25 May 2013

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 4


மழையும் குளிரும் வாட்டும் வேளை, மக்கள் படும்பாட்டை விவரிக்கும் அழகு மேவிய வரிகள்!
 

குளிர்மாலைத் துயர் நினைத்து
மலர்மாலை புனையப் பயந்து
சிலமலர் சூடிடுவார் மகளிர்தம்
அடர்கூந்தல் அழகு செய்ய!

 
நறுமண விறகில் நெருப்பினை மூட்டி
அகிலோடு சாம்பிராணியும் பலவும் கூட்டி
முகிலென்றெழுந்த புகையினில் காட்டி
முடிப்பர் கூந்தலை வாசனை ஊட்டி!

 
கைவினைக் கலைஞன் செய்த
கலைநயமிக்க விசிறியெலாம்
சிலந்திவலைப் பின்னலோடு
வளைந்த ஆணியில் தொங்க....
 
 
இளவேனிற் காலத்தில்
இளந்தென்றல் காற்றால்
இதம் மேவும் பள்ளியறையின்
பலகணிக்கதவுகள் இரண்டும்
உலவுவாரில்லாக் காரணத்தால்
திறவாது கிடந்தன தாழிட்டு!

 
தொடர்மழைத் தூறலால்
இடர்மிகு வாடையால்
குறுங்கழுத்துப் பானையின்
குளிர்நீரைப்பருகத் துணியாது
அகன்ற சட்டியிலே அனலுண்டாக்கி
அதன் அருகே அமர்வர் யாவரும்.

 
குளிர்ந்த நரம்புகளால்
குறையுறும் இன்னிசையென்றே
திரண்ட மார்பணைத்து
யாழினுக்கு வெம்மையூட்டி
நிறைந்த பண்ணிசைத்தார்,
நயமிகு ஆடல்மகளிர்!

 
கணவரைப் பிரிந்து வாடும்
காதல் மகளிர் மேலும் வாட,
கனத்த மழை மிகுந்து
பனிக்காற்றும் தொடர்ந்ததே. 

************************************

நெடுநல்வாடைப் பாடல் (53-72)

கூந்தல் மகளிர் கோதை புனையார்;
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக், 

கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க 

வானுற நிவந்த மேனிலை மருங்கின்
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவம் தாழொடு துறப்பக்  

கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர; 

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையின் திரிந்த இன்குரல் தீம்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப 

காதலர்ப் பிரிந்தோர் புலம்ப,பெயல் கனைந்து
கூதிர் நின்றன்றால்
-----------------------------------------------------------------------

(படங்கள்: நன்றி இணையம்)

39 comments:

  1. அட... முதலில் உங்களின் எளிய விளக்கம் பொதிந்த கவிதையைப் படித்த பின்னால நெடுநல்வாடைப் பாடலைப் படித்தால் கூடுதல் சுவையாத்தான் இருக்குது!

    தொடர்மழைத் தூறலால் | இடர்மிகு வாடையால் | குறுங்கழுத்துப் பானையின் | குளிர்நீரைப்பருகத் துணியாது | அகன்ற சட்டியிலே அனலுண்டாக்கி |அதன் அருகே அமர்வர் யாவரும்.

    -படிக்கையிலயே மனசுல காட்சியா ஓடுது கீதா. மொத்தக் கவிதையும் அருமை!

    ReplyDelete
  2. இணைத்த படங்களும், அழகான வரிகளும் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    (தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்...)

    ReplyDelete
  3. சொல்ல வந்த விஷயத்தை இலகுவாகச் சொன்னால் அது எல்லோரது மனதிலும் ஒட்டிக் கொள்ளும் உங்கள் கவிதை வரியை மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள்
    தோழி .

    ReplyDelete
  4. அழகு மேவிய வரிகள் ரசிக்கவைத்தன...!

    ReplyDelete
  5. நெடுநல் வாடை நறுமணம் வீசத்தான் செய்கிறது .. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  6. வெகு ஜோரான மொழியாக்கம். கவிதை அப்படியே மனதை அள்ளிக்கொண்டு போகிறது.

