6 June 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (1)விக்னேஷ், அம்மாவுக்கு காலில் தைலம் விட்டு நீவிக்கொண்டிருந்தான். தினம் தினம் இரவு உறங்கப்போகுமுன் இப்படிச் செய்தால்தான் அம்மாவால் கொஞ்சமாவது தூங்கமுடியும். சில சமயம் வேலை அலுப்பினால் மறந்துவிடுவான். அம்மாவும் நினைவுபடுத்தமாட்டார். இரவெல்லாம்  படாதபாடு பட்டுவிடுவார்; சொல்லவும் மாட்டார்.

பிள்ளையைத் தொல்லைப்படுத்தக்கூடாது என்பதில் மிகவும் கவனம் அவருக்கு. ஆனால், மறுநாள் காலையில் தெரியவரும்போது விக்னேஷுக்கு அம்மாவின்மேல் கோபம் வரும். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவரிடம் கெஞ்சுவான், அடுத்தமுறை இப்படிச் செய்யாதீர்கள் என்று! என்ன சொன்னாலும், அடுத்தமுறையும் அதையேதான் செய்வார். பிள்ளை மேல் அப்படியொரு அலாதிப் பற்று!

விக்னேஷ் கைக்குழந்தையாய் இருந்தபோதே அவன் அப்பா தவறிப்போனார். நெஞ்சுவலி வந்து துடித்தவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் உயிர் பிரிந்துவிட்டதாம். அந்த அதிர்ச்சியிலிருந்து அம்மா மீள பல வருடங்கள் பிடித்ததாம்.

நல்லவேளையாக, தாத்தாவிடம் நிலபுலன்கள் நிறைய இருந்ததால், அம்மா அவனை வளர்க்க பொருளாதாரச் சிக்கல் ஏதுமில்லாமல் போயிற்று. அம்மா ஓரளவு படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகவில்லை.

தந்தையின் ஆதரவில் இருந்தவருக்கு அவரும் போனபிறகு ஒரே துணை விக்னேஷ் தான். அவன் கண்ணில் தூசு விழுந்தால், அம்மாவின் கண்ணில் நீர் வந்துவிடும். விக்னேஷை வளர்ப்பதிலேயே அவர் தன் வாழ்நாளைச் செலவிட்டார்.

விக்னேஷும் அம்மா சொல் தட்டாத பிள்ளையாய் வளர்ந்து, அவர் விருப்பப்படியே பொறியியற்கல்வி படித்து முடித்தான். இன்று ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில், நல்ல வேலையில் அமர்ந்து, வாங்கும் சம்பளத்துக்கு அப்படியே அம்மாவிடம் கணக்கு ஒப்படைத்துக் கொண்டும், அம்மாவின் தலை, கை, கால் வலிகளுக்கு அவர் சொல்லும் தைலத்தைத் தடவி, எப்போதும் அவர் முகத்தில் மலர்ச்சியை தக்கவைக்கப் பெரும் பிரயத்தனப்பட்டுக்கொண்டும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறான். அம்மாவுக்கும் அவனுக்குமான பிணைப்பின் வயது, கர்ப்பத்திலிருந்த நாட்களையும் சேர்த்து கணக்கிட்டால்  இருபத்தேழு வருடம், இரண்டு மாதம் பதினைந்து நாட்கள்.

 நாளெல்லாம் பம்பரமாய் வளையவந்த நாகலட்சுமிக்கு சிலகாலமாய் பிரச்சனை!

அடிக்கடி மூட்டு வலிக்கிறது என்று தைலம் தேய்க்கத்துவங்கியுள்ளார். டாக்டரிடம் போகலாம் என்றால் மட்டும் உடன்படுவதேயில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டு தன்னையும் ஏமாற்றி விக்னேஷையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.  

ஏதோ யோசனையில் மூழ்கியிருக்கும் மகனைப் பார்த்தார், நாகலட்சுமி. அம்மாவின் வலி மறக்கடிக்க, எப்போதும் ஏதாவது பேசுவதோ, அல்லது அம்மாவை ஏதாவது பேசவைப்பதோ விக்னேஷின் தந்திரம். இன்று அப்படி எதுவும் நிகழாமல் அமைதியாய் இருப்பதே, அவன் உள்ளத்தில் அமைதியில்லை என்பதை உணர்த்தியது.

"என்னப்பா! ஏதோ யோசனையா இருக்கே? ஆபிஸில் எதாவது பிரச்சனையா?"

விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தவனுக்கு அம்மாவின் கேள்வி உதவியது.

"ஆபிஸில் ஒண்ணும் பிரச்சனையில்லம்மா!  பிரபுவுக்குதான்......"

