2 October 2014

பால்டி தாம்ஸன் - ஆஸ்திரேலியக் காடுறை கதை




கரடுமுரடான சதுரவடிவ முகம், சுருள் சுருளான செம்பழுப்பு மயிர் டோப்பா, அடர்புதரென நரைமயிர்ப் புருவங்கள், குறுகுறுக்கும் கண்கள்அனைத்தும் நடிகர் டாம்பியரை நினைவுபடுத்தின. வந்தேறியாய் வந்து, நாடோடியாய் அலைந்துதிரிந்து, கிடைக்கும் வேலையைச் செய்யும் எடுபிடியாளாகி, மந்தையோட்டி, ரோமக்கத்தரிப்பாளன், மேற்பார்வையாளன், தொழில்முனைவோன், புதுப்பணக்காரன், பெரும் நிலச்சுவான்தாரர் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து இறுதியில் வங்கிமோசடியால் பாதிக்கப்பட்டவரானார். அவர் நுழைந்து வெளியேறிய அத்தனைத் தொழில்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். அவர்தான் பால்டி தாம்ஸன்.

அவர் முன்பொருமுறை பாராளுமன்றத்திற்கும் தேர்வாகியிருந்திருக்கிறார். அவருக்கு மறுபடியும் பாராளுமன்றம் போகும் ஆசை இருந்தது. தான் ஒரு முன்னாள் எம்.பி. என்று அவர் சத்தியம் செய்தாலும், மக்கள் நம்பமறுத்தனர். அவருடைய பொழுதுபோக்கு அரசியல் என்றாலும் அவருடைய அரசியலறிவு குறுகியதாக இருந்தது. அவர் எந்நேரமும் எதையாவது எவரையாவது தூற்றிக்கொண்டிருந்தார். அரசையும் வங்கிகளையும் தூற்றாத நேரங்களில் அவர் நாட்டைத் தூற்றிக்கொண்டிருந்தார். தொழிற்சங்கங்களை, அதன் தலைவர்களை விடவும் தன்னால் நன்றாக நடத்தமுடியும் என்று அவர் எண்ணுவதைப் போல் தொழிலாளர்களின் தலைவர்களை அவ்வப்போது தூற்றிக்கொண்டிருந்தார். மேலும் பாராளுமன்றத்தை, பிரதமரை விடவும் தன்னால் நேர்த்தியாக நடத்தமுடியும் என்றும் அவர் நினைப்பதைப் போன்று இருந்தது.

அவர் ஆளுங்கட்சி பற்றி எப்போதும் அதிருப்தி தெரிவித்துக்கொண்டிருந்தார். ஒரு ரோமக்கத்தரிப்பாளனோ எடுபிடியாளனோ நல்ல வாதத்திறமையும் அரசியலில் மிதமான ஈடுபாடும் கொண்டிருந்தவனாயிருந்தால், அவனுக்கு தாம்ஸனின் ரோமக்கத்தரிப்புக் கொட்டகையில் ஒரு அடிமையைப் போல் நாளெல்லாம் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் தாம்ஸன் நாள் முழுவதும் அவனை வேலைசெய்யவிடாமல் அவனுடன் வாதிட்டுக் கொண்டிருப்பதோடு, முடிவில் அவனுக்கு அன்றையக் கூலியையும் கொடுத்தனுப்புவார்.

அவரிடம் யாராவது வேலை கேட்டு வந்தால் அவர்களிடம் சொல்வார், “இனிமேல் யாரையும் என்னால் வேலைக்கு எடுக்கமுடியாது. வங்கியிலே பணமில்லாதபோது நான் வேலைக்கு எடுக்கும் ஆட்களுக்கு என்னாலும் பணம் தர இயலாது. என் குடும்பத்துக்கு உணவிட மட்டும்தான் எனக்கு வசதியிருக்கிறது. சென்றவருடம் என்னால் சில சுக்கான் பாறைகளையும் புல்விதைகளையும் மட்டுமே விற்பனைக்கு அனுப்பிவைக்க முடிந்தது. அதுவும் வண்டிக்கூலிக்கே போதவில்லை. இப்போது செம்மறியாட்டு மந்தையொன்றை அனுப்பவிருக்கிறேன். அதிலொன்றும் பெரிதாய்க் கிடைத்துவிடப் போவதில்லை, தலைக்கு மூன்று பென்சுகள் கிடைக்கலாம். வங்கி திவாலாகுமுன் என்னிடம் இருபதாயிரம் இருந்தது, ஆனால் இப்போது ஒன்றுகூட இல்லை. நானும் என் பெட்டி படுக்கையை சுருட்டிக்கொண்டு வேலைதேடிப் போகவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறேன்.” என்பார்.

