தோட்டத்துப் பிரதாபம் - 2
கடுப்புடைப்பறவை என்றதும் ஏதோ புதிய பறவையொன்றைப் பற்றி
சொல்லப்போகிறேன் என்று நினைக்கத்தோன்றும். இது இலக்கியம் குளவிக்கு வைத்த பெயர்.
இலக்கியத்தில் குளவி என்ற சொல் காட்டுமல்லிகையைக் குறிக்கிறது. அப்படியானால்
கொட்டும் குளவிக்கு என்ன பெயர் என்ற தேடலில்
கிட்டியதுதான் 'கடுப்புடைப்பறவை'.
கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செய் நெல்லின்
தூம்புடைத்திரள் தாள்…
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படை (228-241) பாடலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பொருளாக உரையாசிரியர் தருவது-
பசுமையறும்படி முற்றின பெரிய கதிர்கள், அறுப்பார்க்கும்
சூடாக அடுக்குவார்க்கும் பிணையலடித்துக் கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம்
விளைப்பன, குளவிகள்
கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும் தன்மையன.
குளவிக்கடியின் கடுப்பையும், அறுவடையாகும் முற்றிய
கதிர்த்தாளின் சுணப்பினால் உண்டாகும் கடுப்பையும் ஒருசேர உணர்ந்த ஒருவரால்தான் இப்படி
இரண்டையும் ஒப்புமைப்படுத்த இயலும். பாடலியற்றிய கடியலூர் உருத்திரங்
கண்ணனார் தானே அனுபவித்து எழுதினாரா அல்லது அனுபவித்தோர் வாயிலாக அறிந்து எழுதினாரா
தெரியவில்லை. ஆனாலும் என்னவொரு அருமையான ஒப்புமை.
கடுப்புடைப்பறவைகளை நான் வளர்த்த கதைக்கு இப்போது வருவோம்.
தோட்டத்துக்கு வரும் பறவைகளுக்காக அகலமான ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீர் வைப்பது வழக்கம். அந்தப் பாத்திரம் வீணாகிவிட்டது என்பதால் புதியது வாங்கும்வரை தற்காலிகமாக ஒரு அகலமான பெரிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தேன். பாத்திரம் பெரிதாக இருந்தால், superb
fairy wren எனப்படும் தையல்சிட்டு அளவே இருக்கும் குட்டிக்குருவிகளுக்கு
அதில் இருந்து தண்ணீர் குடிக்க சிரமமாக இருக்கும் என்றும் அதனால் அவை நின்று குடிக்க வசதியாக தண்ணீருக்குள் பாதி அமிழ்ந்த நிலையில் கருங்கல் ஒன்றைப் போட்டுவைப்பது பயனளிக்கும் என்றும் அறிந்தேன். கருங்கல் ஏதும் கிடைக்காத காரணத்தால் கைவசம் இருந்த செங்கல்லைப் போட்டுவைத்தேன்.
குருவிகள்
வருகிறதோ இல்லையோ குளவிகள் கூட்டம்கூட்டமாய் வர ஆரம்பித்துவிட்டன. தண்ணீரில் ஊறிக்கிடந்த செங்கல்லைச் சுரண்டி மண்ணெடுத்துப் போய் எங்கோ கூடு கட்டுகின்றன போலும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அவை செங்கல்லை எதுவும்
செய்யவில்லை. தண்ணீரைத்தான் வட்டமிட்டன.
European paper wasps |
வருவதும் தண்ணீர் குடிப்பதும் போவதுமாக இருந்த அவற்றை பெருமையோடு கணவரிடம் காட்டி சொன்னேன், “பாருங்க,
நான் குருவிகளுக்கு மட்டும் தண்ணீர் வைக்கவில்லை, குளவிகளுக்கும் கூட வைக்கிறேன்.” விநோதமாய்
ஒரு பார்வை பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு
வாரம் கழிந்திருக்கும். தற்செயலாகத்தான் பார்க்கிறேன், முன்வாசல் கதவுக்குப் பக்கத்தில் தலைக்கு மேலே கையெட்டும் உயரத்தில் ஒரு தேனடை. உற்றுப் பார்த்தபிறகு புரிந்தது அது தேனடை அல்ல, குளவிக்கூடு என்று. அம்மாடீ.. எவ்வளவு பெரிசு. நூறு நூற்றைம்பது குளவிகள் இருக்கலாம். தினமும்தான் புழங்குகிறோம். இத்தனை நாளாக யார் கண்ணிலும் படவில்லையே. எப்படித் தவறவிட்டோம், இவ்வளவு பெரிதாகும் வரை பார்க்காமல்?
