26 November 2019

கீரையோ.. கீரை

தோட்டத்துப் பிரதாபம் - 10

கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று சிறுவயதில் பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். ஆனாலும் நிறைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. கீரை சாப்பிடாமல் எழுந்தால் உதை கிடைக்கும் என்ற பயத்தால்தான் சோற்றுக்குள் வைத்து உருட்டி விழுங்கிவைப்போம். வளர வளர கீரைகளின் அருமை புரிந்த பிறகு விரும்பியுண்ண ஆரம்பிப்போம். நான் ஆஸ்திரேலியா வந்த ஆரம்பத்தில் கீரை கிடைப்பது அரிதாக இருந்தது. இப்போது நிறைய இந்திய, ஆசியக் கடைகளின் தயவால் கிட்டத்தட்ட எல்லா விதமான கீரைகளும் கிடைக்கின்றன. என்ன இருந்தாலும் சொந்தத் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் நாமே விளைவித்துப் பறித்து சமைத்துண்ணும் கீரைகளின் ருசியே தனிதான். இப்பதிவு தோட்டத்துக் கீரை மகாத்மியம்.

1. வல்லாரைக்கீரை

தோட்டத்தில் தொட்டி நிறைய வளர்ந்து கிடக்கும் வல்லாரைக் கீரையைப் பார்க்கும்போதெல்லாம் சிரித்துக் கொள்வேன். “ஒரு காலத்தில் எங்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்தினாய், இப்போது என்னடாவென்றால் கையெட்டும் தூரத்தில் ஜம்பமாய் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை காட்டுகிறாயே” என்றும் நினைத்துக் கொள்வேன்.


ஒன்பதாவது படிக்கும்போது அறிவியல் செய்முறைப்பாடம். இலைகளின் மாதிரியை சேமித்து scrap notebook-ல் ஒட்டவேண்டும். நீள் வடிவம், ஈட்டி வடிவம், வட்ட வடிவம், நீள்வட்ட வடிவம், இதய வடிவம், முட்டை வடிவம், சதுர வடிவம், நீள்சதுர வடிவம், சிறுநீரக வடிவம், நுரையீரல் வடிவம், நட்சத்திர வடிவம் போன்றவை தவிரவும், அலை, ஊசி, கூரிய பற்கள், ரம்பம், பிறை போன்ற விளிம்புகள் கொண்டவை என மாதிரி இலைகளைத் தேடித்தேடித் தெருத்தெருவாக அலைவோம். ஏதேதோ இலைகளை எல்லாம் பறித்து வந்து பாடம் செய்வோம். கனமான புத்தகமொன்றின் தாள்களுக்கிடையில் சில நாட்கள் வைத்திருந்தால் இலை சருகாகி இஸ்திரி போட்டது போல தட்டையாகிவிடும். பிறகு அதை எடுத்து நோட்டுப்புத்தகத்தில் ஒட்டுவோம். நிச்சயம் பலருக்கும் இதுபோலொரு பள்ளி அனுபவம் இருக்கும்.

சிறுநீரக வடிவத்துக்கு வல்லாரை இலை குறிப்பிடப்பட்டிருக்கும். அதைக் கண்ணால் கூட பார்த்திராத நாங்கள் வல்லாரை இலைக்கு எங்கே போவோம். கீரைக்காரம்மாவிடம் சொல்லி வைத்தும் கிடைக்கவில்லை. எங்கள் வகுப்புத் தோழியொருத்தி மிகுந்த பிகுவுடன் எண்ணி பத்து இலைகள் கொண்டுவருவாள். முந்திக் கொள்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். வல்லாரை இலை கிடைக்காதவர்கள் படம் வரைந்து ஒப்பேத்துவோம். 




