2 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 5

அரசனின் அரண்மனையைத் தேர்ந்த அனுபவமும் தொழிலறிவும் வாய்ந்த கலைஞர்கள் அமைத்த விதத்தை அழகுபட விவரிக்கும் வரிகள்...

நெடுநல்வாடைப் பாடல் (72-81)

……………………………………மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து
ஒருங்குஉடன் வளைஇ, ஓங்குநிலை வரைப்பின்
பருஇரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி, இணைமாண்டு


விரிந்த கதிர் பரப்பும் கதிரவன்
மேற்கு நோக்கி மேற்செல்கையில்
ஒருபக்கம் நிழல் சாரா வேளையில்
இருகோலினை நிலத்தில் ஊன்றி
வருநிழல் மாறாதிருக்கும்
நல் உச்சிப்பொழுதொன்றில்
நூல் படித்த அறிஞர்கள்
நூல் பிடித்து திசை குறித்து
திசை குறிக்கும் தெய்வந்தொழுது
தெய்வநிகர் மன்னனுக்கு
மனையும் வாயிலும் மண்டபமும் வகுத்து
வகுத்ததனைத்தையும் மதிலால் வளைத்து
வளைத்த மதிலின் மத்தியில்
அரக்கு வண்ணம் கொண்டு
பருத்தக் கதவுகள் இரண்டு
இரும்பாணிகள் கொண்டு நிலையாய்
இணைத்துப் பொருத்தினர் நிலையோடு!

நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்து
போதுஅவிழ் குவளைப் புதுப்பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின்
கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றுஎழு கொடியொடு வேழம் சென்றுபுக
குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில் (82-88) 
 
உத்தம நட்சத்திரமாம்
உத்திரத்தின் பெயர்கொண்ட
உத்திரப் பெருமரத்தாலான
அக்கதவுகளின் இருமருங்கிலும்
மொக்கவிழும் குவளைப்பூப்போலும்
பிடிகளை  அழகுபடப் பொருத்தி
வளியோ உளியோ நுழையாவண்ணம்
துளியிடைவெளியின்றி முடுக்கினர்,
தேர்ந்த தொழிலறி தச்சர்!  
உயவுக்காய் கடுகின் நெய்தடவி
உயர்ந்திருந்த நிலைகளினூடே
வெற்றிக்கொடியேந்தியபடி
வேழங்கள் நடைபோடும்படி
மலைவாயில் போலே
மதில்வாயில் அமைத்தனர்.
 

திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை
பணைநிலை முனைஇய பல்உளைப் புரவி
புல்உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்து
கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய
கலிந்துவீழ் அருவிப் பாடுவிறந்து,அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல்இயல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்இசை
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (89-100)

திருமகள் உறைந்தாற்போல்
தீதேதும் அணுகாத,
குறுவெண்மணல் பரப்பிய
குறைவிலா முற்றத்தில்
நீள்வெண்மயிர் கொண்டு
ஆண் கவரிமான் ஒன்று
குறுநடை பயிலும் அன்னம் துரத்தி
குறும்பாய்த் தாவித்திரியும்
அரண்மனை முன்வாயில்!
 


கொட்டிலின் தனிமை வெறுத்து
எட்டிய புல்லும் தவிர்த்து
பிடரிமயிர்நிறைப் புரவியொன்று
கதறித் துயர்மிகக் கனைக்க.... 
நிலாவோடு கொற்றவனும்
உலாவரும் முற்றமதில்
வாய்பிளந்த மீன்குழாய் வழியே
வான் பிளந்த மழைநீர் வழிய... 
அருவியென அதை அதிசயித்தபடி
அருகிலே செருக்கோடு திரியும்
தோகைமயிலின் அகவல் கேட்போர்
ஊதுகொம்பின்னிசையென்றே மருள...
 
ஆர்ப்பரிக்கும் மழையின் பேரொலியால்
ஆரவாரிக்கும் மலையின் எதிரொலிபோல்
ஆரவாரித்தது கோவில்,
அரசனெனும் கோவின் இல்!

