5 March 2012

அப்புவாசலில் இருமல் சத்தம் கேட்டதுமே, ''அப்பா வந்துட்டார்'' என்றபடி கூடத்தில் கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்குபடுத்தினாள் சாரதா.

"அப்புவுக்கு இன்னும் சோறு போடலையா?"

ஆறுமுகத்திடமிருந்து அதட்டலான கேள்வி வெளிப்பட்டது.

அவரது சுபாவமே இதுதான். எதையும் உரக்கப் பேசியே பழக்கம். நகராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். ஊருக்குள் நல்ல மரியாதை அவருக்கு. அதனால் ஓய்வு பெற்றபின்னும் அவரது கம்பீரம் குறையவில்லை. வாசலை எட்டும்போது சத்தமாக ஒரு கனைப்பு அல்லது ஒரு செல்ல இருமல். வீட்டுக்குள் நுழையும்போது அதட்டலாய் ஒரு கேள்வி! இன்னாரையென்று குறிப்பிட்டுக் கேட்கப்படாதது போல் தோன்றினாலும், யாருக்கான கேள்வி அது என்பதை அவர் மனைவி சிவகாமியும், மகள் சாரதாவும் சரியாகப் புரிந்துகொண்டு பதில் தருவர்.

சற்று முன் கேட்கப்பட்ட கேள்வி சிவகாமிக்கானது. ஏனெனில், அது 'அப்பு' என்கிற அவர்கள் வீட்டு நாயைப் பற்றியது. சாரதாவுக்கு நாய், பூனை என்றாலே பயம்! கிட்ட நெருங்க மாட்டாள். ஆனால் அவர்கள் வீட்டு நாய்களுக்கான பெயர்களைத் தேர்வு செய்வதென்னவோ அவள்தான். முன்பு ராஜா; இப்போது, அப்பு!

அடர்ந்த பழுப்பு நிறத்தில் வாய்ப்புறம் மட்டும் கறுத்து, காது மடல்களை எப்போதும் விறைத்துக் கொண்டு நிற்கும் அப்புவைப் பார்த்தாலே பலருக்கும் பயம் வரும். இப்படி வாய்ப்புறம் கறுத்துக் காணப்படும் நாய்கள் மிகுந்த முரடாக இருக்கும் என்று ஆறுமுகம் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறானது, அப்பு. அனைவரிடமும் பாசத்துடன் பழகக் கூடியது. அதனால் அதைக் கட்டி வைத்து வளர்க்க விரும்பாமல் தம் இஷ்டம் போல் வளர்த்தனர், ஆறுமுகமும் சிவகாமியும்.

தேவைப்படும்போதெல்லாம் அப்பு காட்டாமணக்கு வேலியின் இடையில் மண்ணில் பள்ளம் பறித்து, அதன் வழியாக வெளியில் ஓடிவிடும். அந்தத் தெருவுக்கு மட்டுமல்ல; அந்த ஊருக்கே அதுதான் தலைவன் போல் நினைத்த இடம் சுற்றிவிட்டு, சாப்பிடும் நேரத்திற்கு சரியாக வீட்டுக்கு வந்து விடும். சில சமயங்களில் போகாத இடம் போய் மற்ற நாய்களிடம் கடிபட்டு வருவதுமுண்டு. சிவகாமிதான் மருந்து போட்டு காயத்தை ஆற்றுவாள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அப்புவைக் கவனித்துக் கொள்ளும் முழுப் பொறுப்பும் சிவகாமியின் ஒப்புதல் பெறாமலேயே அவளுக்கானதாய் ஒதுக்கப்பட்டது.

"காலையில்தான் பழைய சோத்தில் தயிர் ஊத்திப் போட்டேன். சாப்பிட்டுத்தானே போச்சு!" என்றாள் சிவகாமி அலுப்புடன்.

"பின்னே ஏன் நாலாவது வீட்டு வாசலில் நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு நிக்கிது? ஒழுங்கா சோறு போட்டா அது ஏன் அங்கயும் இங்கயும் போவுது?"

சிவகாமி பதில் எதுவும் சொல்லாமல் முணுமுணுத்தபடி உள்ளே போனாள். என்ன பதில் சொன்னாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லையென்று அவளுக்குத் தெரியும்.

சாரதா, அம்மாவிடம் மெதுவாக, "ஏம்மா, ஒருவேளை அப்பு அவங்க வீட்டு ஜூலியைப் பார்க்கப் போனதோ என்னவோ?" என்று தன் சந்தேகத்தை எழுப்பினாள்.

