15 April 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி இசைக்கருவிகள்






ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் கலாச்சார அடையாளங்களுள் முக்கியமானவை இசையும் நடனமும். இசை என்றதுமே நம்மில் பலருக்கும் டிஜிரிடூ (Didgeridoo) நினைவுக்கு வரும். ஆம். ஆஸ்திரேலியாவின் அதிமுக்கிய அடையாளங்களுள் ஒன்று பூர்வகுடி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான டிஜிரிடூ எனப்படும் காற்றூது இசைக்கருவி. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஆண்டுக்கால தொன்மை உள்ளதாக கருதப்படும் இவ்விசைக்கருவி இன்று உலகின் பல நாடுகளிலும் அறிமுகமாகி இசைக்கப்படுகிறது. டிஜிரிடூவின் குறைந்தபட்ச நீளம் மூன்று அடி, அதிகபட்ச நீளம் பத்து அடி. பாரம்பரிய விழாக்களின்போது இசைக்கப்படும் இக்கருவியை பூர்வகுடியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இசைப்பது வழக்கம். அந்த இசைக்கு ஆண்களும் பெண்களும் நடனமாடுவர். டிஜிரிடூ பெரும்பாலும் தனி இசைக்கருவியாக வாசிக்கப்பட்டாலும் சில விழாக்களில் இசைக்கோல்களும் தாளவாத்தியக்கருவியாக சேர்ந்திசைக்கப்படுகின்றன.

பூர்வகுடி பெண்கள் டிஜிரிடூ வாசிப்பதில்லை. பெண்கள் வாசித்தால் தெய்வக்குற்றம் என்ற கருத்து இருந்தாலும் சமூக, பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி சில பூர்வகுடிப் பெண்கள் அந்நாளில் வாசித்ததுண்டாம். தற்போது உலகநாடுகள் பலவற்றிலும் ஆண்பெண் பேதமின்றி பெண் இசைக்கலைஞர்களும் டிஜிரிடூவை வாசிக்கப் பயின்று கச்சேரிகளில் இசைக்கத் துவங்கியுள்ளனர்.

காற்றுக்கருவியான இதை நம் நாதசுரத்துக்கு ஒப்பாக சொல்லலாம். மூச்சை வெகுவாக தம் கட்டி வாசிக்கவேண்டிய காரணத்தால் நாதசுரம் பொதுவாக ஆண்கள் வாசிக்கும் இசைக்கருவி என்று பெயர் இருந்தாலும் ஆங்காங்கே பெண் இசைக்கலைஞர்களும் ஆரம்பகால எதிர்ப்புகளைக் கடந்து, முறையான பயிற்சி பெற்று நல்ல வித்வான்களாக விளங்கியிருப்பதை நாம் அறிவோம் அல்லவா?



2005-ல் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் ஆஸ்துமா, குறட்டை மற்றும் உறக்கத்தில் உயிர்பறிக்கும் சுவாசப் பிரச்சனைகளுக்கும், சீரான மூச்சுப்பயிற்சிக்கும் நல்லதொரு தீர்வாக டிஜிரிடூ இசைப்பயிற்சி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும்கூட ஆஸ்திரேலியாவின் சில குறிப்பிட்ட பூர்வகுடி இன மக்களிடையே டிஜிரிடூ குறித்த பயபக்தியுடன் கூடிய நம்பிக்கைகள் தொடர்கின்றன. பூர்வகுடி மக்கள் அல்லாத பிறர் முக்கியமாக பெண்கள், வாசிப்பது மட்டுமல்ல இந்த இசைக்கருவியைக் கையால் தொடுவது கூட பாவம் என்பதோடு கலாச்சாரத் திருட்டு என்றும் கருதுகின்றனர்.

டிஜிரிடூ என்று இதற்கு பெயர் வைத்தது யார் என்பது ஒரு பெரிய மர்மம் நிறைந்த கேள்வி. ஏனெனில் didgeridoo என்ற வார்த்தையோ அதற்கு நிகரான வார்த்தையோ எந்த பூர்வகுடி மொழியிலும் கிடையாது என்பதுதான் உண்மை. இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வார்த்தை. ஒவ்வொரு பகுதியில் வழங்கப்படும் பூர்வகுடி மொழியிலும் இதற்கு வெவ்வேறு பெயர் உண்டு. அவற்றுள் சில – mako, liddung, ngorla, morlo, wuyimbarl, mudburuja, morle, yirdaki, yigi yigi  போன்றவை.


