21 June 2019

பூக்கள் அறிவோம் (86 - 90)


86. பாங்ஸியா 
Banksia 




ஆஸ்திரேலியாவின் தனித்துவமிக்க தாவரவினமான பாங்ஸியாவுக்கு ஆஸ்திரேலியத் தோட்டங்களில் தனியிடம் உண்டு. இந்த பாங்ஸியாவுக்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 60 மில்லியன் ஆண்டுகால வரலாறு உள்ளது என்றால் சும்மாவாபாட்டில் பிரஷ் பூக்களைப் போலவே பாங்ஸியாவிலும் பூந்தண்டைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான.. ஆயிரக்கணக்கான குட்டிக்குட்டிப் பூக்கள் மலர்கின்றன. சிலவற்றில் ஆறாயிரம் பூக்கள் வரை மலரக்கூடும். 1770-ல் முதன் முதலாக இத்தாவரத்தின் மாதிரிகளைச் சேகரித்த ஐரோப்பிய இயற்கை ஆர்வலரும் தாவரவியல் வல்லுநருமான Sir Joseph Banks பெயரால் இதற்கு Banksia என்று பெயரிடப்பட்டுள்ளது.





பாங்ஸியாவில் சுமார் 170 வகை உள்ளன. ஆரஞ்சு, மஞ்சள், சிவப்புபிங்க்கத்தரிப்பூ வண்ணங்களில் வசீகரிக்கும் பூக்கள் அலங்காரப் பூங்கொத்துகளிலும் உலர்மலர் அலங்காரங்களிலும் இடம்பெறுகின்றன. 


பாங்ஸியா பூவும் விதைக்கூம்பும்

இவற்றின் பூக்களில் மகரந்தச்சேர்க்கை பறவைகள்வௌவால்போசம்எலி போன்ற சற்றுப் பெரிய தேனுண்ணிகளால் நடைபெறுகிறது. அவை பூவில் அமர்ந்து தேனுண்ண ஏதுவாக இதன் பூந்தண்டு உறுதியாகவும் அழுத்தமாகவும் இருக்கும். காக்கட்டூ பறவைகளுக்கு பாங்ஸியா விதைகள் பெருவிருப்பம். விதைகள் மட்டுமல்லாது விதைக்கூம்பில் விதைகளுக்கிடையில் ஒளிந்திருக்கும் புழு பூச்சிகளும் கொசுறாக கிடைக்கிறதே.




பூக்கும் பாங்ஸியா பூக்கள் எல்லாமே விதையாவதில்லை. விதைகள் எல்லாமே வெடித்து முளைப்பதில்லை. கடினமான விதையோடுகளைத் தூண்டி வெடிக்கச் செய்வதற்கு சில சமயங்களில் காட்டுத்தீயின் உதவியும் தேவைப்படுகிறது. செயற்கையாக வெடிக்கச் செய்ய 120°C வெப்பத்தில் சூட்டடுப்பில் (oven)  சுமார் ஒரு மணிநேரம் வைத்து வெப்பமுண்டாக்கினால் மட்டுமே சாத்தியம்.




பூர்வகுடி மக்கள் இதன் பூந்தேனை நேரடியாகவும்பூக்களைத் தண்ணீரில் ஊறவைத்து சுவைநீராக்கியும் அருந்தியுள்ளனர். சில வகை பாங்ஸியா பூக்களை தண்ணீர் வடிகட்டியாகவும்விதைக்கூம்புகளை உளி போல் செதுக்கி கூடைமுடையும் உபகரணமாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஒரு வகை பாங்ஸியா மரம் படகு மற்றும் படகின் உதிரிப் பாகங்களைத்  தயாரிக்கப் பயன்படுகிறது. விதைக்கூம்பு குறுக்குவாக்கில் மெல்லிய வட்டுகளாக வெட்டப்பட்டு coasters –ஆகவும்பல அலங்கார வேலைப்பாடுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 



ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான சிறார் நூலான Snugglepot and Cuddlepie தொடரின் முக்கிய வில்லன்கள் யார் தெரியுமா? பாங்ஸியாதான். Snugglepot, cuddlepie  இருவரும் Gum babies எனப்படும் குழந்தைகள். குழந்தைகள் என்றால் சாதா குழந்தைகள் அல்ல.. குட்டியிலும் குட்டிக் குழந்தைகள். எவ்வளவு குட்டி என்றால் விரல் நுனிக்குக்கூட பொருந்தாத குட்டிக் குமிழ் வடிவ யூகலிப்டஸ் விதைகள்தான் அக்குழந்தைகள். இவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டுபார்வைக்குக் கரடுமுரடான பாங்ஸியா விதைக்கூம்புகளை Big bad banksia men என வில்லனாக சித்தரித்து காட்டில் அவர்கள் படும் பாட்டையும் சாகசங்களையும் விவரிக்கும் கதைத்தொடர்களாக எழுதிக்குவித்துள்ளார் ஆஸ்திரேலிய எழுத்தாளர் திருமதி செசிலியா மே கிப்ஸ் (1877 – 1969).

87. தங்க வாட்டில் 

Golden wattle (Acacia pycnantha)

Golden wattle

ஆஸ்திரேலியாவின் மாண்புடன்… மண்ணின் மரபுடன் தொடர்புடையவை வாட்டில் மலர்கள். ஆஸ்திரேலிய அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள விலங்கு கங்காரு என்பதும் பறவை ஈமு என்பதும் பலருக்கும் தெரியும். அதிலிருக்கும் மரம் வாட்டில் மரம் என்பது பலரும் அறியாத ஒன்று. அகாசியா (Acacia) வகை மரங்கள்தான் ஆஸ்திரேலியாவில் வாட்டில் (wattle) எனப்படுகின்றன. வாட்டில் மரங்களில் அநேக வகை இருந்தாலும்… மாநிலத்துக்கு மாநிலம் மாநில மலர்கள் வேறுபட்டாலும்.. Golden wattle எனப்படுகிற Acacia pycnantha  மலர்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய மலரென்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
 
Acacia pycnantha

1954-இல் ஆஸ்திரேலியாவுக்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசிக்கு ஆஸ்திரேலிய அரசு மற்றும் மக்கள் சார்பில் பரிசளிக்கப்பட்ட வைரப்பதக்கம் வாட்டில் மலர்க்கொத்து வடிவிலானது. பூத்துக்குலுங்கும் காலத்தில் கொத்துக்கொத்தாய்… குட்டிக்குட்டி தங்கப் பந்துகளைத் தொங்கவிட்டாற்போல வாட்டில் மரங்கள் அழகுற விளங்கும். இதன் இலைகள் கருக்கரிவாள் வடிவில் தொய்ந்த நிலையில் காணப்படும். Pycnantha என்பதற்கு கிரேக்க மொழியில் அடர்த்தியான பூக்கள் என்று பொருளாம். ஆஸ்திரேலிய விளையாட்டு வீர்ர்களின் சீருடையான பச்சை மஞ்சள் வண்ணம் மலர்ந்துகுலுங்கும் தங்க வாட்டில் மரத்தின் வண்ணமே.. ஆஸ்திரேலியாவில் வசந்தகாலத்தின் முதல்நாளை இனிதே வரவேற்கும் முகமாக வருடந்தோறும் செப்டம்பர் முதல்நாள் வாட்டில் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Acacia baileyana 

தோரா வில்காக்ஸ் எழுதிய ‘The wattle tree’ என்னும் ஆங்கிலக்கவிதை பூத்துக்குலுங்கும் வாட்டில் மரத்தழகை வர்ணிக்கிறது. அதன் தமிழாக்கத்தை இங்கே காணலாம்.  


Acacia melanoxylon

மஞ்சள் வாட்டில் மலர்கள் அளவுக்கு வெள்ளை வாட்டில் மலர்களுக்கு வரவேற்பில்லை என்றாலும் வசந்தகாலத்தில் மரம் முழுக்க பஞ்சுப் பொதியால் போர்த்தியது போல காண்போரைக் கவர்வதில் குறை வைப்பதில்லை. 

