26 February 2020

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து...


இந்தியாவில் குறிப்பிட்ட நிலப்பகுதியில் டன் கணக்கில் தங்கத்தின் இருப்பு உள்ளதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கம் தங்கம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் தங்கம் மற்றும் இதர கனிம வளங்கள் குறித்து எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. 2018-இல் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியின் எழுத்தாக்கத்தை இங்கே பகிர்கிறேன்.

&&&&& 

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து 
காதல் என்னும் சாறுபிழிந்து
தட்டித்தட்டி சிற்பிகள் செய்த உருவமடா

காதலன் காதலியை வர்ணிக்கும் இந்தக் கணக்குப்படி ஒரு பெண்ணை உருவாக்கவேண்டுமெனில் எத்தனை கிலோ கட்டித்தங்கம் தேவைப்படும்.. அப்படியெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை, ஏதோ கவித்துவத்துக்காக கவிஞர் சொல்லியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் கிலோ கணக்கில் கட்டிக்கட்டியாக தங்கம் கிடைக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் அது சாத்தியமே.

ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிப்பவை தங்கச்சுரங்கங்கள். தங்கச்சுரங்கங்களில் தங்கம் மண்ணோடு மண்ணாக கலந்து பொடியாகவோ துகள்களாகவோ, கிடைப்பது இயல்பு. மிஞ்சிப்போனால் 2 கிலோ, 3 கிலோ என்ற அளவில் கிடைக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் தூக்கமுடியாத எடையுடன் கட்டிக்கட்டியாகக் கிடைத்தது. ஆம். ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் தனித்துவமானவை golden nuggets எனப்படும் தங்கக்கட்டிகள்.



தங்கம் மட்டுமாவைரம், வெள்ளி, யுரேனியம், அலுமினியம், இரும்பு, ஈயம், துத்தநாகம், செம்பு, நிக்கல், குரோமியம், லித்தியம், கோபால்ட், படிகப்பாறைகள் முதல் நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு வரை ஆஸ்திரேலிய மண்ணை அகழ அகழக் கிடைக்கும் கனிமங்கள் ஏராளம்.

1851-ல் தொடங்கியது Gold rush எனப்பட்ட தங்க ஓட்டம். அதை ஓட்டம் என்பதை விடவும் பாய்ச்சல் எனலாம். உலகெங்கிலுமிருந்து ஏராளமான மக்கள் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் குவிந்தனர். தங்கம் முதலில் கண்டறியப்பட்டது பல்லாரட் பகுதியில்தான். தோண்டுமிடமெல்லாம் தங்கம் அகப்பட்டது. மவுன்ட் அலெக்ஸாண்டர் பகுதியோ முன்னதை விடவும் அதிகமான தங்கத்தை வாரிவழங்கியது. இந்தப்பகுதியிலிருந்து மட்டும் ஏழு மாதங்களில் 1200 கிலோ எடையுள்ள தங்கம் சந்தைக்கு அனுப்பப்பட்டது. 1856-ல் மட்டும் ஆஸ்திரேலியாவில் வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு சுமார் 97 டன்.


இன்றைய நிலவரப்படி உலகில் பாக்ஸைட், நிக்கல், ஓபல் கற்கள் உற்பத்திகளில் முதலிடத்திலும், தங்கம், இரும்பு உற்பத்திகளில் இரண்டாமிடத்திலும், வைரம், யுரேனியம், இயற்கைவாயு உற்பத்திகளில் மூன்றாமிடத்திலும் ஆஸ்திரேலியா இருப்பதைக் கொண்டே இம்மண்ணின் கனிம வளத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறதல்லவா? ஆஸ்திரேலியாவின் சுரங்கங்களில் வேலைவாய்ப்பு மூலம் சுமார் 1,30,000 குடும்பங்கள் நேரடிப்பயன் பெறுகின்றன.




தங்கம் உற்பத்தியில் சீனாவுக்கு (400 டன்) அடுத்த இடத்தில் வருடத்துக்கு சுமார் 312 டன் அளவென்னும் சிறப்போடு ஆஸ்திரேலியா இரண்டாமிடத்தில் உள்ளது. விக்டோரிய மாநிலத்தின் பல்லாரட்டும் பென்டிகோவும் ஆஸ்திரேலியாவின் தங்க நகரங்கள் என்ற பெருமைக்குரியவை

Replica of Welcome nugget

உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி முதலில் பல்லாரட்டில்தான் கிடைத்தது. 1858-ல் கண்டெடுக்கப்பட்ட அதன் எடை 69 கிலோ. இந்தக் கட்டித் தங்கத்தை எந்த சிற்பியும் தட்டித்தட்டி பெண்ணுருவாக்கவில்லை. முதலில் கிடைத்த தங்கக்கட்டி என்பதால் அதை வரவேற்கும் முகமாக அதற்கு Welcome nugget என பெயரிடப்பட்டது. அதுவரை இவ்வளவு பெரிய தங்கக்கட்டியை எவருமே பார்த்ததில்லை என்பதால் அதைப் பார்த்த முதல் இரண்டு தொழிலாளிகளும் நம்பமுடியாத அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டனராம். இயற்கையாகக் கிடைத்த முதல் பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பைப் பெற்ற அது, லண்டன் சந்தையில் உருக்கப்பட்டு நாணயங்களாக மாற்றப்பட்டதாம். ஆனால் அதற்குமுன் அச்சுஅசலாக அதன் நகலுரு தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டது.




