3 January 2018

க்வோல் (quoll)

பல மாதங்களுக்குப் பிறகு புதியதொரு அறிமுகத்துடன் தொடர்கிறது ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் தொடர். 





மார்சுபியல் மாமிச உண்ணியான க்வோல் என்ற ஆஸ்திரேலிய விலங்கு பற்றி எவரும் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவே. மொத்தமுள்ள ஆறு க்வோல் இனங்களுள் நான்கு ஆஸ்திரேலியாவிலும் மீதமிரண்டு அருகிலுள்ள பாப்புநியூகினி தீவிலும் உள்ள. க்வோல் என்பது ஆஸ்திரேலிய பூர்வகுடி மொழிச்சொல்லாகும். 15 மில்லியன் வருட பரிணாம வரலாற்றைக் கொண்டிருந்தாலும் இப்படியொரு விலங்கினம் இருக்கிறது என்பது உலகுக்குத் தெரியவந்தது 1770-இல் கேப்டன் குக்கின் குறிப்பால்தான். இதன் அறிவியல் பெயரான Dasyurus என்பதற்கு கிரேக்க மொழியில் மயிர்வால் என்று பொருள்.



பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் வெள்ளைப்புள்ளிகளுடனும் ரோஸ் நிற மூக்குடனும் பார்க்க அழகாக இருக்கும் க்வோல்கள் சுமார் 300 கிராமிலிருந்து 7 கிலோ எடை வரையிலும் காணப்படுகின்றன. க்வோல்கள் நன்றாக மரமேறக்கூடியவை. இவை இரவு விலங்குகள் என்பதால் பகல் முழுவதும் ஏதேனும் வளை, பொந்து, உள்ளீடற்ற மரக்கட்டை அல்லது பாறையிடுக்கில் படுத்துறங்கும். ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதைப் பொதுக்கழிப்பிடமாக உபயோகிக்கும் வழக்கம் க்வோல்களிடம் உண்டு என்பது வியப்பூட்டும் செய்தி

  

கிழக்கு பிராந்திய க்வோல் (eastern quoll), மேற்கு பிராந்திய க்வோல் (western quoll), வடக்கு பிராந்திய க்வோல் (northern quoll) மற்றும் புள்ளிவால் க்வோல் (spotted tail quoll) – நான்கும் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படுபவை. இவற்றுள் புள்ளிவால் க்வோல் மற்ற க்வோல் இனத்தை விடவும் பெரியது. ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் காணப்படும் மாமிச உண்ணி மார்சுபியல்களிலேயே இதுதான் மிகப்பெரியது. புள்ளிவால் க்வோலுக்கு மட்டும்தான் வாலிலும் புள்ளிகள் உண்டு. இது புலி க்வோல் (tiger quoll) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பெண் புள்ளிவால் க்வோல்களுக்கு மட்டுமே நிரந்தர வயிற்றுப்பை உண்டு. மற்ற க்வோல் இனத்தின் பெண் க்வோல்களுக்கு இனப்பெருக்கக் காலத்தில் அடிவயிற்றின் தொளதொளப்பான தசைகள் ஒரு பை போல செயல்பட்டு குட்டிகளைப் பாதுகாக்கும். குட்டிகள் சற்று வளர்ந்தபின் தாயின் முதுகில் சவாரி செய்தபடி பயணிப்பது அழகு.



புள்ளிவால் க்வோல்கள் வசிப்பிட எல்லை வகுத்து தனித்து வாழும் இயல்புடையவை. ஒவ்வொன்றின் எல்லைப்பகுதியும் சுமார் ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பை உள்ளடக்கியது. ஒரு இரவில் சுமார் ஆறு கி.மீ. வரை உலவித்திரியும். புள்ளிவால் க்வோல்கள் இரவு நேரங்களில் போசம், கிளைடர்கள், முயல்கள், பறவைகள், முட்டைகள் மற்றும் சிறிய அளவிலான வல்லபிகள் போன்றவற்றை வேட்டையாடித் தின்னும். இறந்து அழுகிய உடல்களையும் தின்னும்



புள்ளிவால் க்வோல்களின் இனப்பெருக்கக்காலம் மே, ஜூன் மாதங்கள். இவற்றின் குட்டிகள் நெல்மணியை விடவும் சிறியதாக இருக்கும். பெண் க்வோல்கள் சுமார் 18 குட்டிகள் ஈன்றாலும் தக்கன பிழைக்கும் என்ற விதிப்படி தாயின் வயிற்றுப்பையை முதலில் தஞ்சமடையும் ஆறு குட்டிகளே உயிர்பிழைக்கின்றன. சிலகாலம் தாயின் வயிற்றுப்பையிலும் பிறகு வளையிலும் வாழும் குட்டிகள், பதினெட்டு மாதங்களில் தனித்துவாழத் தொடங்கும். இரண்டு வருடங்களில் பருவமுதிர்ச்சி அடையும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் ஐந்தாண்டுகள்.