அப்போது அப்படி எங்களை ஏங்கி அலைய வைத்தாயே என்ற கோபம் தோட்டத்து வல்லாரையை ஆய்ந்து வதக்கி அரைத்துத் துவையலாக்கித் தின்றபோது தீர்ந்துபோனது.😄😄😄


அந்நாள் ஆசைக்காக பாடமும் செய்தாயிற்று. 🙂🙂🙂     


2. பசலைக்கீரை

வீட்டைச் சுற்றி fencing இல்லாததால் நிறைய களைச்செடிகளின் விதைகளைக் காற்று கொண்டுவந்து தோட்டத்தில் விதைப்பதுண்டு. அழகழகான பூக்களை ரசித்தாலும் காடு போல் மண்டிவிடுவதால் line trimmer கொண்டு அவ்வப்போது களையொழிப்பது வழக்கம்.

இந்தக் களைகளுக்குள்தான் அனிச்சமலரையும் அரிவாள்மனைப் பூண்டையும் அடையாளம் கண்டுகொண்டேன். இந்தக் களைகளுக்குள்ளிருந்துதான் அருகம்புல்லை அறுவடை செய்தேன். இந்தக் களைகளுக்குள்ளிருந்துதான் மணித்தக்காளிச்செடி வளர்த்தேன். இப்போது கிடைத்திருக்கிறது இந்த பசலைக்கீரை.


பார்ப்பதற்கு பசலைக்கீரை போல இருந்தாலும் பசலைதான் என்று உறுதியாகத் தெரியாததால் உணவில் பயன்படுத்த பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. பெருத்த தேடலின் முடிவில் இதன் பெயர் New Zealand spinach என்று தெரியவந்துள்ளது. உவர்மண்ணிலும் நன்றாக வளரும் தன்மையாலும் வறட்சியைத் தாங்கும் தன்மையாலும் பலராலும் விரும்பி வளர்க்கப்படும் கீரையாம்.

ஆஸ்திரேலியாவில் இதன் பெயர் Warrigal greens. ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழிகளுள் ஒன்றான தாருக் மொழியில் இதற்கு ‘காட்டுக்கீரை’ என்று அர்த்தமாம்.



பசலைதான் என்று உறுதியாகத் தெரிந்த பிறகு எடுத்து தொட்டியில் வைத்து பராமரிக்கத் தொடங்கினேன். நான்கைந்து இலைகளோடு இருந்த அது கொப்பும் கிளையுமாய் வெடித்துப் படர ஆரம்பித்துவிட்டது. இரண்டு நாளைக்கொரு முறை பறித்து சமைக்கிறேன். பாசிப்பருப்பு போட்ட பசலைக்கீரைக்கூட்டு மிகப் பிடித்தமானது. அடிக்கடி செய்து கிண்ணத்தில் வைத்துக்கொண்டு snack போல சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. 

3. புதினா


புதினா ஒரு மருத்துவ மூலிகை. பசியின்மை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வயிறு உப்புசம், சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற வயிறு தொடர்பான பல உபாதைகளுக்குமான மாமருந்து.

புதினாவை முன்பெல்லாம் கடையில் வாங்கிதான் உபயோகித்திருந்தேன். ஒரு கட்டு இரண்டு டாலர்கள். உபயோகித்தபின் காம்புகளை நட்டுவைப்பேன். பெரும்பாலும் வளரவில்லை. அதிசயமாய் ஒருமுறை ஒன்றே ஒன்று மட்டும் வேர் பிடித்துக்கொண்டு வளரத் தொடங்கியது. புதினாவை தொட்டியில்தான் வளர்க்கவேண்டுமாம். தெரியாத்தனமாக raised bed –ல் வைத்துவிட்டேன். இன்று என்னடாவென்றால் மற்ற செடிகளை வளரவிடாமல் முழுக்க வேரோடி எங்கணும் புதினாச்செடிகள். வெட்ட வெட்டக் கிளைத்துக்கொண்டே இருக்கின்றன. புதினா துவையல், புதினா தொக்கு, புதினா டீ, புதினா தண்ணீர், பிரியாணி, குருமா என்று புதினாவை சமையலில் அடிக்கடி சேர்த்துக்கொள்கிறேன். பறிக்கப் பறிக்க அடுத்த ஈட்டுக்குத் தயாராய் நிற்கும் புதினாவை வியந்து பார்க்கிறேன். அடுத்து புதினா பொடி செய்ய உத்தேசித்திருக்கிறேன். 