அதன்பின் பதினொரு வருடங்கள் கழித்து 1869-ல் விக்டோரியா மாநிலத்தின் டுனாலி பகுதியில் மீண்டும் அதுபோல ஆனால் அதை விடவும் மூன்று கிலோ அதிகமாக 72 கிலோ எடையில் பூமிக்குக் கீழே கையெட்டும் தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற பெயரை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அதற்கு welcome stranger nugget என்று பெயரிடப்பட்டது. ஆனால் அதன் அருமை உணரப்படுமுன்னரே உருக்கப்பட்டு தங்கப்பாளமாக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பது ஏமாற்றம் தரும் செய்தி. உருக்கினால் பெறப்படும் தங்கத்தின் மதிப்பு மூலத்தங்கத்துக்கு இருக்காது எனினும் இப்படி பெருங்கட்டியாக மண்ணிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் அரிய பொருள் என்பதால் அது நிச்சயம் விலைமதிக்கவியலாத ஒன்றுதான்.


Hand of faith

மூன்றாவது இடத்தைப் பெறுவது 1980-ல் விக்டோரியா மாநிலத்தின் Wedderburn பகுதியில் கண்டெடுக்கப்பட்ட hand of faith என்று பெயரிடப்பட்டுள்ள 27 கிலோ எடையுள்ள தங்கக்கட்டியாகும். இது கிடைத்த கதை மிக சுவாரசியம். நம்ப முடியாததும் கூட. மாங்கு மாங்கென்று இரவு பகலாக சுரங்கம் வெட்டித் தங்கம் தேடும் தொழில்முறைப் பணியாளர்களைத் தவிர்த்து, சுரங்கத்தொழிலில் அனுபவமும் பயிற்சியும் இல்லாத சிலரும் பொழுதுபோக்காகத் தங்கத்தேடலில் ஈடுபடுவதுண்டு. கைவிடப்பட்ட சுரங்கங்களிலும் மலையெனக் குவிக்கப்பட்ட மண்ணிலும் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடியலைவர். அப்படி ஒருவர் metal detector எனப்படும் உலோகத்தைக் கண்டறியும் கருவியைக் கொண்டு மண்ணை ஆராய்ந்துகொண்டு வந்தபோது ஓரிடத்தில் தங்கம் இருப்பதாக கருவி காட்ட, தோண்ட ஆரம்பித்தார். ஒரு அடிக்கும் குறைவான ஆழத்திலேயே 27 கிலோ எடையுள்ள இந்தப் பெரிய தங்கக்கட்டியைக் கண்டறிந்தார். இதுதான் அதிர்ஷ்டம் என்பது போலும். இன்னும் மூல வடிவம் சிதைவுறாமல் பாதுகாக்கப்பட்டுவரும் அது, பத்தாண்டுகளுக்கு முன்புதான் லாஸ் வேகாஸில் உள்ள கோல்டன் நக்கட் கஸீனோவுக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டதாம். இப்போது உருவளவில் மாறாதிருக்கும், இயற்கையாய்ப் பெறப்பட்ட தங்கக்கட்டிகளில் இதுவே மிகப்பெரியது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

 Holtermann with Holtermann's nugget 

இதற்கிடையில் 1872 இல் நியூ சௌத் வேல்ஸின் ஹாக்கின்ஸ் மலைப்பகுதியில் 286 கிலோ அளவிலான தங்கக்கட்டி கிடைத்தது. Holtermann’s nugget என்று பெயரிடப்பட்ட அது, அவ்வளவு பெரியதாக இருந்தும் உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பை இழந்தமைக்குக் காரணம், அதன் மொத்த எடையில் 32% அதாவது 93 கிலோ மட்டுமே சுத்தமான தங்கம், மற்றவையெல்லாம் குவார்ட்ஸ் கற்கள் என்பதால்.   

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில்மக்கள் பெருக்கத்தில்.. வாழ்க்கை முறையில்.. அரசியலில்.. என யாவற்றிலும் பெருந்தாக்கத்தை உண்டாக்கிய தங்க ஓட்டம் பற்றி சொல்லும்போது தங்கச்சுரங்கத் தொழிலாளிகள் நடத்திய யுரேகா போராட்டம் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது

தங்க ஓட்டம் ஆரம்பித்த பிறகு சுரங்கத்தொழிலாளிகளுக்கு சுரங்க வரி விதிக்கப்பட்டது. மாதம் 30 ஷில்லிங் என்பது தங்கம் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாமல் தெளிவற்ற எதிர்காலத்தை நோக்கி அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு எட்டாப்பணம். நான்கு மாதங்களில் அது 60 ஷில்லிங் என்றானது. மண்ணைத் தோண்டித் தோண்டி சுரங்க ஏற்றங்கால்களை இறக்கி இறக்கி தங்கம் கிடைக்காமல் வெற்றுக்கைகளோடு வேறிடம் தேடிக் களைத்து, வரிகட்டவும் வக்கற்றுத் தொய்ந்திருந்த ஏழைத் தொழிலாளிகளின் நெஞ்சம், வெடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தது. சுரங்க அனுமதிக்கான வரி ரசீதுகளோடு தொழிலாளிகளும் அரசால் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1854 அக்டோபர் ஆறாம் நாள் அரசுக்கெதிரான போராட்டத்துக்கான வித்து விதைக்கப்பட்டது. பல்லாரட்டின் யுரேகா விடுதியில் தங்கியிருந்த ஜேம்ஸ் ஸ்கோபீ என்ற சுரங்கத் தொழிலாளி மூன்று காவலர்களாலும், விடுதி முதலாளியாலும் அடித்துக் கொல்லப்பட்டார். நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செல்வாக்காலும் பண பலத்தாலும் விடுதி முதலாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

யுரேகா போராட்டம்

ஆத்திரமடைந்த சுரங்கத் தொழிலாளிகள் யுரேகா விடுதிக்கு தீவைத்துக் கொளுத்தினர். சுமார் பன்னிரண்டாயிரம் சுரங்கத் தொழிலாளிகள் ஒன்றிணைந்தனர். தங்களுக்கென ஒரு அமைப்பையும் கொடியையும் உருவாக்கினர். தங்கள் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இறுதிவரை உண்மையாகப் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுரங்க அனுமதித்தாள்கள் கொளுத்தப்பட்டன. இவர்களுக்கு எதிராக பெரும் காவல்படை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பெரிதாய் வெடித்தது. தொழிலாளர்கள் உருவாக்கி வைத்திருந்த தடுப்பரண்கள் தகர்க்கப்பட்டன. தடியடிகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. காயமுற்றவர்கள் மேலும் மேலும் காயமுறுவதைக் காணப்பொறுக்காதப் பெண்களும் போராட்டக்களத்தில் இறங்கினர். காயமுற்றவர்களைக் காப்பாற்றி அடிகளைத் தங்கள் உடல்களில் தாங்கிக்கொண்டனர். தொழிலாளிகள் மற்றும் அவர் குடும்பத்தார் மீதான இக்கடுமையான தாக்குதலை, கொஞ்சமும் மனித்தன்மையற்ற செயலென்று பிற்பாடு விசாரணைக் கமிஷன் கருத்துரைத்தது.