'ஜூலி' என்பது அந்த வீட்டிலிருக்கும் வெள்ளை நிற, புசுபுசுவென்ற பாமரேனியன் நாய்க்குட்டி! "அதை உன் அப்பாகிட்டே போய்ச் சொல்லு!'' என்றபடி சாப்பாடு எடுத்து வைக்கத் துவங்கினாள்.

ஆறுமுகம் கரிசனம் காட்டுவது இந்த அப்புவிடம் மட்டுமல்ல, முன்பிருந்த ராஜாவிடமும் இப்படிதான். சாப்பிட உட்கார்ந்ததும், முதல் கேள்வியே "நாய்க்கு சோறு போட்டாச்சா?" என்பதுதான்.

சிவகாமிக்கு எரிச்சல் வந்தாலும் சாப்பாட்டு நேரத்தில் அதைக் காண்பிக்க விரும்பாமல், "யார் வீட்டிலும் இல்லாத புதுமையாயில்ல இருக்கு? எல்லாரும் சாப்பிட்டு முடிச்சி, மிச்ச மீதியைத்தான் நாய்க்கு வைப்பாங்க! இங்க என்னவோ விருந்தாளியைக் கவனிக்கிற மாதிரிதான் கவனிக்கிறீங்க! நான் அதுக்கு அப்புறமா சாப்பாடு வைக்கிறேன், நீங்க முதலில் சாப்பிடுங்க!" என்பாள். அவருக்கு அது சரியாகப்படாது. சரேலென்று எழுந்துவிடுவார். 

"முதலில் அதுக்குப் போடு! அது கொல்லை வாசலில் நின்னுகிட்டு பசியோ என்னையே பார்த்துக்கிட்டிருந்தா… என்னால எப்படி சாப்பிடமுடியும்? " என்பார்.

தெருவிலிருந்து கொல்லை வரை ஒரே ஓட்டமாக உள்ள வீடு அது. அவர் திண்ணையில் இருந்தால் அப்பு துள்ளிக் குதித்து வாசலுக்கு வந்துவிடும். அவர் கூடத்தில் அமர்ந்தால் கொல்லைப்புறம் வந்து நிலைப்படியில் தலையை வைத்து, வீட்டுக்குள் பார்த்தபடி படுத்திருக்கும்.

கிணற்றடியில் வைத்துக் கழுவுவதற்காக பத்துப் பாத்திரங்களை அள்ளிக் கூடையில் போட்டு எடுத்து வந்த சாரதா, ஒருநாள் அப்பு அங்கிருப்பது தெரியாமல் அதன் மேல் கால் வைக்கப் போய், கடைசி நொடியில் சுதாரித்தவளாய் நிலைதடுமாறி பாத்திரங்களுடன் விழுந்தாள். நல்லவேளை! அடி பலமாகப் படவில்லை!

சிவகாமியின் கூச்சலையும், பாத்திரங்களின் 'கடமுடா' சத்தத்தையும் கேட்டு அப்புதான் பயந்து போனது. அன்றிலிருந்து பாத்திரக் கூடையுடன் கொல்லை நிலை வாசலைத் தாண்டும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சிவகாமியும், சாரதாவும் 'ஷ்ஷூ.....ஷ்ஷூ.....' என்று குரல் கொடுத்துக் கொண்டுதான் காலை எடுத்து வைப்பர். அப்பு அங்கிருந்தால் அவசரமாக ஓடிவிடும். அதுமட்டுமல்ல; வெறுமனே பாத்திரக் கூடையைக் காட்டினாலே கூட ஓட ஆரம்பித்துவிட்டது.

அப்பு வீட்டுக்கு வந்ததே தனிக் கதை! அது குட்டியாயிருந்தபோது, ஏதோ வண்டியில் அடிபட்டு ரோட்டில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்திருக்கிறது.அதைப் பார்த்ததும் மனசு தாளாமல் ஆறுமுகம் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். அதற்கு சிவகாமிதான் மருந்து வைத்துக் கட்டி வைத்தியம் செய்தாள்; பாட்டிலில் பாலூட்டினாள்; அதன் கழிவுகளை அள்ளிக் கொட்டினாள்.

