3 August 2011

முன்னுரைகளெனும் பொன்னுரைகல்


மனங்கவர் முன்னுரைகள் பற்றிய தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சாகம்பரி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  மகிழம்பூச்சரத்தைத் தொடர்ந்து மலர்கிறது கீதமஞ்சரி.

1.பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

வாசிப்பின் மகோன்னதம் அறிந்த எவரும் தமிழ் உரைநடை நூல்களின் முன்னோடியென சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் படிக்காமல் இருந்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே. அந்தக் காலத்தில் இயல்பாய் வழங்கப்பட்ட வடமொழிச் சொற்களைப் பரவலாகப் பயன்படுத்தியிருந்தாலும், சுவை குன்றாது, இன்றும் ரசித்துப் படிக்கத் தக்கவகையில் கருவையும் கதையையும் ஒருமித்துப் புனையப்பட்ட ஒரு அருமையான படைப்பாகும்.

புதினத்திலிருந்து ஒரு பகுதி:

சம்பந்தி முதலியார் பிரபலமான திரவியவந்தராயிருந்தும், செலவளிக்கிற விஷயத்தில் அவருக்குச் சமானமான தரித்திரர்கள் ஒருவருமில்லை. அவர் பிராணத் தியாகம் செய்தாலும் செய்வாரே அல்லாது பணத் தியாகம் செய்யமாட்டார். "கொடு" என்கிற வார்த்தையைக் கேட்டால், அவர் காதில் நாராசம் காய்ச்சிவிட்டது போல் இருக்கும். சங்கீதம் வாசிக்கிறவர்கள் "தா, தா" என்று தாளம் போட்டாலும், அவர் சண்டைக்கு வருவார்; யாராயினும் ஒருவர் தாதனைப் பார்த்து "தாதா" என்று கூப்பிட்டாலும் அவர் சகிக்க மாட்டார். இப்படிப்பட்ட கிருபண சிரோமணியை ஞானாம்பாள்  ஐந்து வயதுக் குழந்தையாயிருக்கும்போது ஒரு வார்த்தையினாலே திருப்பி விட்டாள்.

எப்படியென்றால், அவருடைய கிராமக் குடிகள் செலுத்தவேண்டிய குத்தகைப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நாள் அவருடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை அவர், பொக்கிஅறைக்குள் அழைத்துக் கொண்டு போய், அவர்கள் கொண்டுவந்த பணத்தைத் திருப்பித் திருப்பிப் பத்து தரம் எண்ணி வாங்கி வைத்துக் கொண்டு அவர்களுக்குச் செலவு கொடுத்து அனுப்பினார். அவர்கள் வெளியே போகும்போது, "அந்த லோபியின் பணப் பெட்டிகளை நாம் பார்த்துவிட்டோம்; ஆதலால், நாமும் இனிமேல் பணக்காரர்கள் தான். அவரும் பணத்தைப் பார்க்கிறதைத் தவிர செலவழிக்கிறதில்லை. நாமும் அப்படித்தான்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு போனார்கள்.

அப்போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஞானாம்பாள் தகப்பனாரிடம் போய் "ஐயா! லோபி என்றால் என்ன அர்த்தம்?" என்று கேட்டாள். அவர் "லோபி என்றால் ஈயாதவன்" என்று சொன்னார். அவள் "அப்படியானால், உங்களைப் பல பேர்கள் லோபி லோபி  என்று சொல்லுகிறார்கள்.. உங்களுக்கு மகளாயிருக்க எனக்கு வெட்கமாயிருக்கிறது" என்று மழலைச் சொல்லால் உளறிக்கொண்டு சொன்னதைக் கேட்டவுடனே, சம்பந்தி முதலியாருக்கு வெட்கமுண்டாகி அன்று முதல் அவர் லோப குணத்தை விட்டு "தாதா" என்று பல பேரும் சொல்லும்படி புது மனுஷனாக மாறிவிட்டார்.

ஞானாம்பாளுடைய புத்தி தீட்சண்ணியம் தெரியும்படியாக இன்னொரு விசேஷம் தெரிவிக்கிறேன். ஒரு நாள் தமக்குச் சமானமானவர்கள் ஒருவரும் இல்லை என்கிற கர்வத்தோடு கூடிய ஒரு பெரியவர், சம்பந்தி முதலியார் வீட்டுக்கு வந்திருந்தார்;  அப்போது   அவ்விடத்திலிருந்தவர்கள் ஞானாம்பாளைக் காட்டி "இந்தக் குழந்தை இவ்வளவு சிறு பிராயத்தில் அதிக தீட்சண்ணியம் ள்ளதாயிருக்கிறது" என்கிறார்கள். அதைக் கேட்ட அந்தப்பெரியவர் "சிறு வயதிலே புத்திசாலியாயிருக்கிற பிள்ளை, பிற்பாடு மட்டியாய்ப் போகிறது சகஜம்" என்றார்.

உடனே ஞானாம்பாள் அவரைப் பார்த்து "தாங்கள் சிறு பிராயத்தில் அதிக புத்திசாலியாயிருந்திருப்பீர்களென்று நினைக்கிறேன்" என்றாள். உடனே அவர் நாணமடைந்து அவருடைய கர்வத்தை விட்டு விட்டார்.

