18 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 7


ஒப்பனை மிகுந்த கட்டிலின்மேலே ஒப்பனையில்லா ஓவியமாய்த் திகழும் தலைவியைக் காண்போம், வாருங்கள். 
 
நெடுநல்வாடைப் பாடல்
மடைமாண் நுண்இழை பொலிய தொடைமாடன்
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பல்மயிர் விரைஇ, வயமான்
வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து
முல்லைப் பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய்அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூமடி விரிந்த சேக்கை (124-135)

 

பள்ளியறைக் கட்டிலின் மேலே
துல்லியமாய்ப் பொருத்தப்பட்ட
வல்லிய மூட்டுவாய் மூலம்
மெல்லிய நூலிழை தன்னில்
தேர்ந்தெடுத்த முத்துக்களைக்
கோத்தெடுத்து மாலையாக்கி
பார்த்தோர் வியக்கும்வண்ணம்
பல்வரிசையாய் அலங்கரித்து
சாளரமெனவே சரம்சரமாய்ப்
பேரழகுடனே தொங்கவிட்டு....
 

 
புலியின் வரிகளின் வண்ணம் போன்ற
புதுமலர்களாலான பூந்தட்டைப்போன்று
ஒளிரும்  தகடுகளை ஒருசேரக் கொண்டு
வெளிப்புறம் பதித்த கட்டிலின் மேலே
பல்லுயிர்  உருவிய உரோமம் கொண்டு
பல்வண்ண உருவ விரிப்பு நெய்து
வேட்டையாடும் சிங்கம் போ
வீரமிகு செயல்கள் பலவும் பொறித்து…. 
 

காட்டுமுல்லைப் பூக்களோடு
தோட்டமளித்தப் பூக்களையும்
கட்டிலினின்மேலே இறைத்து,
பட்டினும் மெல்லியதாய்
மென்போர்வை மேலே விரித்து
முன்னிலும் சிறப்புறச் செய்திடவே
 

 
பெண் அன்னப் பேடுதன்னை
பேருவகையோடு புணர்ந்ததான
வெண் அன்னச் சேவலுதிர்த்த
மென்சூட்டு இறகுகளடைத்த
மென் திண்டு மெத்தைகளிரண்டு,
பஞ்சிட்ட தலையணையோடு
பஞ்சுபோலும் பூவிதழ்கள்போலே
கஞ்சிட்டு வெளுத்த விரிப்பு,
பஞ்சணை போர்த்தி நின்று
நெஞ்சத்தை அள்ளும்வண்ணம்
மஞ்சத்தை அலங்கரிக்க..... 

ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார்குழை களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப்  பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்   (136 – 147)
 
தலைவனைப் பிரிந்து வாடும்
தலைவியின் நிலையைப் பாரும்! 


 
முத்தாரமும் இன்னபிறவும்
கொத்தாகத் தழுவியிருந்து
அழகுபடுத்திய அவள் மார்பகத்தே
தாலியொன்றே தனித்துத் தொங்க..... 

கலைந்துவீழும் கேசமும்
கவனிப்பின்றி காற்றிலலைய.... 


அலங்கார நெடுங்கம்மல்
ஆடல்புரிந்திருந்த செவித்துளையில்
அளவிற்சிறிய தாளுருவியெனும்
குறுங்கம்மல் குடியிருக்க..... 

 


பொலிவுறு பொன்வளை போக்கி
வலம்புரி வளையும் காப்பும்
வடிவுடைக்கரத்தை நிறைத்திருக்க.... 
 


வாளைமீன் வாய்பிளந்தாற்போல
வளைந்திருக்கும் நெளிமோதிரத்தை
முன்னர் அணிந்திருந்த சிவந்த விரலில்
சின்னஞ்சிறிய மோதிரம் இருக்க...... 

பூம்பட்டாடையுடுத்தி பூரித்த இடையின்று
நூலாடை தரித்து நூலாய் நைந்திருக்க.... 
 

வண்ணம் தீட்டா வடிவம் போல்
ஒப்பனையில்லா ஓவியம் போல்
ஓய்ந்துகிடந்தாள் தலைவியவள்
ஒப்பனை மிகுந்த கட்டிலின் மேல்!
***********************************
படங்கள் நன்றி: இணையம்
 
 

35 comments:

 1. அருமை... தேர்ந்தெடுத்த படங்களும் பிரமாதம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நல் தமிழை நுகர வைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

  ReplyDelete

 3. அன்பின் கீதமஞ்சரி, நெடுநல் வாடையை நன்கே நுகர்ந்து வருகிறேன். இருந்தாலும் சில சந்தேகங்களும் எழுகின்றன. நெடுநல்வாடை இயற்றிய காலத்தில் தாலி அணியும் பழக்கம் இருந்ததா. ? நீங்கள் தாலியென்று பொருள் கூறிய வார்த்தை நெடுநல்வாடைக் கவிதையில் எது.?தமிழில் பல வார்த்தைகள் புரிவதில்லை. தெளிவித்தால் மகிழ்வேன். நன்றி.