சரி, பால்டி, ங்களுடைய அழகான படுக்கையை சுருட்டி எடுத்துக்கொண்டு எங்களுடன் வாருங்கள், நாங்கள் உங்கள் கூடவே இருந்து உங்களைக் கடைசிவரை பார்த்துக்கொள்கிறோம்.” என்பார்கள் அவர்கள்.

நீங்கள் நம்பவில்லையென்று தெரிகிறது. நிலைமை என்னவென்று உங்களுக்கு நாளை சுற்றிக்காட்டுகிறேன். நீங்கள் கடைக்குச் சென்று என் கணக்கில் உங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள். இன்றிரவு இந்தக் குடிசையில் தங்கிக்கொள்ளுங்கள். நாளைக் காலை உங்களை சந்திக்கிறேன்.” என்பார்.

ஆனால் பெரும்பாலும் தேநீருக்குப் பிறகு அவர் அந்தக் குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்து அந்த வழிப்போக்கருடன் தொழிற்சங்கங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் விவாதிக்க ஆரம்பித்துவிடுவார். அவருடைய கருத்துடன் ஒத்துப்போய், ஆமோதிக்கும்வரை விடியவிடிய வாதிட்டுக் கொண்டிருப்பார்.

பால்டி தாம்ஸனின் ரோமக்கத்தரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பாதையானது, பலருக்கும் ஒரு நல்ல உணவிடம் அழைத்துச் செல்லும் பாதையாகிப்போனது, முக்கியமாக, பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் இருக்கும் நாட்களில்! இலக்கின்றி வேலைதேடிச் செல்லும் வழிப்போக்கன், பால்டி தாம்ஸனிடம் பேச்சோடு பேச்சாக தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகச் சொல்லி, பால்டியின் அரசியல் கருத்துகளில் தனக்கு ஆர்வமிருப்பதாக காட்டிக்கொள்வான். முதலில் அவருடைய கருத்துக்களை எதிர்ப்பான், நிறைய குறைநிறைகளை அலசுவான், இறுதியாக பால்டியின் கோணத்தில் யோசித்துப்பார்த்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாய் சொல்வான். முடிவில் கையில் உணவுப்பொட்டலத்தோடும் வாய் நிறைய சிரிப்போடும் தோழனிடம் மகிழ்வோடு விடைபெற்றுச் செல்வான்.

குளிர்காயும் நேரங்களில் பேசப்படும் கதைகளில் முதிய பால்டி தாம்ஸனைப் பற்றிய கதைகள் நிறைய பேசப்பட்டன. ஒரு புத்தாண்டு தினத்தின் நள்ளிரவில் ரோமக்கத்திரிப்பாளர்கள், பால்டி தாம்ஸனை எழுப்பி ரோமக்கத்தரிப்புக் கொட்டகை தீப்பற்றி எரிவதாக பொய் சொன்னார்களாம். சட்டையை அணிந்துகொண்டு வெளியே ஓடிவந்த பால்டி தாம்ஸன், டோப்பா அணிய மறந்துபோயிருந்தாராம். தொழிலாளிகள் செய்த குறும்புவேலைக்காக அவர்களனைவரையும் அங்கேயே அப்போதே வேலைநீக்கம் செய்தாராம். ஆனால் மறுநாள் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி அவருடைய ரோமக்கத்தரிப்புக் கொட்டகைக்கு வழக்கம்போல வேலை செய்யச்சென்றனராம்.

காடுறை வாழ்க்கையின் நகைச்சுவைகள் யாவுமே இதுபோன்று வருத்தமும் பச்சாதாபமும் வரவழைக்கும் நையாண்டி வேடிக்கைகள்தாம். தற்செயலாகவோ, வலிந்தோஎல்லா காடுறை நகைச்சுவைகளிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதைக் காணலாம்.

பால்டி தாம்ஸன் பற்றிய மற்றொரு கதை. ரோமக்கத்தரிப்புத் தொழிலில் பயிற்சிபெற்ற புதியவன் ஒருவன், பால்டி தாம்ஸனை ரோமக்கத்தரிப்பு நிலையத்தின் தொழிலாளி என்று நினைத்து அவரிடம் பால்டி தாம்ஸனைப் பார்க்கவிரும்புவதாக சொல்லியிருக்கிறான். இவர் கேட்டிருக்கிறார்,

நீ ஏன் அவரைப் பார்க்கவேண்டும்? வேலை தேடிக்கொண்டு வந்திருக்கிறாயா?”