88. மகடாமியா  

macadamia 




மெசபடோமியா மாதிரி இதென்ன மகடாமியா என்கிறீர்களா? பாதாம்முந்திரிபிஸ்தாவால்நட் போல இதுவும் ஒரு பருப்புதான். ஆனால் எல்லாவற்றையும் விட விலை அதிகம். பேலியோ உணவுமுறையில் உள்ளவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். அதிக அளவு புரோட்டீனும்நல்ல கொழுப்பும் உள்ள மகடாமியாவை உலக அளவில் அதிகம் பயன்படுத்துபவர்கள் அமெரிக்கர்களே. அதனாலேயே அமெரிக்காவில் வருடந்தோறும் செப்டம்பர் 4-ஆம் நாள் தேசிய மகடாமியா நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் இதன் அழகிய மலர்களுக்காகவே அலங்கார மரமாக பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மகடமியா மரம் காய்ப்பதற்கு ஐந்தாண்டுகள் ஆகும். ஆனால் காய்க்க ஆரம்பித்துவிட்டால் நூறு வருடங்கள் தாண்டியும் காய்த்துக்கொண்டிருக்கும்.



ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரத்தின் பலனை ஆஸ்திரேலியர் உணருமுன்னரே அமெரிக்கர் உணர்ந்துகொண்டனர். 1900-களின் ஆரம்பத்தில் அமெரிக்க தாவரவியலாளர்கள் சிலர் மகடமியா மரங்களின் விதைகளை எடுத்துச்சென்று ஹவாய் தீவில் வளர்க்கத் தொடங்கினர். காரணம் இரண்டு. ஒன்று ஹவாய் தீவின் கரும்புத்தோட்டங்களை பலத்தக் காற்றுவீச்சிலிருந்து காப்பாற்ற மகடமியா மரங்கள் தடுப்பணைகளாக உதவின. இரண்டாவது அம்மரங்களிலிருந்து ஒட்டுரகம் மற்றும் வீரிய ரகங்களை உருவாக்கி வியாபார ரீதியில் லாபம் ஈட்டமுடிந்தது. ஹவாய் தீவின் இன்றைய மகடமியா பருப்புகளின் உற்பத்தி சுமார் 22,000 டன்களுக்கு மேல்.



இன்றுவரை உலகளவில் அதிகமான மகடாமியா பருப்புகளை விளைவிக்கும் நாடாக தென்னாப்பிரிக்கா விளங்குகிறது. 2018-ல் 54,000 டன் மகடாமியா பருப்புகளை உற்பத்தி செய்து ஆஸ்திரேலியாவின் 40,000 டன் அளவை விஞ்சிநிற்கிறது. மற்றெல்லா பருப்புகளை விடவும் கடினமான ஓடுடைய மகடாமியா கொட்டையை சுத்தியல் வைத்து உடைத்துதான் உள்ளிருக்கும் பருப்பை எடுக்க முடியும். மகடாமியா கொட்டைகளை அறுவடை செய்தல் மிக எளிது. நன்கு முதிர்ந்த மகடாமியா காய்கள் மரத்திலிருந்து தாமாகவே உதிர்ந்துவிடும். மரத்தடியில் கொட்டிக்கிடக்கும் காய்களை முன்பெல்லாம் கையால் பொறுக்கி சேகரித்தார்கள். இப்போது இதற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. சேகரிக்கப்பட்ட கொட்டைகள் இயந்திரங்களின் மூலம் உடைக்கப்பட்டு பருப்புகளாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன.


மொத்தமுள்ள ஏழு மகடாமியா வகையுள் இரண்டு மட்டுமே உண்ணத்தகுந்த கொட்டைகளை உற்பத்தி செய்கின்றன. மற்றவை சயனைட் நச்சுள்ளவை. நாம் உண்ணக்கூடிய மகடாமியா பருப்புகள் கூட நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு நச்சாகும். எனவே வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து இவற்றை விலக்கிவைத்தல் அவசியம். மகடாமியா பருப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவு உபயோகத்துக்கு மட்டுமல்லாது அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.