4. முளைக்கீரை



இந்தக் கீரையும் கடையில் வாங்கியதன் மூலம் உருவானதே. கீரையை ஆய்ந்த பிறகு அதன் தண்டுகளை நட்டுவைத்து வளர்த்துப் பெற்ற விதையிலிருந்து உருவாக்கிய அடுத்த தலைமுறைக் கீரை. நம்மூர் முளைக்கீரைக்கு நிகரான ருசி. அடிக்கடி பொரியலும், கீரைக்குழம்பும், வடையும் செய்தேன். மூன்றாம் தலைமுறைக்குத் தயாராய் இருக்கின்றன விதைகள். இடம் தோது பண்ணியதும் தூவ வேண்டும்.  



5. மணித்தக்காளிக்கீரை




வாயில் புண் வந்துவிட்டால் உடனே அம்மா செய்து தருவது மணித்தக்காளிக்கீரை தண்ணிச்சாறுதான். அரிசி களைந்த தண்ணீரில் கீரையும் வெந்தயமும் சேர்த்து வேகவைத்து இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்குவார்கள். எப்பேர்ப்பட்ட வாய்ப்புண்ணும் உடனே ஆறிவிடும். வாய்ப்புண், வயிற்றுப்புண் எல்லாவற்றையும் சடுதியில் ஆற்றும் அருமருந்து மணித்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு. மணித்தக்காளி வற்றலும் உடலுக்கு நல்லது. வற்றக்குழம்பின் ருசியையும் கூட்டும். 


தோட்டத்தில் தானே வளர்ந்த மணித்தக்காளிப் பழங்களைப் பிழிந்து புதிய செடிகளை உருவாக்கி அவற்றிலிருந்து கீரை பறித்துப் பயன்படுத்துகிறேன். காய்களை வற்றலுக்குப் போட்டிருக்கிறேன். 


6. வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை கீரையினங்களிலேயே ஸ்பெஷல் எனலாம். லேசான கசப்புடன் கூடிய சுவை இதற்கு. ஆனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மிகவும் உகந்தது. வெந்தயத்தைத் தூவினாலே போதும். சில நாட்களில் கீரை கிடைத்துவிடும். வெந்தயக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம். சுவையாக இருக்கும். 


ஹி.. ஹி.. நம்ம கைவண்ணம்தான். 

(பிரதாபங்கள் தொடரும்)

18 November 2019

மனமொழியறியும் மரங்களும் மலர்களும்


தோட்டத்துப் பிரதாபம் - 9




கொல்லையில் நட்டுவைக்கப்பட்ட ஆரஞ்சு, எலுமிச்சை மரங்களின் வளர்ச்சி ஒரு வருடத்துக்கு மேலாகியும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. புதிய மண்ணில் வேரூன்ற சில வருடங்கள் எடுக்கும் என்று தெரிந்தாலும் பிழைக்குமா என்பதே சந்தேகமாகிவிட்டது. அதுவும் ஆரஞ்சு மரம் இருந்த கொஞ்சநஞ்ச இலைகளையும் கொட்டிவிட்டு பரிதாபமாக குச்சி மட்டும் நின்றுகொண்டிருந்தது. ஒருநாள் அதைப் பார்த்துவிட்டு கணவர் சொன்னார், “இது அவ்வளவுதான்னு நினைக்கிறேன், பொழைக்காதுபோல” என்றார். நான் உடனே “அதுக்குப் பக்கத்தில நின்னுட்டு அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. பாவம்.. அது நிச்சயம் பொழைச்சிவரும்” என்று சொன்னேன். பாக்கலாம் என்று சொல்லி அகன்றார். அடுத்த வாரத்தில் ஒரு நாள்.. சொன்னால் நம்பவே மாட்டீங்க.. மாயாஜாலம் போல தளதளவென்று துளிர் விட்டு வளர்ந்து இப்போது பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக பசிய இலைகளோடு அவ்வளவு அழகாகவும் செழிப்பாகவும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது அந்த ரோஷக்கார இளமரம். 


