30 September 2012

பனைமரத்திடலும், பேய்களும்

 
 
 
பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
பயத்தால் பின்னிக்கொள்ளும்
பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்!
 
உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும் பேய்களுக்கு
உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
பலியானவரில் ஒருவர்
தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
விழிவிரிய பாக்கியலட்சுமி சொன்னதெல்லாம்
வழித்துணையாய் வந்து பாடாய்ப்படுத்தும்.
 
சடசடவென்று சத்தமிட்டபடி,
படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
வா வாவென்று பேய்கள் யாவும்
வரவேற்பதுபோல் தோன்ற....
 
தோளில் தொத்திக்கொண்டு
உடல் அழுத்தும் பயத்தை
எந்தக் கடவுள் பெயரால் விரட்டுவது
என்று புரியாமல் நொடிப்பொழுது குழம்பி,
 
அம்மா அறிமுகப்படுத்திய அம்மனைக் கொஞ்சமும்,
பள்ளியில் பரிட்சயமான
பரலோகத்திலிருக்கும் பரமபிதாவைக் கொஞ்சமும்
எதற்கும் இருக்கட்டுமென்று அல்லாவையும் கொஞ்சம்
அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
கண் இறுக்கி, காது பொத்தி,
கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!
 
புழுதிகிளப்பியபடி, குப்பைகளால் கும்மியடிக்க,
வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த ஓலைகளால்
பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,
 
விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
கருவேலமோ, நெருஞ்சியோ
பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
வீடு வந்து சேர்ந்து,
விட்டிருந்த மூச்சைத் திரும்பப் பெற்றதொரு காலம்.
 
வாழ்க்கைப்பட்டு வேற்றூர் புகுந்து,
வாழ்க்கைப்பள்ளியில் வருடம் சில கழிந்து,
அச்சங்களின் ஆணிவேர்
அசைக்கப்பட்டுவிட்டிருந்தத் தருணமொன்றில்...
பரவசம் எதிர்நோக்க,
பனைமரத்திடல் கடந்தபோது பகீரென்றது!
 
மரங்களற்ற திடல் மயான அமைதி கொண்டிருக்க,
தகரப் பலகையொன்று தனித்து நின்றிருந்தது,
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
அவசர வருகை சுட்டி!
 
மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?

54 comments:

  1. பகைவனுக்கருளச் சொன்ன பாரதியைப் போல
    பேய்க்கு இரங்கும் குணம் வித்தியாசமான சிந்தனை
    சொல்லிச் சென்றவிதம் எனது சிறு வயது கிராம நினைவுகளை
    கிளறிச் சென்றது .மனம் தொட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பலப் பல பனைத் தோப்புகளும் தென்னந்தோப்புகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளாக, பேய்களுக்கும் வீடில்லை! பறவைகளுக்கும் கூடில்லை!

    நல்ல கவிதை கீதமஞ்சரி.

    ReplyDelete
  3. ஆஹா! வெகு அருமையான படைப்புங்க.
    மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    அனைத்தையும் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    இதைப்படிக்கும் போது எனக்கு இதுபோல சிறுவயதில் ஏற்பட்ட ஒருசில பயங்கள் நினைவுக்கு வந்தன.

    அதில் ஒன்றை என் ”பிரார்த்தனை” என்ற பதிவில் நான் எழுதியிருக்கிறேன். இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_874.html

    மிகவும் பிடித்தமான தங்களின் இந்தப்பதிவுக்குத் தலை வணங்குகிறேன். கடைசியில் பேய்கள் வாழ்ந்த இடத்தில் தான் மரங்கள் யாவும் வெட்டப்பட்டு நாமும் வாழ்கிறோம் என முடித்துள்ளதற்கு .. ஒரு சபாஷ் .. ஷொட்டு.;))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. //அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
    கண் இறுக்கி, காது பொத்தி,
    கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
    காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!

