29 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (32) - இறுதிப்பகுதி"என்னம்மா, தாரா, இப்படி முகத்திலடிச்சமாதிரி சொல்றே?"

"வேறெப்படி ஆண்ட்டீ சொல்றது? அவரோட லைஃப் ஸ்டைல் வேற, என்னோடது வேற. எங்க ரெண்டுபேருக்கும் ஒத்துவராது ஆண்ட்டீ."

நாகலட்சுமிக்கு எதையும் நம்பமுடியவில்லை. விக்னேஷுக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும், அன்பான குணத்துக்கும் அவனை கணவனாய் அடையக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இவளோ அவனை நிராகரிக்கிறாள். என்னென்னவோ சாக்குபோக்கு சொல்கிறாள்.

"தாரா! என் பையனை கல்யாணம் பண்ணிக்க கொடுத்துவச்சிருக்கணும்மா!"

"அடக்கடவுளே! ஆண்ட்டீ, புரிஞ்சுதான் பேசுறீங்களா? ஒரு ண்பிள்ளைக்கான அடையாளமே இல்லாதவரை எப்படி விரும்புவாங்க?"

"என்ன சொல்றே?அப்படி என் மகன்கிட்ட என்ன குறையைக் கண்டே நீ?"

நாகலட்சுமி பெரும் படபடப்புடன் பேசினார்.

"நிறைய, ஆண்ட்டீ! அதிர்ச்சியடையாதீங்க. உங்க பிள்ளைக்கு உங்களைத் தவிர வேறயாரும் பெருசாத் தெரியாது. நீங்க என்ன சொன்னாலும் தலையாட்டுறதைத் தவிர மறுத்து எதுவும் பேசத் தெரியாது. சுயமா யோசிக்கத் தெரியாது. தான் நினைக்கிறதை தைரியமா வெளியில சொல்லத் தெரியாது. மொத்தத்தில சரியான பயந்தாங்கொள்ளி.”

நாகலட்சுமியின் முகம் அவமானத்தால் சிவந்து உதடுகள் துடித்தன. என் மகனைப் பற்றி அவதூறாய்ப் பேச இவள் யார்?

"என்ன, கனகா, உன் மகள் பேசுறதைக் கேட்டுகிட்டு கம்முனு உக்கார்ந்திருக்கே?"

"நான் என்ன பண்றது, நாகு? என் குழந்தைகளை சுதந்திரமா வளர்த்திட்டேன். இது அவங்க வாழ்க்கைப் பிரச்சனை. அவங்களே முடிவெடுக்கிறதுதானே நல்லது?"

"கனகா..."

"ஆமாம், நாகு! என் பொண்ணு, பிள்ளையோட விருப்பம்தான் என்னோடதும். அதனால நீ விக்னேஷுக்கு வேற இடம் பாரேன், நாகு. இதனால் நம்ம சிநேகம் கெட்டுப்போயிடாது. அதுக்கு நான் காரண்டி. ஏன்னா.... என் சுதந்திரத்தில என் பிள்ளைங்களும் தலையிடறதில்ல."

"கனகா! நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன்!" நாகலட்சுமியின் குரல் தழுதழுத்தது.

"என்ன இப்போ? நிச்சயமா முடிஞ்சிருச்சு?  இடிஞ்சு போய் உக்காந்திருக்கே? நீ முதல்ல உடம்பைப் பாத்துக்கோ! தாரா பேசினதையெல்லாம் மனசில வச்சுக்காதே. அவ எதையும் ஓப்பனா பேசுற டைப். மத்தபடி ரொம்ப நல்லபொண்ணு."

தாராவுக்கு அவள் தாயாரே நன்னடத்தைச் சான்றிதழ் வழங்க,  இங்கு பேசப்பட்டவை யாவும் விக்னேஷின் காதுகளை எட்டியிருக்கக்கூடாதே என்ற கவலையில் ஆழ்ந்தார், நாகலட்சுமி.

ஆனால் அடுத்த அறையிலிருந்த விக்னேஷின் காதுகளில் அட்சரம் பிசகாமல் அத்தனையையும் வந்து விழுந்திருந்தன. தன்னைப் பற்றி ஒருத்தி இப்படி தரக்குறைவாய் தன் தாயின் முன்பே பேசுகிறாள்! அதுவும் இரண்டாவது சந்திப்பிலேயே! அவனிடம் பேசியதில்லை, பழகியதில்லை. இருந்தும் தன்னைப் பற்றிய கணிப்பை சரியாகவே கணித்திருக்கிறாள்!

