13 August 2014

கவிதைக் கைமாற்று

அன்றொருநாள் அவசரநிமித்தம்
கவிதையொன்றைக் கைமாற்றாய்க்கேட்டு
கையேந்தி நின்றிருந்தாய் என் வாயிலில்.
உன் கையறுநிலையைக் காணச்சகியாது
என் கவிதைத்தாள்களின் கதறல்களை மீறி
பிய்த்துக்கொடுத்தேன் என் கவிச்சிதறல்களை.
காயமுற்ற என் கவிதைப்புத்தகம்
நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
சுயமிழந்து தவிக்கிறேன் நான்.

விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
என் விரல் ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
தூசு படிந்த உன் சத்தியங்கள் காலாவதியாகி
கனகாலமாகிவிட்டதை உணராது
விடுபடும் நாளை எதிர்பார்த்திருக்கின்றன
விம்மலும் விசும்பலுமாய்!

உன் கையொப்பத்துக்காக முண்டியடித்த
கூட்டத்தின் நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது. 
பைத்தியங்குளியைப் போன்ற தோற்றத்திலும்
என்னை நீ அடையாளங்கண்டுகொண்டாய் என்பதை
விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்.

இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லி
கரைந்துகொண்டிருக்கின்றன காக்கைகள்!
கையுதிர்க்கவிருக்கும் சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
கவிதைப்புத்தகத்தின் வெற்றுப்பக்கங்களை
படபடப்போடு புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று.

***************
(படம்: நன்றி இணையம்)

40 comments:

 1. அருமையான கவிதை. அடுத்தவர் படைப்புகளை தமதாக காண்பித்துக் கொள்ளும் பலரை இக்கவிதை நிச்சயம் சலனப் படுத்தும்!

  ReplyDelete
  Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 2. மிக அழகான அருமையான உண்மையான கவிதை.

  //உன் கையொப்பத்துக்காக முண்டியடித்த
  கூட்டத்தின் நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது.
  பைத்தியங்குளியைப் போன்ற தோற்றத்திலும்
  என்னை நீ அடையாளங்கண்டுகொண்டாய் என்பதை
  விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்.//

  லிஃப்டில் மட்டுமே இப்போதெல்லாம் பயணித்துவரும், இன்றைய பிரபலங்கள் பலரின் வாழ்க்கையிலும் இதுபோன்ற எவ்வளவோ ஏணிப்படிக்கட்டுகளும் இருந்திருக்கக்கூடும்.

  மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அழகாக சொல்லிவிட்டீர்கள் கோபு சார். தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

   Delete
 3. தங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன்.

  இந்த கவிதையை படித்தாவது, மற்றவர்களின் படைப்பை திருடுபவர்கள் திருந்த வேண்டும். கண்டிப்பாக திருந்துவார்கள் என்று நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சொக்கன்.

   Delete
 4. கணகாலமா, கனகாலமா?

  அருமை.

  ReplyDelete
  Replies
  1. கணகாலம் என்பதுதான் சரியென்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் தெளிவித்தால் மகிழ்வேன்.

   நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. ஒரு நொடி என்று குறிப்பிட கணகாலம்

   நீண்ட காலம் என்று குறிப்பிட கன காலம்!

   Delete
  3. தெளிவித்தமைக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றிவிடுகிறேன்.

   Delete
 5. இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
  முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லி
  கரைந்துகொண்டிருக்கின்றன காக்கைகள்!

  மிக அருமையான கவிதை. சபாஷ்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி ரிஷபன் சார்.

   Delete
 6. வணக்கம்
  அழகிய கவி கண்டு மகிழ்ந்தேன் பதிவுத் திருடர்களுக்கு ஒரு சவுக்கடி...பகிர்வுக்கு நன்றி
  என்பக்கம் கவிதையாக
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:      

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. மிக அருமை தோழி..படைப்பைத் திருடுபவருக்குச் சரியான சாட்டையடி.
  //விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்.// அப்படித்தானே வெட்கி ஓடவேண்டும்?
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்திட்டக் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 8. //காயமுற்ற என் கவிதைப்புத்தகம்
  நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
  சுயமிழந்து தவிக்கிறேன் நான்.//

  மிக அருமை!!

