4 September 2019

ஞிமிறென இன்புறு


தோட்டத்துப் பிரதாபம் - 6

துளசிப்பூவில் ஐரோப்பியத் தேனீ

ஞிமிறென இன்புறு. இதன் முழுப்பொருளையும் எங்கள் தோட்டத்துத் தேனீக்களைப் பார்த்துதான் அறிந்துகொண்டேன். அன்றலர்ந்த மலர்களில் அமர்ந்தும் பறந்தும் கிடந்தும் சுழன்றும் என்னவொரு ஆனந்தத் தாண்டவம். தோட்டம் உயிர்பெற்று வந்துவிட்டதைப் போன்ற தோற்றம் காட்டி கிறுகிறுக்கச் செய்யும் ரீங்காரம். குளவிகள் அளவுக்கு இவற்றிடம் ஏனோ எனக்கு அவ்வளவு பயம் இல்லை. வெகு அருகில் சென்று அவற்றுக்குத் தொல்லை தரா எச்சரிக்கையோடு மேக்ரோ ஒளிப்படம் கூட எடுக்கிறேன். தானுண்டு தன் வேலையுண்டு என்று அவை பாட்டுக்கு இயங்குகின்றனவே தவிர, என்னைத் திரும்பியும் பார்ப்பதில்லை. 

தேனீக்கள் என்று பொத்தாம்பொதுவாகத்தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். பிறகுதான் அவற்றுள் பல வகை எங்கள் தோட்டத்துக்கு வருகை தருகின்றன என்ற உண்மை உணர்ந்தேன்.  

கத்தரிப்பூவில் நீலவரித்தேனீ

தேனீக்கள் பற்றி சொல்வதற்கு முன் ஒன்று சொல்லவேண்டும். நான் முன்பே சொன்னது போல தோட்டக்கலையில் எனக்கு ஆனா ஆவன்னா கூட தெரியாது. தோட்டம் வளர்ப்பது என்று முடிவு செய்தபின் அதுவும் காய்கறித் தோட்டம் என்றான பின், அது குறித்த தேடல் துவங்கியது. எனக்கு எதிலாவது ஆர்வம் என்று கணவருக்குத் தப்பித்தவறி தெரிந்துவிட்டால் போதும், உடனே அது தொடர்பான புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கத் தொடங்கிவிடுவார். அப்படிக் கிடைத்த புத்தகங்களிலும் இணையதளங்களிலும் பார்த்துப் பார்த்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன். சிலவற்றை செயல்படுத்தினேன்.

முக்கியமாய் மகரந்தச்சேர்க்கை. அம்மா, அம்மாச்சி, மாமி என்று எல்லாரும்தான் தோட்டம் வளர்த்தாங்க. என்ன செய்வாங்க? விதைகளை நடுவாங்க, பதியன் போடுவாங்க, கொடியாயிருந்தா பந்தல் கட்டுவாங்க, தண்ணீ ஊத்துவாங்க, பலனை அனுபவிப்பாங்க. பூச்சி வந்திடுச்சா, வேப்பெண்ணெய், உப்பு அல்லது சாணித்தண்ணியைக் கரைச்சுத் தெளிப்பாங்க, அப்படியும் போகலைன்னா அந்தச் செடியை அப்படியே பிடுங்கிப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பாங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரிந்து செய்தாங்க. தோட்டத்துக்கு தேனீ வருதா இல்லையா, வந்தாலும் மகரந்தச் சேர்க்கை நடக்குதா இல்லையா, வரலைன்னா அதைத் தோட்டத்துக்கு வரவைக்கிறதுக்கு என்ன பண்ணனும் என்றெல்லாம் கவலைப்பட்ட மாதிரியோ, யோசித்தமாதிரியோ கூட தெரியலை. ஆனால், இன்றைக்கு?

மகரந்தச்சேர்க்கை என்கிற விஷயமே நாமாக செயற்கைமுறையில் (hand pollination method) செய்தால்தான் உண்டு என்பது மாதிரியான போதனைகள், செய்முறைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்கள். பறங்கிக்காய் விஷயத்தில் நானும் அப்படியான மாயைக்குள் சிக்கிய கதையை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தற்சமயம் என் தோட்டத்தில் ஒலிக்கும் தேனீக்களின் ரீங்காரம் என் முந்தைய பேதைமையை எள்ளி நகைப்பதுபோலவே தோன்றுகிறது. அயல்மகரந்தச்சேர்க்கையை நம்பியிருக்கும் பூக்களை மட்டுமல்லாது, தன்மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் கத்திரி, தக்காளி போன்றவற்றையும் ஒரு வேலையும் செய்யவிடாமல் சோம்பேறியாக்கிவிட்டன என் தோட்டத்துத் தேனீக்கள்.

