8 May 2012

அவன் கவலை அவனுக்கு!புடவைக்கட்டைப் பிரித்த நிமிடம் அகலவிரிந்த வாணியின் கண்கள் இமைக்கவும் மறந்துவிட்டிருந்தன. அவளைச் சுற்றிலும் வண்ணங்களை வாரியிறைத்ததுபோல் புடவைகள்! புடவைகள்! புடவைகள்! 

வேலு ஒவ்வொன்றையும் விரித்துப் பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தான்.புடவைகளுக்கு என்னென்னவோ புதுப்புதுப் படங்களின் பெயர் சூட்டியிருந்தான். வாணிக்கு சிரிப்புதான் வந்தது. இப்போதைய திரைப்படங்களில் எந்தக் கதாநாயகி புடவையணிந்து வருகிறாள்? வேலு நன்றாகவே பூச்சுற்றுகிறான் என்று அறிந்தபோதும் அவனைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த மாதம் புடவை வாங்கக் கூடாது என்று வாணியும் எத்தனையோ முறை சபதம் எடுத்துவிட்டாள். எல்லாவற்றையும் வேலு நிமிடமாய் உடைத்துவிடுவான். 

"இந்த மாசம் வேணாம், வேலு! பீரோ நிறைய புடவை அடுக்கிவச்சிருக்கேன்னு அவர் கத்தறார். அடுத்த மாசம் வாயேன்!" 

"அட, என்னாக்கா, நீ? உன்னை யாரு எடுக்கச் சொல்லுறா? சும்மாப் பாரேன். புதுப்புது டிசைனெல்லாம் வந்திருக்கு!" 

"வேணாம், வேலு! நீ பிரிச்சின்னா நான் வாங்கறமாதிரி ஆயிடும்!" 

"வாங்கிக்கயேன். பணத்த மெதுவாக் குடு" 

இப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு புடவையாவது எடுக்கவைத்துவிடுவான். புடவை வியாபாரத்தின் அத்தனை நுணுக்கங்களும் அவனுக்கு அத்துபடி. யாரிடம் எப்படிப் பேசினால் எடுபடும் என்பதை நன்றாகவே அறிந்துவைத்திருந்தான். 

மாடி வீட்டு மோகனாவுக்கு ரோஷம் அதிகம். பிறர் முன்னிலையில் அவளிடம், "ஏன்க்கா, நீ என்னமோ பொடவ எடுக்கப் போறது மாதிரி முன்னாடி வந்து உக்காந்திருக்கே? என்னாத்துக்கு சும்மா வேடிக்க பாத்துக்கினு நிக்கிறே?" என்பான். உடனே அவள், "ஆமாம்! நீ யான வெல, குதிர வெல சொல்லுவ! உன்கிட்ட எப்படி எடுப்பாங்க?" என்பாள். 

"எக்கா, உனக்கெல்லாம் பெரிய பெரிய கடைங்கள்ல பில்லு ஒட்டி வச்சிருப்பான், பாரு, வாய மூடீட்டு அத எடுத்துவரத்தான் புடிக்கும். என்னை மாதிரி நேர்மையா, நியாயமா வெல சொன்னா புடிக்குமா? நீ அப்பால போ! மத்தவங்க பாக்கட்டும்!" 

எல்லார் முன்னிலையிலும் சொன்னால் அவளால் சும்மாயிருக்க முடியுமா? உடனே ஒரு புடவை போணியாகிவிடும். 

வாணிக்கோ இரக்கசுபாவம். இதையும் அவன் அறிந்துவைத்திருந்தான்.  

"இப்போ கையிலே பணமில்லே, வேலு! அடுத்த மாசம் சேத்துத் தரவா?" 

"எக்கா, நீயே இப்புடிச் சொன்னா எப்புடிக்கா? பொழப்பு ஓடவேணாமா? " 

"புடவ எடுக்கும்போது அடுத்தமாசம் தான்னு சொல்லு, எடுத்ததுக்கப்புறம் ஈட்டிக்காரன் மாதிரி கெடுபிடி பண்ணு!" 

"எக்கா, நான் என்னக்கா பண்ணுவேன்? ஒரு சேலைக்கு பத்தோ, இருவதோ கிடைக்குது. அதையும் அப்புறம் இப்புறமுன்னு இழுக்கடிச்சா கையில என்னாக்கா தேறும்? எனக்கும் புள்ளகுட்டின்னு ஆயிப்போச்சுக்கா! கொஞ்சம் பாத்துக் குடுக்கா!" 

