31 March 2024

ஜாடிச் செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 1)

 



//உதயசிம்மன் மந்திரவாதி குறிப்பிட்ட அந்தக் காட்டை அடைந்தான். இருள் அடர்ந்த அக்காடு பயங்கர அமைதியுடன் காட்சியளித்தது. உயிரினங்கள் வாழ்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அவன் முன்னெச்சரிக்கை உணர்வுடன் உடைவாளை உருவிக் கையில் எடுத்துக்கொண்டான். அடிபெருத்த மரங்கள் பெருங்கிளைகளைப் பரப்பி சூரிய ஒளியை உள்ளே வரவிடாது தடுத்துக் கொண்டிருந்தன. பெரிய பெரிய இலைகளுடன் பெயர் தெரியாத பல தாவரங்கள் ஒன்றோடொன்று பின்னிக்கிடந்தன. வாளால் அவற்றை வெட்டித்தள்ளி பாதை உண்டாக்கியபடி முன்னேறினான். ஆங்காங்கே தென்பட்ட எலும்புக்கூடுகளும் அங்கு நிலவிய துர்நாற்றமும் அவனுக்குள் பயத்தை உண்டாக்கின

சட்டென்று ஒரு பெரிய மரக்கிளையொன்று தாழ்ந்து அவன்முன் வந்தது. அவன் சுதாரிக்குமுன்பே யானையின் தும்பிக்கை போல் அவனைச் சுற்றி வளைத்துத் தூக்கியது. ஒரு மலைப்பாம்பு இரையைச் சுற்றி வளைத்து எலும்பை நொறுக்குவது போல மரக்கிளை அவனை இறுக்க ஆரம்பித்தது. தான் காண்பது கனவா நனவா என்று புரியாமல் அவன் தவித்தான். மரக்கிளையின் பிடியிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதாயில்லை

ராட்சஸன் ஒருவன் மர உருவெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறானோ என்ற ஐயம் ஏற்பட்டது. வழியில் கண்ட எலும்புக்கூடுகளுக்கான காரணம் இப்போது புரிந்தது. இனி ஒரு விநாடி தாமதித்தாலும் தன் உயிர் தன்னுடையதல்ல என்று உணர்ந்தவன், முழுபலத்தையும் பிரயோகித்து தன் கையிலிருந்த உடைவாளால் கிளையை ஓங்கி ஒரு போடு போட்டான். மரக்கிளை ஒரே வெட்டில் துண்டாகி கீழே விழுந்தது. அத்துடன் அவனும் கீழே விழுந்து உயிர் தப்பினான்.//

இந்த மாதிரி அம்புலி மாமா கதைகளை நம் சிறுவயதில் எவ்வளவு படித்திருப்போம். எவ்வளவு பயங்கரமான சித்திரத் தொடர்களைப் பார்த்திருப்போம். அவையெல்லாம் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்போம். முடிவில் எல்லாமே பொய், கட்டுக்கதை என்றும், இல்லையில்லை, உண்மைதான், அமேசான் போன்ற காட்டுக்குள் அத்தனையும் சாத்தியம் என்றும் இருவேறு முடிவுகளுக்கு வந்திருப்போம். இரண்டிலுமே உண்மை இருக்கிறது.

மாமிசம் உண்ணும் தாவரங்கள் உலகில் உள்ளன என்பது உண்மை. ஆனால் மனிதர்களை உண்ணக்கூடியவை என்பது பொய். ஊனுண்ணும் தாவரங்கள் எல்லாமே அளவில் மிகவும் சிறியவை. 




புழு, பூச்சிகளையும் அதிகபட்சமாக வௌவால், எலி, தவளை, பறவைகள் போன்ற சிற்றுயிர்களையும் உண்ணும் அளவுக்குச் சிறியவை ஊனுண்ணித் தாவரங்கள் யாவும். கதைகளில் சொல்லப்படுவது போல ஒரு மனிதனைத் தின்பதென்பது அசாத்தியம். ஒருவேளை கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று ராட்சத வடிவில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். 