என்ன ஒரு ரசிக்கத்தக்க  நிகழ்வுகள். அதிலும் இப்புதினம் முழுவதும் சுந்தரத்தண்ணியார், ஞானாம்பாள் போன்ற பெண்களின் அறிவுக்கூர்மையைப் பெரிதாய் உயர்த்திச் சொன்ன பாங்கு பெருமைக்குரியது. இதன் முன்னுரையில் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம்பிள்ளை குறிப்பிடுவதாவது:

சில நாவலாசிரியர்கள் மனித இயல்பை உள்ளது உள்ளபடியே வருணித்திருக்கிறார்கள்.  இவர்கள் மனிதரில் கடையவர்களை வருணிப்பதால் அனுபவமற்ற இளைஞர்கள் இந்த உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர். இந்தக் கதை எழுதுவதில் இந்த முறையை நான் பின்பற்றவில்லை. முக்கியமான பாத்திரங்களை நான் பூரண சற்குணம் படைத்தவர்களாகவே சித்தரித்திருக்கிறேன். பிரபல அற நோக்குள்ள ஆங்கில ஆசிரியர் டாக்டர் ஜோன்சனையே இவ்விஷயத்தில் நான் பின்பற்றியுள்ளேன். அவர் ராம்ப்ளர்என்னும் நூலின் நான்காவது பகுதியில் கூறுகிறார்.
"வரலாற்று அடிப்படைக் கதைகள் தவிரப் பிறவற்றில் நற்குணத்துக்குச் சிறப்பான உதாரணமாக விளங்கும் பாத்திரங்களை ஏன் சிருஷ்டிக்கலாகாது என்பது எனக்கு விளங்கவில்லை. நற்குணமட்டுமென்றால் தெய்வீகத்தன்மை வாய்ந்ததென்றோ, நடக்கக்கூடாத சம்பவமென்றோ அர்த்தமில்லை. ஏனெனில் நாம் உணரமுடியாததைப் பின்பற்ற மாட்டோம். ஆனால் மனிதர்கள் முயற்சித்து அடையக் கூடிய உயர்தர-தூய்மை மிக்க-நற்பண்பு புரட்சிகரமான சந்தர்ப்பங்களில் சில விபத்துகளைச் சமாளிப்பதிலோ அல்லது அனுபவிப்பதிலோ நாம் காட்டக் கூடிய சிறப்புக்களை நாம் அடையலாம். அல்லது நாமே செய்து காட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. தீமையையும் காட்ட வேண்டியதுதான்; ஆனால் காட்டப்படும் தீமை அருவருக்கத் தக்கதாக இருக்க வேண்டும். தீமை தோன்றும் இடங்களில் எல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும். அதன் அற்புதத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும். ஏனெனில் தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதை யாரும் கண்டு அஞ்சமாட்டார்கள்."

எத்தனை சாசுவதமான உண்மை? பொன்னின் தரம் நோக்க உதவும் பொன்னுரைகல் போலாம் முன்னுரைகள் என்னும் பொன்னுரைகள். இத்தகைய முன்னுரையிலிருந்தே சமுதாயத்தின் பால் அவர்கள் கொண்டுள்ள அக்கறை புலப்படுகிறதே.... பிரதாப முதலியார் சரித்திரம் போன்ற பண்டையப் புதினங்களிலிருந்து நகைச்சுவைக் காட்சிகளைக் காப்பி அடித்து தம் திரைப்படங்களில் புகுத்திக்கொள்ளும் மேதாவிகள், இந்தக் கருத்தையும் மனத்தில் கொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்? சமீப காலமாய் திரையில் தோன்றும் கதாநாயகர்களின் தோற்றமும் குணாதிசயங்களும் விரும்பத்தகாதவையாகவே உள்ளன. இந்நிலை என்றுதான் மாறுமோ? 

2.தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?- சொ.ஞானசம்பந்தன்

தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட நம்மில் பலரும் இன்றும் பிழையின்றித் தமிழ் எழுதுவதை ஒரு சவாலாகவே உணர்கிறோம். அத்துர்பாக்கியத்தைத் துரத்த இந்நூல் பெருமளவில் உதவும். சொற்பிழை, பொருட்பிழை, சந்திப்பிழை, பொருத்தப் பிழை, சுருங்கச் சொல்லாமை போன்ற பல்வேறு பிழைகளையும் விரட்டித் தமிழின் நலம் பேண உதவும் இந்நூலை, தமிழைப் பிழையின்றி எழுத விரும்பும் ஒவ்வொருவரும் தம்மிடத்தில் வைத்திருக்கவேண்டியது மிக அவசியம்.
புத்தகத்திலிருந்து....

நூலின் அழகுகள் பத்து எனப் பட்டியல் இடுகிற தமிழ் இலக்கணம் முதலிடத்தைச் சுருங்கச் சொல்லலுக்கு அளிக்கிறது. சில சொற்களால் கருத்தைத் தெளிவுபடுத்த இயலாதவர்களே நிறையப் பேசுவார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

ஆங்கிலமும் They talk most who have the least to say என்று வளவளாக்காரர்களை எள்ளுகிறது. இக்கருத்துத்துகள் பேச்சுக்கே அன்றி எழுத்துக்கும் சொல்லப்போனால், பேச்சைவிட எழுத்துக்கே மிகுதியும் பொருந்தும். சொற்செட்டைக் கடைப்பிடியாமையே சுருங்கச் சொல்லாமை. இதைத் தவிர்க்க விரும்பி, அவசியமானதை மட்டுமே எழுதுகிறோம் என்று எண்ணிக்கொண்டு கருத்துப் புரியாமல் போகும்படியோ குழப்பம் ஏற்படும்படியோ ஒரேயடியாகச் சுருக்கிவிடவும் கூடாது. அப்படிச் சுருக்குதல்  'குன்றக்கூறல்'  என்னும் குற்றம்.
சுருங்கச் சொல்லலின் சிறப்புக் கருதியே பள்ளிகளில் சுருக்கி எழுதும் பயிற்சி தரப்படுகிறது.