ஆறுமுகம் மேற்பார்வை இடுவதுடன் சரி. ஆனால் நகரமுடியாமல் படுத்திருக்கும் நிலையிலும், அவரைக் கண்டால் தன் குட்டி வாலை 'விசுக் விசுக்' என்று ஆட்டித் தன் நன்றியைத் தெரிவிக்கும். அப்போதெல்லாம் சிவகாமிக்கு மிகுந்த வருத்தம் உண்டாகும். "இத்தனை செய்யிறேனே! என்னைக்காவது என்னைப் பார்த்து இப்படி சந்தோஷப்படுதா? துக்கும் ஒரு ராசி வேணும்!" என்று அங்கலாய்ப்பாள்.

சிவகாமியின் பராமரிப்பால் அப்புவுக்கு மறுவாழ்வு கிடைத்தது. இருந்தாலும், முன்னங்கால் ஒன்றை லேசாக நொண்டியபடிதான் நடந்தது. இந்த மட்டில் பிழைத்ததே பெரிது என்று ஆறுமுகம் அகமகிழ்வார். அவர் அப்புவை என்றுமே கொஞ்சியதில்லை.

"என்ன, என்ன வேணும் உனக்கு?......... சாப்பிட்டியா? ஊர் சுத்தப்போனே.... அதுக்குள்ள வந்துட்டே!....." என்று எல்லாம் அதட்டல் தான்! அந்த அதட்டல்களுக்குள் பொதிந்திருக்கும் அக்கறையை அப்பு உணரத் தவறவில்லை. பதிலுக்கு அவர் முன் நின்றுகொண்டு வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும். சிவகாமி அதனிடம், "போதும்... போதும்... வால் சுளுக்கிக்கப் போவுது!" என்று செல்லமாகக் கடிந்து கொள்வாள்.

ஒருநாள் அப்புவைக் காணவில்லை. அன்று வீட்டில் கறிக்குழம்பு வேறு! கறிக்குழம்பு என்றால் சாப்பிடும்வரை அப்பு வீட்டை விட்டு நகரவே நகராது. சிவகாமி கிணற்றடியில்தான் மீன், கறி போன்றவற்றைச் சுத்தம் செய்வாள். அப்போது, அப்பு அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவளையும், மீன் சட்டியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருக்கும். அப்புவை நம்பி மீன் சட்டியை அங்கேயே வைத்துவிட்டு உள்வேலை பார்க்க வரலாம். அந்த அளவுக்கு நம்பிக்கையானது! சிவகாமி வரும்வரை காக்கைகளையும், பூனைகளையும் மீன் சட்டியை நெருங்க விடாமல் விரட்டி காவலிருக்கும். சுத்தம் செய்யும்போது அவள் தூக்கியெறியும் கழிவுகளை அன்றி வேறெதிலும் வாய் வைக்காது.

இன்று கழுவிக் குழம்பும் வைத்தாகிவிட்டது. இன்னமும் அப்புவைக் காணவில்லை. எங்கே போனது என்று தெரியவில்லை. ஆறுமுகம் சாப்பிட முடியாமல் தவித்தார். "காலையில் காலனிப் பக்கம் நாய் வண்டியைப் பார்த்தேன். கட்டிப் போட்டு வைக்கலாம்னுதான் அவசரமாக வந்தேன். அதற்குள் எங்க போனதுன்னு தெரியலையே!" என்று புலம்பியபடியே அரைகுறையாகச் சாப்பிட்டு முடித்தார்.

ஆறுமுகத்திடம் ஒரு பழக்கம். கறி, மீன் என்றால் தன் இலையில் பரிமாறப்படுபவற்றில் பாதியை அப்புவுக்கு என்று ஒதுக்கிவிடுவார். சிவகாமி அவரைக் கடிந்து கொள்வாள். "ஏன் இப்படி செய்றீங்க? அப்புவுக்கு ஒன்னும் போடாமல் பட்டினியா போடுறேன்? நீங்க சாப்பிடுவீங்கன்னுச்சா… பிள்ளைக்கு ஒதுக்குதுமாதிரி நாய்க்கு ஒதுக்கி வக்கிறீங்களே…." என்பாள்.

"பிள்ளையை விட அது ஒரு படி மேலேதான்! 'நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா' என்று பாட்டு கேட்டதில்லையா நீ?" என்பார்.

அவ்வளவுதான்! சிவகாமிக்கு மகனின் நினைவு வந்துவிடும். இன்னும் திருமணமாகாமல் வீட்டில் இருக்கும் தங்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், வேலை கிடைத்த கையோடு, காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவனின் சுயநலம் நினைவுக்கு வந்து மனதைப் பாரமாக்கும்.