எலுமிச்சையும் ஒரு வேடிக்கை காட்டியது. தோட்டத்தில் உலாத்தியபடி ஒருநாள் தம்பியோடு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன். தோட்டம் பற்றிக் கேட்டான். “எலுமிச்சை இதுவரை மூணு தடவை பூப்பூத்து எல்லாமே கொட்டிடிச்சு. இப்பவும் ஆயிரக்கணக்கா பூத்திருக்கு. காய்க்குமான்னு தெரியல.. எனக்கொரு பத்து காய் காய்ச்சா கூட போதும். ஊறுகாய் போட்டு ஒரு வருஷம் ஒப்பேத்திடுவேன்” என்று சொன்னேன். வழக்கம்போல பூக்கள் எல்லாம் பிஞ்சாகும் முன்பே கொட்டிவிட்டன. இப்போது கோலி குண்டு அளவில் சிறுபிஞ்சுகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கின்றன. எண்ணிப் பார்த்தேன். சரியாக பத்தே பத்து. மரங்களுக்கு காது கேட்கும் என்பதோடு கணக்கும் தெரியும் என்பதும் புரிந்துபோனது. 😃😃😃  





சில வருடங்களுக்கு முன்பு 'கவிதை என்றும்பெயரிடலாம்' என்றொரு கவிதை எழுதியிருந்தேன். என் விசித்திரத் தோட்டம் என்பதுதான் கரு. உண்மையிலேயே என் தோட்டம் விசித்திரத் தோட்டமாகிக் கொண்டு வருகிறதோ என்று சந்தேகம். எலுமிச்சை மரம், நான் சொன்னால் சொன்னபடி கணக்காய்க் காய்க்கிறது. போதும் போதும் என்று சொன்னாலும் சொல்பேச்சு கேளாமல் பறங்கிக்காய் காய்த்துத் தள்ளியது. வெள்ளை ரோஜாச்செடியின் பூக்கள் மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாய் நிறமாறி அதிசயத்தில் ஆழ்த்துகின்றன.  அந்த வரிசையில் இப்போது சால்வியாவும் சேர்ந்துகொண்டது.  

நர்சரியிலிருந்து என்ன நிறமென்றே தெரியாமல்தான் வாங்கிவந்தேன். சிவப்பா, பிங்க்கா, நீலமா, வயலட்டா என உள்ளுக்குள் கிளர்ந்த எதிர்பார்ப்பு முதல் நாள் பூத்த வெள்ளைமலரில் சற்றே வெளிறிப்போனது. சொன்ன வாய்மொழி அல்லாது சொல்லாத மனமொழியும் (அதாம்பா.. மைன்ட்வாய்ஸ்)  இப்போது என் செடிகளுக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டது போலும். வெள்ளை பூத்த சால்வியாவில் மறுநாள் வெள்ளையும் நுனியில் சிவப்புமாக பூக்கள்.. அதற்கு மறுநாள் சிவப்பும் நுனியில் வெள்ளையுமாய்.. அதற்கு மறுநாள் முழுச்சிவப்பு.. என ஒவ்வொரு நாளும் என்னைக் கிளர்த்தி மகிழ்விக்கும் சால்வியா செடி செய்யும் விநோதத்தை என்னவென்று சொல்வது? 


எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா…




வெள்ளையிலிருந்து இளஞ்சிவப்பாய் மாறும் ரோஜாச்செடி பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? பூவின் நிறமாற்றம் பெண்ணின் உருமாற்றமாய் ஒரு கவிதைக்கு வித்திட்டதோடு, வாசகசாலை இணைய இதழிலும் வெளியாகி சிறப்புற்றது.