    ReplyDelete
  7. அசத்தல் வரிகள்...

    அழகிய படைப்பு

    ReplyDelete
  8. நெடுநல் வாடையை இப்படி இழைத்து தேன் விட்டுக்குழைத்து அனுபவியென்றுதந்தால் வேண்டாம் என்பார் யாருளர்.
    உங்கள் அரும்பணியால் ஐயோ புரியாது வேண்டாம் என புறந்தள்ளிவிட்டவையெல்லாம் இவையல்லவோ இனிமை என்றெண்ண வைக்கின்றது.
    அத்துடன் தேடித்தேடி அதற்கிணையாக இணைக்கும் படங்களும் அற்புதம்.

    அத்தனையும் மிகச்சிறப்பு தோழி! உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்! பகிர்விற்கு இனிய நன்றிகள் பல!!

    த ம. 5

    ReplyDelete
  9. ரஸித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. @பால கணேஷ்

    ஆமாம் கணேஷ்.. எவ்வளவு அழகா எழுதியிருக்கார் புலவர்! நான் பெற்ற தமிழின்பத்தை நீங்களும் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் ரசித்தமைக்கும் அன்பு நன்றிகள் கணேஷ்.

    ReplyDelete
  11. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் திரட்டிகளில் இணைத்து உதவியமைக்கும் என் கனிவான நன்றிகள் தனபாலன்.

    ReplyDelete
  12. @Ambal adiyal

    கவிதை மூலம் நெடுநல்வாடையை ரசித்து மகிழ்ந்த தங்களுக்கு என் உளப்பூர்வ நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  13. @இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  14. @vimal

    நெடுநல்வாடையின் மணத்தில் மனம் பறிகொடுத்த தங்களுக்கு அன்பான நன்றி விமல்.

    ReplyDelete
  15. @கே. பி. ஜனா...

    வருகைக்கும் ரசனைக்கும் மனமார்ந்த நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  16. @கவிதை வீதி...// சௌந்தர் //

    தங்கள் வருகையும் ரசனையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  17. @இளமதி

    நெடுநல்வாடையிலேயே தேன் இருக்கிறது இளமதி... சற்றே நீரில் குழைத்து மட்டுமே தருகிறேன் நான். சொல்லப்போனால் பழம்பாடல் என்னும் தேனின் இனிமை என் விளக்கத்தால் நீர்த்துப்போயிருக்கலாம். ஆனால் பலருக்கும் எளிதாய்ப் புரிந்துகொள்ள இயல்கிறதே.. அதுவே எனக்கு நிறைவு தருகிறது. தொடர்ந்து வந்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு என் அன்பான நன்றி இளமதி. படங்களுக்காய் இணையத்திற்கு நன்றி நவில்வோம்.

    ReplyDelete
  18. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் உளங்கனிந்த நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  19. படங்களுடன் விளக்கமான தகவலும் நன்று.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.தா.மா.-7

    ReplyDelete
  20. நெடுநல் வாடைக் கவிதைக்கு கவிதைவழி உரையா?
    அருமை! உரையும் , படங்களும் மிக ,பொருத்தமாக உள்ளன! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  21. பதிவுக்கு வர தாமதமாகிவிட்டது. இருந்தாலென்ன. உங்கள் பதிவு மட்டுமில்லாவிட்டால் நெடுநல்வாடையைப் படித்தா இருக்கப் போகிறேன். . முதலில் சங்ககாலப் பாடல் இவ்வளவு எளிமையாய் விளங்கும்படியாய் இருக்கிறதே என்று ஆச்சரியப் பட்டேன். உங்கள் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது. ஒரிஜினல் பாட்டுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை. உங்கள் பாடல் வரிகள். சபாஷ். நாளுக்கு நாள் மெருகேற்றுகிறீர்கள். வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. நெடுநல் வாடையை நான் எம்.ஏ படிக்கும் பொழுது படித்தது. 151 வரிகள் தான் என்று நினைக்கிறேன். அதை அப்பொழுது படிக்கும் பொழுது இவ்வளவு சுவை இல்லை.
    மிகவும் அருமையாக விளக்கி எழுதுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள் கீதமஞ்சரி அக்கா.