விக்னேஷுக்கு தாராவின் மீது கோபம் வருவதற்கு பதில் தன்மீதே வெறுப்பு வந்தது. அவள் சொன்னவை யாவும் உண்மை. கோபப்பட்டு என்ன லாபம்? அவள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். அம்மா அழுவதில் பயனில்லை.

கனகவல்லியும் தாராவும் புறப்பட்டுச் சென்றுவிட்டனர் என்று உறுதியாய் தெரிந்தபிறகு அறையைவிட்டு வெளியில் வந்தான். ஹாலில் சுந்தரி தாராவை சபித்துக்கொண்டிருந்தாள்.

விக்னேஷ் அமைதியாய் அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான். மகனைக் கண்டதும் நாகலட்சுமி பெரிதாய் அழ முற்பட்டார்.

"அம்மா! அழாதீங்க! இதில கவலைப்பட என்ன இருக்கு? அந்தப் பொண்ணு சரியாத்தானே சொல்லியிருக்கா?"

"விக்னேஷ்......!"

"அம்மா! என்னைப் பத்தி அவ சொன்னதில எந்தத் தப்புமில்ல. சொல்லப்போனா.... அவ சொல்ற மாதிரி எனக்கும் அவளுக்கும் ஒத்துவரவே வராது. ஆனா அவளோட துணிச்சல் எனக்குப் பிடிச்சிருக்கும்மா. எவ்வளவு தைரியமா அவங்க அம்மா முன்னிலையிலேயே தனக்கு இந்தக் கல்யணத்தில் இஷ்டமில்லைன்னு சொன்னா. நான் அப்படியே அசந்துபோய்ட்டேன். ஒரு ஆணாப் பிறந்திருந்தும் நான் இன்னமும் ஒரு கோழையா உங்க முன்னால நின்னுகிட்டிருக்கேனே, அதை நினைச்சு எனக்கே வெட்கமா இருக்கும்மா."

விக்னேஷ் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். பேசுவது விக்னேஷ்தானா என்பதுபோல் அவர் அதிர்ச்சியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தான். 

"அம்மா! எனக்கும் வயசு ஆச்சு. என்னோட கல்யாணம் உங்க விருப்பப்படிதான் நடக்கணும்னு சத்தியம் வாங்கிகிட்டீங்க, ஆனா.... அது தொடர்பா என்கிட்ட கருத்துக் கேக்கிறதைக் கூடவா நான் உங்களுக்கு தாரை வார்த்தேன்? என் திருமண விஷயத்தில உங்களுக்கு இருக்கிற அக்கறையைவிட பலமடங்கு அக்கறையும் பொறுப்பும் எனக்கு இருக்கு. எனக்கு மனைவியா வரவ எங்கம்மாவை நல்லவிதமா பாத்துக்கணும்னு நான் நினைக்கமாட்டேனா?

அம்மா! நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நானும் வித்யாவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம். அவளைத் தவிர வேற ஒருத்தியை என்னால் மனசாலயும் நினைச்சுப்பாக்க முடியலை. அப்படி  வித்யா வேண்டாம்னு நினைச்சீங்கன்னா....வித்யாவை விடவும் ஒரு நல்ல பொண்ணை உங்களால் தேடமுடியும்னா தேடுங்க, அப்படித் தேடினாலும், உங்களுக்கு ஒரு நல்ல மருமகள் கிடைக்கலாம். எனக்கு மனைவி கிடைப்பாளாங்கிறது சந்தேகம்தான்!”

நாகலட்சுமி இடிந்துபோய் அமர்ந்திருந்தார். விக்னேஷ் சொல்வது எதையும் அவர் மனம் நம்பமறுத்தது.