காட்டுகள்:
அச்சப்படுதல் - அஞ்சுதல்
அலங்காரம் செய் - அலங்கரி
அழகான பெண் - அழகி
அன்றன்று பெறுகிற கூலி - அற்றைக்கூலி
இரண்டு பேர் - இருவர்
இன்று செய்யவேண்டிய வேலை - இன்றைய வேலை
ஐந்து ஆயிரம் – ஐயாயிரம்
இப்புத்தகத்தில் பிழைகளை வகைப்படுத்தி அவ்வகைகள் ஒவ்வொன்றுக்கும் பல பயிற்சிகளும்  திருத்தங்களும் தந்து, ஐயம் நீக்க உதவியுள்ளார். முன்னுரையில் இன்றைய தமிழின் சீர்குலைவு பற்றிய தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர் சொ.ஞானசம்பந்தன்.
அதிலிருந்து...

ஆங்கிலத்தைக் கண்ணுங் கருத்துமாய்த் தப்பு நேராதபடி, தேவைப்படும்போதெல்லாம் அகராதியைப் புரட்டி அறியாமையையோ, ஐயத்தையோ போக்கிக் கொண்டு அக்கறையுடன் எழுதிய (இன்றும் எழுதுகிற) தமிழர், தம் தாய்மொழியைக் கை போனவாறு சிதைத்துச் சீர்குலைத்து வதைத்தமை கண்டு திரு.வி.கல்யாண சுந்தரனார் எவ்வளவு வேதனையுற்றிருந்தார் என்பதை அவரது இக்கூற்று வெளிப்படுத்துகிறது.
"ஆங்கிலத்தின் நினைவு தோன்றும்போது எழும் மொழி வனப்பு, தமிழ் நினைவு தோன்றும்போது ஏன் எழுவதில்லை? தமிழ்த்தாயை எவ்வாறாவது குலைக்கலாம்;  ஆங்கிலத் தாயை ஓம்பினால் போதும்' எனும் எண்ணம் இந்நாட்டவர்க்கு உதித்திருக்கிறது போலும்! ஈன்ற தாய் பட்டினி! மற்ற தாய்க்கு நல்லுணவு! என்னே காலத்தின் கோலம்!"

ஒரு தலைமுறைக்குப் பின்பு, 1974 இல் தீர்ப்பாளர் எஸ்.மகராசன் தம் 'தெய்வமாக்கவி' என்னும் நூலில் கீழ்க்காணும் கருத்தைத் தெரிவித்தார்.

"இன்றைய பிரெஞ்சு உரைநடையின் நிலையை அடைவதற்கு ஆங்கிலத்துக்கு நூறாண்டு தேவை; இன்றைய ஆங்கில உரைநடையின் தரத்தை அடையத் தமிழுக்கு நூறாண்டு தேவை."

இவரும் தமிழின் தாழ்நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். சரி, தமிழின் இன்றைய நிலை என்ன? நல்ல தமிழ் எழுதுவோரிலும் கணிசமான எண்ணிக்கையினர் நம் கண்ணையும் கருத்தையும் உறுத்துகிற பலவகைப் பிழைகளை இழைக்காமல் இல்லை. பேராசிரியர் மா.நன்னன் இந்நிலை கண்டு குமுறியிருக்கிறார்.

"பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ் எழுத்து, உரைநடை மரபு மாறிவருகின்றன. தமிழறிஞர்கள் எழுதுவதிலும் குறை இருக்கிறது. தமிழில் பிழையின்றி எழுதப் பள்ளிகளில் பாடத் திட்டம் வைக்கவேண்டும்."

இவ்வளவுக்கும் பிழையில்லாத் தமிழ் எழுதுவதற்கு வழிகாட்டும் சிறந்த நூல்களை அறிஞர் பலர் அவ்வப்போது வெளியிட்டுள்ளனர்;  அவற்றைப் படிப்பதும் அவற்றின் வழி நிற்பதும் தமிழர் கடமை.

பல்வேறு தமிழறிஞர்களின் ஆழ்ந்த மனவேதனையைப் பிரதிபலிக்கும் முன்னுரை கண்டபின்னும் தாம் எழுதும் தமிழில் அக்கறை கொள்ளாமல் போமோ வாசிக்கும் நெஞ்சங்கள்?

3.வர்ணங்கள் கரைந்த வெளிதா. பாலகணேசன்

இன்றும் ஆழ்மனம் குடையும், அடிவயிற்றைப் பிசையும் வேதனைகளையும் வடுக்களையும்  உள்ளடக்கிய ஈழத்தமிழரின் வாழ்வும், சோகமும், மாறாத நம்பிக்கையின் அடித்தளத்திலேயே தம் எழுத்துக்களால் பவனிவந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய அற்புத படைப்புகளில் ஒன்று தா.பாலகணேசன் அவர்களின் இக்கவிதைத் தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும் உள்ளடக்கிய வாழ்க்கை சொல்லும் சேதி ஏராளம். புத்தகம் லேசானது. அதில் புதைந்திருக்கும் எழுத்துக்களின் கனமோ மனம் சுமக்க இயலாதது. இதன் முகப்பில் ஆசிரியர் தா.பாலகணேசன்  தன்னுரையாய் சொல்வதாவது: 

எல்லாவற்றையும் என்னவென்று சொல்லமுடியாத
பெருந்துயர் கவ்விக்கொண்டு திரிகிறது.
அலைதலும், அடையாளமிழத்தலும், தொலைதலும் எனக்
 கூவிக்கொண்டோடுகிறது இந்த வாழ்க்கை ரயில், இருளைக் கிழித்து.

