4 November 2011

கரையோர விருட்சம்தூக்கமும் விழிப்புமற்ற அரைமயக்கத்தின் கிறக்கத்தில்
முனகியபடியே மெல்லத் தவழும் என்னைச்
செல்லமாய்த் தழுவி நிற்கும்
கரையோரப் பெருவிருட்சமொன்றின்
கவிழ்ந்த கொப்புகளை முத்தமிட்டுக்கொண்டே
அம்மரத்தின் வேர்களை வருடி நடக்கிறேன்.

ஒரு நிலையில் நிற்க எனக்கு சம்மதமில்லை.
நெளிந்தும், வளைந்தும், ஊர்ந்தும்
அதன் கைகளுக்கு அகப்படாமல்
விளையாட்டாய் நழுவிக்கொண்டே இருக்கிறேன்.

அம்மரத்தின் மீதான உரிமைப்போர்
எனக்கும் பறவைகளுக்கும் எப்போதும் உண்டு.
என்னால் வளர்ந்ததால் எனக்கே சொந்தமென்று நானும்,
எச்சத்தால் விளைந்ததால்
தமக்கே சொந்தமென்று பறவைகளும்
பேசும் நியாயத்துக்கு மரம் பதிலளித்ததே இல்லை.
பறவைகளின் கீச்சிடல்களுக்கும்,
என் கிச்சுகிச்சு மூட்டலுக்கும் ஒத்திசைவாய்
நாற்புறமும் தலையசைத்து ரசித்துக்கொண்டிருந்தது.

வேர்களை வருடி வருடி அதன் பாதங்களை
பலமிழக்கச் செய்துவிட்டதைப்பற்றி
மரம் அலட்டிக்கொள்ளவில்லை.
பறவைகள் அதன் தலையிலமர்ந்து
தாங்கள் கண்டறிந்த ரகசியத்தைப் பதறிப் பதறி
அதன் காதுகளில் சத்தமாக ஓதிக்கொண்டிருந்தன.
மரம் அப்போதும் கண்மூடி,
பெரும் ரசனையில் ஆழ்ந்திருந்தது.

அரவங்கள் அடங்கியிருந்த ஒரு உச்சிப்பொழுதில்
தன் இறுதிப் பிடிப்பையும் இழந்துவிட்டப் பெருமரத்தை
சத்தமின்றிப் பெயர்த்தெடுத்துச் சென்று
 பொத்தென்று வீழ்த்தினேன் பேரருவியில்.

அந்தியில் அடைக்கலந்தேடிவந்தப் பறவைகள்
அலறித்துடித்தபடியே என்னிடம் கேட்கின்றன,
காணாமற்போன மரத்தைப் பற்றி!

அங்க அடையாளங்கள் சொல்லுங்கள்,
எங்கேணும் கண்டால் சொல்கிறேன்
என்றேன் வெகுநிதானமாய்!!

21 comments:

 1. அழுக்காறு எனஒரு பாவி என்று வள்ளுவர் சொன்னது சரிதான். எங்களூரில் ஈரத்துண்டு போட்டு கழுத்தறுப்பது என்று சொல்வார்கள், மிகவும் வேண்டியவர்களே இதை செய்வார்கள். ஒருவேளை சிக்கலை உணராமல் மரம் மரமாக நின்றது தவறோ. முழு உரிமையும் உனக்குத்தான் என்று சொல்லியிருக்க வேண்டுமோ. அப்படியென்றால் அடைக்கலம் தருவது என்ற மரத்தினுடைய கொள்கை பாதிக்கப்படும்.

  மனித உறவுகள் தோல்வி காண்பதும் இப்படித்தான் போலும்.

  அட, சிந்தனையை நிறுத்த முடியவேயில்லை. மிக அருமையான கவிதை.