ஆமாம். எனக்கு ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? பால்டி தாம்சன் எப்படிப்பட்ட முதலாளி?”

நீ இங்கிருந்து அடிலெய்டுக்கு நடையைக் கட்டு. அங்கிருந்து வடக்கில் ஏதேனும் ஒரு வளைகுடா நாட்டுக்குப் போனாலும் அவ்வளவு கஷ்டமிருக்காது. பால்டி தாம்ஸன்தான் ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் மோசமான ஒரு முதலாளி. பாழாய்ப்போன கிழ ஜந்து! ஒரு அடிமையைப் போல ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவன் கூடவே இருந்திருக்கிறேன். (பால்டியின் வயது அறுபதுக்கு மேல்) ஆனாலும் அந்த கிழட்டு கஞ்சன் எனக்குத் தரவேண்டிய இரண்டு காசோலைகளைத் தராமல் இழுத்தடிக்கிறான். கேட்டால் அவனுடைய பணத்தையெல்லாம் வங்கி எடுத்துக்கொண்டுவிட்டது என்கிறான். இதையே தான் பலவருடங்களாக சொல்லி அழுதுகொண்டிருக்கிறான், நாசமாய்ப்போன நயவஞ்சகன். அவனுடைய மனைவி, குடும்பம், உறவு அனைத்தையும் வசதியாக வைத்துக்கொள்ள நான் இதுவரை தேவைப்பட்டேன். கடவுள் கிருபையால் நான் கடந்த முப்பது நாப்பது வருடங்களை ஓட்டிவிட்டேன். ஒருபோதும் நாடோடியாய்த் திரிந்து கஷ்டப்பட்டு வேலைசெய்திருக்காத அந்த அற்பத்தனமான கிழட்டுத் திமிங்கலத்திடமிருந்து வெளியேறி, நாளை நானும் நடையைக் கட்டப் போகிறேன். நான் இவ்வளவு சொன்னபிறகுமா நீ அந்த நீசன் தாம்ஸனிடம் வேலைகேட்கப் போகிறாய்? அதற்காக நீ மிகவும் வருத்தப்படுவாய். அவனிடம் வேலைசெய்வதற்கு பதில் நீ நரகத்துக்குப் போகலாம்.”

நல்லது.. நான் இங்கிருந்து போய்விட எண்ணுகிறேன். எனக்கு இங்கு  ஏதாவது உண்ணக் கிடைக்குமா?”

அவனா? அவன் நாய்க்கு ஒரு காய்ந்த ரொட்டித்துண்டு கூட போடமாட்டான். நீ இங்கு இருப்பதைப் பார்த்தாலே அவனுடைய இடத்தில் நீ அத்துமீறி நுழைந்துவிட்டதாக சொல்வான். நீ என்னோடு கடைக்கு வா, நான் உனக்கு நீ தொடர்ந்து செல்வதற்குப் போதுமான அளவு உணவை வாங்கித் தருகிறேன்.” இப்படித் தொடரும் கதைகள் ஏராளம்.

அவர் கலை இலக்கியத்திலும் ஆர்வமுள்ளதுபோன்று காட்டிக்கொள்வார், ஆனால் எல்லாமே அரைகுறை! ஒருமுறை நாங்கள் வேலையின்றியிருந்தபோது எங்கள் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க, பால்டி தாம்ஸனின் ரோமக்கத்தரிப்பு நிலையத்தில் அவரை சந்தித்து, அவருடைய சொந்தக் கருத்துக்களையே எங்கள் கருத்துக்களென சொல்லி அவரை மகிழ்வித்த நிகழ்வை நினைத்துக் கொள்கிறேன். அவருடைய நிலையத்தில் பணிபுரிந்த எங்கள் தோழன் ஒருவனால் அவை முன்பே எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டவை. அவர் எங்களுக்கான உணவை வாங்கித் தந்ததோடு அன்றிரவு குடிசையில் தங்க அனுமதித்து மறுநாள் காலை எங்களை வந்து பார்ப்பதாக சொல்லிச் சென்றார்.

மறுநாள் காலை அவரைப் பார்த்தபோது மறுபடியும் பேச்சு தொடர்ந்ததுஅவருடைய கருத்துக்களோடு ஒத்துணர்வு கொண்டு உடனடியாக ஏற்றுக்கொண்டோம். ஒன்றிரண்டு கேள்விகளுக்கான பதில்களிலேயே சமாதானமாகிப்போனோம். அவருடன் சேர்ந்து ஒத்த குரலில் எல்லாவற்றையும் தூற்றினோம். பேச்சோடு பேச்சாக, ஒரு அரசியல் பத்திரிகையில் கூடிய சீக்கிரமே எங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக சொன்னோம்

இறுதியாக அவர் உள்ளே சென்று ஒரு பவுண்டு நாணயத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சொன்னார், “இதை ஒரு தாளில் மடித்துப் பத்திரமாய் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். தொலைத்துவிடாதீர்கள்.”