அவள் உரு மாறுகிறாள்

----------------------------------------------
பரிசுத்த ஆவியைப் போல..
கருவுறா முகிலின் கன்னிமை போல…
காத்திருந்த கிள்ளையின் மனம் நோக
வெடித்துப் பறக்கும் இலவம் போல…
தாய்மடி முட்டியருந்தும் கன்றின்
வாய் நுரைத்து வடியும் அமுதுபோல…
சவக்காரம் போட்டு தானே வெளுத்த
பாட்டனின் பழைய வேட்டி போல…
அவளின் ஆதிவண்ணம் அத்துணை வெண்மை.

நெஞ்சதிரச்செய்யும் சொல்லறியும்வரை..
நிலமதிரச்செய்யும் வலியறியும்வரை
கண்ணீரும் குருதியும் காணும்வரை..
கையிடுக்கில் கழுத்துநெறிபடும் வரை..
அவளின் எண்ணம் அத்துணை மென்மை.

நுண்கணைகள் துளைத்து வெளியேறிய
நுண்ணொடிப்பொழுதில் அவள் கனலத்தொடங்கினாள்.
ஆதிவண்ணத்தின் அணுக்களில்
சொட்டுசொட்டாய் சிவப்பேற்றிக்கொண்டாள்..
பச்சிளஞ்சிசுவின் பாதமென்மை விடுத்து
வரையாட்டுக் குளம்பினை வரித்துகொண்டாள்..
உடல்வழியும் உப்பின் உவர்ப்பேற்றி
உவப்பாய் உருமாறிக்கொண்டிருக்கிறாள்.
வெள்ளைமலராய் விரலிடுக்கில் பொருந்தியவள்
முகர்ந்து கசக்கி எறிய இடங்கொடாது
செந்தீயாகித் தணலாகித் திகுதிகுவென
ஓங்காரமாய் எரியத் தொடங்குகிறாள்.

&&&&&&&

இன்று காலை தோட்டத்தில் கண்ட பொறிவண்டும் 
ஒரு குறுங்கவிதைக்குப் பொறியானது. 




 முன்னிரவில் முணுமுணுத்துப் பெய்து 
மண் குளிர்த்த வான்துளியின் 
நுண்துளி சுமப்பதாய் 
நினைத்துக்கொண்டிருக்கிறாய் 
நீ அறியமாட்டாய் 
நீ சுமப்பதொரு ஓடை… 
ஒரு நதி… 
ஒரு அருவி… 
ஒரு கடல்… 
ஒரு மகாசமுத்திரம்.



&&&&&&&

(பிரதாபங்கள் தொடரும்)

11 November 2019

பாப்பி தினம்

தோட்டத்துப் பிரதாபம் - 8


அன்புத்தோழியின் தங்கை சுவிஸிலிருந்து வந்திருந்தபோது  எனக்கொரு அன்பளிப்பு தந்தார். பிரித்துப் பார்த்தால் குட்டி குட்டியாய் நான்கு விதை உருண்டைகள். அளவிலா மகிழ்ச்சி எனக்கு. 



விதையுருண்டைக்குள் என்ன விதைகள் உள்ளன என்று பார்க்கலாம் என்றால் என்னென்னவோ மொழிகள்.  Google translator உதவியால் அவை German, French, Italy என்பதோடு சொல்லப்பட்டிருக்கும் விவரமும் புரிந்தது. பாப்பிப் பூக்கள். 


சில நாடுகளில் பாப்பி தடை செய்யப்பட்ட தாவரம் என்பதால் மிகுந்த கவனமாக  இருக்கும்படி தோழியொருவர் எச்சரித்தார்.  ஆனால் ஆஸியில் பாப்பி வளர்ப்பு சட்டத்துக்குப் புறம்பானதில்லை என்றறிந்து நிம்மதியானேன்.

