27 November 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (25)



சுந்தரி தனக்கென்று அந்த வீட்டில் மட்டுமல்ல, நாகலட்சுமியின் மனதிலும் ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டாள். இப்போதெல்லாம் நாகலட்சுமிக்கு விக்னேஷை  விடவும் சுந்தரியின் தயவே அதிகம் தேவைப்பட்டது.
அந்தரங்கமாய் தன் உடல் வேதனைகளை அவளிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சுந்தரியும் அவருக்குத் தன்னாலான உதவிகள் செய்தாள்.
நாகலட்சுமிக்கு ஷவரில் குளிக்கப்பிடிக்காது. குவளையில் முகர்ந்து ஊற்றிக்குளிப்பதே விருப்பம். அவருக்கு வசதியாக முக்காலியொன்றில் வெந்நீர் அண்டாவை வைத்து அவர் நீரை முகர்ந்து ஊற்றிக்குளிக்க உதவினாள். மேற்கத்திய கழிவறையானாலும் ஒவ்வொருமுறையும் உட்கார்ந்து எழ அவர் பட்ட சிரமத்தை அறிந்து, பிடித்துக்கொண்டு எழ உதவியாக தலைக்குமேல் உறுதியான கயிற்றுப்பிடிமானம் ஒன்றை ஏற்பாடு செய்தாள். இத்தனை நாள் தங்களுக்கு இந்த உபாயம் தோன்றவில்லையே  என்று நாகலட்சுமியும் விக்னேஷும் அதிசயித்தனர்.  
சுந்தரி தன்னை ஒரு வேலைக்காரியாய் நினைத்திருந்தாலும், நாகலட்சுமி அவளைத் தன் மகளாய் தோழியாய் எண்ணத் தொடங்கியிருந்தாள்.  விக்னேஷுக்கு அம்மாவின் இந்த புதிய அவதாரம் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
சுபா, எந்நேரமும் விக்னேஷைப் பற்றியிருந்தாள். இதனால் நாகலட்சுமிக்கு கோபம் உண்டாகவில்லை என்பதும் விக்னேஷை ஆச்சர்யப்படுத்திய இன்னுமொரு விஷயம்.
இதற்கெல்லாம் காரணம் சுந்தரிதான் என்பது தெரியவந்தபோது, சுந்தரிக்கு மனமார நன்றி சொன்னான். இத்தனைக்காலம் தானும் மருந்து மாத்திரைகளும் செய்ய முடியாததை சுந்தரி இந்த ஒரு மாதத்தில் செய்துவிட்டாளே என்று வியந்தான்.
சுந்தரிக்கு நாகலட்சுமியின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதாயிருந்தாலும், அவள் இன்னமும் சற்று எச்சரிக்கையுடனேயே இருந்தாள். நாகலட்சுமியைக் கேட்காமல் குழம்புக்கு கறிவேப்பிலையும் கிள்ளிப்போடுவதில்லை என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள்.
நாகலட்சுமியே ஒரு கட்டத்தில் சலித்துக்கொண்டார்.
"என்ன பொண்ணு நீ? இதுக்கெல்லாமா என்கிட்ட அனுமதி கேப்பாங்க? இவ்வளவு நாள் பழகியிருக்கேல்ல....? நீயே முடிவெடுத்து செய்யி!"
சுந்தரிக்கு எதுவும் செய்யத் தெரியாமல் இல்லை. அந்த வீட்டில் சுந்தரியின் வருகையால் நாகலட்சுமியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாய் அவர் எண்ணிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள்.
நாகலட்சுமிக்கு தன்னால் வேலைகளை செய்யமுடியவில்லை என்ற சுயபச்சாதாபம் இருந்துகொண்டிருந்ததால், எல்லா வேலைகளையும் சுந்தரி செய்யும்போது அவருக்கு அந்த எண்ணம் தீவிரமாய் வந்துவிடக்கூடாது என்று பயந்தாள். அதனால் சுந்தரி வேலை செய்யும்போது, சுபாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர் விருப்பமில்லாமலேயே அவரிடம் தந்தாள்.
சுபாவின் விஷயத்தில் முதலில் அவர் அவ்வளவாய் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், நாளடைவில் சுபாவின், துறுதுறுப்பும், பொக்கைவாய்ச்சிரிப்பும் அவரைக் கவர்ந்துவிட்டன.