கத்தரி, சூரியகாந்தி, துளசி. பறங்கி, தக்காளி,
வெள்ளரிப் பூக்களில்
ஐரோப்பியத் தேனீக்கள் (European honey bees)

முதலில் ஐரோப்பியத் தேனீக்கள்தான் அதிகமாக வந்தன. பிறகு பார்த்தால் ஆஸ்திரேலியத் தேனீக்களும் வர ஆரம்பித்தன. ஐரோப்பியத் தேனீக்கள் என்று நான் குறிப்பிடுவது நாம் தேனீ என்று பொதுவாகக் குறிப்பிடும் தேனீக்களைத்தான். 1822-ல்தான் இவை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காரணம்? வேறென்ன, தேன்தான். ஆரம்பகால ஐரோப்பியக் குடியேறிகளால் தேன் இல்லாமல் வாழ முடியவில்லை. அது மட்டுமல்ல, அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள், பேரிக்காய் உள்ளிட்ட பழமரங்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற இத்தேனீக்கள் தேவைப்பட்டன. ஆஸ்திரேலியத் தேனீக்கள் தேன் சேகரிக்காதவை என்பதோடு புதிதாய் அறிமுகமான தாவரவினங்களுக்கு அவை பழகவில்லை என்பதும் காரணம்.
  
ஆஸ்திரேலியத் தேனீக்களில் ராணி, வேலைக்காரி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே இல்லத்தலைவிகள்தான். ஒவ்வொன்றும் தனித்து வாழ்பவை. தோதான இடம் பார்த்து (பெரும்பாலும் செங்கல் துவாரங்கள், மரத்துளைகள், களிமண் தரையிடுக்குகள் போன்றவை) முட்டையிடுவதும் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்கான உணவைத் தேடி சேகரித்து வைப்பதும் பெண் தேனீக்களின் வேலை. இனப்பெருக்கம் முடிந்தவுடன் ஆண் தேனீக்களும் முட்டையிட்டு முடிந்தவுடன் பெண் தேனீக்களும் இறந்துவிடுகின்றன.

சூரியகாந்தி, தக்காளி, கத்தரி, வெள்ளரிப் பூக்களில்
நீலவரித்தேனீக்கள் (Blue banded bees)

நீலவரித்தேனீ (Blue banded bee) – காரணப்பெயர் என்பது பார்த்தாலே தெரியும். கருப்பும், நீலமும் வரிவரியாய் இதன் உடலில் காணப்படும். நீலமலர்கள்தான் பெருவிருப்பம் இத்தேனீக்களுக்கு. நீலமலர்கள் கிடைக்காத பட்சத்தில் பிற வண்ண மலர்களிடம் தேனெடுக்கும். இரவு நேரங்களில் ஆண் நீலவரித்தேனீக்கள் பல ஒன்றுகூடி மரக்கிளைகளிலோ, கம்பிகளிலோ தொங்கியபடி உறங்கும். பெண் தேனீக்கள் தனித்தனியாக இண்டு இடுக்குகளில் உறங்கும். நீலவரித்தேனீக்கள் buzz pollination எனப்படும் அதிர்வு மகரந்தச்சேர்க்கை முறையில் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகின்றன

தன்மகரந்தச்சேர்க்கை செய்யக்கூடிய சில பூக்களுக்கு காற்று லேசாக வீசினால் கூட போதும். சட்டென்று மகரந்தம் விடுபட்டு மகரந்தச்சேர்க்கை எளிதாய் நடைபெற்றுவிடும். ஆனால் சில பூக்களில் அவ்வளவு எளிதில் மகரந்தம் விடுபடுவதில்லை. இந்த தேனீக்கள் பூவைக் கால்களால் பற்றியபடி பலத்த அதிர்வுகளை உண்டாக்கி மகரந்தத்தாதுவை விடுவிக்கச் செய்கின்றன. ஆஸ்திரேலியாவின் உணவுப்பயிர் விளைச்சலில் சுமார் 30% நீலவரித்தேனீக்கள் மூலமாகவே நடைபெறுகிறது என்பதிலிருந்து இத்தேனீக்களின் முக்கியத்துவம் விளங்கும். 