************************************************

படங்கள்: நன்றி இணையம்
  

37 comments:

 1. நிலாவோடு கொற்றவனும்
  உலாவரும் முற்றமதில்
  வாய்பிளந்த மீன்குழாய் வழியே
  வான் பிளந்த மழைநீர் வழிய...

  ததும்பும் உணர்வுகளை அருமையாய்
  வடித்த பகிர்வுகளௌக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete

 2. நல்ல தொழில் வித்தகர்கள் செய்யும் பணியின் நேர்த்தியைக் கவிதையில் நீங்கள் எழுதும் வரிகள் பாராட்டத்தக்கவை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அழகான படங்களுடன் அருமையான ஆக்கம்.

  // உத்தம நட்சத்திரமாம் உத்திரத்தின் பெயர்கொண்ட உத்திரப் பெருமரத்தாலான அக்கதவுகளின் இருமருங்கிலும் மொக்கவிழும் குவளைப்பூப்போலும்
  பிடிகளை அழகுபடப் பொருத்தி வளியோ உளியோ நுழையாவண்ணம் துளியிடைவெளியின்றி முடுக்கினர்,
  தேர்ந்த தொழிலறி தச்சர்! //

  கலைஞர்களின் கைவண்ணத்தை கலையுணர்வோடு அருமையாய்ச் சொல்லியுள்ள வரிகள். பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. அழகான வரிகள்... உங்களுக்கு மட்டும் இணையத்தில் எப்படி இவ்வாறு அருமையான, கச்சிதமான படங்கள் கிடைக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... வாழ்த்துக்கள் பல...

  ReplyDelete
 5. அருமையான கவிநயம் சுவைத்தோம்.

  ReplyDelete
 6. அருமை யான முயற்சி! அயராத ஆர்வம்! வாழ்க! தொடர்க!

  ReplyDelete
 7. விவரிக்கும் போதே சித்திரம் வரைவது போன்ற அழகுடன் விவரித்துச் செல்லும் உங்கள் தமிழ்நடை மனதிற்குள் ரம்மியமாய் நுழைகிறது, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. //நிலாவோடு கொற்றவனும்
  உலாவரும் முற்றமதில்
  வாய்பிளந்த மீன்குழாய் வழியே
  வான் பிளந்த மழைநீர் வழிய...
  அருவியென அதை அதிசயித்தபடி
  அருகிலே செருக்கோடு திரியும்
  தோகைமயிலின் அகவல் கேட்போர்
  ஊதுகொம்பின்னிசையென்றே மருள...//

  எத்தனை அழகான சொல்லாக்கம்! அதனை அழகு தமிழில் எங்களுக்கெல்லாம் விருந்தெனப்படைத்த உங்களுக்கு அன்பு நிறைந்த நன்றி கீதமஞ்சரி!

  ReplyDelete
 9. அருமை அருமை.
  நெடுநல்வாடை . நெடு நாள் வாடை . தரும் மனம் மணக்க.
  நன்றி சகோதரி.

  ReplyDelete
 10. மனசில் தனியிடம் பிடித்து உறைகிறது உங்களின் இந்த நெடுநல்வாடை பகிர்வு. அழகான படங்களுடன் உங்கள் கவிவரிகள் ரசனை! நிச்சயம் இதை தனிப் புத்தகமாப் போடணும் கீதா!

  ReplyDelete
 11. சிறப்பான பகிர்வு. உங்கள் எழுத்துகளின் மூலம் எங்களுக்கும் நெடுநல்வாடையின் அனுபவம் கிடைக்கிறது. தொடரட்டும்.....

  ReplyDelete
 12. நினைத்தே பார்க்கமுடியாத, எனக்கெல்லாம் வாசிக்க வாயில் புகாத வார்தைகளை, கருத்துகளைக்கொண்ட நெடுநல்வாடையை இத்தனை அழகாக இலகுவாக புரியும்படி அமைத்துள்ளீர்கள்.

