10 May 2016

மகிழ்வும் நெகிழ்வும் 3


ஒரு படைப்பாளிக்கு மகிழ்வும் நெகிழ்வும் தரக்கூடியவை படைப்புகளுக்கான அங்கீகாரங்கள் என்பதில் எந்தப் படைப்பாளிக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அப்படியான என் சமீபத்திய சந்தோஷங்கள் சிலவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும்பொருட்டும்  எனக்கான ஆவணச்சேகரிப்பாகவும் இங்கு அவற்றைப் பகிர்கிறேன்.




ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஆஸ்திரேலிய சிறுகதை மன்னர் ஹென்றி லாசன் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கதைகள் சிலவற்றை நான் தமிழில் பெயர்த்ததும், அவை என்றாவது ஒருநாள்என்ற நூலாக அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருப்பதையும் பலரும் அறிவீர்கள். இந்நாள்வரை அந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு எதையும் முறையாக செய்யவில்லை என்றாலும் நட்புகள் பலரையும் சென்றடைந்து அவர்களுடைய அறிமுக உரைகளையும் விமர்சனங்களையும் புகழுரைகளையும் என்னிடத்தில் கொணர்ந்து குவித்தது.


மகிழ்ச்சி 1



சென்ற ஞாயிறு (01-05-16) அன்று சிட்னியில் உள்ள ஹோம்புஷ் பள்ளி வளாகத்தில் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தமிழ்ப் படைப்பாளர் விழாவில் நூலறிமுகம் நிகழ்ச்சியில் என்னுடைய நூலும் இடம்பெற்றது ஒரு நல்லங்கீகாரம். 


நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுடன்...

(புகைப்படங்களுக்காய்
தோழி மணிமேகலாவுக்கு என் அன்பான நன்றி)

என்றாவது ஒரு நாள்நூலை அவ்விலக்கியக்கூட்டத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினை உருவாக்கித் தந்ததோடு, அந்நூலுக்கான அறிமுக உரையையும் தானே வழங்க முன்வந்த நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுக்கு என் அன்பான நன்றிஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வானொலியில் பல வருடங்களாக 'பண்பாட்டுக் கோலங்கள்' என்னும் நிகழ்ச்சியை வழங்கிவரும் இவர், 'என்றாவது ஒரு நாள்' நூலை வாசித்தபிறகுஅவ்வானொலிக்காக என்னை நேர்காணல் கண்டதை நன்றியுடன் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். நேர்காணல் நேரலையில் சென்றவருடம் ஒலிபரப்பானது.


மகிழ்ச்சி 2



இத்தகு அங்கீகாரங்களால் அகமகிழ்ந்திருக்கும் வேளையில் தற்செயலாய் அறிய நேர்ந்த மற்றொரு தகவல் மகிழ்வை மேலும் கூட்டுவதாக உள்ளதுசிங்கப்பூரில் தலைமை நூலகம் உள்ளிட்ட 21 நூலகங்களிலும், கனடாவில் ஒரு நூலகத்திலும் என்னுடையஎன்றாவது ஒருநாள்நூல் இடம்பெற்றுள்ளது என்பதை ஒரு மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட முகமறியா தமிழார்வல நெஞ்சங்களுக்கு என் அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.


மகிழ்ச்சி 3




பாரீஸில் வசிக்கும் ஃபேஸ்புக் தோழி ஒருவர், சென்றவாரம் அனுப்பிய செய்தியில், தற்சமயம் உங்களுடையஎன்றாவது ஒருநாள்நூலைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு உங்களுடைய படைப்புகள் மேலும் இருந்தால் வாசிக்கத்தாருங்கள் என்று கேட்டபோது, உவகையின் உச்சம் சென்றேன். வாசக அங்கீகாரம் ஒரு பெரும் அங்கீகாரமன்றோ?


மகிழ்ச்சி 4

(நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு நன்றி)

ப்ரதிலிபியில் என்னுடைய முதல் மின்னூல் வெளியானது மகிழ்வின் ஏடுகளில் மற்றொன்று. ‘அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?’ என்னும் 32 அத்தியாயங்கள் கொண்ட அத்தொடர்கதையின் முகப்பு ஓவியத்தை வழங்கிய ஓவிய நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு என் அன்பான நன்றி. இவர் இனியவை கூறல் என்ற வலைப்பூ வழியே பதிவுலக நட்புகளுக்கு பரிச்சயமானவர்.  

இவைபோக, பரபரப்பான பதிவுலகில் சகபதிவர்களின் மனத்தில் நமக்குமொரு இடம் ஒதுக்கப்பட்டு நம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்றால் கூடுதல் மகிழ்விற்கு சொல்லவும் வேண்டுமா?