‘இவன் சொல்வதெல்லாம் உண்மையா? காதல் என்னும் வலையில் இவனும் சிக்கிக்கிடக்கிறானா? என்னுடனேயே இருக்கிறான், எனக்கெப்படி இது தெரியாமல் போனது? இந்த வித்யாவும் எப்படி அமுக்கமாய் இருந்திருக்கிறாள்? என்னால் நம்பமுடியவில்லையே? என் மகனா? என்னிடம் செய்த சத்தியத்தையும் மீறி அவனுக்குள் காதல் எப்படி வந்தது? அல்லது காதலித்துக்கொண்டே என்னை ஏமாற்ற பொய்சத்தியம் செய்தானா? ஒருவேளை தாரா சம்மதித்திருந்தால் அவளைத் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்திருப்பானா? அல்லது என் வற்புறுத்தலுக்காய் அவளைத் திருமணம் செய்திருப்பானா?'

எதுவும் புரியாமல் விக்னேஷை ஏறிட்டார்.

விக்னேஷ் மிகவும் தெளிவாக இருந்தான். இனி இரட்டை வாழ்க்கை வாழப்போவதில்லை என்று மனதுக்குள் முடிவெடுத்தவனாய் துணிவுடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் துணிந்தவனாய் புதிய அவதாரம் எடுத்து அம்மாவின் முன் நின்றிருந்தான்.

"அம்மா! வித்யா எனக்கு வாழ்க்கைத் துணையா வந்தா என் வாழ்க்கை நீங்க நினைக்கிறதைப்போல சந்தோஷமா அமையும். நான் நினைக்கிறதைப்போல நீங்களும் என்கூட சந்தோஷமா கடைசிவரைக்கும் இருப்பீங்க. இப்பகூட பாருங்க, வித்யா எனக்கு வேணும்னு கெஞ்சுறமாதிரிதான் உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கேன். வித்யாவைதான் கல்யாணம் பண்ணுவேன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியல பாத்தீங்களா அம்மா. இப்படி ஒரு கோழையை எந்தப் பொண்ணுதான் கல்யாணம் பண்ணிக்க வருவா? சொல்லுங்க!"

விக்னேஷ் உதட்டைக் கடித்துக் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுயன்றான். அவனை மீறி சில துளிகள் சிதறின. அவன் தலையைக் குனிந்துகொண்டான். அவமானத்தால் அவன் மனம் குமுறிக்கொண்டிருப்பதை நாகலட்சுமி உணர்ந்தார்.

தலைக்கு உயர்ந்த மகனை தன் காலடியிலேயே கிடத்தி இத்தனைக்காலமும் அவனை ஒரு தனி மனிதனாய் செயல்படவிடாத தன் சுயநலத்தை எண்ணி வெறுப்புற்றார். இதற்குமேலும் அவனது வாழ்வில் தான் குறுக்கிடுவது தன் தாய்மைக்கே அவமானம் என்று உணர்ந்தவராய், அவனது கைகளைப் பிடித்து சொன்னார். 

"விக்னேஷ்! என்னை மன்னிச்சுப்பா! நான்.... நான்.... உன்ன.... "

நாகலட்சுமிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மகனை நேராய் பார்க்கமுடியாமல் குற்ற உணர்வு குறுக்கிட்டது.

"அம்மா! நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேக்கறீங்க? என்னை சரியான பாதையில்தானே வளர்த்திருக்கீங்க? அதனால நீங்க வருத்தப்படாதீங்க. ஒண்ணு தெரியுமா? தாரா எதையெல்லாம் என் மைனஸ் பாயிண்டா பட்டியல் போட்டாளோ, அதையெல்லாம் வித்யா என் ப்ளஸ் பாயிண்டா பாக்கறாம்மா. அந்த வகையில நீங்க என்னை நினைச்சு, உங்க வளர்ப்பை நினைச்சு பெருமைப்படலாம் அம்மா."

நாகலட்சுமி தன் மகனை எண்ணி பெருமிதம் அடைந்தார்.

"சுந்தரி! கொஞ்சம் சர்க்கரை எடுத்துட்டு வாம்மா!"

அதுவரை தாய்க்கும் மகனுக்கும் நடந்துகொண்டிருந்த உரையாடலை தவிப்புடன் வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த சுந்தரி, ஒரே பாய்ச்சலில் ஓடிச்சென்று சர்க்கரை டப்பாவுடன் வந்தாள். நாகலட்சுமி கொஞ்சம் எடுத்து விக்னேஷுக்கு ஊட்டினார். துளி எடுத்து சுபாவின் நாவில் தடவ அவள் அதை வேகமாய் சப்புக்கொட்டினாள்.  தானும் சிறிதை வாயில் போட முயல, சுந்தரி  நினைவூட்டினாள்.