பால்டியின் நன்மதிப்பைப் பெற்று, அவரிடம் வேலையும் பெற்று அவர் கூடவே இருக்க ஒரே வழி, அவரது கருத்துகளுக்கெல்லாம் மாற்றுக்கருத்து சொல்லி எதிர்ப்பைத் தெரிவிப்பதொன்றுதான் என்பதை பின்னாட்களில்தான் புரிந்துகொண்டோம்.


**********
(படம்: நன்றி இணையம்)

29 September 2014

வசீகரிக்கும் விஸ்டரியா மலர்ப்பூங்கா

நம்மூர் டிசம்பர் பூக்களைப் பார்த்தாற்போன்ற பிரமை. வெளிர் மற்றும் அடர் ஊதா நிறங்களில் பூங்காவில் பார்க்குமிடமெல்லாம் சரம் சரமாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன இந்த விஸ்டரியா (Wisteria) பூக்கள்! கொடிவகையைச் சார்ந்த இத்தாவரத்தின் தாயகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளாம். எது கிடைத்தாலும் பற்றிக்கொண்டு மளமளவென்று ஏறிவிடும் இயல்புடைய இது இருபது மீட்டர் உயரம் கூட ஏறிவிடுமாம். உலகத்திலேயே மிகவும் பெரிய விஸ்டரியா கொடி கலிஃபோர்னியாவில் Sierra Madre என்ற ஊரில் உள்ளது. 1894 இல் நடப்பட்ட அது இப்போது கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பளவில் 250 டன் எடையில் பரவிக்கிடக்கிறதாம். மலர்கள் நறுமணம் பரப்பினாலும் விதைகள் நச்சுத்தன்மை கொண்டவை.

விஸ்டரியா பூங்கா (wisteria garden)

விஸ்டெரியா பூக்கள் (wisteria)

சரவிளக்குப்போல் தொங்கும் விஸ்டரியா மலர்ச்சரம்

விஸ்டரியா பூக்கள்

ஆற்றோரம் படர்ந்து நிற்கும் விஸ்டரியா கொடிமலர் அழகு.

விஸ்டெரியா மலர்ச்சரம்

இலை மூடிய கிளை மூடிய விஸ்டரியா மலர் அழகு.

விஸ்டரியா மலர்ப்பந்தல்

பற்றுச்செடியை பார்வையினின்று மறைத்திருக்கும் விஸ்டரியா மலர்க்கொடி

முரண்வண்ணங்கள் 

18 September 2014

ஆஸ்திரேலிய பெலிக்கான்

மெல்போர்ன் உயிரியல் பூங்காவில்...








17 September 2014

பெருங்களிற்று செவி போல..

மலைமேல் வளர்ந்திருக்கும் சேம்பின் இலைகள் குளிர்ந்த வாடைக்காற்றால் அங்குமிங்கும் ஆடி அசைந்து கொண்டிருக்கிறதாம். அதைப் பார்ப்பதற்கு பெரிய யானையின் காதுகள் அசைவதைப் போன்றிருக்கிறது என்கிறது குறுந்தொகைப் பாடலொன்று. புலவர்களின் கற்பனை பிரமிக்கவைக்கிறது அல்லவா?

இவை எங்கள் சென்னை தோட்டத்துச் சேம்பிலைகள்.



கீழே உள்ளவை மெல்போர்ன் பூங்காவில் சேம்பிலையொத்த இலைகள்



வலைச்சரத்தில் மூன்றாம் முறையாக நான்...


கீதா மதிவாணன் என்னும் நான் கீதமஞ்சரி என்ற பெயரில் பதிவுலகில் அடியெடுத்துவைத்து மூன்றரை வருடங்களாகின்றன. சராசரியாக வாரமொரு பதிவு என்ற கணக்கில் இதுவரை 199 பதிவுகள் இட்டுள்ளேன். என்னுடைய இருநூறாவது பதிவை வலைச்சரத்தில் இடுவதை பெருமையாகக் கருதுகிறேன். இதற்கு முன் இரண்டு முறை வலைச்சர ஆசிரியப் பணியில் இருந்துள்ளேன் என்பதால் என்னைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை என்று எண்ணுகிறேன். 