கான்பெரா மலர்த்திருவிழாவில் துலிப் & பாப்பி மலர்கள்

ஓபியம் பாப்பி (பூங்காவில்)


வசந்தகாலத் துவக்கத்தில் விதையுருண்டைகளை தொட்டியில் விதைத்தாயிற்று. ஓபியம் பாப்பியா… சிவப்புப் பாப்பியா எது பூக்கும் என்று ஆர்வத்தோடு காத்திருந்தேன். (ஓபியம் பாப்பி என்றால் சமையலுக்குத் தேவையான கசகசாவை தோட்டத்திலேயே அறுவடை செய்துவிடலாமே)



பூத்தவை Flanders poppy எனப்படும் சிவப்புப் பாப்பிகள். ஏமாற்றமில்லை. மகிழ்ச்சிதான். சிவப்பு பாப்பிச் செடிகளுக்கு பன்னெடுங்கால அழகியல் வரலாறு உண்டு. எகிப்திய கல்லறைகளில் கூட அவை காணப்படுகின்றனவாம். முதல் உலகப்போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் அடையாள மலராகவும் போர்வீரர் தினத்தின் நினைவுமலராகவும் சிவப்பு பாப்பி மலர்கள் அனுசரிக்கப்படுகின்றன.


இன்று நவம்பர் 11-ஆம் நாள் - Remembrance day. போர்களில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் தினம். இது பாப்பி தினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இன்று அனைவரும் துணியாலும் நூலாலும் நெய்யப்பட்ட சிவப்புப் பாப்பி மலர்களை ஆடையில் அணிந்திருப்பர்.  



என் வீட்டுத் தோட்டத்திலோ மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியபடி மலர்ந்து காற்றாடுகின்றன… நிஜ சிவப்புப் பாப்பிப் பூக்கள், எம்மண்ணிலிருந்தோ சுமந்து வந்த அன்பையும் தம் இதழ்களிலேந்தி.

தோழிகளின் அன்புப் பரிசுகள்


31 October 2019

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும்

தோட்டத்துப் பிரதாபம் - 7

தோட்டத்து விளைச்சல்

கத்தரிக்காய் சாப்பிடுவதென்பது எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. எனக்காகவே அம்மா மீன் குழம்பில் தக்காளிக்காய் போடுவாங்க என்று சொன்னேன் அல்லவா? இலவச இணைப்பாக கத்தரிக்காய், மாங்காய் போடுவதுண்டு. கத்தரிக்காய் எனக்கே எனக்கு மாத்திரம். கத்தரிக்காய் கேட்டு அடம்பிடித்து ஆத்தாவிடம் மொத்து வாங்கிய கதையைக் கேட்டாலே உங்களுக்குத் தெரிந்துவிடும் கத்தரிக்காய் எனக்கு எவ்வளவு இஷ்டம் என்பது.

பள்ளியில் என்னைச் சேர்க்கும் வரை தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். முதல் பேத்தி என்பதால் பயங்கர தாத்தா செல்லம். அப்போது எனக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கலாம். அன்று வீட்டில் மீன்குழம்பு. மதிய உணவுக்காக தாத்தா வழக்கம்போல் வீட்டுக்கு வந்தார். "பாப்பா சாப்பிட வாம்மா" என்று அழைத்து அவரது தட்டில் பரிமாறப்பட்ட மீனை முள் நீக்கி வாஞ்சையுடன் எனக்கு ஊட்ட, நான், "எனக்கு மீனு வேணாம், கத்திரிக்காதான் வேணும்" என்றேன். கொடுப்பதைச் சாப்பிடாமல் அந்த வயதில் எத்தனை நாக்கு ருசி பாருங்க! எல்லாம் தாத்தா கொடுக்கிற இடம்தான்!

மீன்குழம்புக்குத் தயாராக.. 