நான் கொஞ்சம் வெளியில போய்ட்டுரேன்" என்றவாறு ஆறுமுகம் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு அவசரமாகப் புறப்பட்டார்.

சாரதாவுக்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் அறிந்தவரை எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வெடுத்த பின்புதான் அப்பா அதைத் தொடருவார். எதற்கும் எளிதில் கலங்காத அவர், அப்புவைக் காணாமல் இப்படிப் பதறுகிறார் என்றால், உள்ளுக்குள் எத்தனைப் பிரியம் வைத்திருப்பார் என்று எண்ணினாள். அண்ணன் மேல் உள்ள பிரியத்தையும் இப்படித்தான் மூடி வைத்திருக்கிறாரோ என்ற எண்ணமும் எழுந்தது.

சற்று நேரத்தில் சோர்ந்து போனவராக திரும்பி வந்தார் ஆறுமுகம். எப்படியோ, அன்று இரவு அப்பு வீட்டுக்கு வந்துவிட்டது. அதைப் பார்த்த பிறகுதான் அவரிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. "எங்கே போயிருந்தே? நாய்வண்டியைப் பார்த்து பயந்துட்டியா? ம்.....?" என்று கேட்டுவிட்டு "ஹ்ஹா....ஹ்ஹா...." என்று உரக்கச் சிரித்தார். அதுவும் எல்லாம் புரிந்ததுபோல் வாலை ஆட்டிக்கொண்டு அவர் முன் நின்றுகொண்டிருந்தது. அதன் காதோரம் இருந்த காயத்தை சிவகாமி சுட்டிக் காட்ட, "இது வழக்கம்தானே! எங்கேயாவது போய் வேற நாயோட சண்டை போட்டிருக்கும்" என்றார். சிவகாமி வேப்பெண்ணெய் கொண்டுவந்து காயத்தில் தடவினாள். கறியும், சோறும் கொண்டு வந்து வைக்க வேகவேகமாகச் சாப்பிட்டது. ஆறுமுகம் அதை ரசித்துக்கொண்டு நின்றிருந்தார்.

அதன் பிறகு அப்பு வெளியில் செல்வதையே தவிர்த்துவிட்டது. அதனிடமிருந்த துறுதுறுப்பு எல்லாம் அடியோடு போய்விட்டது. சரியாகச் சாப்பிடுவதுமில்லை. எப்போதும் சோர்ந்துபோய் படுத்தே இருந்தது. யாராவது அருகில் சென்றால், எப்போதும் இல்லாத புது வழக்கமாக, 'உர்ர்..... உர்ர்....' என்று உறுமியது. சிவகாமியே அதன் அருகில் போகப் பயந்தாள். அப்புவின் சாப்பாட்டை ஈக்களும், எறும்புகளும் மொய்த்துக்கொண்டிருந்தன.

ஆறுமுகம் அப்புவின் நிலையைக் காணச் சகியாமல் ஏழுமலையைக் கூட்டி வந்தார். ஏழுமலை, ஆறுமுகத்திடம் முன்பு வேலை பார்த்தவன். அவரிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவன். அவனிடம், அப்புவைக் கொண்டு போய் மிருக வைத்தியரிடம் காட்டுமாறு சொன்னார் ஆறுமுகம். அப்பு அவனை நெருங்கவே விடவில்லை. எட்ட நின்று சற்று நேரம் அதையே உற்றுப் பார்த்தவன், ஆறுமுகத்திடம் ஏதோ சொல்ல, அவரும் யோசனையுடன் தலையசைத்தார். பின் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தனுப்பினார். சிவகாமி விவரம் கேட்க, "நாளைக்கு வந்து தூக்க மருந்து குடுத்து, கொண்டுபோறேன்னு சொன்னான்" என்றார்.

ஏழுமலை சொன்னதை அப்படியே சொல்ல அவருக்கு வாய் வரவில்லை. ஏழுமலை நாயை உற்றுப் பார்த்தபோதே அது வெறிநோய்க்கு ஆளாகியிருப்பதை கணித்து விட்டான். அதன் தலையில் காதுக்கு மேற்புறம் இருந்த காயம் புரையோடிப் போயிருந்தது. கொஞ்ச நாளாகவே யாரையும் அருகில் நெருங்க விடாததால் காயத்தைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அது வைத்தியம் செய்யும் நிலையைக் கடந்திருந்தது. இப்படியே விட்டால், ஒன்று, பார்ப்போரையெல்லாம் கடிக்கின்ற நிலை வரலாம். அல்லது, இப்படியே உணவின்றிக் கிடந்து, கொஞ்சங்கொஞ்சமாக சித்திரவதைக்குள்ளாகி உயிரை விட நேரிடலாம். எந்த நிலையிலும் யாரையும் கடிப்பதற்கான சாத்தியம் அதிகம். எனவே, அவன் பரிந்துரைத்தது இதுதான்.