முதன்முதலில் என்னை வலைச்சர ஆசிரியராகப் பரிந்துரை செய்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நியமித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் பணிவான நன்றியும் வணக்கமும்.



இதுவரை எழுதி என்ன சாதித்திருக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதிவுலகில் பல நல்ல நட்புகளைப் பெற்றிருக்கிறேன். சிறப்பான பதிவர்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை முன்வைத்து என் எழுத்துத் திறனை மேம்படுத்தும் ஆர்வத்தை வளர்த்திருக்கிறேன். போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் விருதுகள் பெற்று எனக்கென ஒரு இடத்தை உங்கள் அனைவர் மனத்திலும் தக்கவைத்திருக்கிறேன். இவற்றோடு, நானறிந்தவரை எந்த வகையிலும் பிறர் மனம் புண்படாதவகையிலும், என் மனத்துக்கு நிறைவு உண்டாகும் வகையிலும் வாசகர் எதிர்பார்ப்பை ஓரளவேனும் ஈடுசெய்யும் வகையிலும் எழுதியுள்ளேன், எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

இதுவரை பல கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்பு கதைகள், பல்சுவைப் பதிவுகள் என கலந்துகட்டி எழுதியிருந்தாலும் பலராலும் விரும்பி வாசிக்கப்படுபவை என்னுடைய கட்டுரைகளே என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஆஸ்திரேலிய உயிரினங்கள் பற்றிய கட்டுரைகள் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன. 



இந்த வாரம் முழுவதும் என்னோடு பயணிக்க உள்ள உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்று மகிழ்கிறேன். என்னால் இயன்றவரை பல நல்ல படைப்பாளிகளை அறிமுகப்படுத்த விழைகிறேன். புதியவர்களுக்குப் பழகியவர்களையும் பழகியவர்களுக்குப் புதியவர்களையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி தமிழ்ப் பதிவுகளின் தரத்தையும் பெருமையையும் அடுத்த படிக்கு உயர்த்தும் வலைச்சரத்தின் நன்னோக்கத்துக்கு நம்மாலான பங்கினை ஆற்றுவோம். வாருங்கள். நன்றி.

இரண்டாம் நாள்
தம்பொருள் என்ப தம் மக்கள்



மூன்றாம் நாள்
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!


படம்: நன்றி இணையம்







ஐந்தாம் நாள்
தமிழன் என்றோர் இனமுண்டு

படம்: நன்றி இணையம்









இதுவரை என்னுடன் பயணித்து கருத்திட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் என் அன்பான நன்றி. 

10 September 2014

தமிழ்விடு தூது



என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் தமிழே, உனக்கு என் வந்தனம். இன்று நீ இருக்கும் நிலைமையை நன்கறிந்தபின்னும் நான் உன்னை நலமா என்று உசாவுவது பொருளற்றது. ஆயினும் உன்னால் நானிங்கே நலமென்று உரைப்பதில்தான் எனக்கெவ்வளவு இறும்பூது!

பொருளீட்டும் பொருட்டு கடல்கடந்துவந்து அந்நிய மண்ணை மிதித்தபோது அகம் கொண்ட ஆற்றாமையோடு அலைபாய்ந்த என் மனத்தைத் தேற்றியது நீதான். மனத்தின் பாரமிறக்க உன் தோள்களைத் தந்து உற்ற தோழனானாய். உற்றார் உறவுகளின் பிரிவை எண்ணிக் கலங்கும்போதெல்லாம் தாயாய் மடி தந்து தயை புரிந்தாய். கதைகளாய், கவிதைகளாய், தேன்சுவைப் பாடல்களாய், அலமாரிப் புத்தகங்களாய், பேச்சாய், மூச்சாய் என்னைச் சூழ்ந்து, என்னுள் இறங்கி, கரைந்து என்னை நானாக வாழவைத்துக்கொண்டிருக்கும் தண்டமிழே, உன் தாள்பணிந்து வணங்குகிறேன்.