கிளர்ச்சியா புரட்சியா என்று இன்றும் வாதத்துக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும் இப்போராட்டத்தின் இறுதியில் கைதாகி தண்டனை அனுபவித்தவர்கள் அநேகம். போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் 27 பேர் என்று ஆவணப்பதிவில் இருந்தாலும் உண்மையான எண்ணிக்கையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. குறைந்தது 60 பேராவது இருக்கக்கூடும் என்கிறார் க்ளேர் ரைட் என்னும் வரலாற்று ஆசிரியர்.

மண்வளம் ஒரு பக்கம்.. மனிதவளம் மறு பக்கம்.. இரண்டுக்கும் இடையிலான பிணைப்பும் போராட்டமும் எல்லாக் காலத்தும் உண்டென்பதன் சாட்சியாய் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட கடந்தகால நிகழ்வது.   
&&&&   


11 February 2020

ஆஸ்திரேலிய நாடும் கொடிகளும் உருவான கதை

தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இவ்வாண்டும் 
SBS தமிழ் வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' தொடரில் 
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று
என் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. 
வாய்ப்பளித்த நண்பர் றைசெல் அவர்களுக்கு நன்றி.


ஜனவரி மாத நிகழ்ச்சியைக் கேட்க இங்கு சொடுக்கவும்.


நம்ம ஆஸ்திரேலியா.. இந்த உணர்வை நம்முள் விதைக்கும் பல விஷயங்கள் நம்மிடையே உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு முன் முதலில் ஆஸ்திரேலியா உருவான வரலாற்றைப் பார்ப்போம்.



கிட்டத்தட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் தழைத்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கென தனித்த மொழி, ஆன்மீக, கலாச்சார, பாரம்பரிய வாழ்க்கை முறைகளைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த மாபெரும் நிலப்பரப்புதான் இன்றைய ஆஸ்திரேலியா. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜார்ஜ் மன்னர்களின் காலனியாதிக்கப் பேராசையால் உள்நாட்டில் உருவான பொருளாதாரச்சரிவு பல படிக்காத ஏழைகளை திருடர்களாகவும் போராளிகளாகவும் மாற்றியது. அரசால் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாக் காரணத்தால் நாடுகடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு இங்கிலாந்து அரசு தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம்தான் ஐரோப்பிய கடல்வழி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மாபெரும் நிலப்பரப்பான ஆஸ்திரேலியா.



ஜனவரி 26,1788 இல்  இங்கிலாந்திலிருந்து கேப்டன் ஆர்தர் ஃபிலிப் தலைமையிலான முதல் கப்பல் தொகுதி பதினொரு கப்பல்களில் கிட்டத்தட்ட 1500 பேருடன் சிட்னி துறைமுகத்தில் வந்திறங்கியது. அவர்களில் பாதிப்பேர் , ஆண்களும் பெண்களுமான தண்டனைக் கைதிகள். கைதிகள் நிலச்சுவான்தாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையாட்களாக நியமிக்கப்பட்டனர். பண்ணைகளிலும் விவசாய நிலங்களிலும் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். பெண் கைதிகள் வசதி படைத்தவர்களுடைய வீட்டு வேலைக்காரிகளாகவும், தாதிக்களாகவும், மனைவிகளாகவும், ஆசை நாயகிகளாகவும் ஆக்கப்பட்டனர். மனிதாபிமானமற்ற முறையில் வழங்கப்பட்ட ஓய்வில்லாத பணிகளும் கால்வயிற்று உணவும் வேலைக்கார கைதிகளை முரடர்களாக மாற்றின. தப்பிக்கத்தூண்டின. தப்பித்த கைதிகள் மீண்டும் குற்றவாளிகளாக மாறினர். குதிரைகளைத் திருடுவது, பண்ணைகளைக் கையகப்படுத்துவது, கடைகளையும் வங்கிகளையும் கொள்ளையடிப்பது போன்ற பல்வேறு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டனர். சிலர் காடுகளில் தலைமறைவான வாழ்க்கையை மேற்கொண்டனர். பிடிபட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 

தண்டனைக்காலம் முடிந்து விடுவிக்கப்பட்ட கைதிகளோ புதிய நாட்டில் இடத்தில் புதிய வாழ்க்கையை எப்படி அமைத்துகொள்வது என்று புரியாமல் தவித்தனர்.  காடுகளில் வீடுகளை அமைத்துக் குடியேறினர். வயிற்றுப் பிழைப்புக்காக தங்களுக்குத் தெரிந்த ஆட்டு ரோமம் கத்தரித்தல், மந்தையோட்டுதல், ஆடுமாடு மேய்த்தல், குதிரைகளைப் பழக்குதல் போன்ற வேலைகளைச் செய்தனர். 