இந்த இருளைக் கிழித்து என்னைச் சுவாசித்தபடி,
என் இதய வெளியிலிருந்து வழிகிறது வார்த்தைகள்.
வழியும் இவரது வார்த்தைகளில் வலி அதிகம். புத்தகத்துக்கு அணி சேர்க்கும்  முன்னுரை பொழிந்திருப்பவர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்  மு.பொன்னம்பலம் அவர்கள். ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்து, அதில் கவியின் நாடியைக் கச்சிதமாய்க் கண்டு, நம்மையும் கையோடு அழைத்துச் சென்று களங்காட்டுகிறார். இதோ அவரது முன்னுரையிலிருந்து....


புலம்பெயர்ந்து, சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்களிடையே ஓர் இனந்தெரியாத துயரின் புரையோடல். அத்துயர் அவர்கள் விட்டு வந்த மண்ணையும் மக்களையும், அவர்களும் தாமும் படும் அவலத்தையும் சுற்றி மையங்கொள்கிறது. 'என்று நாம் எம் மண்ணுக்குத் திரும்புவோம்? என்றெமக்கு நிம்மதி ஏற்படும்?' என்ற கேள்விகளே திரும்பத் திரும்ப அவர்களைத் துளைக்க,அவர்கள் துயரில் வீழ்கின்றனர்.

இந்தப் பின்னணியில் சூல்கொண்டு, ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் எண்ணிறந்த கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், கட்டுரைகள் நூல்களாக அச்சடிக்கப்பட்டு மழைக்காலப் புற்றீசல்கள் போல் வந்து விழுகின்றன. ஆனால் இவற்றில் எத்தனை தமது தரத்தைப் பேணி இலக்கியமாய் மிளிர்கின்றன?

இது முக்கியமான கேள்வி. 'இலக்கியம்' என்று தேங்கிக் கிடக்கும் இந்த சேற்று நீர்ப்பரப்பில், திடீரென மொட்டவிழ்த்து நீரின்மேல் தலைநீட்டும் தாமரையாய் ஒன்றிரண்டே நிகழ்கின்றன. அத்தகைய ஒரு நிகழ்தலை அல்லது மலர்தலை தா.பாலகணேசனின் வர்ணங்கள் கரைந்த வெளி செய்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்ட, புலம்பெயர்ந்து வாழும் மக்களின் துயர்த்தை ஏனைய கவிஞர்கள் போலல்லாது, கட்டங்கட்டமாக அதன் பல்வகைப் பரிமாணங்களை, பரிணாம வளர்ச்சியை ஒரு கருத்தியல் பின்னணியில் நம்முன் வைக்கிறது, வர்ணங்கள் கரைந்த வெளி கவிதைத் தொகுப்பு.

புலம்பெயர்ந்த ஒருவன் முதலில் தான் விட்டு வந்த
'கத்தும் கடலை
காற்றுப் பெருவெளியை
கரும்பனைக் கூடலை'

நினைத்து மனம் ஏங்குகிறான். இன்னும் அவனது அப்பாட அப்பா நட்ட முற்றத்து வேம்பும், அவன் காதல் சின்னம் பொறித்த பூவரசும் அவன் நினைவில் வர, அவன் பொங்கும் மனதில் எழுங்காட்சிகள், யாழ்ப்பாணத்துக் கிராமங்களின் அழகையும் அங்கு நிகழந்த துயரங்களையும் எம்முன் அள்ளி வருகின்றன.

'நானும் என் பூவரசும்' கவிதை இப்படி எம்மோடு உரையாடுகிறது.

'கன்னங்கரிய இருளில்
புதைந்து
பூவரசே
காற்றோடு நீ பேசுகின்ற
கதைதான் என்ன?
கனவுகளின் மீதும்
காற்றாடும் சிறு பொழுது தன்னிலும்
ஏங்கிட வைக்கின்ற
காதலை
என் நெஞ்சுள்
எப்படிப் புதைத்தாய்?

என்னவளின் முதல் எழுத்தும்
என் பெயரின் முதல் எழுத்தும்
உன் முதுகில் பொறித்தேன்
வாழி என்றாய்!

தாழ்ந்த நின் சடை
பூமியின் நிழலாய் விழ
தணிந்த மாலைப் பொழுது தன்னில்
முதுகைச் சாய்த்து
முடிவிலா வெளியைப் பற்றிக்
கலந்திருந்த உறவின் பிரிவால்
உழல்வது நீ மட்டுமா?
என்று இங்கே இக்கவிதை யாழ்ப்பாணத்தின் அழகைச் சொல்லிவருகிறதென்றால், 'தூங்கா இரவு' அதன் துயரத்தை அள்ளி வருகிறது.