அடுத்த நொடியே தாத்தாவிடமிருந்து ஆணை பறந்தது. "யாரங்கே, உடனடியாய் என் பேத்திக்குக் கத்தரிக்காய் சமைத்துக் கொடுங்கள்" கிட்டத்தட்ட அப்படிதான் ஆனது நிலைமை. அணைக்கப்பட்டிருந்த விறகடுப்பு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு... அவசர அவசரமாய் ஒரு கத்தரிக்காய் எங்கிருந்தோ வருவிக்கப்பட்டு… நாலைந்து துண்டமாய் நறுக்கப்பட்டு... உப்பு சேர்த்து அவிக்கப்பட்டு... பின் குழம்பிலிடப்பட்டு... இவ்வாறாக பல பாடுபட்டு இறுதியாக என் நாவுபட்டு... தன் பிறவிப்பயனை அடைந்தது அன்று ஒரு கத்தரிக்காய்!

கத்தரிக்காய் வேகும்வரை பணிக்குத் திரும்பாமல் 'இன்னுமா வேகல? இன்னுமா வேகல?' என்று ஆத்தாவையும் கத்தரிக்காயையும் ஒருசேர மிரட்டிக்கொண்டிருந்தார் தாத்தா.

தாத்தா வேலைக்குப் போனபிறகு ஆத்தா என் கன்னத்தில் இடித்து, "ஏண்டி, மீனு வேணாம்னு கத்திரிக்கா கேட்டே, வீட்டுல இருந்துச்சி, ஆக்கித் தந்தாச்சி, கத்திரிக்கா இருக்கையிலே மீனு கேட்டா என்னாடி பண்ணியிருப்பாரு உங்க தாத்தா? தூண்டிலை எடுத்துகிட்டு ஏரிக்கரையப் பாக்கப் போயிருப்பாரோ? போனாலும் போவாரு, சொல்லமுடியாது" என்று அலுத்துக்கொண்டார். அந்த ருசி என்னவோ இன்று வரை மாறவே இல்லை.

கத்தரிப்பூவில் ஐரோப்பியத் தேனீ

கத்தரிப்பூவில் ஆஸ்திரேலியத் தேனீ


வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேயினித்த மோரும் – திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்.

என்று ஔவையையே தன் பெருமை பாடவைத்த கத்தரிக்காய்க்கு முன் நான் எம்மாத்திரம்? 

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும்
கூடவே வீட்டு மோர்மிளகாயும்

புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்த பூதன் என்பவன், ஒரு சமயம் ஔவைக்கு அளித்த விருந்தானது இந்த உலகையே பரிசாக நல்கியதற்கு இணையாக மதிக்கத்தக்கதாம். அப்படி என்ன பெரிய விருந்தாம்? வழுதுணங்காய் என்றால் கத்திரிக்காய். வரகரிசிச்சோறும் கத்திரிக்காய்ப் பொரியலும் மோரும்தான் அந்த விருந்து. பசியோடிருப்பவர்க்கு மனமுவந்து அளிக்கும் உணவு எளியதாய் இருந்தாலும் அதற்கு இந்த உலகும் ஈடில்லைதானே…

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும் எப்படியிருக்கும்? சாப்பிட்டுப் பார்த்தாலென்ன என்ற ஆசை வந்துவிட்டது. வழுதுணங்காய் கைக்கெட்டும் தூரத்தில் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறது. வரகரிசி? 

வரகரிசி

கிடைக்குமோ கிடைக்காதோ என்று நினைத்தேன். அதுவும் கடையில் கையெட்டும் தூரத்தில் கிடைத்தது. வாங்கி வந்து ஆக்கி ருசித்தாயிற்று. ஔவை சும்மா சொல்லவில்லை, சொர்க்கம்தான்.