சிட்னியின் தாவரவியல் பூங்காவில் நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அனைத்து ஊனுண்ணித் தாவரங்களையும் அருகில் பார்த்து ரசிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆசை தீரப் பார்த்து ரசித்து படம் பிடித்ததோடு அவற்றைக் குறித்த தகவல்களையும் அறிந்து வியந்தேன். அங்கே நான் எடுத்த படங்களையும், நான் அறிந்துகொண்ட தகவல்களையும் இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

*****

ஊனுண்ணித் தாவரங்களும் பிற தாவர இனங்களைப் போலவே முன்னொரு காலத்தில் சைவமாகத்தான் இருந்திருக்கின்றன. எப்போது அசைவமாயின? தேவை ஏற்பட்டபோது. இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட பரிணாம மாற்றம் இது. மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் சத்துக்களும், சூரிய ஒளியும், நீரும்தான் தாவர வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகள் என்பதை அறிவோம்.  இலைகளின் வளர்ச்சிக்கு அதிமுக்கியமான நைட்ரஜன் என்னும் கனிமவளம் மண்ணிலிருந்து கிடைக்காமல் போகும் பட்சத்தில் தாவரங்கள் அதற்கான தேடலில் ஈடுபடுகின்றன. தேடலின் முடிவில் மிகவும் புத்திசாலித்தனமாக அவை கண்டறிந்த தீர்வுதான் சிற்றுயிர்களைப் பிடித்து அவற்றின் உடலிலிருந்து சத்துக்களை உறிஞ்சிப் பெற்றுக்கொள்வது.

ஊனுண்ணி என்று எந்த வகையான தாவரங்களைக் குறிப்பிடுகிறோம்? பிரத்தியேகமான உத்திகள் மூலம் இரையைப் பிடிக்கும் அவை, முக்கியமான ஐந்து நிலைகளில் செயல்படுகின்றன.  

  • 1.   ஏதேனுமொரு உத்தியைப் பயன்படுத்தி இரைபிடித்தல்
  • 2.   பிடித்த இரையைக் கொல்லுதல்
  • 3.   கொன்ற இரையைச் செமித்தல்
  • 4.   செமித்த இரையிலிருந்து சத்துக்களை உறிஞ்சுதல்
  • 5.   உறிஞ்சிய சத்துக்களை தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல்

இந்த ஐந்து நிலை செயல்பாடுகளும் ஊனுண்ணித் தாவர இனங்களிடம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இரைபிடிப்பதற்கே அவை வெவ்வேறு உத்திகளைக் கையாளுகின்றன.

ஊனுண்ணி விலங்குகளைப் போல புத்திக்கூர்மையுடனும் மிகுந்த சாதுர்யத்துடனும் செயல்படும் ஊனுண்ணித் தாவரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இரைபிடிக்கும் உத்தியைக் கொண்டு அவற்றை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  • 1.   ஜாடிக்குள் வழுக்கி விழச்செய்து பிடிக்கும் வகை
  • 2.   பசையில் ஒட்டவைத்துப் பிடிக்கும் வகை
  • 3.   படக்கென்று மூடிப் பிடிக்கும் வகை
  • 4.   வெற்றிடத்தால் உறிஞ்சி  உள்ளிழுக்கும் வகை
  • 5.  ஒளியால் திசைதிருப்பி ஈர்க்கும் வகை


முதலில் பூச்சிகளை ஜாடிக்குள் வழுக்கிவிழச் செய்து பிடிக்கும் வகையைப் பார்ப்போம்.

ஜாடியின் நிறமும் அதற்குள் சுரக்கும் பூந்தேன் போன்ற இனிப்புத் திரவமும்தான் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் தூண்டில்கள். இன்னும் சில ஜாடிச் செடிகள் பூக்களைப் போல நறுமணம் பரப்பி, பூச்சிகளை தங்கள் வசம் வரவழைக்கின்றன. சில ஜாடிகளின் விளிம்புகள் மெழுகு தடவியது போன்று வழுவழுவென்று இருக்கும். பூச்சிகள் வந்தமர்ந்த உடனேயே வழுக்கிக்கொண்டு உள்ளே விழுந்துவிடும். உள்ளே விழுந்த பூச்சிகள் என்னாகும்? ஜாடிக்குள் சுரந்து தேங்கியிருக்கும் அமில நீரில் கரைந்து செடிக்கு உணவாகிவிடும்.

ஜாடி சரி. மூடி எதற்கு? என்ற சந்தேகம் வரலாம். மழை பெய்தால் மழை நீர் அதிகப்படியாக உள்ளே வந்து அமில நீரின் வீரியத்தைக் குறைத்துவிடக்கூடாது அல்லவா? அதற்கான பாதுகாப்புதான் மூடி. எவ்வளவு சமயோசிதம்!