    புழுதிகிளப்பியபடி, குப்பைகளால் கும்மியடிக்க,
    வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
    பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த ஓலைகளால்
    பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,

    விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
    கருவேலமோ, நெருஞ்சியோ
    பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
    வீடு வந்து சேர்ந்து,
    விட்டிருந்த மூச்சைத் திரும்பப் பெற்றதொரு
    காலம்.//

    ஆஹா எவ்வளவு தத்ரூபமான அனுபவ வரிகள்.
    அசத்தலோ அசத்தல் தான். ;))))))

    //பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?//

    அந்தப் பேய்கள் குந்திய இடத்திலே தான் நாம் இன்று குந்தியிருக்கிறோமோ, அடுக்குமாடிக் குடியிருப்பு என்ற பெயரில்? ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  5. மரங்களற்ற திடல் மயான அமைதி கொண்டிருக்க,
    தகரப் பலகையொன்று தனித்து நின்றிருந்தது,
    அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
    அவசர வருகை சுட்டி!

    மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
    பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?//

    பறவை, பாம்பு , விலங்குகள் வாழும் இடங்களையும் மனிதன் விடவில்லை தன் இடமாய் ஆக்கி கொண்டான். இப்போது பேய் இருக்கும் இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டான்.
    அனைவருக்கும் வீடு திட்டத்தின் விள்ம்பரம் :குருவிக்கு கூடு இருக்கு உனக்கு வீடு இல்லையா !
    குருவி கூடு கட்டிய மரத்தை வெட்டி சாய்த்து விட்டாயே மனிதா!

    சிறு வயதில் நானும் பயந்த அனுபவங்கள் உண்டு சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு போவேன்.

    அனுபவ கவிதை அற்புதம்.

    ReplyDelete
  6. அருமையான படைப்பு!

    ReplyDelete

  7. அறியாப் பருவ பயங்கள் அறியும் பருவத்தில் அதே உணர்வுகளுடன் அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். முத்தாட்ப்பு வைப்பது போல் முடித்திருக்கிறீர்கள். பாவம் அந்தப் பனைமரப் பேய்கள். மிகவும் நன்றாக இருக்கிறது மஞ்சரி.

    ReplyDelete
  8. பாரதியார் மீண்டு வந்து எழுதின கவிதை போல உணர்ந்தேன் கீதா. அருமையான சொல்லாடல், நல்ல கருத்து. சூப்பருங்கோ...

    ReplyDelete


  9. // மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
    பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?//

    தங்களின் கேள்விக்குறி இன்றைய சமுதாயத்தின் கேலிக்குறியாக மாறிவிட்டது! நன்று! நற்கவிதை!

    ReplyDelete
  10. மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
    பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?
    // அற்புதமான வரிகள்!// பகிர்விற்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  11. கீதா :!!!!! கவிதை அசர வைத்தது ..நிதர்சனமான உண்மை ..இனி பேய்களும் நாம் வீட்டுக்குள் தான் ...குந்தியிருக்கும்
    ஒருமுறை தென்ன மரத்தில் வெண்ணிற காற்றாடி இரவுவேளையில்
    வெள்ளை சேலை கட்டிய பெண் பிசாசு என்று எங்க அண்ணா ஒருவரால் புரளி கிளப்பி தூக்கம் தொலைத்த நினைவு வருது :)

    ReplyDelete
  12. Anonymous1/10/12 01:05

    ''...கண் இறுக்கி, கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம் ..''