ஏழெட்டு கிலோ இருக்கலாம்

இவர்கள் எங்க வீட்டுக் கருப்பழகிகள். புரியவில்லையா? Black beauty எனப்படும் கத்தரியினம். ஒவ்வொன்றும் சுமார் அரைக்கிலோ இருக்கும். இவ்வளவு பெரிதாகும் என்று எனக்கு முதலில் தெரியவே இல்லை. ஓரளவு வளர்ந்தவுடனேயே பறித்து சமைத்துவிடுவேன். கத்தரிக்காய்கள் பிஞ்சு விட்டிருந்த சமயம் கணவரும் நானுமாக மூன்று வாரங்களுக்கு ஒரு திடீர்ப் பயணம்.  வெண்டைகளின் காய்ப்பும் உச்சத்தில் இருந்த நேரம். தவிர்க்கமுடியாத பயணம் என்பதால் தோட்டத்துப் பக்கம் எட்டிக்கூட பார்க்காத மகனைக் கெஞ்சி வாரமொருமுறையாவது தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தேன். சரி சரி என்றான். ஊரிலிருந்து எப்போது பேசினாலும் 'மழை பெய்யுதும்மா.. மழை பெய்யுதும்மா' என்பான். எனக்கோ ஆச்சர்யம். நான் இருக்கும் வரை மழைக்கான சிறு அறிகுறி கூட தென்படவில்லை. என் தோட்டத்துச் செடிகளை வாழ்வித்த இயற்கைக்கு நன்றி சொல்லி ஆனந்தித்தேன்.

அறுநூறு கிராம்

ஊரிலிருந்து திரும்பியது இரவு நேரம் என்பதால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு விடியக் காத்திருந்தேன். விடிந்ததும் விடியாததுமாக தோட்டத்துக்கு ஓடிப்போய்ப் பார்த்தால், என் கண்களையே நம்ப முடியவில்லை. கத்தரிக்காய்கள் எல்லாம் குண்டு குண்டாய்க் காய்த்து, செடிகள் பாரந்தாங்காமல் எல்லாம் தரையோடு தரையாய்க் கிடந்தன. 

குண்டு கத்தரிக்காய்

ஒவ்வொன்றும் அரைக்கிலோ தேறும். சில காய்கள் மழைநீரிலேயே ஊறிக்கிடந்து அழுகிவிட்டிருந்தன. எல்லாவற்றையும் பறித்துவிட்டு செடிகளுக்கு முட்டுக்கொடுத்து நிமிர்த்துவைத்தேன். அன்றைக்குப் பறித்தவை மட்டுமே ஏழெட்டு கிலோ இருக்கலாம். 

முற்றவே இல்லை

கத்தரிக்காய்கள் நிச்சயம் முற்றியிருக்கும் என்று நினைத்து ஒன்றை அரிந்து பார்த்தால், அங்கேயும் ஓர் ஆச்சர்யம். முற்றலுக்கும் முந்தைய பருவத்தில் இருந்தது. எல்லாவற்றையும் அரிந்துபார்த்தேன். ஒன்றும் சோடைபோகவில்லை. உடனே உப்புநீரில் அரை அவியலாய் அவித்தெடுத்து வற்றல் போட்டு பத்திரப்படுத்திவிட்டேன்.

கத்தரி வற்றல்

குளிர்காலத் துவக்கத்தில் காய்ப்பும் குறைந்துவிட்டது. செடிகளில் பூச்சித்தொற்றும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. குளவிகளையும் பொறிவண்டுகளையும் காணவில்லை. குளிர்காலம் முடியும்வரை அவற்றின் வருகை குறைவாகத்தான் இருக்கும் என்பதால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் வழியில்லை. நன்றாக இருந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டியெறிந்துவிட்டேன். அந்த ஒன்றும் கூட முடிந்தவரை ஒன்று இரண்டு என காய்த்துக்கொண்டு என் கத்தரிக்காய் ஆவலை அவ்வப்போது பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. விதைக்காக சில காய்களைப் பழுக்கவிட்டிருக்கிறேன்.

கத்தரிப்பழம்? 

கத்தரிக்காய் காய்க்காவிட்டாலும்தான் என்ன, அதுதான் கத்தரி வற்றல் கைவசம் இருக்கிறதே. அடுத்த சீசன் வரை அசத்திவிடலாம்.

(பிரதாபங்கள் தொடரும்)