ஊனுண்ணித் தாவரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது கதைகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலமாக நாம் அறிந்த ஜாடிச் செடிதான். ஆங்கிலத்தில் Pitcher plant எனப்படும்  ஜாடிச் செடி வகையில் மூன்று குடும்பங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளும் உள்ளன. 

  1Sarraceniaceae குடும்பம்

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஜாடிச்செடிகள் பெரும்பாலும் ஊதுகுழல் வடிவில் இருக்கும். இந்த வகை ஜாடிச்செடிகளில் வேர்ப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு இலையும் ஒரு ஜாடியாக உருவெடுக்கும்.  


Yellow pitcher plant, Hooded pitcher plant & Crimson pitcher plant

White-topped pitcher plant


 Parrot pitcher plant (கிளியின் அலகு போல் இருப்பதால்)

Purple pitcher plant

வாய்ப்பகுதியில் உள்நோக்கி வளர்ந்த ரோமங்கள்

கீழே இருப்பது கோப்ரா லில்லி எனப்படும் ஊனுண்ணி தாவரம். சராசெனியே குடும்பத்தின் டார்லிங்டோனியா பேரினத்தைச் சேர்ந்தது.  லில்லிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் நாகம் படமெடுத்திருப்பதைப் போன்ற அதன் தோற்றத்தால் 'கோப்ரா லில்லி' என்ற பெயரைப் பெற்றுள்ளது. கலிஃபோர்னியாவைத் தாயகமாகக் கொண்டதால் 'கலிஃபோர்னியா ஜாடிச்செடி' என்ற பெயரும் உண்டு. 


Cobra lily

2. Nepenthaceae குடும்பம்

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தொங்கும் ஜாடிச்செடியில் இலைகளின் நுனியில் வளரும் பற்றிழைகளின் முடிவில் கெண்டி வடிவத்தில் மூடியோடு பிரத்தியேகமான ஜாடிகள் உருவாகும். இவை அளவில் பெரியவை என்பதால் பூச்சிகள் மட்டுமல்லாது எலி, தவளை, சிறு பறவைகள் போன்றவற்றை இரையாக்கிக் கொள்ளக்கூடியவை. 

கெண்டி வடிவ ஜாடிகள்

Nepenthes alata

Great pitcher plant (Nepenthes maxima)

குடுவை அல்லது கெண்டி வடிவிலான ஜாடிச் செடிகள்

மெழுகு தடவியது போன்ற வாய்ப்பகுதி

இலைகளின் நுனியில் ஜாடிகள்

இலைகளும் ஜாடிகளும்

உராங்குட்டான் போன்ற குரங்குகள் இந்தக் கெண்டிச்செடியில் தேங்கியிருக்கும் மழைநீரைக் குடிப்பதால் இந்தச் செடிகளுக்கு 'குரங்கின் கோப்பை' அதாவது  Monkey cups என்ற பெயர் இடப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸில் இதற்கு 'யூதாஸின் பணப்பை' என்ற பெயர் இடப்பட்டிருக்கும் காரணம் தெரியவில்லை. 

3. Cephalotaceae குடும்பம்

இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பேரினமான அல்பேனி ஜாடிச்செடி ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் மட்டுமே காணப்படும் செடியாகும். 

Albany pitcher plant

பொதுவாக ஜாடிச்செடிகளின் மூடிகள் ஜாடியின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அல்பேனி ஜாடிச்செடியிலோ அதன் மூடி ஜாடியின் பின்புறத்தில் இருந்து வளர்ந்திருக்கும். ஜாடியும் உயரமாக இல்லாமல் குள்ளமாக இருக்கும். 

*****

சாதாரண செடிகளைப் போலவே ஜாடிச் செடிகளும் பூக்கும். பூக்கள் காய்ந்து விதைகள் உருவாகும். விதைகளிலிருந்து புதிய செடிகள் முளைக்கும்.