பிறந்தமண்ணில் இருந்தபோது உன்மேல் எனக்குதான் எவ்வளவு உதாசீனம்! ஒருவரிக் கடிதம் எழுதவும் சோம்பிக்கிடந்த நான் இன்று பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். நிழலின் அருமை போல தமிழே.. உன் அருமையும் தாமதமாகத்தான் புரிகிறது. தாய்மண்ணைவிட்டு என் கால்கள் பலகாத தூரம் விலகி நடந்தாலும், தாய்மொழியே, செல்லுமிடமெல்லாம் உன்னை என் நாவில் சுமந்தே செல்கிறேன். எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஏற்றாலும் எப்போதும் மனம் ஏங்குவதென்னவோ உன்னைப் பார்க்கவும் கேட்கவுமே.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

என்று அன்று பாடிய முண்டாசுக்கவிஞனின் பாடலை முழுவதுமாய் அனுபவிக்கிறேன் இன்று. எங்காவது பொது இடத்தில் நீங்க தமிழா?” என்று கேட்பதிலும் கேட்கப்படுவதிலும் உள்ள சுகம்அதை அனுபவிப்பதுதான் இதம். கன்னற்தமிழே, உன் சுவையைக் காதுகுளிரக் கேட்கும்போது என்னை மறந்துபோகிறேன். என் காதல்மனைவியின் பிரிவையும் மறந்துபோகிறேன்.

பயிலுறும் அண்ணன் தம்பி -- அக்கம்
பக்கத்துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை -- என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் -- அன்பைப்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் -- தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

என்னும் பாவேந்தரின் பாடலை இன்று அனுபவத்தால் உணர்கிறேன். தாய் தந்தையை இழந்த எனக்கு ஒற்றைச் சொந்தமான, என் மனையாளின் பிரிவையும் தாங்கும் மனத்திடத்தைத் தந்த மகோன்னதத் தமிழே நீ வாழி!
என்றுமில்லாத வழக்கமாய் எதற்கித்தனை பீடிகையென்று உனக்குள் ஐயம் தோன்றியிருப்பதில் வியப்பில்லை. விவரமாய்ச் சொல்கிறேன். என்னை வாழவைக்கும் நீ, என் மனையாளையும் வாழ்விப்பாயென்ற நம்பிக்கையோடு வரையப்படுகிறது இம்மடல்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

என்று தன் வறுமை நிலையைப்பாடி, வடதிசையில் வாடிக்கிடக்கும் தன் மனைவியிடம் நாரையைத் தூதனுப்பிய சத்திமுத்தப் புலவரைப் போன்று, இன்றுன்னை நான் தென்திசைக்குத் தூதனுப்புகிறேன். காதற்தலைவனின் பிரிவால் நலிந்து, தனிமைத் துயருற்றுத் தவித்திருக்கும் என் தலைவியிடம் செல்வாய் செந்தமிழே! பிரிவாற்றாமையால் தவிக்கும் பேதை நெஞ்சம் அமைதிகொள்ளும் வண்ணம் அவள் மனத்துயரைப் போக்குவாய் பைந்தமிழே! என்னை மடியிருத்தி தாலாட்டி மனத்துயர் ஆற்றினாற்போல் அவளையும் ஆற்றுப்படுத்துவாய் என் அன்னைத்தமிழே!

அலம்பலும் சலம்பலுமாய் அக்கறையற்று வாழ்க்கை நதியின் போக்கில் போகவிருந்த என்னை அக்கறையாய் கரை சேர்த்தவள் என் அன்புக் காதற்கிழத்தி. இன்று அக்கரையில் புலம்பலுடன் கழிகிறது என் வாழ்க்கை, அவளை என் நெஞ்சகத்தில் இருத்தி. காற்றும் புகமுடியாவண்ணம் காதலுடன் வாழ்ந்திருந்த எங்கள் இருவருக்கிடையில் கடல் புகுந்த கதையைக் கேட்கவிரும்புவாயாயின் சொல்கிறேன், கேள்!

வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

என்று நானும் அவளும் காதலால் கலந்து களித்துக்கிடந்த உன்மத்த வேளையொன்றில் தன் உள்ளக்கிடக்கையொன்றைத் தெரிவித்தாள். என் கண்மணியின் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு, அவள்வழி உறவொன்றின் விழாவுக்காக, அழையாத வாயிலை மிதித்தோம். அவமானமுற்றுத் திரும்பினோம்.  

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

என்னும் குறளுக்கேற்ப பொருள் இல்லாதவர்களை ஏளனம் செய்வதும் இருப்பவர்களைப் போற்றுவதும்தான் உலக இயல்பு என்பதை அறிந்திருந்தும் மதியாதார் தலைவாசல் மிதியாதேஎன்னும் ஒளவையின் வாக்கை மதியாது சென்ற காரணத்தால் மனமுடைந்துபோனோம்.