  ReplyDelete
 2. கரையோர விருட்ஷம் என்பதைவிட
  கால நதி என்பது கவிதைக்கு இன்னும்
  கூடுதல் வீச்சைத் தருமோ என எண்ணினேன்
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
  இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

  ReplyDelete
 4. கற்பனை மிகவும் அருமை சகோதரி
  வளரவும் வாழவும் வைத்த நீரை
  தளரவும் தரையில் வீழவும் செய்தது
  கொடுமை!
  நல்ல உள்ளுரை அமைந்த
  உருவகக் கவிதை! நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. அந்தியில் அடைக்கலந்தேடிவந்தப் பறவைகள்
  அலறித்துடித்தபடியே என்னிடம் கேட்கின்றன,
  காணாமற்போன மரத்தைப் பற்றி!


  அருமையான பதிவு.

  ReplyDelete
 6. தொடர்புடைய இடுகை..

  மரங்களும் நானும்..

  http://gunathamizh.blogspot.com/2011/10/450.html

  ReplyDelete
 7. "என்னால் வளர்ந்ததால் எனக்கே சொந்தமென்று நானும்,
  எச்சத்தால் விளைந்ததால்
  தமக்கே சொந்தமென்று பறவைகளும் "
  எப்படிங்க! சூப்பருங்க....

  ReplyDelete
 8. முதல் முறை வந்தேன். இயற்கை நேசிப்பு அருமை. நாம் பேச ஆரம்பித்தால் இயற்கையின் ஒவ்வொரு அற்புதமும நம்மோடு பேசி கதைசொல்லத் தொடங்கிவிடும். அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இயற்கை அழிவு பெரும் வேதனை கீதா.கவிதை முழுதும் ஆதங்கம் !

  ReplyDelete
 10. நதி நீராய் கீதா பயணித்தபடியே செல்லும் கவிதை படிப்பவரையும் உடன் அழைத்துச் செல்கிறது. அருமை.

  ReplyDelete
 11. கவிதையை படித்த போது, நானும் நதி நீராய் மாறி போனேன். இறுதியில் பதிலளித்த போது , மனம் மரமாய் மாறி , கோபப்பட்டது.

  இயற்கையையும் , மனித இயல்பையும், கோர்த்து சொன்ன கவிதை.
  அபாரம்.

  ReplyDelete
 12. அருமையான சிந்தனைகளால் இக்கவிதையை அழகுபடுத்திவிட்டீர்கள் சாகம்பரி. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 13. உங்கள் சிந்தனை மிகவும் ஆழமானது ரமணி சார். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 14. இப்படிலாம் யோசிக்க முடியுமா?அருமை.

  ReplyDelete
 15. @ புலவர் சா இராமாநுசம்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  @ முனைவர்.இரா.குணசீலன்

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி முனைவரே. மரங்களின் பெருமை பேசிய இடுகை மனம் கவர்ந்தது. சுட்டி தந்தமைக்கு மிகவும் நன்றி.

  @ விச்சு

  வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி விச்சு.

  ReplyDelete
 16. @ Harani

  முதல் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துப் பதிவுக்கும் மிகவும் நன்றி.

  @ ஹேமா

  வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஹேமா.

  @ சத்ரியன்

  ரசனையான பின்னூட்டத்துக்கு நன்றி சத்ரியன்.

  ReplyDelete
 17. @ சிவகுமாரன்

  புரிதலுடனான அழகான பின்னூட்டத்துக்கு நன்றி சிவகுமாரன்.

  @ thirumathi bs sridhar

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆச்சி.

  ReplyDelete
 18. அற்புதமான கவிதை!
  //பறவைகளின் கீச்சிடல்களுக்கும்,
  என் கிச்சுகிச்சு மூட்டலுக்கும் ஒத்திசைவாய்
  நாற்புறமும் தலையசைத்து
  ரசித்துக்கொண்டிருந்தது.// அழகிய வரிகள்! அழகிய காட்சி!

  ReplyDelete
 19. சபாஷ்.. இயல்பாய் வார்த்தைகள் விழுந்து, மனசுக்குள் கவிதை நிமிர்ந்து விட்டது!

  ReplyDelete
 20. @ கே. பி. ஜனா

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஜனா.

  @ ரிஷபன்

  வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரிஷபன் சார்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.