1850-களில் ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டுமிடமெல்லாம் தங்கம் அதுவும் கட்டி கட்டியாக கிடைக்கிறது என்று செய்தி பரவியவுடன்  பல்வேறு நாட்டினரின் பார்வையும் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது. வந்திறங்கிய பலதரப்பட்ட மக்களாலும் கலவையான கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கம் கொண்ட பன்முக கலாச்சார சமுதாயமாய் ஆஸ்திரேலியா உருவாகத் தொடங்கியது. தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறது. சரி, ஆஸ்திரேலியா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இங்கிலாந்துக்காரர்களுக்கு தெற்கில் இருப்பதால் இப்பெருநிலப்பரப்புக்கு Terra Australis என்று பெயரிடப்பட்டது. லத்தீனில் இதற்கு தென்பகுதி நிலப்பரப்பு என்று அர்த்தம். 

இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கல் இடப்பட்ட ஜனவரி 26-ஆம் நாளைத்தான் ஆஸ்திரேலிய தினமாக கொண்டாடுகிறோம். First landing day என்றும் foundation day என்றும் ஆரம்பத்தில் ஏடுகளில் குறிக்கப்பட்டது. 1838 ல் தான் அதிகாரபூர்வமாக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் அந்நாள் மகிழ்வோடு நினைவுகூரப்பட்டுவருகிறது. ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பொதுவிடுமுறைதினமான அந்நாளில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் இப்போதிலிருந்தே துவங்கிவிட்டிருக்கும். ஆண்டுதோறும் விழாக்கள், ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், விருந்துகள், விருதுகள் என அமர்க்களப்படும். ஆரம்பத்தில் அத்தனை தீவிர கொண்டாட்டம் இல்லை என்றாலும் ஆஸ்திரேலியா என்ற ஒன்றுபட்ட நாடானது முதல் ஆஸ்திரேலியர் என்ற உணர்வும் ஒன்றுபட்டு ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது. 

நாம் ஒன்றுபட்ட ஆஸ்திரேலியர் எனும் உணர்வைத் தூண்டும் வண்ணம் காணுமிடமெல்லாம் ஆஸ்திரேலியக் கொடிகள். வீடுகளில், கடைகளில், பெரு வளாகங்களில், வாகனங்களில், உடைகளில், தொப்பிகளில், குளிர்கண்ணாடிகளில், கைகளில், ஏன்.. முகங்களில் என எங்கெங்கும் கொடிவண்ணம் இழைத்து தங்கள் தேசப்பற்றை ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் வெளிப்படுத்தி மகிழ்வர். பொது இடங்களில் கூடி மகிழ்ந்து கொண்டாடுவர்.


ஆஸ்திரேலிய தேசியக் கொடி

ஆஸ்திரேலியக் கொடி என்பது என்ன? யூனியன் ஜாக் எனப்படும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கொடியையும் commonwealth நட்சத்திரத்தையும் southern cross எனப்படும் தென்சிலுவைக் கூட்டத்தையும் கொண்டது. இங்கிலாந்தின் saint George’s cross, ஸ்காட்லாந்தின் saint Andrew’s cross மற்றும் அயர்லாந்தின் Saint Patrick’s cross ஆகிய  மூன்று சிலுவைகளின் சங்கமம்தான் யூனியன் ஜேக். எழுமுனைகளைக் கொண்ட காமன்வெல்த் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஏழு மாகாணங்களைக் குறிக்கிறது. தென்கோளப் பகுதியின் வானியல் திசைகாட்டியான தென்சிலுவைக்கூட்டத்தின் ஐந்து பெரும் விண்மீன்களான alpha crucis, beta crucis, gamma crucis, delta crucis, epsilon crucis ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டம் என்பது ஐரோப்பியக் குடியேறிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் மண், மரபு, உயிர், வாழ்க்கைமுறை, குழந்தைகள் என பலவற்றையும் இழந்துவிட்டிருந்த  ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வகுடிகளுக்கு அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் கூட இந்நாளை துக்க நாள், ஆக்கிரமிப்பு நாள், உய்வு நாள் என்றெல்லாம் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தும் துக்கம் அனுசரித்தும் வந்தனர். ஆனால் காலப்போக்கில் நிலை மாறியது. இந்நாட்களில் ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்களில் பூர்வகுடிக் குழுக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல.. பன்னாட்டுப் பின்னணியைச் சார்ந்த அனைத்து மக்களும் தங்கள் கலாச்சார, இன, மொழி, நிற பேதமற்று ஆஸ்திரேலியர் என்ற உணர்வால் ஒன்றிணையும் திருநாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


ஹெரால்டு தாமஸ்

1995 முதல் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடிக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்ட மற்ற இரண்டு கொடிகளுள் ஒன்று பூர்வகுடிக் கொடி. இக்கொடியை உருவாக்கியவரும் இதன் காப்புரிமையாளருமான Harold Thomas மத்திய ஆஸ்திரேலியாவின் லுரிட்ஜா பூர்வகுடியைச் சேர்ந்தவர். இக்கொடி உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் கூட இதன் காப்புரிமை குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. இக்கொடியை உருவாக்கிய Harold Thomas அனுமதி பெறாமலேயே பல வணிகநோக்கு நிறுவனங்கள் இக்கொடியைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதாகவும் அதன் மகிமை அறியாமல் மிகச் சாதாரணமாக வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றில் சித்தரிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்டப் பொருட்களை ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைப்பொருட்கள் என்ற பெயரில் இக்கொடியின் அடையாளத்தோடு வியாபாரப்படுத்திய Birubi Art நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கில் 2.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. புனிதமாகவும் பெருமையாகவும் மதிக்கப்படும் இம்மண்ணின் அடையாளமான கொடியை தவறாகப் பயன்படுத்துவது பூர்வகுடி மக்களை அவமதிக்கும் செயலென்று ஹெரோல்டு தாமஸ் ஆதங்கிக்கிறார்.