ஊதுகுழல் வடிவ ஜாடிச் செடியின் பூக்கள்

ஜாடிச்செடியின் சிவப்பு நிறப் பூ

ஜாடிச்செடியின் மஞ்சள் நிறப் பூ

ஜாடிச் செடிகள் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்கள்

  • தென்னமெரிக்காவைச் சேர்ந்த Heliamphora  இனத்தில் ஜாடிகளுக்கு மூடி கிடையாது. அப்படியென்றால் அதிகப்படியான மழைநீர் தேங்கி பூச்சிகளைப் பிடிக்க இயலாமல் போகுமே என்று நினைக்கத் தோன்றும். அதற்கும் அந்தச் செடி ஒரு வழி வைத்திருக்கிறது. அதிகப்படியான மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்ற ஒரு கழிவுநீர்த் துவாரமும் ஜாடியில் இருக்கிறது. பிறகென்ன கவலை?  

  • சில ஜாடிச்செடிகள் பூச்சிகளைக் கொல்லாமல் வித்தியாசமான முறையில் ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. எப்படி தெரியுமா? குறிப்பிட்ட பூச்சியினம் ஜாடி நீருக்குள் முட்டையிடும். அந்த ஜாடி நீரில் வளரும் லார்வாக்களின் கழிவுகளிலிருந்து செடிகள் தங்களுக்கான சத்தைப் பெற்றுக்கொள்ளும். லார்வாக்கள் வளர்ந்து பூச்சிகளாகிப் பறந்துபோகும். பிறகு அவை முட்டையிட ஜாடி நீரைத் தேடிவரும். லார்வாக்கள் உருவாகும். செடி வளரத் தேவையான சத்து கிடைக்கும். பூச்சிகளும் ஊனுண்ணிச் செடிகளும் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுக்கொன்று உதவியும் வாழும் வாழ்க்கைச் சுழற்சி வியக்கவைக்கிறது அல்லவா?

  • இன்னொரு வகை உண்டு. இந்தோனேஷியாவில் வாழும் Tupaia montana என்ற மலைவாழ் மரமூஞ்சூறு இனம் குறிப்பிட்ட சில ஜாடிச்செடிகளைத் தேடிவந்து கழிவறையாகப் பயன்படுத்துகின்றன. ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த மூஞ்சூறுகளை வரவழைக்க செடி செய்யும் தந்திரம் இன்னும் ஆச்சர்யம். ஜாடிச்செடிகளின் மூடியில் அவை இனிப்பான திரவத்தைச் சுரக்கச் செய்கின்றன. வயிறுமுட்ட அவற்றை உண்ணும் மூஞ்சூறுகள் அப்படியே அந்த ஜாடிக்குள் புழுக்கை போட்டுவிட்டுப் போகும். அந்தப் புழுக்கைகளிலிருந்து தேவையான நைட்ரஜனை செடிகள் பெற்றுக்கொள்ளும். ஊனுண்ணி தாவரங்கள் சாதுர்யமானவை என்பது எவ்வளவு அழகாக நிருபணமாகிறது பாருங்கள்.   
*****

(தொடரும்)

16 March 2024

உலகின் தொன்மையான மழைக்காடு

 மழைக்காடு என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது உலகிலேயே மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துகிடக்கும் அமேசான் மழைக்காடுதான். ஆனால் உலகின் மிகப் பழமையான மழைக்காடு இருப்பது ஆஸ்திரேலியாவில்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? சுமார் 180 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் டெயின்ட்ரீ மழைக்காட்டுடன் ஒப்பிடும்போது 55 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் அமேசான் எல்லாம் சிறுகுழந்தை எனலாம். அதிக அளவு மழை பொழிந்து வளம் சேர்த்திருக்கும் காட்டைத்தான் மழைக்காடு என்கிறோம். பொழிந்துகொண்டே இருப்பதால்தான் மழைக்காட்டுக்கு தமிழில் 'பொழில்' என்ற அழகிய பெயரிட்டுள்ளோம். 

மழைக்காடு

கிரானைட் மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட டெய்ன்ட்ரீ நதியும், அருவிகளும், நதியை ஒட்டிய அடர் மழைக்காடும் மழைக்காட்டை ஒட்டிய வெண்மணல் கடற்கரையும் கடற்கரையை ஒட்டிய தெள்ளிய கடற்பரப்பும், கடலுக்குள் வசீகரிக்கும் வண்ணத்தில் கரடுமுரடான பவளப்பாறைகளும் என உலகின் வேறு எங்கும் காணவியலாதபடி இயற்கையின் அழகும் அதிசயமும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு நம்மை அசரவைக்கும் இடம்தான் டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதி. 2015-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இப்பகுதி சாகசப் பிரியர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் அற்புதமான விருந்தளிக்கும் இடமாகும்.