வெட்டுப்பட்ட இலைகள்

அடுத்து இலைவெட்டித்தேனீ. தற்செயலாகத்தான் கவனித்தேன், மிளகாய்ச்செடியின் இலைகள் சிலவற்றின் ஓரத்தில் நகத்தால் கிள்ளி எடுத்தது போல அழகாய் அரைவட்ட வடிவ ஓட்டைகள். இப்படி அழகாய் அளவாய் வெட்டப்பட்டு இருந்தால் அது நிச்சயம் இலைவெட்டித் தேனீயின் வேலையாகத்தான் இருக்கும் என்று புரிந்தது. இன்னும் கையும் களவுமாகப் (படம்) பிடிக்கவில்லை என்றாலும் கானுயிர் ஆய்வாளர் திரு..ஜெகநாதன் அவர்களின் உயிரி தளத்தில் வாசித்திருந்த இலைவெட்டித் தேனீக்கள் குறித்த பதிவு உறுதிப்படுத்தியது.

என்னுடைய பால்யத்தில் இவற்றின் இலைக்கூடுகளை நிறையப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கதவு ஜன்னல் இவற்றின் நாதங்கித் துவாரங்களை அடைத்தபடி இருக்கும். வெளியில் அவசரமாக கிளம்பும் சமயம், தாழ் போடமுடியாமல் நாதங்கித் துவாரத்தை ஏதோ தடுக்கும். என்னடா என்று பார்த்தால் இந்த இலைக்கூடுகள் இருக்கும். நானும் தம்பியும் குச்சியால் தோண்டி வெளியில் போடுவோம். குழிவான தொன்னைகளை ஒன்றுக்குள் ஒன்றாய் சொருகிவைத்தது போல காய்ந்துபோன இலைகள் அடுக்கடுக்காய் சொருகியிருக்கும். இலைவெட்டித் தேனீக்கள் குறித்து அறியும் வரை அதுவும் ஒரு வகைக் குளவிக்கூடு என்றே நினைத்திருந்தேன்.


 இணையப்படம்

இலைவெட்டித் தேனீக்கள் இலைகளை வெட்டி எடுத்துப் போய் துவாரங்களில் சொருகி உள்ளே ஒரு முட்டையிடும்
. அதிலிருந்து வெளிவரும் லார்வாவுக்காக தேனும் மகரந்தமும் சேர்த்துவைத்து பிறிதொரு இலைத் துண்டத்தால் மூடும். (குளவிகளைப் போல இவை புழுக்களை உணவாக வைப்பதில்லை) அதன் மேலே மற்றொரு முட்டையிட்டு அதற்கும் உணவு வைத்து மூடும். இப்படி இடத்துக்குத் தகுந்தாற்போல எட்டு முதல் பன்னிரண்டு முட்டைகள் வரை இடும். முடிவில் பல அடுக்கு இலைகளை வைத்து பசை அல்லது களிமண் உதவியோடு நன்றாக மூடிவிடும். முட்டைகளிலிருந்து பொரிந்துவரும் லார்வாக்கள் உள்ளே இருக்கும் உணவைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுவாகி பூக்கள் மலரும் வசந்தகாலத்தில் கூட்டையுடைத்து வெளியே வந்து வாழ்வைத் துவக்கும்.


இலைவெட்டித் தேனீக்கள் (Leaf cutter bees)

ஆஸ்திரேலியாவின் இலைவெட்டித்தேனீக்கள் பெரும்பாலும் தரைக்குள் சிறிய துவாரங்களில் கூடு கட்டி முட்டையிடுகின்றன. மற்ற ஆஸ்திரேலியத் தேனீக்களைப் போலவே இவையும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. நீலவரித்தேனீக்கள் போலவே இவற்றிலும் ஆண் தேனீக்கள் இனப்பெருக்கம் முடிந்தவுடனும் பெண் தேனீக்கள் முட்டையிட்டு முடிந்தவுடனும் மடிந்துவிடுகின்றன.

