தோட்டத்துப் பிரதாபம் - 26
அனைவருக்கும் வணக்கம். என்னுடைய தோட்டத்துப் பிரதாபத்தைப் பற்றி எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது. இந்த முறை அவகாடோ (Avocado) என்கிற வெண்ணெய்ப்பழ மரக்கன்றின் பிரதாபத்தைப் பற்றிதான் சொல்லப் போகிறேன். அவகாடோவின் தாவரவியல் பெயர் Persea americana. தமிழில் ஆனைக்கொய்யா, வெண்ணெய்ப்பழம், வெண்ணெய்ப் பேரி, முதலைப் பேரி என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.
வெண்ணெய்ப் பழம் என்ற பெயருக்கு
ஏற்றாற்போல் பழத்தின் சதைப்பகுதி வெண்ணெய் மாதிரிதான் இருக்கும். வெண்ணெய் போலவே இதிலும்
கொலஸ்ட்ரால் உண்டு. ஆனால் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால். பேலியோ (paleo diet) டயட்டில் இடம்பெறும்
ஒரே பழம் இதுமட்டும்தான் என்பதிலிருந்து இதன் நன்மையை அறிய முடியும். இந்தப் பழத்தில்
ஏராளமான சத்துகள் இருப்பதால் இது superfruit
என்ற பெயரையும் பெற்றுள்ளது.
அவகாடோ கொஞ்சம் விலை கூடுதலான பழமும் கூட. ஆனால் நிறைய பேருக்கு இதன் ருசி பிடிக்காது. ‘இதெல்லாம் ஒரு ருசியா? மண்ணு மாதிரி இருக்கு’ என்றெல்லாம் எங்கள் குடும்பத்தாரிடமிருந்து கமெண்ட் வாங்கிய பழம் இது. அப்படி இருக்கும்போது, இதை எங்கள் வீட்டில் என்னைத் தவிர வேறு யாரும் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லத் தேவையில்லை. நானோ அவகாடோவின் பரம ரசிகை. வெளியில் சாப்பிட நேர்ந்தால் பெரும்பாலும் அவகாடோ டோஸ்ட் தான் சாப்பிடுவேன். இது உடலுக்கு நல்லது என்பதால் மட்டுமல்ல, இதன் ருசி எனக்கு மிகவும் பிடித்துப் போனதாலும் விரும்பி உண்பேன்.
கெட்ட கொழுப்பைக் குறைக்கும், நல்ல கொழுப்பைக் கூட்டும், இதய நோய்களிலிருந்து காப்பாற்றும், இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் என அவகாடோ பழத்தின் பயன்கள் பட்டியலிடப்படுகின்றன. இதன் ஏராளமான பயன்கள் காரணமாக, தற்போது உலகச்சந்தையில் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.
அவகாடோவின் கொட்டை உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சற்றே பெரிய கோலிகுண்டு மாதிரி அழகாக, உருண்டையாக, கனமாக இருக்கும். இதற்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
அவகாடோவை அப்படியே பழமாகவும்
சாப்பிடலாம். மில்க் ஷேக், ஸ்மூத்தி, சாலட், ப்ரட் டோஸ்ட், ஆம்லெட், சுஷி
போன்றவற்றில் பயன்படுத்தியும் உட்கொள்ளலாம். இதைவிடவும் சுவாரசியமான விஷயம், இது
சரும அழகுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். அவகாடோ பழத்திலிருந்து
அவகாடோ எண்ணெய் எடுக்கப்படுகிறது. பொதுவாக கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி என
வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் அவோகாடோவில் அப்படியே
தலைகீழ். கொட்டையை விட்டுவிட்டு பழத்தின் சதைப்பற்றான பகுதியைக் காயவைத்து எண்ணெய்
எடுக்கப்படுகிறது. இந்த அவகாடோ எண்ணெய் சரும அழகுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும்
பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
