21 September 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?(17)


சுந்தரி இனி என்ன செய்வாள்? அவளைப் பெற்றவர்களின் கால்களில் விழுந்தாவது அவளை அவர்களிடமே சேர்ப்பித்துவிடலாம் என்றால் அவர்கள் இருக்குமிடமும் தெரியவில்லை.

நண்பர்கள் அனைவரும் பண உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் சுந்தரியின் தற்போதைய அத்தியாவசியத் தேவை ஆறுதலும், ஆதரவும். அதைத்தரக்கூடியவர்களாய் விக்னேஷும், வித்யாவும், கோமதியம்மாவும் இருந்தனர்.

சுந்தரியின் எதிர்காலம் குறித்து, மூவரும் கலந்து ஆலோசித்தனர்.

"விக்கி, சுந்தரியை எங்க வீட்டில் தங்கவைக்கிறது ஒரு பிரச்சனையே இல்ல. ஆனா வீட்டில் எங்க அக்கா இருக்கா. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன். அவ எடுத்தெறிஞ்சு பேசற டைப். இப்ப அவளோட எதிர்காலமும் கேள்விக்குறியா இருக்கிறதால அவ போக்கே மாறிட்டுவருது. குழந்தைகளைக் காரணமில்லாம போட்டு அடிக்கிறா. என்மேலயும் அப்பா மேலயும் எரிஞ்செரிஞ்சு விழறா. அவளுக்கு ஒரு தீர்வு ஏற்படறவரைக்கும் சுந்தரியை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறது சாத்தியமில்ல. வெந்த புண்ணில வேல் பாய்ச்சுறமாதிரி எங்க அக்கா ஏதாவது சொல்லி இவளைக் காயப்படுத்திடுவாளோன்னு பயமா இருக்கு. நான் சொல்றதப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன். ஐயாம் வெரி ஸாரிப்பா!"

"நீ ஏன் திவ்யா வருத்தப்படறே? நீ சொல்றதில் இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது. என் நிலைமையும் அப்படிதான்! எங்க அம்மா கொஞ்சம் அனுசரிச்சுப் போறவங்களா இருந்தா பரவாயில்ல. அவங்களும் பட்டுனு ஏதாவது பேசிடுவாங்க. இந்தப் பொண்ணு மனசுடைஞ்சு போயிடும். அதான் எனக்குப் பயமா இருக்கு. நல்லது செய்யறதா நினைச்சிட்டு அவளுக்கு கெடுதல் செய்திடக்கூடாதில்ல...."

"குழந்தை இல்லைன்னாலும் இப்போதைக்கு ஏதாவது ஒரு ஹாஸ்டலில் தங்கவச்சிட்டு அடிக்கடி வந்து பாத்துக்கலாம். இப்போ கைக்குழந்தையோட நிக்கிறா. என்ன செய்யறதுன்னே புரியலை."

இடையில் கோமதியம்மா குறுக்கிட்டார்.

"சரிதான், ரெண்டுபேரும் என்ன பேச்சு பேசிகிட்டிருக்கீங்க? அந்தப்பொண்ணுக்கு ஏன் வேற போக்கிடம் தேடிகிட்டிருக்கீங்க? நான் இல்லையா? அத கண்ணா வச்சிப் பாத்துக்க மாட்டனா?  ஏதோ அந்தப் பொண்ண அதப் பெத்தவங்ககிட்ட அனுப்பப்போறீங்கன்னுதான இவ்வளவுநாள் நினைச்சுகிட்டிருந்தேன். அவங்க ஊரவிட்டுப் போனகத எனக்குத் தெரியாதே!  அம்மா. வித்யா! நீ கவலைய வுடு. சுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன். அது புள்ளய வளக்குறது எம் பொறுப்பு. நீங்க ரெண்டுபேரும் அப்பப்போ வந்து அதப் பாத்துபேசிட்டுப் போங்க. அது தங்கறதுக்காகவா எடம் பாக்கறீங்க? நல்ல புள்ளங்க, போங்க!  அதுபாட்டுக்கு எப்பவும்போல எங்க வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்குப் பாதுகாப்பா நாங்க இருக்குறோம். எந்தக் கவலயும் இல்லாம ஆகவேண்டியதப் பாருங்க!"

எவ்வளவு பெரிய விஷயம்! எத்தனை இயல்பாகச் சொல்லிவிட்டார். அவருடைய உயர்ந்த மனதுடன் தன் தாயை ஒப்பிட்டு விக்னேஷ் நாணித்தலைகுனிந்தான். வித்யாவுக்கும் தன் இயலாமையை எண்ணி வெறுப்பாய் இருந்தது.

சொந்தமில்லாத நிலையிலும், தன் வீட்டில் தங்கவைத்து ஆதரவளிப்பதுடன், சுந்தரியை தன் மகளைப்போல் பார்த்துக்கொள்வேன் என்று அவர் வாக்குறுதி அளித்ததைக்கண்டு இருவர் நெஞ்சமும் இளகியது. விக்னேஷ் கண்கள் கலங்க, அந்தம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினான்.