"அம்மா, உங்களுக்கு சக்கரை ஆகாது!"

"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி, இப்ப மட்டும் என்னத் தடுக்காத!"

"ஏண்ணே, வித்யா அக்கா சம்மதிப்பாங்களா? அந்தப் புள்ளங்களை என்ன பண்ணுவாங்க?"  சுந்தரி தன் சந்தேகத்தைக் கிளப்பினாள்.

"அதான் எனக்கும் யோசனையா இருக்கு! அஜயையும், அஷ்வத்தையும் ஏதாவது ஒரு ஹாஸ்டல்ல சேக்கலாம்னா அவ ஒத்துக்குவாளான்னு தெரியலை."

"ஹாஸ்டலா? எதுக்கு?"

நாகலட்சுமியின் கேள்வியின் அர்த்தம் புரியாமல் விக்னேஷ் விழித்தான்.

"ஆமாம்பா! ஹாஸ்டல் எதுக்கு? கல்யாணத்துக்கு அப்புறம் அந்தப் பிள்ளைகளும் இங்கேயே நம்மளோட இருக்கட்டும். அதுங்க படிச்சு பெரியாளாகிறவரைக்கும் உன் பொறுப்பிலயும், வித்யாவோட பொறுப்பிலயும் இருக்கட்டும்."

அம்மாவின் தாராள மனதைப் பார்த்து விக்னேஷ் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனான். இனி அந்தவீட்டில் சந்தோஷத்துக்கு எந்தக்குறையும் வராது என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் வேர்விட்டது.

(முற்றும்)

படம் நன்றி; கூகுள்
**************************************************************************************************

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

மு. உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
-------------------------------

16 comments:

 1. விறுவிறுப்பாய் போய் சுபமாய் முடிந்தது..

  எத்தனை விதமாய் திருப்பங்கள்.. உணர்வுகள். தேர்ந்த எழுத்தாளராகி விட்டீர்கள். கண்மணி, பெண்மணி மாத நாவல்களுக்கு எழுதலாம்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. மிக மிக் அருமையாகத் தொடர்ந்த கதை
  மிக அருமையாகவும் முடிந்திருக்கிறது
  32 அத்தியாயங்களையும் சுவாரஸ்யமாகக் கொண்டு போனவிதம்
  மிகவும் என்னைக் கவர்ந்தது
  கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த விதமும்
  அவர்கள் அவர்கள் குணத்தின் போக்கில்
  தலையீடு இன்றி சுதந்திரமாக இயங்கவிட்டதும்
  இந்தத் தொடரின் சிறப்பு
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Adengappaa evvalo azhagaa eluthuringa. Nadai romba azhagu Sago.

  Tirukkuralum Mu.Va vin thelivuraiyum arputham.
  Puththaandu Vaalthukkal.

  Tamilmanam Vote 2.

  ReplyDelete
 4. //இனி அந்தவீட்டில் சந்தோஷத்துக்கு எந்தக்குறையும் வராது என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் வேர்விட்டது.//

  நான் சமீப காலமாக தொடர்ந்து படித்து வருகிறேன் ,பழைய பகுதிகளையும் படித்தேன்
  மிகவும் சந்தோஷமான முடிவு .உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கீதா...கதை முடித்தபோது முன்னைய சம்பவங்களெல்லாம் வந்து போகிறது.ஒரு வாழ்வில் எத்தனை உணர்வுகளைக் கட்டிக்கொண்டு நத்தையாய் உலா வருகிறோம்.உற்று யோசித்தால் சில சமயங்களில் உற்சாகமாயும் சில சமயங்களில் ஏனடாவென்று அலுத்தும்போகிறது வாழ்க்கை.ஆனாலும் இதுவேதான் வாழ்வை நகர்த்தும் சுவாரஸ்யங்கள்.சந்தோஷமாக முடித்தமைக்கும் நன்றி கீதா !

  2012ன் அன்பு வாழ்த்துகளும் கீதா உங்களுக்கு !

  ReplyDelete
 6. @ ரிஷபன்

  தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கமளித்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷபன் சார்.

  ReplyDelete
 7. தொடர்ந்து வருகை புரிந்தும் தமிழ் மணத்தில் இணைத்தும் வாக்களித்தும் ஊக்கமளித்தும், கதையின் சிறப்பியல்புகளை எடுத்துக்கூறிப் பின்னூட்டமிட்டு பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 8. சுபமான, சந்தோஷமான முடிவு :)

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா!