வேலுவுக்கு எல்லாப் பெண்களுமே அக்காதான். கொஞ்சம் வயதானவர்களாக இருந்தால் மட்டும் 'பெரியம்மா' என்பான். 

வேலு வந்திருப்பதை அறிந்து, மோகனா, எதையோ இரவல் வாங்கும் சாக்கில் வாணியின் வீட்டுக்கு வந்தாள். 

"வேலு, நிசமாத்தான் சொல்றேன்! இப்ப என்கிட்ட பைசா இல்ல!" 

"யக்கா, சிறுவாட்டுப் பணம் சேத்துவச்சிருப்ப, பாரு. அஞ்சாறப்பொட்டியில் இருக்கும், பாருக்கா!"

வேலு விடவில்லை. 

"அட! நம்பமாட்டேங்கறியே! இப்போவெல்லாம் சனி, ஞாயிறுன்னா, தானும் சமையல் செய்யிறேன்னு அவரும் அடுப்படி புகுந்துடறாரு. பணத்த எங்க வக்கிறதுன்னே புரியல!" 

மோகனா அடக்கமாட்டாமல் சிரித்தாள்.கூடவே,

"ஒருவேளை, நீங்க பணத்தை எங்கே பதுக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே சமைக்க வர்றாரோ, என்னவோ?" என்று சந்தேகம் கிளப்பினாள்.  

"இருந்தாலும் இருக்கும்!" வாணி ஆமோதித்தாள். 

வேலு தன் காரியத்தில் கவனமானான். சட்டென்று எல்லாப் புடவைகளையும் மடித்து அடுக்கினான். 

"என்னா, வேலு, ஏன் கிளம்பிட்ட? புடவ காட்டலியா?" 

"எங்கக்கா? எல்லாம் தவண கட்ட மூக்கால அழுவுறீங்க? உதயா காலனிக்குப் போனாலாவது வேல நடக்கும். மளமளன்னு புடவ வித்துப்போகும், பணமும் வசூலாயிடும். பொழப்பப் பாக்கணுமேக்கா! நான் கெளம்புறேன்" 

"வேலு! என்ன நீ ரொம்பதான் சலிச்சுக்கறே? ஒருமாசம் முடியலன்னு சொன்னா, ஒரேயடியா முறுக்கிக்கறியே? உக்கார், மோர் கொண்டுவரேன்" வாணி எழுந்து உள்ளே போனாள். 

"நீ எதுன்னா எடுக்கிறீயாக்கா?" 

"ப்ச்!" மோகனா உதட்டைச் சுழித்தாள். 

வாணி இரண்டு புடவைகளை மடியில் போட்டுக்கொண்டு இரட்டைப் பிள்ளை பெற்றவளைப்போல் இரண்டையும் கீழிறக்க மனமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

"வாணி! அந்தப் புடவய நீங்க எடுக்கலேன்னா சொல்லுங்க, நான் எடுத்துக்கறேன்" மோகனா பரபரத்தாள். 

"இந்தக் கலர்ல புடவ வேணும்னு வேலுகிட்ட எப்போ சொல்லி வச்சது, தெரியுமா? இப்பதான் கொண்டுவந்திருக்கான்." 

"சரி! அப்படின்னா இன்னொன்னு கையில வச்சிருக்கீங்கள்ல, அது வேணாமா?" 

"ஐயோ! எனக்கு இதுவும் பிடிச்சிருக்கே!" 

"என்ன வாணி, ரெண்டையுமேவா எடுக்கப் போறீங்க? ஏற்கனவே தவண பாக்கி இருக்குது போலயிருக்கே!"  

வேலுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே மோகனா கேட்டாள்.  

வாணி பரிதாபமாக விழித்தாள். மோகனா சொல்வது சரியென்றபோதிலும் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியாமல் தவித்தாள். ஆளுயர நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டு இரண்டு புடவைகளையும் மாறி மாறி தன் தோளில் போட்டு அழகுபார்த்தாள். அவள் கைவிடப்போகும் புடவைக்காக கழுகு போல் காத்திருந்தாள் மோகனா. 