ஆஸ்திரேலியப் பூர்வகுடிக் கொடி 

மேல்பாதியில் கருப்பும் கீழ்பாதியில் சிவப்பும் நடுவில் மஞ்சள் வட்டமும் கொண்ட இக்கொடி ஆரம்பகாலத்தில் நில உரிமைப் போராட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுக்கான அடையாளமாகிப்போனது. தற்போது முழுமையான சட்ட மற்றும் அரசியல் அந்தஸ்துள்ளதாக ஏற்கப்பட்டுள்ளது. கொடியின் கீழ்பாதி சிவப்பு ஆஸ்திரேலியாவின் செம்புழுதி மண்ணின் நிறத்தையும் மேல்பாதி கருப்பு இம்மண்ணில் வாழும் பூர்வகுடி மக்களின் நிறத்தையும் நடுவிலுள்ள மஞ்சள் வட்டம் உயிர்வாழ்வுக்கு ஆதாரமான சூரியனையும் குறிக்கிறது. மத்திய ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த ஹெரோல்டு தாமஸுக்கு காணுமிடமெல்லாம் காட்சியளித்த சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணங்களே இக்கொடி உருவாவதற்கான ஆதாரமெனக் குறிப்பிடுகிறார்.

தோரஸ் நீரிணைப்பு தீவுக் கொடி


ஆஸ்திரேலியாவின் அங்கீகாரம் பெற்ற மற்றொரு கொடி Torres Strait தீவுவாசிகளின் கொடி. இக்கொடியின் மேலும் கீழுமுள்ள பச்சை வண்ணம் தீவுகளின் பசுமையான நிலப்பகுதியையும், நடுவிலுள்ள நீலவண்ணம் சூழ்ந்திருக்கும் கடல் வண்ணத்தையும், கருப்புப் பட்டைகள் மக்களின் நிறத்தையும், நடுவிலுள்ள வெள்ளை நட்சத்திரம் அமைதியையும், அதன் ஐந்து முனைகள் ஐந்து தீவுக் குழுமத்தையும், நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வெள்ளைத் தலையலங்கார அணி மக்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் குறிக்கிறது. 1992-ஆம் ஆண்டு பூர்வகுடி டாரஸ் நீரிணைத் தீவுக்குழுமத்துக்கான கொடியொன்றை உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வடிவம் இது. இதை உருவாக்கியவர் பெர்னார்ட் நமோக். குவீன்ஸ்லாந்தின் வடக்கே தனித்த கலாச்சார பண்பாட்டு, மொழி, மதம், வாழ்க்கைமுறை என்னும் அடையாளங்களோடு வாழ்ந்துவரும் இத்தீவுவாசிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பையும் பாப்புவா நியூகினி தீவையும் ஒருகாலத்தில் நிலவழி இணைந்திருந்தவர்களே. 12,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலப்பரப்போடு இணைந்திருந்த அவர்களையும் இம்மண்ணின் மைந்தர்களென அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களுக்கான கொடியும் ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட கொடிகளுள் ஒன்றாக உள்ளது. 

ஒன்றுபட்ட ஆஸ்திரேலியர் எனும் உணர்வோடு இம்மண்ணின் அனைத்து மக்களையும் அவர்தம் நம்பிக்கைகளையும் மதிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனெனில் இது நம்ம ஆஸ்திரேலியா.. இல்லையா 

(ஒலிபரப்பான நாள் 05-01-2010) 
(படங்கள் உதவி - இணையம்)

29 January 2020

அகவை முப்பத்தொன்பது


நாற்பது வயதில் நாய்க்குணம் என்பார்கள். இந்தக் கவிஞனுக்கோ நாற்பதில்தான் உண்மையான வாழ்க்கை ஆரம்பமாகிறதாம். ஆஸ்திரேலியாவின் பிரபல சிறுகதை எழுத்தாளரும் கவிஞருமான ஹென்றி லாஸனின் '39' என்ற கவிதையின் தமிழாக்கம் இது.

அகவை முப்பத்தொன்பது
----------------------------------------
இன்று காலை கண்விழித்தபோதுதான்
இந்த உலகம் எவ்வளவு அழகென்று புரிந்தது
சுருக்கங்கள் காணா முகத்தோடு
அரிதாய் ஒற்றை நரையோடு
நாற்பதாகப் போகிறேன் நான்.

என் அத்தனைப் பாவங்களுக்கும் மேலாய்
உண்மை வாழ்வு துவங்கும்
நாற்பதுகளில் வாழப்போகிறேன்.
உயிர்ப்புள்ள நாற்பதுகள்
உன்னத வாழ்வின் நாற்பதுகள்
இன்னும் பத்து வருடங்கள்
இனி கவலையில்லாக் காலங்கள்

பதின்மத்தில் கிட்டியதெல்லாம்
இருளும் கசப்பும் மட்டுமே.
பால்யத்தின் புகைபடிந்த கல்லறைக்காலமது.
பண்ணைத் தொழும்பனாய்
பட்டறையில் அடிமையாய்
பசியும் பட்டினியுமான பொழுதை ஏந்தியது.

தினவெடுத்த இருபதுகளில்
தினம் தினம் பற்பல பிரச்சனைகள்
பணியிலும் குடியிலும்
பணம் பேர் புகழுக்காகவும்
பொழுதெலாம் சண்டை சச்சரவுகள்

திரைக்குப் பின்னிருந்து
விதி விளையாடும் முப்பதுகளோ
பதின்மத்தினும் பன்மடங்கு
இருண்மையும் குரூரமும் மிக்கவை
தள்ளிவிட வழியில்லாது அனுபவித்தேன்
யாவும் மெல்ல எனைவிட்டு விலகத்தொடங்கும்
இன்றென் அகவை முப்பத்தொன்பது.

சுதந்திரமான நாற்பதுகளில் காணலாம்
சொச்சமிருக்கும் பால்யகாலங்கள்.
நாற்பதுகளில் மீளக் கிடைக்கலாம்
கரடுமுரடான இருபதின் இன்தருணங்கள்.
வலிமை மிக்க நாற்பதுகள்
வாழ்க்கை துவங்கும் நாற்பதுகள்
இன்னும் பத்து வருடங்கள்
இனி கவலையில்லாக் காலங்கள்.

