தோட்டத்துப் பிரதாபம் - 27
வாடாமல்லிப் பூக்கள் (படம் 1) |
கதம்பத்தில் கட்டாயம் இடம்பெறும்
பூக்களுள் வாடாமல்லியும் ஒன்று. குட்டியாய்
குண்டு குண்டாய் பளீரென்று கண்ணைப் பறிக்கும் வாடாமல்லிப் பூக்களுக்கு அவற்றின்
நிறமே பிரதானம். இதன் வாடாத தன்மையால் வாடாமல்லி என்று அழைக்கப்பட்டாலும்
மல்லிக்கும் இதற்கும் எந்த ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. சொல்லப் போனால் இது
அமராந்தேசியே எனப்படும் கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. முளைக்கீரை, அறுகீரை,
சிறுகீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, பண்ணைக் கீரை என அமராந்தேசியே
குடும்பத்தைச் சேர்ந்த கீரைகளைப் போல இதுவும் சில நாடுகளில் உணவாக
உட்கொள்ளப்படுகிறது. வசீகரிக்கும் வண்ணங்களுடன் காணப்படுவதாலும், தேனீக்களுக்கும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் உணவாதாரமாக விளங்குவதாலும் வீடுகளிலும் தோட்டங்களிலும்
பூங்காக்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. நானும் இங்கே (சிட்னி) நர்சரியில் வாடாமல்லி விதைப் பொட்டலத்தைப் பார்த்தவுடன் பெரும் ஆவலோடு வாங்கி, விதைகளைத் தொட்டியில்
தூவிவிட்டேன்.
வெள்ளை & இளஞ்சிவப்பு நிற வாடாமல்லிப் பூக்கள் (படம் 2) |
வாடாமல்லிக்கு என்றொரு பிரத்தியேக நிறம் இருப்பதால்தான் 'வாடாமல்லி நிறம்' என்ற வழக்கே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பாருங்க, நான் வளர்த்த செடிகளில் வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலும் வாடாமல்லிப் பூக்கள் பூத்து என்னை வியப்பில் ஆழ்த்தின. நானோ வழக்கமான நிறத்தில் வாடாமல்லிப் பூக்களை ஆசையோடு எதிர்பார்த்திருந்தேன். என்னடா இது, வாடாமல்லிக்கு வந்த சோதனை! என்று சற்றே மனம் சுணங்கியிருந்தேன். என்னை ஏமாற்றவில்லை என் தோட்டம். சற்றுத் தாமதமாக வளர்ந்த ஒரு செடியில் ஒரிஜினல் வண்ணத்தில் பூக்கள் பூத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டன.
வாடாமல்லி (படம் 3) |
வாடாமல்லி என்கிறாய், இலைகளைப் பார்த்தால் தக்காளிச் செடி போல அல்லவா இருக்கிறது என்று நினைப்பீர்கள். வாடாமல்லி விதைகளைத் தூவிய தொட்டியில் தானாக வளர்ந்திருக்கிறது இந்தத் தக்காளிச் செடி. வாடாமல்லியோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து தன் பங்குக்கு தக்காளிப் பழங்களைத் தருகிறது அதுவும்.
தேனெடுக்க வரும் நீலவரித் தேனீ (படம் 4) |
வாடாமல்லி வாசம் என்னை
வாழச் சொல்லிப் போகும்
என்ற பாடல் வரிகளைக் கேட்டபோது சிரிப்பு வந்தது. வாடாமல்லிக்கு ஏதப்பா வாசம்? எதுகை மோனைக்காக எழுதியிருப்பாங்களோ அல்லது வாடாத மல்லிகை என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருப்பாங்களோ, தெரியவில்லை.
என்ன சொன்னாலும் வாசமில்லா மலரிது. ஆனாலும் வசந்தத்துக்குக் குறைவு கிடையாது. இந்த வாடாமல்லி மலர்களில் தேனெடுக்க தேனீக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் எவ்வளவு போட்டி! எந்நேரமும் பூக்களை வட்டமிட்டுச் சுற்றிக்கொண்டே இருக்கின்றன நீலவரித் தேனீக்கள். வாடாமல்லியில் தேனா என்று ஆச்சர்யமாக இருக்கும். ஆமாம், இருக்கிறது. வாடாமல்லிப் பூவின் தாள் போன்ற சொரசொரப்பான புற இதழ்களுக்கு நடுவில் வெளிர்மஞ்சள் நிறத்தில் குட்டிக் குட்டியாக இருப்பவைதாம் உண்மையான பூக்கள். அவற்றிலிருந்துதான் தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் தேனெடுக்கின்றன. பதில் உபகாரமாக மகரந்தச் சேர்க்கைக்கு உதவிபுரிகின்றன.