காதற்பித்து தலைக்கேறிவிட்டதால், கால்காசுக்கும் வழியில்லாதவனைக் கட்டிக்கொண்டுவிட்டாள் என்று தூற்றும் ஊரின் வாயை அடைக்க ஒரு உபாயம் சொன்னேன். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தொரு அருமையான வாய்ப்பு அழைப்பு விடுத்திருக்கிறது, ஒப்பந்தத்தில் கையொப்பமிட, உன்னிடம் அனுமதி கேட்கும் துணிவின்றி அவதியோடு காத்திருக்கிறேன் கண்ணாட்டி என்றேன். என் வெற்று மார்பைச் சுட்டன அவளது பெருமூச்சும், சில கண்ணீர்த்துளிகளும். நெடிய மெளனத்திற்குப் பின் உம்மென்றாள் உம்மென்ற முகத்தினளாய்.

இதோ, சொடக்குப் போட்டாற்போல் ஓடிவிடும் மூன்றுவருடங்கள் என்று பொய் சொல்லிப் புறப்பட்டுவிட்டேன். என்  பொருளிலா வாழ்க்கையின் இன்னல் களைய கடல் கடந்து கண்காணா தேசம் புகுந்துவிட்டேன். அலைபேசியின் நல விசாரிப்புகளிடையே அவ்வப்போது எழும் அவளது விசும்பல்களும் அவற்றை அடக்க அவள் படும் பாடும் என் உள்ளத்தை உருக்கி கண்ணீரை உகுக்கவைக்கின்றன. எவ்வளவு தேறுதல் சொன்னாலும் பேதையவள் நெஞ்சம், பிரிவாற்றாமையினின்று விடுபடும் வழியறியாது பித்தாய்க் கரைகிறது. என்னை அயல்தேசம் செல்ல அனுமதித்ததன் மூலம் தான் தவறிழைத்தாற்போன்று குமுறிக் குறுகும் அவள் நெஞ்சுக்கு நான் எங்ஙனம் ஆறுதலளிப்பேன்? ஆதலால்தான் உன்னைத் துணைக்கழைக்கிறேன் தீந்தமிழே!

பொருள்வயின் பிரிதல் பற்றி நீ அறியாததா? பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு என கற்பு வாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே ஆறுவகையான பிரிவுகளை சங்க இலக்கியம் பகர்வதைச் சொல்லி பொருள்வயிற்பிரிதலொன்றும் ஆடவர்க்குப் புதிதல்ல என்று அவளிடம் எடுத்துரைப்பாய் தங்கத்தமிழே!

'நன்று'' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

என்னும் சங்கத் தோழி போன்று, ‘உன் கணவன் பொருளீட்டச் செல்லும்போது அதைத் தடுக்காமல், சென்றுவாருங்கள் என்று மலர்ந்த முகத்தினளாய் வழியனுப்பிவைத்தாய் தலைவி, நீ செய்தது சரிதான்என்று அவளுக்கு ஆறுதல் மொழி சொல்லத் தக்க அருந்தோழியரும் அருகில் இலர். ஆகவே என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் அழகுத்தமிழே, உன்னையே அவளுக்கு உற்ற துணையாக தூதனுப்ப விழைகிறேன். அதற்கு அச்சாரமாகவே இக்கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் அருந்தமிழே!

என் காதல் கனிமொழியாளைப் பிரிந்துவந்து ஆறு திங்கள் ஆகின்றன. புதிய பணியும், சூழலும், புதிய நண்பர்களோடு முத்தமிழே நீயும், காலத்தைக் கடத்தும் முயற்சியில் எனக்குத் துணைபுரியும் இவ்வேளையில் அங்கு அவளது ஒவ்வொரு நாளையும் நெட்டித்தள்ள அவள் படும் பிரயத்தனங்கள் மனக்கண்ணில் விரிந்து வேதனை தருகின்றன.  

இன்பத்தை விடவும் கடமையே கரம்பற்றியவனுக்கு அழகென்று காட்டுதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உன்னிடம் உண்டல்லவா? ஆயினும் இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கோடிட்டுக் காட்டினால் அவள் கொஞ்சம் ஆசுவாசங்கொள்ளலாம்.