&&&&&&



இம்மாத கனலியில் ஹென்றிலாஸனின் மேலும் சில கவிதைகளின் மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. நன்றி நண்பர் விக்னேஸ்வரன்.

16 January 2020

காட்டுத்தீ அழித்த கானுயிர்வளம்




கடந்த நான்கு மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் எரிந்துள்ள காடுகளின் பரப்பளவு சுமார் 8 மில்லியன் ஹெக்டேர்கள். அதீத வெப்பமும் காற்றும் இனிவரும் நாட்களில் இவ்வெண்ணை இன்னும் கூட்டக்கூடும். இக்கட்டுரையை எழுதும் வேளையில் ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 300 இடங்களுக்கு மேல் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் 140-க்கும் மேற்பட்ட இடங்கள். சில கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு எரிந்துகொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பெருந்தீயோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

HMAS Adelaide

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதன் முறையாக Army, Navy, Airforce ஆகிய முப்படைகளிலிருந்தும் சுமார் 3,000 வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிக்கென ஆஸ்திரேலியாவின் மிகப்பெரியப் போர்க்கப்பலான HMAS Adelaide பலத்த முன்னேற்பாடுகளுடனும் தண்ணீர், உணவு, உடை, மருந்துகள், படுக்கை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடனும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 75,000 தன்னார்வல தீயணைப்பு வீரர்களைக் கொண்டு உலகிலேயே மிகப்பெரியது என்ற பெருமையை உடைய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தீயணைப்புத்துறை (New South Wales Rural Fire Service -NSW RFS) வீரர்களோடு அயல் மாநிலங்களிலிருந்தும், நியூசிலாந்து, சிங்கப்பூர், பாப்புவா நியூகினி, கனடா, கலிஃபோர்னியா ஆகிய அயல் நாடுகளிலிருந்தும் மாற்றுத் தொழில்நுட்பமும் தேர்ந்த அனுபவமும் கொண்ட ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் கைகோர்த்து களமிறங்கியுள்ளனர்.

பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தீ பரவிவிடாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடாக backburn எனப்படும் தீ அரண் உத்தி கையாளப்படுகிறது. RAFT எனப்படும் Remote Area Firefighting Teams தண்ணீரின் உதவியில்லாமல் தீயணைக்கும் முயற்சிகளை ஒரு பக்கம் மேற்கொண்டுவருகிறார்கள்.  எரிபொருளை நீக்கி தீப்பரவாது தடுக்கும் உத்தி இது.  குடியிருப்புப் பகுதியை ஒட்டிய காடுகளின் மத்தியில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் இறங்கும் இவர்கள், கையோடு கொண்டுசென்றிருக்கும் மரமறுக்கும் கருவி, புல் அகற்றும் கருவி, ரம்பம் போன்ற கைக்கருவிகளைப் பயன்படுத்தி மரங்களை வெட்டி, காய்ந்து தீப்பற்றத் தயாராய் இருக்கும் புற்களை அகற்றி என அப்பகுதியை மிகுந்த பிரயத்தனத்துடன் சுத்தம் செய்து மேற்கொண்டு தீப்பரவ வழியிலாது தடுக்கிறார்கள். 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் சுமார் பத்து சதவீதமளவு சமீபத்திய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ இதுவரை காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை 20. மேலும் 30 பேர் குறித்த தகவல் தெரியவில்லை. 1500 வீடுகளுக்கு மேல் தீக்கிரையாகியுள்ளன. வீடுகள் தவிர கடைகள், வணிக வளாகங்கள், பண்ணைத்தொழுவங்கள், கொட்டகைகள் என தீ தின்றவை ஏராளம். பலியான கால்நடைகளின் எண்ணிக்கையோ இலட்சக்கணக்கில்.

உயிர்ச்சேதம், உடமைச்சேதம், கால்நடை இழப்பு போன்ற நாட்டுவளமிழப்போடு காட்டுவளமிழப்பும் பெரிய அளவில் கவனிக்கப்பட வேண்டியது. காடுவாழ் உயிரினங்கள் பலவும் அழிவைத் தொட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த கானுயிர் அழிவு குறித்து உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவிக்கக் காரணம் உள்ளது. ஆஸ்திரேலியாவின் கானுயிர் வளம் பிரத்தியேக சிறப்புடையது. அது குறித்த புரிதல் இருந்தால்தான் அவற்றின் இழப்பு குறித்த தீவிரத்தை நம்மால் உணர்ந்துகொள்ள இயலும். 


உலகில் வேறெங்கும் காண முடியாத அதிசய உயிரினங்கள் பலவற்றின் தாயகம் ஆஸ்திரேலியா. இம்மண்ணின் ஆதி உயிரினங்கள் அனைத்துமே ஏதோவொரு வகையில் விசித்திரமும் விநோதமும் நிறைந்தவை. பெரும்பாலான ஆஸ்திரேலிய விலங்கினங்களின் சிறப்பம்சம் அவை மார்சுபியல் என்பதுதான். மார்சுபியல் இனத்தில் குறுகிய கால கர்ப்பத்தில் பிறக்கும் முழுவளர்ச்சியற்றக் குட்டிகளை வளர்க்க பெண் விலங்குகளின் வயிற்றில் பை போன்ற அமைப்பு இருக்கும். கங்காரு, வல்லபி, கோவாலா, வாம்பேட், போசம் என ஆஸ்திரேலியாவில் 140-க்கும் மேற்பட்ட மார்சுபியல் விலங்குகள் உள்ளன.

