8 January 2018

பூக்கள் அறிவோம் (31-40)

பூக்கள் அறிவோம் தொடரும் சிறு இடைவேளைக்குப் பிறகு இனிதே மலர்ந்து மணம் வீச வருகிறது. 

31- லாவண்டர் 

Lavender (lavandula)






லாவண்டர் வண்ணமும் வாசமும் உலகப்பிரசித்தி பெற்றவை. லாவண்டர் எண்ணெய் தயாரிப்புக்காகவே லாவண்டர் செடிகள் பெரும்பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. எண்ணெய் தயாரிப்பில் பூக்களை விடவும் மொட்டுகளுக்கே பங்கு அதிகம். சோப்புகள், நறுமணத்தைலங்கள், அழகுசாதனப்பொருட்கள் மட்டுமல்லாது மருந்துகள் தயாரிக்கவும் லாவண்டர் எண்ணெய் உதவுகிறது. லாவண்டர் எண்ணெய் நல்லதொரு கொசுவிரட்டியும் கூட. உலரவைத்த லாவண்டர் பூக்களும் மொட்டுகளும் இலைகளும் உணவில் வாசமும் ருசியும் கூட்டவும், தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. லாவண்டர் மலர்த்தேனுக்கு உலகச்சந்தையில் மதிப்பு அதிகம். லாவண்டர் இனத்தில் சுமார் 47 வகைகள் உள்ளன. லாவண்டர் பூக்கள் உயர்த்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதாயிருந்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. ரோமானியர் காலத்தில் ஒரு பவுண்டு (450 கிராம்) எடையுள்ள லாவண்டர் பூக்கள் நூறு வெள்ளிக்காசுகளுக்கு விற்கப்பட்டனவாம். அந்நாளைய நிலவரப்படி நூறு வெள்ளிக்காசுகள் என்பது ஒரு விவசாயக்கூலியின் மாத வருமானம் அல்லது ஒரு முடிதிருத்துபவரின் ஐம்பது முடிதிருத்தலுக்கான கூலியாம்.

32 - தேயிலைப்பூ  

Camellia sinensis




இலை பிரபலமான அளவுக்கு இந்தப் பூ பிரபலமில்லை. நித்தமும் காலையும் மாலையும் நமக்குப் புத்துணர்ச்சி கூட்டும் தேநீர் இந்தப் பூமரத்தின் இலைகளிலிருந்துதான் கிடைக்கிறது. தேயிலை மரம் என்கிறாயே.. செடியிலிருந்துதானே இலைகளைப் பறிக்கிறார்கள்.. எத்தனை சினிமா பார்த்திருக்கிறோம்.. எத்தனை தேயிலைத் தோட்டங்கள் பார்த்திருக்கிறோம்.. என்று வியப்பாக இருக்கிறதா.. தேயிலைக்கென்று வளர்க்கப்படும் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைக்கொழுந்துகளைப் பறிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட அளவோடு குத்துச்செடிகளாகவே வைத்திருக்கிறோம். வளரவிட்டால் இப்படிதான் மரமாகிப் பூப்பூக்கும். சுமார் 300-க்கும் மேற்பட்ட கமேலியா வகையுள் முக்கியமான ஒன்று இது. இதன் தாயகம் சீனா என்பதால்தான் இதற்கு Camellia sinensis என்று பெயர். Sinensis என்றால் லத்தீன் மொழியில் சீனாவிலிருந்து என்று அர்த்தமாம். இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலில் ருசியும் மணமும் சேர்க்கப் பயன்படுகிறது.


33 - ரோஸ்மேரி 

rosemary




சமையலில் சுவையும் மணமும் கூட்டப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் ரோஸ்மேரி முக்கியமானது. மத்தியதரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது வறட்சியையும் தாங்கி வளரும் தன்மையுடையது. நன்னீர் கிடைக்காதபோது கடல்நீரின் ஈரப்பத்த்தை உள்வாங்கி வளரக்கூடியது என்பதால் கடல்துளி என்ற பொருளில் rosemary எனப்படுகிறது. லத்தீன் மொழியில் Ros என்பது துளியையும் marinus என்பது கடலையும் குறிக்கிறது.