சுபா அப்போதுதான் குப்புற விழப் பழகியிருந்தாள். அதனால் எதிர்பாராத நேரத்தில் குப்புற விழுந்து மூக்கு அடிபட்டுத் துடிப்பாள். சிலசமயம் தொடர்ந்தாற்போல் கொஞ்ச நேரம் குப்புறப்படுத்திருந்துவிட்டு வலியெடுத்து அழுவாள். அவள் விழித்திருக்கும்போது, யாராவது ஒருவர் அவள் கூடவே இருந்து கண்காணிக்க வேண்டியிருந்தது. அதனால் சுந்தரி, எப்போதும்  நாகலட்சுமியின் அருகில்  தலையணைகளை பரப்பி அவளைப் படுக்கவைத்துவிடுவாள்.
படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கும் நாகலட்சுமியின் கவனத்தைக் கவர சுபா என்னென்னவோ பிரயத்தனங்கள்  செய்வாள்.
'ஆங்....ஊங்....' என்று ஏதோ பேசுவாள். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…………’ என்று எச்சிலைத் தெளிப்பாள். 'கெக்க்கெக்க்க்' என்று தானே சிரிப்பாள். கையில் கிடைத்ததை வாயில் வைத்து வாயிலெடுப்பாள்.
நாகலட்சுமியின் கவனத்தை எப்படியும் தன்பக்கம் திருப்பிவிடுவாள். அவரும் இவளுடன் கொஞ்சிப் பேசத்தொடங்க, கண்ணுக்குத் தெரியாத அன்புச்சங்கிலியொன்று  இருவரையும் பிணைக்கத் தொடங்கியது.
"சுந்தரி, விக்னேஷுக்கு விவா கலந்து கொடுத்திட்டியாம்மா?"
"குடுத்திட்டேம்மா....உங்களுக்குக் கொஞ்சம் பால் கொண்டுவரவா?"
"எனக்கெதுக்கு அதெல்லாம்? "
"அன்னைக்கு டிவியில டாக்டர் சொன்னாரில்ல...எலும்பு வலுவா இருக்கணும்னா தெனமும் பால் சேத்துக்கணும்னு! உங்களுக்குதான் அடிக்கடி மூட்டுவலி வருதே! பால் குடிச்சா சரியாயிடுமில்ல...."
நாகலட்சுமி சிரித்தார்.
"நல்ல பொண்ணு! இது பால் குடிச்சு சரி பண்ற நோயில்ல. மூட்டு தேஞ்சுபோயிடுச்சி. ஆபரேஷன் பண்ணி செயற்கை மூட்டுப் பொருத்தணும். லட்சரூபா ஆகும். எல்லாம் அனுபவிக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு."
"அப்படியா? ஆபரேஷன் பண்ணிதான் சரியாவுமா?"
"ஆமாம்! ஆபரேஷனுக்கப்புறம் குனிய நிமிர முடியும்கிறாங்க, கீழ கூட உக்கார முடியுமாம்."
"அப்ப பண்ணிக்க வேண்டியதுதான?"
"பண்ணிக்கலாம், பாழாப்போன சர்க்கரை வியாதி இல்லைனா...."
நாகலட்சுமி சலித்துக்கொண்டார்.
"கவலப்படாதீங்கம்மா! சீக்கிரம் குணமாகி நல்லா நடமாட ஆரம்பிச்சிடுவீங்க."
சுந்தரி அவரைத் தேற்றினாள்.
"ஹும்! அந்த நம்பிக்கையிலதான் இருக்கேன்.
தைலத்தை எடுத்து அவர் கால்களில் தடவி நீவ ஆரம்பித்தாள். நாகலட்சுமி மறுக்கவில்லை. அப்போதைக்கு அவருக்கு அவளது உதவி தேவைப்பட்டது.
நாகலட்சுமியின் கால்களை தன் மெல்லிய கரங்களால் அழுந்தப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள், சுந்தரி. விக்னேஷ் பிடிப்பதற்கும் இவள் பிடிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. விக்னேஷ் எவ்வளவு மெதுவாகப் பிடித்தாலும் அதில் லேசான முரட்டுத்தனம் வெளிப்படும். இவளிடம் அது இல்லாததால் இதமாக இருந்தது.
நாகலட்சுமிக்கு சுந்தரியைப் பார்க்க பாவமாய் இருந்தது. இந்தப் பெண் தன் அன்பால் என்னை வசியம் செய்துவிட்டாளே? இவளுடைய களங்கமற்ற அன்புக்கு ஈடாய் நான் எதைத்தான் தருவது? விக்னேஷ் சொன்னதுபோல் இவளுக்கும் குழந்தைக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத்தருவதே என்னால் முடிந்த கைம்மாறு!
