27 June 2013

அது ஒரு பொற்காலம் கல்லும் உளியும் கணீர் கணீரென்று
காதலால் மோதிக் கலந்திருந்ததொரு காலம்.
தேர்ந்த சிற்பிகள் பலரும் சேர்ந்து நிறைந்திருந்த
சிற்பக்கூடத்தின் சீர்மிகுப் பொற்காலம்!

வளையாத கரங்களுக்கும் வசப்பட்டது
கலையெழில் மிக்க சிலையழகு.
கண்ணால் பார்த்துக் கற்றுக்கொண்டன புதுக்கரங்கள்.
கைப்பிடித்துப் பழக்கிவிட்டன முதுக்கரங்கள்.

வேடிக்கை பார்க்கவந்த வெற்றுக்கரங்கள் சிலவும்
கற்றுக்கொண்டன கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையை
கண்டுபிடித்து  வெளிக்கொணரும் கலையை!

நுட்பமும் நுணுக்கமும் மேவிய கரங்கள்
படைத்த சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன,
மூளி, முடமென முடக்கப்பட்டவையும்
புனருத்தாரணம் அளிக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றன.

அயர்ச்சியோ தளர்ச்சியோ….
அளவிலாப் பணிகளின் சுழற்சியோ….
ஒத்திசைத்து ஒலித்திருந்த உளிகள்
அத்தனையும் அதிரடியாய் ஓய்வு கொள்ள...
அரவமற்றக் கூடத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்றன,
ஒன்றிரண்டு உளிகள்!

இவையும் நாளை ஓய்ந்துபோகலாம்,
இயக்கம் முற்றிலும் நின்றுபோகலாம்.

 உளிகளின் ஓசை நின்றுபோனாலும்
உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்...


26 comments:

 1. வளையாத கரங்களுக்கும் வசப்பட்டது
  கலையெழில் மிக்க சிலையழகு.
  கண்ணால் பார்த்துக் கற்றுக்கொண்டன புதுக்கரங்கள்.
  கைப்பிடித்துப் பழக்கிவிட்டன முதுக்கரங்கள்.//
  நன்றாக சொன்னீர்கள் கீதமஞ்சரி.
  அந்தக்காலம் பொற்காலம் தான் எத்தனை எத்தனை சிற்பிகள் சிலை வடித்தனர் அழகாய், அவை நம் கண்களுக்கு இன்றும் பொற்காலத்தை நினைவூட்டிக் கொண்டு இருக்கிறதே!

  ReplyDelete
 2. நல்ல கவிதை தோழி. சிறப்பான சிற்பக் கலை அழிந்தே போய் விடுமோ என்ற பயம் எனக்குள்ளும். இப்போதே கல்லில் சிற்பம் வடிப்பதெல்லாம் போய், கோவில் கோபுரங்களில் செங்கல்-சிமெண்ட் கொண்டு சிலைகளை வடித்து விடுகிறார்கள்.

  ReplyDelete
 3. நிச்சயமாக
  தான் அழிந்தால் கூட
  கலைஞன் ஒருவனே தன் படைப்பின் மூலம்
  காலம் கடக்கிறான்
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தமிழ்மணத்தில் இணைத்தும்விட்டேன்
  த.ம 1

  ReplyDelete
 5. // உளிகளின் ஓசை நின்றுபோனாலும
  உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் //

  உளிகள் சிலைகள் என்றாலே அது மகாபலிபுரம்தான். உளியின் ஓசையோடு போட்டி போடும் உங்கள் கவிதையின் சொற்கள்.

  ReplyDelete
 6. இன்றும் தமிழகமெங்கும் பலப் பல ஆலயங்களிலும் மண்டபங்களிலும் சிற்பங்கள் சமைத்தவனைப் பற்றிச் சொல்லாமல் மெளனமொழி பேசி நம்மை மயக்கிக் கொண்டு தானிருக்கின்றன. அருமையான கருத்தை அழகான வரிகளில் கவிதையாக்கிட்டீங்க. கீதமஞ்சரின்ற தளத்தோட பேரை மறைச்சிருந்தீங்கன்னா வாலி எழுதின கவிதைன்னு சொல்லியிருப்பேன். சூப்பர்ப்!

  ReplyDelete
 7. வேடிக்கை பார்க்கவந்த வெற்றுக்கரங்கள் சிலவும்
  கற்றுக்கொண்டன கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையை
  கண்டுபிடித்து வெளிக்கொணரும் கலையை!//
  இதுதான் கல்லிலே கவிதை வண்ணம் காண்பதோ?

