8 August 2012

ஏக்கந்தவிர்ப்பாய் என் மணியாரமே...


அறிதுயில் கொள்ளும் அழகுக் கண்மணி,
அறிவேனடி உன் அழும்பின் பின்னணி. 
ஆக்கித் தருவேனடி பணியாரம்
ஏக்கந்தவிர்ப்பாய் என் மணியாரமே. 

கட்டாயம் பண்ணுவேன் சீராளம்,
கணக்கற்று நீயுண்ணலாம் ஏராளம். 
கூடவே செய்வேனடி போளி,
கொஞ்சமும் செய்யவில்லை கேலி. 

பாலப்பமும் இடியாப்பமும் புட்டும்
பக்குவமாய் உனக்கொருநாள் கிட்டும். 
பொங்கல் பூரி லட்டோடு முறுக்கும்
பாயசம் அதிரசம் தேன்குழலும் இருக்கும்.

இட்டிலியும் தோசையும் வடையும்
இன்னுமின்னும் உன்மனம் குடையும்
பலகாரங்களின் பெயர்களைச் சொல்லிடுவாய்,
சிலகாலத்தில் யாவும் சேரும் உன் வாய்!

வாரி வளைத்துத் தின்றிட நீயும்
வயிறு நிறைந்து உவப்பேன் நானும். 
ஆசைப்படும் அத்தனையும் அல்லது
அதில் ஒன்றேனும் கிடைக்கும் வரை...
 

பாசமுடன் நான் கொடுக்கப்
பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
பசியறியாக் கனவொன்றுக்குக்
காத்திருப்பாய் கண் துஞ்சி!
******************
படம் உதவி: இணையம்

52 comments:

 1. ஆஹா சுவையான பகிர்வு.

  சொல்லி இருக்கும் உணவு வகைகள் எல்லாம் எனக்கும் ஒரு பார்சல்.... :)

  ReplyDelete
  Replies
  1. பசியறியாக் கனவொன்றுக்குக்
   காத்திருப்பாய் கண் துஞ்சி!

   பாசத்தாயின் ருசியான கனவு !

   Delete
  2. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

   Delete
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   Delete
 2. வித்தியாசமான கவிதை... சொற்கள் வசீகரம் செய்கின்றன... பாராட்டுக்கள்... (பசிக்க வைத்ததோ உண்மை)

  பகிர்வுக்கு நன்றி… தொடருங்கள்.. (T.M. 2)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 3. Anonymous8/8/12 12:15

  நாவிலும் கண்ணிலும் நீர் ஊறச் செய்த பாடல் !

  ReplyDelete
  Replies
  1. ஒற்றை வரியில் கவிதையின் ரசனையையும் உள்ளத்தின் நெகிழ்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்திவிட்டீர்கள். நன்றி ஸ்ரவாணி.

   Delete
 4. ஒரு தாயின் மனதில்
  தன் குழந்தைக்காக என்னவெல்லாம்
  செய்துகொடுக்க ஆசை உள்ளதென்று
  அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..
  ஏழ்மையை உரத்து உரைக்காது..

  இன்று உள்ளதை
  இயல்பாக ஏற்றுக்கொள்
  இனியொரு காலம்வரும்
  இன்றுமட்டும் பொறுத்துக்கொள்

  என்ற மன நிலை என்னுள் நிலையாகி போனது சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அற்புதமான விமர்சனத்துக்கும் மனம் நிறைந்த நன்றி மகேந்திரன்.

   Delete
 5. (கவிதை என்பதால்) அசுவாரசியமாக வாசித்து வந்தவள், கடைசிப் பத்தியைப் படித்து ஆடிப்போய்விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நெகிழ்வான மனத்தின் வெளிப்பாட்டுக்கும் நன்றி ஹூஸைனம்மா.

   Delete
 6. கீதா எப்படி முடிகிறது இப்படி சிந்திக்க ?

  ஆரம்பம் ஒரு தாயின் துடிப்பு
  குழந்தைக்கான உணவூடலில்
  உள்ளதை படம்பிடித்து காட்டுகிறது ......

  கடைசி வரிகள் இயலாமையின் ஏக்கம் நெஞ்சை ரணபடுத்துது ......
  பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கவிதையின் ஆழம்புரிந்து இட்டப் பின்னூட்டத்துக்கும் நன்றி சரளா.