குவீன்ஸ்லாந்தின் வடகிழக்குக் கடற்கரையோரம் சுமார் 1200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது டெயின்ட்ரீ மழைக்காடு. உலகின் ஆதித் தாவரங்கள், விலங்குகள் பலவும் இன்றும் அவற்றின் ஆதிகால இயல்பு மாறாமல் அங்கு காணப்படுகின்றன. உலகின் மிகத்தொன்மையான பூக்கும் தாவரங்கள் பத்தொன்பதில் பன்னிரண்டு இந்த டெயின்ட்ரீ மழைக்காட்டில் காணப்படுவதிலிருந்தே இதன் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

தொன்மையான மழைக்காட்டுக்கு 'டெயின்ட்ரீ' என்ற பெயர் எப்படி வந்தது? 

1873-வாக்கில் ஆற்றுவழியே மழைக்காட்டைக் கண்டடைந்த ஆய்வாளர் ஜார்ஜ் எல்ஃபின்ஸ்டோன் தன் நண்பரும் புவியியல் ஆய்வாளருமான டெய்ன்ட்ரீயின் பெயரை அம்மழைக்காட்டுக்குச் சூட்டினார். பின்னாளில் அந்நிலப்பகுதி முழுமைக்குமே அப்பெயர் அமைந்துபோனது. 

டெய்ன்டிரீ மழைக்காட்டின் 'இடியட் ஃப்ரூட்' பற்றித் தெரியுமா உங்களுக்கு? அதென்ன 'முட்டாள் பழம்' என்று கேட்கிறீர்களா? உண்மையில் இடியோஸ்பெர்மம் (Idiospermum) என்ற அறிவியல் பெயரின் சுருக்கம்தான் அது. 120 மில்லியன் வரலாற்றைக் கொண்டிருக்கும் அதுவே இன்றைய பூக்கும் தாவரங்கள் பலவற்றின் ஆதித்தாய் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'ரிப்பன்வார்ட்' மற்றும் 'பச்சை டைனோசார்' என்ற பெயர்களும் உண்டு. டைனோசார் வாழ்ந்த காலத்திலிருந்தே இவை வாழ்ந்துவருவதால் பச்சை டைனோசார் என்ற பெயராம். ஒரு வித்திலை, இரு வித்திலைத் தாவரங்கள் பற்றி அறிவோம். இது மூன்றிலிருந்து ஏழு வித்திலைகளைக் கொண்டு வளரும் தாவரம் என்பது பெரும் வியப்புக்குரியது. Idiospermum குடும்பத்தைச் சேர்ந்த ஒரே தாவரம் இதுதான். கடுமையான விஷத்தன்மை கொண்ட இதைத் தின்னும் கால்நடைகள் உயிரிழந்துவிடும். ஆனால் இப்பகுதியில் வாழ்ந்துவரும் musky rat-kangaroo போன்றவை அவற்றைத் தின்கின்றன என்பதும் அதனால் அவற்றுக்கு கெடுதல் எதுவும் நேர்வதில்லை என்பதும் ஆச்சர்யமே.

டெயின்ட்ரீ மழைக்காட்டில் மட்டுமே காணப்படக்கூடிய அரிய இடியோஸ்பெர்மம் மரத்தை சிட்னியின் தாவரவியல் பூங்காவில் காண நேர்ந்தபோது, அதுவும் பூக்கும் காலத்தில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதோ அங்கே நான் எடுத்த சில படங்கள். 





டெயின்ட்ரீ மழைக்காட்டில்
காணப்படும் பூச்சியினம் மட்டுமே சுமார் பன்னிரண்டாயிரம் வகை இருக்கலாம். அவை தவிர ஆஸ்திரேலியாவின் மொத்தப் பறவையினத்தில் 40 சதவீதமும், பட்டாம்பூச்சி இனத்தில் சுமார் 60 சதவீதமும், விலங்கினத்தில் 35 சதவீதமும், ஊர்வனவற்றில் 20 சதவீதமும் தவளையினத்தில் சுமார் 30 சதவீதமும் இங்கே காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் மொத்த நிலப்பரப்பில் ஒரே ஒரு சதவிகித நிலப்பரப்பே கொண்ட டெய்ன்ட்ரீ மழைக்காட்டில் இவ்வளவும் காணப்படுகின்றன என்றால் மழைக்காட்டின் வளம் நமக்குப் புரிகிறதல்லவா?

