28 October 2013

ஒளி காட்டும் வழி




ஒளி காட்டும் வழியில் பயணப்பட்டு
ஒளிர்ந்தடங்கக்கூடும் உங்கள் திருநாட்கள்.
விழி காட்டும் ஒளியில் மாத்திரமே
விடியக்கூடும் எங்கள் இருள்நாட்கள்!
வழியறியாமலும் வாழ்வின் போக்கறியாமலும்  
தயங்கியோ முடங்கியோ தவித்துக்கிடப்பதில்லை,
சாலையிலும் வாழ்க்கைப்பாதையிலும்
கரடுமுரடுகளைக் கண்ட எங்கள் கால்கள்,

இடறும் சரளைக்கற்களால் தடுமாறி
இடவலம் புரியாது திசைகளின் தடம்மாறி
முச்சந்திகளில் தத்தளித்து நின்றாலும்….
அச்சச்சோவென்று அனுதாபம் கொண்டெவரும்
ஆதரவுக்கரம் நீட்டி அவமதித்திட வேண்டாம்.
சாலையின் விதிகளை மதித்து நடவுங்கள்,
சங்கடமின்றி சாலை கடப்போம் நாங்கள்.
இதை இறுமாப்பெனாது, தன்னம்பிக்கையென்பீராயின்
இறும்பூதெய்திடுவோம் உங்கள் பெருந்தன்மை கண்டு.

உதவும் எண்ணம் உண்மையில் இருப்பின்….
தீயும் மண்ணும் தின்னும் கண்களை மட்டும்
சற்றே மனங்கனிந்து எமக்களித்து உதவுங்கள்,
கடந்திடுவோம் பிறவிப்பெருங்கடலை
உம் கருணைக்கரங்களைப் பற்றியபடியே!
ஒளி காட்டும் வழியில் எம்மை உய்விக்கும்
உங்கள் உயர்குணந்தன்னை நினைந்து நினைந்து
நெஞ்சம் நெகிழ்ந்திருப்போம் வாழும் நாளெல்லாம். 

********************************************

ஒளி காட்டும் வழி என்ற இந்தக் கவிதையை ரூபனின் தீபாவளி சிறப்புக் கவிதைப்போட்டிக்காக எழுதியுள்ளேன். ஒளித்திருநாளாம் தீபாவளித் திருநாளில், ஒளியிழந்த பார்வைகளின் சார்பாய் என் மனத்தில் எழுந்த எண்ணமே இங்கு கவிதைப் பரிமாணமாய். தூண்டுதல் அளித்தமைக்கு நன்றி ரூபன்.



விழியால் ஒளியேற்றுவோம். 
அகல் கொண்டு அகலுக்கு ஒளியேற்றுதல் போல… 
விழிகள் கொண்டு விழிகட்கு ஒளியேற்றுவோம், வாரீர்.
கண்தானத்தை ஊக்குவிப்போம்,
பார்வையற்றோர் வாழ்வில் காரிருளை நீக்கிவைப்போம். 

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

************************************************************************************************************
(படங்கள்: நன்றி இணையம்)


53 comments:

  1. கவிதை அருமை... இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... நன்றி...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. ஒளி கிடைக்கும்வழிதெரியும்

    ReplyDelete
  3. //இதை இறுமாப்பெனாது, தன்னம்பிக்கையென்பீராயின்
    இறும்பூதெய்திடுவோம் உங்கள் பெருந்தன்மை கண்டு.

    உதவும் எண்ணம் உண்மையில் இருப்பின்….
    தீயும் மண்ணும் தின்னும் கண்களை மட்டும்// அருமை தோழி!
    நல்லதொரு காரியத்தைச் செய்ய ஊக்குவிக்கும் அருமையான கவிதை! வெற்றிபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. விழியால் ஓளியேற்றுவோம் நல்ல கருத்தை சொல்லி ஒரு கவிதை.. அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கண்தானம் செய்ய வழி காட்டும் கவிதை சாலச் சிறந்தது!

    ReplyDelete
  6. போட்டியில் கலந்துகொள்ள எழுதி இருந்தாலும் அதிலும் ஒரு நல்ல காரியத்தைச் செய்யச் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. கீதா , சொல்ல வார்த்தை இல்லை.
    நீங்களும் தானத்தை வலியுறுத்தி இருப்பது சிறப்பு.
    மிகப் பொருத்தமான படம். நெஞ்சத்தைத் தொடும் வரிகள்.
    வாழ்த்துக்கள் தோழி.
    அனைவர்க்கும் வசதியாக இதை வலியுறுத்தி
    இங்கே ஓர் இணைப்பைத் தருகிறேன்.
    http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=41374

    நான் என் கடமை முடித்து விட்டேன் எனப் பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்
    இந்த சந்தர்ப்பத்தில்.