சுந்தரி, நீ எனக்கு மகளாய் பிறந்திருக்கவேண்டியவள்! உன்னைத் தவறாய் நினைத்த என்னை மன்னிச்சிடு, அம்மா!
நாகலட்சுமியின் மனம் சுந்தரியின் காலடியில் கிடந்து மன்றாடியது.
ஆனால் சுந்தரியின் மனமோ பிரபுவின் நினைவுகளில் தஞ்சமடைந்திருந்தது. இப்படிதான் அவனும் அவளுக்கு இதமாகக் கால்பிடித்துவிடுவான்.
மாதம் ஏற ஏற, வயிற்றின் பாரம் தாங்காமல் கால்வலி வந்து மிகவும் சிரமப்பட்டாலும், அவள் அதை வெளியில் சொல்லமாட்டாள். பிரபு தூங்கியதும் அவனைறியாமல் தைலம் எடுத்துத் தானே தடவிக்கொள்வாள். வாசம் உணர்ந்து விழித்துவிடுவான். பின் என்ன? அவள் தடுக்கத் தடுக்க, அவள் தூங்கும்வரை அவளுக்குக் கால்பிடித்துவிடுவான்.
எத்தனை அன்பு வைத்திருந்தான்? இவ்வளவு சீக்கிரம் போவோம் என்று தெரிந்துதான் இருந்த கொஞ்ச நாளிலேயே திகட்டத் திகட்ட அன்பைப் பொழிந்தானோ? அந்த அன்புக்கு ஈடே கிடையாது. னி ஒருவர் என் வாழ்வில் அதே அன்பைத் தரவே முடியாது.
பிரபுவின் நினைவுமின்னல் தாக்கியதும், சுந்தரி நிலைகுலைந்துபோனாள். சட்டென்று விழிகள் கண்ணீரை உகுத்தன. நாகலட்சுமி திடுக்கிட்டார்.
"என்னம்மா, சுந்தரி?"
"ஒண்ணுமில்லைம்மா...அவர் நெனப்பு வந்திடுச்சு!"
"சுந்தரி, உன் வேதனையை என்னால் முழுசாப் புரிஞ்சுக்க முடியுதும்மா....நானும் ஒரு காலத்தில் உன் நிலையில் இருந்தவதான். என்னைப் பத்திதான் உனக்கு சொல்லியிருக்கேனே! ஆனா.... நீ தைரியமான பொண்ணு!  நீயே இப்படி கலங்கலாமா? கவலைப்படலாமா? "
"உங்க ஆதரவு இருக்கிறவரைக்கும் நான் கவலைப்படமாட்டேன்மா!"
கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துசென்றாள்.
அடுத்தநாளே சுந்தரியின் கவனம்  நாகலட்சுமியின் உணவு விஷயத்தில் நிலைகொண்டது. விக்னேஷுக்குப் பிடித்தது, நாகலட்சுமிக்கு ஏற்றது என சமையலில் இருவிதம் செய்தாள். நாகலட்சுமிக்கென்று செய்யும் சமையலில் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், தேங்காயையே கண்ணில் காட்டாமல், உப்பின் அளவைக் குறைத்து என்று ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தாள்.
இனிப்பு செய்தாலும் இரண்டாகச் செய்தாள். செயற்கை சர்க்கரை இட்டு நாகலட்சுமிக்கென்று தனியே செய்தாள். இதனால் சுந்தரிக்கு வேலை இரட்டிப்பானாலும், அலுப்பில்லாமல் செய்தாள்.
சுந்தரி பட்ட பாட்டுக்கு கைமேல் பலன் கிடைத்தது. மாதாந்திர ரத்தப் பரிசோதனையின் முடிவைப் பார்த்து டாக்டரே ஆச்சரியப்பட்டார். "என்ன மாயாஜாலம் செஞ்சீங்க?" என்றார்.
நாகலட்சுமி சுந்தரியைக் கைகாட்ட, டாக்டர் அவளைப் பெரிதும் பாராட்டினார். தொடர்ந்து சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் விரைவிலேயே அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுப் பொருத்திவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாகலட்சுமி சுந்தரியின் கைகளைப் பற்றிக் கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார்.
******************************************************************************
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.
மு.வ உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
-----------------------------------------
தொடர்ந்து வாசிக்க