  ReplyDelete
 8. உளியின் ஓசை காதுகளில் ஒலிக்கிறது..

  ReplyDelete
 9. ரசிக்க வைக்கும் பொற்காலம்...

  // உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்...//

  சிறப்பாக படைத்த கரங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. Good Post. Congrats. All the Best. Thanks for sharing.

  ReplyDelete
 11. இப்போ உளி, சுத்தியலுக்குலாம் வேலை இல்லை.., மெஷின் வந்துட்டுது.., நான் பார்த்தேன்.., எங்க ஊரு பக்கம் சிலை வடிக்க ஒரு கிராமமே இருந்துச்சு.., அந்த பக்கம் போனாலே உளியும், சுத்தியும் மோதுற சத்தம் ஒரு இசையை போல இருக்கும்.. ஆனா, இப்போ மெஷுனின் உறுமல் சத்தம்தான் காதை துளைக்குது

  ReplyDelete
 12. தலைப்பே சொல்லி விட்டதே அது ஒரு பொற்காலம் தான் தோழி. அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே கூறலாம். ஏக்க பெருமூச்சு தான் வருகிறது நமக்கு என்ன செய்வோம் . அழிப்பதும் நாமே அழுவதும் நாமே...

  ReplyDelete
 13. பல்லாண்டு படைத்தகலை பொற்காலம் ஆனதென
  சொல்லால் கவிவடித்தீர் சோகம்தான் இங்கு
  எல்லாக் கலைகளும் இதுபோல ஆகிவிட்டால்
  நல்லார் நற்கலைஞர் நலங்குன்றிப் போய்விடுமே!.

  அழகிய கருத்தும் சிறந்த சொற்கோர்வையும்
  இணைந்துதந்த கவிதை மிக இனிமை!

  மனங்கனிந்த நல் வாழ்த்துக்கள் தோழி!

  த ம.8

  ReplyDelete

 14. உளியின் ஓசை முற்றிலும் நின்றுவிட்டதாக நினைக்கிறீர்களா.?மஹாபலிபுரத்திலும் கன்னியாகுமரியிலும் அதன் சப்தம் இன்றும் ஒலிக்கிறது என்றே எண்ணுகிறேன். இப்போதும் கல்லிலே கலை வண்ணம் காண்பவர்கள் இருக்கிறார்கள். பெங்களூரில் விதான சௌதா என்னும் கருங்கல் கட்டிடம் இன்றைய கலைத் திறனை பறைசாற்றிக் கொண்டுதானிருக்கிறது. அது உருவாகும் காலத்தில் நானும் கல்லில் கலைநயம் செய்பவர்களுக்கு அரசு கிடங்கிலிருந்து கல் வாங்கிக் கொடுக்கும் பணியில் சுமார் ஒரு மாத காலம் பணியிலிருந்திருக்கிறேன். அந்த அனுபவத்தை பூர்வ ஜென்ம கடன் என்று பதிவாக்கி இருக்கிறேன். கவிதை நயம் வரிக்குவரி அழகுடன் பளீரிடுகிறது. நெடுநல்வாடையை நுகர்ந்ததன் காரணமோ பலனோ உங்கள் கவிதை இப்படி சிறப்பாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. ஆஹா அருமை தோழி..அது ஒரு பொற்காலம்தான்..ஏதோ நான் அன்று இருந்தது போலவும் இன்று நிறைய இழந்துவிட்டது போலவும் தோன்றவைக்கும்..ஆனால் என்ன..மாமல்லபுரம் சென்றபோது பலர் மற்றுமொரு சுற்றுலா இடம் என்று இருந்தது மனதை வருத்தியது..வரலாறு தெரியவேண்டுமல்லவா? ...தேவையற்ற நிறைய மாற்றம் வேறு..மனதிற்கு நெருக்கமான ஒரு விஷயம் பகிர்ந்ததற்கு நன்றி கீதமஞ்சரி! பாராட்டுகள்!

  ReplyDelete
 16. உளிகளின் ஓசை நின்றுபோனாலும்
  உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
  படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
  மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்...


  உண்மை! முற்றிலும் உண்மை! தொடக்கமும் முடிவும்,பாராட்டத்தக்கது!

  ReplyDelete
 17. உளிகளின் ஓசை நின்று போனாலும்...