"ஏன்க்கா, மாடி வூட்டக்கா, கடல் மாதிரி இத்தன பொடவ விரிச்சி வச்சிருக்கேன், அத வுட்டுட்டு, அதுங்கையில இருக்கிறதயே கேக்குறீயே! வேற பாரேன்!" 

வேலு, தனக்கு ஆதரவாகப் பேசியதும், மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனாள் வாணி. அவனுக்குப் பெரும் ஆச்சரியம். எப்படிப்பட்டப் பெண்களும் புடவைக்கடையைப் பார்த்தால் குழந்தைகளாக மாறிவிடுகின்றனரே!  

பள்ளிக்கூடத்தில் ஒருநாள் வரச்சொல்லியிருந்தார்கள். புடவைக்கட்டைப் பிரித்ததும், தலைமையாசிரியை கூட ஆசையுடன் அது இதுவென்று பரபரத்தது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர்களிடம் தவணைப்பணம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. என்னமாய் அலையவிட்டார்கள்? படிக்கும் காலத்தில் கூட பள்ளிக்கூடத்துக்கு இப்படி நடையாய் நடந்ததில்லை என்று எண்ணுமளவுக்கு அவனை நன்றாகவே இழுக்கடித்தனர். 

கடைசியில் வேலுவின் ஆலோசனைப்படி இரண்டு புடவைகளையுமே வாணி எடுத்துக்கொண்டாள். மோகனா முனகிக்கொண்டே வெளியேறினாள்.  

வேலு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டி கணக்குப் பார்த்தான். 

"எக்கா! முன்பாக்கி முன்னூறு ரூவா. இதையும் சேத்தா தொள்ளாயிரத்தி அம்பது ரூவாக்கா. மாசம் இருநூறாவது கொடுத்துடுக்கா!" 

"ரெண்டு நாள் கழிச்சு வா, வேலு! எதாவது ஏற்பாடு செஞ்சு வைக்கிறேன். ஆனா அவரிருக்கும்போது வந்து பிரச்சனை பண்ணிடாதே!" 

"எனக்குத் தெரியாதாக்கா?" 

வேலு சைக்கிளின் பின்புறம் புடவை மூட்டையை வைத்துக் கட்டினான். 

வெயில் சுரீரென்று முகத்தில் அடித்தது. நாலு மணிக்குள் உதயா காலனியில் வேலை முடிக்கவேண்டும். புதிதாய் எதுவும் விற்காவிட்டாலும் பரவாயில்லை; தவணைத் தொகையைப் பெற்றால் போதும் என்ற எண்ணத்துடன் சைக்கிளை வேகமாக மிதித்தான். 

சே! என்ன பிழைப்பு இது? வெயில் மழை பாராமல் சைக்கிள் மிதித்து வீடுவீடாய்ப் போய் வக்கணையாய்ப் பேசி பொருளை விற்று, அதனிலும் வக்கணையாய்ப் பேசி தவணைத் தொகையைப் பெற்று, கடனை அடைத்து... மிச்சத்தில் குடும்பம் நடத்தி...அப்பப்பா...நாய் படாத பாடுதான்!  

*********************************

 அந்தக் காவல் நிலையத்தின் சுவரோரமாக குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தான், வேலு, தான் ஏன் இங்கு அழைத்துவரப் பட்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே. பயத்தில் கால்கள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தன.வெளியில் பார்த்தான். இருள் கவியத் தொடங்கியிருந்தது.  

அவனுக்கெதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டரின் முரட்டு மீசையையும், உருட்டு விழிகளையும் பார்க்கும்போதே அடிவயிறு கலங்கியது. அவர் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார். 

"அப்படியா? சரி, சரி, ஆவட்டும்!" 

போனை வைத்துவிட்டு நிமிர்ந்தவர் கண்களில் வேலு அகப்பட்டான். 

"என்னடா, உன் பேர் என்னன்னு சொன்னே?" 

"வே...வேலு சார்!" 

"ம்! அப்புறம்..? என்னா தொழில் பண்றே?" 

"பொடவ யாவாரம்தான் சார்" 

"ராகவேந்திரா அப்பார்ட்மெண்டுக்கு மத்தியானம் போயிருந்தியா?" 

"ஆமாங்க, சார்!" 

"போய்...என்னா பண்ணே?" 

