29 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (30)மனோகரிக்கு வாய் துடித்தாலும் விருந்துக்கு வந்த இடத்தில் தானும் பதிலுக்குப் பேசுவது சரியில்லை என்று உணர்ந்தவளாய், ராமிடம் கண்சாடை காட்ட, அவரும் எழுந்துகொண்டார்.
"விக்கியம்மா! உங்க விருந்துக்கு ரொம்ப நன்றி. நாங்க கிளம்பறோம். காலையிலிருந்து இங்கேயே இருந்தாச்சு! விக்கி, வித்யா வரோம்! சுந்தரி எங்கே? சுந்தரி......!"
அழுது வீங்கிய முகத்துடன் சுந்தரி வந்தாள். என்னதான் அதை மறைத்து சிரிக்க முயன்றாலும் அவளால் அதை முழுமையாய் செய்ய இயலவில்லை. ராம் அவளிடமும் நன்றி சொல்லி விடைபெற்றார். மனோகரியும் கிளம்பினாள். தவறியும் இருவரும் கனகவல்லியிடமும், தாராவிடம் சொல்லிக்கொள்ளவில்லை.
அவர்கள் சென்ற சில நிமிடங்களில் வித்யாவும் புறப்பட்டாள். போகும்போது நாகலட்சுமியிடம் வந்து,
"அம்மா! உங்களுக்கு ஆபரேஷன் சமயத்தில  என்ன உதவி தேவைப்பட்டாலும் சொல்லுங்க, நான் செய்யறேன்! எதுவும் யோசிக்காதீங்க." என்றாள். நாகலட்சுமி வியந்தார்.
இவளுக்கும் எனக்கும் என்ன உறவு? எனக்காக இவள் ஏன் சிரமப்படவேண்டும்? ஓ! இவள் அப்பாவுக்கு முடியாதபோது விக்னேஷ் சென்று உதவினானே! அதனால் பதிலுக்கு செய்ய நினைக்கிறாள் போலும். தானே தன்னைத் தேற்றிக்கொண்டார்.
"சரிம்மா, தேவைப்பட்டா சொல்றேன்!"
வித்யாவை வீட்டில் விட்டுவர விக்னேஷும் கிளம்பினான். சிறுவர்கள் மனமில்லாமல் கிளம்பினர். அவர்கள் போனபிறகும் "பாட்டி... பாட்டி..." என்ற சொல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இரவல் உறவே இத்தனை இன்பத்தைத் தரும் எனில் சொந்தம் எத்தனை சுகத்தைத் தரும்? நாகலட்சுமிக்கு பாட்டி என்னும் பதவியின்மேல் திடீர்மோகம் வந்தது.
கனகவல்லி பேசிப் பேசிக் களைத்துப்போயிருந்தார். நாகலட்சுமியின் பக்கத்தில் அமர்ந்திருந்த தாரா கால் மேல் கால் போட்டுக்கொண்டுதொலைக்காட்சியில் இருக்கும் எல்லா அலைவரிசைகளையும் மாற்றி மாற்றி எதிலும் நிலைகொள்ளாமல் கையிலிருந்த ரிமோட்டைப் படாத பாடு படுத்திக்கொண்டிருந்தாள்.
நாகலட்சுமிக்கு தாராவை மருமகளாக்கிக்கொள்ளும் எண்ணம் சற்றே தளரத் தொடங்கியது. 'சின்னப்பெண்தானே? சொகுசாய் வளர்ந்தவள்! கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாள், கல்யாணமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடாதா? ‘என்று தளர்ந்த எண்ணத்துக்கு சற்று முட்டுக்கொடுத்து நிமிர்த்தினார்.
தேநீர் உபசரிப்பு முடிந்ததும், நாகலட்சுமியிடம் விடைபெற்றுக்கிளம்பினர் தாராவும், கனகவல்லியும். சுந்தரி ஏக்கம் நிறைந்த விழிகளால் முத்துவைப் பார்த்தாள். கார் கிளம்புமுன் அவன் அவளிடம், "போய்ட்டு வரேன்க்கா!" என்றதும் அவள் விழிகள் நீரால் நிறைந்து பார்வையை மறைத்தன.
********************************************************************