    பால கால நினைவுகள் பொங்கி வந்தது.
    (காற்று வேகமாக ஓடி வீடு சேர்வது;
    தேவாரம் பாடியபடி ஓடுவது)
    நல்ல சொல்லாட்சி,
    உணர்வு
    அருமை!
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. அருமையான‌ சொற்செட்டுட‌ன் அன்றும் இன்றும் பின்னிப் பிணைய‌ எதிர் நிற்கும் பிர‌ம்மாண்ட‌மாய் த‌ங்க‌ள் கேள்வி... காட்சியை க‌ண்முன் நிறுத்தி எங்க‌ளையும் ப‌ய‌ந்தோட‌ச் செய்து திகைத்து த‌டுமாற‌ச் செய்த‌ க‌விதை! என்ன‌தான் ந‌ட‌க்கும் இனிமேல்?! பூமிப் ப‌ர‌ப்பு முழுக்க‌ முழுக்க‌ வீடுக‌ளைக் க‌ட்டி விட்டு ஓய்ந்து விடுமா ம‌க்க‌ள் கூட்ட‌ம்?! இற‌ப்ப‌வ‌ர்க‌ளைப் புதைக்க‌ இடுகாடேனும் மிஞ்சுமா? நிலையாத‌ இவ்வுல‌க‌ வாழ்வில் இறுதியில் ந‌ம‌க்கு எஞ்சுவ‌து எதுவாயிருக்கும்?

    ReplyDelete
  14. சடசடவென்று சத்தமிட்டபடி,
    படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
    வா வாவென்று பேய்கள் யாவும்
    வரவேற்பதுபோல் தோன்ற....

    மனித மனங்களின் பிரதிபலிப்பை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  15. மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
    பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ


    நம் பால்யத்தின் நினைவுகள் நம்மை சுற்றிக் கொண்டே இருக்கின்றன ..நாம் அனுபவித்த பலவற்றை இந்த தலைமுறைக்கு அடையாளம் காட்டக் கூட வழியின்றி போகக் கூடும் --அருமையான கவிதை

    ReplyDelete
  16. மிகச் சிறந்த படைப்பு... பல உண்மை வரிகள்...

    நன்றி...

    ReplyDelete
  17. மிக அழகிய உவமை கீதம்.... பட்டாம்பூச்சியாக சிறகுகள் விரித்து குழந்தைகள் கண்களில் சந்தோஷம் மின்ன ஓடுவதும் வருவதும் போவதும் பனைமரத்தை கண்டதுமே பயத்தால் பின்னிக்கொள்ளும் என்று மிக அழகாக எழுதி இருக்கீங்க.

    சின்னப்பிள்ளைகள் தன் வீட்டில் நடப்பதை அக்கம் பக்கம் கேட்பதை பார்ப்பதை எல்லாம் வைத்து அழகாய் கதை புனைவதைப்போல இந்த பாக்கியலட்சுமி சொன்ன கதைகள் கேட்டால் எனக்கே நடுங்குகிறதே.. அழகிய நடை கீதம். காட்சி கண்முன் விரிகிறது..

    ஐயோ என்ன அருமையாக பனைமரத்தின் ஓலைகள் ஓசையிடுவதை கேட்பது போலவே இருக்கிறதுப்பா...பகல்லயே இந்த மாதிரின்னா ராத்திரி அவ்ளோ தான்...

    பேய் எல்லாம் வா வா என்று கைநீட்டி விரித்து அழைக்கும்போது திரும்பி பார்க்காமல் ஓட ஆரம்பித்தால் முதுகில் வந்து ஒட்டிக்கொள்ளுமோ என்ற முதுகில் சுமை ஏற்றிய கற்பனைகளை கடவுள் பெயர் சொல்லக்கூட முடியாதபடி நாக்கு ஒட்டிக்கொண்டு...

    ரசித்தேன் ரசித்தேன் இவ்வரிகளை.... எப்படி எப்படி.. அம்மா சொன்ன அம்மன் கொஞ்சம், ஸ்கூல்ல சொல்லி கொடுக்கும் பரமபிதாவும் எதுக்கும் இருக்கட்டும் என்று அல்லாவை கொஞ்சமும்... மிக அழகிய ரசிக்கவைத்த வரிகள் கீதம்... பயம் வந்தால் எல்லா சாமியையுமே பேதமில்லாம கூப்பிடும் என் செல்லக்குட்டி கீதத்தை நினைத்து பார்க்கிறேன்.

