16 March 2017

யாழ்ப்பறவை

பாடலுக்கும் ஆடலுக்கும் பெயர்போன ஆஸ்திரேலியப் பறவை இந்த யாழ்ப்பறவை. Lyrebird என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இதற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா? இந்தப் பறவையினத்தில் ஆண் பறவைக்கு மயில் தோகை போல் பெரிய வால் உண்டு. அதை விரித்தால் பார்ப்பதற்கு பழங்கால lyre என்னும் யாழ் இசைக்கருவியைப் போல இருக்கும். அதனாலேயே அதற்கு lyrebird என்ற பெயராகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட பதினைந்து மில்லியன் (ஒன்றரை கோடி) வருடங்களுக்கு முன்பிருந்தே யாழ்ப்பறவைகள் வாழ்ந்து வருகின்றன என்பதை அங்கு கிடைத்துள்ள எலும்புக்கூடு படிமங்கள் உறுதி செய்கின்றன.


1. யாழ்ப்பறவை தோகை விரித்த நிலையில்


2. பழங்கால யாழ் இசைக்கருவி


ஆஸ்திரேலியாவில் யாழ்ப்பறவைகள் பல வகையிலும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

3. பத்து சென்ட் நாணயம்
 

•     ஆஸ்திரேலியாவின் பத்து செண்ட் நாணயத்தில் யாழ் பறவைகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

4. அஞ்சல் தலை

•     1932 இல் யாழ்ப்பறவை பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

5. நூறு டாலர் நோட்டு

•     ஆஸ்திரேலியாவின் நூறு டாலர் தாளில் இதன் உருவம் இடம்பெற்றுள்ளது.

•     ஆஸ்திரேலிய திரைப்பட ஆணையத்தின் முத்திரையில் இடம்பெற்றுள்ளது.

6.தேசியப் பூங்கா முத்திரை

•     ஆஸ்திரேலிய தேசியப் பூங்கா மற்றும் வனவாழ்வு மையத்தின் முத்திரையில் இடம்பெற்றுள்ளது.

7. நிறுவன முத்திரை

8. கலைக்கல்லூரி முத்திரை

•     மேலும் பல இசைக்கல்லூரிகளும் நிறுவனங்களும் தோகைவிரித்து நடனமாடும் ஆண் யாழ்ப்பறவையின் உருவத்தை தங்கள் முத்திரைகளில் பதித்து சிறப்பித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் இரண்டு வகையான யாழ்ப்பறவைகள் காணப்படுகின்றன. ஒன்று சூப்பர் யாழ்ப்பறவை மற்றொன்று ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை சற்று சிவந்த நிறத்திலிருக்கும். சூப்பர் யாழ்ப்பறவை செம்பழுப்பு நிறத்தில் இருக்கும்.

 

9. சூப்பர் யாழ்ப்பறவை

10. சூப்பர் யாழ்ப்பறவை தகவல்கள்

சூப்பர் யாழ்ப்பறவைகள் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகளிலும் டாஸ்மேனியாவிலும் காணப்படுகின்றன. செம்பழுப்பு நிற உடலும் கரிய நிற அலகும் கால்களும் கொண்ட இப்பறவைகளில் ஆண் பறவையின் வால் தோகை போன்று மிக அழகாயிருக்கும். வெள்ளி நிறத்தில் மெல்லிய சல்லடை போன்று பதினாறு நீளமான இறகுகள் கொண்ட தோகையானது ஆண் பறவையின் கம்பீரத்தின் அடையாளம். அப்படியொரு அழகான பெரிய தோகை அமைய ஏழு வருடங்கள் பிடிக்குமாம். அதாவது யாழ்ப்பறவைக்குஞ்சு வளர்ந்து பருவ முதிர்ச்சி அடைய ஏழு வருடங்களாகிறது. பெண் பறவைகளுக்கு நீளமான தோகை இருந்தாலும் ஆணுக்கேயுரிய பிரத்தியேக வெள்ளிநிற சல்லடை இறகுகள் அதில் கிடையாது. ஆபத்தை உணரும் நேரங்களில் இப்பறவைகள் அலாரம் போன்ற எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி ஓடி மறைந்துவிடுகின்றன. 