அந்த இரவு எப்போதும்போல அமைதியாகவே இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு மனதிலும் சலன அலைகளை உண்டுபண்ணியவண்ணம் இருந்தது.  நாகலட்சுமியின் மனதில் தாராவே மருமகள் என்ற எண்ணம் ஆழமாய் வேர்விடத் தொடங்கி இருந்தது. கனகவல்லியிடம் பேசியதில் அவர் தன் மகனைக் கேட்டு முடிவு சொல்வதாய் சொல்லியிருந்தார். அவருக்குள் விக்னேஷின் திருமணக்கனவுகள் ஊர்வலம் வரத்தொடங்கிவிட்டன.
திருமணம் என்றால் சும்மாவா? அதற்கு எத்தனை ஏற்பாடுகள் செய்யவேண்டும்? இந்தவிஷயத்தில் விக்னேஷுக்கு உதவ ஆண்துணை இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. சொந்தம் இல்லைநண்பர்கள் இல்லை. இருந்த ஒருவனும் இப்போது இல்லாமற் போய்விட்டான். மனோகரியையும் ராமையும் தவிர்த்து அக்கம்பக்கத்திலூம் அதிகப் பழக்கம் இல்லை.
முதல் முறையாய் யாருமற்ற தீவில் தானும் மகனும் தனித்திருப்பதுபோல் உணர்ந்தார். தன் காலம் முடிந்துவிட்டால் பிறகு விக்னேஷுக்கென்று யார் இருக்கிறார்கள்? அவனைத் தனிமரமாக்கிவிட்டதைப் போலொரு குற்ற உணர்வு தலைதூக்க, அதற்காக வருந்தியபடியே மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தார்..
அடுத்திருந்த அறையிலிருந்த சுந்தரிக்குள் அடங்கியிருந்த பல ஆசைகள் கிளைத்து வளரத் தொடங்கியிருந்தன. அப்பா அம்மாவைப் பார்த்து மன்னிப்பு கேட்டு..... நடந்த துயரங்களை மறைத்துதம்பியுடன் மீண்டும் பழையபடி பேசிச் சிரித்து..... அவர்கள் மடியில் சுபாவைத் தவழவிட்டு..... அவர்கள் கொஞ்சும் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டு....
கனவுகளின் துணையுடன் உறங்கிப்போனாள்.
விக்னேஷ் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்தான். வித்யாவின் நினைவுகள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.  எப்படி இருந்தவள்இப்போது பொலிவிழந்து, சுரத்திழந்து நடைபிணம்போல் இருக்கிறாள்! என் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இன்று தாராவின் வரவால் பொய்த்திருக்கும்.
குழந்தைகள் இருப்பதாலேயே அவள் இன்னும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையைத் தளரவிடாமல் இருக்கிறாள். இத்தனை துயரச்சூழலிலும் அம்மாவின் அறுவை சிகிச்சையின்போது வந்திருந்து உதவுவதாய் சொல்லிச் சென்றாளே? இவளல்லவா பெண்? இவளை மனைவியாய் நான் அடையும் பாக்கியம் இருக்கட்டும், மருமகளாய் அடையும் பாக்கியத்தை அம்மா இழந்துவிடக்கூடாது! அம்மாவிடம் பேசினால் என்ன?
இத்தனை நாளாவது அம்மாவின் மனதில் எந்தச் சலனமும் இல்லாதிருந்தது. இப்போதோ தாரா என்னும் கொலு பொம்மையினால் கல்லெறியப்பட்ட குளமாகிவிட்டது, அம்மாவின் மனது.
அம்மாவின் அறுவை சிகிச்சை முடிந்தபிறகுதானே கல்யாண ஏற்பாடு செய்வதாய் சொன்னார். அப்போது அவரிடம் வித்யாவுக்கும் தனக்குமுள்ள காதலைச் சொல்லிவிட வேண்டியதுதான். அப்போது அவர் மறுத்தலும் விடப்போவதில்லை. பொய்சத்தியம் செய்துவிட்டாயடா பாவி என்று புலம்பலாம். ஆனால் வித்யா இல்லையென்றால் என் வாழ்வில் வேறு பெண்ணுக்கு இடமில்லை என்பதையாவது உறுதியாக சொல்லிவிடவேண்டும்.
தன் பிடிவாதத்தால் மகனின் வாழ்வு பாழாவதை அம்மாவால் தாங்க முடியாது. நிச்சயம் ஒத்துக்கொள்வார். வித்யா வந்தபின் பிரச்சனை இல்லை. அவள் நிச்சயம் அம்மாவின் மனதில் இடம்பிடித்துவிடுவாள். அஜய், அஷ்வத் பற்றி யோசித்தான். முதலில் அவர்களை ஏதாவது ஒரு நல்ல போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு, பின்னாளில் அம்மா சமாதானமானபின் அவர்களை வீட்டுக்கு அழைத்துவந்துவிடலாம். 
வித்யா இந்த எற்பாட்டுக்கு ஒத்துக்கொள்வாளா என்பது சந்தேகமே! ஆனால் வேறு வழியில்லை! அம்மாவும் அதுவரை தாரா விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கவேண்டும்.விக்னேஷ் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்.
வித்யாவின் வீட்டில் சிறுவர்கள் உறங்க வெகுநேரமாகியது. வினேஷ் வீட்டுக்கு சென்று வந்தது அவர்களுக்கு புது உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது. வாய் ஓயாமல் அன்றைய நிகழ்வுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.
"சித்தி! விக்கி அங்க்கிள் வீட்டுக்கு மறுபடி எப்ப போவோம்?"
"எதுக்கு?"
ஒருவேளை.... இவர்கள் விருந்துணவுக்காகத்தான் அங்கு போக விரும்புகிறார்களோ என்ற நினைவு எழுந்து உள்ளுக்குள் வலித்தது.
"ரொம்ப ஜாலியா இருந்துச்சுஎங்களுக்கு அந்த பாப்பாவ ரொம்பப் புடிச்சிருந்துது, சித்தி!" அஷ்வத் சொன்னதும் வித்யா கலங்கினாள்.
"அதுக்கென்ன? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் போலாம்!"
"ஐயா.... ஜாலி..."
சிறுவர்கள் உற்சாகத் துள்ளலுடன் உறங்கச் சென்றனர்.
வித்யா அவர்களை பார்த்தாள். இத்தனை வயதில் தாய் தந்தையைப் பிரிந்து தான் படும் அவதியை இவர்கள் இந்த சின்ன வயதிலேயே அனுபவிப்பதை எண்ணி வேதனை அடைந்தாள். வேணி இருந்தபோது ஒருநாள் கூட அவர்களுடைய அப்பாவைப் பற்றிக் கேட்டதில்லை, வேணி போனபின் அவளைப் பற்றியும் கேட்கவில்லை என்பதே அவர்களுடைய மன முதிர்ச்சியைக் காட்டியது.
வேணியுடன் இருந்தபோது ஓரிடம் தங்காது, சொல்பேச்சு கேளாது, அட்டகாசம் செய்துகொண்டிருந்த குழந்தைகளா இவர்கள்? இப்போது எத்தனைப் பொறுப்புடன் நடந்துகொள்கிறார்கள்? வித்யாவுக்கு பெருமையாயிருந்தது. இந்த அற்புதமான சிறுவர்களுடன் வாழக்கொடுத்துவைக்காத பெற்றோரை எண்ணி வருந்தினாள். இனி தன் எதிர்காலத்தை இவர்களுக்காகவே அர்ப்பணிக்கவேண்டுமென்று மனதில் முடிவுசெய்துகொண்டு நிம்மதியாய் உறங்கினாள்.
(இன்னும் இரண்டு பாகங்களுடன் இக்கதை நிறைவுறும்.)
*********************************************************************
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
மு.வ உரை:
ஒருவன் எந்தெந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
-----------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