அவகாடோ பழத்தை நறுக்கும்போதெல்லாம் எனக்கு இரண்டு வலையுலகத் தோழிகளின் நினைவு தவறாமல் வந்துவிடும். ஒருவர் 'காகிதப் பூக்கள்' வலைப்பூ தோழி ஏஞ்சலின். அவகாடோவைப் பயன்படுத்திய பிறகு கிண்ணம் போன்ற அதன் மேற்தோலை மறுசுழற்சியாக விதை முளைப்புக்குப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதிலிருந்து நானும் அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். மற்றொருவர் 'இது இமாவின் உலகம்' வலைப்பூ தோழி இமா கிறிஸ். அவர் அவகாடோ கொட்டையை முளைவிட வைக்கும் உத்தியைப் பகிர்ந்திருந்தார். அவகாடோ கொட்டையில் ‘ஃ’ போல மூன்று இடங்களில் பல் குத்தும் குச்சிகளைச் சொருகி அரை டம்ளர் தண்ணீரில் பாதியளவு மட்டும் மூழ்கும்படி வைத்தால் ஒரு சில நாட்களில் வேர் விட்டு முளைவிடும். பிறகு அதை எடுத்து தோட்டத்தில் வைக்கலாம் என்று சொல்லி இருந்தார். நான் ஒரு தடவை அதைப் போல் செய்ய முயற்சி செய்தேன். பலனில்லை. ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்பது போல, ‘சீச்சீ, அவகாடோ மரம் மாமரத்தைப் போல ஒரு பெரிய மரம், விதையிலிருந்து வளர்ந்து காய்க்க வேண்டும் என்றால் குறைந்தது பத்து வருடமாவது ஆகும், யாரால் அதுவரை பராமரித்துக்கொண்டு, பழத்துக்காகக் காத்திருக்க முடியும்? அதனால் முளைவிடாதது நல்லதுதான்’ என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.
மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் குட்டி ஆரஞ்சு மரத்தின்
கீழ் ஒரு அடி உயரத்துக்கு பெரிய இலைகளோடு ஒரு செடியைப் பார்த்தேன். இது என்ன செடி,
புதிதாக இருக்கிறதே என்று பார்த்தால் மண்ணுக்கு மேலாகவே அவகாடோ கொட்டை வெடித்து முளைவிட்டு வேரும்
விட்டிருந்தது. பார்த்தவுடன் எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. எப்படி இது இவ்வளவு
நாட்கள் என் கண்ணில் படாமல் போனது? வாரத்துக்கு இரண்டு என்ற கணக்கில் இவ்வளவு
காலமாக அவகாடோவின் கொட்டைகளையும் தோலையும் தோட்டத்திற்கு உரமாகப் போட்டுவருகிறேன்.
ஆனால் ஒரு தடவை கூட எதுவும் முளைத்ததில்லை இது எப்படி சாத்தியம் என்று ஒரே
ஆச்சரியம். ஒரு அடி உயரத்துக்கு செடி இருந்ததால் அதை அப்படியே எடுத்து ஒரு
தொட்டியில் வைத்து நட்டு விட்டேன். அதற்கு மேல் அதை என்ன செய்வது என்று
தெரியவில்லை.
பெரிய
மரமானால்தானே பிரச்சினை! தொட்டியில் இருப்பதை அப்படியே போன்சாய் போல வளர்க்கலாமா
என்று ஒரு யோசனை! ஏனென்றால் இருக்கும் குறைந்த இடத்தில் ஏற்கனவே நிறைய மரங்களை
வைத்தாகிவிட்டது. மா, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு, வாழை, மாதுளை என்று
வகைக்கு ஒன்று வைத்திருக்கிறேன். இதில் அவகாடோ மரத்துக்கு எங்கே இடம்?
போன்சாய் வளர்ப்பதிலும் ஒரு பரிசோதனை முயற்சியாக இது இருக்கட்டுமே என்று நினைத்தேன். ஆனால் இந்த அவோகாடோ கன்று என் ஆசைக்குக் கட்டுப்படவில்லை. வளர்ச்சி என்றால் அசுர வளர்ச்சி. மாந்தளிரைப் போல செஞ்சாந்து நிறத்தில் துளிர் விட்டு மளமளவென்று இலைவிட்டு கிளை பரப்பி வளர ஆரம்பித்துவிட்டது. வெட்டிவிட வெட்டிவிடக் கூடுதல் கிளை வெடித்து நாலா பக்கமும் பரவி செழிப்பாக வளர ஆரம்பித்துவிட்டது.