European paper wasp nest |
குளவிகளோ
போவதும் வருவதுமாக படு ஆக்டிவ். எங்கே போகின்றன என்று பார்த்தால்… அதேதான். நினைத்தது சரியாப் போச்சு. எல்லாம் தோட்டத்திலிருக்கும் தண்ணீர் பாத்திரத்துக்குதான். அடக்கொடுமையே.. இவ்வளவுநாளாக குளவிகள் தாகம் தீர தண்ணீர் குடிக்கின்றன என்றல்லவா நினைத்திருந்தேன்.. எல்லாம் பொய்யா? கூடு கட்டத்தான் இந்த கூட்டுசதியா?
என்ன
வகைக் குளவி என்று ஆராய்ந்ததில் European paper wasp எனப்படும்
காகிதக்குளவிகள்
என்பது தெரிந்தது. குளவிக்கூட்டைப் பார்த்ததிலிருந்து முன் கதவைத் திறக்கவே பயமாகிவிட்டது. அது மட்டுமல்ல, கதவைத் திறந்தாலே குளவிகள் எல்லாம் கலவரத்தோடு அங்குமிங்கும் பறக்க ஆரம்பித்து நம்மைக் கலவரப்படுத்தின. வாசல் பக்கம் புழங்க முடியவில்லை. கணவரிடம் குளவிகளுக்கும் தண்ணீர் தந்து வாழவைக்கிறேன் என்று பெருமையடித்திருந்தேனே, அவர் பார்வையில் படுவதற்கு முன் ஏதாவது செய்து அவற்றை அப்புறப்படுத்திவிடலாம் என்றால்… ம்ஹூம். சின்னதாக இருந்தால் ஏதாவது செய்யலாம். இவ்வளவு பெரியதை நெருங்கக்கூட முடியவில்லை. pest control-ஐ தான் அழைக்கவேண்டும். அவர்கள் வருவதற்குள் postman, salesman என நம் வீட்டுக்கு வருபவர்களை அவை பதம் பார்த்துவிட்டால் அப்புறம் நம் கதி அதோகதிதான். நஷ்ட ஈடு கொடுக்க நம்மால் ஆகாது. அது மட்டுமல்ல, நம்மால் பிறருக்கும் எவ்வளவு கஷ்டம்.
European paper wasps |
Pest control-க்கு அழைத்தால் மூன்று நாட்கள் கழித்துதான் appointment கிடைத்தது. அதுவரை? என் நேரம், சரியாக அதே நாளன்று கணவர் கண்ணிலும் பட்டுவிட்டது. அப்புறம் நடந்ததை சொல்லணுமா என்ன? 😕
மூன்று நாட்கள் கழித்து ஒருவழியாக pest control ஆள் வந்தார். யாரையாவது கொட்டியதா என்றார். இதுவரை இல்லை என்றேன். கொட்டினால் தாங்கமாட்டாய். அதுவும் இந்தக் குளவிகளுக்கு கோபம் வந்தால் மறுபடி மறுபடி வந்து கொட்டும் என்றார். சரி, உள்ளே போய் கதவை மூடிக்கொள். வேலையை முடித்துவிட்டு அழைக்கிறேன் என்றார். இருபது நிமிடத்தில் அழைத்தார். குளவிக்கூடு இருந்த இடம் சுத்தமாக இருந்தது. குளவிகளைக் கொன்றுவிட்டதாகவும் கூட்டை அழித்து அப்புறப்படுத்திவிட்டதாகவும் சொன்னார். குளவிகளைக் கொன்றது பரிதாபமாக இருந்தது என்றாலும் முன்வாசல் என்பதால் பாதுகாப்பு கருதி மனத்தை சமாதானப்படுத்திக்கொண்டேன். சந்துப்பக்கம் கட்டியிருந்தால் கூட புழங்காமல் தவிர்த்திருக்கலாம்.
ஒருவழியாக
குளவி பயம் இனி இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். கூட்டைக் கலைக்கும் முயற்சியில் ஒன்றிரண்டு குளவிகள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் மீண்டும் அவை அதே இடத்தில் கூடு கட்ட வரக்கூடும் என்றும் அப்படி வந்தால் ஆரம்பத்திலேயே பூச்சிமருந்து அடித்துக் கொன்றுவிடு என்றும் சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு $150 (என் உண்டியல் காசு 😥) வாங்கிக்கொண்டு போய்விட்டார்.
மழை விட்டும் தூவானம் விடாத கதையாகி விட்டது. ஏதோ விருந்தினரை எதிர்பார்ப்பது போல மணிக்கொரு முறை வாசலுக்கு வந்து வந்து குளவிகள் மீண்டும் வருகின்றனவா என்று பார்ப்பதே வேலையானது. எதிர்பார்த்தது போல் ஒன்றிரண்டு வந்தன.
ஆனால் நல்லவேளையாக கூடு கட்டவில்லை.
