1 April 2017

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவால்...





கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017
- புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வில் கீதமஞ்சரி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். 


முடிவு அறிவிப்பிலிருந்து... 

இப்போட்டியின் வழிகாட்டு நெறியாளர் 
மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)

இப்போட்டியில் நடுவர்கள்
இரா எட்வின் (இந்தியா)
கானாப்பிரபா (அவுத்திரேலியா)
கவிதா லட்சுமி (நோர்வே)
முகிலன் (பிரான்சு)
ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரிசுக்குரியவர்கள் :

முன்மொழிவு : அருந்தா


முன்மொழிவு: ரூபன் சிவராசா


முன்மொழிவு: யசோதா.பத்மநாதன்.


புலம்பெயர்பெயர்வு வாழ்வில் கனவுகள் சுமந்தவராக எம்மோடு பயணித்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவேந்தலாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள். மூன்று பரிசுகள் எனவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் பரிசுகள் பின்வருவோருக்கானதாகச் சென்றடைகிறது.

புலம்பெயர்ந்த வாழ்வில் தொடரும் தமிழ்த் தடத்துடன் சுயம்புகளாக இணைய வலைப் பதிவுகளைப் பொறுப்புடன் நிகழ்த்தும் அனைவருக்குமான பரிசுகளின் மாதிரியாகவே இதனைக் கொள்ளல் பொருத்தம். வாழும் தமிழாக இணையவலைகளூடாக தன்னலமற்ற சேவையாக இவர்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் நிலைபெறும்.

பரிசுக்குரியவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். பொறுப்புடன் இவர்களை அறிமுகம் செய்த வாசகர்களுக்கு மிக்க நன்றிகள். இந்த வாசகர்களுக்கு ஓராண்டு காக்கை இலவசமாக அனுப்பப்படும்.

தெரிவான இணையவலைப் பதிவர்களது வெளிப்பாடுகளை இனி வெளிவர இருக்கும் காக்கை பதிவுசெய்யும்.

&&&&&&&


இப்பரிசுக்கு கீத மஞ்சரியைத் தெரிவு செய்த நடுவர்களுக்கும் காக்கை சிறகினிலே இதழ் பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த வலைப்பூவைப் பரிந்துரைத்தவர் அட்சயப்பாத்திரம் வலைப்பதிவரும் என் தோழியுமான மணிமேகலா (எ) யசோதா பத்மநாதன் அவர்கள். தொடர்ந்து என்னையும் என் எழுத்தையும் முன்னிலைப்படுத்தும் அவருடைய முயற்சிகளுக்கு நன்றி என்ற ஒற்றைச்சொல் போதாது. எனினும் அவர்க்கு என் அன்பான நன்றி. 


&&&&&&

கி. பி. அரவிந்தன் அவர்கள் பற்றி...




ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும், கவிஞரும், மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அப்பால் தமிழ் எனும் இணையத் தளத்தினை நடத்தி வந்தார். புதினப்பலகை இணையத்தளத்தின் முக்கிய பங்காளர்.

அரவிந்தனின் இயற் பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிசு. நெடுந்தீவைச் சேர்ந்த பேதுறு கிறிஸ்தோப்பர், மாசிலாமணி ஆகியோருக்கு 1953 செப்டம்பர் 17ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார். 1972 ஆம் ஆண்டில் 1972 அரசமைப்புச் சட்டம் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதான மூன்று இளைஞர்களில் அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. கி. பி. அரவிந்தன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2015 மார்ச் 8 அன்று காலமானார்.

இனி ஒரு வைகறை, கனவின் மீதி, பாரிஸ் கதைகள், முகம் கொள், மிச்சமென்ன சொல்லுங்கப்பா போன்றவை இவர் எழுதிய நூல்கள். 

(தகவல் உதவி - விக்கிபீடியா)


கனவின் மீதி கவிதைத் தொகுப்பிலிருந்து 
மனந்தேம்ப வைக்கும் கவி வரிகள் சில …



நிரையில் வருமுறைக்காய்
காத்திருக்கும் என்தோளில்
கொஞ்சும் சிணுங்கலுடன்
தொங்கும் மகவு.

