எந்த
நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாட்டின் பிரசித்தமான உணவுவகையை ருசிபார்ப்பது
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வருகை
தரும் சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான உணவுவகைகளை சுவைக்க
நிச்சயம் விரும்புவார்கள். லாமிங்டன், வெஜிமைட், மீட் பை, பாவ்லோவா, டிம்டாம், ஆன்ஸாக் பிஸ்கட்ஸ், கங்காருவால் சூப் என ஆஸ்திரேலியாவின் உணவுரசனையை
மெய்ப்பிக்கும் வகையில் நம்மிடமும் ஏராளம் உண்டு. அவற்றின் பின்னால் ஏராளமான
கதைகளும் உண்டு.
ஆஸ்திரேலியாவின்
அடையாளங்களுள் ஒன்றான வெஜிமைட் உருவான கதையைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்களின்
உணவுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன முக்கியமான அடையாளம் வெஜிமைட். இதன் பிரத்தியேக
உப்பும் கசப்பும் கலந்த சுவைக்கு அடிமையாகிப் போன ஆஸ்திரேலியர்கள் பலர். ஜாம்,
பட்டர் போல பிரெட்டில்
தடவி சுவைக்கக்கூடிய வெஜிமைட் மது உற்பத்திக்கூடங்களில் பயன்படுத்தப்படும் brewer’s
yeast எனப்படும் தேறல்
நொதியையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கொண்டு தயாரிக்கப்படுவது. இதில் கொழுப்பு
கிடையாது, சர்க்கரை
கிடையாது. முழுக்க முழுக்க சைவ பதார்த்தம்.
இன்னும் இரண்டு
வருடங்களில் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவிருக்கும் வெஜிமைட் ஏன் உருவானது
தெரியுமா? முதலாம் உலகப்
போர்க்காலத்தில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி விநியோகம் பெருமளவில்
பாதிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த Marmite சுவைத்துப் பழகிய ஆஸ்திரேலிய நாவுகளுக்கு அது
இல்லாமை வெறுமையை உண்டாக்கியது. இந்த சமயத்தில் Fred Walker & Co. நிறுவனம் அதற்கு மாற்று தயாரிக்கும்
முயற்சியில் இறங்கியது. வேதியியலாளரும் உணவு தொழில்நுட்ப வல்லுநராகவும் இருந்த Cyril
Percy Callister இடம் அதற்கானப்
பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒரு சுவைக்கு பழகிய நாவுகளை மற்றொரு சுவைக்குப் பழக்கவேண்டுமே.
முதலில் மக்களிடம் புதிய பொருளைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இந்த புதிய
கண்டுபிடிப்புக்குப் பரிசுத்தொகையுடன் கூடிய பெயர் சூட்டும் போட்டியொன்று பொதுவில்
நடத்தப்பட்டது. பெயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு Fred Walker-ன் மகள் Sheilah விடம் விடப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்தப்
பெயர்தான் Vegemite.
பலதரப்பட்ட
விளம்பரங்களுக்குப் பிறகும் விற்பனை சூடுபிடிக்காத காரணத்தால் ஒருவேளை பெயர்தான்
காரணமோ என்ற சந்தேகத்தில் Parwill என்று பெயர்
மாற்றப்பட்டது. அப்போதும் விற்பனை சரிவே. விற்பனையை அதிகப்படுத்த பெருமளவு முயற்சிகள்
எடுக்கப்பட்டன. Kraft walker cheese உற்பத்திப் பொருட்களுடன் இலவச இணைப்பாக வெஜிமைட் கொடுக்கப்பட்டது. இது குறித்த
கவிதைப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு அமெரிக்க Pontiac கார்கள் பரிசளிக்கப்பட்டன. இரண்டாம்
உலகப்போரின் போது ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் ரேஷன் உணவில்
வெஜிமைட் சேர்க்கப்பட்டது. இப்படியாக படிப்படியாக 1940 களின் பின்பகுதியில் பத்துக்கு ஒன்பது
ஆஸ்திரேலிய வீடுகளில் வெஜிமைட் புழக்கத்துக்கு வந்தது.
இன்று பில்லியன்
ஜார்கள் விற்பனையைக் கடந்து இன்னமும் அதிரடியாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது
வெஜிமைட். காலத்தோடு இணைந்த விளம்பரம்தான் அதற்கு முக்கியக் காரணம் எனலாம்.
பன்னாட்டு கலாச்சாரம் பரவத்தொடங்கிய காலத்தில் 1983 வாக்கில் வெஜிமைட் என்ற பெயருக்குப் பதிலாக Multicultural
என்ற பெயரைத் தாங்கி கீழே
spread it around என்ற வாசகத்துடன்
பன்னாட்டு மக்களையும் கவர்ந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது.