அழகிய யாழ் போன்ற தோகையை விரித்தாடுவது அல்லாமல் யாழ்ப் பறவைக்கு மற்றொரு சிறப்பு உண்டு. அதாவது எந்த சத்தத்தைக் கேட்டாலும் அதை ஒலிநகல் (mimicry) செய்யும் இயல்பு இவற்றுக்கு உண்டு. இப்பறவைகள் ஒருநாளைக்கு நான்கு மணி நேரத்தைப் பாடுவதிலேயே கழிக்கின்றன. பெண் பறவைகளும் பாடும் என்றாலும் ஆண் பறவைகளின் பாடலுக்கு அது ஈடாகாது. குஞ்சுகள் தங்கள் இனத்துக்கான பாடலைக் கற்றுக்கொண்டு நன்றாகப் பாட ஒரு வருடகாலம் ஆகும். இப்பறவைகள் தங்களுக்கென்று தனித்த பாடல்களைக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது மற்றப் பறவைகளின் ஒலிகளையும் பாடல்களையும் அதில் கலந்துவிடுவதால் அதிகாலை நேரத்தில் ஒற்றை யாழ்ப்பறவை எழுப்பும் மாறுபட்ட ஒலியானது அங்கு ஏராளமான பறவைகள் இருப்பதாய் நம்மை எண்ணத் தோன்றும். 

11. சூப்பர் யாழ்ப்பறவை 1

மற்றப் பறவைகளின் ஒலியல்லாது கொவாலா, டிங்கோ போன்ற விலங்கொலிகளையும் ஒலிக்க வல்லவை. பொதுவாக தாங்கள் கேட்கும் எந்த சத்தத்தையும் ஒலிநகல் செய்ய வல்லவை. அடிலெய்ட் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட ச்சூக் (chook) என்னும் யாழ்ப்பறவை காகம், கிளி, லாரிகீட், மேக்பை, சிரிக்கும் கூக்கபரா, மைனா, காக்கட்டூ போன்ற பறவைகளின் ஒலிகளோடு கார் எஞ்சின் உறுமல் சத்தம், தீயணைப்பு வண்டியின் அலாரம், குழந்தையின் அழுகை, நாய் குரைப்பு, கேமராவின் க்ளிக் சத்தம் என நாற்பதுக்கும் மேலான ஒலிகளை மிமிக்ரி செய்யும் அசாத்தியத்திறமை பெற்றிருந்தது.

இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவை தன் அழகிய தோகையை மயில் போல விரித்து விசிறி போலாக்கி தலைக்கு மேலே கொண்டுவந்து முன்னும் பின்னுமாய் விசிறியும் அவ்வப்போது சிலிர்ப்பியும் நடன அசைவுகளை உண்டாக்கி பெண் பறவைகளைக் கவர முனைகிறது. ஆடலுடன் பாடலும் சேர்ந்துகொள்ள சொல்லவேண்டுமா? நிகழ்ச்சி களைகட்டிவிடும்.

12. சூப்பர் யாழ்ப்பறவை 2

நடனம் என்றால் மேடை இல்லாமலா? சூப்பர் யாழ்ப்பறவைகள் மண்ணால் 90 செ.மீ விட்டமும் 15 செ.மீ உயரமும் உள்ள மேடையமைத்து அதில் நின்றுதான் நடனமாடுகின்றன. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகளோ குச்சிகளைக் குவித்து மேடை அமைத்து அதில் நின்றபடி ஆடுகின்றன. மேடையென்றால் ஒரு மேடை மட்டுமல்ல, பல பெண் இணைகளைக் கவரவேண்டாமா? அதனால் ஒவ்வொரு ஆண் பறவையும் தன் எல்லைக்குள் பத்துப் பதினைந்து மேடைகளாவது கட்டி வைத்திருக்குமாம். எங்கெங்கு தேவையோ அங்கங்கு ஏறி நின்று ஆடலாமல்லவா?

இப்பறவையினத்தில் வாழ்நாள் இணை என்று எதுவும் கிடையாது. ஒரு ஆண் பறவை பல பெண் பறவைகளோடு இணையும். கூடு கட்டுவது, அடைகாப்பது, குஞ்சுகளை வளர்ப்பது அனைத்தும் தாயின் பொறுப்பு. அப்பா பறவைக்கு எந்த வேலையும் இல்லை. பெண் பறவை தரையை ஒட்டிய ஏதாவது பாறையிடுக்கிலோ தாழ்வான மரக்கிளைகளிடையிலோ குச்சிகளையும் இலைதழைகளையும் கொண்டு இன்ன வடிவம் என்றில்லாமல் ஒரு கூடு அமைக்கிறது. யாழ்ப்பறவை ஒரு ஈட்டுக்கு ஒரே ஒரு முட்டைதான் இடும் என்பது விநோதம். ஐம்பது நாட்கள் தொடர்ந்து ஒற்றையாளாகவே அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்க்கிறது தாய்ப்பறவை. ஆறு முதல் பத்து வாரங்கள் குஞ்சு கூட்டில் தாயுடன் வசிக்கும்.