அவகாடோவின் இலைகள் கூட மருத்துவக் குணம் கொண்டவை என்று அறிந்தபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பழத்தை விடவும் இலையில்தான் கூடுதல் antioxidants இருக்கின்றனவாம். நீரிழிவு, சிறுநீரகக் கல், இரத்த அழுத்தம், சீரணக் கோளாறு, தலைவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு அவகாடோ இலை டீ நல்ல தீர்வு என்று ஆய்வுகள் மூலம் அறிந்த பிறகு நானும் அடிக்கடி அவகாடோ இலை டீ குடிக்க ஆரம்பித்திருக்கிறேன். டீ என்றாலே டீ அல்ல, கசாயம்தான். ஆனால் ருசியான கசாயம். தயாரிப்பதொன்றும் சிரமம் இல்லை. ஒரு டம்ளர் நீரில் இரண்டு அவகாடோ இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சாறு இறங்கியதும் இலைகளை எடுத்துப் போட்டுவிட்டுக் குடிக்கவேண்டியதுதான். அப்புறமென்ன? அடிக்கடி அவகாடோ டீ குடிக்க ஆரம்பித்துவிட்டேன். கசாயம் என்றாலும் கசக்கவில்லை. அவகாடோ வாசத்தோடு நன்றாகவே இருக்கிறது.
ஒரு நாள் ஒரு புதிய வண்ணத்துப்பூச்சி அவகாடோ இலைகளை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பூக்கவே இல்லையே, அதற்குள் இங்கே வண்ணத்துப்பூச்சிக்கு என்ன வேலை என்று பார்த்தால். அந்த அழகிய நீல முக்கோண வண்ணத்துப்பூச்சி அவகாடோவின் கொழுந்து இலைகளில் ஆங்காங்கே குட்டிக் குட்டியாக முட்டையிட்டுக் கொண்டிருந்தது. இத்தனை வருடங்களாக நான் பார்த்திராத ஒரு வண்ணத்துப்பூச்சி இனம், அவகாடோ இலைகளில் முட்டையிடக்கூடிய ஒரு வண்ணத்துப்பூச்சி இனம், இந்தக் குட்டி மரத்தைத் தேடிவந்து முட்டையிட்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்தது.
தொட்டியை வீட்டின் புறச்சுவருக்கு சற்று நெருக்கமாக வைத்திருந்தேன். அதனால் சற்று நகர்த்தி வைக்கலாம் என்று நகர்த்தினால் தொட்டியை அங்குலமும் அசைக்க முடியவில்லை. என்னவென்று பார்த்தால், அவகாடோ கன்று, வளரும் வேகத்தில் தொட்டியின் அடியிலிருக்கும் ஐந்து துவாரங்களையும் துளைத்துக்கொண்டு ஐந்து பக்கமும் ஆணிவேர்களை மண்ணுக்குள் ஆழமாக இறக்கியிருப்பது புரிந்தது. தொட்டியை அசைக்கவே முடியவில்லை. பிறகு எங்கே நகர்த்துவது? சரி அப்படியே வளரட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் அது பெரிய மரமாகி வீட்டின் அஸ்திவாரத்தை பாதிக்கும் என்று வீட்டுக்கு வருவோர் எல்லாரும் சொல்லும்போது அதை எப்படி அப்படியே விடுவது என்று மனதுக்குள் ஒரே சஞ்சலம்.
தோட்டவேலை செய்யும் ஒருவரிடம் அவகாடோ
மரத்தை இடம் மாற்றி வைப்பது குறித்துக் கேட்டேன். வயது கேட்டபோது மூன்று முடிந்து
நான்காவது என்றேன். நிச்சயமாக நகர்த்தி வைப்பதில் பிரச்சனை இருக்காது. நன்கு ஆழமாகத்
தோண்டி எடுத்து வைத்து விடலாம். ஆனால் மறுபடியும் அது வேர் விட்டு பிழைத்துக்
கொள்ளுமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது என்றார். எனக்கு மிகவும் ஆற்றாமையாகப்
போய்விட்டது.
மூன்றரை வருடங்களுக்கும் மேலாக பார்த்து
பார்த்து வளர்த்த மரம். எனக்கு இந்த மரத்திலிருந்து அவகாடோ பழங்களைப் பறித்துத்
தின்ன வேண்டும் என்ற பேராசை எல்லாம் இல்லை. என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல் தானாகவே
வளர்ந்த அது அழிந்துபோவதில் எனக்கு உடன்பாடில்லை.