அப்பா குளுருது வீட்ட போவம்.
சிணுங்கல் வெடிக்கிறது விம்மலாய்
குழந்தையைத் தேற்றத்தான்
கதை சொன்னேன் நான்

ஊரைத் துறந்த அப்பாவாம்
தூர தேசம் வந்தாராம்
வேரைத் தேடித் தவித்தாராம்
யாரை நொந்து கொள்வாராம்

அப்பா என்ரை அப்பாவாம்
அப்பா அம்மா செல்லமாம்
இப்போ நாங்க வந்தோமாம்
எப்போ வீட்ட போவமாம்

அமைதி காணாது போனதாம்
அகதி நாங்களும் ஆனோமாம்
இனிமே போகவும் ஏலாதாம்
இங்கே கதையும் முடிந்ததாம்

இல்லை இல்லை இல்லையாம்
இன்னும் கதை வேணுமாம்
ஒன்றாய் வீட்ட போவமாம்
அப்பா என்ர செல்லமாம்

பிடிபட்ட தாளலயம்
விடாப்பிடியில் குழந்தை
குட்டிக்கதையையும் நீட்டும்
கெட்டித்தனம் அதன் கண்ணில்
ஆறாத மனம் போலும்

என்னையே வெறிக்கின்றது
நிரையோ மெல்ல ஊர்கின்றது
இரைச்சல் காதைப் பிளக்கின்றது
குழந்தை தோளில் சரிகின்றது
நெஞ்சுள் ஏதோ குமைகின்றது

நீங்க அகதியானது உங்களுக்குச் சரி
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி…

மடிபற்றி எழுகின்றது கேள்வி
ஓ… என் குழந்தைகளே… 

&&&&&


27 March 2017

மின்னூல்கள் சில என்னூல்களென...



சிலேட்டுப் பலகையில் அ,ஆ என்று கைப்பிடித்து எழுதிப் பழகிய காலத்தில் நாலுகோடு நோட்டுப் புத்தகத்தின் மேல் கவனம் வைத்திருந்தோம். பென்சிலால் எழுதியழித்துப் பழகியபோது மைப்பேனாவின் மீது மோகம் கொண்டோம். கசியும் மைப்பேனாவை கையேந்திய போது பால்பாயிண்ட் பேனா மீது கண்வைத்தோம். கணினி வந்ததும் காகிதங்களைக் கைவிட்டோம். வலையுலகில் எழுத்தால் வலம் வந்தோம். கணினியில் ஏற்றியவற்றை மறுபடி காகிதத்தில் அச்சேற்ற ஆசை கொண்டோம்.. அச்சிலேற ஆகும் சில காலம் எனும்போது.. உடனுக்குடன் மின்னூலாக்கி உலகெங்கும் தவழவிட உவகை கொண்டோம். காத்திருந்த வாய்ப்பு நம் வாசல் கதவைத் தட்டக்கண்டோம். கரம்பற்றிக்கொண்டோம். வரிசையாய் நம் பதிவுலக நட்புகள் மின்னூலாக்கம் என்னும் அடுத்த கட்டத்துக்கு ஆர்வமாய் நகர்ந்திடக் கண்டு மகிழ்வில் துள்ளுகிறது மனம்.. அந்த வரிசையில் நானுமிருக்கிறேன் என்பதில் அகநிறைவு.

புஸ்தகா நிறுவனம் மூலம் இவ்வாய்ப்பினை அமைத்துக் கொடுத்த புதுகை கணினி தமிழ்ச்சங்கத்துக்கும் ஏற்பாடு செய்த நா.முத்துநிலவன் அண்ணனுக்கும் புஸ்தகா பற்றி விரிவாக எனக்கு எடுத்துச்சொல்லி ஊக்கமளித்த கலையரசி அக்காவுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.  

புஸ்தகாவில் வெளியான என் மின்னூல்கள்.. 
படத்தையோ தலைப்பையோ சொடுக்கி இணைப்புக்குச் செல்லலாம்.   






















புஸ்தகாவில் என் மின்னூல்கள் வெளியாகியிருப்பதைப் பகிரும் இவ்வேளையில் இந்நூல்கள் குறித்த நட்புகளின் விமர்சனங்கள் மனத்தை நெகிழவைக்கின்றன. 