ரோஸ்மேரி என்ற பெயர்வந்த கதை ஒன்று உள்ளது. ஆதியில் ரோஸ்மேரிப்பூக்கள் வெள்ளை நிறத்தில்தான் இருந்தனவாம். ஒருமுறை மேரிமாதா ஓய்வெடுக்கையில் அவரது நீலவண்ண ஆடை அப்புதரை மூடியதால் வெள்ளைப் பூக்கள் எல்லாம் நீலப்பூக்களாக மாறிவிட்டனவாம். அதனால்தான் இச்செடிக்கு மேரியின் ரோஜா (rose of mary) என்ற பெயர் ஏற்பட்டதாம். பண்டைக்காலத்தில் கிரேக்கர், எகிப்தியர், ரோமானியர்கள் யாவருக்கும் ரோஸ்மேரி புனிதச்செடியாக இருந்திருக்கிறது. இப்போதும் வெள்ளைநிறப் பூக்கள் பூக்கும் ரோஸ்மேரி வகை உள்ளது.

ரோஸ்மேரி செடியின் சிறுதண்டையும் கிள்ளி நட்டுவைத்தாலும் நன்கு வளரக்கூடியது. ரோஸ்மேரி இலைகள் அசைவ உணவில் வாசமும் சுவையும் கூட்டுவதற்காக சேர்க்கப்படுகின்றன. ரோஸ்மேரி எண்ணெய், வாசனைத்திரவியங்கள், ஊதுபத்தி, ஷாம்பூ போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறுதிக்கிரியைகளின்போதும் நினைவேந்தல்களின்போதும் ரோஸ்மேரி கட்டாயம் இடம்பெறுகிறது. கல்லறைகளில் ரோஸ்மேரியைத் தூவி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைவீர்ர் நினைவுதினமான ஆன்ஸாக் தினத்தன்று (ANZAC day) ரோஸ்மேரி இணுக்குகள் சட்டையில் அணியப்படுகின்றன.

34 -  சிக்கரிப்பூ

Chicory flower (cichorium intybus)




சின்னவயதில் காஃபிக்கொட்டை அரைக்க மிஷினுக்குக் கொடுத்துவிடும்போது ஒரு ரூபாய்க்கு சிக்கரி சேர்க்குமாறு சொல்லிவிடுவார் அம்மா. சிக்கரி என்றால் என்ன என்று அப்போது மட்டுமல்ல.. சில நாட்கள் முன்புவரையிலும் கூட தெரியாது. யோசித்ததுமில்லை. சிக்கரி என்பது சிக்கரிச்செடியின் கிழங்கைக் காயவைத்து வறுத்து அரைக்கப்படும் பொடி. சிக்கரிக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. முக்கியமாக குடற்புழுக்களை அழிக்கவல்லதாம். மலர் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 38 மலர்களுள் இதுவும் ஒன்று. பொதுவாகவே நீலவண்ணப் பூக்கள் காதலுக்கும் நம்பிக்கைக்கும் அடையாளமாக விளங்குகின்றன. சிக்கரிப்பூவும் விலக்கல்ல. ஐரோப்பிய நாடோடிக்கதைகளில் பூட்டிய கதவுகளைத் திறக்கும் வல்லமை கொண்டவையாக அறியப்படுகின்றன இப்பூக்கள். லேசான கசப்புத்தன்மையுள்ள சிக்கரி இலைகள் பல நாடுகளில் சமைத்து உண்ணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் உண்ணப்படுவதாக தகவல். ஆராய்ச்சி பண்ணியதில் காசினிக்கீரை எனப்படுவது இதுதான் என்று தோட்டக்கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் தெரியவருகிறது. ஆக காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான் காவேரிஎன்பதைப் போல காசினிப்பூதான் சிக்கரிப்பூ.. சிக்கரிப்பூதான் காசினிப்பூ.