"அங்க வாணியக்கா வீட்டுக்குதாங்க ரெகுலராப் போறது. பொடவ வித்துட்டு வந்தேங்க." 

"அந்தப் பொண்ணு வாணிய யாரோ கொல பண்ணிட்டாங்க தெரியுமா?" 

"என்னாது....?" 

ஒட்டுமொத்த உடலும் அதிர்ந்து குலுங்கியது. கால்களில் இருந்த நடுக்கம் உடம்பு பூராவும் பரவியது. நாக்குழறியபடியே, 

"அய்யய்யோ...! என்னா சார் சொல்றீங்க? காளியாத்தா....மாரியாத்தா...என்னால் நம்பமுடியலியே.... அந்த அக்காவையா...? அடக்கொடுமையே.....ஆத்தா..." 

நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதான். 

"ஏய்! வாய மூடு! எதுக்கு இப்படி கூப்பாடு போடற? நீதான் கடைசியாப் பாத்ததுன்னு தகவல் வந்திருக்கு!" 

"சார்...! இது அந்தக் கடவுளுக்கே அடுக்காது..சார். அது பச்சப் புள்ள..சார். ஆண்டவனே... ஒனக்கு கண்ணு அவிஞ்சிடுச்சா? இப்படியும் நடக்குமா? அது குடுத்த மோரு இன்னமும் என் தொண்டையில நிக்குதே! அய்யோ... என்னா கொடும சாமீ......" 

"ஏய்! சீ! ஒப்பாரிய நிறுத்து! என்னமோ உன் பொண்டாட்டி போன மாதிரியில்ல அழுவுற?" 

"அய்யய்யோ...!" 

"டேய்! நீ நிறுத்தலன்னா நீதான் கொல பண்ணினேன்னு எழுதிடுவேன். சும்மாயிரு! விசாரிக்கத்தானே கூட்டிட்டு வந்திருக்கு!" 

வேலு வேட்டியைச் சுருட்டி வாயைப் பொத்திக்கொண்டான்.  

வாணியை யார் கொன்றார்கள்? ஏன் கொன்றார்கள்? எப்படிக் கொன்றார்கள்? எதுவும் அவனுக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளத் தேவையுமில்லை.  

அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அக்கா ஆசைஆசையாய் புடவை எடுத்ததுதான். அது கண்ணாடி முன் நின்று அழகு பார்த்த காட்சி கண்முன் விரிய, அடக்கியிருந்த அழுகை மீண்டும் தலைதூக்கியது. 

"இவன் ஏன் இப்படிக் கதறுறான்?" 

ஒரு கான்ஸ்டபிள் இன்னொருவரிடம் கேட்க, அவர், 

"புடவக்காசை வசூல் பண்ணமுடியாமப் போயிட்டதேங்கிற கவலை அவனுக்கு!" என்று கூறிச் சிரித்தார்.


57 comments:

 1. Anonymous8/5/12 20:14

  கதை நல்ல சொல்லி இருக்கீங்க அக்கா ...

  அந்த அக்கா எதுக்காக கொலை செய்யப் பட்டங்கள் ...

  வேலு கண்டிப்பா பாசத்துல தான் அழுது இருப்பான் நு நினைக்கிறேன் சரியா அக்கா

  ReplyDelete
  Replies
  1. உடனடிப் பின்னூட்டத்துக்கு நன்றி கலை. அந்த அக்கா ஏன் கொலை செய்யப்பட்டாங்க என்கிறது யாருக்கும் தெரியாது. முன்பு சென்னையில் ஒரு பெண் இப்படித்தான் கறிக்கடை ஆளிடம் வீட்டுக்கு கறி கொண்டுவரச்சொல்லி வாங்கி வைத்துவிட்டு சமைப்பதற்குள் வேறு ஒரு ஆளால் கொலையாகிப் போனாள். அந்தக் கறிக்கடைப் பையனை நினைத்தபோது உருவானதுதான் வேலு பாத்திரம்.

   நீங்க நினைப்பது போல் வேலு பாசத்தால்தான் அழுகிறான் என்றாலும் அது பணத்துக்காக என்பதுபோல்தான் மற்றவர்கள் பார்வையில் நினைக்கத் தோன்றும். கதையின் கருவை மிகச் சரியாப் புரிஞ்சிருக்கீங்க. பாராட்டுகள் கலை.