  உங்கள் திறமையதால் காட்சிகள் கண்முன்னே விரிகிறது. ஆழ்ந்து ரசித்தேன் தோழி! அற்புதமே!...

  வாழ்த்துக்கள்! தொடருங்கள்...

  ReplyDelete
 13. அருமை கீதமஞ்சரி! எளிமையாக அழகாகப் படைக்கிறீர்கள்.
  //கொட்டிலின் தனிமை வெறுத்து
  எட்டிய புல்லும் தவிர்த்து// பாவம் போங்க..
  //ஆரவாரித்தது கோவில்,
  அரசனெனும் கோவின் இல்!// அருமை அருமை!
  ஒவ்வொரு வரியும் அருமை. படங்களும் அருமை!

  ReplyDelete
 14. ஒவ்வொரு வரியும் சிறப்பாக அமைந்துள்ளது!.... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. நெடுநெல்வாடையை எளிதாக எல்லொருக்கும் புரியும் வகையில் கவிதை நடையில் அருமை.
  //வளியோ உளியோ நுழையாவண்ணம்
  துளியிடைவெளியின்றி முடுக்கினர்,
  தேர்ந்த தொழிலறி தச்சர்! //

  நன்றி.

  ReplyDelete
 16. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 17. @G.M Balasubramaniam

  தங்கள் வருகைக்கும் பாராட்டி வாழ்த்தியமைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 18. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் படங்களுடன் பாடலை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி சார்.

  ReplyDelete
 19. @திண்டுக்கல் தனபாலன்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன். என்னிடம் காப்புரிமை அற்ற படங்கள் photo art - 3 volumes & clip art - 3 volumes உள்ளன. (கணவரின் பரிசு!) அவற்றிலிருந்து பல படங்களைத் தேர்வு செய்து வெளியிடுகிறேன். இயற்கை தவிர வாழ்வியல் தொடர்பான படங்கள் யாவும் அயல்நாட்டு கலாச்சாரங்களின் அடிப்படையில் இருப்பதால் ஒரு சில படங்களுக்கு இணையத்தின் தேவை தேவைப்படுகிறது. அதனால் மொத்தமாகவே இணையத்துக்கு நன்றி சொல்லிவிடுகிறேன். இந்தப் பதிவில் உள்ள ஆறு படங்களில் இரண்டு மட்டுமே இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

  ReplyDelete
 20. @மாதேவி

  வருகைக்கும் சுவைத்து மகிழ்ந்தமைக்கும் நன்றி மாதேவி.

  ReplyDelete
 21. @?புலவர் இராமாநுசம்

  தங்கள் வருகையும் பாராட்டும் மேலும் உற்சாகம் அளிக்கின்றன. நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @Amudhavan

  தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து வாழ்த்தியமைக்கும் மனமுவந்த நன்றி அமுதவன் சார்.

  ReplyDelete
 23. @மனோ சாமிநாதன்

  தங்கள் வருகையும் ஊக்கம் தரும் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி மேடம்.

  ReplyDelete
 24. @சிவகுமாரன்

  தங்கள் தமிழறிவின் முன் நானெல்லாம் எம்மாத்திரம்? ஆனாலும் தங்கள் வருகையும் பாராட்டும் தொடர்ந்து எழுதும் ஊக்கம் தருகின்றன. நன்றி சிவகுமாரன்.

  ReplyDelete
 25. @பால கணேஷ்

  உங்கள் அன்புக்குத் தலைவணங்குகிறேன் கணேஷ். தொடர்ந்து ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் அன்பான நன்றி.