  ReplyDelete
 4. பெண்ணை பெண் வருணிக்கும் பெரும் கலை செய்தது போல என்ன ஒரு நேர்த்தி வரிக்கு வரி பழமைக்கு புதுமை அணிவித்து ஜொலிக்க வைக்கிறது நெடுநல்வாடைக்கு நிகரான புதுநல்வாடை ..ரசித்தேன் வரி வரியை சுவைத்தேன் .......பாராட்டுக்கள் தோழி

  ReplyDelete
 5. தாங்கள் எழுதும் வரிகள் மட்டுமே, என்னைப்போன்ற பாமரனுக்கும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் உள்ளது. மனமார்ந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  பதிவும், படங்கள் அத்தனையும் ’முத்தான முத்துக்கள்.’

  மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், ப்கிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. கீதமஞ்சரியின் கவிதைநடையில், காவியமாய் நெஞ்சில் ஓவியமாய் நெடுநல்வாடை வந்து வீசுகிறது.

  ReplyDelete
 7. நெடு நெல் வாடையைப் படித்து
  பொருள் அறியவே முடியவில்லை
  தங்கள் பாடல் மூலமே அதன் அழகை
  கண்டு வியக்க முடிகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. @திண்டுக்கல் தனபாலன்

  உடனடி வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 9. @Avargal Unmaigal

  வருகைக்கும் தமிழின் இனிமையை என்னோடு நீங்களும் ரசித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. @G.M Balasubramaniam

  நெடுநல்வாடையை தாங்கள் நன்கு நுகர்ந்து ரசிப்பதைத் தங்கள் கருத்துரைகளே காட்டுகின்றன. தங்களுக்கேற்படும் ஐயங்களைத் தாங்கள் இங்கே கேட்பதன் மூலம் மற்றவர்களும் அறியமுடிவதில் எனக்கு மகிழ்ச்சியே. இயன்றவரை ஐயம் தெளிவிக்க முயல்கிறேன்.

  பின் அமை நெடுவீழ் தாழ என்பதற்கு இருவேறு பொருள் உரைக்கப்படுகின்றன. பின்னாளில் பெண்ணுக்கு அமைந்து அவள் மார்பகத்தில் உரசியாடும் நீண்டுதொங்கும் தாலியைக் குறிப்பதாக ஒருசிலரும் பின்னால் அமைந்த நீளமான கூந்தல் அவள் மார்பகத்தே கிடப்பதாக வேறுசிலரும் உரை எழுதியுள்ளனர். நான் இங்கே தாலியெனப் பொருள் கொண்டு எழுதியுள்ளேன். ஆனால் பாடலில் தாலியைக் குறிப்பிடும் தனித்த வார்த்தை எதுவுமில்லை.

  தமிழ் இணையக் கல்விக்கழகம் இணையதளத்தில் பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் என்ற தலைப்பின்கீழ் விளக்க உரை உள்ளது. மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி, டாக்டர் வே. சாமிநாதையரவர்கள் பரிசோதித்து எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் என்று இந்த விளக்க உரை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாங்கள் குறிப்பிட்ட வரிக்கான விளக்கம் அதில் கீழ்க்கண்டவாறு தரப்பட்டுள்ளது.

  \\136 - 7. ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து பின் அமை நெடுவீழ் தாழ - முன்பு முத்தாற்செய்த கச்சுச்சுமந்த பருத்தமுலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நாணொன்றுமே தூங்க,
  வீழ்ந்துகிடத்தலின் வீழென்றார். இனிப் பின்னுதலமைந்த நெடிய வீழ், மயிரென்பாருமுளர்.\\

  மேலும் அறியாத வார்த்தைகள் இருப்பின் தெரிவிக்கவும். ஆழ்ந்து உணர்ந்து பின்னூட்டமிடும் தங்கள் பண்புக்குத் தலைவணங்குகிறேன். நன்றி ஐயா.

  ReplyDelete
 12. @கோவை மு சரளா

  வருகைக்கும் உற்சாகமூட்டும் ரசனையானப் பின்னூட்டத்துக்கும் அன்பான நன்றி சரளா.

  ReplyDelete
 13. @வை.கோபாலகிருஷ்ணன்

  வாழ்த்துக்களோடு முத்துக்களை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 14. @தி.தமிழ் இளங்கோ

  வருகைக்கும் இனியதொரு கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 15. @Ramani S

  வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் உளமார்ந்த நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 16. கற்பனைக்கெட்டாத காவியம் தன்னை
  சொற்பதம் கொண்டு சொட்டச்சொட்டவே
  இப்பிறப்பில் நாமுமிதை உணரவென்றே
  நற்பணி செய்கின்றாயே நன்றேவாழி எந்தோழி!.