35 - காட்டுக்கிராம்பு

primrose willow (ludwigia octovalvis)




நீர்நிலைகளை ஒட்டி வளரக்கூடிய தாவர இனமான இதற்கு 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய தாவரவியல் வல்லுநர் Christian Gottlieb Ludwig அவர்களின் பெயரால் ludwigia என்று பெயரிடப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவகுணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படும் இந்த காட்டுக்கிராம்பின் இலை, வேர் உள்ளிட்ட பாகங்களை உலகெங்கும் பல நாடுகளிலும் மக்கள் பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் தேநீர் தயாரிக்க இலைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், தலைவலி, வயிற்று உபாதைகளைப் போக்கவும் இலைக்கசாயம் பயன்படுத்தப்படுகிறது. நைஜீரியாவில் மலமிளக்கியாக வேகவைத்த இலைக்கடைசல் பயன்படுத்தப்படுகிறது. வியட்நாமில் இதன் இலைகள் பச்சையாகவோ வேகவைத்தோ பன்றிகளுக்குத் தீவனமாக அளிக்கப்படுகின்றன. முதுமையைத் தள்ளிப்போடும் அற்புதம் இந்த மூலிகைக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது.

36 - கானாவாழை

Commelina benghalensis




கானாவாழை, கனவாழை, காணாம்வாழை என்றெல்லாம் குறிப்பிடப்படும் இதற்கும் வாழைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தரையோடு படர்ந்து வளரும் கானாவாழை புல்பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வாழையைப் போல கன்றுகள் உருவாகி வம்சம் தழைப்பதால் இதற்கும் வாழை என்று பெயராகிவிட்டது. பல நாடுகளில் களையாகப் பார்க்கப்பட்டாலும், எகிப்து, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவத்தில் கானாவாழைக்கு சிறப்பிடம் உண்டு. ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் கானாவாழை இலைகளை கீரை போல் சமைத்து உண்பது வழக்கம். இதற்கு கன்னாங்கீரை என்ற பெயரும் உண்டு. இதன் சாற்றை காய்ச்சல் தீர உள்ளுக்கும் சருமநோய் மற்றும் வலி, வீக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக வெளியிலும் பயன்படுத்துகின்றனர். கன்றுக்குட்டிகள் இத்தாவரத்தை விரும்பித் தின்பதால் கன்றுக்குட்டிப்புல்’ (calf’s grass) என்ற செல்லப்பெயரும் உண்டு.  
 

37 - அவுரிப்பூ 

Indigofera tinctoria




ஆங்கிலத்தில் இன்டிகோ, சமஸ்கிருதத்தில் நீலிகா, இந்தியில் நீலி, கன்னடத்தில் கருநீலி, மலையாளத்தில் நீலமலர், தெலுங்கில் நீலி செட்டு, தமிழில் நீலி அல்லது அவுரி. பூ என்னவோ பார்ப்பதற்கு அழகான இளஞ்சிவப்பில் இருக்கிறது. ஆனால் பெயர் மட்டும் நீலி, நீலம், இன்டிகோ என்றெல்லாம் இருக்கிறதே.. ஏன்? காரணம் இருக்கிறது. இந்தச் செடியின் வேர் மற்றும் இலைகளை ஊறவைத்துதான் இயற்கையான நீலச்சாயம் (Indigotin) தயாரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்திய விவசாயிகளைத் துன்புறுத்தி அதிக அளவில் அவுரி பயிரிடச்செய்து, அதன் மூலம் பெறப்படும் நீலச்சாயம் இங்கிலாந்துக்கு பெட்டி பெட்டியாக ஏற்றுமதி செய்யப்பட்ட சோக வரலாறு உண்டு. சாயம் தவிர ஏராளமான மருத்துவகுணங்களும் உடையது அவுரி. பாம்புக்கடி உள்ளிட்ட 18 வகையான விஷங்களை முறிக்கும் இயல்புடையதாம். தோல் நோய், மஞ்சட்காமாலை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நல்லதொரு மருந்து. வெளுத்த கேசத்தைக் கருப்பாக்க இந்த இயற்கைச்சாயம் பெரிதும் உதவுமாம். நீலிபிருங்காதி தைலம் நினைவுக்கு வருகிறதா?

