
இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது. பெண்கள் முன்னேற்றம் – கட்டுரைப்போட்டிக்கென எழுதப்பட்ட இக்கட்டுரை, என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன். – கீதா மதிவாணன்


40 comments:

 1. [quote]இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரம் பெண்சிசுக்கொலைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[/quote]
  நம்ப முடியவில்லை ......இன்றும் இது நடைபெறுகிறதா...பெண்கள் பிறந்து சதாரணவாழ்வு வாழ்வதற்கே இவ்வளவு சோதனைகளா?

  ReplyDelete
 2. [quote]இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் இரண்டாயிரம் பெண்சிசுக்கொலைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[/quote]
  நம்ப முடியவில்லை ......இன்றும் இது நடைபெறுகிறதா...பெண்கள் பிறந்து சதாரணவாழ்வு வாழ்வதற்கே இவ்வளவு சோதனைகளா?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன். நம்பமுடியாத தகவல் என்றாலும் உண்மை அதுதான். நாட்டின் பல மாநிலங்களிலும் இந்த பெண்சிசு மற்றும் பெண்கருக்கொலை கண்மறைவாக நடந்தவண்ணம்தான் உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாகவே ஆண்பெண் விகிதாச்சாரம் மிகவும் குறைந்துகொண்டேபோவது வருத்தம் தரும் உண்மை.

   Delete
 3. நல்ல பொருண்மையில் அமைந்துள்ள தலைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கட்டுரை பற்றியக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 4. ஆழ்ந்த பொருள் நிறைந்த கட்டுரை!

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கட்டுரையைப் பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இளமதி.

   Delete
 5. அருமையான கட்டுரை கீதா. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அருமையான கட்டுரை கீதா. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கட்டுரையை வாசித்து இட்டக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அகிலா.

   Delete
 7. ஆண்குழந்தைகளுக்கு வளர்பருவத்திலிருந்தே பெண்ணை மதிக்கவும், அவளுடைய உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், பெண்ணின் உடல் மற்றும் உளம் சார்ந்த பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், பெண்குழந்தைகளுக்கும் தங்கள் மீதான மதிப்பையும் தங்களுடைய உரிமைகளையும் புரிந்துகொள்ளக் கற்றுக்கொடுப்பதும். ..

  மிக சரியாக சொன்னீர்கள் கீதமஞ்சரி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கோமதி மேடம்.

   Delete
 8. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. ஆஹா அருமை, அருமை, வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி.

   Delete
 10. நல்ல கருத்துக்களை கோர்வையாகச் சொல்லி இருக்கிறீர்கள் அருமை.

  ReplyDelete
 11. நல்ல கருத்துள்ள ஆக்கம் பலரையும் சிந்திக்க வைக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கட்டுரை பற்றியக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சசி.

   Delete
 12. வணக்கம் சகோ நல்லதொரு ஆக்கப்பூர்வமான பதிவு அருமையான அலசல் வெற்றி பெற எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 4
  போட்டிக்கான எனது கவிதையும், கட்டுரையும் காண வருக...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றிங்க கில்லர்ஜி... உங்களுடைய கவிதையையும் கட்டுரையையும் வாசிக்கிறேன். அழைப்புக்கு நன்றி.

   Delete
 13. அருமை சகோதரியாரே
  அருமை
  வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 14. பெண்களின் உண்மையான அவலநிலையைப் பட்டியலிடும் சிறந்த கட்டுரை. பாரதி, பாரதிதாசன், தந்தை பெரியார் ஆகியோரின் மேற்கோள்களுடன் அமைந்த அருமையான ஆக்கம். வெற்றி பெற வாழ்த்துகிறேன் கீதா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கட்டுரை பற்றியக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா. உங்களுடைய பார்வையில் பெண் முன்னேற்றம் குறித்த கட்டுரையையும் எதிர்பார்க்கிறேன்.