என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் – சிறுகதைத் தொகுப்பு குறித்த தன் வாசிப்பனுபவத்தை மிக அழகாக தன் வலைப்பூவில் பதிவிட்டுள்ள வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். வாசிப்பில் பெரும் ஈடுபாடு கொண்ட அவருடைய விமர்சனம் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதாக உள்ளது. மிகவும் நன்றி வெங்கட்.

இதே தொகுப்பில் உள்ள ஒன்றும் அறியாத பெண்ணோ கதையுடன் தன் வாழ்வை ஒப்பிட்டு ஃபேஸ்புக்கில் சிலாகித்த மகாதேவன் அண்ணாவுக்கு என் அன்பான நன்றி.


நம் படைப்புகளை 
உலகளாவிய வாசகர்க்குக் கொண்டுசேர்க்கும் 
புஸ்தகா நிறுவனத்துக்கு 
நம் நெஞ்சம் நிறைந்த நன்றி. 

16 March 2017

யாழ்ப்பறவை

பாடலுக்கும் ஆடலுக்கும் பெயர்போன ஆஸ்திரேலியப் பறவை இந்த யாழ்ப்பறவை. Lyrebird என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இதற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா? இந்தப் பறவையினத்தில் ஆண் பறவைக்கு மயில் தோகை போல் பெரிய வால் உண்டு. அதை விரித்தால் பார்ப்பதற்கு பழங்கால lyre என்னும் யாழ் இசைக்கருவியைப் போல இருக்கும். அதனாலேயே அதற்கு lyrebird என்ற பெயராகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட பதினைந்து மில்லியன் (ஒன்றரை கோடி) வருடங்களுக்கு முன்பிருந்தே யாழ்ப்பறவைகள் வாழ்ந்து வருகின்றன என்பதை அங்கு கிடைத்துள்ள எலும்புக்கூடு படிமங்கள் உறுதி செய்கின்றன.


1. யாழ்ப்பறவை தோகை விரித்த நிலையில்


2. பழங்கால யாழ் இசைக்கருவி


ஆஸ்திரேலியாவில் யாழ்ப்பறவைகள் பல வகையிலும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

3. பத்து சென்ட் நாணயம்
 

•     ஆஸ்திரேலியாவின் பத்து செண்ட் நாணயத்தில் யாழ் பறவைகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

4. அஞ்சல் தலை

•     1932 இல் யாழ்ப்பறவை பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

5. நூறு டாலர் நோட்டு

•     ஆஸ்திரேலியாவின் நூறு டாலர் தாளில் இதன் உருவம் இடம்பெற்றுள்ளது.

•     ஆஸ்திரேலிய திரைப்பட ஆணையத்தின் முத்திரையில் இடம்பெற்றுள்ளது.

6.தேசியப் பூங்கா முத்திரை

•     ஆஸ்திரேலிய தேசியப் பூங்கா மற்றும் வனவாழ்வு மையத்தின் முத்திரையில் இடம்பெற்றுள்ளது.

7. நிறுவன முத்திரை

8. கலைக்கல்லூரி முத்திரை

•     மேலும் பல இசைக்கல்லூரிகளும் நிறுவனங்களும் தோகைவிரித்து நடனமாடும் ஆண் யாழ்ப்பறவையின் உருவத்தை தங்கள் முத்திரைகளில் பதித்து சிறப்பித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் இரண்டு வகையான யாழ்ப்பறவைகள் காணப்படுகின்றன. ஒன்று சூப்பர் யாழ்ப்பறவை மற்றொன்று ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை சற்று சிவந்த நிறத்திலிருக்கும். சூப்பர் யாழ்ப்பறவை செம்பழுப்பு நிறத்தில் இருக்கும்.