'காற்று கரும்பனைகளை
அசைத்து உயிர்ப்பித்தபடி
சூரியனும் முகம் சிவந்து
சீற்றத்தோடு
வேலிக்கதியாலிருந்து
துயர் உரைக்கும் ஒற்றைக் காகம்

அண்ணனின் சைக்கிள்
ஈச்சமரத்துப் பற்றைக்குள்
முட்கள் நெருடியபடி
இறுதிக்கணத்திலும்
ஓங்கியெழும் எண்ணம் கொண்டு அவன்
கைகள் தாய் மண்ணை இறுகப் பற்றியபடி

காற்றில் மந்தமாக ஒலித்த
துப்பாக்கிச் சுடு குரல்
வீட்டின் சாளரங்களையும் உதைத்தது

விசாரணைக்கென
அழைத்துச் செல்லப்பட்ட
அப்பாவின் சாய்மனைக் கதிரை
வீட்டுத் திண்ணையில்
தனித்துக் கிடந்தது

முகாரித்தழும்
திண்ணை முற்றத்தில்
ஏற்றிவைத்த விளக்கின் சுடர் காத்து
தூங்காத இரவுகளுடன் அம்மா... இன்னும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.

போர்க்காலத் தமிழீழ நிலவரத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவருகிறது இக்கவிதை. எத்தனையோ பக்கங்களில் விபரிக்கப்படும் சிறுகதையால் கூடச் சொல்லமுடியாத விஷயத்தை, இச்சிறுகவிதை மிகத் தத்ரூபமாக எடுத்தியம்பிச் செல்கிறது.
சேற்றுக்குளத்திலே கிடந்து
கும்மிருட்டுக் கலைய
மலரும் பொற்றாமரை போலும்
மகிழ்வினை எப்படி பிள்ளைகளுக்கு
பூத்துக்காட்டுவது?

ஏன் இந்தக் கொடுமை? அவர்களை அகதியாய்த் திரிகவென யார் சபித்தார்? யார் செய்த பாவம் இது? எல்லாவற்றுக்கும் காரணம் மனிதனேதான். நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாகப் பீற்றிக்கொள்ளும் மனிதன் இனவாதம், நிறவாதம், மதவெறி, சாதியம், சுரண்டல், பதவிமோகம் என்று தனக்குள் இருந்து வெளிக்கிளம்பும் சாத்தானின் பிடியிலிருந்து தன்னை மீட்டெடுக்காத வரை இதுதான் தொடரப்போகிறது.

நிம்மதி எவருக்கும் கிட்டப்போவதில்லை. இங்கேதான் கவிஞர் வர்ணங்கள் கரைந்த வெளியைக் கூவியழைக்கிறார்.

எல்லா வர்ணங்களும் சிந்திக் கரையும் நிலையில் பயணம் ஒன்றிற்காகக் காத்திருக்கிறார். அந்தப் பயணம் எப்படிப்பட்டதாக அமையும் என்பதை நாம் யூகிக்கலாம். அந்தப் பயணம் அவர் அவாவி நிற்கும் வர்ணங்கள் கரைந்த அடுத்த இசைப்பை நோக்கியதாக அமையாதா? இதோ அவரின் ரயில் பயணம் கவிதை அதை நோக்கித்தான் ஓடுகிறது.

கட கட கட கட கட கட
கட கட கட கட கட கட

இருண்ட கருங்கோட்டையைத்
தகர்த்துக்கொண்டு
தாவியே ஓடுது ரயில்'

என்று தொடங்கும் இக்கவிதை மனிதனால் உண்டாக்கப்பட்ட அத்தனை சுயநலக்கோட்டைகளையும் தகர்த்துக்கொண்டு ஓடத்தான் போகிறது.

இப்படி நம்பிக்கையுடன் முடிக்கிறார் அவர். ஆதங்கமும் ஆயாசமும் நிறைந்து வலி கொண்ட எழுத்துக்களுக்கு வலு சேர்க்கும் முன்னுரையன்றோ?

4.வேருக்கு நீர் - திருமதி ராஜம் கிருஷ்ணன்

பெண்களுக்காகக் எழுதுகோல் ஏந்திய  அன்றைய பிரபல எழுத்தாளரும் தமது 'வேருக்கு நீர்' நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசில் பெற்றவருமாகிய திருமதி ராஜம் கிருஷ்ணன், தம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்ததன் மூலம் தம் புத்தகங்களுக்கு எழுதப்படும் முன்னுரையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 400 கொலைகள் செய்த, பீகார் கொள்ளைக்கூட்டத்தலைவன் டாகுமான்சியை சந்திக்க முடிவெடுத்து, சம்பல் பள்ளத்தாக்கில் சில காலம் வாழ்ந்ததும், அவன் பேசமறுத்தும் இவர் விடாப்பிடியாக பொறுமை காத்து, அவனிடம் பேசி தகவல்கள் திரட்டியதும் எத்தனை மனோவலிமையைக் காட்டுகின்றன. அதன் விளைவாக முள்ளும் மலர்ந்தது நாவலை எழுதி முடித்ததாகவும், அதற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணனை சந்திக்க பலமுறை முயன்றும் முடியாமல், அடுத்து வினோபா பாவேயிடம் சென்று வாங்க முடிவு செய்தாராம். அவரோ,  "நான் சந்நியாசம் வாங்கிக்கொண்டவன், எனவே என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது" என்றாராம். திருமதி ராஜம் கிருஷ்ணனோ அங்கேயே சத்தியாகிரகம் செய்து,  "நீங்கள் தரும்வரை நான் இங்கேயே அமர்வேன்" என்று கூறி அமர்ந்துவிட்டாராம். மனம் நெகிழ்ந்த வினோபா பாவே "ஆசிர்வாதங்கள். அன்புடன் பாபா" என்று தமிழிலேயே எழுதிக் கையெழுத்திட்டாராம்.