மகிழ்ச்சி 5


சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பகிர்ந்திருந்த குடி குறித்த என் கவிதையை தன்னுடைய 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் பகிர்ந்து சிறப்பித்தமைக்காகவும், கோடைவகுப்புகள் குழந்தைகளுக்கு நன்மையா தீமையா என்ற தலைப்பில் மற்றப் பதிவுலகப் பிரபலங்களின் கருத்துகளோடு என்னுடைய கருத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியமைக்காகவும் நண்பர் மதுரைத்தமிழன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.  




தொடர்ந்துவந்து ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பதிவுலக நட்புகள் அனைவருக்கும் அன்பான நன்றி. 

28 April 2016

காதல் சிறகை காற்றினில் விரித்து...


எங்கே அவள் என்றே மனம் 
தேடுதே ஆவலால் ஓடிவா.. 
அங்கே வரும் என் பாடலைக் 
கேட்டதும் கண்களே பாடிவா...




தூது செல்ல ஒரு தோழியில்லையென்று
துயர் கொண்டாளோ தலைவி...






உன்னை நான் சந்தித்தேன் - நீ
ஆயிரத்தில் ஒருவன்...




ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா..
உண்மைக்காதல் மாறிப்போகுமா..




காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வானவீதியில் பறக்கவா... 




உன்னிடம் மயங்குகிறேன்..
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர்க் காதலியே..
இன்னிசை தேவதையே...




உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே...




காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ...
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ...




உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி...




நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்புமணி வழங்கும் சுரங்கம் 
வாழ்க.. வாழ்க... 




யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..
அன்பே எங்கள் உலக தத்துவம்..
நண்பர் உண்டு பகைவர் இல்லை..
நன்மை உண்டு தீமை இல்லை.. 


24 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 (தொடர்பதிவு)

என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்காக சில எழுத்தாளுமைகளைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஏராளமான பதிவர்களும் பதிவுகளும் என் மனம் கவர்ந்திருந்தாலும் இதுவரை அதிகம் அடையாளங்காட்டப்படாத வலைத்தளங்களையே இத்தொடரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இன்னும் சில…




ஆஸியில் எனக்கமைந்த அற்புதமான தோழி மணிமேகலா. இவரது தளம் அட்சயப்பாத்திரம். தமிழின்மீதும் தமிழர் சமுதாயம் மீதும் அளவிலாப்பற்று கொண்டவர் என்பதோடு தமிழின் வளர்ச்சிக்காக அதன் மொழிச்சிறப்பையும், பாரம்பரியப் பெருமைகளையும் தொடர்ந்து வரும் தலைமுறைக்குக் கடத்த தன்னால் என்னென்ன செய்ய இயலும் என்று எந்நேரமும் யோசிப்பவர். எந்தக் கருத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆழம் வரை சென்று அலசுபவர். உயர்திணை என்ற அமைப்பின்மூலம் மாதாந்திர இலக்கியக்கூடல்களை நிகழ்த்திக்கொண்டிருப்பவர். இன்னும்கூட இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவருடைய பதிவுகளில் சமீபமாய் என் மனம் கவர்ந்தவை கண்டறியாத கதைகள் என்ற தலைப்பில் இவர் பதிவிடும் அருமையானதொரு தொடர்பண்டையப் பாரம்பரியப் பொருட்களின் அமைப்பு, பயன்பாடு, மாற்றம், அழகியல் இவற்றை இலக்கிய மேற்கோள்களோடு அவர் எடுத்துரைப்பது சிறப்பு.










குடும்ப மருத்துவர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களை நம் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணிக்கொள்ளலாம். மனம் விட்டு அவரிடம் நம் நோய்கள் குறித்துப் பேசி ஆலோசனைகள் கேட்கலாம். தினக்குரலில் மருத்துவரைக் கேளுங்கள் என்ற பகுதியில் அவரிடம் கேட்கப்படும் அந்தரங்கமான உடல் மனப் பிரச்சனை குறித்த கேள்விகளும் அதற்கான அவர் பதில்களும் கூட நம்மில் பலருக்கும் பயன்படக்கூடும். அவர் தொடாத உடற்கோளாறுகள் ஏதுமில்லை என்னுமளவுக்கு அவர் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன  நோய் மற்றும் உடற்கோளாறுகள் குறித்த விழிப்புணர்வும், மருத்துவ ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கைக் குறிப்புகளும், நோயாளிகளின் சந்தேகங்களும் தீர்வுகளும், பயம் போக்கும் தெளிவுகளும்மருத்துவம் தவிரவும் தமிழிலக்கிய ஆர்வலர், கவிஞர், பதிவர், புகைப்பட ஆர்வலர் என்று பன்முகங்கொண்ட மருத்துவரின் தமிழ்ச்சேவை முக்கியமாய் நோய்கள் குறித்து எளிய தமிழில் விளக்கும் அவரது திறம் மிகுந்த பாராட்டுக்குரியது.