8 comments:

 1. அருமையான பதிவு!! வாழ்த்துகள்

  ReplyDelete
 2. மிகவும் அருமையாகவே எழுதுகிறீர்கள்.

  //"பாட்டி... பாட்டி..." என்ற சொல் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இரவல் உறவே இத்தனை இன்பத்தைத் தரும் எனில் சொந்தம் எத்தனை சுகத்தைத் தரும்? நாகலட்சுமிக்கு பாட்டி என்னும் பதவியின்மேல் திடீர்மோகம் வந்தது.//

  இந்த இடம் மிகவும் பிடித்தது.

  முழுக்கதையையும் மற்ற பகுதிகள் படிக்காததால் என்னால் மேலும் எதுவும் தற்போது கூற முடியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், மெயில் தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 3. //ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.//

  சத்தியமான உண்மை .

  இன்னும் இரண்டு பாகங்களில் முடிகிறதா .முடிவு என்னவாக இருக்குமோ என்று படபடப்பா இருக்கு .
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனசேகரன்.

  ReplyDelete
 5. பேரக்குழந்தைகளின் அருமை அறிந்தவர் என்பதைத் தங்களுக்குப் பிடித்த வரிகள் மூலம் நிரூபித்துவிட்டீர்கள். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வை.கோ சார்.

  ReplyDelete
 6. ஆர்வம் ததும்பும் உங்கள் பின்னூட்டம் கண்டு மிகவும் மகிழ்கிறேன் ஏஞ்சலின். வருகைக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 7. இலக்கியம் சார்ந்து கதை எழுதுவது அருகிவிட்டது கீதா. அதிலும் திருக்குறள் பொருண்மைக் கதைகள் என்றைக்குமான சமுகத் தேவையாக உள்ளது. அருமை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அனைவரின் எண்ணங்களும் என்னாகும்னு யோசிச்சுக்கொண்டே அடுத்த பகுதிக்கு போகிறேன்

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.