 

9. சூப்பர் யாழ்ப்பறவை

10. சூப்பர் யாழ்ப்பறவை தகவல்கள்

சூப்பர் யாழ்ப்பறவைகள் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளிலும் டாஸ்மேனியாவிலும் காணப்படுகின்றன. செம்பழுப்பு நிற உடலும் கரிய நிற அலகும் கால்களும் கொண்ட இப்பறவைகளில் ஆண் பறவையின் வால் தோகை போன்று மிக அழகாயிருக்கும். வெள்ளி நிறத்தில் மெல்லிய சல்லடை போன்று பதினாறு நீளமான இறகுகள் கொண்ட தோகையானது ஆண் பறவையின் கம்பீரத்தின் அடையாளம். அப்படியொரு அழகான பெரிய தோகை அமைய ஏழு வருடங்கள் பிடிக்குமாம். அதாவது யாழ்ப்பறவைக்குஞ்சு வளர்ந்து பருவ முதிர்ச்சி அடைய ஏழு வருடங்களாகிறது. பெண் பறவைகளுக்கு நீளமான தோகை இருந்தாலும் ஆணுக்கேயுரிய பிரத்தியேக வெள்ளிநிற சல்லடை இறகுகள் அதில் கிடையாது. ஆபத்தை உணரும் நேரங்களில் இப்பறவைகள் அலாரம் போன்ற எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி ஓடி மறைந்துவிடுகின்றன. 

அழகிய யாழ் போன்ற தோகையை விரித்தாடுவது அல்லாமல் யாழ்ப் பறவைக்கு மற்றொரு சிறப்பு உண்டு. அதாவது எந்த சத்தத்தைக் கேட்டாலும் அதை ஒலிநகல் (mimicry) செய்யும் இயல்பு இவற்றுக்கு உண்டு. இப்பறவைகள் ஒருநாளைக்கு நான்கு மணி நேரத்தைப் பாடுவதிலேயே கழிக்கின்றன. பெண் பறவைகளும் பாடும் என்றாலும் ஆண் பறவைகளின் பாடலுக்கு அது ஈடாகாது. குஞ்சுகள் தங்கள் இனத்துக்கான பாடலைக் கற்றுக்கொண்டு நன்றாகப் பாட ஒரு வருடகாலம் ஆகும். இப்பறவைகள் தங்களுக்கென்று தனித்த பாடல்களைக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது மற்றப் பறவைகளின் ஒலிகளையும் பாடல்களையும் அதில் கலந்துவிடுவதால் அதிகாலை நேரத்தில் ஒற்றை யாழ்ப்பறவை எழுப்பும் மாறுபட்ட ஒலியானது அங்கு ஏராளமான பறவைகள் இருப்பதாய் நம்மை எண்ணத் தோன்றும். 

11. சூப்பர் யாழ்ப்பறவை 1

மற்றப் பறவைகளின் ஒலியல்லாது கொவாலா, டிங்கோ போன்ற விலங்கொலிகளையும் ஒலிக்க வல்லவை. பொதுவாக தாங்கள் கேட்கும் எந்த சத்தத்தையும் ஒலிநகல் செய்ய வல்லவை. அடிலெய்ட் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட ச்சூக் (chook) என்னும் யாழ்ப்பறவை காகம், கிளி, லாரிகீட், மேக்பை, சிரிக்கும் கூக்கபரா, மைனா, காக்கட்டூ போன்ற பறவைகளின் ஒலிகளோடு கார் எஞ்சின் உறுமல் சத்தம், தீயணைப்பு வண்டியின் அலாரம், குழந்தையின் அழுகை, நாய் குரைப்பு, கேமராவின் க்ளிக் சத்தம் என நாற்பதுக்கும் மேலான ஒலிகளை மிமிக்ரி செய்யும் அசாத்தியத்திறமை பெற்றிருந்தது.

இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவை தன் அழகிய தோகையை மயில் போல விரித்து விசிறி போலாக்கி தலைக்கு மேலே கொண்டுவந்து முன்னும் பின்னுமாய் விசிறியும் அவ்வப்போது சிலிர்ப்பியும் நடன அசைவுகளை உண்டாக்கி பெண் பறவைகளைக் கவர முனைகிறது. ஆடலுடன் பாடலும் சேர்ந்துகொள்ள சொல்லவேண்டுமா? நிகழ்ச்சி களைகட்டிவிடும்.