அருகிவரும் இனமான காஸோவரி பறவைகளை இங்கே அவற்றின் வாழ்விடத்தில் இயல்நிலையில் காணமுடிவது ஒரு பெரும் பாக்கியம். பறக்கவியலாத பறவையினத்தில் தற்போது உலகிலுள்ள மூன்றாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவில் உள்ள ஆஸ்ட்ரிச் (Ostrich) எனப்படும் தீக்கோழி, இரண்டாவது, ஆஸ்திரேலியப் பறவையான ஈமு (Emu). ஆனால் ஈமுவை விடவும் உடல் எடை அதிகமுள்ள பறவையினம் காஸோவரி. இதன் தலையில் கொம்பு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். பறவைக்குக் கொம்பா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். அதற்குக் காரணம் இருக்கிறது.

 


காஸோவரியின் பிரதான உணவு பழங்கள்தாம். இவை கிட்டத்தட்ட 26 வகையான பழங்களையும் 238 வகைத் தாவர உணவுகளையும் உண்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்பறவை பெரும்பாலான நேரத்தை பழமரங்களின் கீழேயே கழிக்கும். அதுவும் பழங்கள் பழுத்து உதிரும் காலமென்றால் சொல்லவே வேண்டாம். முழுநேரமும் மரத்தின் அடியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட முப்பது மீட்டர் உயர மரங்களிலிருந்து கீழே விழும் பெரிய பழங்கள் இதன் தலையில் விழுந்தால் என்னாவது? தலைக்கு சேதமுறா வண்ணம் இயற்கை அளித்தப் பாதுகாப்புத் தலைக்கவசம்தான் அதன் கொம்பு என்பது விநோதம். ஆம். கொம்பின் உள்ளே எலும்புக்கு பதில் காற்றறைகள் இருப்பதால் கொம்பு ஒரு அதிர்வுத்தாங்கியாகவும் (shock-absorber) செயல்படுகிறது. இந்த காஸோவரி பறவைகளின் எச்சத்தின் மூலமே மழைக்காட்டின் பெருமரங்களின் விதைபரவல் எளிதாக நடைபெறுகிறது.

 


டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதியின் பூர்வகுடிகள் குக்கு யலாஞ்சி மக்கள். அவர்கள் இந்நிலத்தை தங்களது புனித மற்றும் கலாச்சார அடையாளமாக மதிக்கின்றனர். இந்நிலம் சார்ந்து வழிவழியாக பல பாடல்களையும் கதைகளையும் புனைந்து இன்றும் தொடர்ந்து தங்கள் தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கின்றனர். பலர் இப்பகுதியில் பயண வழிகாட்டிகளாகவும் பணிபுரிகின்றனர். பல சுற்றுலா ஏற்பாட்டு மையங்களும் இங்கே செயல்படுகின்றன. நடைப்பயணம், மலையேற்றம், படகு வலித்தல், காட்டுவழிப் பயணம், மழைக்காட்டில் இராத்தங்கல், இரவு நேரத்து காடனுபவம், கானுயிர் நோக்கல் எனப் பல்வேறு அனுபவங்களை அள்ளித்தருகின்றன சுற்றுலா ஏற்பாட்டு மையங்கள். 

டெயின்ட்ரீ மழைக்காட்டுப் பகுதிக்கு சுற்றுலா செல்வோரிடம் முன்வைக்கப்படும் வேண்டுகோள்கள் இவைதான்.

தயவுசெய்து மழைக்காட்டின் இயல்பை மாற்றிவிடாதீர்கள். குப்பைகளை வீசிவிட்டுப் போகாதீர்கள், ஆற்றுநீரை அசுத்தம் செய்யாதீர்கள், பறவை, விலங்குகளுக்கு உணவு வழங்கி உங்கள் தயாள குணத்தைக் காட்டாதீர்கள். உங்கள் வருகைக்கு முன்னர் காடு எப்படி இருந்ததோ அப்படியே நீங்கள் செல்லும்போது விட்டுச்செல்லுங்கள்.