"என்னப்பா, பிரபுவுக்கு என்னாச்சு? நல்ல பையனாச்சே!"

அம்மா தவிப்புடன் கேட்க, சட்டென்று முடிச்சவிழ்த்தான், விக்னேஷ்.

"அம்மா! அவனுக்கு இன்னைக்குக் கல்யாணம்! அம்மன்கோவிலில் வச்சுத் தாலிகட்டினான். இன்னும் பதினஞ்சு நாளுக்கு அப்புறம் பதிவுத்திருமணம் செய்யலாம்னு இருக்கான்."

"என்னப்பா, விக்னேஷ்? நீ சொல்றதை என்னால நம்பவே முடியலையேப்பா! ரொம்ப நல்ல பையன்னு நினைச்சிருந்தேனே!"

விக்னேஷுக்கு ஆச்சர்யமாயிருந்தது. நல்ல பையன் என்பதற்கு அம்மா வைத்திருக்கும் அளவுகோல்தான் என்ன? காதல் திருமணம் செய்பவர்களெல்லாம் அயோக்கியர்களா, என்ன? அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்று தவித்தது போக, இப்போது ஏன் சொன்னோம் என்றாகிவிட்டது. அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால், நாளை பிரபுவின் பெற்றோர் ஏதாவது பிரச்சனை செய்தால், அம்மாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவரிடம் சொல்ல முனைந்தான்.

"அம்மா! பிரபு நல்ல பையன் தான், சந்தேகமே இல்லை. அவன் கல்யாணம் பண்ணியிருக்கிற பெண்ணும் ரொம்ப நல்ல பெண்தான். அதிலும் சந்தேகமே இல்லை. நீங்க அந்தப் பெண்ணை ஒரு தடவை பாத்தீங்கனா உங்களுக்கே பிடிச்சிடும்."

"அப்படின்னா...உனக்கு அந்தப் பெண்ணை ரொம்ப நாளாத் தெரியுமா? அப்போ...அந்தப் பையன் கல்யாணத்துக்கு நீயும் உடந்தையா? வேணாம்ப்பா! அவனைப் பெத்தவங்க சாபத்தை ஏத்துக்காதேப்பா! என் ஒரே பிள்ளை நீ! "

அம்மா எங்கெங்கோ தன் எண்ணங்களை ஓடவிட்டு எதெதையோ முடிச்சுப் போட்டு பிதற்றத் துவங்கிவிட்டார். விக்னேஷுக்கு சிரிப்பும் அதே சமயம் அம்மாவின் வேண்டாத கவலையை எண்ணி கோபமும் வந்தது.

"அம்மா! நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைம்மா! அந்தப் பெண் பேரு சுந்தரி! நானும் இன்னைக்குதான் பார்த்தேன். அது பிரபுவோட வீட்டில் வேலை செய்த பெண்ணாம்! பிரபுவும் இதுவரை என்கிட்ட எதுவுமே சொன்னதில்லை. திடீர்னு போன் பண்ணி, அவசரமா அம்மன் கோவிலுக்கு வாடான்னான். என்னவோ. ஏதோன்னு போனேன். போனபிறகுதான் விஷயமே தெரிஞ்சது. இன்னும் சில நண்பர்கள் வந்திருந்தாங்க! எல்லாருமா சேர்ந்துதான் அவனுக்கு உதவினோம். அதனால பிரபுவோட அப்பா அம்மா சாபமிட்டாலும், அதை நாங்க ஆறுபேர் பங்கிட்டுக்குவோம்! சரியா? கவலைப்படாதீங்கம்மா!"

விக்னேஷ் சிரித்தான். அம்மா சமாதானமடையவில்லை.

"என்னவோப்பா, நீங்க எல்லாம் வளர்ந்து ஆளாகிட்டீங்க! பெத்தவங்க தேவையில்லைன்னு முடிவு செய்திடறீங்க. பெத்து, வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு தலைக்குனிவை உண்டாக்குற எந்தப் பிள்ளையும் நல்லா வாழமுடியாது!"

“அம்மா, ப்ளீஸ்! உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க!”

“நான் சொல்லலைன்னா என்ன? இந்நேரம் அவங்க அப்பா அம்மா வயிறெரிஞ்சு சாபமிட்டிருப்பாங்களே! அங்கே அவங்க விடற ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் இவங்க பதில் சொல்லித்தானே ஆகணும்!"

"அம்மா………ஆ…..…..!" 

உரத்த குரல் ஒன்று அதட்டலாய் வெளிப்பட்டது விக்னேஷிடமிருந்து. இதை எதிர்பார்க்காத நாகலட்சுமி  சற்று அதிர்ந்துதான் போனார்.

