12 September 2012

அடைகோழி கருப்பி

 
 
 
குறுகுறுக்கும் பார்வையை அங்குமிங்கும் ஏவி,
குறைக்கேவலொன்றை வெகு அமர்த்தலாய்க் கேவி
கூட்டுமூலையோரம் மீண்டும் மீண்டும்
வந்து அமர்ந்துகொள்கிறது அடைகோழி கருப்பி.
 
விரட்ட விரட்ட போக்குக் காட்டி
மறுபடியும் அடைய வந்ததை
ஆத்திரத்துடன் துரத்தியமுக்குகிறாள் ஆச்சி.
 
படபடக்கும் இறக்கையினின்று ஒற்றை இறகு பிய்த்து
அலகில் அலகுக்குத்த முயல்பவளை,
ஆக்ரோஷம் காட்டி அலைக்கழிக்கிறது கருப்பி.
 
முட்டைகளை அபகரித்தாய், போதாதா?
மூக்குத்தியிட்டு என் மென்தவம் களைத்து
மறுகருத்தரிப்புக்கு விரட்டுகிறாயே
மனுஷியா நீயென்று மூர்க்கம் காட்டுகிறது
தன் முரட்டுக்கேவலில்.
 
ஆச்சிக்கும் கருப்பிக்கும் இடையில் நடக்கும்
போராட்டத்தைப் பார்த்தபடி பாயில் கிடக்கிறாள்
பத்துநாளுக்குமுன் பிள்ளைபெற்ற பாதகத்தி ஒருத்தி.
 
கண்மலரா பச்சிளம்சிசுவின் வாயில்
கள்ளிப்பால் புகட்டப்பட்டக் கடைசித் தருணத்திலும்
கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்
செவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்
கொத்திக்குதறிக் கிழிக்கிறது
கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!
 
 
 

20 comments:

 1. கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!
  கொத்திக்குதறிக் கிழிக்கிறது படிப்பவர் மனங்களையும் !

  ReplyDelete
 2. சாட்டையால் அடித்தது போல இருக்கிறது வலிகளின் வீரியம் கருப்பியோடு ஒப்பிடும் அளவிற்கு வீரமிள்ளதவள் தான் குழந்தையை காவு கொடுத்து நிற்கும் பெண் ..................பாராட்டுகள் கீதா என்ன ஒரு வரிகள் ஆச்சர்யத்தின் விளிம்பில் அகல கண் விரிக்கிறேன் நான்

  ReplyDelete
 3. ஆதங்க உணர்வுகளின் வெளிப்பாடு.. ஏனோ கருப்பியின் கேவல் கேட்காதவரையும் ரணமாக்குகிறது!! ஒரு கோழியின் மனக்குமுறல் புதிய அணுகுமுறை...அழகான கவிதையாய் உருபெற்று இருக்கிறது.. அருமை!!

  ReplyDelete
 4. மனதை உலுக்குகிறது கவிதையின் கருப்பொருளும், வீரியமிக்க வார்த்தைகளும்!

  ReplyDelete
 5. இறுதி
  வரியை வாசித்ததுமே
  சிலிருத்து விட்டது உள்ளமும் பின் உடலும்

  அற்புதம் நல்ல சாடல் தோழி

  ReplyDelete
 6. எதிர்ப்பு காட்டினாலும் சினைப்ப‌டுவதையும் முட்டையை ப‌றிகொடுப்ப‌தையும் க‌றுப்பியும் த‌விர்க்க‌ முடியாது எனினும், த‌விப்பெழுகிற‌து இறுதிப்ப‌த்தி க‌விதை வ‌ரிக‌ளில்...

  ReplyDelete
 7. முடிவில் கொந்தளிக்கும் வரிகள்...

  ReplyDelete
 8. கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்

  ஒரு பெண்ணின் இயலாமையைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
  உயிரோட்டமுள்ள கவிதை!
  அருமை கீதமஞ்சரி அக்கா.

  ReplyDelete
 9. அருமை அருமை
  இறுதி வரிகள் படித்ததும்
  அதிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரமானது
  மனம் தொட்ட அருமையான பதிவைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. மனதை தொட்ட வரிகள். அருமை.

  ReplyDelete
 11. கருப்பிக்கு இருக்கும் வீரம் பெண்களுக்கும் வர வேண்டும்! நல்லதொரு படைப்பு!

  இன்று என் தளத்தில்
  ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

  ReplyDelete
 12. //மூக்குத்தியிட்டு என் மென்தவம் களைத்து//

  கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறிய பாதகத்தி// சொல்லால் அடித்த வரிகள்

  நிறையப்பேர் கோழியின் நாசிதுவாரத்தில் சிறு குச்சிபோல குத்துவார்கள் அப்பத்தான் அடைகாக்காமல் உடனே அடுத்த ஈடு முட்டை இட துவங்குமென :((
  சிலர் சில் நீரால் அடித்தும் கழுவுவாங்க பாவம்

  ReplyDelete
 13. அப்பா... கருப்பியின் வீரம் மட்டும் நமது பெண்களுக்கு இருந்தால்....

  நல்ல கவிதை சகோ....

  ReplyDelete
 14. வணக்கம் சகோதரி...
  கவியின் வரிகளில்
  கண்கள் நிலைத்துவிட்டது .....

  பாய்ந்து வா தென்றலே
  பாவிகளை கண்டறிந்தால்
  புயலாக மாறிப்போ
  அங்கே அவர்களை
  புதைகொண்டு வந்துவிடு

  ReplyDelete

 15. மூக்குத்தி சமாச்சாரம் தெரியாது. நுட்பமான கவனிப்பு எழுத்துக்களில் . பாராட்டுக்கள்.

  ReplyDelete
 16. இறுதி வரிகளின் தாக்கம் வெகுநேரம் நின்றது என் நெஞ்சில்!

  ReplyDelete
 17. கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்

  செவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்

  கொத்திக்குதறிக் கிழிக்கிறது
  கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!

  -தாக்கம் விளைவிக்கும் வரிகள்! நன்றீ!

  ReplyDelete
 18. //கொத்திக்குதறிக் கிழிக்கிறது
  கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!/// அருமை

  ReplyDelete
 19. மனத்தை நெருடுகிறது.
  கருப்பியின் கோரக் கொக்கரிப்பு வேண்டும்.

  ReplyDelete
 20. Anonymous6/10/12 21:29

  ''...கள்ளிப்பால் புகட்டப்பட்டக் கடைசித் தருணத்திலும்கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்செவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்கொத்திக்குதறிக் கிழிக்கிறது கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!...''
  அருமையான ஆக்ரோசம், ஆத்திரம் கருப்பி போல. சபாஷ்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலககம்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.