இப்போது நான் குறிப்பிடப்போகும் பதிவரை முன்பே பலமுறை பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இப்போதும் குறிப்பிடுவதில் பெருமையே எனக்கு. சமீபத்தில் தன்னுடைய தொண்ணூறாவது பிறந்தநாளைக் கொண்டாடியவரும் எங்கள் குடும்பத்தின் மூத்த வழிகாட்டியும் எங்கள் அனைவரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவருமான சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள். எழுத்துச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் அவரை எண்ணிக்கொண்டால் போதும், சோர்வு பறந்துவிடும் என்று நான் உரைப்பதெல்லாம் வெற்றுப் புகழாரமன்று. உண்மை. அவருடைய அற்புதமான பல பதிவுகள் இன்னும் பலரைச் சென்றடையவேண்டும் என்னும் பேராசையின் உந்துதலோடு இலக்கியச்சாரல் என்னும் அவரது தளத்திலிருந்து சில பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.








கட்டுப்பெட்டித்தனமான சமூக நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையுடனும் துணிச்சலுடனும் தன் எழுத்துகளை முன்வைக்கும் பெண் எழுத்தாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர், தமிழிலும் சிங்களத்திலும் தேர்ந்த புலமை வாய்ந்தவர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், பாடகர், பாடலாசியர், ஆய்வறிஞர், ஏராளமான இலக்கிய விருதுகளுக்கு சொந்தக்காரர் என்னும் ஏராளமான சிறப்புகளுக்கு உரியவர் இலங்கையைச் சேர்ந்த தோழி லறீனா அப்துல் ஹக் அவர்கள்.  அவருடைய காத்திரமான கருத்தாழமிக்கப் பதிவுகளிலிருந்து சில..

(முக்கியக்குறிப்பு – இத்தளத்துக்குச் செல்லுமுன் நம்முடைய கணினியின் ஒலியளவைக் குறைத்துக்கொண்டு செல்வது நலம். சட்டென்று எங்கிருந்தோ பாடல் ஒலித்துத் திடுக்கிடச்செய்கிறது. தங்களுடைய தளங்களில் தானியங்கியாக இதுபோன்று பாடல்களை ஒலிக்கவிடும் பதிவர்கள்,  பதிவினை ஊன்றிப்படிக்க இயலாமல் வாசகர்க்கு ஏற்படும் சங்கடத்தை உணர்ந்தால் நல்லது. )







இத்தொடரில் நான் குறிப்பிட்டுள்ள பதிவர்களுள் ஓரிருவர் தவிர மற்றவர்கள் மற்றத் தளங்களுக்கு வருகை புரிவதோ கருத்திடுவதோ இல்லை என்றாலும் நான் வியந்து வாசிக்கும் பதிவர்கள் என்ற வகையில் அவர்களைக் குறிப்பிட்டுள்ளேன். இங்கே குறிப்பிடப்பட்டவர்களோடு, என் நட்பு வட்டத்தில் உள்ள நான் தொடரும், அனைத்துப் பதிவர்களும் எனக்குப் பிடித்த, என் மனம் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  


வாசிக்கும் வலைப்பூ வழியே நான் தொடரும் பதிவர்கள் ஒவ்வொருவரிடமும் என்னைக் கவர்ந்த அம்சங்களாக அழகிய எழுத்துவன்மை, படைப்பாற்றல், தமிழார்வம், கவித்திறம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, நட்புறவு, சுவாரசியமான அனுபவப்பகிர்வு, பயணக்குறிப்புகள் என ஏராளமுண்டு. அனைவரைப் பற்றியும் எழுதத் தொடங்கினால் இத்தொடருக்கு முடிவே இராது. எனவே நட்புகள் அனைவருக்கும் என் அன்பினைத் தெரிவித்து இத்தொடரை நிறைவு செய்கிறேன். என் எழுத்தை வாசித்தும் ஊக்கந்தரும் பின்னூட்டங்கள் அளித்தும் என்னைத் தொடர்ந்து எழுதவைத்துக் கொண்டிருக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. 




இத்தொடரில் என்னை இணைத்த ஊஞ்சல் கலையரசி அக்காவுக்கு என் சிறப்பு நன்றி.