    ReplyDelete
  23. ​அரு​மை அரு​மை. ப​ழைய ​செய்யுள்க​ளை என் ​போன்றவர்க​ளையும் ரசிக்க ​வைக்கும் விதமாக புதுக்கவி​தையாக ஆக்கிக் காட்டிய அற்புதத்திற்கு நன்றி

    ReplyDelete
  24. நெடுநல் வாடையை இன்புற்று நுகர்ந்தோம்.

    தொடருங்கள்.....
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. அருமையான பாடல். பள்ளிகூடத்தில் "குளிர் கால வருணணைகள்" என்ற தலைப்பில் வந்த பாடத்தில் படித்தது. இன்னும் மனதில் பசுமையாக உள்ளது. இந்த பாடலை சில காலமாக தேடி கொண்டிருந்தேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  26. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  27. @புலவர் இராமாநுசம்

    தங்களிடமிருந்து கிடைத்துள்ள பாராட்டும் வாழ்த்தும் கண்டு அகமகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  28. @G.M Balasubramaniam

    தொடர்ந்து வந்து ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் தங்களுக்கு என் அன்பான நன்றி ஐயா.

    ReplyDelete
  29. @அருணா செல்வம்

    மொத்தம் 168 வரிகள். குறைவான வரிகள்தாம். ஆனால் அவற்றுள் எவ்வளவு சிறப்பாக செய்திகள் சொல்லப்பட்டுள்ளன... வியக்கிறேன். உங்கள் வருகையும் ஊக்கம்தரும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி அருணாசெல்வம்.

    ReplyDelete
  30. @krish

    தங்கள் வருகையும் நெடுநல்வாடையை ரசித்து மகிழ்ந்தமையும் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி krish.

    ReplyDelete
  31. @மாதேவி

    வருகைக்கும் பாடலை நுகர்ந்து இன்புற்றமைக்கும் அன்பார்ந்த நன்றி மாதேவி.

    ReplyDelete
  32. @சதுக்க பூதம்

    தங்கள் முதல் வருகைக்கும் பாடலை ரசித்து மகிழ்ந்து இட்டக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சதுக்க பூதம்.

    ReplyDelete
  33. Anonymous30/5/13 01:53

    தமிழுக்கு அழகு சேர்ப்பவை இலக்கியங்களன்றோ....நெடுநல்வாடையின ்கவிமழையில் திளைத்தேன் நானும்.

    ReplyDelete
  34. ஆஹா! என்ன ஒரு அழகு! என்ன ஒரு அழகு!!

    காட்சிப்படிமம் தெரியுது கண் முன்னே!
    கொண்டு வந்த பெண்ணோ பாடலின் பின்னே!

    பாராட்டுப் பல தந்து காத்திருக்கிறேன் மேலும் மேலும் அறியவும் நுகரவும்.

    ReplyDelete
  35. @டினேஷ் சுந்தர்

    தங்கள் வருகைக்கும் கவிதையில் திளைத்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி டினேஷ் சுந்தர்.

    ReplyDelete
  36. @மணிமேகலா

    வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் அன்பான நன்றி மணிமேகலா.

    ReplyDelete
  37. Anonymous10/6/13 18:31

    மிகச் சிறப்பு .ரசித்து வாசித்தேன்.
    இனிய வாழ்த்து. தொடர்க!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  38. @kovaikkavi

    வருகைக்கும் ரசித்து வாசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  39. பண்ணிசைத்த ஆடல் மகிளிருக்கான படத்துடன் தந்த வரிகள் வெகு அழகுங்க. வரிக்கு வரிக்கு ரசிக்க வைத்தது.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.