(நீலி அவுரி, பிருங்காதி கரிசலாங்கண்ணி)

38 - ஆடுதொடா இலை 

justicia adhatoda




Malabar nut, adulsa, adhatoda, vasa, vasaka என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஆடுதொடா இலையின் மகத்துவம் நாம் அறிந்ததே. சித்த, ஆயுர்வேத, ஹோமியோ மற்றும் யுனானி மருத்துவங்களில் பெருமிடம் பிடித்துள்ள இதன் பூர்வீகம் ஆசியா. Adhatoda என்பது இதன் அறிவியல் பெயர் என்றாலும் இச்செடியின் கைப்பு மணம் மற்றும் சுவை காரணமாக ஆடுமாடுகள் மேய்வதில்லை என்பதால் ஆடுதொடா இலை என்ற பெயர் மருவி ஆடாதோடை ஆனதாகவும் கருத்து உண்டு. பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தின் அடையாள மலர் இதுவே. ஆஸ்துமா, இருமல், கோழை, தொண்டைக்கட்டு போன்ற சுவாசப்பிரச்சனைகளுக்குத் தீர்வாகப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இலை, பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகள் மேயாத காரணத்தால் கிராமப்புறங்களில் வேலியோரம் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

39 - அரிவாள்மனைப்பூண்டு 

common wireweed (sida acuta)




லேசாகத் திருகினாற்போன்று ஐந்து இதழ்களுடன் சின்னச்சின்னதாய் மஞ்சள் வண்ணத்தில் பூக்கும் மூலிகைப் பச்சிலையான அரிவாள்மனைப் பூண்டுக்கு ஏராளமான மருத்துவகுணம் உள்ளதாக அறியப்படுகிறது. இலைகள் அரிவாள் போல் இருப்பதால் இந்தப்பெயர் என்று சிலரும் வெட்டுக்காயங்களை குறிப்பாக அரிவாள் காயங்களை விரைவில் ஆற்றும் தன்மையால் இப்பெயர் என்று சிலரும் கூறுகின்றனர். இதன் வேரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கசாயம் உடலுக்கு பல்வேறு நன்மைகளைப் பயக்கும் என்றும் இலைகளை ஊறவைத்த தண்ணீர், கூந்தலை அலசித் தூய்மையாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இச்செடியின் தண்டு நார்ப்பொருளால் ஆனதால் கயிறு, கான்வாஸ், மீன்வலை போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் வேறு பெயர்கள் வட்டத்திருப்பி, மலைதாங்கி. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா என்றாலும் உலகநாடுகள் பலவற்றிலும் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இது களைப்பயிராக அறியப்படுகிறது.

40 - அப்பக்கொடி 

 goat weed (Ageratum conyzoide)




தமிழில் அப்பக்கொடி என்றும் ஆங்கிலத்தில் Billygoat weed, chick weed, goat weed, white weed என்றெல்லாம் அழைக்கப்படும் களைத்தாவரமான இது பூக்களின் அழகுக்காக வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. பெயரில்தான் கொடியிருக்கிறதே தவிர இது ஒரு செடிதான். பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் இன்று உலகநாடுகள் பலவற்றிலும் பரவியிருப்பதோடு ஆஸ்திரேலியா உள்ளிட்ட அநேக நாடுகளில் ஆக்கிரமிப்புப் களைப்பயிராகவும் அறியப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மருத்துவ மூலிகையாகவும் பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது. இதை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்தால் இதன் வாடைக்கு கொசுக்கள் அண்டாதாம். இதன் பச்சிலைச்சாறு வெட்டுக்காயம், புண், கொப்புளம், தோல் தடிப்பு, அரிப்பு, வீக்கம் போன்ற சரும நோய்களுக்கு நல்ல நிவாரணியாக வெளித்தடவப்படுகிறது, துளசியோடு அப்பக்கொடியின் பூக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட கசாயம் சளி, இருமல் போன்றவற்றுக்கு மருந்தாகவும் உட்கொள்ளப்படுகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் இதன் இலைகளைக் காயவைத்து சமையலில் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