ஆஸ்திரேலியாவின் பிரசித்த விஞ்ஞானி Dr. John Macadam அவர்களை சிறப்பிக்கும் வகையில் இம்மரத்துக்கு Macadamia என்று பெயரிடப்பட்டுள்ளது. பூர்வகுடி மக்கள் இதற்கிட்ட பெயர்கள் கிண்டல் கிண்டல் (கிண்டல் இல்லை, உண்மைப் பெயரே இதுதான்), பூம்பெரா, ஜின்டிலி, கிண்டுல், பாபல்.


89. நார்ஃபோக் தீவு செம்பருத்தி 
Norfolk island hibiscus (Lagunaria patersonii)




ஆஸ்திரேலியாவைச் சார்ந்த நார்ஃபோக் தீவைப் (Norfolk island) பூர்வீகமாகக் கொண்டிருப்பதாலும் பூக்கள் செம்பருத்தியைப் போல இருப்பதாலும் இதற்கு நார்ஃபோக் தீவு செம்பருத்தி (Norfolk island hibiscus) என்று பெயர். நிஜ செம்பருத்திப்பூக்கள் இதனிலும் வேறுபட்டாலும் இரண்டுமே malvaceae என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. பிரமிட் வடிவில் வளர்வதால் பிரமிட் மரம் என்றும் மரத்தின் உறுதித்தன்மையால் குவீன்ஸ்லாந்து வெள்ளை ஓக் (Quennsland white oak) என்றும் குறிப்பிடப்பட்டாலும், அதிகம் அறியப்படுவது அரிப்புக் காய் மரம் (itchy bomb tree, cow itch tree) என்ற அவப்பெயரால்தான். 



முற்றிய காயின் உள்ளே விதைகளைப் பொத்திவைத்திருக்கும் முசுமுசுவென்ற பஞ்சு தோலில் பட்டதும் அரிப்பும் எரிச்சலும் தருவதால் இந்தக் காரணப்பெயர். காய்களைத் தொட்டாலே அரிப்பெடுக்கும் எனில் தின்றால்அதோகதிதான். மேலும் முற்றிய விதைகள் வெடித்து சுணப்பு காற்றில் பரவுவதால் மரம் உள்ள பகுதியில் நடந்தாலே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சுவாசப் பிரச்சனைகளும், அலர்ஜிகளும் உருவாகின்றனவாம். 

ஆஸ்பெஸ்டாஸினால் ஏற்படும் பாதிப்புக்கு சற்றும் குறைந்ததில்லை இந்தக் காய்களினால் உண்டாகும் பாதிப்பு என்கிறது ஒரு தகவல். மேலும் நுண்கண்ணாடியிழை போன்ற சுணப்பு உடலில் பதிந்துவிட்டால் எரிச்சலும் வலியும் ஏற்படுவதோடு அவற்றை சாமணம் (tweezers) கொண்டுதான் நீக்கமுடியுமாம். கண்ணில் விழுந்தாலோ பார்வை பறிபோகவும் வாய்ப்புண்டு.



இந்த விவரம் எதுவும் தெரியாமல் ஒருகாலத்தில் சிட்னியின் பல பகுதிகளில் தெருவுக்குத் தெரு இம்மரங்களை அழகுக்காக வளர்த்துவிட்டு, இப்போது தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரவும், வேறு வழியில்லாமல் அவற்றை அகற்றிவிட்டு வேறு புதிய மரவகைகளை நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில கவுன்சில்கள் மரங்களை அகற்ற மறுப்பு தெரிவிப்பதால் அப்பகுதிவாழ் மக்கள் தொடர்மனுக்கள், எதிர்ப்பு முழக்கங்கள், ஊர்வலங்கள் என போராடிவருகின்றனர்.