    என்ன அழகான ஒரு சிந்தனை... பனைமரத்தின் ஓலைகள் எல்லாம் பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்கிறதாம்.. அருமை அருமைப்பா..
    இத்தனை டென்ஷனில் காலில் என்ன குத்துகிறது கல்லா நெருஞ்சி முள்ளா அதெல்லாம் யார் பார்க்கிறா ஓடி வீடு வந்து சேர்ந்தா போதும் என்ற பதட்டம் படிக்கும் என்னையும் தொத்திக்கொண்டதே கீதம்...

    திருமணமாகி வெளியூர் சென்று திரும்ப சொந்த ஊருக்கு வரும்போது அதே பனைமரத்திடல் கிட்ட வந்ததுமே எங்கோ ஆழ்மனதில் என்றோ மறைந்து மக்கிப்போன அச்சம் திரும்ப தலைத்தூக்கிவிட்டதா?

    இந்த பத்தி மனதை கனம் கொள்ள வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் இயற்கையை அழிக்க மரங்களை வெட்டி வெட்டி சாய்த்துவிட்டு கட்டிடங்கள் கட்டிக்கொண்டே போகிறான். அங்கே இயற்கையின் மிச்சம் ஒன்றுமே இல்லாமல் போனது.

    என்ன சொல்வது..... அழகிய சிந்தனை கீதம்.... பறவைகள் தங்கி இளைப்பாற இருந்த இடமெல்லாம் இப்போது குடியிருப்பு கான்க்ரீட்டு கட்டிடங்களாகி.. தகிக்கும் வெயிலில் தன் சிறகுகள் தீய்ந்துவிடுமோ என்று தான் பறவைகள் வேறெங்கோ பறக்கிறது. பறவைகளோடு பனைமரப்பேய்களும் இனி இருக்க இடமில்லாமல் குமைந்து போகுமோ ஆஹா.. அருமையான எளிய நடைப்பா....

    பறவைகளுக்காகவும் இரக்கப்பட்டு, பேய்களுக்காகவும் இரக்கப்பட்ட மனதை காண்கிறேன். தமிழ்மன்றத்தில் இந்த கவிதை படித்தேன்பா ரெண்டு மூன்று நாட்களுக்கு முன்னால்....

    இப்ப தான் தெரிந்தது. நம்ம கீதம் தான் கீதமஞ்சரி என்று. இனியும் உங்க ஃபாலோயரா ஆகாம இருப்பேனா என்ன? சேர்த்துடறேன்...வாசிப்போரையும் உங்க எழுத்துக்கள் ஊடே பயணிக்கவைத்து ஊரின் பனைமரத்திடலுக்கு அழைத்துச்சென்று எங்களையும் பேய்களின் சத்தங்களும் இரைச்சலும் பயமுறுத்த கடைசி வரியில் கொண்டு வந்து நிற்கவைத்தது அட்டகாசம் கீதம். அன்புவாழ்த்துகள் எளியநடையில் ஆழ்சிந்தனை வரிகளுக்குப்பா...

    ReplyDelete
  18. அருமையான சிந்தனை கீதமஞ்சரி அக்கா.

    டிஸ்கி- அந்தப் பேய்கள் எல்லாம் இடமில்லை என்று சொல்லி நம் தலைகர்கள் தலைவியின் மேல் ஏறிக்கொண்டுள்ளதா...?

    ஆகாலும் நாம் பார்த்திராத பேய்கள் உண்மையிலேயே அழிந்து விட்டது என்று சொல்லும் பொழுதும் கவலையாகத் தான் இருக்கிறது.

    பகைவனுக்கு அருள்வாய் என்று படித்திருக்கிறேன்.
    நீங்கள் ஒருபடி மேலே போய் பேய்களுக்காகவும் இரங்கி இருக்கிறீர்கள.
    வேற என்ன செய்வது... நாம் தான் நம் உறவுகளுக்காக இரங்க வேண்டும். ஹி ஹி ஹி)

    ReplyDelete
  19. //பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?//

    காங்க்ரீட் காடுகள் பெருகும் அவலத்தை இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது,அருமை!

    ReplyDelete
  20. பேய்களுக்கும் இனி இடமில்லையா!!! அவைகளுக்கும் பரிதாபப்படுகிறது உங்கள் மனம்.