   Delete
 7. தாயின் பாசத்தின் அழகை ரசித்து வந்த எனக்கு கடைசி வரிகளில் இயலாமையைச் சொல்லி மனதைக் கனக்க வைத்து விட்டீர்கள். தோழி கோவை மு.சரளா கேட்ட அதே கேள்விதான் என்னுள்ளும்... கீதா, எப்படி முடிகிறது இப்படியெல்லாம் சிந்திக்க?

  ReplyDelete
  Replies
  1. தான் கேட்டது கிடைக்காவிடில், சாப்பாடு வேண்டாமென்று கோபித்துக்கொண்டு பிள்ளைகள் தூங்குவதாய்ப் பாசாங்கு செய்யும்போது அம்மா சமாதானப்படுத்துதல் இயல்பு. அதுவே இயலாத தாயாய் இருந்தால்... அந்த எண்ணமே இப்படி எழுதத் தூண்டியது. கருத்துக்கு மிகவும் நன்றி கணேஷ்.

   Delete
 8. இறுதி வரிகள் தாய்ப்பாசத்தை உறுதி செய்கின்றன.இந்தத் தாய் நல்ல வேளையாக பிட்சா, ஸ்பிரிங் ரோல் பற்றி எதையும் கூறி ஆசை காட்டவில்லை.
  மீசல் சே காந்தி

  ReplyDelete
  Replies
  1. அவள் இன்னும் அந்த உலகம் பற்றி அறிந்திருக்கவில்லையென்று நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

   Delete
 9. பாசமுடன் நான் கொடுக்கப்
  பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
  பசியறியாக் கனவொன்றுக்குக்
  காத்திருப்பாய் கண் துஞ்சி!//

  ஏழைத்தாயின் ஆதங்கம் நிறைந்த கவிதை கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.
  ஏழைத்தாய் சொன்ன உணவுகள் அத்தனையும், அந்த பிஞ்சுக்கு கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மனம் நெகிழ்ந்த கருத்துக்கும் நன்றி மேடம். தங்கள் வேண்டுதலுக்குக் கூடுதல் நன்றி.

   Delete
 10. பாசமுடன் நான் கொடுக்கப்
  பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
  பசியறியாக் கனவொன்றுக்குக்
  காத்திருப்பாய் கண் துஞ்சி!

  ஒட்டிய வயிறோடு பசிக்கு அழும் குழந்தையின் முகமும் அழக்கூட முடியாத தாயின் முகமும் கண் முன் வந்து போகிறது சகோ.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். ஏற்றப் படம் கிடைக்காததால் இப்படத்தைப் பதிவேற்றினேன். இன்னும் பொருத்தமான படம் கிடைத்திருந்தால் கவிதையின் பலம் இன்னும் கூடியிருக்கும். கருத்துக்கு நன்றி சசிகலா.

   Delete
 11. கடைசி நான்கு வரிகள் என்னை கதிகலங்கச் செய்து விட்டது!

  ReplyDelete
  Replies
  1. வறுமையின் பிடியில் அகப்பட்டக் குழந்தைக்கு அம்மா இப்படிதானே ஆசை காட்டி கஞ்சி ஊற்றுவாள். கருத்துக்கு நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 12. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் என்ற போக்கில் போன கவிதை கடைசியில் கலங்கடித்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி ஐயா.

   Delete
 13. வாரி வளைத்துத் தின்றிட நீயும்
  வயிறு நிறைந்து உவப்பேன் நானும்.
  ஆசைப்படும் அத்தனையும் அல்லது
  அதில் ஒன்றேனும் கிடைக்கும் வரை...


  பாசமுடன் நான் கொடுக்கப்
  பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
  பசியறியாக் கனவொன்றுக்குக்
  காத்திருப்பாய் கண் துஞ்சி!

  மனம் கணத்த வரிகள்....

  இயலாமை ஏக்கத்தை
  இசைபாடி துாங்க வைக்கும்
  இனிய தாய்மையின் தாலாட்டு இது!

  வணங்குகிறேன் கீதமஞ்சரி அக்கா.

  ******************

  ReplyDelete
  Replies
  1. இனிய தாய்மையின் மட்டுமல்ல, இயலாத தாய்மையின் தாலாட்டும் இதுவே. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அருணாசெல்வம்.