 

13. பெண் சூப்பர் யாழ்ப்பறவை

மண்ணுக்குள்ளும் உளுத்துப்போன மரக்கட்டைகளிலும் வாழும் புழுக்கள், பூச்சிகள், மண்புழு, மரவட்டை, சிலந்தி, கரப்பான் பூச்சி, வண்டு போன்றவைதான் இவற்றின் பிரதான உணவு. எப்போதாவது பழங்களின் கொட்டைகளையும் விதைகளையும் உட்கொள்ளும். கோழிகளைப் போல தரையிலிருக்கும் சருகுக் குப்பைகளைக் கால்களால் சீய்த்துத் தள்ளி உள்ளிருக்கும் புழு பூச்சிகளைத் தின்னும். உணவுக்காக தரையிலேயே பொழுதைக் கழித்தாலும் இரவுநேரத்தில் அடைவதென்னவோ உயரமான மரக்கிளைகளில்தான்.

 

ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை

14. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகள்

15. ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவை தகவல்கள்

மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகள் குவீன்ஸ்லாந்தில் மழைக்காட்டுப் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. விக்டோரியா மகாராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட் (Prince Albert) அவர்களை சிறப்பிக்கும் விதமாக இதற்கு Albert’s lyrebird என்று பெயரிடப்பட்டுள்ளது. ருசியான இறைச்சிக்காக ஆரம்பகால ஐரோப்பியரால் அதிகம் வேட்டையாடப்பட்டக் காரணத்தால் இதன் எண்ணிக்கை குறைந்துபோனது. இன்றைய கணக்கெடுப்பின்படி சுமார் 3500 என்ற எண்ணிக்கையிலேயே ஆல்பர்ட்ஸ் யாழ்ப்பறவைகள் உள்ளன. சூப்பர் யாழ்ப்பறவைகளைப் போல இவையும் ஒலிநகல் செய்யக்கூடியவை என்றாலும் அவற்றோடு ஒப்பிடுகையில் இவை ஒலிநகல் செய்யும் ஒலிகள் மிகக்குறைவே. மற்ற வாழ்க்கை முறை அனைத்தும் சூப்பர் யாழ்ப்பறவையை ஒத்தது.

******

(11,12,13 ஆகிய மூன்று படங்களைத் தவிர ஏனைய படங்கள் இணையத்திலிருந்து பெறப்பட்டவை.) 

43 comments:

  1. மிமிக்ரி செய்யும் திறமை என்பது ஆச்சர்யப்படுத்துகிறது. பாடும் பறவைகள் என்பது உண்மையில் இவைதான் போலும். மேடை அமைத்து ஆடுவதும் வியப்பளிக்கும் தகவல். நன்றி, சுவாரஸ்யமான பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். பார்க்க மயில் அளவுக்கு ஈர்க்கவில்லை என்றாலும் அசாத்தியத் திறமைகள் கொண்டது.

      Delete
  2. யாழ்ப்பறவை விவரங்கள் வியப்பை தருகிறது. எவ்வளவு செய்திகள்!
    படங்கள் அழகு.
    அதிசய பறவையின் விவரங்களை தொகுத்து கொடுத்தற்கு மிகவும் நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. பறவைப்பிரியரான உங்களுக்கு பதிவு ரசித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  3. அறியாத தகவலை தமிழில் அறிய தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரைத்தமிழன்

      Delete

  4. நீங்க இந்தியா வரும் போது இந்த புறவை கூட்டிக்கிட்டு வந்தால் அதை சூப்ப்ர சிங்கரிலும் ஜோடியிலும் கலந்துக்க வைத்து நீங்க முதல் பரிசை அள்ளிச் செல்லாம்

    ReplyDelete
    Replies
    1. இது நல்ல ஐடியாவா இருக்கே... ஆனால் திரும்பிவரும்போது ஆஸியில் நேராக சிறைக்கு செல்வது உறுதி.. :)))

      Delete
    2. மதுரை உங்கள் கமென்டே தனிதான்!!! அதுவும் நகைச்சுவையுடன்!! ரொம்ப ரசித்தேன் சிரித்து முடியலை அதை இம்மாஜின் செய்து பார்த்து!!!!