    வரிகள் ஒவ்வொன்றும் சிறுவயது பயங்களை கிளறி விட்டது...

    ReplyDelete
  21. எனக்கும், பனை மேல் இருக்குற பேய்க்கும் மறக்க முடியாத சொந்தம் இருக்கு.

    ReplyDelete
  22. பனைமரப் பேய்களும் புலம் பெயர்ந்துவிட்டதாம் இப்பவெல்லாம் கீதா.எங்களோடு சேர்ந்து எங்கள் பனைகளும்தானே மொட்டைகளாயின.அதானால் பேய்களும் இப்போதில்லை நம் ஈழத்தில்.மாற்றுமொழி மனிதர்கள்தான் பேயாய் இப்போ அங்கே !

    ReplyDelete
  23. என்னுடைய வலைப்பூவில் காந்தி! நேரம் கிடைக்கையில் வருகை புரியவும்! நன்றி!

    ReplyDelete
  24. அன்பின் கீதா...

    என‌து வ‌லைப்பூவுக்கு ம‌றுப‌டி வ‌ந்து மீண்டும் ப‌திவை http://nilaamagal.blogspot.in/2012/10/blog-post.htmlப‌டித்திட‌ அழைக்கிறேன். பிற்சேர்க்கையாய் சில‌ செய்திக‌ள் ப‌திவில் சேர்த்துள்ளேன். பொலிவேற்றிய‌மைக்கு ந‌ன்றி!

    ReplyDelete
  25. பின்னூட்ட‌மிட்ட‌தும் த‌ங்க‌ள் வ‌லைப்பூவில் ஒலிக்கும் கொண்டாட்ட‌மான‌ கொட்டு ம‌கிழ்வை இர‌ட்டிப்பாக்குகிற‌து. பாராட்டுக்க‌ள்!

    ReplyDelete
  26. அன்பின் கீதம்.

    தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா.. சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..

    http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_5.html



    மனதில் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் கீதம் எனக்கு தமிழ் மன்றத்தில் அறிமுகம் ஆனவர். ஆனால் இவருக்கு ப்ளாக்ஸ்பாட் இருக்கிறது என்பதே தெரியாமல் இவரின் ஒரு கவிதையை படித்து ரொம்ப மனம் நெகிழ்ந்து போய் பின்னூட்டம் இட்டேன். பின் தான் தெரியவந்தது இவருக்கு என்னை மிக நாட்களுக்கு முன்பே தெரியும் என்பது. அற்புதமான பெண் இவர். வார்த்தைகளில், பதிவுகளில், நலன் விசாரிப்பில் அன்பு அன்பு அன்பு மட்டுமே... இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை பார்ப்போமா?

    பனைமரத்திடலும் பேய்களும்
    அம்மா என்றொரு மனுஷி
    ஒரு தாய்ப்பறவையின் ஊமைக்கதறல்

    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    ReplyDelete
  27. \\Ramani said...
    பகைவனுக்கருளச் சொன்ன பாரதியைப் போல
    பேய்க்கு இரங்கும் குணம் வித்தியாசமான சிந்தனை
    சொல்லிச் சென்றவிதம் எனது சிறு வயது கிராம நினைவுகளை
    கிளறிச் சென்றது .மனம் தொட்ட அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்\\

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  28. \வெங்கட் நாகராஜ் said...
    பலப் பல பனைத் தோப்புகளும் தென்னந்தோப்புகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளாக, பேய்களுக்கும் வீடில்லை! பறவைகளுக்கும் கூடில்லை!

    நல்ல கவிதை கீதமஞ்சரி.\\

    வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

    ReplyDelete
  29. அருமையானப் பின்னூட்டத்துக்கும் அழகிய கதைப் பகிர்வுக்கும் நன்றி வைகோ சார். வலைச்சர அறிமுகத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. வருகைக்கும் மனம் தொட்ட அருமையானக் கருத்துரைக்கும் நன்றி கோமதி மேடம்.