பூனைகளை சுருக்கு மாட்டிப் பிடிக்கும் நரிக்குறவர் குழாம் ஒன்று அப்போது கிராமத்தில் முகாமிட்டிருந்தது. அவர்களிடம் சொன்னால் ஒரே சுருக்கில் அப்புவின் கதையை முடித்துவிடுவார்கள். அப்புவின் அவஸ்தையும் நீங்கும்; அதைப் பார்த்து நித்தம் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் சிவகாமியின் கவலையும் நீங்கும்; அது யாரையும் கடித்து வைத்துவிடுமோ என்று நாளும் பயப்படவும் தேவையில்லை என்பதுதான்.
ஆறுமுகம் அவனுடைய யோசனைக்கு அரைமனதாக சம்மதித்து, பணமும் கொடுத்தனுப்பினார். இது தெரிந்தால் சிவகாமியும், சாரதாவும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அப்புவை அங்கிருந்து வெளியேற்றி, எங்காவது கண் காணாத இடத்தில் அதைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆறுமுகம் அப்புவையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பு தலையைத் தரையில் ஊன்றி, கண்களை மட்டும் மேலேற்றி அவரையே பார்த்தவண்ணம் படுத்திருந்தது. வாலை மட்டும் மெதுவாக ஆட்டியபடியே இருந்தது. அன்றிரவு சாப்பிடப் பிடிக்கவில்லை. சிவகாமி காரணம் கேட்டதற்கு எரிந்து விழுந்தார். நெடுநேரம் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டியபின் அப்படியே உறங்கிப் போனார்.

காலையில் ஏழுமலை ஆட்களைக் கூட்டி வந்தபோது, அப்பு இறந்து கிடந்தது. யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் தானே போய்ச் சேர்ந்திருந்தது. ஆறுமுகம் ஒரு குற்றத்தைச் செய்யாமல் தப்பியது போல் உணர்ந்தார். சாகும்போது கூட அவரை வாட்டாமல், மனவேதனைப்படுத்தாமல், அமைதியாய் இறந்து கிடந்த அப்புவைப் பார்த்தார். நேற்று அவரும், ஏழுமலையும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருக்குமோ என்று அஞ்சினார்.

அதற்குப் புரியாமல் இருக்குமா? சில சமயங்களில் அப்பு, நான்கு தெரு தள்ளி எங்காவது நின்றுகொண்டிருக்கும். அவரை அங்கு பார்த்துவிட்டால் ஓடி வந்து வாலாட்டி நிற்கும். 'வீட்டுக்குப் போ!' என்றதும், விழுந்தடித்துக்கொண்டு அவருக்கு முன் வீட்டில் வந்து நிற்கும். "ஏன் ஊர்சுத்திட்டு வரே?' என்றால் குற்ற உணர்வுடன் தரையைப் பார்த்துக் கொண்டு நிற்கும். 'இன்னைக்கு உனக்கு சாப்பாடு கிடையாது' என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான்! தட்டை வாயில் கவ்விக் கொண்டுவந்து அவர் முன்னே வைத்து இறைஞ்சுவது போல் பார்க்கும்.

இத்தனை விஷயங்களைப் புரிந்துகொண்ட அப்புவுக்கு, தன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் புரியாமலா போயிருக்கும்? குட்டியிலேயே என்றோ செத்திருக்க வேண்டியது! தன்னைக் காப்பாற்றி வளர்த்தவர்களே , தன்னைக் கொன்று அந்த பாவத்தைச் சுமக்க வேண்டுமா என்று எண்ணியிருக்குமோ? ஆறுமுகத்தின் மனம் மிகுந்த வேதனைப்பட்டது.

