19 May 2019

இலமென்று அசைஇ இருப்பேனோ…

தோட்டத்துப் பிரதாபம் - 1



தோட்டம் வளர்ப்பது மனத்துக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் தரும் விஷயம் என்பதை அறிந்திருந்தபோதும், அனுபவ பூர்வமாக அறிந்துகொண்டது கடந்த ஆறு மாதங்களாகத்தான். இதுவரை தோட்ட அனுபவம் எனக்குத் துளியும் இல்லை. என் அம்மாவோ  தோட்டம் வளர்ப்பதில் கைதேர்ந்தவங்க. எனக்காகவே தோட்டம் முழுக்க மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, ரோஜா, கனகாம்பரம், செம்பருத்தி, டிசம்பர் பூக்கள் என வண்ணவண்ணமாய் பூக்கள் வளர்த்தாங்க. ஆனால் தண்ணீர் ஊற்றுவதோடு முடிந்துவிடும் தோட்டத்துக்கும் எனக்குமான உறவு. சீசனுக்கேற்றவாறு செடிகளில் பூக்கும் பூக்களை அம்மாதான் பறித்துக் கட்டி சூட்டிவிடுவாங்க. அந்த அனுபவத்தை முட்செடிப்பூக்கள் என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். 

பச்சை வானில் மஞ்சள் நட்சத்திரங்களாய்
மலர்ந்து சிரிக்கின்றன
எனக்குப் பிடிக்குமென்று
தோட்டத்து மூலையில்
அம்மா வளர்த்துவரும் டிசம்பர் பூக்கள்!

முட்செடியொன்று புதராய் மண்டிவிட்டதென்று
அரிவாளெடுக்கும் ஒவ்வொரு முறையும்
அப்பாவிடம் போராடி வெற்றி பெறுகிறாள் அம்மா!

என் கூந்தலில் குடியேறிய குண்டு மலர்ச்சரம் கண்டு
தோழியர் சிலாகிக்க
தினம் தினம் முள் தைத்து ரணமான
அம்மாவின் கரங்கள் நினைவுக்கு வர
சூடிய மலரின் கனம் தாளாததுபோல்
தலை கவிழ்கிறேன் நான்
குற்றவுணர்வை மறைத்தபடி!

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம். தோட்டம் போடும் ஆசையும் எண்ணமும் உருவாகிவிட்டது. அதை எப்படி செயல்படுத்துவது? குழந்தையாய் குமரியாய் இருந்த காலத்தில் பூக்கள் மீது அலாதியாயிருந்த பிடிப்பு குடும்பத்தலைவியாய் ஆன பிறகு சற்றே குறைந்து குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையுமே பெரிதாய் எண்ணத் தொடங்கிவிட்டக் காரணத்தால் பூக்களை விடவும் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள் பயிரிடுவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. 

ஆசை இருக்கு தாசில் பண்ண, அம்சம் இருக்கு கழுதை மேய்க்க என்பது போல வீட்டைச் சுற்றி தாராளமாக இடம் இருந்தாலும் பிடி மண் அள்ளமுடியாத அவலம். தோண்டுமிடம் எல்லாம் கரடும் களிமண்ணும் என்பதால் தோட்டம் வளர்க்கும் ஆசை கைகூடவில்லை. சின்னதாய் ஒரு குழி தோண்டுவது கூட அத்தனை சுலபமாயில்லை. ஆள் வைத்துப் பண்படுத்தி சீராக்க பொருளாதாரம் இடந்தரவில்லை. நம்ம ஊர் போல கூலிக்கு எளிதில் ஆட்களும் கிடைப்பதில்லை. இப்படி இல்லை இல்லை என்று எண்ணும்போதே வள்ளுவர் சொன்னது நினைவுக்கு வந்தது.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

நிலத்தை சும்மா வைத்துக்கொண்டு, எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று வறுமையில் உழன்றுகொண்டிருப்பவரைக் கண்டால், நிலமகள் சிரிப்பாளாம். ஏனாம்? நான் இருக்கிறேனே.. என்னில் உழுது விதைத்து அறுத்து, உலை வைத்து, தானும் உண்டு அடுத்தவரையும் உண்பிக்கும் வழி அறியாமல், அறிந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்காமல், வறுமை வறுமை என்று புலம்புகிறானே என்று.

