தோட்டத்துப் பிரதாபம் - 4
பூச்சிகள்
என்றாலே அய்யோ என்று அலறுபவள். புழுக்கள் என்றாலோ உவ்வே என்று ஓடுபவள். இப்போது என்னடாவென்றால் தோட்டத்தில் நின்றுகொண்டு நிதானமாக ஒவ்வொரு புழுவையும் பூச்சியையும் கூர்ந்து கவனித்தும் படமெடுத்துக்கொண்டும், இணையத்திலும் புத்தகங்களிலும் அவற்றின் விதவிதமான படங்களை அச்சத்தோடும் அருவருப்போடும் பார்த்துக்கொண்டும் அவை குறித்த தேடலில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கிறேன்.
ரசனை மாறிவிட்டதா? இல்லை…. இல்லை.. இது என்ன பூச்சி? இது தோட்டத்துக்கு நன்மை தரும் பூச்சியா? கெடுதல் தரும் பூச்சியா? கெடுதல் தரும் பூச்சியென்றால் அதைத் தடுக்க என்ன வழி? நன்மை தரும் பூச்சியென்றால் அதைப் பெருக்க என்ன வழி என்பவற்றை அறிந்துகொள்ளத்தான் இந்த வலிய முயற்சி.
ரொம்ப நல்லவங்க |
நன்மை
தருபவை என்று எதைச் சொல்கிறோம்? மண்வளத்தைப் பெருக்குவது, தாவரங்களின் மகரந்தச்சேர்க்கைக்கு துணைபுரிவது, தாவரங்களைத் தாக்கும் தீமை தரும் பூச்சிகளைத் தின்றொழிப்பது என தாவரங்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவைதான் நன்மை தருபவை. தீமை தருபவை? இலை, தளிர், குருத்து, மொட்டு, பூ என தாவரத்தின் எந்தப் பகுதியையும் பாரபட்சமில்லாமல் வெளுத்துக்கட்டுவது, மரம் செடி இவற்றின் தண்டுகளில் துளை போட்டு உள்ளிருக்கும் சத்தை உறிஞ்சி அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்குவது, மண்ணுக்குள்ளிருந்தபடி வேரைத் தின்று வாழ்ந்து மரஞ்செடிகளை சாகடிப்பது என அவை செய்யும் அட்டகாசத்தைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.
ரொம்ப மோசமானவங்க |
சில விநோதமானவை. அவை நன்மை செய்கின்றனவா, தீமை செய்கின்றனவா என்பது அவற்றுக்கே தெரியாது. சரியான குழப்பவாதிகள். slugs எனப்படும் ஓடில்லாத நத்தையினத்தை எடுத்துக்கொள்வோமே. மண்புழுக்களைப் போல மண்ணைக் கிளறி வளம் சேர்க்கிறது. ஆனால் மண்ணுக்குள் இருக்கும்வரைதான் அதற்கு மதிப்பு. மண்ணுக்கு வெளியே இரைதேடி வந்துவிட்டால் தோட்டச்செடிகளின் கதி அதோகதிதான். வண்ணத்துப்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவை வேறு மாதிரி. குழந்தையாய் இருக்கும்போது அகோரப்பசியுடன் இலைகளைத் தின்னும். வளர்ந்தபின் பூந்தேனை அருந்தி பூக்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற உதவும். சிப்பாய் வண்டு, பிடில் வண்டு போன்றவற்றின் லார்வாக்கள் இலைகளைத் தின்னாது என்றாலும் மக்கிய கழிவுகளை உட்கொண்டு வளர்பவை. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதானே. நமக்கு உபகாரமும் உபத்திரவமுமான வாழ்க்கை. யாவற்றையும் கட்டுக்குள் வைக்கதான் இயற்கையிடம் ஏகப்பட்ட உபாயம் இருக்கிறதே. அதனால் அவற்றை மன்னித்துவிடலாம்.
நல்லவங்களா? கெட்டவங்களா? |
பலநாள்
மேற்கொண்ட பலத்த ஆய்வுக்குப் பிறகு முடிவில் அறிந்துகொண்டது இதுதான். நன்மை தரும் பூச்சிகள் வாழ வேண்டுமானால் அவற்றுக்கு இரையாகும் தீமை தரும் பூச்சிகளும் வாழ்ந்தாகவேண்டும் என்ற நிதர்சனமும் சிற்றுயிர்கள் இல்லாது சுழலாது இவ்வுலகு என்னும் உண்மையும்.
முதுகில் Fiddle (violin) வடிவம் இருப்பதால் Fiddler beetle |
உலகத்தில்
இப்படியும் பூச்சிகள் இருக்கின்றன என்பதே என் தோட்டத்திற்கு வருகை தரும் சில பூச்சிகளைக் காணும்போதுதான் புரிகிறது. என் கண்ணில் பட்டவை தவிர படாதவை இன்னும் எத்தனையோ? உனக்கே அருவருப்பு என்று சொல்லிவிட்டு நாங்கள் பார்ப்பதற்கு இப்படியான படங்களைக் குவித்திருக்கிறாயே என்று யாரும் சொல்லக்கூடும். இரண்டு காரணங்கள். ஒன்று என்னைப் போலவே தோட்ட வளர்ப்பில் கத்துக்குட்டிகள் யாராவது இருந்தால் அவர்களுக்கு தோட்டத்தின் தோழமைகளையும் எதிரிகளையும் அடையாளம் காட்டி எச்சரிப்பது. இரண்டாவது, தோட்ட வளர்ப்பில் எனக்குக் கிட்டிய அனுபவங்களை எனக்கு நானே ஆவணப்படுத்துவது.
