29 November 2011

தாய்மை


இடுப்பு நோகுதம்மா என்று
இயல்பாய்ச் சொன்னபோதும்,
துடித்துப் பதறித் தொடுக்கிறாள்,
தொடர்க் கேள்விக் கணைகளை!

வலிகளைத் தரம்பிரித்துச் சொல்லி,
வந்த வலி எந்த வலி என்கிறாள்;
பொய்யோ மெய்யோவென்று அறிய
பெருஞ்சீரகக் கஷாயம் தந்து,
பெரிதொரு ஆராய்ச்சி செய்கிறாள்!
மெய்யென்றறிந்த பின்னோ....
செய்வதறியாது கைபிசைந்துநிற்கிறாள்!

விண்ணென்று தெறிக்கும் வேதனையை,
விளக்கிச் சொல்ல இயலாது,
அம்மா, அம்மாவென அரற்றும் என்னை,
ஆதரவாய்த் தழுவிக் கொள்கிறாள்!

கூந்தல் அலசவும் அதுநாள்வரை
குளியலறைக்குள் அனுமதித்திராத அவளை,
கூடவே இருக்கச் சொல்லி,
கரம் பற்றிக் கொண்டபோது,
காணச் சகியாமல் கண்ணீரை உகுக்கிறாள்!

அன்றொருநாள் அவளுற்றதும்
இதே துயரம் என்றறிந்தபோதும்,
இன்றென் குறுக்குவலி பொறுக்காது,
முந்தானையால் முகம்பொத்திக் குலுங்குகிறாள்!

சுகமாய்ப் பிரசவிக்க வேண்டுமென்று,
குலதெய்வத்தை வேண்டுகிறாள்;
போதாதென்று கூடவே அழைக்கிறாள், அவள்
பார்த்தேயிராத பல தெய்வங்களை!

அப்பாவின் செல்லமென்று இருந்தவள்,
அம்மாவின் பெண்ணானேன்,
அழகிய என் தேவதை
அவதரித்தக் கணம் முதலாய்!

என்னிலும் பன்மடங்கு தவித்து,
வேதனையில் வியர்த்து நின்ற
என் அம்மாவின் ஆர்ப்பாட்டம் கண்டு
பரிகசிப்பது போல்
சின்ன இதழ் கோணி,
கன்னக் கதுப்பில் குழி விழ,
புன்னகைக்கும் மென்பூவைக் கையிலேந்தி,
என்ன பாடு படுத்திவிட்டாயடி,
என் பெண்ணை? என்று
செல்லமாய்க் கடிகிறாள்!

என்னவோ புரிந்ததுபோல்
அழுகைக்கு ஆயத்தமாய்
உதடு பிதுக்கும் மகளின் துன்பம்
காணப்பொறுக்காமல்,
முகம் திருப்பிக் கொள்கிறேன், நான்!

34 comments:

 1. இறுதி வரி நிறையச் சொல்லிப் போகிறது
  சில சமயம் வார்த்தைகளைவிட மௌனமே நிறையஸ்
  சொல்லிப் போகும் அதைப் போல
  மனம் கவர்ந்த அருமையான தரமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 1

  ReplyDelete
 2. தாய்மையின் பிறப்பே-என்றும்
  தரணியில் சிறப்பே
  சேய்தனைத் தந்திட -பெரும்
  சிரமத்தில் நொந்திட
  நேய்வரின் காத்தும்-அன்னை
  நோன்புகள் ய‍த்தும்
  வாய்விட்டுச் சொல்ல-கவிதை
  வடித்தநீர் வாழ்கவே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 3. விண்ணென்று தெறிக்கும் வேதனையை,
  விளக்கிச் சொல்ல இயலாது,
  அம்மா, அம்மாவென அரற்றும் என்னை,
  ஆதரவாய்த் தழுவிக் கொள்கிறாள்!

  உண்மைதான்..

  ReplyDelete
 4. சின்ன இதழ் கோணி,
  கன்னக் கதுப்பில் குழி விழ,
  புன்னகைக்கும் மென்பூவைக் கையிலேந்தி,
  என்ன பாடு படுத்திவிட்டாயடி,
  என் பெண்ணை? என்று
  செல்லமாய்க் கடிகிறாள்!

