29 August 2012

அரைநூற்றாண்டு கழித்து வந்துசேர்ந்த காதல்கடிதம்



 
 

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் வந்த புத்தகத்தைப் பற்றி முன்பு பார்த்தோம். நூலகத்தின் பத்திரிகைகளுக்கிடையில் சிக்கியிருந்த கடிதமொன்று அரை நூற்றாண்டுக்குப் பின் உரியவரைத் தேடிவந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? அதுவும் சாதாரணக் கடிதம் அல்ல, காதல் கடிதம்.
 

கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு முன் காதலி வான்னி தன் காதலன் க்ளார்க்குக்கு (அதுதான் அவர் பெயர்) எழுதிய கடிதம் அது. கல்லூரி திரும்புமுன் ஏன் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசலைன்னு வருத்தப்பட்டு கேட்டு எழுதியிருக்காங்க. ஆனால் அந்தக் கடிதம் க்ளார்க்கை என்ன காரணத்தாலோ வந்தடையவே இல்லை.
 

அவரும் படிப்பை முடிச்சிட்டு, ஊருக்கு வந்து தனக்காகக் காத்திருந்த வான்னியைக் கல்யாணமும் செய்து,  சேர்ந்து வாழ்ந்து,  நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, பின் விவாகரத்தும் பெற்று விட்டாராம். அதோடு இல்லை, அவர் மதம் மாறி முகம்மது சித்திக்காகவும் மாறிவிட்டாராம். சென்றவருடம்  அவரைத் தேடி வந்தடைந்திருக்கிறது அக்கடிதம்.
 

நான்கு ஒரு சென்ட் அஞ்சல்தலைகளைத் தாங்கி 1958 ஆம் வருட முத்திரையை ஏற்று நிற்கும் அக்கடிதம் பென்சில்வேனியாவிலிருக்கும் கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் பெட்டிக்கு சிலவாரங்கள் முன்புதான் வந்து சேர்ந்திருக்கிறது. வியப்புக்குரிய கடிதம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்த அவருடைய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் தற்போது இண்டியானாபோலிஸில் வசிக்கும் 74 வயதான சித்திக்கிடம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைக் கேட்ட சித்திக் சொல்லமுடியாத உணர்வுக்கலவையில் மிதக்கிறதா சொன்னாராம். இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தின் மேல் அத்தனையொன்றும் ஆர்வமில்லை, இருந்தாலும் ஒரு குறுகுறுப்போடக் காத்திருக்கிறேன்என்று சொன்னாராம்.
 

எல்லாம் சரி, கடிதத்தை உரியவர் பிரித்துப் பார்க்குமுன்பே அது ஒரு காதல் கடிதம் என்று எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? அதிலிருக்கும் அஞ்சல் தலைகளை வைத்துதான். காதலர்களுக்கென்று பிரத்யேக அஞ்சல்தலைகளான்னு ஆச்சர்யப்படாதீங்க. எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான அஞ்சல்தலைகள்தாம் அவை. ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால் புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ?)
 

தலைகீழ் மட்டுமில்லை, அஞ்சல் தலையின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பொருள் உண்டாம். சொல்லவா?
 

நேராக இருந்தால் - வியாபார விஷயம். 

தலைகீழாய் இருந்தால் - காதல், தனிமை, தாபம் 

தலைப்பகுதி வலப்பக்கம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - அன்பு முத்தங்கள்

தலைப்பகுதி இடப்புறம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - நான் உன்னை விட்டு நீங்கவே மாட்டேன் 

மூலைவிட்டத்தை முன்னிறுத்தி அஞ்சல் தலையின் மேற்பகுதி வலப்பக்கம் பார்த்திருந்தால் - என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? 

அதற்கு எதிர்திசையில் அதாவது தலை இடப்பக்கம் பார்த்தபடி இருந்தால் - உன்னை மணப்பது உறுதி.
 

பாருங்க, அந்தநாளிலேயே அமெரிக்கக் காதலர்கள் அஞ்சல்தலைகளை ஒட்டுவதிலேயே சங்கேத மொழியை உருவாக்கிக் காதலித்திருக்காங்க.
 

எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) 
 

இன்னும் ஒரு விஷயம், இந்திய அஞ்சல்துறை இம்மாதிரிக் கோணல்மாணலா  அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்டக் கடிதங்களை நிராகரிச்சிட்டா, அப்புறம் என்னைத் திட்டக்கூடாது. சரியா?
 

காதலுக்காக அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித் தெரியுமா? அஞ்சல் தலை சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களா சேகரிக்கிறேன். மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான பொழுதுபோக்கு அது.
 
**************************************************************
நன்றி: யாஹூ செய்திகள் (ஜூலை 16, 2011)

20 comments:

  1. அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இன்னமுமா கார்டு, கவர்,வாங்கி கடிதம் எழுதுபவர் இருக்கிறார்கள் ?
    எல்லாமுமே ஈ மெயிலும் எஸ்.எம்.எஸ். ஆகவோ இருக்கின்றது.

    அது சரி.
    நம்ம ஊர்லே எல்லாம் இதுபோல டிலே ஆர்ற விசயமே இல்ல.