சமீபத்தில்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் விளையாட்டுத் தொடரின்போது ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை
Ash Barty –க்கு ஆதரவு
தெரிவிக்கும் வகையிலும் அவரை சிறப்பிக்கும் வகையிலும் Bartymite என்ற பெயர் தாங்கி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
ஜார்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன. விற்றும் தீர்ந்தன.
ஆஸ்திரேலியர்கள்
தூக்கிவைத்துக் கொண்டாடும் அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு பிரமாதமில்லை
என்கிறார்கள் grease போன்ற இதன்
நிறமும், வாடையும்
பிரத்தியேக கடுஞ்சுவையும் பிடிக்காமல் போன அயல் நாட்டவர்கள். உங்களுக்கெல்லாம் அது
ஒரு உணவுப்பொருள் மட்டுமே, எங்களுக்கோ அது
உணர்வின் பொருள் என்கிறார்கள் இவர்கள். உண்மைதானே.
அடுத்தது Fairy
bread. பெயரைச் சொன்னவுடனேயே
ஆஸ்திரேலியக் குழந்தைகள் சப்புக்கொட்டும். இதுவும் ஆஸ்திரேலியக்
கண்டுபிடிப்புதான். வழக்கமான white bread-ன் இருபுறமும் வெண்ணெய் அல்லது மார்கரின் தடவி அதன் மேல் hundreds and
thousands எனப்படும்
சர்க்கரைப்பாகில் செய்யப்பட்ட கடுகளவிலான குட்டிக்குட்டி வண்ண மணிகளைத் தூவினால்
அதுதான் fairy bread.
அடுத்தது
பாவ்லோவா. ரஷ்யாவின் பிரபல பாலே நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவா பற்றி உங்களுக்குத்
தெரிந்திருக்கலாம். 1881 ஆம் ஆண்டு
ரஷ்யாவில் பிறந்த அன்னா பாவ்லோவா Imperial Russian Ballet நிறுவனத்தின் முதன்மைக் கலைஞராக இருந்தவர்.
அவர் தனித்து ஆடும் The Dying Swan என்னும் நடனத்தை
சுமார் 4000 தடவைக்கு மேல்
மேடையேற்றியிருக்கிறார் என்பதும் தென்னமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்று உலகம் முழுதும் பல
நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் பாலே நடனக் கலைஞர் என்பதும் அவரது
பெருமைகளுக்குச் சான்று. பிரசித்தமான பாலே நடனக்கலைஞரான அன்னா பாவ்லோவாவுக்கும்
ஆஸ்திரேலியாவின் பிரசித்த கேக்கான பாவ்லோவாவுக்கும் என்ன தொடர்பு? அப்படிப்பட்ட அற்புதமான கலைஞரை சிறப்பிக்கும்
பொருட்டு இந்த கேக்குக்கு பாவ்லோவா என்று பெயரிடப்பட்டதாம்.
முட்டையின்
வெள்ளைக்கரு, கார்ன்ஃப்ளார்,
கேஸ்டர் ஷூகர், வினிகர் வனிலா எஸன்ஸ் இவற்றைக் கொண்டு
தயாரிக்கப்படும் கேக் போன்ற இனிப்பு வகையான இதற்கு மேலே க்ரீமும் பழங்களும் வைத்து
அலங்கரிக்கப்படுகிறது. 1935 -ல் The
Advocate பத்திரிகையிலும்
தொடர்ந்து 1937-ல் The
Australian Women’s Weekly இலும் பாவ்லோவா
கேக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டது. நியூசிலாந்தோ பாவ்லோவா கேக் தங்களுடைய
கண்டுபிடிப்பு என்றும் அது தாங்கள் வைத்த பெயர் என்றும் உரிமை
கோரிக்கொண்டிருக்கிறது.
நியூசிலாந்தும்
ஆஸ்திரேலியாவும் தங்களுடையவை என்று உரிமை கோரும் பட்டியலில் அடுத்து வருவது
லாமிங்டன். ஸ்பான்ஞ் கேக் அல்லது பட்டர் கேக் துண்டுகளை உருக்கிய சாக்லேட்
திரவத்தில் முக்கியெடுத்து உலர்தேங்காய்த்தூளில் புரட்டியெடுத்தால் அதுதான்
லாமிங்க்டன். இதற்கு பின்னாலிருக்கும் கதை வெகு சுவாரசியம்.