   Delete
  2. Anonymous8/5/12 21:46

   மிக்க நன்றி அக்கா விரிவான விளக்கத்துக்கு ....   நீங்க என்னமுடிவு சொல்லி இருப்பீங்க எண்டு பார்க்கவே திரும்படி வந்திணன் அக்கா ...

   அந்த மோர் கொண்டு வந்த சீன் வந்ததால் என்னால் யூகிக்க முடிந்தது அக்கா ...

   Delete
 2. //அவன் கவலை அவனுக்கு!//

  நல்ல கதை
  திடீர் திருப்பம் அருமை

  சிலர்
  சூழலுக்கு ஏற்ப நிறம் மாறுவார்கள்
  அந்த நிறமாற்றம்
  நஷ்டத்திலும்
  கஷ்டத்திலும் கொண்டு சேர்க்கும்

  அவன்
  அழுதது தன்
  நஷ்டத்திற்காக

  ReplyDelete
  Replies
  1. நஷ்டத்தை விடவும் மனக்கஷ்டம் அதிகமாக இருக்கலாம் என்பது என் நினைப்பு. சற்றுமுன் பழகியவர்களை அவர்கள் பிடிக்காதவர்களாக இருந்தாலும் கூட கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்றால் மனம் பதறும்தானே!

   வருகைக்கும் விமர்சனப் பின்னூட்டத்துக்கும் நன்றி செய்தாலி.

   Delete
  2. கண்டிப்பா ''பதறல்'' இருக்கும்

   வாசித்து
   சற்றென்று வெளியே வந்துவிட்டேன்
   சிந்தனையை தொத்திப் பிடித்து தொகுக்கிறது
   கதை

   Delete
  3. மீண்டும் வந்து கருத்து பகிர்ந்துகொண்டதற்கு நன்றி செய்தாலி.

   Delete
 3. அக்கா நல்ல கதை....சிலரை பார்க்கும் போது இவர் ஏழ்மையில் இருக்கிறதால இறக்கம் வருதா, இல்லை அடுத்தவங்க மேல இறக்கப்படுறதால அவங்க ஏழ்மையில் இருக்காங்களான்னு நானும் பல சம்பவங்களில் சமயங்களில் யோசித்தது உண்டு உங்கள் கதையும் அதே கேள்வியை என்னிடம் கேட்கிறது.....

  முடிவில் தான் ஆசைபட்ட பொருளை அனுபவிக்கிறதுக்குள்ள போன ஒரு உயிர நெனைச்சு ஒருத்தர் அழுகுறது, அவர் தவணைத்தொகைக்குதான்னு இன்னொரு மனிதனோடு அபிமானம் ஒப்பீடு நாம எங்க போயிட்டு இருக்கோம்ன்னு நிக்க வச்சு கேட்குது... ரொம்ப நல்ல கதைக்கா... ஏதோ வேலு கூடவே பயணிக்கிறார்........ வாழ்த்துக்கள் கீதாக்கா :)

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனத்துக்கும் ஒத்த அலைவரிசையிலான எண்ணங்களின் பகிர்வுக்கும் நன்றி ரேவா.

   Delete
 4. முன்னர் சாவி ’கேரக்டர்’ என்று ஒரு தொடர் எழுதினார். அதுபோல புடைவைக்கார வேலுவை அழகான ஒரு கேரக்டராகப் படைத்திருக்கிறீர்கள் கீதா. அருமை. பெண்களின் இயல்பான ‘புடவை வாங்கும்’ பலவீனத்தை நீங்கள் வர்ணித்திருப்பதும் அழகு. முடிவு மனதைத் தொட்டது. அடிக்கடி இப்படி அழகான சிறுகதை தாங்க எழுத்தாளரம்மா...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... என் எழுத்தையும் இப்படிப் பாராட்டி ஊக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி கணேஷ். அநாயாசமாய் எழுதித் தள்ளும் உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது எனக்கு.

   Delete
 5. பிறப்பால் மட்டும் அல்ல தொடர் பழக்கத்தால் ஏற்படுகிற
  பந்தத்தில் கூட ஒருவரின் பிரிவு நம்மை அதிகம் பாதித்துவிடுவதுண்டு
  கதை சொல்லிச் சென்றவிதம் அருமை
  இழப்பைவிட இழப்பின் வலியை அழுத்திச் சொன்னது ரொம்பப் பிடித்தது
  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. துல்லியமாய்க் கவனித்து இடப்பட்டப் பின்னூட்டம் கண்டு மகிழ்கிறேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.