    நம்ம ஊர் காதலிங்க ( குறிப்பா, அந்த காலத்து பொண்ணுக .)
    மஹா புத்திசாலிப்பெண்ணுங்க..

    " இன்னமும் தாமதம் ஏனோ? இது உமக்கு நீதி தானோ?" அப்படின்னு
    ஒரு ஓலைலே எழுதி அத புறா கால்லே க்ளிப் பண்ணி தூது அனுப்புவாங்க..
    அது கரேக்டா டயத்துக்குப் போய் சேந்துடும்.

    சுப்பு தாத்தா.
    (சுப்பு ரத்தினம்)

    ReplyDelete
  3. // இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) //

    :)) அதானே....

    இனிய பகிர்வு சகோ. சுப்பு தாத்தா சொல்ற மாதிரி தூது அனுப்ப நிறைய டெக்னிக் வைச்சு இருந்தாங்க நம்ம தமிழ் நாட்டுல... சங்ககால பாடல்கள்ல எல்லாத்தையும் தூது அனுப்பிட்டாங்களே!

    ReplyDelete
  4. Anonymous29/8/12 13:55

    ஸ்வாரஸ்யமான பதிவு!

    ReplyDelete
  5. தபால் தலையில இம்புட்டு விசயமிருக்கா? பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  6. அடடே... வித்தியாசமான விஷயம். தபால் தலைகளை ஒட்டுவதன் பின்னே இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்கிற தகவல் புருவம் உயர்த்த வைத்தது தோழி. அருமை.

    ReplyDelete
  7. ம்ம்ம் ..இவ்வளவு இருக்க
    புருவம் உயர செய்த நல்ல பதிவு

    ReplyDelete
  8. தபால் தலைகளை ஓட்டுவதிகூட இவ்ளோ விஷயமா??

    //எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) ///

    நாம எழுதற கடிதத்தையே ஒழுங்க படிச்சி புரிஞ்சிகறது கஷ்டம்.. இதுல தபால் தலை சங்கேத மொழியா??? முழி பிதுங்கிடும் அனுபுறவங்களுக்கு.....

    பகிர்விற்கு நன்றிகள்..

    ReplyDelete
  9. அட அஞ்சல் தலை ஓட்டும் விசயத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? இன்னிக்குத்தான் கேள்விப்படுறேன்! ஆச்சிரியமாக இருக்கு!

    மிக்க நன்றி சகோ, பகிர்வுக்கு!

    ReplyDelete
  10. காதல் பற்றிய செய்திகள் இனிமை. ஆனால் இந்த அஞ்சல்தலை ஒட்டுவது பற்றிய விஷயங்கள் தலை சுற்றுவதாக உள்ளது. ஆச்சர்யம் தரும் அருமையான பகிர்வுக்கு
    நன்றிகள்.

    ReplyDelete
  11. கீதமஞ்சரி அக்கா...

    அஞ்சல் தலைகளைப் பற்றி இவ்வளவு விசயங்களா...!!
    வியக்கிறேன். நன்றிங்க.

    “அஞ்சல் தலை“ - ஹய்கூ

    ஒரு மூலையில்
    இருந்து கொண்டே உலகின்
    எல்லா மூலைக்கும் செல்வது

    ReplyDelete
  12. Anonymous29/8/12 20:10

    அஞ்சல் தலை செய்திகள் , அட இப்படி எல்லாம் கூட இருக்கா
    என்று தலை உயர்த்தவும், அட இப்படி எல்லாம் செய்வதற்குள் என்று தலை
    சுற்றவும் செய்தது.

    ReplyDelete

  13. அஞ்சல் தலை ஒட்டுவதிலுள்ள சங்கேத விஷயங்கள் இதுவரை கேள்விப்படாதது. பகிர்வுக்கு நனறி. . .என்னிடம் ஐம்பது வருடத்துக்கு முந்தைய கடிதங்கள் சில பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன.

    ReplyDelete
  14. அட...அஞ்சல் தலை ஒட்டுவதில்கூட சங்கேத மொழிகளா....ஆச்சரியம்தான்.இப்பவெல்லாம் ஏதாவது அலுவலகக் கடிதங்கள் மட்டுமே.அதிலாவது சங்கேதமொழியில் ஒட்டிப் பார்க்கவா கீதா !

    ReplyDelete
  15. அட அஞ்சல் தலை ஒட்டுவதில் கூட
    இவ்வளவு விஷயம் இருக்கா
    இப்போதுதான் தங்கள் மூலம் அறிகிறேன்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. Anonymous31/8/12 16:06

    ''...ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால் புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ?)...''
    இதை வாசிக்கச் சிரிப்பு வந்தது.
    நல்ல பதிவு. நன்றி. பாராட்டுகள்.
    நல்வரவு என் பக்கத்திற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. ஆகா தோழர், அற்புதம்

    ReplyDelete
  18. கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  19. கடிதங்கள் மூலம் காதலிப்பது அதுவும் கவிதைகளால் ---- இந்த தலைமுறை அதை இழந்து விட்டது.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.