5 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (26)


 நாகலட்சுமி தெளிவாய் இருக்கிறார். இனி வித்யாக்காவின் பேச்சைத் துவக்கலாம் என்று சுந்தரி முடிவு செய்தாள். ஆனால் அக்காவை வீட்டுப்பக்கமே காணோம். முதல்நாள் வந்துவிட்டுச்சென்றதுடன் சரி, அதன்பின் வரவே இல்லை. விக்னேஷ் அண்ணனிடம் விசாரிக்கலாம் என்றால் எந்நேரமும் நாகலட்சுமியம்மா கூடவே இருப்பதால் தனியாய்ப் பேச சந்தர்ப்பம் அமையவே இல்லை. வித்யாக்காவின் அப்பாவுக்கு நெஞ்சுவலியென்று அண்ணன் போய்வந்ததற்கே அம்மா தோண்டித் துருவி விட்டார்.

'ஏன் நீ போகணும்? அவங்களுக்குத் தெரிஞ்சவங்க, உறவுக்காரங்கன்னு யாரும் இல்லையா? அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கேள்வி! அத்தனைக்கும் பதில் சொல்ல அண்ணன் திண்டாடிட்டார். பட்டென்று சொல்லவேண்டியதுதானே? இனிமேல் அவளுக்கு நான் தான் துணை என்று.

அவ்வளவு தைரியம் இருந்தால்தான் பிரச்சனையே இல்லையே! சுந்தரி அலுத்துக்கொண்டாள். வித்யா அக்காவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அது தெரியாமல் அவளைப் பற்றிய பேச்செடுப்பது சரியில்லை. இந்த அண்ணன் வேறு எதையும் சொல்லாமல் கல்லுளிமங்கன் போல் இருக்கிறாரே! சுந்தரிக்கு கவலை பிறந்தது.

மதிய உணவுக்குப் பின் நாகலட்சுமி ஏதோ ஒரு மாதாந்திர நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல இன்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. புழுக்கத்தில் தூங்காமல் தவித்த சுபாவை ஜன்னலோரம் படுக்கவைத்து கதவுகளை நன்றாகத் திறந்துவைத்தாள். சுபா, நசநசவென்று கொஞ்சநேரம் அழுதுகொண்டிருந்துவிட்டு பின் தூங்கிவிட்டாள்.

சுந்தரி பொழுதுபோகாமல் நாகலட்சுமியின் அருகில் அமர்ந்து அங்கிருந்த புத்தகங்களையும், பத்திரிகைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தாள்.

சட்டென்று எதையோ உணர்ந்தவராய் நாகலட்சுமி, தான்  படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து தலை உயர்த்திப் பார்க்க, அங்கே சுந்தரி வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி, கொட்டு கொட்டுனு என்னையே பாத்துகிட்டு உக்காந்திருக்கே?"

"என்னம்மா செய்ய? எல்லாப் புஸ்தகத்திலயும் படம் பாத்து முடிச்சிட்டேன். அடுத்தது நீங்க கையில வச்சிருக்கிறதுதான். அதான் எப்ப முடிப்பீங்கன்னு பாத்திட்டு உக்காந்திருக்கேன்."

"அடிப்பாவி! அதுக்குள்ள எல்லாத்தையும் பாத்து முடிச்சிட்டியா?"

"படம்பாக்க எவ்வளவு நேரமாவப்போவுதும்மா?"

சுந்தரியின் கேள்விக்கு நாகலட்சுமியால் பதில் சொல்ல முடியவில்லை. அவளைப் பார்த்து இரக்கம் உண்டானது. அறிவு, பண்பு, பாசம், ஒருமுறை சொன்னால் அதை விரைவாகப் புரிந்துகொள்ளும் திறமை எல்லாம் இவளிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் படிப்பறிவு மட்டும் இல்லை. அதுவும் இருந்துவிட்டால் இவளிடம் குறையென்று எதுவுமே இருக்காது. படிப்பிருந்தால் வெளியுலகம் பற்றித் தெரியவரும்; நாகரிகம் தானாய் வந்துவிடும்.

வேலைக்காரி ஏனோதானோவென்று செய்தவற்றையெல்லாம் மிக நேர்த்தியாக செய்து வீட்டை எந்நேரமும் மெருகுடன் வைத்திருக்கிறாள். எனக்காக சிரத்தை எடுத்து உணவு தயாரிக்கிறாள்; விக்னேஷ் தைலம் தடவ மறந்த நாட்களில் கவனித்திருந்து இரவு எந்நேரமானாலும் என் கால்வலிக்கு தைலம் தேய்த்துவிட்டுதான் தூங்கச் செல்கிறாள்; இன்னும் எவ்வளவோ.......எனக்காகச் செய்தாள்....செய்துகொண்டும் இருக்கிறாள்.