  ReplyDelete

 17. அன்பின் கீதமஞ்சரி. என் கேள்வியின் காரணமே நெடுநல்வாடை சங்ககாலப் பத்துப்பாடின் கீழ் வருவதாலும் சங்க காலத்தில் தாலி அணியும் வழக்கம் இருந்ததாக இதுவரை நான் படித்திராததாலுமே..பின்னால் அமைந்த நீளமான கூந்தல் முன்புற மார்பை மறைப்பதாகப் பொருள் காலத்தோடு ஒத்துப் போகும் என்பதாலும் எனக்கு இரண்டாவது கருத்தே சரியென்று தோன்றுகிறது.தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 18. நெடுநல்வாடை இது நெஞ்சைக் கவர்ந்து
  சென்றது !!!!..வாழ்த்துக்கள் தோழி வளமான வாடை இது மேலும் இனிதாகத் தொடரட்டும் .

  ReplyDelete
 19. அருமையான விளக்கத்துடன் அருமை. திகட்டாத சுவை. தொடருங்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
 20. நெடுநல்வாடை நெஞ்சை நிறைத்தது. படங்களும் அழகு.

  ReplyDelete
 21. அத்தனையும் அருமை .வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. ஒப்பனையில்லா ஓவியம் போல... என்ன அழகான வரிகள்! நெடுநல்வாடையை எளிய தமிழில் படித்து ரசிக்கிற அனுபவம் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. G.M.B. எழுப்பிய கேள்வியும், அதற்கு நீங்கள் தந்த பதிலும் கூடுதல் சுவை!

  ReplyDelete
 23. @இளமதி

  அழகுத் தமிழின் இனிமையால் வாழ்த்தியமைக்கு கனிவான நன்றி இளமதி.

  ReplyDelete
 24. @G.M Balasubramaniam

  தொடர்ந்து வரும் வரிகள் ஆபரணங்களைக் குறிப்பதால் நான் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பொருளை எடுத்துக்கொண்டேன். சங்ககாலத்தில் தாலியணியும் வழக்கம் இருந்திராதபோது தமிழறிந்த உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் ஏன் அப்படி எழுதினார்கள் என்று வியக்கிறேன். கற்றறிந்தோரே இதற்கு விளக்கம் அளிப்பது முறை என்று எனக்குத் தோன்றுகிறது.

  தங்கள் மீள்வருகைக்கும் கருத்திடலுக்கும் அன்பான நன்றி ஐயா.

  ReplyDelete
 25. @Ambal adiyal

  வருகைக்கும் வாழ்த்தியளித்த ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

  ReplyDelete
 26. @கோவை2தில்லி

  வருகைக்கும் தொடர்ந்தளிக்கும் உற்சாகத்துக்கும் மிகவும் நன்றி ஆதி.

  ReplyDelete
 27. @மாதேவி

  பாடலோடு படங்களையும் ரசித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 28. @கவியாழி கண்ணதாசன்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ஐயா.

  ReplyDelete
 29. @பால கணேஷ்

  பாடலோடு பின்னூட்டங்களையும் ரசித்து மகிழ்ந்த தங்களுக்கு அன்பான நன்றி கணேஷ்.

  ReplyDelete
 30. @மணிமேகலா

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி மணிமேகலா.

  ReplyDelete
 31. பள்ளியறை கட்டிலுக்கு முத்து மணி மாலைகளா அலங்காரம் அந்த கால மன்னர்களின் ரசனை அபாரம்.. அந்த காலத்தில் பிறந்திருக்க கூடாதா என்ற ஆவலே எழுகிறது தோழி.

  ReplyDelete
 32. நெடு நாள் உழன்று திரிந்து
  பல ஊர் கடந்து சலித்து
  உடன் வந்த துணைவியுடன்
  பணி ஒய்வு பெற்றவுடன் சற்று
  உளமார இளைப்பாறி, கற்ற
  தமிழ் நற்சுவையை இனிது
  ரசிக்கும் எண்ணம் தோன்றியது

  தேனினும் இனிய தமிழ் சொல்லை
  மனமினிக்க வர்ணித்து பொருளாக்கம்
  தந்து நெடு நல் வாடையை ருசிக்க
  வைத்த நல்உள்ளத்திற்கு நன்றி

  ReplyDelete
 33. @Sasi Kala

  அந்நாளைய தமிழரின் வாழ்க்கைமுறையை அறியும்போது தமிழில் ஆர்வமுள்ள அனைவருக்குமே அந்த ஏக்கம் எழுவது இயல்பு. தங்கள் வருகைக்கும் தொடர்ந்த கருத்துக்களுக்கும் அன்பான நன்றி சசிகலா.

  ReplyDelete
 34. @Saras

  தங்கள் இனிய கருத்துரையும் கவிமொழியும் கண்டு அளவிலாத மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் கருத்திட்டு சிறப்பித்தமைக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.