"என்னங்க, தம்பி, இதப்போய் பெரிசு பண்ணிட்டு?"

அவர் கூச்சத்துடன் விலகிநின்றார்.

மருத்துவமனையிலிருந்து சுந்தரியை அழைத்துக்கொண்டு அவள் இருந்த வீட்டுக்கே வந்துசேர்ந்தனர். கோமதியம்மா முன்பே வந்திருந்து ஆரத்தி கரைத்து தயாராக வைத்திருந்தார். பிரபுவின் மரணம் பற்றித் தெரிந்திருந்ததால் தெருவே கூடி நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்தது.

சுந்தரியை அவசரமாக கைத்தாங்கலாய் மாடிக்கு அழைத்துவந்துவிட்டாள், வித்யா. கோமதியம்மா குழந்தையை ஏந்தி பின்னால் வந்தார். விக்னேஷ் அவருக்குப் பின்னால் சாமான்களையும், பைகளையும் எடுத்துக்கொண்டு மாடியேறினான். மாடிக்கு வந்து குழந்தையைப் பார்த்த கோமதியம்மாவின் கணவர், அதன் தலை தொட்டு ஆசி செய்தார்.

வித்யா படுக்கையைத் தயார் செய்து சுந்தரியை அதில் படுக்கச் சொன்னாள். மரத்தொட்டில் ஒன்றை, விக்னேஷ்  வாங்கித் தயாராகவைத்திருந்தான். தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அதில் கிடத்தினார், கோமதியம்மா.

இப்போது விஷயத்தை சுந்தரியிடம் சொல்லியே ஆகவேண்டும். இனியும் காலம் கடத்துவது அழகில்லை. யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதுபோல் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.

வயதில் பெரியவரும், அனுபவமுதிர்ச்சி உடையவருமான கோமதியம்மாதான் முன்வந்தார்.

படுத்திருந்த சுந்தரியின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். சுந்தரி மறுபுறம் திரும்பி, சத்தமின்றி அழுதுகொண்டிருந்தாள். அவள் முகத்தைத் தன்புறம் திருப்பி தன் முந்தானையால் அவள் கண்ணீரைத் துடைத்தார். இதமாய் அவள் தலையை வருடினார்.

"அம்மா, சுந்தரி! இப்படி ஓயாம அழுதுகிட்டிருந்தா என்ன அர்த்தம்? குழந்தையப் பாரு! அதப் பாத்தாலே போதுமே! எல்லாக் கவலயும் பறந்திடுமே!"

"அம்மா....அவரு....என்ன விட்டுட்டு எங்கம்மா போனாரு?"

"அம்மாடி, மனசத் தேத்திக்கோம்மா.....பிரபுதம்பி இப்ப
 நம்மகூட இல்லம்மா...ஆனா……. அதுதாம்மா ஒனக்குப் பொண்ணா வந்து பொறந்திருக்கு!"

கோமதியம்மா வாயில் துணியை வைத்து பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார்.

"கோமதி, அந்தப் பொண்ண தேத்தச்சொன்னா நீ அழுதுகிட்டு இருக்கே!"

அவரது கணவர் அவரைக் கடிந்தார்.

இப்போது அனைவரது பார்வையும், அடுத்து சுந்தரி என்ன செய்யப்போகிறாள், என்ன சொல்லப்போகிறாள் என்பதிலேயே இருந்தது. சுந்தரியோ எழுந்து மெளனமாய் தலை குனிந்து  அமர்ந்திருந்தாள்.அவள் கண்களிலிருந்து சொட்டுசொட்டாக நீர் படுக்கையை நனைத்தது.  இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள். பின் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

கோமதியம்மாவைப் பார்த்து,

"அம்மா! என்ன நடந்துன்னு எனக்கு மறைக்காம சொல்லுங்க, எதுவா இருந்தாலும் நான் தாங்கிக்கிறேன். இப்படி மூடி மறைச்சுப் பேசாதீங்க!"

சுந்தரியின் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அனைவருமே வியந்தனர். விக்னேஷுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது. தன் அப்பா இறந்த அதிர்ச்சியில் அம்மாவுக்கு சித்தப்பிரமை உண்டானது பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஐயோ...இவளுக்கும் அப்படி ஏதாவது.....

"சொல்லுங்கம்மா…………….! அக்கா....நீங்க சொல்லுங்க, அண்ணே…....நீங்களாவது சொல்லுங்க..."

சுந்தரியின் மனோதிடத்தை வித்யா எதிர்பார்க்கவில்லை என்றாலும், இது அவளுக்கு மகிழ்வைத் தந்தது. இப்போது அவள் எதையும் தாங்கும் நிலையில் இருக்கிறாள். இப்போது சொல்வதுதான் சரி.

வித்யா எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள். பிரபுவின் இறுதிக் காரியத்தைத் தாங்களே செய்ததற்கு அவளிடம் மன்னிப்புக் கோரினாள்.

