17 August 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதைதான் நான் முதலில் எழுதி வெளியான சிறுகதை. அதன்பிறகு நிறைய கதைகள் எழுதினாலும் முதல் கதை எழுதியபோதும் அது நிலாச்சாரல் இணையதளத்தில் வெளியானபோதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் சிறுகதைகளை நூல் வடிவில் காணவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. எனக்கு அப்படி ஏதும் தனிப்பட்ட ஆசை இல்லை என்றாலும் ஒருவேளை அம்மாவின் ஆசைப்படி நூல் வடிவாக்கினால் அதற்கு அம்மாச்சியும் மகிழம்பூக்களும் என்றுதான் தலைப்பிடவேண்டும் என்று மனத்துக்குள் முடிவுசெய்திருந்தேன். சிறுகதைகள் நூலாக்கம் பெறும் வாய்ப்பு கோதை பதிப்பகம் வாயிலாய்த் தேடிவந்தபோது, எதிர்பாராது கிடைத்த இந்த வாய்ப்பினைத் தவறவிட மனம் துணியவில்லை. அம்மாவின் ஆசையும் நிறைவேறிற்று. என்னுடைய ஆசையும் நிறைவேறிற்று. கூடவே அம்மாவுக்கு இந்நூலை சமர்ப்பணமும் செய்தாயிற்று. அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதையை ஒரு கவிதையாகத்தான் ஆரம்பித்தேன். நினைவும் புனைவுமாய் வரிகள் வளர்ந்து வளர்ந்து கதையாக உருமாறிவிட்டது. சிவப்பிக்கு உயிர் கொடுத்தவள் இப்போது உயிரோடு இருக்கமாட்டாள் எனினும் என் மனக்கண்ணில் இன்னமும் தண்ணீருக்கு மேலே தலை காட்டியபடி நான் சில காலமே அறிந்த அந்த ஊரின் சகதிக்குளத்தில் முங்கியிருக்கிறாள். அப்புவை வளர்த்த ஆறுமுகம் அச்சு அசல் என் பாட்டனார். குருகாணிக்கையில் வரும் அந்த ஆசிரியருக்கு வித்திட்டவர் அடிக்கடி எங்கள் வீட்டுவாசலில் நின்று உரிமையோடு அப்பாவை பெயர் சொல்லியழைத்த அப்பாவின் உடன் படித்த, ஏதோ காரணத்தால் பின்னாளில் மனம் பிறழ்ந்த நண்பர். அலமேலுவின் ஆசைக்குள்ளிருப்பது கிட்டத்தட்ட அதே மாதிரியான என் ஆத்தாவின் ஆசை. இந்த சிறுகதைகளுக்குள் ஏன் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நான் இருப்பேன், நீங்கள் இருப்பீர்கள், அவள் இருப்பாள், அவர் இருப்பாள், அவர்கள் இருப்பார்கள், அதுவும் இருக்கும். புள்ளிகளை சிறைப்படுத்தும் இழைக்கோலம் போல சிலபுள்ளிகளின் தேவையற்ற பூக்கோலம் போல சில.. 

வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ஒவ்வொரு பாத்திரத்திலும் பொருந்தியும் விலகியும் எட்ட நின்றும், கிட்ட நின்றும் கடந்த பத்து வருடங்களாக நான் வாழ்ந்தெழுதிய இக்கதைகள் நிலாச்சாரல், தமிழ்மன்றம், வல்லமை, அதீதம், பதிவுகள், பிரதிலிபி என பல இணைய தளங்களில் அவ்வப்போது வெளியாகி பற்பல விமர்சனங்களைப் பெற்றுத்தந்து எழுத்தை சீர்படுத்தியவை. முக்கியமாக தமிழ்மன்றத்தை என்னுடைய சிலேட்டுப்பலகை என்பேன். எழுதியெழுதி அழித்தெழுதி எழுத்தைப் பழகியது அங்கேதான். தமிழ்மன்ற நட்புகளுக்கு இவ்வேளையில் நன்றியறிவித்து மகிழ்கிறேன். இத்தொகுப்பை மிகுந்த சிரத்தையுடன் அழகாக வடிவமைத்துள்ள ஷாஜஹான் சார் அவர்களுக்கும் வெளிக்கொணர்ந்துள்ள கோதை பதிப்பக உரிமையாளர் தோழி நான் ராஜாமகள் அவர்களுக்கும் என் உள்ளார்ந்த அன்பும் நன்றியும். 

புத்தகம் வேண்டுவோர் facebook-ல் இருந்தால் Naan Rajamagal அவர்களையும்,  ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் geethamathibooks@gmail.com என்ற மின்னஞ்சலில் என்னையும் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.14 comments:

 1. சிறுகதைத் தொகுப்பு. ஆஹா... மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் சகோ. மேலும் பல புத்தகங்கள் வெளிவரட்டும். நண்பர் ஷாஜஹான் அவர்களின் வடிவமைப்பு - ஆஹா... நூலின் வெளியீட்டில் இரண்டு நண்பர்களின் கைவண்ணம் - மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் வெங்கட்.

   Delete
 2. மகிழ்ச்சி சகோதரி... வாழ்த்துகள்...

  இங்கும் எனது மின்னஞ்சல் தந்து விடுகிறேன்...

  dindiguldhanabalan@yahoo.com

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் தனபாலன்.

   Delete
 3. மகிழ்வான விஷயம். வாழ்த்துகள் கீதா. மேலும் மேலும் உங்கள் படைப்புகள் வெளிவரவும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் தோழி கீதா.

   Delete
 4. மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள் கீதா.

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.

   Delete
 5. மிக்க மகிழ்ச்சி கீதா.
  மகிழம்பூக்களின் வாசனை போலவே உங்கள் கதைகளும் இலக்கிய உலகில் குளிர்மையான வாசனையை பரப்பி இதம் தரும்; அந்த அனுபவத்தைத் தந்தமைக்கு வாழ்த்துக்களும் மிக்க பாராட்டுக்களும்.

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் தோழி.

   Delete
 6. வாசிக்க வாசிக்க மனதில் மணக்கிறது சிறுகதைகள்

  ReplyDelete
  Replies
  1. அன்பும் நன்றியும் தம்பி.

   Delete
 7. முதல் கதையே பிரமாதமாய் அமைந்தமையால்தான் சடகோபன் என்பார் அதைத் தம் கதையெனத் தமிழ் மன்றத்தில் வெளியிட்டு மாட்டிக்கொண்டார்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் இன்னும் அந்நிகழ்வை நினைவில் வைத்திருப்பது வியப்பளிக்கிறது. மிக்க அன்பும் நன்றியும்.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.