புத்தகம் எழுத, பட்ட சிரமத்துக்கு எந்த வகையிலும் குறைந்திடாது,  அதற்கு முன்னுரை எழுதி வாங்க அவர் பட்ட சிரமம்.

தம்முடைய வேருக்கு நீர் புதினத்தின் முன்னுரையில் திருமதி ராஜம் கிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

அரசியல் நிலைக்குக் காரணமான அறியாமையும் வறுமையும் இசைந்துவிட்டால், வன்முறைக் கிளர்ச்சிகள் தோன்றாமலிருக்க முடியாது. அந்நாளில் உயர்மட்டத்தில் விருந்து போன்ற வைபவங்களில் ஒழுக்கச் சிதைவு ஒன்றே குறியாக இருப்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பும் பெற்றேன். தனிமனித ஒழுக்கம் சமுதாயத்துக்கு என்ற அடிப்படையான காந்திய இலட்சியங்கள், நழுவிப்போய்விட்டன. அந்நாள், எனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியும் துயரமும் இந்நவீனத்தைப் புனையத் தூண்டுகோலாயின.

புறவாழ்வில் ஏற்படும் பாதிப்புகளினால் எனது, மன அரங்கில் ஏற்படும் கருத்துக்களும் கிளர்ச்சிகளும் எனது இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன. நாவல் என்ற இலக்கிய உருவை நான் எனது கருத்து வெளியீட்டு மொழியாகக் கொண்டிருக்கிறேன்.

இந்த முன்னுரையின் ஊடே யமுனாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். புற உலகின் அறைகூவல்களை எதிர்நோக்கத் தன்னுள் ஒரு யமுனா உருவானதாகப் பெருமை கொள்கிறார். புதினத்திலிருந்து சிறு பகுதி...

"இந்தப் போலிகளுக்கெல்லாம் சாவு மணி அடித்து உண்மையான தியாகிகளை நாட்டுப்பற்று உள்ளங்களைச் சேர்த்து, அரசியலைப் புனிதமாக வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடனே நான் அரசியலுக்கு வந்தே மிஸ் யமுனா. நான் ஏற்கெனவே நம் வட்டத்திலேயே நாலு கூட்டங்களுக்கு காந்தி நூற்றாண்டு விழாக்கொண்டாட ஏற்பாடு பண்ணியாச்சு. உங்களுக்கு நல்ல பின்னணி, படிப்பு, பர்ஸனாலிட்டி, பெண்ங்கற கிளாமர் எல்லாம் இருக்கு. நீங்க சும்மா மேடையில் நின்னாலே போதும், கூட்டம் தன்னால் மயங்கிடும்" என்று சொல்லிவிட்டு இந்துநாத், கண்ணாடியில் அவள் முக தெரியாதபடி நகர்ந்து கொள்கிறான்.

"நீங்கள் நினைப்பது போல் என் எண்ணங்களில் பொதுக்கூட்டங்களும் தலைமைப் பதவியும் கொஞ்சமும் கிடையாது, உண்மையைச் சொல்லப்போனால் நான் தப்பித் தவறிக் கூட அரசியல் பக்கமே போக விரும்பவில்லை. "
…..  ……  …..
…..  ……  …..
…..  ……  …..

"அரசியல் வேண்டாம்! அப்ப சர்வோதயம் அது இதெல்லாம் எப்படிச் செயல்படும்? பேப்பரில் ஒரு நாலு வரிச் செய்தி போட வேண்டுமானால் அதற்கு ஒரு மந்திரி பேர் இருந்தால்தான் வரது. அரசியல் பதவிங்கற துருப்புச் சீட்டு இல்லாமல் ஒண்ணும் நடக்காது. அதனால் அரசியல் பதிவியைச் சம்பாதிக்க முதலில் முயற்சி செய்யணும். அதில்லாமல் ஒரு சுக்கும் நடக்காது,"

யமுனா மெளனமாகிறாள்.
அவர்களுடைய கானகப் பகுதிகளில் அரசியல் கூட்டங்கள் நடப்பதில்லை என்றாலும் பல் இடங்களில் அவள் அரசியல் கூட்டங்கள் கேட்டதில்லையா? எதிர்க்கட்சிக்காரர்கள் பன்றியை, கழுதையைக் கூட்டத்தில் புகுத்துவார்கள். கட்சித் தலைகளின் நடத்தைகளில் அவதூறுகளைக் கோத்து வீசுவார்கள். அடுக்குமொழி அலங்காரங்கள்; நீதி நூல்களிலிருந்து மேற்கோள்கள் - சொற்களே ஆயுதங்கள்! அத்தகைய அரங்குகளுக்கா அவள் தயாராக வேண்டும்?

இன்றைக்கு நாற்பதாண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட புதினம் என்றாலும் பெரிதாயொன்றும் அரசியல், சமுதாய மாற்றங்கள் இந்நாள்வரை நிகழ்ந்துவிடவில்லை என்பதற்கு இந்நூலே சாட்சி.  சமுதாயத்தின் பெரும்பான்மைப் போக்குடன் சமரசம் செய்துகொள்ள துளியும் விரும்பாது,  காந்தியப் பாதையிலிருந்து ஒரு கணமும் விலகாமல்  வாழவிரும்பும் யமுனாவைப் போன்றவர்களுடைய வாழ்க்கை இன்றும் பெரும்போராட்டமே. ஆதரவற்று அரசு மருத்துவமனையில் அவலத்துக்கிடமாய்க் கிடந்த தம் இறுதி நாட்களில் திருமதி ராஜம் கிருஷ்ணன் அதை அனுபவித்திருக்கக்கூடும்.