முன்னொரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மத்திய நிலப்பரப்பு வரையிலும் பரவியிருந்த மழைக்காடு கொஞ்சம் கொஞ்சமாக பரப்பளவில் குறைந்து தற்போது குறிப்பிடத்தக்க அளவில்தான் எஞ்சியுள்ளது. ஆதிகால விலங்குகளின், தாவரங்களின் உறைவிடமாய் எஞ்சியிருப்பதும் இப்பகுதிதான். நொடியில் காடழிப்பதில் கைதேர்ந்த மானுட குலத்துக்கு காடு வளர ஆகும் காலம் பற்றிய துளி அறிதலாவது இருக்கிறதா என்பது ஐயம்தான்!

(இக்கட்டுரை SBS தமிழ் வானொலியில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'நம்ம ஆஸ்திரேலியா' தொடராக ஒலிபரப்பானது. இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்டவையே. டெயின்ட்ரீ மழைக்காட்டைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டாததால் உள்ளூர் மழைக்காட்டின் படத்தை இணைத்திருக்கிறேன்.) 

 

3 March 2024

உலக காட்டுயிர் தினம்

 



ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் நாள் World wildlife day - உலக காட்டுயிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அழிந்துவரும் காட்டுயிர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதும் அவற்றைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்குவதும் இந்நாளின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனுமொரு மையக்கருவை முன்வைத்து காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காட்டுயிர்ப் பாதுகாப்பில் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மனிதர்களையும் மண்ணுலகையும் இணைத்தல் என்பதுதான் இந்த ஆண்டின் (2024) மையக்கரு.

காட்டுயிர் என்றால் காடுகளில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வளர்க்கப்படாத அல்லது மனிதர்களைச் சார்ந்துவாழாத, இயல்வாழிடத்தில் வாழும் எந்த உயிரும் காட்டுயிரே. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், காட்டில் வாழும் விலங்கினங்கள், மீன்கள், கடல்வாழ் உயிரிகள், தாவரங்கள் அனைத்துமே காட்டுயிர்தான்.

சிப்பி பிடிப்பான் (Sooty oystercatcher)

காட்டுயிர்களின் அழிவைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்தலையும் பொதுமக்களிடத்தும் குழந்தைகளிடத்தும் உண்டாக்கும் விழிப்புணர்வு நோக்கோடு இத்தினம் 2014-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம், உலகமயமாக்கம், இயற்கைச் சேதம், காடழிப்பு, வாழ்விட அபகரிப்பு, கரியமில வாயு வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழலும் இயற்கைச் சமநிலையும் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலப்பரப்பிலும் தனித்தன்மையோடு வாழும் காட்டுயிர்கள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் அதன் மூலம் காட்டுயிர்களைக் காப்பதும் நமது கடமை என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக வேண்டும். எனவே தான் நாடுவாழ், காடுவாழ், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் காட்டுயிரிகளின் வழியில் மனிதர்களாகிய நாம் குறுக்கிடாமல் இருந்தாலே போதும், அவை தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும்.



சாம்பல் தலை பழந்தின்னி வௌவால் (Grey headed flying fox)

சுற்றுச்சூழல் குறித்து குறைந்தபட்ச அடிப்படையறிவு கூட நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் பெரும் வருத்தம். ஒரு இடத்துக்கு சுற்றுலாவோ, சிற்றுலாவோ சென்றுவந்தால், நாம் போவதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்ததோ அதைப் போலவே நாம் திரும்பி வரும்போதும் இருக்கவேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? குரங்குகளுக்கு உணவளிப்பது, பிளாஸ்டிக் பைகளையும், தண்ணீர் பாட்டில்களையும் விசிறிவிட்டு வருவது, மதுவருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை அடித்து நொறுக்குவது, சத்தமாய்ப் பாடல்களை ஒலிக்கவிடுவது, கத்திக் கூப்பாடு போடுவது, மரக்கிளைகளை ஒடிப்பது, அங்கே வாழும் விலங்குகளையும் பறவைகளையும் கலவரப்படுத்துவது என சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான விஷயங்களைச் செய்து, நம்முடைய தடத்தை மிக ஆழமாக விட்டுவிட்டு வருகிறோம். 