      கீதா

      Delete
  5. ஆடல் பாடல் - யாழ்ப்பறவை பற்றிய தகவல்கள் ஆச்சரியம்...! நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  6. ஆஹா! எத்தனை அதிசயம்!!
    அறியாத புதினங்கள், தெரியாத தகவல்கள்....
    மிக உபயோகமான கட்டுரை கீதா. தெரியத்தந்தமைக்கு நன்றிகள். பாராட்டுக்களும்...

    ReplyDelete
    Replies
    1. போவர் பறவை பற்றி நீங்கள் எழுதியது நினைவுக்கு வருகிறது. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழி.

      Delete
  7. வழக்கம்போல அழகான படங்கள் + ஆச்சர்யம் அளிக்கும் தகவல்கள். குறிப்பாக மிமிக்ரி செய்தல் போன்றவை மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

    அதைவிட ஆச்சர்யம் தங்களின் பதிவுகளில் உள்ள வரிகளை என்னால் இன்று Copy & Paste செய்ய முடியாமல் ஆக்கியுள்ளீகள். அதனால் ஒவ்வொன்றையும் பற்றி எடுத்துச் சொல்லி சிலாகிக்க இயலாமல் போய் விட்டது.

    எனினும் இந்த மிக அருமையான பதிவுக்கு என் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆக்கியுள்ளீகள் = ஆக்கியுள்ளீர்கள்

      மேலிருந்து கீழ் மூன்றாவது படம் ...... சூப்பராக உள்ளது. :)

      Delete
    2. பதிவை உடனே அப்படியே அலேக் செய்ய பல ஆட்கள் உள்ளதால் சகோதரி இவ்வாறு செய்து உள்ளார்கள்...

      தட்டச்சு செய்து 'சிலாகிக்க' ஏதேனும் சிரமம் உள்ளதா ஐய்யா...?

      Delete
    3. ....கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2) -

      நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது...

      அறிவை நீ நம்பு - உள்ளம் தெளிவாகும் -
      அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது...



      காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
      கண் முன்னே தோணுவது சாத்தியமே...

      காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
      கண்ணுக்கு தோணாத சாத்தியமே...

      போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்...

      புரியும் அப்போது மெய்யான கோலம்...

      ....புரிந்தவர்களுக்கு புரிந்தால் நன்மை...

      நன்றி சகோதரி... Go ahead...

      Delete
    4. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார். என்னால் கூட தங்கள் பின்னூட்டத்தை இங்கு மேற்கோள் காட்ட இயலவில்லை. இப்படியான ஒரு அசௌகரியம் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன். ஆனால் புதிதாக ஒரு தொழில்நுட்பம் கற்றுக்கொண்டபின் அதை பயன்படுத்திப் பார்க்க விரும்பியதே காரணம். சென்ற பதிவில் ஜிஎம்பி ஐயாவின் கேள்விக்கான பதிலை ராமலக்ஷ்மி அவர்களின் பதிவைப் பார்த்து தட்டச்சு செய்துதான் பதிவிட்டேன். காப்பி செய்ய முடியாதபடி செய்திருப்பதில் சில வசதியின்மைகள் இருந்தாலும் சில வசதிகளும் இருப்பதை மறுப்பதற்கில்லையல்லவா.. தங்கள் வருகைக்கும் மனந்திறந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
    5. விளக்கத்துக்கு நன்றி தனபாலன். சில புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து பிறர் உதவியில்லாமல் நாமே செய்துபார்த்து செயல்படுத்துகையில் ஒருவித மகிழ்ச்சி நிலவுவது உண்மைதான்.

      Delete
  8. பாடும், ஆடும்...அழகிய பறவை... அருமையான தகவல்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி அனுராதா.

      Delete
  9. lyre bird ஐ யாழ்பறவை என மொழிமாற்றம் செய்தது அருமை

    ReplyDelete
    Replies
    1. பெயர்களை மொழிமாற்றம் செய்வது சரியல்ல என்று பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன். இருப்பினும் இங்கே யாழ்ப்பறவை என்று சொல்லும்போது ஏதோவொரு நெருக்கத்தை உணர்வதால் அதையே பயன்படுத்தியிருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  10. இப்பறவையின் பெயர்க்காரணம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. இதைப் பார்த்துதான் யாழ் தயாரித்திருப்பார்களோ என்றுகூட சிலசமயம் தோன்றுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  11. யாழ்ப் பறவை என்றதும் நான் ஏதோ யாழ்ப்பாணப் பறவை என நினைச்சிட்டேன் கீதா. மிக அழகிய பறவை. இத் தமிழ்ப்பெயர் டிக்‌ஷனறிப் பெயரோ இல்லை நீங்கள் வைத்ததோ? ஒஸ்ரேலியா இனப் பறவைக்கு எப்படித் தமிழ்ப் பெயர் கண்டு பிடிக்கிறீங்களென வியப்பாகவே இருக்கு. நிறையத் தகவல்கள் திரட்டித் தந்திருக்கிறீங்க அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... இது நாமே வைத்த பெயர்.. லயர் என்பதற்கு யாழ் என்ற பொருள் இருப்பதாலும் யாழ் போல இது தோகை விரிப்பதாலும் யாழ்ப்பறவை என்று பெயர் வைத்தாகிவிட்டது. :) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அதிரா.