   Delete
 6. நல்ல கதையில் அழகான நையாண்டியும். படிக்கிற காலத்தில்கூட இத்தனை தடவை ஸ்கூல் பக்கம் வந்ததில்லை. பாசமும் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துரைக்கும் நன்றி விச்சு.

   Delete
 7. அருமையானக் கதையோட்டம்.... படிக்கத் துர்ண்டுகிறது
  அருமைங்க கீதமஞ்சரி அக்கா..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசிப்புடனானப் பின்னூட்டத்துக்கும் நன்றி அருணா செல்வம்.

   Delete
 8. அருமையான முடிவு! அவனும் மனிதன்தான்!உயிரைவிட பணமா பெரிது?

  சா இராமாநுசம்

  த. ஓ 4

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 9. தெளிவான நடையில் அற்புத படைப்புங்க அக்கா ...
  மிகவும் ரசிக்க முடிந்தது அந்த திடீர் திருப்பம் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது...
  வேலு வின் அழுகையை ஒவ்வொருவர் ஒவ்வொரு கண்ணிலும் காண்பார்கள் ./

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் நன்றி அரசன்.

   Delete
 10. வேலுவின் கதாபாத்திரம் அருமை .முடிவு பதற வைத்தது .
  எத்தனை மனிதர்கள் எத்தனை விதமான அனுமானங்கள் .
  அன்றாடன்காய்ச்சிக்கும் மனம் என்று ஒன்றுண்டு .நிச்சயம் வேலு வாணிஆசையாய் புடவை வாங்கியதை நினைத்தே ஆதங்கப்பட்டு அழுதிருப்பான்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அழகான விமர்சனக் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

   Delete
 11. எப்படிப்பட்டப் பெண்களும் புடவைக்கடையைப் பார்த்தால் குழந்தைகளாக மாறிவிடுகின்றனரே!

  எதுக்காக கொலை செய்யப் பட்ட வேண்டும் வாணி??????!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை இது. முன்பு கார் டிரைவராய் அந்தப்பெண் வீட்டில் வேலை செய்தவன் அடிக்கடி பணம் கேட்டு இவர் மறுத்ததால் கொலை செய்துவிட்டான்.

   Delete
 12. எங்கிருந்து இப்பிடி வித்தியாசமான கதைக்களன்களைப் பிடிக்கிறீர்கள்? அருமை.

  பாசம், பணம், தண்டனைப் பயம் எல்லாம் கலந்த அழுகை அவனுக்கு. பாவம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.

   Delete
 13. அருமையான கதை அமைப்பு. புடவை விற்பவர், தவணை கட்டுவோர் மன நிலை.. இப்படி எல்லாமே இயல்பாய் வர்ணிக்கப்பட்டிருந்தன. முடிவில் நல்ல ட்விஸ்ட். விற்பவனின் மனசின் ஈரம் அழகாய்ப் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நல்ல தேர்ந்த கதாசிரியரான தங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு மேலும் நன்றாய் எழுதும் ஊக்கம் அளிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரிஷபன் சார்.

   Delete
 14. அழகான சேலை !

  ஒரு சேலையின் விரிப்பில் கதை முந்தானையாய் விசிறப்பட்டிருக்கு.அழுவதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லலாம் !

  ReplyDelete
  Replies
  1. ஹேமாவின் பாணியில் ஒரு அழகானப் பின்னூட்டம். நன்றி ஹேமா.

   Delete
 15. என்ன ஒரு அநாயாசமான ஓட்டம்! ஒரு தடங்கலற்ற பயணம் உங்களோடு கீதா!