    ReplyDelete
  31. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வரலாற்று சுவடுகள்.

    ReplyDelete
  32. \\G.M Balasubramaniam said...

    அறியாப் பருவ பயங்கள் அறியும் பருவத்தில் அதே உணர்வுகளுடன் அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். முத்தாட்ப்பு வைப்பது போல் முடித்திருக்கிறீர்கள். பாவம் அந்தப் பனைமரப் பேய்கள். மிகவும் நன்றாக இருக்கிறது மஞ்சரி. \\

    தங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  33. \\பால கணேஷ் said...
    பாரதியார் மீண்டு வந்து எழுதின கவிதை போல உணர்ந்தேன் கீதா. அருமையான சொல்லாடல், நல்ல கருத்து. சூப்பருங்கோ...\\

    வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  34. \\புலவர் சா இராமாநுசம் said...

    தங்களின் கேள்விக்குறி இன்றைய சமுதாயத்தின் கேலிக்குறியாக மாறிவிட்டது! நன்று! நற்கவிதை!\\

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  35. \\Seshadri e.s. said...
    மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
    பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?
    // அற்புதமான வரிகள்!// பகிர்விற்கு நன்றி!\\
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காரஞ்சன்.

    ReplyDelete
  36. //கீதமஞ்சரி said...
    அருமையானப் பின்னூட்டத்துக்கும் அழகிய கதைப் பகிர்வுக்கும் நன்றி வைகோ சார்.//

    என் ம்னமார்ந்த நன்றிகள், மேடம்.

    //வலைச்சர அறிமுகத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

    அது.... ”மஞ்சள் மகிமை” போல என் அன்புத் தங்கை “மஞ்சு செய்த மகிமை”.

    இருப்பினும் தங்களின் வாழ்த்துகளுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  37. \\angelin said...
    கீதா :!!!!! கவிதை அசர வைத்தது ..நிதர்சனமான உண்மை ..இனி பேய்களும் நாம் வீட்டுக்குள் தான் ...குந்தியிருக்கும்
    ஒருமுறை தென்ன மரத்தில் வெண்ணிற காற்றாடி இரவுவேளையில்
    வெள்ளை சேலை கட்டிய பெண் பிசாசு என்று எங்க அண்ணா ஒருவரால் புரளி கிளப்பி தூக்கம் தொலைத்த நினைவு வருது :)\\

    உங்கள் பழைய நினைவைக் கிளறிவிட்டேனா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  38. \\kovaikkavi said...
    ''...கண் இறுக்கி, கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம் ..''

    பால கால நினைவுகள் பொங்கி வந்தது.
    (காற்று வேகமாக ஓடி வீடு சேர்வது;
    தேவாரம் பாடியபடி ஓடுவது)
    நல்ல சொல்லாட்சி,
    உணர்வு
    அருமை!
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.\\
    தங்கள் வருகைக்கும் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  39. \\நிலாமகள் said...
    அருமையான‌ சொற்செட்டுட‌ன் அன்றும் இன்றும் பின்னிப் பிணைய‌ எதிர் நிற்கும் பிர‌ம்மாண்ட‌மாய் த‌ங்க‌ள் கேள்வி... காட்சியை க‌ண்முன் நிறுத்தி எங்க‌ளையும் ப‌ய‌ந்தோட‌ச் செய்து திகைத்து த‌டுமாற‌ச் செய்த‌ க‌விதை! என்ன‌தான் ந‌ட‌க்கும் இனிமேல்?! பூமிப் ப‌ர‌ப்பு முழுக்க‌ முழுக்க‌ வீடுக‌ளைக் க‌ட்டி விட்டு ஓய்ந்து விடுமா ம‌க்க‌ள் கூட்ட‌ம்?! இற‌ப்ப‌வ‌ர்க‌ளைப் புதைக்க‌ இடுகாடேனும் மிஞ்சுமா? நிலையாத‌ இவ்வுல‌க‌ வாழ்வில் இறுதியில் ந‌ம‌க்கு எஞ்சுவ‌து எதுவாயிருக்கும்?\\

    சிந்திக்கவைக்கும் பின்னூட்டம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிலாமகள்.