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்  
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்  
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்  
வருகதில் லம்ம தானே  
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

பாலைவழிச்செல்லும்போது குடிக்க நீர் கிடைக்காது. வேட்டையாடிக் களைத்த செந்நாயொன்று காலால் மண்ணில் தோன்றிய சிறுபள்ளத்தில் ஊறும் நீரைக் குடிக்கும். நாய் குடித்தது போக மீந்திருக்கும் குறையளவு நீரில் அருகிலிருக்கும் மரத்தின் காட்டுப்பூக்கள் விழுந்து அழுகி நாறிக்கிடக்கும். என்னுடைய தாகத்துக்கு அந்த நீரை நான் பருகலாம். ஆனால் அழகிய வளைக்கரத்தால் நீ அந்நீரைப் பருகிட என் மனம் எப்படி இசையும்? எண்ணிப்பார்க்கவே வேதனை மிகுகிறதே என்று அரற்றுகிறான் பொருட்வயிற்பிரிதலின்போது தானும் அவனுடன் வருவதாய் சொன்ன தலைவியிடம். தனக்காக தன் உற்றார் உறவுகளை விட்டுவந்த காதல் மனைவியை இன்பமுற வைத்திருப்பதுதானே முறை? அதைச் செய்யத்தவறுதல் அன்றோ குறை? என்று எடுத்துரைப்பாய் சங்கத்தமிழே!

பிரிவுழிக் கலங்கல் வேண்டாம் கண்ணேவந்துழி மகிழ்ச்சிக்கான காலம் விரைவிலேயே கைகூடிவரும், உன் எண்ணம் போல் ஊரும் உறவும் மெச்ச உன்னத வாழ்க்கை வாழுங்காலம் ஓடிவரும் என்று நல்வாக்கு சொல்லி அவளை நலமோடு வாழ்விப்பாய் நற்றமிழே! நான் மீண்டும் அவளைச் சேருங்காலம் வரையிலும் அவளை உன்பால் ஈர்த்து இணக்கமாக்கி இன்புறச் செய்வாய் இன்தமிழே!

வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்;
வந்தமத வேழம் வணங்கிடுமே; - சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்?

என்னும் கவிமணியின் பாடலுக்கேற்ப இசையாய், பாடலாய் அவள் இதயத்துக்கு இதமூட்டி, கவியாய், காவியமாய் அவள் கருத்தினில் நுழைந்து, எழுத்தாய், எண்ணமாய் அவளைச் சேர்ந்து, உன் கரங்களுக்குள் அவளைக் கோர்த்து சற்றே என்னை இளைப்பாற்றுவாய் இயற்றமிழே! கன்னற்சுவையும் கற்கண்டுப்பாகும் தோற்கும் நல்லிலக்கியச்சாற்றினை அவள் பருகச் செய்வாய் தேன்மொழி! என் கண்மணியின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் இனி உனதே! அவள் பிரிவுத்துயராற்றும் வல்லமை, வண்டமிழேஉனையன்றி வேறெவருக்குண்டு?

உன் பொறுப்பில் அவளை ஒப்படைத்துவிட்டு முழுச்சிரத்தையோடும் உத்வேகத்தோடும் என் கடமையில் கண்ணாவேன். காலநீட்டிப்புக்கு இடங்கொடாமல் செவ்வனே பணிக்காலம் முடித்து என் பாரியாளைப் பார்க்கப் பரவசத்தோடு வீடு திரும்புவேன்.  

பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த     
வெண்புறக் களரி விடுநீ றாடிச்     
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்     
பாரம் மலிசிறு கூவலின் தணியும்  
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ   
எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்     
கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட     
விளரூன் அம்புகை எறிந்த நெற்றிச்   
சிறுநுண் பல்வியர் பொறித்த
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே

பசிய கண்களையுடைய யானை தன் பருத்தக் காலால் உதைத்துப் பொடியாக்கிய பாழ்நிலத்தின் புழுதியில் நடந்து களைத்த வருத்தமெல்லாம் சுனைநீரால் தணியும். அதுபோல் தலைவன் படும் துயரமெல்லாம், வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டிப் பின்னர், உன்னோடு இனிதே இல்லறம் நடத்துதற்பொருட்டன்றோஇரவு நேரத்திலும் வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு, அடுப்பூதிப் புகைபடிந்த நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க, நெய் மணக்கும் ஊண்சோற்றை குறுநடையுடன் நீ பரிமாறும் அழகில் மயங்கி நிற்பாரன்றோ? என்று அன்றைய தோழி, தலைவியைத் தேற்றியது போல் நீயும் என் தலைவியைத் தேற்றி இன்புறச் செய்திடுவாய்.

எங்கள் உயிருக்கு நிகராய், எங்கள் உயர்வுக்கு வானாய், எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேனாய், எங்கள் பிறவிக்குத் தாயாய், எங்கள் வளமிக்க உளமுற்ற தீயாய்… தமிழே என்றென்றும் நீ வாழீ!

இங்ஙனம்,
உன்னால் வாழ்ந்துகொண்டிருப்பவன்.
*******************

(படத்துக்கு நன்றி - இணையம்)