கத்தரி இலையில் பொறிவண்டு |
இப்போது பதிவின்
தலைப்பு சொல்லும் பொறிவண்டு சமாச்சாரத்துக்கு வருவோம். பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப என்று ஆண்டாள் பாடிய பொறிவண்டு எதுவென்று தெரியவில்லை. ஆனால் என் தோட்டத்துப் பொறிவண்டுகள் எவையும் எந்தப் பூவிலும் தேனருந்தி மயங்கிப் படுத்து நான் பார்க்கவில்லை. பொறிவண்டுகள் அவற்றின் அழகால் ஆங்கிலத்தில் Ladybug, ladybird, lady beetle என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றன.
பறங்கி இலையில் போலி பொறிவண்டு |
கத்தரியும் பறங்கியும் செழித்து வளர ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே இலைகளின் மேல் ஆங்காங்கே பொறிவண்டுகளைப் பார்த்தேன். பொறிவண்டுகள் அசுவுனியைத் தின்றழிக்க வல்லவை என்பதை அறிந்திருந்ததால் பொறிவண்டுகளின் வரவு மகிழ்வளித்தது. ஒரு பொறிவண்டு தன் வாழ்நாளில் சுமார் ஐயாயிரம் அசுவுனிகளைத் தின்னுமாம். ஆனால் நான் பார்த்தவரை, கத்தரி மற்றும் பறங்கியின் இலைகளில் எங்குமே அசுவினியின் தாக்கம் தெரியவில்லை. கத்தரி இலைகள் இரு கை அகலத்துக்குப் பெரிதாகவும் செழிப்பாகவும் இருந்தன. பறங்கி இலைகளோ பந்தி வைத்து சாப்பாடு போடலாம் போல அவ்வளவு பெரிதாக இருந்தன. சரி, அசுவுனிகள் நம் கண்களுக்குதான் தெரியவில்லை போல. பொறிவண்டுகளின் கண்களுக்குத் தெரிந்திருக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
பொறிவண்டின் கூட்டுப்புழு கூடுடைத்துப் போனபின்.. |
ஒரு வாரம் கழிந்திருக்கும். கத்தரி மற்றும் பறங்கி இலைகளில் பூச்சி அரித்தாற்போல பெரியப் பெரிய ஓட்டைகள். என்னடா விஷயம் என்று கூர்ந்து கவனித்தால் இலைகளைத் தின்பதே இந்தப் பொறிவண்டுகள்தான். அதிர்ச்சியான அதிர்ச்சி. பொறிவண்டுகள் என்றால் நன்மை செய்யக்கூடியவை என்றுதானே நினைத்திருந்தேன். இப்படி நாசம் செய்கின்றனவே. தேடல் துவங்கியதும் தெளிவு பிறந்தது.
பொறியில்லாப் பொறிவண்டு |
பொறிவண்டுகளில்தான் எத்தனை விதம். சிலவற்றில் பொறியே இல்லை.
Transverse ladybird,
variable ladybird, striped ladybird, fungus eating ladybird, variable striped
ladybird, 28 spotted ladybird இவை எல்லாம் என் தோட்டத்துக்கு வருகை தந்த, தந்துகொண்டிருக்கும் பொறிவண்டுகள்.
தோட்டத்திற்கு வருகை தந்த பொறிவண்டுகள் |
மேலே இருக்கும் படத்தில் நடுநாயகமாக இருக்கிறாரே, அவரைத் தவிர மற்ற எல்லாருமே
அசைவம். அவர் மட்டும் சுத்த சைவம். இலைகள் தவிர வேறு
எதுவும் தின்னமாட்டார். 😂
முன்பு
ஒரு பட்டிமன்றத்தில் புலவர் அறிவொளி ஐயா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. ‘ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரு மாதிரிதானே தவிர ஒரே மாதிரி கிடையாது’ என்று சொல்லி அதற்கொரு சுவையான கதையையும் உதாரணம் சொன்னார்.