    ReplyDelete

  40. \\முனைவர்.இரா.குணசீலன் said...
    சடசடவென்று சத்தமிட்டபடி,
    படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
    வா வாவென்று பேய்கள் யாவும்
    வரவேற்பதுபோல் தோன்ற....

    மனித மனங்களின் பிரதிபலிப்பை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.\\

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி முனைவரே.

    தங்கள் வலைத்தளம் வரும் ஒவ்வொரு முறையும் அது திறப்பதில் பிரச்சனையாகிறது. பின் திறவாமலே போய்விடுகிறது. தங்கள் பதிவுகளை படிக்க இயலாத இழப்பினை எண்ணி வருந்துகிறேன்.

    ReplyDelete
  41. \\பூங்குழலி said...

    நம் பால்யத்தின் நினைவுகள் நம்மை சுற்றிக் கொண்டே இருக்கின்றன ..நாம் அனுபவித்த பலவற்றை இந்த தலைமுறைக்கு அடையாளம் காட்டக் கூட வழியின்றி போகக் கூடும் --அருமையான கவிதை\\
    வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி பூங்குழலி.

    ReplyDelete

  42. \\திண்டுக்கல் தனபாலன் said...
    மிகச் சிறந்த படைப்பு... பல உண்மை வரிகள்...

    நன்றி...\\
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  43. \\மஞ்சுபாஷிணி said...

    வாசிப்போரையும் உங்க எழுத்துக்கள் ஊடே பயணிக்கவைத்து ஊரின் பனைமரத்திடலுக்கு அழைத்துச்சென்று எங்களையும் பேய்களின் சத்தங்களும் இரைச்சலும் பயமுறுத்த கடைசி வரியில் கொண்டு வந்து நிற்கவைத்தது அட்டகாசம் கீதம். அன்புவாழ்த்துகள் எளியநடையில் ஆழ்சிந்தனை வரிகளுக்குப்பா...\\

    எவ்வளவு சிரத்தையுடன் வரிக்கு வரி விமர்சனம் செய்திருக்கீங்க மஞ்சு? வியக்கிறேன். மனம்நெகிழ்வோடு நன்றி சொல்லிக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி மஞ்சு.

    ReplyDelete
  44. \\அருணா செல்வம் said...
    அருமையான சிந்தனை கீதமஞ்சரி அக்கா.

    டிஸ்கி- அந்தப் பேய்கள் எல்லாம் இடமில்லை என்று சொல்லி நம் தலைகர்கள் தலைவியின் மேல் ஏறிக்கொண்டுள்ளதா...?

    ஆகாலும் நாம் பார்த்திராத பேய்கள் உண்மையிலேயே அழிந்து விட்டது என்று சொல்லும் பொழுதும் கவலையாகத் தான் இருக்கிறது.

    பகைவனுக்கு அருள்வாய் என்று படித்திருக்கிறேன்.
    நீங்கள் ஒருபடி மேலே போய் பேய்களுக்காகவும் இரங்கி இருக்கிறீர்கள.
    வேற என்ன செய்வது... நாம் தான் நம் உறவுகளுக்காக இரங்க வேண்டும். ஹி ஹி ஹி)\\

    அருமையான ஊக்கப்பின்னூட்டத்துக்கு நன்றி அருணா செல்வம். பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். பேய்க்காக பெண் நான் இரங்கக்கூடாதா என்ன?

    ReplyDelete
  45. \\குட்டன் said...
    //பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
    இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?//

    காங்க்ரீட் காடுகள் பெருகும் அவலத்தை இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது,அருமை!\\

    தங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றிங்க குட்டன்.

    ReplyDelete
  46. \\கோவை2தில்லி said...
    பேய்களுக்கும் இனி இடமில்லையா!!! அவைகளுக்கும் பரிதாபப்படுகிறது உங்கள் மனம்.