பதிவுலகத்துக்குப் புதியவள் என்பதால் இதுவரையிலும் தொடர்ந்தவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. முன்பே எழுதியிருப்பவர்களைக் குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும். இப்பதிவைத் தொடருமாறு அன்புடன் கோரப்படுபவர்கள்:

1.  வாசிப்பின் முதற்படியில் இருப்பதாய்ச் சொல்லிக்கொண்டு மனச்சிதறல்களை அநாயாசமாய் வெளிப்படுத்தும் பாலாஜி சரவணா 
2.  வார்த்தைகளால் தவமியற்றி வரம் கேட்கும் அருட்கவிச்சித்தன் சிவகுமாரன் 
3.  அன்பை ஆயுதமாயேந்திய,  எழுதுவதை விடவும் வாசிப்பில் சிநேகம் கொண்ட சிவா   

4. வாசிப்பின் ஈடுபாட்டை வலையமைப்பின் வடிவில் உறுதிப்படுத்தும் புதுமையானவன் ரங்கன். 

17 comments:

 1. வணக்கம் கீதமஞ்சரிமா
  முதலில் நன்றி
  எனக்கும் இலக்கியத்துக்கும்
  ஏன் தமிழுக்கும் நெடுந்தூரம்

  எழுதின படிப்பேன்
  தூக்கம் வரும் உடனே தூங்கிடுவேன்.

  உங்கள் புலமை கண்டு மிக்க சந்தோசம்..

  அதில ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டும் பதில் அன்றன்று பெறுகிற கூலி - அற்றைக்கூலி அல்லது தினக்கூலி இருக்கலாம்

  ReplyDelete
 2. இந்த தொடருக்கு
  பிரபல இட்லி புகழ் அப்பாவிதங்கமணி அவர்கள்
  தொடருமாறு உங்கள் அனுமதியுடன் கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
 3. //இவர்கள் மனிதரில் கடையவர்களை வருணிப்பதால் அனுபவமற்ற இளைஞர்கள் இந்த உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர்.//
  இந்த கருத்து திரைப்படத்துரையினருக்கும் பொருந்தும்.
  //காட்டப்படும் தீமை அருவருக்கத் தக்கதாக இருக்க வேண்டும். தீமை தோன்றும் இடங்களில் எல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும். // இவை எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கின்றன. சிதிலமடைந்து கொண்டுவரும் கலாச்சாரம் பற்றி கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் 'கலாச்சாரம் அழிதுவிட்டது' என்று கூப்பாடு போட்டும் தொடர்ந்து எழுதுவார்கள்.

  //பிரதாப முதலியார் சரித்திரம் போன்ற பண்டையப் புதினங்களிலிருந்து நகைச்சுவைக் காட்சிகளைக் காப்பி அடித்து// அது அந்த காலத்த்லிருந்தே தொடர்கிறது.
  //பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ் எழுத்து, உரைநடை மரபு மாறிவருகின்றன. // முறையான வார்த்தைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
  //அலைதலும், அடையாளமிழத்தலும், தொலைதலும் எனக் கூவிக்கொண்டோடுகிறது// மனம் எத்தனை முறை இந்த விசயத்தை கடந்தாலும் கேள்விகள் எழுவதையும் பதில்கள் கிட்டாமல் போவதையும் தவிர்க்க முடிவதில்லை , கீதா.

  //புறவாழ்வில் ஏற்படும் பாதிப்புகளினால் எனது, மன அரங்கில் ஏற்படும் கருத்துக்களும் கிளர்ச்சிகளும் எனது இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன.// ஔவையார் காலத்திலிருந்து பாராட்டத்தக்க அரசியல் பார்வை பெண்களிடம் இருக்கிறது. ஆனால், இது போன்ற பார்வை ஆட்சியாளர்களிடம் (பெண்களாக இருந்தாலும்) இல்லையே ஏன்?

  இந்த பதிவிலிருந்து ஒன்று புரிகிறது. உண்மையிலேயே உண்ர்வுகளும் ஒத்துப்போன நட்புதான் நம்க்கிடையில் உள்ளது. பாராட்டுக்கள் கீதா.

  ReplyDelete
 4. இது சிவாவிற்கு, பதிவை தொடர்கிறீர்களா இல்லையா என்று சொல்லாமல் அது என்ன பக்கத்து இருக்கைகாரரை மாட்டிவிடுவது.

  ReplyDelete
 5. கீதா உண்மையாவே அசந்திட்டேன்.இத்தனை வாசிப்புத் திறனா !லோபி அர்த்தம் தெரிந்துகொண்டேன் !

  ReplyDelete
 6. சாகம்பரி said...
  இது சிவாவிற்கு, பதிவை தொடர்கிறீர்களா இல்லையா என்று சொல்லாமல் அது என்ன பக்கத்து இருக்கைகாரரை மாட்டிவிடுவது.
  4/8/11 01:13//


  தங்கள் அதிகமான வாசிப்பு மிக்க சந்தோசம்
  அந்த அளவுக்கு எல்லாம் வாசிப்பது கிடையாது இருந்தாலும்

  முயற்சிக்கிறேன்

  அன்பான அழைப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  டீச்சர் நீங்க இருக்கும் இடத்திற்கும் திறமைக்கும் சிவா ஒண்டும் இல்லை.