எத்தனையோ விதைகள் மண்ணோடு மண்ணாய்
மக்கிப் போயிருக்கும் போது இந்த ஒரு விதை மட்டும் வளர்வதற்கான வாய்ப்பை
எடுத்துக்கொண்டு வளர்ந்து இருக்கிறது. அதுவும் மண்ணுக்கு வெளியிலேயே! ஒரு அடி உயரம் வளரும் வரை என் கண்ணில்
படாமல் இருந்திருக்கிறது. தினமும் நான்தான் எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர்
ஊற்றுகிறேன். ஆரஞ்சு மரத்தடியில் இருந்த அது மட்டும் என் கண்ணில் படவில்லையே. அப்படி
தன்னை பெரும் முயற்சிக்குப் பிறகு வளர்த்தெடுத்த அந்த விதையை, அந்த விதை உருவாக்கிய
கன்றை நான் அலட்சியம் செய்வது முறையல்ல என்று தோன்றியது. எப்படியாவது இந்த மரத்தை வாழ
வைத்துவிடவேண்டும் என்று நினைத்தேன்.
தோட்டப் பணியாளர் மரக்கன்றின் மறுவாழ்வுக்கு உறுதியளிக்காத நிலையில், மரக்கன்றை அடியோடு வெட்டிவிடுமாறு கணவர் அறிவுறுத்த ஆரம்பித்துவிட்டார். நான் ஒரு முடிவுக்கு வந்தேன். மரத்திடம், “இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கிறாய். இன்னும் ஒரு கஷ்டத்தைத் தரப்போகிறேன். எப்படியாவது அதிலிருந்தும் மீண்டு வா!” என்று சொல்லிவிட்டு, தொட்டியின் ஐந்து துவாரங்களையும் பொத்துக்கொண்டு அரக்கனின் கரத்தைப் போல களிமண் தரைக்குள் ஆழமாய் இறங்கி தன் இருப்பை இறுகப் பற்றியிருந்த ஐந்து கடினமான வேர்களையும் வெட்டி தொட்டியை மண்ணின் பிடியிலிருந்து விடுவித்தேன். நான்கு வருட இளந்தாரி மரத்தை வேறொரு பெரிய தொட்டிக்கு மாற்றினேன். தொட்டிக்கு அடியில் தட்டு வைத்து வேர்கள் மீண்டும் தரைக்குள் போகாதிருக்க வழி செய்தேன். தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றினேன். மறுநாள் தொங்கிப் போயிருந்த இலைகளையும் சிறு கிளைகளையும் 'கவாத்து' செய்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கன்று எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. தினமும் தண்ணீரோடு அதற்கு நம்பிக்கையையும் ஊட்டி வந்தேன். மரம் காய்க்குமோ காய்க்காதோ தெரியாது. ஆனால் அது சாகக்கூடாது என்பது மட்டுமே என் வேண்டுதலாக இருந்தது.
அவகாடோ கன்று என்னை ஏமாற்றவில்லை. இதோ புத்தம்புது துளிர்கள் விட்டு தன் மறுவாழ்வை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நேற்று மறுபடியும் ஒரு நீல முக்கோண வண்ணத்துப்பூச்சி அவகாடோ இலைகளை வட்டமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
எத்தனை
இடர்கள் வந்தாலும் 'வாழவேண்டும்' என்ற வேட்கையும் வாழ்வின் மீதான நம்பிக்கையும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்ற பாடத்தைப்
புகட்டியபடி அழகாய் நிற்கிறது என் செல்ல அவகாடோ மரக்கன்று.
(பிரதாபம் தொடரும்)
அவகாடோ... பழம் இப்போது தமிழகத்திலும் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஊட்டியிலிருந்து வருகிறது என்று தகவல் தந்தார் ஒரு கடைக்காரர். கிலோ 350/- ரூபாய் என்றார் சென்னை கோயம்பேடு கனிகள் அங்காடியில் இருந்த அந்தக் கடைக்காரர்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி வெங்கட். தமிழகத்தில் கிடைப்பது அறிந்து மகிழ்ச்சி. கிலோ 350/- என்பது ஓரளவு நியாயமான விலைதான். இங்கேயும் கிட்டத்தட்ட அதே விலைதான் வரும்.
Delete