மார்சுபியல் இனத்திலேயே தாவர உண்ணிகள், கொன்றுண்ணிகள்,  அனைத்துண்ணிகள் என பலவகை உண்டு. பாலூட்டிகளில் வழமையான பாலூட்டிகள், மோனோட்ரீம்ஸ் எனப்படும் முட்டையிடும் பாலூட்டிகள், பறக்கும் பாலூட்டிகள் என பல வகை உண்டு. முட்டையிட்டு அடைகாத்து குட்டிகளுக்கு பாலூட்டி வளர்க்கும் உயிரினங்களான பிளாட்டிபஸ்ஸும், எக்கிட்னாவும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அதிசயங்கள். விநோதமான பறவையினங்களும், விஷச் சிலந்திகளும் பாம்புகளும், கடற்பூங்காவென சிலாகிக்கப்படும் பவளப்பாறைத்திட்டுகளும், அவை சார்ந்து வாழும் அற்புத கடல்வாழ் உயிரிகளுமென ஆஸ்திரேலியா பல்லுயிர் வாழ்தன்மைக்கு பிரசித்தமானது.


ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் 800-க்கும் மேற்பட்ட பறவையினங்களில் பாதிக்கு மேல் உலகில் வேறெங்கும் காணவியலாத அபூர்வப் பறவைகள். 8 செ.மீ. நீளமே உள்ள வீபில் (weebil) எனப்படும் சின்னஞ்சிறிய தேன்சிட்டு முதல் 2 மீ. உயரமுள்ள பென்னம்பெரிய பறவைகளான காஸோவரி மற்றும் ஈமு வரை இங்கே உள்ளன.

உலகில் மிகக்கடுமையான விஷம் கொண்ட 25 பாம்பினங்களுள் 21-க்கு ஆஸ்திரேலியாதான் தாயகம். 140 வகை நிலம்வாழ் பாம்புகளுக்கும் 32 வகை கடற்பாம்புகளுக்கும் அல்லாது, சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய உப்புநீர் முதலைகளுக்கும் ஆஸ்திரேலியா பிரசித்தம்ஃப்ரில் கழுத்து ஓணான், நீலநாக்கு பல்லி, தாடி ஓணான், கோவான்னா என 700-க்கும் மேற்பட்ட ஊர்வன பட்டியலும், பரந்த கடற்புரத்தையும் பேரரண் பவளப்பாறைத் திட்டையும் சார்ந்துவாழும் கடல்வாழ் உயிரிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே போகும்.


உலகின் வேறெங்கும் காணப்படாத அதிசய உயிரினங்கள் உள்ள ஆஸ்திரேலியாவில்தான் உலகின் வேறெங்கும் காணப்படாத அளவுக்கு உயிரினங்களின் அழிவும் நடைபெற்றுள்ளது. இலட்சக்கணக்கான வருடங்களாக ஆஸ்திரேலிய மண்ணில் நிலைகொண்டிருந்த பல உயிரினங்கள் ஐரோப்பியக் குடியேற்றத்துக்குப் பிறகு முற்றிலுமாய் அழிந்துவிட்ட இனமாகிவிட்டன. கடந்த 200 ஆண்டுகளில்  அழிவுக்காளானவை என்று 24 பறவையினங்கள், 7 தவளையினங்கள், 27 விலங்கினங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது பன்னாட்டு இயற்கைநல பாதுகாப்பு சங்கம்.

நரி, நாய், முயல், ஆடு, மாடு, ஒட்டகம், கழுதை, குதிரை, பன்றி, கோழி, வாத்து, மைனா என அறிந்தும் அறியாமலும் அந்நிய நாடுகளிலிருந்து கொண்டுவந்து அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பல, சொந்த மண்ணின் உயிரினங்களுக்கே உலை வைக்குமளவுக்குப் பல்கிப் பெருகியிருப்பது சூழல் சமன்பாட்டுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. கூடவே புவி வெப்பமயமாதல், சூழல் சீர்கேடு, காடுகள் அழிப்பு, இரசாயன உரங்களின் பயன்பாடு, மனிதனின் சுயநலம், பொறுப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களால் இன்னும் கூட ஏராளமான உயிரினங்கள் அழியக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

அழிந்துவரும் விலங்கினங்களைப் பாதுகாக்க பெருமுயற்சி மேற்கொண்டு வரும் இவ்வேளையில் சமீபத்திய காட்டுத்தீக்களினால் சுமார் 480 மில்லியன் விலங்கு, பறவை, ஊர்வன உள்ளிட்ட கானுயிர்கள்  அழிந்திருக்கலாம் என்று Professor Chris Dickman விடுத்துள்ள அறிக்கை நம்மை திடுக்கிடச் செய்வதோடு ஆஸ்திரேலியாவின் சூழலியல் மாறுபாடு குறித்த அச்சத்தையும் உண்டாக்குகிறது. காடுகள் எரிந்துகொண்டிருக்கும் வேளையில் இக்கணக்கெடுப்பு எப்படி சாத்தியம்? இதில் எந்த அளவு துல்லியம் இருக்கமுடியும்?

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு WWF (World Wild Fund for Nature)க்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இப்புள்ளிவிவரம் பகிரப்பட்டுள்ளது. காடுகள் அழிவதன் மூலம் கானுயிர்கள் அழிந்துவருவதை முன்னிட்டு கானுயிர் வாழ்பரப்பு குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையின் இணை ஆக்குநரும் ஆஸ்திரேலிய உயிரினங்கள் குறித்த சூழலியல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மையில் சுமார் 30 வருடங்கள் அனுபவசாலியுமான  Professor Chris Dickman  குறிப்பிடுவதன் பின்னணியில் இருக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்கத்தக்கவை. இக்கணக்கெடுப்பில் விலங்கினம், பறவையினம், ஊர்வனவினம் மட்டுமே உள்ளன. பூச்சியினம், தவளையினம், வௌவாலினம் குறித்த அழிவு கணக்கிடப்படவில்லை. எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் இழப்பின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவையாக இருக்கக்கூடும். மேலும் இம்மதிப்பீடு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தினுடையது  மட்டுமே.