யூகலிப்டஸ் மரத்தண்டிலிருந்தும் பருத்த கிளைகளிலிருந்தும் இக்கருவிகள் தயாரிக்கப்பட்டன. இதற்கான மரத்தைத் தேர்ந்தெடுப்பதே ஒரு கலை. மரம் உயிரோடும் இருக்கவேண்டும், கரையான் அரித்து உள்ளே கூடாகவும் இருக்கவேண்டும். ஏன் கரையான் அரித்த மரமாக இருக்கவேண்டும்?

கரையான்கள் அரித்திருப்பதால் உள்ளே ஏற்பட்டிருக்கும் காற்றறைகள்தாம் டிஜிரிடூவில் சரியான இசையை எழுப்ப உதவுகின்றன. அதனால் அப்படிப்பட்ட மரத்தைத் தேர்ந்தெடுத்து கூரான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, சரியான அளவுக்கு வெட்டி பட்டைகளை அகற்றி உள்ளே சுத்தம் செய்து உபயோகித்தார்கள். டிஜிரிடூவின் மீது மிருகக்கொழுப்பு அல்லது எண்ணெய் தடவப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. டிஜிரிடூவில் வாய் வைத்து ஊதும் பக்கம் உதடுகளில் உறுத்தாமல் இருக்கவும் ஊதும் காற்று வெளியேறாமல் இருக்கவும் தேன்மெழுகு தடவப்பட்டது. வாய்வைத்து இசைக்கும் பகுதி குறுகலாக ஆரம்பித்து போகப்போக விரிந்து மறுமுனை சற்றுப் பெரியதாக இருக்கும். 

டிஜிரிடூ நேராகவும் இருக்கலாம் கோணல்மாணலாக வளைந்தும் இருக்கலாம். வடிவம் எப்படி இருக்கிறதென்பது பிரச்சனையில்லை.. அதிலிருந்து வெளிப்படும் கணீரென்ற இசையே பிரதானம்.

மூங்கில் காட்டில் வண்டுகள் துளைத்த ஓட்டைகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்று இசையாக மாறி புல்லாங்குழல் உருவாகக் காரணமானது போலயூகலிப்டஸ் மரக்காட்டில் கரையான் அரித்த மரக்கூடுகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்றே இந்த டிஜிரிடூ உருவாகக் காரணமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகிறது.

மற்ற காற்றூது கருவிகளை இசைப்பதற்கும் டிஜிரிடுவை இசைப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைக்கும்போது ஊதுகுழல் ஊதுபவரின் வாய்க்குள் இருக்கும். புல்லாங்குழல் போன்றவற்றில் துளையின் மீது வாயை வைத்து ஊதுவர். ஆனால் இந்த டிஜிரிடுவை இசைக்கையில் வாய் முற்றிலுமாய் இசைக்கருவியின் ஊதுதுவாரத்தின் உள்ளே பொருந்தி இருக்கும். மூச்சினை உள்ளிழுத்து நிறுத்தி உதடு, நாக்கு, குரல்வளை இவற்றில் அதிர்வுகளை உண்டாக்கி வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுடன் காற்றை வெளியேற்றுவதன் மூலம் இசை வெளிப்படுகிறது. 

இக்காலத்தில் டிஜிரிடூக்களைத் தயாரிக்க நூதனக் கருவிகள் வந்துவிட்டன. அதோடு கரையான் அரித்த மரங்களின் அவசியமற்றுப்போய் அலுமினியம் போன்ற உலோகங்கள், யூகலிப்டஸ் அல்லாத வேறு மரங்கள், மூங்கில், ப்ளாஸ்டிக், மண் போன்ற பல்வேறு பொருட்களாலும் உலோகங்களாலும் டிஜிரிடூக்கள் தயாரிக்கப்படுகின்றன. டிஜிரிடூவோடு ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய வேறு சில இசைக்கருவிகள் bull roarer, clapstick, gum leaf போன்றவை.

புல்ரோரர்

புல்ரோரர் (bullroarer) என்பது பின்னாளில் ஐரோப்பியர் வைத்த பெயர். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆதிகாலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. நீளமான கயிற்றின் ஒரு நுனியில் அரை அடி முதல் இரண்டு அடி நீளமும் அரை அங்குலம் முதல் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட தட்டையான மரப்பலகை இணைக்கப்பட்டிருக்கும். கயிற்றின் மறு நுனியைக் கையில் பிடித்து தலைக்கு மேலே கவண்கல் சுழற்றுவது போல வேகவேகமாகச் சுழற்றும்போது விர்ர்ர் விர்ரெரென்று ஒலி உருவாகும்.