  ReplyDelete
 9. கவிதைத்தாள்களின் கதறல்களை மீறி

  கதறும் கவிதைத்தாள்கள் ...
  உயித்துடிப்புள்ள கவிதை..!

  ReplyDelete
 10. கொடுத்ததைக் கேட்டால் கிடைப்பதில்லை இப்போதெல்லாம்...

  ReplyDelete
 11. படைப்புத் திருடர்களுக்கு சரியான சாட்டையடி.

  ReplyDelete
 12. //காயமுற்ற என் கவிதைப்புத்தகம்
  நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
  சுயமிழந்து தவிக்கிறேன் நான்.//
  ஆஹா...அருமையான கவிதை.

  ReplyDelete
 13. இந்த கவிதை கதிர்வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறப் போகிறார்கள் படைப்பு திருடர்கள்:) அருமை அக்கா!

  ReplyDelete
 14. கவிதை மிகவும் நன்றாக உள்ளது.பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 15. அன்புள்ள.

  வணக்கம். மிக செறிவான கவிதை. தனக்கான எல்லா நியாயங்களையும் உள்ளடக்கிய கவிதை. கவிதைக்கான கவிதை. பொருண்மை வெளிப்பாடு தன்னிலை சொற்கள் என எல்லாவற்றிலும்
  தேர்ந்து மனதை சந்தோஷிக்க வைக்கிறது.அனுபவிக்க வைக்கிறது.

  ReplyDelete
 16. அருமையான கவிதை, கீதா.

  ReplyDelete
 17. இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
  முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லி
  கரைந்துகொண்டிருக்கின்றன காக்கைகள்!//

  அருமை கீதமஞ்சரி.
  இனி கவிதை புத்தகத்தின் கதறல்களை கவனிக்க வேண்டும்.

  ReplyDelete
 18. அன்பின் கீத மஞ்சரி - அருமையான உண்மையான கவிதை - கை மாற்றம் செய்பவர்களும் இருக்கிறார்கள் - தவிர்க்கப்பட வேண்டியவர்கள் - நல்வாழ்த்துகள் கீத மஞ்சரி - நட்புடன் சீனா

  ReplyDelete
 19. ஆழமான கருத்துடன் கூடிய அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. ஒட்டுமொத்த ஆசைகளும் ஓருயிரில் தங்கிநிற்க
  பட்டுடுத்தி நிற்குமிந்த பண்கவிபோல் - மெட்டுக்கள்
  போடுங்கள் மெல்லிசையில் பாடுங்கள் சித்தத்தில்
  வாடும் நினைவுகள் வார்த்து !

  அழகிய கவிதை ரசித்தேன்
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 21. அனுபவங்கள் கவிதைகள் ஆகும் என்னும் உண்மை இங்கே. கவியாய் செய்தி சொன்ன உங்கள் கரங்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 23. Anonymous15/8/14 22:02

  கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள்.
  -ஏகாந்தன்

  ReplyDelete
 24. கடத்துஞ் செயலுமே கைவந்த தொன்றாம்
  நடத்துவரே நாடகம் நன்று!

  கவிதை என்னைக் கடத்திவிட்டது...:)
  மிக அருமை தோழி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. Anonymous28/8/14 03:53

  ஒருமாதிரி மூடிமறைத்து எழுத தாங்களும் பழகிவிட்டீர்கள் போலத் தெரிகிறது...
  நன்று நன்று...
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 26. பயனுள்ள பதிவு.
  அம்மா இன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

  நன்றி.

  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.html

  ReplyDelete
 27. கவிதையின் வரிகள்... -அது
  கவிதையின் வலிகள்....

  ReplyDelete
 28. நல்ல கவிதை...
  ஒரு படைப்பாளியின் திறமையை தனதெனச் சொல்லிக் கொள்ளும் காக்கைகளுக்கு புரிந்தால் சரி...

  ReplyDelete
 29. நேர்த்தியான கவிதை
  நல்லா குறிவைச்சு அடிக்கிறது...
  வாழ்த்துக்கள்


  கொஞ்சம் புதிய அறிவியல்(5) ...

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.