  ReplyDelete
 26. @வெங்கட் நாகராஜ்

  தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் தொடர அளிக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  ReplyDelete
 27. @இளமதி

  முதலில் எனக்கும் எதுவும் விளங்கவில்லை இளமதி. பல உரையாசிரியர்களின் உரைகளையும் பல தமிழாய்வாளர்களின் திறனாய்வுகளையும் படித்த பிறகே எளிதில் விளங்க இயன்றது. நான் அனுபவித்த தமிழின் இனிமையை அனைவரும் அனுபவிப்பது மிகவும் மகிழ்வாய் உள்ளது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி.

  ReplyDelete
 28. @கிரேஸ்

  வருகைக்கும் வரி வரியாய் ரசித்து மகிழ்ந்தமைக்கும் என் அன்பான நன்றி கிரேஸ்.

  ReplyDelete
 29. @ஜீவா பரமசாமி

  தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்டக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிங்க ஜீவா.

  ReplyDelete
 30. @கே.பி.ஜனா

  தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

  ReplyDelete
 31. கீதாவுக்கு இதை விட அழகாக எழுத வரும். அது எனக்கு உறுதியாகத் தெரியும். இது கீதாவின் ’அவசர சமையல்’ போல ஓர் எண்ணம் தோன்றுகிறது.

  அப்படியா தோழி? (கீதா என்னைப் புரிந்து கொள்வாள் என நம்புகிறேன்)

  ReplyDelete
 32. @மணிமேகலா

  மனத்தில் தோன்றியதை மறைக்காமல் எழுதியமைக்கு மிகவும் நன்றி மணிமேகலா. மகிழ்கிறேன். இயற்கையின் வர்ணனையில் என் பங்குக்கு இன்னும் வர்ணனை சேர்த்தல் வசப்பட்ட அளவுக்கு அந்நாளைய கட்டுமானப்பணிகள் பற்றிய வர்ணனையில் கற்பனையை ஓட்டவியலவில்லை என்பதே உண்மை. அதை மிகச்சரியாக கண்டுகொண்டிருக்கிறீர்கள். இருப்பதை அப்படியே எவ்வித அலங்காரமுமின்றி எளிமைப்படுத்தியிருக்கிறேன். இனிவரும் பகுதிகளில் உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன். புரிதலோடு மட்டில்லாத மகிழ்ச்சியும் அடைகிறேன் மணிமேகலா... (இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் நினைவுக்கு வந்துபோகிறான்.)

  ReplyDelete
 33. பாடலுக்குப் பொருத்தமான படங்கள். இணையத்தில் கூகிள் வழி தேர்ந்தெடுக்க அதிகம் மெனக்கெட்டு இருப்பீர்கள் என்று என்ணுகிறேன்.. கடுமையான உழைப்பு.! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. Anonymous18/6/13 17:07

  ''..உத்தம நட்சத்திரமாம்
  உத்திரத்தின் பெயர்கொண்ட
  உத்திரப் பெருமரத்தாலான
  அக்கதவுகளின் இருமருங்கிலும்
  மொக்கவிழும் குவளைப்பூப்போலும்...'''

  மிகச் சிறப்பு .ரசித்து வாசித்தேன்.
  இனிய வாழ்த்து. தொடர்க!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 35. @தி.தமிழ் இளங்கோ

  எழுதுவதை விடவும் அதற்கேற்றப் பொருத்தமான படங்களை இணைப்பதுதான் பெரிய வேலை. என்னிடம் காப்புரிமை தேவைப்படாத ஆயிரக்கணக்கான படங்கள் உள்ளன. எனினும் அந்நாளைய தமிழர் கலாச்சார அடிப்படையிலான படங்களை இணையத்திலிருந்து தேடி எடுத்துதான் பதிவிடுகிறேன். கவனித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 36. @kovaikkavi

  தங்கள் வருகைக்கும் தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தோழி.

  ReplyDelete
 37. அரக்கு வண்ணம் பூசிய கதவுகளும் வாயிலும் மதில் சுவர்களும் கண் முன் விரிந்தன. அற்புதம் தோழி. குதிரை கூட என் கண்ணிற்கு உயிர்ப்புடன் கனைப்பதாக தோன்றுகிறது.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.