பல மைல்களுக்கு அப்பாலும் கேட்கும் அளவிலான பேரொலி அது. பூர்வகுடிகளின் ஆன்மீக வழிபாடுகளிலும் ஈமச் சடங்குகளின்போதும் தவறாமல் இடம்பெறும் ஒலிக்கருவியாகும். துர்தேவதைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இக்கருவியை பூர்வகுடி ஆண்கள் மட்டுமே கையாளுவர். பெண்கள், குழந்தைகள், பூர்வகுடியைச் சாராத வேற்று ஆண்கள் தொடுவது பாவம் என்ற நம்பிக்கையோடு அதன் ஒலியை வெளியாட்கள் செவிமடுப்பதும் கூட இழுக்கு என்னும் நம்பிக்கை பூர்வகுடிகளிடத்தில் உள்ளது.  

தட்டுக்கோல்கள்

Clapsticks எனப்படும் தட்டுக்கோல்கள் கோலாட்டக் கோல்களை ஒத்து ஆனால் அளவில் பருத்திருக்கும். இவையும் யூகலிப்டஸ் மரத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன. இக்கோல்களை ஒன்றோடொன்று தட்டுவதன் மூலம் பெரும் ஒலி உண்டாகும். டிஜிரிடூவுடன் இசைக்கப்படும் தாளவாத்தியக் கருவி இதுவே ஆகும். பூர்வகுடி மக்கள் இவற்றை பிம்லி அல்லது பில்மா என்று குறிப்பிடுகின்றனர்.

யூகலிப்டஸ் இலை 

யூகலிப்டஸ் இலைகூட அந்நாளில் ஒரு இசைக்கருவியாக இருந்திருக்கிறது. நாம் பூவரச இலையைச் சுருட்டி பீப்பீ வாசிப்பது போல.. அக்காலத்து பூர்வகுடி மக்கள் யூகலிப்டஸ் இலையை படுக்கைவாக்கில் உதடுகளுக்கிடையில் வைத்து ஊதுவதன்மூலம் இசையுண்டாக்கி ரசித்து மகிழ்ந்திருக்கின்றனர். 

யூகலிப்டஸ் காடுகளை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த பூர்வகுடி மக்கள் அதன் மரம், கிளை, பட்டை, இலை மட்டுமல்லாது கரையான் அரித்த கட்டைகளையும் தங்கள் இசை ரசனையோடு பிணைத்து வாழ்ந்த அழகிய வாழ்வியல் ரசனை வியக்கவைக்கிறதல்லவா?

(1 மார்ச் 20 அன்று SBS Tamil வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்வில் ஒலிபரப்பானது.)


&&&
(டிஜிரிடூ தவிர்த்த பிற படங்கள்  இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

16 comments:

  1. சிறப்பான பதிவு. நிறைய விவரங்கள். இந்தப் பதிவினை படிக்கும் போதே யூவில் Didgeridoo இசையும் கேட்டுக் கொண்டே படித்தேன்! நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி. நன்றி வெங்கட்.

      Delete
  2. நல்ல ஸ்வாரஸியமான தகவல்கள் அடங்கிய பதிவு. அழகான கருவிகள்...நெட் சரியில்லை. பின்னர் கேட்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  3. ஒலிபரப்பில் விளக்கம் கொடுக்கும் உங்கள் குரல் மிக மிக நன்றாக இருக்கிறது கீதா. டிஜிரிடூ கருவியின் ஒலியும் கேட்டேன். வித்தியாசமாக இருக்கிறது. வேறு ஏதோ ஒரு ஒலியை நினைவு படுத்துகிறது ஆனால் டக்கென்று சொல்ல இயலவில்லை..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கீதா. டிஜிரிடூ கருவியின் ஒலி மோர்சிங் இசையை நினைவுபடுத்தும் என்று நினைக்கிறேன். சரிதானா?

      Delete
  4. நான் ஆஸ்த்ரேலியா வந்திருந்தபோது டிஜிரிடூ கருவி வாசிக்கக் கேட்டேன் . மற்ற கருவிகள் தெரியாது. பற்பல தகவல்கள் அறிந்தேன் , நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  6. ஆசியின் தகவல் களஞ்சியமாக இருக்கிறது உங்கள் பதிவுகள்
    இந்தக் கருவி நாதஸ்வரத்தை போல இருப்பதும் வாசிப்பவர் உடல் எங்கும் பட்டையிட்டிருப்பதும் தமிழர் பண்பாட்டை ஒத்திருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கஸ்தூரி ரங்கன். பல ஒற்றுமை இருப்பதாலேயே தமிழர்களுக்கும் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மொழியிலும் கூட ஆய்வு நடைபெறுகிறது.

      Delete
  7. அருமையான தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புத்தன்.

      Delete
  8. பல தகவல்கள்.அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதேவி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.