இதன் அறிவியல் பெயர் Lagunaria patersonii என்பதாகும். 15-ஆம் நூற்றாண்டின் ஸ்பானிய இயற்பியலாளரும் தாவரவியலாளரும், போப் இரண்டாம் ஜூலியஸ் மற்றும் ஸ்பெயினின் பேரரசர்கள் ஐந்தாம் சார்லஸ், இரண்டாம் பிலிப்ஸ் போன்றோர்க்கு மருத்துவருமாயிருந்த Andrés Laguna –ஐ சிறப்பிக்கும் வண்ணம் lagunaria என்ற பேரினப்பெயரும் 18-ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய இயற்கை ஆய்வாளர் William Patterson –ஐ சிறப்பிக்கும் வண்ணம் patersonia என்ற சிற்றினப்பெயரும் இடப்பட்டுள்ளது.


90. குடைமரம்
umbrella tree (schefflera actinophylla)

 

விசிறி போன்றமைந்த சுமார் 40 செ.மீ. நீளமுள்ள கூட்டிலைகளின் அழகுக்காகவும் குடைக்காம்புகள் போல் எட்டுத்திக்கும் விரிந்த மலர்க்காம்புகளின் அழகுக்காகவும் வீடுகளில் விரும்பி வளர்க்கப்படும் பசுமை மாறா தாவரம்தான் Umbrella tree எனப்படும் குடைமரம். இதன் தாயகம் ஆஸ்திரேலியா. சுமார் 15-20 மீட்டர் உயரம் வளரக்கூடிய இம்மரத்திற்கு Australia umbrella tree, Queensland umbrella tree, octopus tree என்னும் காரணப்பெயர்களும் உண்டு. வெயிலோ நிழலோ எங்கும் வளரும் இயல்பு, வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மை ஆகியவை இதன் சிறப்பியல்புகள்.

இதன் பூக்கள் மரத்தின் உச்சிக்கிளைகளில் சற்று நீளமான காம்பில் மலர்ந்து காட்சியளிக்கும். மலர்க்காம்புகள் ஒவ்வொன்றும் சுமார் 60 – 80 செ.மீ. நீளமிருக்கும். ஒவ்வொரு காம்பிலும் சுமார் ஆயிரம் பூக்கள்  நெருக்கமாய் மலர்ந்திருக்கும். பழங்கள் பார்ப்பதற்கு மணிச்சட்டத்தில் கோத்திருக்கும் மணிகளைப் போல அழகுறக் காட்சியளிக்கும்.




மலர்கள் ஏராளமான தேனைக் கொண்டிருக்கும் காரணத்தால் தேனீக்களும், பூந்தேன் உண்ணும் பறவைகளும், எலிக்கங்காரு, பேடிமெலான் போன்ற விலங்கினங்களும், பழந்தின்னி வௌவால்களும் இம்மரத்தை நாடி வந்த வண்ணமிருக்கும். பென்னட் மரக்கங்காருவுக்கு இம்மரத்தின் இலைகள் மிக விருப்பமான உணவாகும். ஆனால் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கோ விஷமாகும்.



குடைமரத்தின் அறிவியல் பெயர் schefflera actinophylla என்பதாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியல் வல்லுநர் Johann Peter Ernst von Scheffler அவர்களை சிறப்பிக்கும் விதமாக இப்பேரினத்துக்கு schefflera என்று பெயரிடப்பட்டுள்ளது. Actinophylla என்றால் லத்தீனில் கதிர் போல் விரிந்த இலைகள்என்று பொருளாம்.

schefflera actinophylla fruits

குடைமரம் ஆரம்பகாலத்தில் அதன் அழகுக்காக உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டாலும்,  அந்நிய நாடுகளில் மட்டுமல்லாது, சொந்த நாட்டிலேயே தற்போது இதன் மீதான பயமும் எச்சரிக்கையுணர்வும் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. இருக்காதா பின்னே? நடைபாதைகளில் விரிசலுண்டாக்குவது, தரைக்குள் புதைக்கப்பட்டுள்ள தண்ணீர்க்குழாய்களை சேதப்படுத்துவது, கட்டடங்களின் அஸ்திவாரங்களை ஆட்டங்காணவைப்பது என இதன் வேர்கள் முதலுக்கே மோசம் விளைவிப்பதால், இந்த அழகிய குடைமரம் ஆக்கிரமிப்புத் தாவர வரிசையில் இடம்பெற்றுவிட்டது.