   Delete
 15. பாரதியார், பாரதிதாசன் பாடல்களுடனும் தந்தைப் பெரியாரின் வரிகளுடனும் அன்புத்தோழி/சகோதரி கீதா அவர்களின் வரிகளுடனும் கருத்தாழமிக்க கட்டுரை! வெற்றிபெற வாழ்த்துகள் கீதமஞ்சரி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ். உங்களுடைய கட்டுரையும் மிகப் பிரமாதமாக வந்துள்ளது. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

   Delete
 16. ஆழமாக அலசி ஆராய்ந்து
  எழுதப் பட்ட அற்புதமான கட்டுரை
  இது பரிசு வென்றுதான் ஆகவேண்டும்
  ஏனெனில் இது பரிசுக்கென எழுதப் பட்ட கட்டுரை அல்ல
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வெகுநாட்களாகவே இன்றைய சூழலில் பெண்களின் நிலை பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்தக் கட்டுரைப்போட்டி அதற்கு உந்துசக்தியாய் அமைந்துவிட்டது. பரிசு பற்றி இனிக் கவலையில்லை. தங்களுடைய பாராட்டே பரிசு கிடைத்த மகிழ்வைத் தருகிறது. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

   Delete
 17. அருமையா கட்டுரை! இதே தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உட்கார்ந்தேன். தங்கள் கட்டுரையைப் படித்தவுடன் நான் போட்டியிலிருந்து விலகிக்கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அடடா... உங்கள் எண்ணத்திலிருந்தவற்றை நான் எழுதிவிட்டேனா? அதனாலென்ன? உங்களுடைய பார்வையும் எழுத்துபாணியும் நிச்சயம் மாறுபடும்தானே? முயற்சி செய்யுங்கள். இதைவிடவும் நல்லதொரு கட்டுரையைத் தரமுடியும் உங்களால்.

   Delete
 18. ”இன்றைய இளம்பெண்கள் சிலர் அவ்வாறிருப்பது உண்மையே.. மறுக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக அழுத்திவைக்கப்பட்ட ஒரு இனம், காலப்போக்கில் மெல்ல மெல்லத் தலையெடுக்க முயலும்போதெல்லாம் தட்டித்தட்டி வைக்கப்பட, பார்த்துக்கொண்டிருந்த ஒரு தலைமுறை சட்டென்று பீறிட்டுக் கிளைத்தெழுவதான ஒரு எழுச்சிதான் தற்போதைய இளம்பெண்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றம். பிறவிக் குருடனுக்கு திடீரென்று பார்வை கிட்டினால் எதைப் பார்ப்பது, எதை விடுப்பது என்று ஏற்படும் தடுமாற்றத்தைப்போன்றதுதான் இந்த இளந்தலைமுறையின் தடுமாற்றமும். சற்றே நிதானப்பட்டுவிட்டால் சமனிலை கிடைத்துவிடும். அதுவரையில் பல விமர்சனங்களையும் அவள் எதிர்கொள்ளத்தான் வேண்டும். காலங்காலமாய் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்தி அடக்கிவைத்திருந்த இனத்துக்கு இது மாபெரும் திடுக்கிடல்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள அந்த இனத்துக்கு இன்னும்சில தலைமுறைகள் தேவைப்படலாம்.”
  மிகச்சரியான கூற்றும்மா இதைத்தான் நானும் கூறுவேன்...எனது கருத்துகளையும் கூறியமைக்கு நன்றி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்மா.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகையும் ஊக்கமிகு கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி கீதா. மனம் நிறைந்த நன்றி தோழி.

   Delete
 19. நல்ல சமூக சிந்தனையைத் தூண்டும் கட்டுரை.
  பொருத்தமான தரவுகள். மேற்கோள்களுடன் அருமையான நடையிலமைந்துள்ளது பாராட்டிற்குரியது.வெற்றிபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 20. மரியாதைக்குரியவரே,
  வணக்கம். தங்களது கட்டுரை சிறப்பாக உள்ளது.தங்களது பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.
  என அன்புடன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம் - 638402

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 21. அருமையான ஆக்கம் பாடல்களோடு பதிந்தமை இன்னும் அருமை!

  போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இனியா. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.