"அம்மா! நீங்க வாழ்த்தலைன்னாலும் பரவாயில்லை! தயவு செய்து இப்படியெல்லாம்பேசாதீங்க!"

சொல்லிவிட்டு விடுவிடுவென்று தன் அறைக்குச் சென்றவன், கதவை அறைந்து மூடினான். நாகலட்சுமி அம்மாவுக்கு உதறல் எடுக்கத் துவங்கியது. மகனிடம், என்றுமில்லாத ஆவேசம் பார்த்து முதன்முதலாய் பயம் வந்தது. தன் மகனும் இக்காலத்து இளைஞன் தானே! காதலிப்பது தவறில்லையென்று நினைக்கிறான். அதனால் பெற்றவர் படும் மனவேதனையைப் பெரிதாய் நினைப்பதில்லை. கடவுளே! நாளை என் மகனும் இப்படி எவளையாவது கட்டிக்கொண்டுவந்தால்....?

அவள் என்னை மதிப்பாளா? என் மகனை பழையபடி என்னிடம் பாசம் வைக்க விடுவாளா? எல்லாம் போன பிறகு என் நிலை? சொந்த வீட்டில் அகதிபோல் வாழவேண்டிவருமே! என்ன செய்வது?

பிரபுவைச் சொல்லிக் குற்றமில்லை. அந்தப் பெண்ணுக்கு அறிவு எங்கே போனது? இப்படி ஓடிப்போய்க் கல்யாணம் செய்வதால் அவள் பெற்றோருக்கு ஏற்படும் அவமானத்தைப் பற்றியோ, அவளுக்குப் பின் பிறந்தவர்களைப் பற்றியோ கொஞ்சமாவது அக்கறை இருந்தால் இப்படிச் செய்வாளா?

எல்லாம் பணம் செய்யும் வேலையாய்தான் இருக்கும். ஏகப்பட்ட சொத்துக்கு அதிபதி. அவனைக் கைக்குள் போட்டுக்கொண்டால் காலமெல்லாம் சுகமாக வாழலாம் என்று கணக்குபோட்டுதான் காரியத்தை முடித்திருக்கிறாள்.

பிரபுவுக்கு என்ன கேடுகாலம்? ஆணுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவன்! கிராமத்தில் பாதி நிலம் அவன் அப்பாவுக்குதான் சொந்தம்! பெரிய பண்ணை வீடு! நல்ல படிப்பு! கை நிறையச் சம்பளம்!

சுருக்கமாகச் சொன்னால் ஒரு ராஜகுமாரன் தான்! அப்படிப்பட்டவன் போயும் போயும் ஒரு வேலைக்காரியைக் கல்யாணம் செய்திருக்கிறான் என்றால்.......எந்த அளவுக்கு அவள் அவனை வசியப் படுத்தி இருப்பாள்! அவ்வளவு பேரழகியா அவள்? அவளைப் பார்த்தாகவேண்டுமே! எப்படிப் பார்ப்பது? 

நாகலட்சுமி அம்மாளின் புத்தி வேலை செய்யத் தொடங்கியது.

(தொடரும்)

*********************************************************************

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
மு. உரை:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

***********

தொடர்ந்து வாசிக்க

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (2)

5 comments:

 1. சிக்கலாகவே தொடங்கியிருக்கு.போகட்டும் போகட்டும் !

  ReplyDelete
 2. //சுருக்கமாகச் சொன்னால் ஒரு ராஜகுமாரன் தான்! அப்படிப்பட்டவன் போயும் போயும் ஒரு வேலைக்காரியைக் கல்யாணம் செய்திருக்கிறான் என்றால்.......எந்த அளவுக்கு அவள் அவனை வசியப் படுத்தி இருப்பாள்! அவ்வளவு பேரழகியா அவள்? அவளைப் பார்த்தாகவேண்டுமே! எப்படிப் பார்ப்பது? //நன்றி.

  ReplyDelete
 3. அசத்தலான கொஞ்சம் குழப்பமான தொடக்கம்...

  தொடரட்டும்...

  ReplyDelete
 4. நல்லா இருக்குங்க ஆரம்பம்... சீக்கரம் அடுத்த பார்ட் போடுங்க...

  ReplyDelete
 5. முதல் ஆளாய் வந்து ஊக்குவித்ததற்கு நன்றி ஹேமா.

  வருகைக்கு நன்றி மாலதி.

  கருத்துப்பதிவுக்கு நன்றி செளந்தர்.

  கருத்துப்பதிவுக்கு நன்றி தங்கமணி.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.