பறவைகளுக்கு  எண்ணெயில் பொரித்த, உப்பு சேர்த்த உணவுகளைத் தருவது அவற்றுக்கு செய்யும் நன்மை அல்ல, கெடுதலே என்பதை நாம் உணரவேண்டும். இயற்கையாக அவை உணவு தேடி உண்ணும் பழக்கத்தை மாற்றி மனிதர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளுவதோடு அவற்றின் ஆரோக்கியம் கெடவும் நாம் காரணமாகிறோம். உண்மையில் அவற்றுக்கு உதவ விரும்பினால் வீட்டைச் சுற்றி மரம், செடிகளை வளர்த்து அவற்றுக்கு உறைவிடமும் உணவும் இயற்கையான முறையில் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.  சிலர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மா, மாதுளை, கொய்யா  மரங்களின் பழங்களை பிளாஸ்டிக் பை போட்டுக் கட்டி அணில், பறவை போன்றவற்றிடமிருந்து பத்திரப்படுத்திவிட்டு, அவற்றுக்கு மிக்சரும் காராசேவும் பரிமாறி மகிழ்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.  இந்தியாவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிலும் நான் அப்படியான பல விஷயங்களைப் பார்க்கிறேன். 

ஆஸ்திரேலியாவில் இயல்வாழிடப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால் பலர் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. விளைவு? 


ரொட்டித் துண்டுகளுக்காகக் குழுமி நிற்கும் பறவைகள்

கடற்கரையோரங்களில் வசிக்கும் கடற்புறா இனமான silver gull பறவைகள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் வழக்கத்தையே மறந்து கரையோரக் கடைகளின் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை மட்டுமே நம்பி வாழத் தொடங்கிவிட்டன. 

கரையோரக் கடைகளில் கடற்புறாக்கள் (silver gulls)

மண்ணைக் கிளறி புழு பூச்சிகளைத் தேட வேண்டிய அன்றில் பறவைகள் குப்பைத்தொட்டிகளைக் கிளறி மீந்துபோன உணவைத் தின்று கொண்டிருக்கின்றன. அவற்றின் பெயர் Ibis என்பது கூட ஆஸ்திரேலியாவில் பலருக்கும் தெரியாது. Bin chicken என்றால்தான் தெரியும். 

குப்பைத் தாளுடன் வெள்ளை அன்றில் (Australian white ibis)

பூங்காக்களில் பெருவாத்துகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக ரொட்டித்துண்டுகளைத் தூவுவதால், அவற்றின் பெருத்த அடிவயிறுகள் தரைதட்டிக் காணப்படுகின்றன.

பூங்காவின் பெருவாத்துகள் (Geese)


வயிறு பெருத்த பெருவாத்து (Goose)

மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த குக்கபரா பறவைகளோ, குழந்தைகளின் கையிலிருந்து உணவைப் பிடுங்கித் தின்னும் அளவுக்கு மூர்க்கமாகிவிட்டன. 


இயற்கைச் சமநிலை குலைய நாமே காரணமாகிவிட்டு, அதன் காரணமாகப் பின்னாளில் நாமும் பாதிப்புக்கு ஆளாகும்போது இயற்கை நம்மைப் பழிவாங்குவதாகப் புலம்புவது எவ்வளவு முரண்!



இனியேனும் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பெறுவோம். உதவி என்ற பெயரில் உபத்திரவம் செய்துகொண்டிருப்பதை அறிந்து தவிர்ப்போம். சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம். காடு வளர்ப்போம். காட்டுயிர்களைப் பாதுகாப்போம்.

*****

உலக காட்டுயிர் தினத்தை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு:

இன்று (03-03-24) இந்திய நேரம் பிற்பகல் 1.30 மணி முதல் நாளை (04-03-24) பிற்பகல் 1.30 வரை என்னுடைய மூன்று மின்னூல்கள் இலவசம்.


ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் - தொகுப்பு 1

https://www.amazon.in/dp/B098XVX17X


கங்காரூ முதல் வல்லபி வரை

(ஆஸ்திரேலியாவின் அதிசய விலங்குகள் – தொகுப்பு 1)

https://www.amazon.in/dp/B0B19NXLLN



மார்சுபியல், பாலூட்டி & மோனோட்ரீம் ஊனுண்ணிகள்

(ஆஸ்திரேலியாவின் அதிசய விலங்குகள் - தொகுப்பு 2)

https://www.amazon.in/dp/B0C5JR1S72


ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கி வாசித்து மகிழலாம். 

*****