23 May 2023

ஒரு தேயிலை மரத்தின் புலம்பல்


ஏதேனுமொரு பருவத்தில்

நானும் மலர்வேன் என்னும் நம்பிக்கையில்

கடந்துவிட்டன நூற்றாண்டுக் காலங்கள்!

வெள்ளையா மஞ்சளா சிவப்பா நீலமா

என் மலர்களின் நிறம் எனக்கு மறந்துவிட்டது

மலர்வேன் என்பதைக்கூட மறந்துவிட்டேன்

 

கதிரையும் காலடி நீரையும் என்ன செய்வது

துளிர்த்துக்கொண்டே இருக்கிறேன்

கொய்துகொண்டே இருக்கிறார்கள்

தேயிலைத் தோட்டத்துத் தேவதைகள்!

பாவம் அத்தேவதைகள்!

என்ன சாபம் பெற்று வந்தார்களோ?

சகதியூறி வெடிப்புற்ற ஈரப்பாதங்களோடு

முதுகெலும்பு வளைய மூங்கிற்கூடை சுமந்து

கொசுவுக்கும் அட்டைக்கும் கொடுத்தது போக

எஞ்சிய குருதியோட்டத்தோடு

வெடவெடக்கும் தணுப்பில்

வேக வித்தை காட்டுகிறார்கள் விரல்களால்.

 

வெடுக் வெடுக் வெடுக்கென

பிடுங்கப்படும் என் உச்சிமயிர்களை

உரூபாய்களாக மாற்றுகிறது உலகச்சந்தை

 

எல்லாம் என் தவறுதான்

பூத்துக் காய்த்துதான்

விதை தருவேன் என்று வீம்பு பிடிக்காமல்

அங்குலத் தண்டிலேயே

அடுத்த சந்ததியை உருவாக்கிவிடுகிறேனே

வனமழிக்கிறேன் என வீண்பழி வேறு.

நானென்ன செய்ய?

என் நூற்றாண்டுக்கால வாழ்வும்

சிறு கோப்பைக்குள் அல்லவா சுழன்றுகொண்டிருக்கிறது!

இதில் மலரும் ஆசை ஒன்றுதான் குறைச்சல்!

 

&&&

 


ஆண்டுதோறும் மே மாதம் 21-ம் நாள் ‘சர்வதேச தேநீர் தினம்’ ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வருடத் தேநீர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறாயே, உனக்கு தேநீர் பிடிக்காதா என்று கேட்கத் தோன்றும். நானும் தேநீர்ப் பிரியைதான். என்னதான் தேநீர்ப்பிரியையாக இருந்தாலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் பாடு எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையை மறுக்க முடியாது அல்லவா?

ஆனால் திரைப்படங்களில் காட்டப்படுவது என்ன? தேயிலைத் தோட்டம் என்றாலே மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பிய இடம் போலவும், காதலனும் காதலியும் தேநீர்த் தோட்டத்தில் ஓடி ஓடி காதல் செய்ய, பின்னணியில் முக்காடிட்டபடி தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் லா..லா...லல்லலா... என கோரஸ் பாடியபடி தேயிலை பறிப்பது போலவும் கூடவே ஆடுவது போலவுமானக் காட்சியமைப்புகள்! தேயிலைத் தோட்டம் நீ... தேவதையாட்டம் என வர்ணிப்பு வேறு.

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் சிரமத்தை, முதலாளிகளால் சுரண்டப்படும் உழைப்பை, அவர்களது துயரார்ந்த வாழ்வுநிலையை ஓரளவு நியாயமாகக் காட்டியத் திரைப்படம் ‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘பரதேசி’ திரைப்படம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவின் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் பட்ட துன்பங்களை நேரில் பார்த்திருந்த மருத்துவர் பால் ஹாரிஸ் டேனியல் ‘Red Tea’ பெயரில் எழுதிய புதினத்தை ‘எரியும் பனிக்காடு’ என்ற பெயரில் இரா.முருகவேள் தமிழாக்கம் செய்துள்ளார்.

நாம் குடிக்கும் கோப்பைத் தேநீருக்குப் பின்னால் இருக்கும் உழைப்பாளிகள் அனைவரின் உழைப்பையும் மதிப்பையும் அங்கீகரிக்கும் முகமாக தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் தேயிலையின் கலாச்சாரத் தொன்மை மற்றும் நன்மைகளை எடுத்துரைக்கவும் தேயிலை நிறுவனங்களின் வளர்ச்சியைப் பறைசாற்றவும் தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது.

வாங்க, நாமும் தேநீர் பருகுவோம். உற்சாகமாய்ப் பருகும் ஒவ்வொரு மிடறுக்குப் பின்னாலும் இருக்கும் தொழிலாளிகளின் உழைப்பை நன்றியோடு நினைவுகூர்வோம். 

&&&&

தேயிலைப் பூ எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள விரும்புவோர்க்காக... இதோ தேயிலை மரத்தின் பூக்கள்!




8 comments:

  1. கவிதை மிகவும் நன்று. அந்தத் தொழிலாளிகளின் துயரம் சொல்லவொண்ணாதது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை வெங்கட். வாழ்க்கை முழுவதும் துயரம்தான்.

      Delete
  2. உண்மை நிலவரம்... வருத்தம் அளிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. முன்னேறிய இந்தக் காலத்திலும் கூட தோட்டத் தொழிலாளிகளுக்குப் போதிய வசதிகள் இல்லாதிருப்பது இன்னமும் கூடுதல் வருத்தம்.

      Delete
  3. தேயிலை பற்றிய உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது கீதா. இன்றைக்கும் பல பெண்கள் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்....தேயிலையின் பூவை இன்று தான் பார்க்கிறேன். தேடிக் கொணர்ந்து காட்டியமைக்கு மிக்க நன்றி கீதா. அபூர்வமான மலர். எப்படியோ கொய்யும் மனிதக் கண்களுக்குப் புலப்படாமல் பூத்து விட்டது. வலைத் தளத்திலாவது அது வாடாமல் வாழட்டும்!

    ReplyDelete
    Replies
    1. \\இன்றைக்கும் பல பெண்கள் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்\\ உண்மை யசோ. கோப்பைக்குள் குடியிருப்பாக சுருங்கிப்போன உலகம் அவர்களுடையது.

      Delete
  4. https://puththakam.wordpress.com/2011/09/08/76-tea-the-drink-that-changed-the-world/

    ReplyDelete
    Replies
    1. தேயிலை மற்றும் தேநீரின் வரலாறு குறித்த பல புதிய மற்றும் சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.