ஒரே வாரத்தில் மறுபடியும் தோட்டத்தில் குளவிக்கூட்டம். ஆரம்பத்தில் ஒன்று இரண்டு என்றிருந்த குளவிகளின்
எண்ணிக்கை இப்போது இருபதைத் தாண்டும். அக்கம்பக்கத்தில் வேறெங்கோ கூடு கட்டப்பட்டுவிட்டது என்பது புலனாயிற்று. இந்த முறை குளவிகளின் பிரதான இலக்கு தண்ணீரல்ல, உணவு.
எலுமிச்சை இலையில் முட்டையிடும் Dingy swallowtail butterfly |
வண்ணத்துப்பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும் மெனக்கெட்டு தங்கள் பிள்ளைகளுக்கான உணவு
எந்த இலைகள் என்று தேர்வு செய்து அந்தச் செடியில் முட்டையிட்டுப் போக, புழுக்கள் கொழுக்கும்வரைக்
காத்திருந்து தங்கள் பிள்ளைகளுக்கான உணவாய்க் கவ்விப்போகின்றன இந்தக் குளவிகள். என்ன அழகாக செடிகளின் இண்டு இடுக்கிலெல்லாம் புகுந்து புறப்பட்டு, இலைகளுக்கு அடியில் பதுங்கியும், இலையோடு இலையாக மறைந்தும்
ஒளிந்தும் இருக்கும் புழுக்களைத் தேடியெடுத்துப் போகின்றன. புழுக்கள் தின்றது
போகத்தான் இலைகளும் செடிகளும் என்றாலும் அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது
என்பதே பெரிய மகிழ்ச்சி.
காகிதக்கூடு கட்டும் European paper wasp (Polistes dominula), Australian Paper Wasp (Polistes humilis) அல்லாமல் மண்ணால் கூடு கட்டும் Yellow Potter Wasp (Delta campaniforme)-ம் கூட்டு சேர்ந்துகொள்ள, இப்போது தோட்டம் முழுக்க குளவிகள் ராஜ்ஜியம்தான்.
இலைமடிப்புக்குள்ளும் புகுந்து இரைதேடும் குளவி |
Black soldier fly |
மேலே படத்திலுள்ள பூச்சியையும் குளவி இனம் என்றே நினைத்திருந்தேன். படத்தை வைத்துக்கொண்டு தேடியதில் இதன் பெயர் Black soldier fly என்றும் இதன் சிறப்புகள் குறித்து பல சுவாரசியத் தகவல்களும் அறியக் கிடைத்தன. அவற்றைப் பற்றி இன்னொரு பதிவில்.
Australian paper wasp |
Yellow Potter Wasp |
குளவிகள் மீதான பயம் ஒரு பக்கம் இருந்தாலும் புகைப்படப் புத்தி விடுவேனா
என்கிறது. அவ்வப்போது கேமராவைத் தூக்கிக்கொண்டு தோட்டத்துப்பக்கம் போய் சர்வ ஜாக்கிரதையாக
எட்ட இருந்தே அவற்றைப் படம்பிடிக்கிறேன். கூடவே “யாருக்கும்
உபத்திரவம் தராத இடத்தில் கூடு கட்டி குடும்பம் வளருங்க, கண்ணுங்களா. மறுபடியும் என் உண்டியல் காசுக்கு உலை வச்சிடாதீங்க செல்லங்களா…” என்று நித்தமும் அவற்றிடம் மானசீகமாய் இறைஞ்சிக்கொண்டு இருக்கிறேன். 😊
(பிரதாபங்கள் தொடரும்)
முந்தைய பிரதாபம்
தொடரும் பிரதாபங்கள்
குளவிகள் கொட்டினால் அதன் கடுப்பு மிக கடுமையாக இருக்கும்.
ReplyDeleteஅதன் கூடு அழகு, இறைவன் எவ்வளவு திறமை கொடுத்து இருக்கிறார் இந்த சிறு உயிர்களுக்கும்! என்று வியக்க வைக்கிறது.
அவர்கள் உயிர் வாழ எவ்வளவு முயற்சிகள், மற்றவர்கள் சேர்த்து வைத்து இருக்கும்உணவை களவாடும் தந்திரம் எல்லாம் வியப்புதான்.
படங்கள் எல்லாம் அழகு.
என் மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது ஒரு செடிக்குள் கட்டியிருந்த குளவிக்கூட்டை தெரியாமல் கலைத்துவிட்டான். ஏகப்பட்ட குளவிகள் அவன் தலை, முகம் எல்லாம் கொட்டி முகமே வீங்கிப்போனது. பிள்ளை எப்படிதான் தாங்கிக்கொண்டானோ என்று இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.