தன் குழந்தைக்கு செலவிடும் நேரத்தை விடவும் எனக்காகவும், இந்த வீட்டுக்காகவும் அதிகநேரத்தைச் செலவிடுகிறாள். இரவெல்லாம் குழந்தைக்காக அடிக்கடி விழிக்க நேரிட்டாலும், பகலில் ஒரு நிமிஷம் கண்ணயர்வதில்லை. எங்கே தான் படுத்தால் நானும் படுத்துவிடுவேனோ என்று பயந்து எனக்குக் காவலிருக்கிறாள்.  எனக்காக இத்தனைச் செய்பவளுக்கு பிரதியுபகாரமாய்  நான் ஏன் படிப்பு சொல்லித்தரக்கூடாது?

நாகலட்சுமிக்கு அந்த எண்ணம் தோன்றியவுடனேயே சுந்தரியிடம் கேட்டார்.

"சுந்தரி, உனக்கு படிப்பில ஆர்வமிருக்கா?"

"சின்ன வயசில படிக்கணும்னு நினச்சேன். அப்ப முடியல. இப்ப ஆசப்பட்டு என்னம்மா ஆவப்போவுது? பள்ளிக்கூடம் போற வயசெல்லாம் போயிடுச்சில்ல....நான் தான் படிக்காமப் போய்ட்டேன், என் பொண்ணையாவது நல்லா பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கணும்னு ஆசையா இருக்கு! என்னவோ சொல்வாங்களே.......ம்ம்! ஆச இருக்கு தாசில் பண்ண....அம்சம் இருக்கு கழுத மேய்க்கன்னு...... அப்படி ஆயிடக்கூடாது என் பொண்ணோட நெலம...."

"ஏ, சுந்தரி....நான் என்ன கேக்கறேன்.... நீ என்ன சொல்ற? உன் மகளைப் பத்தி நீ அப்புறமா கவலப்படு. இப்ப நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு! உனக்கு எழுதப் படிக்கிறதில ஆர்வம் இருக்கா....? சொல்லிக்குடுத்தா கத்துக்குவியா?"

"இந்த வயசுக்கு மேல நான் படிச்சு எந்த ஆபிஸுக்கும்மா போவப்போறேன்? அதுவுமில்லாம என் மண்டையிலதான் ஏறுமா?"

நாகலட்சுமி சிரித்தார். இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறாளே?

"சுந்தரி....நீ ஆபிஸ் போவணுங்கிறதுக்காக படிக்கச் சொல்லலை. தோ...இந்தப் புத்தகத்தில் இருக்கிற விஷயங்களை யார் தயவுமில்லாம நீ படிச்சுத் தெரிஞ்சுக்கலாம். இப்படி மத்தியான நேரத்தில கொட்டு கொட்டுனு உட்கார்ந்திருக்கத் தேவையில்ல...."

நாகலட்சுமி சொல்லச்சொல்ல சுந்தரியின் கண்களில் ஆர்வம் பளிச்சிட்டது. அப்போது மனோகரி வந்தாள்.

"சுந்தரி! அன்னைக்கு நீ போட்டுத் தந்த அரை நெல்லிக்கா தொக்கு ரொம்பப் பிரமாதமாம். ராம் உங்கிட்ட சொல்லச்சொன்னார். அப்புறம் அவர் நண்பர் ஒருத்தர் அதை டேஸ்ட் பண்ணிட்டு ரொம்பக் கெஞ்சுறாராம், எனக்கும் செஞ்சு தருவாங்களான்னு. அவர் வீட்டுல அரை நெல்லிக்கா காய்ச்சுக் கொட்டுதாம். அவங்களுக்கு இது மாதிரியெல்லாம் செய்யத்தெரியாதாம். உனக்கு முடிஞ்சா செஞ்சு தருவியான்னு கேக்கச் சொன்னாராம்."

"குடுங்க அக்கா! செஞ்சு தரேன்!"

"சரி, நாளைக்கு கொண்டுவரச் சொல்றேன். செஞ்சு முடிச்சு எவ்வளவு செலவுன்னு சொல்லு. அவர் தருவார்."

"என்னக்கா, காசுக்கா? அதெல்லாம் வேணாம்! நான் சும்மா செஞ்சு தரேன்!"