    வரிகள் ஒவ்வொன்றும் சிறுவயது பயங்களை கிளறி விட்டது...\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி. பயந்துகொண்டே கருத்திட்டீங்களா? அடப்பாவமே..

    ReplyDelete
  47. \\ராஜி said...
    எனக்கும், பனை மேல் இருக்குற பேய்க்கும் மறக்க முடியாத சொந்தம் இருக்கு.\\

    அய்யோ ராஜி, என்ன என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தறீங்க? சும்மாதானே சொன்னீங்க...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

    ReplyDelete
  48. \\ஹேமா said...
    பனைமரப் பேய்களும் புலம் பெயர்ந்துவிட்டதாம் இப்பவெல்லாம் கீதா.எங்களோடு சேர்ந்து எங்கள் பனைகளும்தானே மொட்டைகளாயின.அதானால் பேய்களும் இப்போதில்லை நம் ஈழத்தில்.மாற்றுமொழி மனிதர்கள்தான் பேயாய் இப்போ அங்கே !\\

    மனம் கனக்கிறது ஹேமா உங்க பின்னூட்டம் கண்டு. மௌனமாய் ஆமோதித்து அகல்கிறேன். நன்றி ஹேமா.

    ReplyDelete
  49. \\நிலாமகள் said...
    பின்னூட்ட‌மிட்ட‌தும் த‌ங்க‌ள் வ‌லைப்பூவில் ஒலிக்கும் கொண்டாட்ட‌மான‌ கொட்டு ம‌கிழ்வை இர‌ட்டிப்பாக்குகிற‌து. பாராட்டுக்க‌ள்!\\

    நன்றி நிலாமகள். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? ஒரு பதிவுக்குப் பின் வேறந்த பதிவையும் படிக்கவிடாமல் சில சமயம் எரிச்சலைத் தருகிறதுப்பா. எப்படி வந்தது என்றும் தெரியவில்லை.

    ReplyDelete
  50. \\திண்டுக்கல் தனபாலன் said...
    வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...\\

    தங்கள் அறிவிப்புக்கு மிகவும் நன்றி தனபாலன்

    ReplyDelete
  51. \\மஞ்சுபாஷிணி said...
    அன்பின் கீதம்.

    தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்பா.. சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..

    http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_5.html



    மனதில் அன்பை மட்டுமே நிறைத்து வைத்திருக்கும் கீதம் எனக்கு தமிழ் மன்றத்தில் அறிமுகம் ஆனவர். ஆனால் இவருக்கு ப்ளாக்ஸ்பாட் இருக்கிறது என்பதே தெரியாமல் இவரின் ஒரு கவிதையை படித்து ரொம்ப மனம் நெகிழ்ந்து போய் பின்னூட்டம் இட்டேன். பின் தான் தெரியவந்தது இவருக்கு என்னை மிக நாட்களுக்கு முன்பே தெரியும் என்பது. அற்புதமான பெண் இவர். வார்த்தைகளில், பதிவுகளில், நலன் விசாரிப்பில் அன்பு அன்பு அன்பு மட்டுமே... இந்த அன்பு உள்ளத்தின் பதிவுகளை பார்ப்போமா?

    பனைமரத்திடலும் பேய்களும்
    அம்மா என்றொரு மனுஷி
    ஒரு தாய்ப்பறவையின் ஊமைக்கதறல்

    அன்புடன்
    மஞ்சுபாஷிணி\\

    உங்கள் அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேனென்று தெரியவில்லை மஞ்சு. மிக மிக நன்றிப்பா.

    ReplyDelete
  52. அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

    ReplyDelete
  53. என்ன சொல்ல கீதா! உங்கள் ஒவ்வொரு கவிதைத் துளிகளும் எனக்குள் வியப்புக் குறிகளை இட்ட வண்ணம் நிலை கொள்கிறது. விரைவில் இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு கவிதைப் புத்தகம் ஒன்று நீங்கள் அவசியம் வெளியிட வேண்டும் கீதா.

    அதன் முதல் பிரதி எனக்கு வேண்டும்!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.