    ReplyDelete
  8. உன்னதமான ஒளி காட்டும் வழி சொன்னீர்கள்!

    மிக மிக அருமை! உளம் தொட்டு உணர்வில் கலக்கின்றன கவி வரிகள்!
    போட்டியில் வெற்றிபெற நல் வாழ்த்துக்கள் தோழி!

    த ம.4

    ReplyDelete
  9. கண் தானத்தை அற்புதமாக சொன்ன வரிகள் சிறப்புங்க.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. பார்வையற்றவ்ர்களின் தன்னம் பிக்கையையும் கந்தானத்தின் சிறப்பையும் அழகாக எடுத்துச் சொல்லும் கவிதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. கண் தானத்தின் என்று இருந்திருக்க வேண்டும். தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  12. //இதை இறுமாப்பெனாது, தன்னம்பிக்கையென்பீராயின்
    இறும்பூதெய்திடுவோம் உங்கள் பெருந்தன்மை கண்டு.//
    அருமையான வரிகள்!

    ReplyDelete
  13. அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  14. உதவும் எண்ணம் உண்மையில் இருப்பின்….
    தீயும் மண்ணும் தின்னும் கண்களை மட்டும்
    சற்றே மனங்கனிந்து எமக்களித்து உதவுங்கள்,
    கடந்திடுவோம் பிறவிப்பெருங்கடலை
    உம் கருணைக்கரங்களைப் பற்றியபடியே!
    ஒளி காட்டும் வழியில் எம்மை உய்விக்கும்
    உங்கள் உயர்குணந்தன்னை நினைந்து நினைந்து
    நெஞ்சம் நெகிழ்ந்திருப்போம் வாழும் நாளெல்லாம். //

    இருளை அகற்றி ஓளி ஏற்ற உதவும் அருமையான செய்தியை சொல்லும் கவிதை.

    விழியால் ஒளியேற்றுவோம்.
    அகல் கொண்டு அகலுக்கு ஒளியேற்றுதல் போல… //

    அழகாய் சொன்னீர்கள்.



    வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    கண் தானத்திற்கு நானும் என் கணவரும் பதிவுசெய்து வைத்து இருக்கிறோம்.


    ReplyDelete
  15. சிறப்பான கவிதை.

    த.ம. 8

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. ஹப்பா...! வார்த்தை அழகை ரசிக்கட்டுமா, இல்லை... அற்புதமான, அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய கருத்தைச் சொன்னதை ரசிக்கட்டுமா? திணற வைத்துவிட்டது உங்கள் கவிதை! தீபஒளித் திருநாளுக்குப் பொருத்தமாக அருமையான கவிதை! என்றேனும ஒரு தினம் நானும் இதுபோல் ஒரு நல்ல கவிதை எழுதிவிட வேண்டும் என்பதே என் ரகசிய அவா! ஹுஊஊஊம்! நடக்கிறதா பாக்கலாம்...!

    ReplyDelete
  17. விழிப்புணர்வு கவிதை!!

    அருமையாக உள்ளது கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
  18. ஆக்கம் மிகவும் அருமை. ’ஒளி காட்டும் வ ழி’ யை, ’வி ழி’யாக மாற்றிப் பார்த்துள்ளது, மிகவும் நல்ல கண்ணைப் போன்ற கருத்து. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. //அகல் கொண்டு அகலுக்கு ஒளியேற்றுதல் போல…
    விழிகள் கொண்டு விழிகட்கு ஒளியேற்றுவோம்//

    மிக உன்னதமான வரிகள். சபாஷ் !

    ReplyDelete
  20. அற்புதமான நோக்கில்
    எழுதப்பட்ட அருமையான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. @திண்டுக்கல் தனபாலன்

    உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  22. @கவியாழி கண்ணதாசன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  23. @கிரேஸ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  24. @உஷா அன்பரசு

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி உஷா.

    ReplyDelete
  25. @புலவர் இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  26. @ஸ்ரீராம்.