"சும்மாவா? மிளகாய்த்தூள், உப்பு கணக்கை விடு.  எவ்வளவு எண்ணெய் தேவைப்படும்? எல்லாத்துக்கும் மேல நீ செலவு பண்ற நேரத்தையும், உன்னோட உழைப்பையும் பாரு! அதுக்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது. சும்மா செஞ்சு தருவாளாமில்ல....."

"வந்து.... இதுக்குப் போயி...."

"வந்து போயின்னு எதுவும் சொல்லாத. பணம் வாங்கிட்டு செய்யறதுன்னா சொல்லு. இல்லைன்னா வேண்டாம்."

மனோகரி கண்டிப்பாய் கூறிவிட்டாள். நாகலட்சுமி இவர்கள் உரையாடலில் தலையிடாமல் தன் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார்.

"சுந்தரி!  இன்னொன்னும் சொல்றேன், கேளு! இதையே ஒரு பிஸினஸாவும் நீ செய்யலாம். சீசனுக்கேத்த மாதிரி காய்களை வாங்கி ஊறுகாய் போட்டு பாட்டில்ல அடைச்சு வித்தோம்னு வை.... நல்ல லாபம் கிடைக்கும். உனக்கும் வருமானத்துக்கு ஒரு வழி ஆச்சு. 'சுந்தரி ஊறுகாய்!’ பேர் எப்படி? பிரமாதமா இருக்கில்ல?”

", மனோகரி! ஏண்டி சும்மா இருக்கிறவளை பிஸினஸ் அது இதுன்னு  கிளப்பிவிடுறே?”  நாகலட்சுமி புத்தகத்திலிருந்து விருட்டென்று தலையைத் தூக்கிச் சொன்னார்.

"ம்? சும்மா இருக்காளேன்னுதான்! அவளுக்கும் வாழ்க்கையில ஒரு பிடிப்பு வேண்டாமா? எத்தனை நாளுக்குதான் உங்க தயவிலேயே வாழுறது? அவளோட சொந்தக்காலில நிக்கிறதுக்கு நான் ஒரு வழி சொல்றேன்! அதில என்ன தப்பு?"

"தப்பு எதுவும் இல்ல, மனோகரி! ஆனா அதுக்கு இப்ப என்ன அவசியம்? அவசரம்? கைப்புள்ளய வச்சிகிட்டு நாளெல்லாம் அடுப்படியில கிடந்து வேகணுமா? சுபா வளரட்டும். அப்புறமா இது பத்தி யோசிக்கலாம்."

"ஓய்வு நேரத்தில தானே செய்யப்போறா? அதுவுமில்லாம காத்துள்ளபோதே தூத்திக்கணும்னு நினைச்சேன்! வாய்ப்பு கதவத் தட்டும்போது, 'போய்ட்டு ரெண்டு வருஷம் கழிச்சி வா’ன்னா வருமா?"

"மனோகரி! புரிஞ்சுக்காம பேசாதடி! இப்பதான் அவளுக்கு எழுதப் படிக்க சொல்லித் தரேன்னு சொன்னேன். ஊறுகாய் போடற நேரத்தில நாலு எழுத்து கத்துக்கலாமில்ல?"

"! நீங்க அப்படி வரீங்களா? அப்ப சரி! படிப்புதான் முக்கியம்! ஊறுகாய அப்புறமா பாத்துக்கலாம். அதுவுமில்லாம பிஸினஸ் ஆரம்பிச்சு நாலு பேரை வச்சு வேலை வாங்கணும்னா எழுதப் படிக்கத் தெரியாம எப்படி? நல்ல யோசனைதாம்மா! எனக்கிருந்த ஆர்வத்தில இதை மறந்திட்டேன்! ஆல் பெஸ்ட்! சுந்தரி!"

"என்னக்கா?"

"உனக்கு வாழ்த்து சொன்னேன்!"

"டாங்ஸ்க்கா!"

"என்னது?"

"நன்றி சொன்னேன்க்கா!"

"தேறிட்ட... போ!" மனோகரி சிரித்தாள்.

"அக்கா!"

"என்ன, சுந்தரி?"

"ராம் அண்ணனோட நண்பர்கிட்ட சொல்லுங்க, நான் நெல்லிக்கா தொக்கு செஞ்சு தரேன்னு!"

"சரிம்மா!" 

மனோகரி போய்விட்டாள். அவளுக்கு தான் எடுத்த முயற்சி வெற்றி பெறாததில் சற்று வருத்தம்தான். ஆனாலும், சுந்தரியின் வாழ்க்கை மேம்பட படிப்பறிவும் இன்றியமையாதது என்பது புரிந்ததில் மகிழ்ச்சியும் அடைந்தாள்.

பின்னே? தம்பியின் மனைவியாக அவளைத் தயார் செய்வதில் தன் பங்கு பெரிய பங்கு அல்லவா?