சும்மா கிடக்கும் எங்கள் கொல்லையும் என்னைப் பார்த்து சிரிப்பது போலவே தோன்றியது. சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பலில்லாமல் தோட்டம் போட்டுப் பாட்டுப் பாட ஆசைதான். ஆனால் முடியவில்லையே. அதனால் குட்டிக்குட்டி தொட்டிகளோடு மண்ணையும் விலைக்கு வாங்கி அவற்றில் செடிகள் வளர்க்க ஆரம்பித்தேன். 




தொட்டிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனதைப் பார்த்த மகள் ஒரு உபாயம் செய்தாள். ஆன்லைனில் ஆர்டர் செய்து 2m x 1m x 40cm கொள்ளளவுடைய garden raised beds 4 வரவழைத்துத் தந்துவிட்டாள். நீளமான அலுமினியத் தகடுகளும் திருகு ஆணிகளுமாக பார்சல் வந்திறங்கியது. தகடுகளைப் பொருத்துவது வெகு சுலபம். நான்கு பக்கமும் நான்கு தகடுகளை உரிய திருகு ஆணிகள் கொண்டு பொருத்தி செவ்வகமாய் தொட்டி போல அமைக்கவேண்டும். அதில் முழுவதுமாய் மண்ணை நிரப்பி செடிகளை நட்டு வளர்த்துக்கொள்ளலாம்.

குவளையில் மொண்டு குளிக்கிற குழந்தைக்கு குதித்து கும்மாளம் போட குளியல்தொட்டி பரிசளித்தது போலாயிற்று. எனக்கு மட்டுமல்ல, என் தொட்டிச் செடிகளுக்கும்தான். மூட்டை மூட்டையாக மண்ணும் எருவும் வாங்கிவர கணவர் உதவினார். சரியான விகிதத்தில் அவற்றைக் கலந்து தொட்டிகளை நிரப்பினோம். ஒரு தொட்டிக்கு சுமார் 16-18 மூட்டைகள் தேவைப்பட்ட. முதலில் இரண்டு தொட்டிகள் மட்டுமே நிரப்பினோம்.



கத்தரியும் வெண்டையும் விதைகள் போட்டு ஏற்கனவே சின்னச்சின்ன தொட்டிகளில் நாற்றாக இருந்தவற்றை raised bed-க்கு மாற்றினேன். கத்தரியில் நான்கும் வெண்டையில் நான்கும் மட்டுமே பிழைத்ததற்காக வருத்தப்பட்ட என்னை, அடி போடி நாங்கள் காய்க்கும் காய்ப்புக்கு நீ சமைத்து மாளாது என்று காய்த்துத் தள்ளிவிட்டன. வெண்டைச் செடிகள் அலக்கு வைத்துப் பறிக்குமளவுக்கு உயரமாய் வளர்ந்து பக்கத்துவீட்டை எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. கத்தரிச் செடிகளோ காய்களின் கனம் தாங்காமல் தரையைத் தழுவத் தொடங்கிவிட்டன. 





தப்புவிதையாக பறங்கிக்கொடி ஒன்று படரத் தொடங்கி இன்று கொல்லையையே சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது. வெள்ளரியும் தர்ப்பூசணியும் சாண் உயரக் கன்றுகளாக வாங்கிவைத்தேன். துளசியும் திருநீற்றுப்பச்சிலையும் புதராகிவிட்டன. தோழி அளித்த வாழைக்கன்றுகள் சின்னதாய் இலைவிட்டு தலையாட்டிக் கொண்டிருக்கின்றன.



கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு மரக்கன்றுகள் வாங்கி மண்ணில் கொஞ்சம் கஷ்டப்பட்டு குழிகள் தோண்டி நட்டுவைத்திருக்கிறோம். எலுமிச்சையும், ஆரஞ்சும் வளர்வதா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கின்றன. கொய்யா காய்க்க ஆரம்பித்துவிட்டது. இது நம்ம ஊர் கொய்யா அல்ல. முழு நெல்லிக்காய் அளவே இருக்கும் இதற்கு லெமன் கொய்யா அல்லது ஸ்ட்ராபெர்ரி கொய்யா என்று பெயர். நானும் கணவரும் கொய்யாப்பழப் பிரியர்கள். யானைப்பசிக்கு சோளப்பொரி போல எங்களுக்கு இந்தக் குட்டிக் கொய்யாப்பழங்கள்.