  திரும்பத் திரும்பப் படித்து சுவைத்து மகிழ்ந்தேன்..

  அருமை.

  ReplyDelete
 5. இது ஒரு தொடர்கதை.....
  அடுத்த தலைமுறையின் சோகம் பொறுக்காத தாய்மையின்
  தொடர்கதையின் அடுத்த பகுதி ஆரம்பம்...

  ReplyDelete
 6. என்ன சொல்ல..
  சகோதரி..
  தாய்மையின் உணர்வுகளை ஒரு பெண்ணாய் பிறக்காமலேயே என்னால் உணர்ந்துகொள்ளக்க்கூடிய அளவுக்கு அற்புதமாக எழுத்தி இருக்கிறீர்கள்.
  மறுபிறப்பு எனும் பிரசவத்தை இதைவிட அழகாய் வலி உணர்வோடு பகிர்ந்துவிட முடியாது..
  தான் அடைந்த அதே வலியை தன் மகளும் பெறப்போகிறாலே என ஒரு தாய் எண்ணித் தவிக்கும் தருணத்தை எவ்வளவு அழகாய் சொல்லிவிட்டீர்கள்...
  கவிதை என்னை ஏதோ செய்துவிட்டது சகோதரி...

  பெண்ணைப் பிறத்தலுக்கு மாதவம் செய்திடல் வேண்டும்.....

  ReplyDelete
 7. கீதா...மனதிற்கு இதமாகவும் சுகமாகவும் அம்மாவின் அணைப்போடு நெகிழவைக்கிறது வரிகள் !

  ReplyDelete
 8. கவிக்கு கவியே தலைப்பானால் கவியெங்கே ரசிப்பது...

  அருமைங்க...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

  ReplyDelete
 9. தாய்மையின் சிறப்புபற்றி மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.
  பாராட்டுக்கள்.

  தங்களிடம் ஒரு சந்தோஷமான விஷயம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்கள் மின்னஞ்சல் முகவரியை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

  என் முகவரி: valambal@gmail.com

  ReplyDelete
 10. உணர்வான உயர்வான பகிர்வு.

  ReplyDelete
 11. தாய்மை குறித்த இந்த கவிதையால் பெண்ணாக பிறந்திருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றும் எண்ணம் மீண்டும் தோன்றியது. எனது கவிதைக்கான தங்கள் புரிதலிலும் மிக்க மகிழ்ந்தேன் , நன்றிகளும் வாழ்த்துக்களும்... - இயற்கைசிவம்

  ReplyDelete
 12. தாய்மை குறித்த இந்த கவிதையால் பெண்ணாக பிறந்திருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றும் எண்ணம் மீண்டும் தோன்றியது. எனது கவிதைக்கான தங்கள் புரிதலிலும் மிக்க மகிழ்ந்தேன் , நன்றிகளும் வாழ்த்துக்களும்... - இயற்கைசிவம்

  ReplyDelete
 13. நிறையப் பாராட்ட நினைத்தாலும், அருமை என்ற ஒரு சொல் தவிர வார்த்தையெழவில்லை. ஒவ்வொரு பெண்ணும் அனுபவிப்பது.

  ReplyDelete
 14. @ Ramani,

  முதல் வருகை புரிந்து வாக்கும் வாழ்த்தும் வழங்கியதற்கு நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 15. @ புலவர் சா. இராமனுசம்,

  தாங்கள் நெய்த அழகிய பாவாடை (பா ஆடை) கட்டிச் சிரிக்கிறதே எந்தன் கவிக்குழந்தை! உளம்பூரித்த நன்றி ஐயா.

  ReplyDelete
 16. @ முனைவர்.இரா.குணசீலன்,

  வாசித்து மகிழ்ந்ததற்கும் வகையாய்க் கருத்திட்டதற்கும் மனமார்ந்த நன்றி முனைவரே.