      Delete
  12. ///அப்பா பறவை சொகுசு சுந்தரம்தான்./////
    ஹா ஹா ஹா இங்கின ஆரையும் திட்டலியே கீதா?:)

    ReplyDelete
    Replies
    1. திட்டுறதா.. இது பாராட்டாச்சே... :)

      Delete
  13. ...யாழ்பறவை என்ற பெயர் இனிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  14. இந்த யாழ் பறவைகள் ஒன்றரை கோடி ஆண்டுகளாக வாழ்கின்றன என்பது வியப்புக்குரிய செய்தி. இதன் மிமிக்ரி திறனும் வியக்க வைக்கிறது. மேடையமைத்து ஆடுதல், அதிலும் ஒரே சமயத்தில் பல மேடைகள் அமைப்பது எனத் தக்வல்கள் அனைத்தும் புதுமையாயும், ரசிக்கும்படியும் இருந்தன. நன்றி கீதா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா.. எல்லாமே வியக்கவைக்கும் தகவல்கள். வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி அக்கா.

      Delete
  15. அற்புதமான விவரங்கள் . இப்படி ஒரு பறவையை
    உடனே பார்க்கணுமே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி மோகன்ஜி. ஆஸிக்கு உடனே ஒரு டிக்கெட் போடுங்க.. :)))

      Delete
  16. சுவாரஸ்யமான ஆச்சரியமூட்டும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.


    //தட்டச்சு செய்துதான் பதிவிட்டேன்//

    எனக்கு ஒரு தகவல் தந்திருந்தால் அந்தப் பத்தியை அனுப்பியிருப்பேனே. சில வருடங்களுக்கு முன் எனது பல புகைப்பட மற்றும் பயணப் பதிவுகள் அப்படியே முழுதாக copy செய்யப்பட்டு தங்களது பெயரில் பல இடங்களில் வெளியிட்டபடி இருந்தபடியால் copy செய்ய முடியாதபடி டெம்ப்ளேட்டில் மாற்றம் கொண்டு வந்தேன். நீங்கள் சொல்வது போலவே, சில நேரங்களில் நண்பர்களுக்கு அசெளகரியம் ஏற்படுகிறது என்றாலும் அது தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. \\எனக்கு ஒரு தகவல் தந்திருந்தால் அந்தப் பத்தியை அனுப்பியிருப்பேனே.\\ பரவாயில்லை ராமலக்ஷ்மி. எவ்வளவோ பத்தி பத்தியாக தட்டச்சு செய்கிறோம்.. ஒரே ஒரு சிறு பத்தி தட்டச்சு செய்வதில் சிரமம் ஏதுமில்லை.. உங்கள் அன்புக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  17. அறிந்திராத தகவல் மட்டுமின்றி மிகவும் வியப்பும் விந்தையும் கூடவே! மெய்யாலுமே இயற்கை விந்தையான உலகம் தான்! யாழ்பறவை நல்ல பெயர் காரணப் பெயராகவும் உள்ளது...வியப்பு அவை பாடுவது மட்டுமின்றி பல குரல்களில் மிமிக்ரி செய்வதும், மேடை போட்டு ஆடுவதும்!!! ஆடலுடன் பாடலும் கேட்டு ரசிப்பதுவேதான் சுகம் சுகம் என்ற பாடலும் நினைவுக்கு வந்தது!!!

    மிக மிக அருமையான பதிவு. மிகவும் ரசித்து வாசித்தோம்...மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. அழகான பாடலோடு ரசனையாகக் கருத்திட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி துளசி சார்.

      Delete
  18. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பது போல் யாழ்பறவையைக் கண்டான் யாழ் படைத்தான் எனலாம் போல...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ.. மாற்றுச்சிந்தனையும் ரசிக்கவைக்கிறதே.. நன்றி தோழி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.