விரும்பத்தகாத வாடை கொண்ட அப்பக்கொடிக்கு வியட்நாம் மக்கள் தங்கள் மொழியில் வைத்திருக்கும் பெயர் பன்றிவிட்டை (pig feces). தமிழில் சில பகுதிகளிலும் இதே போன்ற வேடிக்கைப்பெயரொன்று வழங்கப்படுகிறது. என்னவென்று அறிந்துகொள்ள ஆவலா? கீழே கமெண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாரதிமணி ஐயாவின் இந்தப்பதிவை வாசித்து அறிந்துகொள்ளுங்கள். 

(இன்னும் மலரும்)
  

26 comments:

  1. தெரியாத பூக்கள் எத்தனை எத்தனை.... உங்கள் மூலம் நாங்களும் சில பூக்களின் பெயர்களையும் பலன்களையும் அறிந்து கொள்கிறோம். தொடரட்டும் தங்கள் சீரிய பணி....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  2. பாரதி மணி ஐயாவின் கட்டுரையும் படித்தேன்... ரசித்தேன்.

    அப்பக்கொடிக்கு இப்படி ஒரு பெயரா... :))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் :) எனக்கும் அப்பதிவு வாசித்துதான் தெரியவந்தது.

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. அரிவாள்மனை பூண்டு தவிர மத்ததுலாம் எதும் தெரில. எத்தனை புது பூக்கள்?! எத்தனை நிறம்?!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? ஆச்சர்யமா இருக்கு ராஜி. இனி கவனித்துப் பாருங்க. உங்களுக்குத் தெரிந்த பூக்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.

      Delete
  5. எத்தனை பூக்கள்! சுவாரஸ்யமான தகவல்கள். அழகிய படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. வணக்கம் கீதா!

    பூக்களின் காட்சி பொருத்தியது பேரழகு!
    ஊக்கியது! என்னை உடன்!

    அழகுப் பூக்கள்! அருமையான பதிவு!
    வாழ்த்துக்கள்!

    உங்களை என் பதிவில் ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன்!
    வருகிறீர்களா?... நன்றி!

    https://ilayanila16.blogspot.com/2018/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

      \\உங்களை என் பதிவில் ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன்!
      வருகிறீர்களா?... நன்றி!\\

      தாமத பதிலுக்கு மன்னிக்கவும். இன்று இத்தொடர் பதிவினை கீதமஞ்சரியில் வெளியிட்டுள்ளேன். அழைப்புக்கு நன்றி தோழி.

      Delete
  7. ஒவ்வொரு பூவும் ஒரு தகவல் பெட்டகம்! திரட்டித் தந்தமைக்கு நன்றி தோழி! இயற்கையின் உன்னதம் வியப்பு! பதிவை சேமித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் அன்பும் நன்றியும் தோழி.

      Delete
  8. சில பூக்களின் பெயர்களை இன்று தான் தெரிந்து கொண்டேன். அழகான படங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. பூக்கள் பற்றி எழுத ஆரம்பித்த பிறகுதான் அவற்றை ஊன்றி கவனிக்கும் ஆர்வம் வந்தது. பெயர்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

      Delete
  9. துளசி: எத்தனை வகைப் பூக்கள்!! அறியாத தகவல்கள் அறியத்தங்கமைக்கு மிக்க நன்றி.