இரண்டு வாரத்துக்கு முன் மனோகரியின் தம்பி கபிலன் வேலை விஷயமாய் சென்னை வந்திருந்தான். அப்போது அவன் சுந்தரியையும், சுபாவையும் பார்க்க நேர்ந்தது. பக்கத்துவீட்டில் புதிதாய் காணப்படும் இவர்கள் யார் என்று விசாரிக்க, மனோகரி அவனிடம் சுந்தரியைப் பற்றிச் சொல்லி அவளுக்காக பரிதாபப்பட்டாள். வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழும் சுந்தரியின் மனோதிடத்தைப் பார்த்து வியந்தான். இனிமையாய்ப் பழகும் அவள் குணம் கண்டு அதிசயித்தான்.

பல வருடங்களுக்கு முன்பே பகுத்தறிவுப்பாதையில் பிரிந்து சென்ற அவன், ஒரு விதவைப் பெண்ணை வாழ்க்கைத்துணையாய் ஏற்க முன்வந்ததைப் பார்த்து, மனோகரிக்கு வியப்பேதும் உண்டாகவில்லை. மாறாக அகமகிழ்ந்தாள். ஆனால் பிரபு இறந்து இன்னமும் ஒரு வருடம் முடிவுறாத நிலையில், அவளிடம் மறுமணம் பற்றிப் பேசுவது அவளைக் காயப்படுத்தலாம் என்று பயந்தாள். அதனால் அவளது மனநிலை மாற்றத்துக்கு சிலகால அவகாசம் கேட்டாள். 

அதற்குமுன், சுந்தரியை தன் சொந்தக் கால்களில் நிற்கச்செய்து, அவளுள் தன்னம்பிக்கையை உண்டாக்கி, வாழ்க்கையில் ஒரு பற்றை எற்படுத்த விழைந்தாள். அவளுடைய திறமையையே மூலதனமாய்க் கொண்டு அவளுக்கென்று ஒரு வியாபாரம் உண்டாகித் தர விரும்பினாள். அது இப்போதைக்கு நடைபெறாததில் மெலிதாய் வருந்தினாள். காலம் கனியட்டும்! அதுவரை காத்திருக்க முடிவு செய்தாள். 

தொடரும்...

******************************************************************************

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு. உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
---------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

15 comments:

  1. தொடருங்கள். தொடர்கிறேன். பகிர்விற்கு நன்றி.
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  2. அருமையான தொடர், இடையில் சிறிது காலம் வர இயலவில்லை, விட்ட பதிவுகளையும் விரைவில் படித்து விடுகிறேன்

    ReplyDelete
  3. கதை நல்லா இருக்கு..கடைசில தொடர்கதைன்னு சொல்லிட்டீங்களே???எப்ப முடிப்பீங்க?

    ReplyDelete
  4. Anonymous6/12/11 03:47

    நல்லா இருக்கு...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. படிக்கத்தெரியாதா? சுந்தரிக்கு.அப்படிப்பட்ட பெண்ணிடமே இவ்வளவு பக்குவமா?
    அடுத்து என்னாகும்? தொடருகிறேன்.

    ReplyDelete
  6. @ திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. @ A.R.ராஜகோபாலன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்திடுங்கள்.

    ReplyDelete
  8. @ மழை

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்தக் கதையின் இருபத்தாறாவது பாகத்தைப் படித்துள்ளீர்கள். இன்னும் சில பாகங்களில் முடிந்துவிடும். தொடர்ந்துவாங்க.

    ReplyDelete
  9. தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ரெவெரி.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. தொடர்ந்து வருவதற்கு நன்றி ஆச்சி. சுந்தரி பிரபுவின் வீட்டு வேலைக்காரப்பெண் என்றும் அழகோ, படிப்போ இல்லாதவள் என்றும் தன் அன்பாலும், நல்லியல்புகளாலும் பிரபுவைக் கவர்ந்தவள் என்றும் இக்கதையின் இரண்டாவது பாகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  12. Anonymous7/12/11 16:49

    Hi, A simple story written nicely. but konajm lengthy-a pogudho ?wait senji padikka vendi irukku.

    - Priya Suresh

    ReplyDelete
  13. நல்ல செய்தியோடு தொடருங்கள் அடுத்த அத்தியாயத்தை !

    ReplyDelete
  14. //Hi, A simple story written nicely. but konajm lengthy-a pogudho ?wait senji padikka vendi irukku.

    - Priya Suresh //

    Welcome priya, The story is in its final stage, will be finished soon. Thank you for your lovely comment.

    ReplyDelete
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.