இலைவெட்டித் தேனீக்கள் பொதுவாக யாரையும் கொட்டுவதில்லை. கையால் பிடித்தால் அல்லது தவறுதலாக மிதித்துவிட்டால் கொட்டும். ஆனால் அது மற்ற தேனீக்கடி, குளவிக்கடி போல வலி அவ்வளவு கடுமையாக இருக்காதாம். அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

Bee hotel -இணையப்படம்

ஆஸ்திரேலியத் தேனீக்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும், வரவை அதிகரிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை வீடுகளின் வெளிப்புறத்தில் செங்கல் இடுக்குகள், மண் தரை, மூங்கில் குழாய் துவாரங்கள் போன்ற இடங்களை முட்டையிட ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்கின்றன. அவ்வாறான இடங்கள் இல்லாத பட்சத்தில் bee hotel எனப்படும் வெவ்வேறு அளவிலான துளைகளோடு கூடிய மூங்கில் குழாய்கள் கொண்ட அமைப்பை தோட்டங்களில் பொருத்தி வசதி செய்து கொடுக்கலாம், திண்ணையும் இரவாணமும் இல்லாத வீடுகளைக் கட்டி சிட்டுக்குருவிகளைக் கண்ணாடி ஜன்னலில் மோதவிட்டு சாகடித்துக் கொண்டிருந்த நாம், தற்போது விழிப்புணர்வு பெற்று அட்டைப் பெட்டிகளைக் கட்டித் தொங்கவிட்டு அவற்றுக்குக் கூடமைக்கும் வசதி செய்து தருகிறோமே அது போல. தனித்து வாழும் தன்மையுள்ள ஆஸ்திரேலியத் தேனீக்கள் பலவற்றுக்கும் கூடுகட்டி இனம் பெருக்க இந்த bee hotel பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

(பிரதாபங்கள் தொடரும்)

12 comments:

 1. தோட்டக்கலை தொடங்கி பல விஷயங்களில் உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது... பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 2. அனைத்து செய்திகளும் வியப்பும் மகிழ்ச்சியும் தருகிறது.
  எவ்வளவு விஷ்யங்கள்!bee hotel பார்க்க அழகு.
  இலை கூடு அதைவிடழகு. சிறு பூச்சிகளுக்கும் இறைவன் எத்தனை அறிவை கொடுத்து இருக்கிறார் என்று வியப்பு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

   Delete
 3. நானும் இங்கு வந்த புதிதில் பயந்தவைதான் ஐரோப்பியதேனீகளுக்கு.. ஊரில் பட்ட அனுபவம். ஆனாலும் ஒரு கொட்டு வாங்கியாச்சு. இங்கு சொல்வாங்க, அவைகளை அப்படியே விட்டுவிடவேண்டுமென..தொந்தர்வு செய்தால் திருப்பி தாக்கும்.இது இயற்கைதானே.
  இம்முறை இவர்கள் இப்பொழுது அதிகமா வந்திருக்காங்க .இவர்களின் பாதுகாப்புக்கு இங்கு அரசாங்கம் பல திட்டங்களை கொண்டுவந்திருக்கு.
  உங்களின் தேடல் ஆச்சரியமாக இருக்கு கீதா.. எத்தனை விடயங்கள் தேனீகள் பற்றி. ஆரம்ப பந்தியில் சொன்ன மாதிரி விதையை நட்டமா பலனை அனுபவித்தமா என இருந்தார்கள் ஊரில்.. இந்த ஆராய்ச்சி இருந்திருக்குமா தெரியல.
  ஆமாம் கீதா இந்த இலைக்கூடுகளை நானும் பார்த்திருக்கேன் எங்க வீட்டில். இப்ப உங்க பதிவின் மூலமே அதன் விளக்கம் கிடைத்தது. ஆச்சரியமா இருக்கு. எவ்வளவு அற்புதங்கள் நிறைந்த பூமி.
  அழகான படங்கள், ஆச்சரியமான தேடல். தேடல்கள் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி ப்ரியா. என்னுடைய தேடல்கள் அதற்குரிய பலனைத் தருகின்றன என்றறிந்து மகிழ்ச்சி.

   Delete
 4. அழகு தமிழில் தேனீக்களைக் குறித்து விரிவாக, மிக நுட்பமான தகவல்களைச் சுவாரசியம் குறையாமல் பதிவு செய்துள்ளீர்கள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 5. இலைதேனீ சுவாரசியம். தொடரட்டும் பிரதாபங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

   Delete
 6. தேனீக்களைப் பற்றி ஏராளத் தகவல்களை அறிந்தேன் ; நன்றி .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.