இரசாயன உரங்களையும், இரசாயனப் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன், இருக்கிறேன். அப்புறம் எப்படி பூச்சிகள் வராமல் தடுக்கிறாய் என்று கேட்பீங்க. ஆரம்பத்தில் பூச்சிகளை ஒழிக்கும் வழி தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். பூண்டு கரைசல், வேப்பெண்ணெய் கரைசல் எல்லாவற்றுக்கும் டாட்டா காட்டிவிட்டு பூச்சிகள் செடிகளை உண்டு இல்லை என்றாக்கிவிட்டன. இனி என்ன செய்வது என்று சோர்ந்திருந்த வேளையில்தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதன்பின் புழு பூச்சிகளுக்கு என் தோட்டத்தில் இடமே இல்லை. அந்த அதிசயம் என்னவென்று கேக்கறீங்களா? சொல்கிறேன்.



காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை என் தோட்டம் எனக்கே சொந்தமில்லை. குளவிகளும் தேனீக்களும்தான் ஏகபோக குத்தகைக்காரர்கள். தோட்டத்துக்குள் நுழைய முடியாதபடி தேனீக்களின் ரீங்காரம். குளவிகளின் ஆங்காரம். தேனீக்களிலேயே எத்தனை ரகம். ஐரோப்பியத் தேனீக்களின் அறிமுகத்தால் ஆஸ்திரேலியத் தேனீக்கள் வாழ்விழந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ள சூழலில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் அவற்றின் வருகை பெருமகிழ்வளிக்கிறது. ஆஸ்திரேலியத் தேனீக்கள் தேன் சேகரிக்காதவை. ராணித்தேனீ, வேலைக்காரத்தேனீ என்ற பாகுபாடெல்லாம் இவற்றுக்குக் கிடையாது. எல்லா பெண் தேனீக்களுமே குடும்பத்தலைவிகள்தாம். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?


ஆஸ்திரேலியத் தேனீ

ஐரோப்பியத் தேனீ

படை படையாய் வந்து செடிகளிடையில் புகுந்து புறப்பட்டு தங்கள் பிள்ளைகளுக்காக உணவு தேடும் குளவிகளின் வேகத்தைப் பார்க்கவேண்டுமே. அவற்றின் கண்களுக்கு கம்பளிப்புழு, பச்சைப்புழு, இலைப்புழு என ஒரு புழுவும் தப்புவதில்லை. அசுவுனிகளைக் கபளீகரம் செய்ய பொறிவண்டுகள், வெட்டுக்கிளிகளைக் கொத்திப்போக குட்டிக்குருவிகள், ஈக்களையும் கொசுக்களையும் காலி செய்ய சிலந்திகள், அரணைகள் என ஒரு பட்டாளமே இப்போது எனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. என்ன தவம் செய்தேனோ.. இங்கிவர்களை நான் பெறவே.



இனி வரும் பதிவுகளில் இது போன்ற என் தோட்டத்துப் பிரதாபங்களை ஒவ்வொன்றாய்ப் பகிரவிருக்கிறேன். தோட்டத்தின் விளைச்சல்கள், அனுபவங்கள், பாடங்கள், ஆச்சர்யங்கள், ரசனைகள், அபத்தங்கள், வருத்தங்கள், சந்தோஷங்கள் என பலவற்றையும் பகிர்ந்துகொள்ளும் சுய டயரிக்குறிப்பாகவும் பதிவுகள் தொடரும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? இது என் முதல் தோட்ட முயற்சி என்பதால் பிரதாபங்கள் சற்றுக் கூடுதலாகவே இருக்கக்கூடும். பொருத்தருளவும் நட்புகளே. 

அடுத்த பதிவில் குளவிகள் வளர்த்து கொட்டு (குளவியிடம் அல்ல, கணவரிடம்) வாங்கிய கதை. :))))


16 comments:

  1. தொடருங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி மதுரைத் தமிழன்.

      Delete
  2. ஆகா...! மிகவும் மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  3. வா..வ் சூப்பரா இருக்கு கீதா உங்க தோட்டம். நாம பயிரிட்டு வளர்த்து அதில் கிடைக்கும் பயனை அனுபவிப்பது என்பது சொல்லமுடியா சந்தோஷம். தேனீக்கள் வரட்டும். அவைகள் வருவது நன்மையே. அவையால்தான் மனித இனமே இருக்கு என இங்கு சொல்வாங்க கீதா. மருந்து அடிப்பதால் அவை அழியும் நிலைக்கு வருகின்றன என சொல்லப்படுகிறது.
    எழுதுங்க உங்க அனுபவம் எல்லாம். கூடவே என்னென்ன செய்தீங்க செடிகள் வளர என்பதையும் எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா.
      ப்யூஷியா செடியைப் பார்க்கும்போதெல்லாம் உங்க நினைவுதான் வரும் ப்ரியா. உங்க வீட்டுத் தோட்டத்து ப்யூஷியா செடிகளைப் பார்த்துதான் எனக்கும் ஆர்வம் வந்தது. youtube-ல் நீங்க பரிந்துரை செய்த சானல்களைப் பார்த்தும் நிறையக் கற்றுக்கொள்கிறேன். நன்றி ப்ரியா.