  காலத்தால் அழியாத கலையல்லவா! செதுக்கப்பட்ட உயிரோவியங்கள் காலகாலத்துக்கும் எஞ்சியிருக்கட்டுமென்ற பிரார்த்தனை மனசில்.

  ReplyDelete
 18. அழகான உயிர் ஓவியம்
  உங்களின் கவிதை கீதமஞ்சரி அக்கா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. Anonymous28/6/13 05:18

  ''..உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
  படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
  மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்...''
  பொங்காலம் என்பதை நினைவு படுத்தியபடியே இருக்கும்.
  மிக அருமையாகக் கவி வடிக்கப் பட்டுள்ளது.
  இனிய வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.


  ReplyDelete
 20. உளிகளின் ஓசை நின்றுபோனாலும்
  உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
  படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
  மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்...

  காலம் கடந்தும் வாழும் பொக்கிஷங்கள்..!

  ReplyDelete
 21. @கோமதி அரசு

  தங்கள் வருகைக்கும் இதமான பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

  @வெங்கட் நாகராஜ்

  கற்சிற்பங்களே காலவோட்டத்தில் காணாமல்போய்விடும்போது சிமெண்ட் சிற்பங்கள் எம்மாத்திரம்? கலைகள் அழிவது கவலைக்குரிய விஷயம். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வெங்கட்.

  @Ramani S

  அருமையாக சொன்னீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார். தமிழ்மண இணைப்புக்கும் ஒட்டளித்து தரும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி.

  @தி.தமிழ் இளங்கோ
  தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் மறுமொழிக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

  @பால கணேஷ்

  வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ். வாலி போன்ற அருமையானக் கவிஞரின் பக்கத்தில் நானெல்லாம் ஒரு தூசு என்றாலும் அவரை இக்கவிதை நினைவுபடுத்தியமைக்காக மகிழ்கிறேன். நன்றி கணேஷ்.

  @கவியாழி கண்ணதாசன்

  வருகைக்கும் இனிமையான மறுமொழிக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @Madhu Mathi

  வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி மதுமதி.

  @திண்டுக்கல் தனபாலன்

  வருகைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி வை.கோ.சார்.

  @ராஜி

  ஆமாம் ராஜி, தொழில்நுட்ப வளர்ச்சியால் தனிப்பட்ட திறமைகள் காணாமலேயே போய்விடுகின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

  @Sasi Kala

  அழிப்பதும் நாமே.. அழுவதும் நாமே என்று மிகச்சரியாக சொல்லிவிட்டீர்கள் சசி. பழம்பெருமைகளை உணர்ந்து பாதுகாக்கும் குணம் நம்மிடம் என்றுதான் வருமோ? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி.

  ReplyDelete
 23. @இளமதி

  இதம் தரும் கவிப்பின்னூட்டத்தால் நெகிழவைத்துவிட்டீர்கள். வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி இளமதி.

  @G.M Balasubramaniam

  உளியின் ஓசை முற்றிலும் நின்றுபோய்விட்டதாக நினைக்கவில்லை ஐயா, ஆனால் முன்னைவிடவும் குறைந்துவிட்டது. காலப்போக்கில் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டு உளிகளின் ஓசையும் நின்றுபோகலாம் என்று குறிப்பிட்டுள்ளேன். ஆதங்கம்தான் காரணம். கற்சிற்பங்கள் உருவாக்கும் பணிக்கு தங்கள் பங்கு பற்றியறிந்து மகிழ்கிறேன். வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  @வேடந்தாங்கல் - கருண்

  வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கருண்.

  @கிரேஸ்

  பழைய இலக்கியங்களைப் படிக்கும்போதும் அதில் காணப்படும் தமிழர்வாழ்க்கை குறித்து அறியும்போதும் நாம் இழந்துவிட்ட பலவற்றைப் பற்றியும் ஏங்கவைக்கிறது. உண்மைதான் கிரேஸ். வருகைக்கும் மனம் தொட்ட கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  @புலவர் இராமாநுசம்

  தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @நிலாமகள்

  வருகைக்கும் அழகான பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

  @அருணா செல்வம்

  வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிகவும் நன்றி அருணாசெல்வம்.

  @kovaikkavi

  வருகைக்கும் ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தோழி.

  @இராஜராஜேஸ்வரி

  வருகைக்கும் மிக அருமையான மறுமொழிக்கும் மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 25. Anonymous14/7/13 06:50

  உளியின் ஓசை - There was a bore movie by this name.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.