ஆறுமுகம் மலை போல அப்படியே அமர்ந்திருந்தார். சோகம், சந்தோஷம் எதையும் வெளிக்காட்டும் சுபாவம் அவருக்கில்லையாதலால், இறுகிய முகத்துடன் ஏழுமலை குழி தோண்டுவதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். சிவகாமிதான் அழுது தீர்த்தாள். ''பிள்ளை மாதிரி வளத்தேனே! இப்படி அநியாயமாப் போய்ட்டியே!'' என்று கதறினாள். அம்மா அழுவதைப் பார்த்து சாரதாவுக்கும் அழுகை வந்தது.

கொல்லைப்புறத்தில் ராஜாவுக்குப் பக்கத்தில் அப்பு புதைக்கப்பட்டது. சிவகாமி அந்த இடத்தில் பாலூற்றி, பூ வைத்துக் கும்பிட்டாள். சில நாட்களுக்கு, கொல்லைப்புற வாயிலைத் தாண்டும்போது தன்னையறியாமல்' 'ஷ்ஷூ...ஷ்ஷூ..'' என்று குரல் கொடுத்துக் கொண்டே தாண்டினாள். சாரதாவிடம் அப்புவுக்குச் சோறு எடுத்து வைக்கவேண்டும் என்று நினைவூட்டினாள். சாரதா அம்மாவைத் தேற்றினாள்.

ஆறுமுகம் எப்போதும் போல், "ஏழுமலையை வேலி கட்ட வரச் சொன்னேனே.. வந்தானா?" "துணியெல்லாம் உலர்ந்துட்டுதே! எடுக்கக்கூடாதா?" போன்ற கேள்விகளுடன் நுழைந்தார்.

ஓருநாள், ஆறுமுகம் வெளியில் போய்விட்டு வரும்போது, வழக்கத்துக்கு மாறாக அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை சாரதா கவனித்தாள்.

"என்னதான் நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசில? நானும் ஒரு மனுஷிதானே! எத்தனை இழப்புகளைத்தான் தாங்குது? என்னால முடியாது, ஐயா! ஆளை விடுங்க! இனிமேல் எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கங்க" என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். சாரதா ஓடி வந்து பார்த்தாள்.

ஆறுமுகம் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். அவர் கையில் இருந்த வத்தலும், தொத்தலுமான ஒரு சோனி நாய்க் குட்டி, அவளைப் பார்த்து வேகவேகமாக வாலாட்டியது. இதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று சாரதா யோசனையில் ஆழ்ந்தாள்.

49 comments:

 1. அவர் கையில் இருந்த வத்தலும், தொத்தலுமான ஒரு சோனி நாய்க் குட்டி, அவளைப் பார்த்து வேகவேகமாக வாலாட்டியது. இதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று சாரதா யோசனையில் ஆழ்ந்தாள்.

  அடியைப் பிடியடா பரதபட்டா என்று மீண்டும் ஆரம்ப வரிகளில் நிறைந்த மனம் கவர்ந்த கதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 2. நாய் வண்டி ஒன்று தூக்கிப் போயிருக்குமோ என்ற போது வந்த திகீர் உணர்வு வந்துவிட்டது என்றதும் கிட்டிய நின்மதி உணர்வு இரண்டையும் ஒன்றுசேர உங்கள் கதையில் அனுபவித்தேன்.

  அவற்றின் அன்பு மனித உறவுகளுக்கு அப்பாற்பட்டது. அதனை புரியவும் உணரவும் தனியாய் ஒரு மனசு வேணும்.

  அருமையான ஒரு கதையைத் தந்து மனசோடு மிக நெருக்கமாகிவிட்டீர்கள் கீதா.வாலும் தோலுமாய் வந்திருக்கும் விருந்தாளிக்கு ‘சோனிக் குட்டி’ என்றே பெயர் வைத்து விடுவோமா? :)

  ReplyDelete
  Replies
  1. சோனிக்குட்டி - பெயர் நல்லாயிருக்கு. இதையே வச்சிடுவோம். வருகைக்கும் நாய்க்குட்டிக்குப்பெயர் வைத்து வரவேற்றதற்கும் நன்றி மணிமேகலா.

   Delete
 3. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் தோழி.

  http://minminipoochchigal.blogspot.in/2012/03/blog-post_05.html

  ReplyDelete
  Replies
  1. அழைப்புக்கு நன்றி ஷக்திபிரபா. விரைவில் தொடர்வேன்.