23 comments:

  1. எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது
    எத்தனை அனுபவப் பூர்வமான பழ்மொழி
    சுந்தரி ஆனானப்பட்ட நாகலெட்சுமியையே
    கரைத்துவிட்டாரே
    கதை இயல்பாகவும் அருமையாகவும் போகிறது
    தொடர வாழ்த்துக்கள்
    (தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் த.ம 1 )

    ReplyDelete
  2. கதை நல்லாயிருக்கு. ஆனா தொடர்ச்சியாக படிக்கவில்லை.

    ReplyDelete
  3. வணக்கம் தங்களின் இந்தப் பதிவை ரசித்தாலும் தொடர்ந்து படிக்க எனது நேர காலம் இடம் தருமோ தெரியல...

    மன்னிக்கணும்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கடவுள்களை தொலைத்து விட்டோம்

    ReplyDelete
  4. க‌தையோட்ட‌ம் ஆற்றொழுக்கு போல‌ வெகு இய‌ல்பாய். க‌தைமாந்த‌ரின் உண‌ர்வுக‌ளை துல்லிய‌மாக‌ வெளிப்ப‌டுத்துகிறீர்க‌ள்! அத‌னால் க‌தையின் ப‌ரிமாண‌ம் சிற‌ப்பாகிற‌து.எடுத்தெழுத‌ நிறைய‌ இட‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. நேர‌மின்றி மொத்த‌மாய் ஒரு வார்த்தையில் சொல்கிறேன். தொட‌ருங்க‌ள் தோழி; தொட‌ர்கிறோம் சுக‌மாய்.

    ReplyDelete
  5. கீதா...இப்போதான் உங்கள் தலைப்போடு ஒன்றுகிறது கதை !

    ReplyDelete
  6. கதை நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  7. நாகலட்சுமியின் கவனத்தை எப்படியும் தன்பக்கம் திருப்பிவிடுவாள். அவரும் இவளுடன் கொஞ்சிப் பேசத்தொடங்க, கண்ணுக்குத் தெரியாத அன்புச்சங்கிலியொன்று இருவரையும் பிணைக்கத் தொடங்கியது.

    தொடர்ந்து படிக்கும் எங்களையும்..

    ReplyDelete
  8. கதை நல்லாருக்கு , ஆனா ஆங்காங்கே சில இடங்களீல் வசனங்களில் செயற்கை இழை தட்டுது

    ReplyDelete
  9. சோகத்தின் உருவாக சுந்தரியின் பாத்திரப் படைப்பு
    எனக்கு அவள் கதை மாந்தராக கண்ணுக்குத் தெரிய
    வில்லை நம்மில் ஒருவராகவே உணர்கிறேன்
    அந்த அளவுக்கு தடையின்றி கொண்டு செல்லும்
    நடையும் அருமையோ அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கும் அன்பு நிறைய இடங்களில் இல்லாமல் போவதுதான் உறவுகளின் பிரிவிற்கு காரணம். கதை அருமையாக நகர்கிறது.

    ReplyDelete
  11. இயல்பான நடையில் செல்கிறது கதை. (தொடர்ந்து படிக்க முடியுமா என்பதுதான் புரியவில்லை). வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சொல்ல மறந்து விட்டேனே! திருக்குறளும் பொருளும் படித்தேன். அவ்வப்போது முடியும் போதெல்லாம் குறளை நினைவுபடுத்துவது நல்லதே.

    ReplyDelete
  13. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கதை. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. சகோதரி!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  14. விவா இருந்த காலத்தில் நடந்த கதையின்னு கண்டுபிடிச்சிருக்கேன்.சரியா?

    விக்னேஷ் அம்மா இவ்ளோ மாறியதும்,சுந்தரியின் பொறுமையும் அன்பும் சபாஷ் சொல்ல வைக்கிறது

    ReplyDelete
  15. தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குப்பதிவுக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  16. தொடர்கதைகளைப் படிக்க பொறுமையும் நேரமும் தேவை. உங்களால் முடியும்போது படிங்க. இந்தக்கதை இன்னும் சில பகுதிகளில் முடிந்துவிடும். வருகைக்கு நன்றி விச்சு.

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதிசுதா. நேரமிருந்தால் படிங்க.

    ReplyDelete
  18. ஆழ்ந்த விமர்சனமிட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  19. தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கு நன்றி ஹேமா.

    ReplyDelete
  20. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரெவெரி.

    அருமையான சிறுகதைகளை அசத்தலான நடையில் எழுதும் தங்களிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்வாயுள்ளது ரிஷபன் சார்.

    ReplyDelete
  21. ரொம்ப நாளுக்கப்புறம் வந்திருக்கீங்க. உங்க கருத்தை இனி கவனத்தில் வச்சுக்கறேன் செந்தில் குமார்.

    ReplyDelete
  22. தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி ஐயா.

    ஒரு வாக்கியத்துக்குள் எத்தனை அழகான கருத்து. தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாகம்பரி.

    வருகைக்கும் குறள் பற்றிய கருத்துக்கும் மிகவும் நன்றி வியபதி. நேரம் கிடைக்கும்போது படிங்க.

    ReplyDelete
  23. முதல் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி தனபாலன். தங்கள் தளம் பயனுள்ளதாய் உள்ளது.

    எந்த அளவுக்கு கருத்தூன்றிப் படிக்கிறீங்கன்னு புரியுது. தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி ஆச்சி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.