Deleteஒவ்வொரு உயிரும் தங்கள் வம்சம் வளர்க்க என்னென்ன உத்திகள் உபாயங்கள் செய்கின்றன. இயற்கையில் எல்லாமே வியப்புதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
படங்களும் அனுபவப் பகிர்வும் சுவாரஸ்யம். எங்கள் குடியிருப்பில் தாழ்ந்த இடத்தில் காணப்படும் தேன் கூடுகளைக் கலைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. ஆனால் குழந்தைகள் இருக்குமிடத்தில் பாதுகாப்புக் கருதி செய்தாக வேண்டியிருக்கிறது. ஹி.. நானும் பாம்பே ஆனாலும் புகைப்படப் புத்தியினால் எட்ட நின்று எடுக்கவே முயன்றிடுகிறேன் :).
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதுவும் குழந்தைகள் இருக்குமிடம் என்றால் கூடுதல் பாதுகாப்பு அவசியம்.
Delete\\நானும் பாம்பே ஆனாலும் புகைப்படப் புத்தியினால் எட்ட நின்று எடுக்கவே முயன்றிடுகிறேன் :)\\ புகைப்பட விஷயத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷனே நீங்கதான். :)))
திகைக்க வைக்கும் அனுபவம்...
ReplyDeleteபுதிய தகவல்களை அறிய முடிந்தது...
நன்றி...
வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி தனபாலன். கொஞ்ச நாளாக உங்க பதிவுகளைக் காணவில்லையே. நலம்தானே?
Deleteகுளவியின் இராச்சியம் :) கண்டு கொண்டோம்.
ReplyDeleteவருகைக்கும் குளவிகளின் இராச்சியத்தைக் கண்டு ரசித்தமைக்கும் நன்றி மாதேவி. :))
Deleteஇங்கே அணில்களும், எலி, முயல், gopher என விதவிதமான விலங்குகள் வந்து கஷ்டப்பட்டு புழுக்களிடம் இருந்து நான் காப்பாற்றிய காய்கறிகளை பதம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. குளவிகளை இங்கே பார்க்கவே முடியவில்லை!! நீங்க குளவியை பெஸ்ட் கன்ட்ரோல் கொண்டு அகற்றிய மாதிரி இப்போ gopher-ஐ அகற்ற ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன். புல்தரையைத் தோண்டித்தோண்டி ஒரு வழியாக்கிக்கொண்டிருக்கின்றன. :(
ReplyDeleteஎலி, முயல், gopher போன்ற வளைவாழ் பிராணிகளின் பிரச்சனை பெரிய பிரச்சனையாச்சே.. நாம் கஷ்டப்பட்டு வளர்த்தவற்றை நொடியில் காலி செய்துவிடும் அவற்றை நிச்சயம் கட்டுப்படுத்தவேண்டும். சீக்கிரமே தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்மா.
Deleteமிகச் சுவையான கட்டுரை ; பாராட்டுகிறேன் . தேனடை என்பதே சரியான சொல் .நான் குளவியைப் பார்த்து 40 ஆண்டுக்குமேல் ஆயிற்று .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. தேனடை என்ற சொல் ஏனோ சட்டென்று நினைவுக்கு வரவில்லை. குறிப்பிட்டதற்கு நன்றி. திருத்திவிடுகிறேன். குளவியைப் பார்த்து 40 ஆண்டுக்கு மேல் ஆகிறது என்பது வியப்பாக உள்ளது.
Deleteஇங்கு நீங்க சொல்லியிருக்கும் குளவி கோடைகாலமெனில் வந்துவிடும். உண்மையில் அவைகளை துரத்துவது என்பது கஷ்டமாகிவிடும். இன்னும் சிலவகை குளவிகல் இருக்கு கீதா. ஆனா இங்கு தேனீக்களும் கிட்டதட்ட இவை மாதிரிதான். எனக்கு இவர்களை கண்டாலே பயம். இலக்கியத்தில் சொல்லப்பட்ட மாதிரி நான் இரண்டையும் அனுபவித்திருக்கேன் ஊரில்.
ReplyDeleteஉங்க அனுபவத்தினை அருமையாக பதிவிட்டிருக்கிறீங்க.
இப்போது இங்கே குளிர் துவங்கி விட்டதால் குளவி, தேனீக்களின் வருகையும் குறைந்துவிட்டது.
Delete\\இலக்கியத்தில் சொல்லப்பட்ட மாதிரி நான் இரண்டையும் அனுபவித்திருக்கேன் ஊரில்.\\ ஓ.. அப்படியானால் பாடலாசிரியர் காட்டும் உவமையும் சரிதானா என்று நீங்கதான் சொல்லமுடியும். :))
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ப்ரியா.
கடுப்புடைப்பறவை பற்றி அறிந்து கொண்டோம் ..இதிலும் நிறைய வகைகள் உள்ளன... நன்றி !!!
ReplyDeletehttps://www.scientificjudgment.com/