27 November 2016

கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமில்லை...

இரண்டுவருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வெளியான கவிஞர் வண்ணதாசன் அவர்களுடைய கவிதை இது. 

அத்துவானத் தண்டவாளத்தில்
நெடும்பொழுது நின்றது தொடர்வண்டி.
எந்தச் சலனமும் அற்று
சன்னல் வழி விரியும்
மாலைத் தொடுவான் பார்த்திருக்கையில்
ஒரு வெண்மேகம் இரண்டாகப்
பிரிந்து நகரும்அற்புதம் நிகழ்ந்தது.
எனக்கு ஏன் அப்படிக்
கண்ணீர் திரண்டது எனத் தெரியவில்லை.

இக்கவிதைக்கான என் பின்னூட்டம் கீழே.. (வலைப்பக்க சேமிப்புக்காக இங்கே பகிர்கிறேன்.)

காண்பதெல்லாம் அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு
இரண்டாய்ப் பிரிந்து நகரும் வெண்மேகம் கண்டு
கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை

கடந்துவந்த பாதைகளில் சிறாய்ப்புற்ற
காயத்தின் வடுவேதும் கவனத்துக்கு வந்திருக்கலாம்.
நினைவுகளின் சாயை படிந்த மங்கிய பிம்பங்களின்
மறுபிரதிபலிப்பாய் அது இருந்திருக்கலாம்.
நெகிழ்வுற்ற கணங்களின் நீட்சியாகவும் இருக்கலாம்

தொப்புள்கொடியறுத்துத் தாயிடமிருந்து
சுகமாய்ப் பிரியும் சிசுவை நினைத்திருக்கலாம்.
கூடலுக்குப்பின் களித்துக் களைத்துப் பிரியும்
காதல் துணையாகவும் அது காட்சியளிக்கலாம்.
புகுந்த வீட்டுக்கு விசும்பலோடு விடைபெறும் மகளை
ஒருவேளை மனக்கண்ணில் கொணர்ந்திருக்கலாம்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்த
புலவர் பெருமக்களை எண்ணி புளகாங்கிதமுற்றிருக்கலாம்.
புரட்டிப்போட்ட வாழ்க்கையை நிமிர்த்திடும் நிமித்தம்
பரதேசமேகிய பால்ய நட்புக்கு விடைகொடுத்த தருணம்
விருட்டென்று நினைவுக்கு வந்திருக்கலாம்.
சின்னேரப் பொழுதில் சிநேகம் வளர்த்து
செல்போன் எண்களோடு கைகுலுக்கிப் பிரிகின்ற
பயண சிநேகிதங்களைப் பற்றியும் நினைத்திருக்கலாம்.

காண்பதெல்லாம் அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு
இரண்டாய்ப் பிரிந்து நகரும் வெண்மேகம் கண்டு
கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை


23 comments:

 1. கவிதை தங்கம் எனில்
  விளக்கக் கவிதை
  மனம் கொள்ளை கொள்ளும்
  தங்க ஆபரணம்
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்து சிலாகித்துப் பின்னூட்டமிட்டமைக்கு மிகவும் நன்றி ரமணி சார்.

   Delete
 2. அருமையான பதிவு

  ReplyDelete
 3. கவிதை அழகு .... அதற்கான தங்களின் பின்னூட்டம் அதைவிட அழகோ அழகாக அமைந்துள்ளது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி கோபு சார். இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியதை ஏனோ இப்போது பதிவு செய்யத் தோன்றியது. பின்னாலேயே சாகித்ய அகாடமி விருது வந்துகொண்டிருப்பதை உள்ளுணர்வு உணர்ந்துகொண்டுவிட்டது போலும். :))

   Delete
  2. திரு. வண்ணதாசன் அவர்களின் ’ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பு நூல் இந்த 2016-ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளது என்ற செய்தி சமீபத்தில் 21.12.2016 வெளியிடப்பட்டுள்ளது.

   Ref:

   http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2016.pdf

   -oOo-

   பின்னாலேயே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், தங்களுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைக்கக்கூடும் என்பதை என் உள்ளுணர்வு எனக்குச் சொல்கிறது........ இப்போது. :))))) அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், மேடம் !

   - பிரியமுள்ள கோபு.   Delete
  3. வண்ணதாசன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த தகவலின் இணைப்பையும் இங்கு தந்து வாசகர்களுக்குதவிய தங்களுக்கு மிகவும் நன்றி கோபு சார்.

   \\பின்னாலேயே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், தங்களுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைக்கக்கூடும் என்பதை என் உள்ளுணர்வு எனக்குச் சொல்கிறது........ இப்போது. :))))) அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், மேடம் ! \\

   தாங்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் அளவிடற்கரிய அன்பையும் கண்டு மலைக்கிறேன். தங்கள் வாயால் இப்படியொரு பாராட்டு பெறுவதே அகடமி விருது கிடைத்தாற்போன்ற மகிழ்வளிக்கிறது. பெரும் சாதனையெழுத்தாளர்களின் வரிசையில் என்னையும் நிறுத்திய தங்கள் அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 4. Replies
  1. மிகவும் நன்றி ரமணி சார்.

   Delete
 5. கவிதையும், உங்கள் பின்னூட்டமாகத் தந்த கவிதையும் வெகு சிறப்பு. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

   Delete
 6. இப்படித்தான் கவிதையை ரசிக்கும் போதே இன்னொரு கவிதை பிறக்கிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 7. Replies
  1. மிகவும் நன்றி ஐயா.

   Delete
 8. கவிதையை ரசித்தவிதம் அருமை.

  ReplyDelete
 9. ஏ அப்பா , எத்தனை ஊகங்கள் ! கவிஞர்களுக்குத்தான் கவிதையின் உட்பொருள் நன்கு விளங்குமோ ?

  ReplyDelete
  Replies
  1. எளிய கவிதையாக இருப்பதாலேயே எளிதில் மனம் புகுந்துவிடுகிறது. உட்பொருள் இன்னதென விளங்காவிட்டாலும் ஊகங்கள் வசப்பட்டுவிடுகின்றன.

   தங்கள் வருகைக்கும் ரசனையான கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 10. நாங்கள் தவறவிடாமல் இரு நெகிழ் கவிதைகள் படித்த நிறைவைத் தந்தீர்கள் கீதா! என் சேமிப்பில் இரண்டுக்கும் ஒரே பக்கம்.

  பிரிவின் அற்புதம் துளிர்க்கும் கண்ணீர் தானோ...!

  நன்கு உள்வாங்கி ஜீரணித்து சாரத்தை எங்களுக்கும் ஊட்டி விட்ட பாங்கு சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. \\நாங்கள் தவறவிடாமல் இரு நெகிழ் கவிதைகள் படித்த நிறைவைத் தந்தீர்கள் கீதா! என் சேமிப்பில் இரண்டுக்கும் ஒரே பக்கம். \\ அன்பால் வெளிப்படும் இந்த வரிகள் நெகிழ்த்துகின்றன. நன்றி தோழி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.