இங்கும் அப்படிதான். பொறிவண்டு என்ற போர்வைக்குள் ஒரு போலி பொறிவண்டு. ஆமாம். அப்படிதான் பெயரிட்டுள்ளார்கள் தாவரவியல் வல்லுநர்கள். இதன் உடலில் 26 அல்லது 28 புள்ளிகள் இருக்கும். குறைவான எண்ணிக்கையில் புள்ளிகள் கொண்ட பொறிவண்டுகள்தான் நன்மை செய்யும் பூச்சிகள் வரிசையில் இடம்பெறுகின்றன. அது மட்டுமல்ல, உண்மையான பொறிவண்டுகளின் புறத்தோல் வழுவழுவென்று இருக்கும். போலியின் மேல் நுண்மயிர்கள் காணப்படும். வெறும் கண்களால் இந்த வித்தியாசத்தை உணரமுடியாது. நுண்ணோக்கி அல்லது கேமரா மூலம் கண்டறியமுடியும். இந்த வேறுபாடுகளை அறிந்துகொள்ளவும் ஒரு அனுபவப்பாடம் எனக்குத் தேவைப்பட்டிருக்கிறது.
நல்ல மற்றும் போலி பொறிவண்டுகள் |
போலி
பொறிவண்டுகளைக்
கட்டுப்படுத்த
ஒரே வழி அவற்றைக் கொல்வதுதான். மனசாட்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டு இணையத்தில் சொல்லியிருந்தபடி செய்தேன். ஒரு மூடி போட்ட பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர் வைத்துக்கொண்டு போலி பொறிவண்டுகளைப் பார்க்கும்போதெல்லாம் பிடித்து அதற்குள் போடவேண்டும். அவ்வளவுதான்.
முதலில் செய்தேன். பிறகு அதையும் இயற்கையே பார்த்துக்கொள்ளடும் என்று விட்டுவிட்டேன். கொஞ்ச நாளில் எப்படியோ போலிகளின் நடமாட்டம் குறைந்து போனது. ஆனால் அசல்களின் வருகை ஆரம்பித்தது. இப்போது உண்மையாகவே உஷாரானேன். அசுவுனிகளின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது புரிந்தது. அதனால் என்ன? அதான் பாதுகாவலர்கள் வந்துவிட்டார்களே. இவர்களை யார் பாக்குவைத்து அழைத்தார்கள்? எப்படிதான் மூக்கு வேர்த்து வந்தார்களோ? ஆச்சர்யம்தான்.
அசுவுனி (aphid) |
தங்களுக்கான
இரை இங்கிருப்பதால்தானே தேடி வந்திருக்கின்றன. அப்படியென்றால் நன்மை செய்யும் பூச்சிகள் வாழ்வதற்கு மூலாதாரமான தீமை செய்யும் பூச்சிகளும் அவசியம்தான் என்பதை உணரமுடிகிறதல்லவா?
(பிரதாபங்கள் தொடரும்)
முந்தைய பிரதாபங்கள்
எப்படி எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
ReplyDeleteதேடுதல் தொடரட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி. ஏட்டறிவை விடவும் பட்டறிவு பெரியது என்று சும்மாவா சொன்னார்கள். :))
Deleteஓ...எவ்வளவு தகவல்கள் கீதா. முதலில் நன்றி உங்கள் தேடலில் நாங்களும் பயன் பெறுவதற்கு.
ReplyDeleteபோலி பொறிவண்டு எங்க இடத்திலும் உண்டு. நானும் இது உண்மையான லேடிபக் என இருந்தேன். இனிமேல் தெரியும்.
/சிற்றுயிர்கள் இல்லாது சுழலாது இவ்வுலகு என்னும் உண்மையும்.// எவ்வளவு உண்மையான விடயம்
தோட்டம் செய்ய ஆரம்பித்ததால் நல்ல அனுபவங்கள் உங்களுக்கு. அனுபவங்கள் கிடைக்கட்டும். அருமையான பதிவு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா. பொறிவண்டிலும் போலி இருக்கிறது என்பதை இப்போதாவது தெரிந்துகொள்ள முடிந்ததே. தோட்ட அனுபவமும் ஒரு வகையில் தியானம் மாதிரிதான்... மனத்தை அமைதிப்படுத்த உதவுகிறது அல்லவா?
Deleteபடங்கள் அனைத்தும் அழகோ அழகு...
ReplyDeleteதங்களின் தேடும் ஆர்வத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்...
வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும் தனபாலன்.
Deleteஇந்த உலகம் நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறான்சுயநல மனிதன். நீங்கள் சொல்லியிருப்பது போல நன்மையோ, தீமையோ அனைத்துஉயிர்களும் இருந்தால்தான் சுழற்சிக்கு நல்லது!
ReplyDeleteஅழகான தெளிவான படங்கள். சுவாரஸ்யமான தகவல்கள்.
\\இந்த உலகம் நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறான்சுயநல மனிதன்.\\ பெரும்பான்மையானோரின் எண்ணம் இப்படிதான் இருக்கிறது.
Deleteவருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
புலனாய்வு செய்து போலிகளைக் கண்டறிந்து எங்களுக்கும் புரிய வைத்துள்ளீர்கள். ஆச்சரியமான தகவல்கள். தொடரட்டும் பிரதாபங்கள்!
ReplyDeleteஹா.. ஹா.. புலனாய்வு.. சரிதான். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.
Deleteபொறிவண்டிலும் அசல் போலியா .... என்ன கொடுமை சரவணன் .... போலிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தியதற்கு நன்றி!
ReplyDeletehttps://www.scientificjudgment.com/