1896 முதல் 1901 வரை குவீன்ஸ்லாந்தின் கவர்னராக இருந்தவர்
லார்ட் லாமிங்க்டன். அவருடைய முதன்மை சமையல் பணியாளராக இருந்தவர் Armand
Galland என்பவர். ஒருமுறை லார்ட்
லாமிங்க்டனை சந்திக்க வந்திருந்த எதிர்பாரா விருந்தினர்களுக்குப் பரிமாற வேண்டிய
சூழலில் முதல்நாள் செய்த வனிலா ஸ்பான்ஞ் கேக்கைத் துண்டுகளாக்கி சாக்லேட்
திரவத்தில் முக்கியெடுத்து மேலே உலர்தேங்காய்த்தூள் தூவி அலங்கரித்துப்
பரிமாறினார் என்றும் விருந்தினர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போய் செய்முறை
வாங்கிச் சென்றார்கள் என்றும் அதனாலேயே லார்ட் லாமிங்க்டன் பெயரால் இது
லாமிங்க்டன் என்று குறிப்பிடப்படுவதாகவும் ஒரு கதை உள்ளது. அதெல்லாம் இல்லை,
வெலிங்க்டன் என்று எங்கள்
தலைநகரின் பெயரால் நாங்கள் உருவாக்கிய இனிப்பை ஆஸ்திரேலியர்கள் லாமிங்க்டன் என்று
பெயர் மாற்றி தங்களுடையது என மார்தட்டுகிறார்கள் என்று மறுக்கிறார்கள்
நியுசிலாந்துக்காரர்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள்
லாமிங்க்டனைக் கொண்டாடுவோம் என்று சொல்லி ஜூலை 21 ஆம் நாளை தேசிய லாமிங்க்டன் தினமாக
அறிவித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டோம் நாம். கூடவே lammo என்ற செல்லப்பெயரையும் சூட்டிவிட்டோம்.
இவை தவிர ஆன்ஸாக்
பிஸ்கட்டுகள் குறித்த வரலாற்றை முந்தைய பதிவிலேயே பார்த்தோம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை,
வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் ANZAC பிஸ்கட்கள், உணவுப்பொருள் என்பதையும் மீறி அதற்குள்
பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றும் தேசிய ஒருமைப்பாடும் போர்வீரர்களுக்கான
நினைவஞ்சலியும் என்றென்றும் தனித்துப் பிரித்தெடுக்க இயலாதவை.
ஒவ்வொரு நாடும்
தமக்கென தனித்த உணவுக்கலாச்சாரத்தைப் பேணும்போது பன்னாட்டு கலாச்சாரத்தை மையமாய்க்
கொண்ட ஆஸ்திரேலியா, பன்னாட்டு
கலாச்சார உணவுவகைகளோடு காலங்காலமாய் தம் உணர்வுகளோடு பின்னிவரும் தனித்த
உணவுக்கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாப்பது போற்றத்தக்க ஒன்றல்லவா?
8-6-20 அன்று SBS Tamil வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. ஒலிவடிவத்தைக் கேட்க இங்கு சொடுக்கவும்.
(படங்கள் உதவி இணையம்)
தெரியாத தகவல்கள் .. உங்களுக்கு எனது நன்றிகள் ,இங்கு கனடாவிலும் இந்த நாட்டுக்கே
ReplyDeleteஉரிய உணவு பொருட்கள் உண்டு ...
கரிகாலன்
www.karikaalan.blogspot.com
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கனடாவின் உணவுக்கலாச்சாரத்தைப் பற்றி எழுதுங்கள். மற்றவர்கள் அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
Deleteவியக்க வைக்கும் தகவல்கள்... நன்றி சகோதரி...
ReplyDeleteதொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஅறியாத தகவல்கள்
ReplyDeleteநன்றி சகோதரி
மிக்க நன்றி ஐயா.
Deleteசிறப்பான தகவல்கள். எத்தனை எத்தனை உணவு வகைகள். Fairy Bread கண்ணைக் கவர்கிறது. நம் ஊர் ஜீரக மிட்டாய் மாதிரி இருக்கிறது மேலே தூவியது!
ReplyDeleteநானும் அதையேதான் நினைத்தேன் வெங்கட்ஜி. நம்ம ஊர் ஜீரக/அரிசி மிட்டாய் போல இருக்கே என்று.
Deleteகீதா
நான் கேக்கின் மீது இப்படியான ஜீரக/அரிசி மிட்டாய், ஜெம்ஸ் என்று தூவுவதுண்டு. இதையும் பார்த்ததும் அந்த நினைவுதான் வந்தது
Deleteகீதா
@வெங்கட் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். சரியாகச் சொன்னீங்க. ஜீரகமிட்டாயில் ஜீரகம் இருக்கும், இதில் இருக்காது. அவ்வளவுதான் வித்தியாசம்.
Delete@கீதா - ஆஹா.. கேக்கின் மேல் ஜெம்ஸா? சூப்பர். இது ஜீரக மிட்டாய் அளவை விடவும் சின்னதாய் கிட்டத்தட்ட கடுகு சைஸில் இருக்கும்.
Deleteசுவையான தகவல்கள்!
ReplyDeleteஎல்லாமே அசத்துகின்றன.
துளசிதரன்
கீதா
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.
Delete