   Delete
 4. வாயில்லா ஜீவன்களுக்காக இரங்கும் ஆறுமுகம் ஒரு ஜீவகாருண்ய சீலர் . அவர்போலவே அவர் மனைவியும் கூட. இப்படி ஆதரவுக்காக எத்தனை ஜீவன்கள் நித்தம் நித்தம் ஏங்குகின்றன . ஐரோப்பிய நாடுகளில் மிருகங்களுக்கு ராஜ யோகம் . மிகவும் உருக்கமான கதை தந்திருக்கின்றீர்கள். அப்புவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சந்திரகௌரி.

   Delete
 5. வணக்கம்! இதனை ஒரு கதையாகவே என்னால் நினைக்க முடியவில்லை. உண்மைக் கதையாகத்தான் படித்தேன்.அப்புவின் முடிவு செல்லப் பிராணிகள் வளர்க்கும் அனைவருக்கும் நேரும் சோகம். இதனைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 6. Replies
  1. வலைச்சர அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா. மிகவும் அருமையான தொகுப்புகளாய் அளிப்பதற்குப் பாராட்டுகள்.

   Delete
 7. "எத்தனை இழப்புகளைத்தான் தாங்குறது? என்னால முடியாது, ஐயா! ஆளை விடுங்க"! எங்கள் வீட்டு நாய் இறந்த போது எங்களுக்கிருந்த அதே மன் நிலையை இவ்வரிகள் நினைவு படுத்தின. அவரவர் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் இந்த வேதனை

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலானோருக்கு இந்த வேதனையான அனுபவம் இருந்திருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 8. காலையில் ஏழுமலை ஆட்களைக் கூட்டி வந்தபோது, அப்பு இறந்து கிடந்தது. யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் தானே போய்ச் சேர்ந்திருந்தது. ஆறுமுகம் ஒரு குற்றத்தைச் செய்யாமல் தப்பியது போல் உணர்ந்தார். சாகும்போது கூட அவரை வாட்டாமல், மனவேதனைப்படுத்தாமல், அமைதியாய் இறந்து கிடந்த அப்புவைப் பார்த்தார். நேற்று அவரும், ஏழுமலையும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருக்குமோ என்று அஞ்சினார்.//

  ஆம்,எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் அப்பு தன்னை கொல்ல போவதையும் உணர்ந்து இருக்கும்.

  மனதை கனக்க வைத்தது கதை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

   Delete
 9. இறுதி வரிகள் நாங்கள் எங்கள் செல்ல நாயை
  இழந்தபோது பட்ட அவதியை நினைவுறுத்திப் போனது
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  (கதையெனச் சொல்ல மனம் வரவில்லை)
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. Replies
  1. தங்கள் வருகைக்கும் நெகிழ்வான கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

   Delete
 11. ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க. நாய் வளர்ப்பதும் அதன் மேல் பிரியமும் இருப்பவர்கள் எழுதியது போல் அனுபவம், பாசம் பொங்கி வழிந்தது.

  //ஆனால் நகரமுடியாமல் படுத்திருக்கும் நிலையிலும், அவரைக் கண்டால் தன் குட்டி வாலை 'விசுக் விசுக்' என்று ஆட்டித் தன் நன்றியைத் தெரிவிக்கும். //

  உங்கள் நடையில் இந்த வரிகள் மிகவும் ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ஷக்திபிரபா.

   Delete
 12. உங்க போஸ்ட் எல்லாம் என் dashboard la தெரிய மாட்டேங்குதே :(

  ReplyDelete
  Replies
  1. அடிக்கடி இந்தப் பிரச்சனை வருது. என்ன பண்றதுன்னு தெரியலப்பா.

   Delete
 13. நன்றியுள்ள ஜீவன்களின் அருமையான உணர்வுகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

   Delete
 14. இயல்பாக எழுதி இருக்கீங்க சகோ....

  வேறு வழியில்லாமல் தன்னைக் கொல்ல முடிவு செய்தது தெரிந்தும் தானே உயிர் விட்டதே.... நன்றியுள்ள ஜீவன்.....

  நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவு பிரசுரத்துக்கில்லை என்பதைப் பார்த்து நீக்கிவிட்டேன் வை.கோ.சார். கவன ஈர்ப்புக்கு மிகவும் நன்றி சார்.

   Delete
 16. இயல்பான நடை. எதுவும் முடிவல்ல ஆரம்பம்....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில் குமார்.

   Delete
 17. நன்று கீதா!நல்ல நடை! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சக்தி.