சுந்தரி வெறுமையாய் சிரித்தாள்.

"நான் இருந்திருந்தா என்னக்கா செஞ்சிருப்பேன்? அப்பவும் எனக்கு நீங்க எல்லாரும்தான் உதவியிருக்கணும். இந்த அளவுக்கு என்மேல் பாசத்தோடயும், அக்கறையோடவும் கவனிச்சுகிட்ட உங்களுக்கு எப்படி பதிலுதவி செய்யப்போறேன்னு தெரியலைக்கா…………..  அம்மா……....நீங்க பெத்தப் பொண்ணா இருந்தாகூட இப்படி செஞ்சிருப்பீங்களான்னு தெரியல...எங்கேயிருந்தோ வந்த எனக்காக நீங்க செஞ்சதைப் பாக்கும்போது காலமெல்லாம் நான் உங்களுக்கு சேவை செஞ்சாலும் போதாதுன்னு தோணுது. எனக்காக....நீங்க இத்தனபேர் இருக்குற நம்பிக்கையில தான் என் வீட்டுக்காரு என்ன விட்டுட்டுப் போயிட்டாரு போலயிருக்கு....."

சுந்தரி அடக்கமாட்டாமல் அழுதாள். இதுவரை அடக்கிவைத்திருந்த துயரம்  அத்தனையும் வடியுமளவுக்கு ஓவென்று அழுதாள். அவளைத் தேற்றப்போன வித்யாவை தடுத்துவிட்டார், கோமதியம்மா. அவள் வாய்விட்டு அழுவது ஒன்றே அவள் மனப்பாரம் குறைய வழி என்று அனைவரும் கலங்கிய மனதுடனும் கண்ணீர் சிந்தும் விழிகளுடனும், அவள் ஓயும்வரை காத்திருந்தனர்.

நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது. 

தொடரும்...

***********************************************************

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

மு. உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
-----------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


8 comments:

 1. நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது.

  ReplyDelete
 2. சுந்தரியின் முதிர்ச்சியும் பக்குவமும்
  கோமதியின் பெருந்தன்மையும் உதவும் குணமும்
  பிரமிக்கச் செய்கிறது
  அடுத்த பதிவு வரும்வரை வேண்டிய உறவினர்
  ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பதைப்போல
  சுந்தரி குறித்து நினைத்துக் கொண்டிருக்கும்படியாகச்
  செய்து போகிறது உங்கள் எழுத்தின் திறன்
  தொடர வாழ்த்துக்கள் த.ம1

  ReplyDelete
 3. மனம் கனக்கிறது.தொடருகிறேன்

  ReplyDelete
 4. சுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன். அது புள்ளய வளக்குறது எம் பொறுப்பு. நீங்க ரெண்டுபேரும் அப்பப்போ வந்து அதப் பாத்துபேசிட்டுப் போங்க. அது தங்கறதுக்காகவா எடம் பாக்கறீங்க? நல்ல புள்ளங்க, போங்க! அதுபாட்டுக்கு எப்பவும்போல எங்க வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்குப் பாதுகாப்பா நாங்க இருக்குறோம். எந்தக் கவலயும் இல்லாம ஆகவேண்டியதப் பாருங்க!"

  மனிதம் உணர்த்திப் போகிற கதைப் போக்கு அருமை.

  ReplyDelete
 5. உண‌ர்ச்சிப் பெருக்கை தேர்ந்த வரிகளில் கோர்த்து மிக அழகான நடையில் எழுதியிருக்கிறீர்கள்! மனித நேயத்தையும் முழுமையான அன்பையும் எழுத்தில் பார்க்கும்போது மகிழ்வாக உள்ளது. இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. // நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது//

  நெஞ்சைத் தொடும் இவ் வரிகளோடு கதையைத்
  தொடர விட்டிருக்கீர்கள்
  அடுத்து என்ன என்ற ஆவலை
  படிப்போரின் நெஞ்சில் எழச்செய்வதே தொடர் கதை
  எழுதுவோருக்கு வேண்டிய ஆற்றல்!
  அது தங்களிடம் நிறைந்துள்ளது
  கண்டு பாராட்டுகிறேன் நன்றி!

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றிங்க இராஜராஜேஸ்வரி.

  ஆர்வத்துடன் தொடர்வதற்கும் வாக்குப்பதிவுக்கும் நன்றி ரமணி சார்.

  தொடர்வதற்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஆச்சி.

  மிகவும் நன்றி ரிஷபன் சார்.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க மனோ.

  ஆழ்ந்து கவனித்துத் தாங்கள் இடும் கருத்து என் எழுத்தை மேம்படுத்தும். மிகவும் நன்றி ஐயா.

  ReplyDelete
 8. இது போன்ற குழந்தை மனம் உள்ள கதாபாத்திரம் வேறு என்ன செய்ய முடியும். கால அலையின் வீச்சில் பயணிப்பதை தவிர. தொடர்கிறேன்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.