தேனுண்ண வந்த நீலவரித் தேனீக்களும்
தேன் சேகரிக்க வந்த ஐரோப்பியத் தேனீக்களும்
Blue banded bee (Amegilla cingulata) (படம் 5) |
Blue banded bee (Amegilla cingulata) (படம் 6) |
European honey bee (Apis mellifera) (படம் 8) |
European honey bee (Apis mellifera) (படம் 9) |
|
வாடாமல்லியின் பூர்வீகம் ஆசிய மற்றும்
அமெரிக்க நாடுகள். இன்று இவை உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படுகின்றன. ஹவாய்
தீவில் சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கவும் வழியனுப்பவும்
சூட்டப்படும் பலவித மாலைகளுள் இப்பூமாலையும் ஒன்று. நேபாளத்தில் சகோதரர் தினத்தன்று
பெண்கள் வாடாமல்லிப் பூக்களைத் தங்கள் கையாலேயே மாலை கட்டி தங்கள் சகோதரர்களுக்கு
அணிவிப்பதும் பண்டுதொட்டு தொடர்ந்து வரும் வழக்கம்.
Meadow argus (Junonia villida) (படம் 14) |
தோட்டங்களில் அழகு சேர்ப்பதற்கும்
வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்களைக் கவர்வதற்கும்
இப்பூச்செடிகள் பெரிதும் உதவுகின்றன. பூக்கள் புதியனவாக இருக்கும்போது மட்டுமல்ல,
உலர்ந்த பிறகும் மலர் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
தென்னாப்பிரிக்காவில் இப்பூக்களின் விதைகளைச் சேகரித்து மாவாக்கி உண்பதுண்டு. இது
ஒரு மூலிகைச்செடியாகவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு,
இருமல், வயிற்றுக்கடுப்பு போன்றவற்றுக்கு
இப்பூவின் கசாயம் கொடுக்கப்படுகிறது. தினமும் இப்பூவின் தேநீரை அருந்திவந்தால்
முதுமை தள்ளிப்போடப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
![]() |
வெள்ளை வாடாமல்லி (படம் 15) |
என்றும் வாடா தன்மையினால் வாடாமல்லிப்
பூக்கள் அழியாமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. அழியாக்காதல் வேண்டும்
காதலர்கள் இப்பூக்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து மகிழ்வார்களாம்.
வாடாமல்லி என்றவுடன் எனக்கு வாடாமல்லி மலர்களோடு சு.சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ என்ற புதினமும் கூடவே நினைவுக்கு வந்துவிடும். சுயம்பு என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக, திருநங்கையர் வாழ்க்கை பற்றிய புரிதலை பாமர மக்களுக்கு உண்டாக்கிய முன்னோடிப் படைப்பு அது. ஆனந்த விகடனில் வாரா வாரம் வெளிவந்து பலரது கவனத்தையும் பெற்ற அத்தொடர், பின்னாளில் புத்தகமாக அச்சாகி வெளியானது.
பிரதாபங்கள் தொடரும்.
வாடாமல்லி குறித்த தகவல்கள், நீங்கள் எடுத்த படங்கள் என அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் தோட்டத்துப் பிரதாபங்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteவெள்ளை வாடமல்லி மிக அருமையாக இருக்கிறது கீதா.
ReplyDeleteவாடமல்லி பற்றிய விவரங்களும் தேனிக்கள், வண்ணத்துப்பூச்சிகள் வந்து தேன் குடிப்பதும் பார்க்க அழகு.
சு .சமுத்திரம் அவ்ரகள் கதை வாடமல்லி படித்து இருக்கிறேன்.
நன்றி கோமதி மேம். நீங்கள் பகிரும் புகைப்படங்களும் அசத்தலாக உள்ளன.
Deleteஅருமை கீதா. வாடா மல்லிகையில் தேன் இருக்கும் என்ற தகவல் புதினமாக இருக்கிறது. தொடரட்டும் பிரதாபம்!
ReplyDelete\\வாடா மல்லிகையில் தேன் இருக்கும் என்ற தகவல் புதினமாக இருக்கிறது\\ எனக்கும் முதலில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யசோ.
Deleteஅருமை கீதா. வாடா மல்லிகையில் தேன் இருக்கும் என்ற தகவல் புதினமாக இருக்கிறது. தொடரட்டும் பிரதாபம்!
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்கள். இதெல்லாம் பள்ளியில் பரீட்சைக்காக மட்டுமே படித்தவை! வாடாமல்லியின் ஒரிஜினல் நிறம் தவிர மற்ற நிறங்களிலும் அந்தப் பூவை நானும் பார்த்தது மாதிரியும் இருக்கிறது, இல்லை மாதிரியும் இருக்கிறது. அதற்கு மருத்துவ குணங்களும் உண்டு, விதைகளை சாப்பிடுவார்கள் என்பது புதிய செய்தி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். தற்போதைய டிஜிட்டல் உலகில் பல விஷயங்கள் இப்படிதான் நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனதுபோலவும் ஆகாதது போலவும் குழப்பம் தருகிறது.
Delete