   Delete
 18. அருமையான உணர்வுபூர்வமான அனுபவக் கதை - அனுபவம் என்பது என்னுடைய சொந்த அனுபவம்தான்- அழகிய நடையில் பதியப்பட்டுள்ளது. நன்றி

  மகளிர் தின வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வெகு நாட்களுக்குப் பின்னரான தங்கள் வருகையை மகிழ்வுடன் வரவேற்கிறேன் சாகம்பரி. கதை பற்றியக் கருத்துக்கு மிகவும் நன்றி. மகளிர் தின வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

   Delete
 19. அப்பு -
  எங்கள் வீட்டு வடிவேலை கண்முன் நிறுத்தியது.

  அப்புவின் முடிவே அதற்கும் நேர்ந்தது. வெறிநோய் கண்டு தானாய் எங்கோ போய் விட்டது.

  ReplyDelete
  Replies
  1. வளர்ப்பு மிருகங்களின் இழப்பு தரும் வேதனையை அனுபவித்தவர்களால் அதிகமாய் உணரமுடியும். தங்கள் பின்னூட்டமும் அதை உணர்த்துகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.

   Delete
 20. எல்லோருக்குமே ஏதோ ஒரு வயதில் பாசம் காட்டி வளர்த்த செல்லப் பிராணியின் இழப்பால் தாஙக் முடியாத வேதனை ஏற்பட்டிருக்கும். அதனால் இக்கதையைப் படிக்கும் போது கதையென்று தோன்றாமல் சொந்த அனுபவமோ என்று நினைக்கத் தோன்றியது. எனக்கு எங்கள் வீட்டு ஜிம்மியை இக்கதை நினைவுப்படுத்தியது. இழப்புக்களைத் தாங்க வலுவின்றி ஆறுமுகத்தின் மனைவி கோபப்படுவதும் வத்தலும் தொத்தலுமான நாய்க்குட்டிக்கு என்ன பேர் வைக்கலாம் என்று சாரதா யோசிப்பதும் மிகவும் யதார்த்தம். மிக நல்ல கதை. பாராட்டுக்கள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் நெடியப் பின்னூட்டத்துக்கும் நன்றி அக்கா. வளர்ப்பு மிருகங்களின் இழப்பை பலரும் பல்வேறு சூழலில் அனுபவித்திருப்பார்கள் என்று நீங்கள் சொல்வது உண்மையே. பாராட்டுக்கு நன்றி.

   Delete
 21. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 22. இது கதையென்று நினைச்சு வாசிக்க முடியவில்லை கீதா.”தம்பி”என்றொரு நாயார் என் வீட்டில் இதேபோலத்தான்.அப்பா தம்பி போய்ட்டான் என்று சொல்லி அழுதது இன்னும் காதில்.மனித உறவுகளை விட இவர்களின் இழப்பு பெரும்துயர்.வாசித்து முடிக்க ஒருதுளி கண்ணீர் பொங்கி வழிந்து விழுந்தது.பாராட்டுக்கள் கீதா!

  ReplyDelete
  Replies
  1. உங்க அனுபவம் என்னைக் கலங்க வச்சிடுச்சி. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ஹேமா.

   Delete
 23. மனித உணர்வுகள் எவ்வளாவு மென்மையோ அவ்வளவு மென்மை ஐந்தறிவு ஜீவன்க்ளின் உணர்வுகளும். இருவரது உணர்வுகளையும் விளக்கி சொல்லிவிட்டது உங்கள் சிறுகதை. அருமை. பகிர்வுக்கு நன்றி தோழி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி ராஜி.

   Delete
 24. இந்த பதிவு என் டாஷ் போர்டில் வரவில்லை.ஒரு முறை நாய் வளர்த்து அதை இழந்த பிறகு வேறு நாய் வளர்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. எங்கள் செல்லியைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.இதை கதை என்று எண்ண முடியவில்லை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பலருடைய டாஷ்போர்டையும் என் பதிவுகள் சரிவர எட்டுவதே இல்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை ஐயா.

   இந்தக் கதை வெறும் கற்பனையல்ல. அதிக சதவீதம் உண்மை கலந்திருக்கிறது என்பது உண்மைதான். தங்கள் பதிவையும் விரைவில் பார்க்கிறேன். வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

   Delete
 25. இந்தப் பதிவு என் ரீடரிலும் வரவில்லையே! தற்செயலாகக் கண்டேன்.

  சீக்கிரமே ‘சோனிக்குட்டி’ கொழுகொழுன்னு ஆகிடும் அப்போ!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அப்படித்தான் ஆகுமென்று நானும் நினைக்கிறேன். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.