ஆஸ்திரேலியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட க்வோல் இனம், ஐரோப்பிய வருகைக்குப் பின்னர் வாழ்விட இழப்பு மற்றும் நரி, நாய், பூனை போன்ற அயல்விலங்குகளின் அறிமுகம் இவற்றால் பாதிப்புக்கு ஆளாகி, தற்போது அச்சுறு நிலையை அடைந்துவிட்டிருக்கின்றன என்பது மிகவும் வருந்தத்தக்க தகவல். இவற்றின் அழிவுக்கு மிக முக்கியமானவை cane toad எனப்படும் கரும்புத்தேரைகள். கொழுகொழுவென்ற கரும்புத்தேரைகளைப் பார்த்தமாத்திரத்தில் நல்ல இரை கிடைத்துவிட்டதென்று ஆசையுடன் வேட்டையாடித் தின்னும் க்வோல்கள் கரும்புத்தேரைகளின் கடுமையான விஷத்தால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகின்றன. கரும்புத்தேரைகளைத் தின்னாமல் தவிர்க்க க்வோல்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. க்வோல்களை செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்ப்பதன் மூலம் அவற்றின் அழிவைத் தடுக்கமுடியும் என்ற யோசனையும் தற்போது பரிசீலனையில் உள்ளது

(படங்கள் உதவி - இணையம்)

20 comments:

  1. முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
    அறியாத பல விஷயங்களை அறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மதுரைத்தமிழன். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  2. வாழ்க்கையில் அறிந்திருக்க வேண்டிய பல அரிய விடயங்கள் உங்கள் மூலம் கிடைக்கிறது.
    இவையும் அழகுதான்.

    பகிர்வினுக்கு மிக்க நன்றி தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனைகள் சூழ்ந்த வாழ்கையில் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள இயற்கையின் சில அம்சங்கள் மறைமுகமாகவேனும் உதவிக்கொண்டிருக்கின்றன. உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.

      Delete
  3. அறியாத, சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  4. இவை ஏதோ அணில் அல்லது எலி வகைபோல் தோன்றுகிறது இதுவரை கேள்விப்படாத உயிரினம் நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆஸ்திரேலியவாசிகளே அவ்வளவாக கேள்விப்படாத உயிரினம் இது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  5. சகோதரி/தோழி க்கு எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    அறியாத ஓர் இனத்தை. விலங்கைப் பற்றி அறிய முடிந்தது. மிக்க நன்றி சுவாரஸ்யமான தகவல்களுக்கு...

    கீதா: தோழி, சில மாதங்களுக்கு முன் பப்புனியூகினி தீவைப் பற்றி மேலும் சில தகவல்கள் அறிய முனைந்த போது இந்தக் க்வோல் பற்றி அறிய நேர்ந்தது. ஆனால் முழு தகவல்களும் உங்கள் பதிவின் மூலம் இப்போது அறிகிறேன். அழகாக இருக்கிறது. அதுவும் அந்தக் குட்டிக் க்வோல்கள் அழகோ அழகு. எலி போன்றும், அணில் போன்றும், அதே சமயம் வயிற்றுப் பை எனும் போது கங்காரு போன்றும் எல்லாம் கலந்த ஒன்றோ?!!! அழியும் விளிம்பில் உள்ளன என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அட! வளர்ப்புச் செல்லமாகவும் வளர்க்கலாமா?!!!

    நிறைய ஸ்வாரஸ்யமான தகவல்கள்...தோழி. மிக்க நன்றி. மகனுக்கும் இப்பதிவை அனுப்புகிறேன்.
    மிக்க நன்றி பகிர்விற்கு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விரிவான கருத்துப்பகிர்வுக்கும் நன்றி தோழி.

      க்வோல்கள் பற்றி நீங்கள் முன்பே அறிந்திருப்பதும் மகனுடன் பதிவை பகிர்ந்துகொள்ள விரும்புவதும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. க்வோல்களை வளர்ப்புச்செல்லமாக வளர்க்க ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றாலும் இன்னும் அனுமதி கிட்டவில்லை.

      Delete
  6. அறியாத செய்தகள் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. இதுவரை அறியாத விசித்திர உயிரினம். பொதுக்கழிப்பிடம் என்பது ம் கரும்புத் தேரைகளைத் தின்னாமலிருக்கப் பயிற்சியளிப்பதும் என்பதும் வியக்கத்தக்க செய்திகள். நன்றி கீதா! குட்டிகள் அழகு!

    ReplyDelete
    Replies
    1. பொதுக்கழிப்பிடம் குறித்து எனக்கும் வியப்புதான். டாஸ்மேனியன் டெவில் போன்ற இன்னும் சில மாமிச உண்ணி மார்சுபியல்களிடம் இந்தப் பழக்கம் இருக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

      Delete
  8. அறிந்திரா உயிரினம்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டதற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. இதுவரை அறிந்திராத உயிரினம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  10. உங்கள் பதிவுகளை படித்து இன்னும் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை வாசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.