12. சூப்பர் யாழ்ப்பறவை 2

நடனம் என்றால் மேடை இல்லாமலா? சூப்பர் யாழ்ப்பறவைகள் மண்ணால் 90 செ.மீ விட்டமும் 15 செ.மீ உயரமும் உள்ள மேடையமைத்து அதில் நின்றுதான் நடனமாடுகின்றன. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகளோ குச்சிகளைக் குவித்து மேடை அமைத்து அதில் நின்றபடி ஆடுகின்றன. மேடையென்றால் ஒரு மேடை மட்டுமல்ல, பல பெண் இணைகளைக் கவரவேண்டாமா? அதனால் ஒவ்வொரு ஆண் பறவையும் தன் எல்லைக்குள் பத்துப் பதினைந்து மேடைகளாவது கட்டி வைத்திருக்குமாம். எங்கெங்கு தேவையோ அங்கங்கு ஏறி நின்று ஆடலாமல்லவா?

இப்பறவையினத்தில் வாழ்நாள் இணை என்று எதுவும் கிடையாது. ஒரு ஆண் பறவை பல பெண் பறவைகளோடு இணையும். கூடு கட்டுவது, அடைகாப்பது, குஞ்சுகளை வளர்ப்பது அனைத்தும் தாயின் பொறுப்பு. அப்பா பறவைக்கு எந்த வேலையும் இல்லை. பெண் பறவை தரையை ஒட்டிய ஏதாவது பாறையிடுக்கிலோ தாழ்வான மரக்கிளைகளிடையிலோ குச்சிகளையும் இலைதழைகளையும் கொண்டு இன்ன வடிவம் என்றில்லாமல் ஒரு கூடு அமைக்கிறது. யாழ்ப்பறவை ஒரு ஈட்டுக்கு ஒரே ஒரு முட்டைதான் இடும் என்பது விநோதம். ஐம்பது நாட்கள் தொடர்ந்து ஒற்றையாளாகவே அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்க்கிறது தாய்ப்பறவை. ஆறு முதல் பத்து வாரங்கள் குஞ்சு கூட்டில் தாயுடன் வசிக்கும்.

 

13. பெண் சூப்பர் யாழ்ப்பறவை

மண்ணுக்குள்ளும் உளுத்துப்போன மரக்கட்டைகளிலும் வாழும் புழுக்கள், பூச்சிகள், மண்புழு, மரவட்டை, சிலந்தி, கரப்பான் பூச்சி, வண்டு போன்றவைதான் இவற்றின் பிரதான உணவு. எப்போதாவது பழங்களின் கொட்டைகளையும் விதைகளையும் உட்கொள்ளும். கோழிகளைப் போல தரையிலிருக்கும் சருகுக் குப்பைகளைக் கால்களால் சீய்த்துத் தள்ளி உள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்னும். உணவுக்காக தரையிலேயே பொழுதைக் கழித்தாலும் இரவுநேரத்தில் அடைவதென்னவோ உயரமான மரக்கிளைகளில்தான்.

 

ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை

14. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகள்

15. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை தகவல்கள்

மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகள் குவீன்ஸ்லாந்தில் மழைக்காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. விக்டோரியா மகாராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட் (Prince Albert) அவர்களை சிறப்பிக்கும் விதமாக இதற்கு Albert’s lyrebird என்று பெயரிடப்பட்டுள்ளது. ருசியான இறைச்சிக்காக ஆரம்பகால ஐரோப்பியரால் அதிகம் வேட்டையாடப்பட்டக் காரணத்தால் இதன் எண்ணிக்கை குறைந்துபோனது. இன்றைய கணக்கெடுப்பின்படி சுமார் 3500 என்ற எண்ணிக்கையிலேயே ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகள் உள்ளன. சூப்பர் யாழ்ப்பறவைகளைப் போல இவையும் ஒலிநகல் செய்யக்கூடியவை என்றாலும் அவற்றோடு ஒப்பிடுகையில் இவை ஒலிநகல் செய்யும் ஒலிகள் மிகக்குறைவே. மற்ற வாழ்க்கை முறை அனைத்தும் சூப்பர் யாழ்ப்பறவையை ஒத்தது.

******

(11,12,13 ஆகிய மூன்று படங்களைத் தவிர ஏனைய படங்கள் இணையத்திலிருந்து பெறப்பட்டவை.)