  இந்தக் கதையை இப்படியே நாவலாக நீட்டிச் செல்லலாம் கீதா. தொடர்ந்து உங்கள் சொற்களோடு பயணிக்க ஆவல்! கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்! எத்தனை இயல்பான ஓட்டம். எதிர்பாரா திருப்பங்கள், அடுத்தது என்ன என்று அறியும் ஆவல், யார் கொலை செய்திருப்பார்கள் எனபதைக் கண்டு கொள்ளும் வேட்கை எல்லாமும் மனதில் தேங்கிப் போய் நிற்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி மணிமேகலா. முயற்சி செய்கிறேன். முடிந்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

   Delete
 16. வெள்ளந்தியான வேலுவின் அழுகைக்குக் காரணம் கற்பிக்கும் உலகம் அவன் மனதின் ஈரம் புரிந்து கொள்ளாது. அருமையான நடையில் யதார்த்தமான கதை. வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அருமையானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி சிவகுமாரன்.

   Delete
 17. வேலுவின் இயல்புதனமான வாழ்க்கை போன்றே, இன்னும் நாட்டில் பல நபர்கள் உள்ளனர்...இது கதை அல்ல நிஜம்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் யதார்த்தம் குறிப்பிட்டிட்டப் பின்னூட்டத்துக்கும் நன்றி சேகர்.

   Delete
 18. சிறந்த கதையாக்கம் கீதா மேடம்.

  வேலு கதாபாத்திரம் - எங்கள் கிராமத்தில் ‘அலுமினியம்,எவர்சில்வர் பாத்திரங்கள்’ விற்பனைக்காக வரும் ஒருவரை கண்முன் கொண்டுவந்தது.

  ReplyDelete
  Replies
  1. புடவை ஆசையாலும் கொலை நடக்கவில்லை வேலுவும் கொள்ளவில்லை யார்தான் கொன்றது . ஏன் அது நடந்தது தொடருமா ?

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன். சிறிது நேரமே பழகினாலும் அவர்களுடைய விற்பனை சாதுர்யத்தாலோ பேச்சுவன்மையாலோ அவர்களை எல்லாம் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.

   Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா. இந்தக் கதைக்கான தாக்கம் கலையின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதுதான்.

   Delete
 19. ஒரு புடைவை வியாபாரியின் வாழ்க்கையின் சில பகுதிகளை தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஏழைக்கு பாசம் இருந்திருக்கக் கூடாதா என்ன? பணத்தை விட அன்பை...பண்பை நேசிக்கிற மனிதர்கள் பணக்காரகளை காட்டிலும் ஏழைகளில் தான் அதிகமென நினைக்கிறேன். ஒரு உயிரை விடவா..அதுவும்....நீண்ட நாள் பழக்கமுள்ள உயிரைவிடவா அவனுக்கு தன் பணம் பெரிதாய் தெரிந்திருக்கும். அவனது கண்ணீர் தன் வாடிக்கையாளருக்கான ஆத்மார்த்தமான..பவித்திரமான கண்ணீர்த்துளி. அந்த கண்ணீரில் இருக்கிற உப்பு அவள் கொடுத்த மோரில் கலந்ததாய் தான் இருக்கும். மனிதாபிமானமற்ற சிரிப்பு காவல்துறைக் காரனுடையது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஆழ்ந்த விரிவான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி தீபிகா. மனம் நிறைகிறது.

   Delete
 20. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனா.

   Delete
 21. உருக்கமான கதை. அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 22. கதையை சுவாரசியமாய் கட்டமைதிருகிரீர்கள் திடீர் திருப்பம் ஒரு கிரைம் நாவலை போல இழுத்து செல்கிறது நிறைய எழுதுங்கள் கீதா வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சரளா.

   Delete
 23. எல்லா உணர்வுகளும் பாத்தை வெச்சுதான் மதிப்பிடுறங்க. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் தோழி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. உங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

   Delete
 24. வலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர ஆசிரியர் பணியேற்றமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் சசிகலா. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விதமான தகவல் தொகுப்புகளுடனும் தேர்ந்த பதிவர்களின் அறிமுகங்களுடனும் அலங்கரிக்கிறீர்கள். பாராட்டுகள்.

   Delete
 25. வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி.

  ReplyDelete
 26. யதார்த்தமான உரையாடல்களுடன் அமைந்த மனித மனதை படம் பிடித்துக் காட்டும் கதை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி.

   Delete
 27. வலைச்சரம் மூலம் இங்கே வந்தேன் . அன்பைச் சொல்வதைக் கூட பணத்துக்காகவெனும் ஒரு சமூகத்தில் அந்த போலிசுக்கு அது போன்ற எண்ணம் தோன்றியதில் தவறில்லை... நல்ல கதை

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.