   Delete
 14. பாசமுள்ள வரிகள்! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 15. “ பூஞ்சிட்டு கன்னங்கள்
  பொன்மணி தீபத்தில்
  பால் பொங்கல்
  பொங்குது கண்ணீரிலே

  பொங்கல் பிறந்தாலும்
  தீபம் எரிந்தாலும்
  ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
  இங்கு
  ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

  செல்வர்கள் வீட்டினில்
  சீமான் பிள்ளைக்கு
  பொன் வண்ணக் கின்னத்தில்
  பால்கஞ்சி

  கண்ணீர் உப்பிட்டு
  காவிரி நீரிட்டு
  கலயங்கள் ஏங்குது
  சோறின்றி
  ஏழைகள் ஏங்குது
  வாழ்வின்றி

  கண்ணுறங்கு...
  கண்ணுறங்கு
  பொன்னுலகம் மண்ணில்
  காணும் வரை

  கண்ணுறங்கு...
  கண்ணுறங்கு...”

  இந்த வரிகள் தந்த வலிக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்தக் கவிதை. வாழ்த்துக்கள் தோழர்

  ReplyDelete
  Replies
  1. கேட்டாலே கண்ணிறைக்கச் செய்யும் ஒரு வலிய பாடலுடன் இக்கவிதையை ஒப்பிட்டத் தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி நண்பரே.

   Delete
 16. நிறையச் சாப்பாட்டைக் காட்டி மறைச்சமாதிரிக் கிடக்கு கீதா.கடைசி வரி கலங்க வைத்துவிட்டது !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்தானப் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹேமா.

   Delete
 17. பாசமுடன் நான் கொடுக்கப்
  பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
  பசியறியாக் கனவொன்றுக்குக்
  காத்திருப்பாய் கண் துஞ்சி!//

  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வழக்கம்போல் தாங்கள் அளிக்கும் உற்சாகப் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ரமணி சார்.

   Delete
 18. பாசமுடன் நான் கொடுக்கப்
  பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
  பசியறியாக் கனவொன்றுக்குக்
  காத்திருப்பாய் கண் துஞ்சி!

  அருமை அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி முனைவரே.

   Delete
 19. ப‌ட்டிய‌லிட்ட‌ வ‌கைக‌ளெல்லாம் பாச‌முட‌ன் த‌ந்த‌ ப‌ழ‌ங்க‌ஞ்சியை விஞ்சிடுமோ...! தாய்மை எப்போதும் இருப்ப‌தில் சிற‌ப்பையே தேடுகிற‌து ... சூழ‌லின் உவ‌ர்ப்போ ... சொல்லொன்னா வ‌லியை ஏற்ப‌டுத்தும் வ‌ரிக‌ள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி நிலாமகள்.

   Delete
 20. பாசத்தோடு சேர்ந்து உணவும்/நல்ல ஆரோக்கியமான கவிதை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி விமலன்.

   Delete
 21. Anonymous10/8/12 07:08

  ''...பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
  பசியறியாக் கனவொன்றுக்குக்
  காத்திருப்பாய் கண் துஞ்சி!...''

  அருமையான வரிகள்.
  பலகாரவகையும் சிறப்பு பாசத்துடன்.
  பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டி இட்டக் கருத்துரைக்கும் நன்றி தோழி.

   Delete
 22. கலங்கவைக்கிறது கவிதை...பாராட்டுக்கள் கீதா.

  ReplyDelete
  Replies
  1. வெகுநாட்களுக்குப் பின்னர் வந்திருக்கும் தங்களை அன்போடு வரவேற்கிறேன். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சுந்தரா.

   Delete
 23. தாயின் ஏக்கத்தையும் பாசத்தையும் கலக்கத்தையும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் கீதா இந்தக் கவிதையில்! தலைப்பும் மிக அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மனோ மேடம். தலைப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி.

   Delete
 24. வித்யாசமான நல்ல கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க எல்.கே.

   Delete
 25. தாய்மையில் அழகு மிளிரும் கவிதை! அந்தக் கவித்துவம் ஒரு கலையாகப் பரினமித்திருக்கிறது உங்களிடம்.

  கனவுக்கும் நனவுக்கும் இடையே தான் எத்தனை பெரிய இடைவெளி?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கவிதை பற்றிய சிலாகிப்புக்கும் மிகவும் நன்றி மணிமேகலா.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.