    தீபாவளிக்கும் கவிதைக்கும் தொடர்பில்லை என்றாலும் தலைப்பைப் பார்த்ததும் மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  27. @ஸ்ரவாணி

    உங்களை நினைத்து எனக்கும் பெருமையாக உள்ளது ஸ்ரவாணி. கண்தானம் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டியைத் தந்து உதவியமைக்கும் கவிதையை ரசித்துப் பாராட்டியமைக்கும் அன்பான நன்றி தோழி.

    ReplyDelete
  28. @இளமதி

    வருகைக்கும் கவிதை பற்றியக் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி இளமதி.

    ReplyDelete
  29. @Sasi Kala

    வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி சசி.

    ReplyDelete
  30. @G.M Balasubramaniam

    தங்கள் வருகைக்கும் கவிதை பற்றிய கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    தட்டச்சுத் தவறுக்கு எதற்கு மன்னிப்பெல்லாம்? பிழை நேர்வது அனைவருக்கும் சகஜம்தானே...

    ReplyDelete
  31. @கே. பி. ஜனா...

    தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  32. @s suresh

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  33. @கோமதி அரசு

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    கண்தானத்துக்கு தாங்களும் தங்கள் கணவரும் பதிவு செய்து வைத்திருப்பது மிகவும் அற்புதமான விஷயம். மனமுவந்த பாராட்டுகள் இருவருக்கும்.



    ReplyDelete
  34. @வெங்கட் நாகராஜ்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  35. @பால கணேஷ்

    வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ். கவிதை உங்களுக்கு எழுதவராது என்ற செய்தியை இன்னுமா எங்களை நம்பச்சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  36. @அருணா செல்வம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

    ReplyDelete
  37. @வை.கோபாலகிருஷ்ணன்

    வருகைக்கும் கவிதையை ரசித்து மகிழ்ந்ததோடு பிடித்தமான வரிகளை மேற்கோளிட்டுப் பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  38. @Ramani S

    தங்கள் வருகைக்கும் நல்வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  39. இனிய வணக்கம் சகோதரி...
    நெகிழ்ந்த நெஞ்சம் கொண்டு
    அன்பெனும் வழி நடந்து...
    சுடர் விரிக்கும்
    ஒளிச்சுடராம்
    தீப ஒளிச்ச்டர் திருநாளில்
    நன்மைகளை மட்டுமே செய்வோம்..
    அழகாக் கருத்துரைக்கும்
    ஆழமான கவிதை சகோதரி...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  40. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  41. கண்தானத்தை ஊக்குவிப்போம்!
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்து!
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  42. ஆஹா போட்டிக் கவிதையோ? அருமையாக இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. கண்தானத்தை வலியுறுத்தும் கவிதை அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்
    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி..

    ReplyDelete
  45. Anonymous2/11/13 20:20

    வணக்கம்

    தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

    என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  46. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  47. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  48. முதல் பத்தியின் முதலிரு வரிகளின் அர்த்தப் பொதியும் கடைசி பத்தியின் முதலிரு வரிகளின் விரிபொருளும் கவிதையின் கம்பீரம். தனித்துவமான தெளிவுடன் மிளிர்கிறது. வாழ்த்துகள்!

    ReplyDelete
  49. விழி காட்டும் ஒளி.அருமை வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  50. சற்றே வேலைப்பளுவாலும் இணையப் பிரச்சனையாலும் என்னால் சிலநாட்கள் வலைப்பூ வரவியலவில்லை. நண்பர்களின் பதிவுகள் பலவும் வாசிக்காமல் உள்ளன. விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். இக்கவிதைக்குக் கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றி.

    @மகேந்திரன்
    அழகிய கவியால் வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி மகேந்திரன்.

    @ப. தியாகு
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தியாகு.

    @kovaikkavi
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

    @athira
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அதிரா.

    @2008rupan
    போட்டியில் வெற்றி கிட்டாவிட்டாலும் இப்படியொரு கவிதையை எழுத்தூண்டியமைக்கு தங்களுக்கு நன்றி ரூபன். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

    @Ranjani Narayanan
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மேடம்.

    @தி.தமிழ் இளங்கோ
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    @கி. பாரதிதாசன் கவிஞா்
    தங்கள் வருகையும் பாடலும் கண்டு அளவிலா மகிழ்வு. நன்றி ஐயா.

    @நிலாமகள்
    கவிதையை ரசித்து சிலாகித்தமைக்கு அன்பான நன்றி நிலாமகள்.

    @Geetha M
    வலையில் தொடர்வதற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
  51. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    இணைப்பு : http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_17.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிகவும் நன்றி தனபாலன்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.