    கீதா: எப்படியோ மிஸ் ஆகிவிட்டதே! இப்பதிவு!!

    விதவிதமான பூக்களை அதுவும் அறிந்தவற்றைப் பற்றி புதிய தகவல்கள். டீ ஆயில் வீட்டில் உள்ளது ஊட்டிக்குச் சென்ற உறவினர் வாங்கி வந்து கொடுத்தது. ஆனால் அதைப் பற்றி இப்போது உங்கள் பதிவின் மூலமே அறிகிறேன்.

    சிக்கரி..ஆஹா வீட்டில் சிக்கரி கலக்காத காஃபிதான் புகுந்த வீட்டில். பிறந்த வீட்டில் சிறிது சேர்ப்பார்கள். புகுந்த வீட்டில் அது நல்லதல்ல என்று சேர்ப்பதில்லை. ஆனால் உங்கள் தகவல்கள்நேர்மறையாக இருக்கிறதே!!! சிக்கரி இலைதான் காசினிக்கீரையா அட! காசினிக் கீரை கிடைக்கும் போதெல்லாம் சமைப்பதுண்டு. அது சிறுநீர்கத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லபப்டும்.

    கானா வாழை..மாமியார் வீட்டில் நிறைய புல்லுடன் இருக்கும்...என் மாமியார் அதையும் மற்ற கீரைகளுடன் சேர்த்துச் செய்வார்.....

    நீலிபிருங்காதி பற்றி அறிய முடிந்தது....ரோஸ் மேரி வீட்டில் வாங்கி வைத்திருக்கிறேன். சில சமையல் குறிப்புகளில் பயன்படுத்துவதால்..

    லேவெண்டர் பற்றி அறிய முடிந்தது. பிற அறியாதவை..அதையும் தெரிந்து கொண்டோம்
    படங்கள் அனைத்தும் மிக மிக அழகு!! உங்கள் படங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ....

    ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா.

      கீதா.. எப்படி உங்களால் ஒவ்வொரு பதிவையும் பதிவின் ஒவ்வொரு விஷயத்தையும் சிலாகித்து மனந்திறந்து பாராட்டிக் கருத்திட முடிகிறது. உண்மையில் உங்கள் வாசிப்பும் அர்ப்பணிப்பான பின்னூட்டமும் மனந்தொடுகின்றன. மிக்க நன்றி தோழி.

      Delete
  10. எத்தனை பூக்கள்; சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களையும் தகவல்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனிமரம்.

      Delete
  11. Really Amazing...I didn't expect those words which u write as casual...Hatsoff to u man..Ivlo days Nan thedindrukadha pola These Essays Enaku romba santhoshaththai koduththadhu...Silagiththu eludhiulla vidham & Pictures clicks abaram..Levender சுகந்தி Kanamvaalai எருமைநக்கி எருமை நாக்கு நீல ஈ பூendrum Azhaikapadum...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் புதிய தகவல்களுக்கும் மனமார்ந்த நன்றி. பூக்களுக்கு இதுபோன்ற வட்டாரப் பெயர்கள் இருப்பதை அறியத்தருவதற்கு மிகவும் நன்றி.

      Delete
  12. Sorry mam didn't write properly due to some connection issues

    ReplyDelete
  13. I love to share lot of details about these kind of flowers mam..how to contact you madam?biz ur articles made me so joyful & Interesting...lot of New details to me..Yellow Jasmine pathy ipodhan kelvi padren...கனகாம்பரம் துலுக்கசெவ்வந்தி ராமபாணம் அழவனாம்பூ காசாம்பூ கானேஷன் தவளம் தவனம் ஆவிரை வேரல் ஆவாரை ஸ்வர்ணப்பட்டி பாதிரிப்பூ போன்ற மலர்கள் பற்றிய reason for the name & Opt tamil Sanskrit Telugu Hindi names enna details tharumpadi aawaludan ketukolgiren...

    ReplyDelete
  14. Shiyamdev4s@gmail.Com

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.