(தொடரும்)

12 comments:

  1. எத்தனை எத்தனை செய்திகள்....அனைத்தும் மிக மிக சிறப்பு

    இத்தகைய அரிய தகவல்களை பகிர்வதற்கு நன்றிகள் பல ...

    பாங்ஸியா ...படம் வெகு அழகு


    Snugglepot and Cuddlepie தொடர் ..சுவாரஸ்யம் ..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களையும் தகவல்களையும் ரசித்தமைக்கும் நன்றி அனு.

      Delete
  2. பூக்கள் அழகு மட்டுமல்ல ஆபத்து தருவதாகவும் இருக்கே!

    படங்கள் எல்லாம் அழகு.
    //கண்ணில் விழுந்தாலோ பார்வை பறிபோகவும் வாய்ப்புண்டு.//
    இப்படி பட்ட மரங்களை உடனே வெட்ட வேண்டியதுதான்.
    வளர்ப்பதை தடை செய்ய வேண்டும்.

    மகடமியா மரம் தடுப்பணையாக இருப்பதால் இதை நிறைய வளர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. \\இப்படி பட்ட மரங்களை உடனே வெட்ட வேண்டியதுதான்.
      வளர்ப்பதை தடை செய்ய வேண்டும்.\\ பெருமரங்களாக வளர்ந்துவிட்ட அவற்றை வேரோடு நீக்குவதும் கடினமாக உள்ளது. ஆபத்தை அறிந்த பிறகாவது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  4. இயற்கை அன்னையின் கைவண்ணத்தில் எத்தனை எத்தனை மரங்கள், பூக்கள். சிறப்பான தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  5. இறைவனின் படைப்பில் எத்தனை பிரமிக்க வைக்கும் வகைகள், வடிவங்கள்? படங்களுக்கும் விரிவான தகவல்களுக்கும் நன்றி.

    நார்ஃபோக் தீவு செம்பருத்தி, அரிப்புக்காய் மரம்... இதே போல சிலருக்குக் கொய்யா மர இலைகள் கூட அலர்ஜியினால் அரிப்பு உண்டாகுமெனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

    குடைமரம் கட்டுமானங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போல பெரிய அரச மரங்கள், வேப்ப மரங்களையும் அந்த வரிசையில் சேர்க்கலாம் இங்கே. வேப்ப மரங்களை வீட்டுக் கட்டுமானத்திற்கு மிக அருகே வைக்காமல் சற்று தள்ளி வீட்டு சுற்றுச் சுவரை ஒட்டியே வைத்தல் நலம். அவற்றின் வேர்களும் கூட கட்டுமானத்தை அசைப்பதைக் கண்டிருக்கிறேன் சில இடங்களில்.

    ReplyDelete
    Replies
    1. \\இதே போல சிலருக்குக் கொய்யா மர இலைகள் கூட அலர்ஜியினால் அரிப்பு உண்டாகுமெனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.\\ அப்படியா? பொதுவாக சேனைக்கிழங்கின் அரிப்புத்தன்மையை நீக்க கொய்யா இலைகளோடு சேர்த்து வேகவைக்கச் சொல்வார்கள். அரிப்புக்கும் அரிப்புக்கும் சரியாப் போயிடும் போல. :)))

      முன்பெல்லாம் வீட்டைச் சுற்றி நிறைய இடம் இருக்கும். மரங்களை பயமில்லாமல் வளர்த்தோம். இப்போதோ மூச்சு விடக்கூட இடமில்லாமல் நெருக்கியடித்துக்கொண்டு வீடுகளைக் கட்டுவதும், மற்ற இடங்களை கான்கிரீட் தளமாக்கிவிடுவதாலும் பெருமரங்களின் வேர்களால் மிகுந்த பாதிப்பு உண்டாவது உண்மை.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  6. ப்ளாகிங் என்றால் என்ன என்பதை மீண்டும் உணர்த்திய வாசிப்பைத் தந்த பதிவு...பாராட்ட வார்த்தைகள் இல்லை ...தொடர்ந்து அசத்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கம் தரும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரங்கன்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.