தோட்டத்துப் பிரதாபம் - 13
நியான் குக்கூ தேனீ |
இந்தத்
தேனீயின் பெயர் Neon cuckoo bee (Thyreus nitidilus). நியான் போல ஒளிரும் நீலம் மற்றும் கருப்பு வண்ணம் கொண்டது என்பதால் நியான் சரி. அதென்ன குக்கூ? நீங்கள் நினைப்பது சரிதான். காக்கையின் கூட்டில் திருட்டுத்தனமாய் முட்டையிடும் குயிலைப் போலவே இதுவும் பிற தேனீக்களின் கூடுகளில் திருட்டுத்தனமாய் முட்டையிடுவதால் குக்கூ என்னும் பெயர். தேனீக்களில் கூட குயில் தேனீக்கள் உண்டென்பதை அறிந்து வியப்பு மேலிடுகிறது.
பெண் தேனீக்கள் முட்டையிட இடம் தேடி அலைய வேண்டாம், கூடு கட்ட வேண்டாம், முட்டையிலிருந்து வரும் புழுவுக்காக உணவு சேகரித்துக் கொண்டுவர வேண்டாம். செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வேறொரு தேனீ கட்டும் கூட்டுக்குள் திருட்டுத்தனமாய் புகுந்து தன் முட்டையை இட்டுவிட்டு வந்துவிடவேண்டும். அவ்வளவுதான். மேற்கொண்டு ஆகவேண்டியவற்றை இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வா பார்த்துக்கொள்ளும்.
ஆஸ்திரேலியாவின் தேனீயினம் பலவும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. பெண் தேனீக்கள் இண்டு இடுக்குகளிலும், மண்ணைத் துளைத்தும், சுவரின் துவாரங்களிலும் தங்கள் கூடுகளை அமைத்து முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்காக கூடவே தேனும் மகரந்தமும் வைத்து கூட்டின் வாயிலை மூடுகின்றன. Blue banded bee எனப்படும் நீலவரித் தேனீயும் அவற்றுள் ஒன்று. நியான் குக்கூ தேனீயின் நிறம் கிட்டத்தட்ட நீலவரித் தேனீயை ஒத்திருப்பதால் அவற்றை ஏமாற்றி தங்கள் வாரிசுகளை வளர்ப்பது அவற்றுக்கு சுலபமாக உள்ளது.
ஏமாற்றப்படும் நீலவரித் தேனீ |
பெண்
நியான் குக்கூ தேனீ, பெண் நீலவரித் தேனீக்கள் முட்டையிடும் இடங்களைப் பார்த்துவைத்துக் கொள்ளும். பெண் நீலவரித் தேனீக்கள் முட்டையிட்டுவிட்டு,
தேனும் மகரந்தமும் எடுத்துவர சென்றிருக்கும் சமயத்தில், பெண் நியான் குக்கூ தேனீ உள்ளே நுழைந்து தன் முட்டையை இட்டுவிட்டு வந்துவிடும். இது எதுவும் அறியாத நீலவரித் தேனீ உள்ளே உணவை வைத்து துவாரத்தை மூடிவிடும். குயிலினத்தைப் போலவே இங்கும் முதலில் பொரிவது திருட்டுத்தனமாய் இடப்பட்ட முட்டைதான். முதலில் வெளிவரும் நியான் குக்கூ தேனீயின் லார்வா, உள்ளே இருக்கும் உணவைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுவாக உருமாறிக்கொள்ளும். சில நாள் கழித்து பொரிந்து வெளிவரும் நீலவரித் தேனீயின் லார்வா உணவின்றி இறந்துபோய்விடும். உரிய காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு நியான் குக்கூ தேனீயின் வாரிசு வெளிவந்து தன் வாழ்க்கையைத் தொடங்கும்.
நியான் குக்கூ தேனீ |
இரண்டு வகை தேனீக்களுமே எங்கள் தோட்டத்துக்கு வருகை தருகின்றன என்றாலும் நீலவரித் தேனீயைப் படமெடுக்கக் கிடைக்கும் வாய்ப்பு நியான் குக்கூ தேனீயைப் படமெடுக்க கிடைப்பதில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் விருட்டென்று வந்துவிட்டு மறையும் இவற்றை ஒன்றிரண்டு படம் எடுப்பதற்குள்ளாகவே படாத பாடு பட்டுவிட்டேன். பல மாதங்களாக கேமராவுக்குள் சிக்காமல் டிமிக்கி கொடுத்துவரும் அதனை க்ளோசப்பில் படம்பிடிக்கும் வாய்ப்பொன்று அதிசயமாய்க் கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு பூங்கா ஒன்றில் கீழே உள்ள படங்களில் இருக்கும் தேனீயைக் கண்டேன். இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் எப்படி உட்கார்ந்திருக்கிறது? அங்கே பூ கூட இல்லையே? என்ற சந்தேகம் அருகில் சென்றதும் விலகியது. அது இறந்துபோயிருந்தது. எப்படி அதன் உடல் காற்றினால் விழாமல் காய்ந்த குச்சியின் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது இன்னமும் எனக்கு ஆச்சர்யம்தான். ஆய்வகங்களில் இறந்துபோன பூச்சிகளின் உடலை பதப்படுத்தி குண்டூசியால் குத்தி வைத்திருப்பார்களே, அது போல்தான் இருந்தது அந்தக் காட்சி. தோட்டத்துக்கு வரும் நியான் குக்கூ தேனீயை அருகில் படமெடுக்க முடியாமல் நான் படும் பாட்டைப் பார்த்து, இயற்கை எனக்காகவே செய்துவைத்திருக்கும் ஏற்பாடு போலும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் படமெடுத்த பிறகுதான் ஒன்று கவனித்தேன். இது நியான் குக்கூ தேனீ போலவே இருந்தாலும் வரிகளுக்குப் பதிலாக இதன் உடலில் புள்ளிகள் இருந்தன. நியான் குக்கூ தேனி போலவே இதுவும் நீலவரித் தேனீயின் கூட்டைக் குறிவைப்பவைதாம். குயில் தேனீக்களுள் இன்னொரு வகையான chequered cuckoo bee (Thyreus caeruleopunctatus) தான் இது.