  ReplyDelete
 9. துரைடேனியல் said...
  \\Adengappaa evvalo azhagaa eluthuringa. Nadai romba azhagu Sago.

  Tirukkuralum Mu.Va vin thelivuraiyum arputham.
  Puththaandu Vaalthukkal.\\

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும், தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 10. angelin said...
  \\நான் சமீப காலமாக தொடர்ந்து படித்து வருகிறேன் ,பழைய பகுதிகளையும் படித்தேன்
  மிகவும் சந்தோஷமான முடிவு .உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\\

  தொடர்ந்து வந்து படித்து கருத்துரைத்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி ஏஞ்சலின். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ஹேமா said...
  \\கீதா...கதை முடித்தபோது முன்னைய சம்பவங்களெல்லாம் வந்து போகிறது.ஒரு வாழ்வில் எத்தனை உணர்வுகளைக் கட்டிக்கொண்டு நத்தையாய் உலா வருகிறோம்.உற்று யோசித்தால் சில சமயங்களில் உற்சாகமாயும் சில சமயங்களில் ஏனடாவென்று அலுத்தும்போகிறது வாழ்க்கை.ஆனாலும் இதுவேதான் வாழ்வை நகர்த்தும் சுவாரஸ்யங்கள்.சந்தோஷமாக முடித்தமைக்கும் நன்றி கீதா !

  2012ன் அன்பு வாழ்த்துகளும் கீதா உங்களுக்கு !\\

  வலுவான பின்னூட்டம் கதைக்கு பலம் சேர்க்கிறது. நன்றி ஹேமா. எதுவும் சுபமாய் முடிவதையே வாசகர் மனம் எப்போதும் எதிர்பார்க்கிறது, நிஜ வாழ்வில் அது முடியாதபோது, கதைகளிலேனும்!

  ReplyDelete
 12. சுந்தரா said...
  \\சுபமான, சந்தோஷமான முடிவு :)

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா!\\

  தொடர்ந்து வந்து ஊக்கமளித்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி சுந்தரா. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 13. விக்னேஷ் வித்யாவின் திருமணத்திற்கு விக்னேஷ் அம்மா சம்மதித்ததில் சந்தோஷம்.ஆனால் சுந்தரியின் வாழ்க்கை கதை உண்மை என்று சொல்லியிருந்தீர்கள்.சுந்தரியை வைத்துதான் கதை முடிவுறும் என்று நினைத்திருந்தேன்.எனில் இப்போது சுந்தரி அந்தக் குழந்தையுடன் தனியே விக்னேஷ் குடும்பத்துடன் வாழ்கிறாரா?

  ReplyDelete
 14. உங்களுடைய தொடர்பின்னூட்டமும் ஆர்வமும் கண்டு மிகவும் மகிழ்கிறேன் ஆச்சி. இக்கதையில் வரும் சுந்தரி படிப்பறிவு இல்லாதவள். ஆனால் எனக்குத் தெரிந்த சுந்தரி படித்தவர். மறுமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தியதால் (அவருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை) அவர்களைப் பிரிந்து, தனியே சென்னையில் தன் குழந்தையுடன் தங்கி வேலை பார்த்துக்கொண்டு வாழ்ந்துவருகிறார். அவரது நிலையில் படிக்காத பெண் இருந்தால் என்னவாகும் என்ற என் எண்ணத்தால் உருவானதே இக்கதை.. நாகலட்சுமி, விக்னேஷ், வித்யா பாத்திரங்கள் நடைமுறையில் நான் சந்தித்த வேறு சிலர். கதையின் சுவாரசியத்துக்காக இதில் இணைக்கப்பட்டவர்கள்.

  ReplyDelete
 15. நல்ல முடிவு. தாராவே சம்மதமில்லை என்று சொன்னது நல்ல திருப்பம். சுந்தரிக்குத்தான், மனோகரியின் தம்பி விருப்பம் தெரிவித்திருக்கீறாரே, இல்லையா? சுந்தரி தன் சொந்தக் கால்களில் (ஊறுகாய் பிஸினஸ்) நின்ற பிறகுதான் திருமணமா?

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.