  அடியன் மிக சிறியவன்

  யான் ஒன்றும் அறியேன் பராபரமே.

  (இந்த உலகம் நம்மை இன்னமுமா நம்பிக்கிட்டு இருக்கு அவ்வவ்)

  ReplyDelete
 7. பிரதாப முதலியார் சரித்திரத்திருந்து நீங்கள் எடுத்தாண்ட பகுதி ஒரு சிறுகதைக்குரிய அத்தனை தகுதியையும் பெற்றிருக்கிறது. அது தான் நாவலாசிரியரின் சிறப்பம்சம்.

  ..பதிவில் உங்கள் ரசனையின் முதிர்ச்சி தெளிவாகத் தெரிகிறது.

  ReplyDelete
 8. மாட்டி விட்டீங்களே கீதா மேடம்.எனக்கு கவிதையை தவிர வேறொன்றும் தெரியாது. உங்கள் அளவுக்கு எனக்கு வாசிப்புப் பழக்கமும் அதிகமில்லை. வேறு ஏதாவது ப்ராஜெக்ட் கொடுங்களேன் ப்ளீஸ்.

  ReplyDelete
 9. //வணக்கம் கீதமஞ்சரிமா
  முதலில் நன்றி
  எனக்கும் இலக்கியத்துக்கும்
  ஏன் தமிழுக்கும் நெடுந்தூரம்

  எழுதின படிப்பேன்
  தூக்கம் வரும் உடனே தூங்கிடுவேன்.//

  வணக்கம் சிவா. எழுதுவதை விடவும் படிப்பதில் ஆர்வம் என்று உங்கள் வலைப்பூவில் எழுதியிருக்கக்கண்டே உங்களை அழைத்தேன். முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது? உங்களை ரசிக்கவைத்த புத்தகங்கள், எழுத்தாளர்களிடமிருந்து பதிவுக்கான விஷயங்கள் கிடைக்கலாம். முயற்சி செய்துதான் பாருங்களேன். வருகைக்கு நன்றி.

  //உங்கள் புலமை கண்டு மிக்க சந்தோசம்..//

  புலமையெல்லாம் இல்லை. தமிழின் மீதுள்ள ஆர்வம் மட்டுமே எழுதவைக்கிறது. நானும் உங்களைப்போல் ஒரு வாசகிதான்.

  //அதில ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டும் பதில் அன்றன்று பெறுகிற கூலி - அற்றைக்கூலி அல்லது தினக்கூலி இருக்கலாம்.//

  இது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டப் பகுதி. ஆசிரியரின் கருத்தையே சாரும். குறிப்பிட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 10. //இந்த பதிவிலிருந்து ஒன்று புரிகிறது. உண்மையிலேயே உணர்வுகளும் ஒத்துப்போன நட்புதான் நமக்கிடையில் உள்ளது. பாராட்டுக்கள் கீதா.//

  உங்கள் உணர்வுகளோடு நானும் ஒத்துபோகிறேன் என்பதிலும், ஊடே இழையோடும் நட்பும் கண்டு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது சாகம்பரி.பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 11. //கீதா உண்மையாவே அசந்திட்டேன்.இத்தனை வாசிப்புத் திறனா !லோபி அர்த்தம் தெரிந்துகொண்டேன் !//

  உங்க படைப்புகளை விடவா அசத்தல்? அற்புதக் கவித்திறன் கொண்ட உங்களிடமிருந்து பாராட்டு கிடைப்பதை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 12. //பிரதாப முதலியார் சரித்திரத்திருந்து நீங்கள் எடுத்தாண்ட பகுதி ஒரு சிறுகதைக்குரிய அத்தனை தகுதியையும் பெற்றிருக்கிறது. அது தான் நாவலாசிரியரின் சிறப்பம்சம்.

  ..பதிவில் உங்கள் ரசனையின் முதிர்ச்சி தெளிவாகத் தெரிகிறது.//

  வருகைக்கு நன்றி சிவக்குமாரன்.எத்தனை முறை படித்தாலும் அலுக்காதது அப்புதினம்.

  //மாட்டி விட்டீங்களே கீதா மேடம்.எனக்கு கவிதையை தவிர வேறொன்றும் தெரியாது. உங்கள் அளவுக்கு எனக்கு வாசிப்புப் பழக்கமும் அதிகமில்லை. வேறு ஏதாவது ப்ராஜெக்ட் கொடுங்களேன் ப்ளீஸ்.//

  முடியும்போது பதிவிடுங்களேன். சில புத்தகங்களின் முன்னுரைகளே நம்மை அப்புத்தங்களை வாசிக்கத்தூண்டும். நீங்கள் அவ்வனுபவத்தை உணர்ந்திருந்தால் பகிர்ந்துகொள்ளலாமே.

  ReplyDelete
 13. உங்கள் தேர்ந்த வாசிப்பு ரசனை பிரமிக்க வைத்தது.

  ReplyDelete
 14. நன்றி ரிஷபன் சார்.

  ReplyDelete
 15. தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html

  ReplyDelete
 16. வலைச்சர அறிமுகத்துக்கு மிகவும் நன்றி ஆச்சி. கதம்பரோஜாக்களின் சுகந்தவாசம் இன்னும் என்னுள்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.