  ReplyDelete
 17. @ மகேந்திரன்,

  பெண்மை போற்றும் அழகான கருத்துரைக்கு நன்றி. கவிதையின் கருவை அநாயாசமாகக் கண்டுகொண்டுள்ளீர்கள். பாராட்டுகள்

  ReplyDelete
 18. @ ஹேமா,

  அம்மாவை நினைப்பதே அவள் அணைப்பின் கதகதப்பை உணரச் செய்யுமே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 19. @ ♔ம.தி.சுதா♔

  ஒற்றை வாக்கியத்தில் அழகானக் கருத்தை அறியவைத்துவிட்டீர்கள். நன்றி மதிசுதா.

  ReplyDelete
 20. @ வை.கோபாலகிருஷ்ணன்,

  தங்கள் வருகைக்கும் வாக்குக்கும், நல்லதோர் கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றி வை.கோ. சார்.

  ReplyDelete
 21. @ துரைடேனியல்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 22. @ சி.கருணாகரசு,

  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 23. @ iyarkaisivam,

  பெண்ணாய்ப் பிறந்ததற்காய் மேலும் பெருமைப்படுகிறேன், தங்கள் வரிகள் கண்டு. மனம் நெகிழ்ந்த நன்றி.

  ReplyDelete
 24. @ ஹுஸைனம்மா,

  உண்மைதான். தாய்மையே ஒரு பெரும்பேறு என்றாலும் ஒரு பெண்குழந்தைக்குத் தாயாவதில் உள்ள இறுமாப்பு சற்றுக் கூடுதல்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 25. அம்மா தாய்மை அன்பின் பிறப்பிடம் .கண்ணீரோடு படிக்கிறேன் .அம்மாவின் மடியில் படுத்து உறங்க வேண்டும் போலிருக்கு //.உதடு பிதுக்கும் மகளின் துன்பம்காணப்பொறுக்காமல்,
  முகம் திருப்பிக் கொள்கிறேன், நான்!//
  அதுதான் தாய்மை ..மிகவும் அருமையான கவிதை

  உங்க பதிவுகள் என் டாஷ் போர்டில் வரவில்லையே .
  மற்ற பதிவுகளுக்கு நாளை வருகிறேன் ,

  ReplyDelete
 26. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

  எனக்கும் சில சமயம் நான் தொடர்பவர்களின் பதிவுகள் பற்றிய விவரம் டாஷ்போர்டில் வருவதில்லை. பிறகு தானாகவே சரியாகிவிடுகிறது.

  ReplyDelete
 27. அம்மாடி. மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்ற வலியை உணர வைத்தது உங்கள் கவிதை. அற்புத வரிகள் கீதா. அதுவும் கடைசிவரி ....எங்கு கற்றீர்கள் இந்த அருமையை,.

  ReplyDelete
 28. excellent கவிதை!!! பாராட்டுக்கள்.

  உங்களின் இக்கவிதையும் இன்னும் இரு கதைகளையும் என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன்.

  உங்கள் பதிவு இணைத்த
  எனது இடுகை

  ReplyDelete
 29. @ வல்லிசிம்ஹன்,

  \\அம்மாடி. மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்ற வலியை உணர வைத்தது உங்கள் கவிதை. அற்புத வரிகள் கீதா. அதுவும் கடைசிவரி ....எங்கு கற்றீர்கள் இந்த அருமையை,.\\

  தங்கள் மனந்திறந்த பாராட்டுக்கும் உணர்வுபூர்வமானப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 30. @ Shakthiprabha

  \\excellent கவிதை!!! பாராட்டுக்கள்.

  உங்களின் இக்கவிதையும் இன்னும் இரு கதைகளையும் என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன்.\\

  தங்கள் பாராட்டுக்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கும் என் உளமார்ந்த நன்றி.

  ReplyDelete
 31. தாய்மையின் ஒரு புதிய கோணம் .
  மூன்று ஜீவன்களின் தவிப்புகளை ஒரே கவிதையில்
  தலைப்பில் உள்ளட்டக்கி விட்டீர்கள்.
  அருமை கீதா !

  ReplyDelete
 32. வருகைக்கும் கருத்தாழமிக்கப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஸ்ரவாணி.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.