      Delete
  4. தோட்டம் அமைத்துச் செடிகொடி வளர்ப்பதில் பல நன்மைகள் உண்டு . விடாமுயற்சிக்குப் பாராட்டு .எங்கள் இல்லத்தில் முன்புறமும் தெரு பின்னாலும் தெரு . உள்ளங்கை யளவுகூட மண்ணில்லை . தோட்டத்தால் கிட்டக்கூடிய மகிழ்ச்சியை நான் சிறு வயதிலும் இளமையிலும் பெற்றதில்லை .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தோட்டத்தால் கிட்டக்கூடிய மகிழ்ச்சியை சிறுவயதிலும் இளமையிலும் பெற வாய்ப்பில்லாமல் போனாலும் தங்கள் திருமணத்துக்குப்பிறகு மாமியின் கைவண்ணத்தால் அதிகமாகவே பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மாமி கையால் நடப்பட்டு பலன் அள்ளித் தந்த முல்லைக்கொடியையும், முருங்கை, பப்பாளி, கொய்யா, வாழை மரங்களையும் வாசலில் நிழல் தந்து இளைப்பாற்றிய மரமல்லி, புங்கை மரங்களையும் நினைத்துக்கொள்கிறேன்.

      Delete
  5. மகிழ்ந்தேன்
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  6. ஆஹா! நம் வீட்டுத் தோட்டத்தில் நாமே பயிரிட்டுப் பறித்துச் சமைக்கும் காய்கறிகளுக்கு ஸ்பெஷல் ருசி உண்டு கீதா! அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். செடி பூக்கும் போதும் காய்க்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லாமே செயற்கை என்றான பிறகு, பூச்சிக்கொல்லி மருந்தின்றி, இரசாயன உரமின்றி பயிரிட்டுச் சாப்பிடுவது உடம்புக்கும் நல்லது. பூச்சிக்கொல்லி மேலாண்மை வியப்பளிக்கிறது. ஆஸ்திரேலிய தேனி பற்றியறிந்தும் வியப்பு. சுவாரசியமாய் இருக்கிறது. தொடர்ந்து எழுது கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அக்கா. தோட்டம் வளர்ப்பதில் உங்களிடமிருந்தும் நிறைய உத்வேகம் பெற்றிருக்கிறேன். பல புதிய வகை தாவரங்களையும் அவை தொடர்பான நூல்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்காகவும் மிகவும் நன்றி அக்கா.

      Delete
  7. உங்கள் வீட்டுத் தோட்டம் அழகு.

    எங்களுக்கு வெப்பம் அதிகம் என்பதால் மழைக்காலத்தில் மட்டும் காய்கறி தோட்டம் கைகொடுக்கும்.
    மா ,கொய்யா.தோடை,பலா,மாதுளை,யம்பு எலும்பிச்சை,முருங்கை,அகத்தி,தூதுவளை,கறிவேப்பிலை குறிஞ்சாபோன்ற மரங்கள் நிற்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி. இங்கே குளிர்காலத்தில் பனிப்பொழிவெல்லாம் இல்லை என்றாலும் குளிர் அதிகமாக இருப்பதால் செடிகள் எல்லாம் திரங்கிவிடும். வெயில்காலத்தில் மட்டுமே விளைச்சல்.

      நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றுள் தோடை, யம்பு, குறிஞ்சா போன்றவை என்னவென்று தெரியவில்லையே.

      Delete
  8. Wow..superb! I've been thinking what happened to you, not visible in fb at all...now only got time to check the blog..happy gardening akka!! :)

    ReplyDelete
    Replies
    1. என்னவோ ஒரு அலுப்பும் சலிப்பும். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறேன். தோட்டம் நிறைய கைகொடுக்கிறது. தோட்டக்கலையில் உங்களைப் போன்றோரிடமிருந்தும் நிறையக் கற்றுக்கொள்கிறேன். நன்றிமா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.