இறந்துபோன நியான் குக்கூ தேனீ |
இறந்துபோன நியான் குக்கூ தேனீ |
குக்கூ தேனீக்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்பட்டாலும் நியான்
குக்கூ தேனீக்கள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளிலும் காடுகளிலும், புதர்வெளிகளிலும் வசிக்கின்றன. இதன் உயிரியல் பெயர் Thyreus nitidulus என்பதில் உள்ள nitidus என்பதற்கு லத்தீனில் 'பளபளப்பான' என்று பொருள். உண்மையில் பளபளப்பான நீலநிறத்தில் காணப்படும் இவற்றை, பறக்கும் நிலையிலும் சட்டென்று நம்மால் அடையாளம் காணமுடியும் என்பது இவற்றின் சிறப்பு.
&&&&&
(பிரதாபங்கள் தொடரும்)
இறந்து போன நிபான் குக்கூ தேனீ - அடடா... தேனி வகையிலும் ஒரு குயில் வகை! பிரமிப்பான தகவல்கள். நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteபடங்களும் விளக்கங்களும் அருமை...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteநீலவரித்தேனி,நிபான் குக்கூபற்றி அறிந்தோம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.
Deleteமனிதர்கள்தாம் மற்ற மனிதர்களை ஏமாற்றுவார்கள் என்று அறிவோம். தேனீக்களும் அவ்வாறுதானா? அது சரி, நீலவரித் தேனீ எப்போதுதான் உண்மையை அறிந்துகொள்ளும், மாற்று உத்திகளை அது கடைப்பிடிக்கும்? இப்படியேபோனால் அதன் இனமே அழிந்துவிடுமல்லவா?
ReplyDeleteஎனக்கும் இதே கேள்வி எழுந்தது ஐயா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நீலவரித்தேனீக்களுக்கு உண்மை எப்போது தெரியவரும் என்று தெரியவில்லை. பன்னெடுங்காலமாக இது நடைபெற்று வருவதால் ஏதேனும் ஒரு வழியில் இயற்கை ஒன்றுக்கொன்று சமன் செய்துவிடக்கூடும் என்று நினைக்கிறேன்.
Delete\\எனக்கும் இதே கேள்வி எழுந்தது ஐயா\\ ஐயாவுக்கு தந்திருக்கும் பதில்தான் கிரேஸ். இயற்கை எவ்வழியிலாவது தன்னைத்தானே சமன் செய்துகொள்ளும் என்றுதான் தோன்றுகிறது.
Deleteமிகவும் வியப்பாக இருந்தது தகவல் .நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பனித்துளி சங்கர்.
Deleteநீலவரித் தேனி, நியான் குக்கூத் தேனி அறிந்துகொண்டேன்.. தேனிவகையிலும் ஒரு குக்கூ! வியப்பாக இருக்கிறது.
ReplyDeleteஇரண்டும் பார்க்க அழகு என்று நினைக்கிறேன். இறந்து நிற்கும் தேனி..வித்தியாசம்.
எனக்கும் தேனீக்களை ஊன்றி கவனிக்கும் வரையிலும் அவை குறித்து எதுவும் தெரியவில்லை. தேடல் பல ஆச்சர்யங்களைத் தந்துகொண்டே இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.
Deleteமனித இனத்தில் மட்டும்தான் வகைகளில்லை போலும் !
ReplyDeleteமனித இனத்தில் இப்படி நேரடியாக இல்லை என்றாலும் இந்த குயில் தேனீயைப் போல தங்கள் ஆதாயத்துக்காக அடுத்தவரை ஏமாற்றிப் பிழைப்பவர்களும் இருக்கிறார்களே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteநல்லதோர் ஆய்வுப் பதிவு
ReplyDeleteதொடருங்கள்
நன்றி ஐயா.
Delete