ஒரு ஹெக்டேர் (பத்தாயிரம் சதுர மீட்டர்கள்) நிலப்பரப்பில் சுமார் 18 விலங்குகளும் 20 பறவைகளும் 130 ஊர்வனவும் வாழ்வதாக முந்தைய கானுயிர் கணக்கெடுப்புகள் தந்திருக்கும் புள்ளி விவரத்தைக் கொண்டும் அன்றைய தேதி வரை எரிந்துள்ள காடுகளின் மொத்தப் பரப்பளவைக் கொண்டும் அழிந்துள்ள கானுயிரிகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. தீப்பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தற்போது இவ்வெண்ணிக்கை இன்னும் கூடுதலாய் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  அதே சமயம் பூமிக்கடியில் வளை தோண்டி வாழும் பல விலங்கினங்களும் ஊர்வனவும் தீயிடமிருந்து தப்பி பதுங்கி உயிரோடிருக்க வாய்ப்புண்டு என்ற குறைந்த பட்ச நம்பிக்கையும் உள்ளது.
கங்காரு, ஈமு போன்ற அளவில் பெரிய உயிரினங்களுக்கு ஓரளவாவது தப்பித்துச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருந்தும் எரிந்துமுடிந்த காடுகளில் ஆங்காங்கே கரிக்கட்டையாய் கங்காருகளின் சடலங்கள் காணக்கிடைக்கின்றன. கோவாலா போன்ற மரத்தில் வாழும் உயிரினங்களுக்கும் சிற்றுயிர்களுக்கும் பறவைகளுக்கும் காட்டுத்தீ கோர முடிவைத்தான் தந்திருக்கிறது. தீயில் சிக்கித் தப்பிய விலங்குகள் உடல் முழுக்க தீக்காயங்களோடு வாழப்போராடி முடியாமல் மடியும் காட்சி அவலம். 

கங்காரு தீவில் மட்டுமே வசிக்கும் Dunnart என்ற சுண்டெலி அளவிலான சிறு மார்சுபியல் விலங்கினமும் தெற்காஸ்திரேலியத் தீவொன்றில் வாழ்கின்ற Southern brown bandicoot  இனமும் Yellow bellied glider, Greater glider, Pygmy possum போன்ற மேலும் பல அரிய உயிரினங்களும் காட்டுத் தீயினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 



ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் முக்கியமானவை கோவாலாக்கள்.  நகர விஸ்தரிப்பு, காடழிப்பு, chlamydia என்னும்  பால்நோய்த்தொற்று, வாகனவிபத்து, நாய், நரிகளால் ஏற்படும் உயிரிழப்பு என பல்வேறு காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இச்சூழல் அபாயத்தைக் கருத்திற் கொண்டு கோவாலாக்களுக்கென சிறப்பு சரணாலயங்கள், பாதுகாப்பகங்கள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் இனம் பெருகுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் காட்டுத்தீயால் கடந்த நான்கு மாதங்களில் நியூ சவுத் வேல்ஸில் மட்டும் சுமார் 8000 கோவாலாக்கள் (30%) இறந்து போயிருப்பதாக வரும் கணிப்புகள் பெருங்கவலை அளிக்கின்றன.  

கோவாலாக்கள் பொதுவாக தண்ணீர் குடிக்காத விலங்குகள். அவை தங்களுக்குத் தேவையான நீர்ச்சத்தை தாங்கள் உண்ணும்  யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே பெற்றுக்கொள்கின்றன. ஆனால் தீப்பற்றிய காடுகளில் மரங்களை இழந்து, பதறித்திரியும் கோவாலாக்கள், காப்பாற்றப்பட்டு தண்ணீர் புகட்டப்படுகின்றன. தண்ணீரை மாய்ந்து மாய்ந்து அவை குடிக்கும் காட்சிகளே சொல்லிவிடும், நாட்கணக்காக உணவின்றி நீர்ச்சத்து குறைந்துபோய் அவை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதை. கோவாலாக்கள் காப்பாற்றப்பட்டாலும் அவற்றின் மனப்பதற்றம் குறைக்கப்பட்டு, உடற்காயங்கள் ஆற்றப்பட்டாலும் புதிய வனத்தில் புதிய சூழலில் அவற்றை வாழ்விப்பதென்பது பெரும் சவால்.

தீயை அணைப்பதொரு பக்கம் இருக்க, நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, எரிந்து கருகிய காடுகளிலும் பண்ணை நிலங்களிலும் ஆங்காங்கே கிடக்கும் இறந்து அழுகிய விலங்குடல்களை எரிப்பதும் புதைப்பதும், எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்று பயங்காட்டியபடி சாலையோரத்தில் காட்சியளிக்கும் எரிந்து கரிக்கட்டையான நெடுமரங்களை அப்புறப்படுத்துவதுமான தூய்மைப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போது தீயிடமிருந்து தப்பியுள்ள உயிரினங்களுக்கு உணவின்மையும் உறைவிடமின்மையும் இனிவரும் நாளில் பெரும் பிரச்சனையாகக்கூடும். போதாக்குறைக்கு காடற்ற, மரங்களற்ற திறந்தவெளிகள், நரிகளுக்கும் காட்டுப்பூனைகளுக்கும் நல்ல வேட்டைக்களமாக மாறிவிடும். உணவுச்சங்கிலியின் பல கண்ணிகள் ஆங்காங்கே அறுந்துபோய் உள்ள இச்சூழலில் விரைவிலேயே மற்றுமொரு கானுயிர் கணக்கெடுப்பின் தேவையும் அது சார்ந்த முன்னெடுப்புகளும் தொடருழைப்பும் காத்திருக்கின்றன.  சூழல் சமன்பாடு சீர்குலைந்தால் வரக்கூடிய ஆபத்து இதனினும் பேராபத்தாய் இருக்கும் என்பதை உணர்ந்து இனியேனும் பொறுப்பாய் மனிதகுலம் செயல்படவேண்டிய தருணமிது.   


(ஜனவரி, 2020 எதிரொலி பத்திரிகையில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியானது)