தன் அழகின் மீதே சுயமோகம் கொண்டு அழிந்துபோன நார்சிசஸ் பற்றியும் நார்சிசிஸம் பற்றியும் நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நார்சிசிஸம் என்றாலே தன் அழகின் மீதான மோகம் என்றே பல பேருடைய மனதில் படிந்துபோயிருக்கும். இந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் பூதாகரமான உளவியல் சிக்கல் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது.
சுயமோகம் என்பது கிட்டத்தட்ட எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு சாதாரண குணம்தான். தோற்றத்தில் சிரத்தை எடுத்துக்கொள்வது, மிகைநேர்த்தியாக உடுத்துவது, கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் சிகையைத் திருத்துவது, எடை கூடியதை உணர்ந்தவுடன், பார்ப்பவர்களிடமெல்லாம், நான் குண்டா ஆயிட்டேனா என்று கேட்டு, ‘அப்படி ஒண்ணும் இல்ல, லேசாப் பூசினாப் போலத்தான் இருக்கே’ என்ற பதிலை எதிர்பார்த்து சமாதானமடைவது, ‘உனக்கு மட்டும் எந்த ட்ரெஸ் போட்டாலும் பொருத்தமா இருக்கு’ ‘நீ சமைச்சா ஊரே மணக்குது’ ‘உன்னைப் போல ஒருத்தர் இனிமேல் பிறந்துதான் வரணும்’ போன்ற புகழ்ச்சிகளில் புளகாங்கிதமடைவது என ஆண் பெண் பேதமற்று நம் எல்லாருக்குள்ளும் ஒரு சில சுயமோக விருப்புகள் இருக்கத்தான் செய்யும். இருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இருக்காது. நம்மையே நமக்குப் பிடிக்காமல் கூட போய்விடலாம். ‘என்னத்த வாழ்க்கை’ என்று ‘என்னத்த கண்ணையா’ போல புலம்ப நேரிடலாம்.
ஒருவரது சுயமோக சுபாவம், யாரையும் பாதிக்காத அளவில் சாதாரண இயல்பாக இருக்கும்வரை பிரச்சனை
இல்லை. ஆளுமைக் குறைபாடாக (Narcissistic personality disorder) மாறும்போதுதான் அவரைச் சார்ந்தோருக்கான அச்சுறுத்தல் ஆரம்பமாகிறது.
கிட்டத்தட்ட அது ஒரு புதைகுழி போல, நதிச்சுழல் போல, கருந்துளை
போல மெல்ல மெல்ல அடுத்தவர்களை உள்ளிழுத்து அவர்களுடைய ஆன்மாவை அழிக்க
ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தச் சுழலுக்குள் மூழ்கடித்து அவர்களுடைய
வாழ்வையே மூளியாக்கிவிடுகிறது.
சுயமோக ஆளுமைக் குறைபாட்டைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அப்போதுதான் அப்படிப்பட்ட மனநிலையுள்ள ஆட்களிடமிருந்து நம்மால் எச்சரிக்கையாக விலகி இருக்கமுடியும். அவர்களுடைய சுயமோகச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாத வகையில் விழிப்புணர்வு பெற முடியும். அப்படியே சிக்கிக்கொண்டாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழியைக் காணமுடியும்.
சுயமோக ஆளுமைக் குறைபாடு உடையவர்கள் எப்படிப்பட்டவர்கள்? தாங்கள் எப்போதும் எங்கும் எவராலும் ஆராதிக்கப்படவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். எல்லோரையும் விட தாங்களே சிறந்தவர்கள், திறமைசாலிகள், உத்தமர்கள், மேலானவர்கள், மேன்மையானவர்கள், அதி உன்னதமானவர்கள் என்ற மாயச்செருக்கோடும் மமதையோடும் திரிபவர்கள். அவர்கள் தம்மை மட்டுமே எங்கும் எப்போதும் முன்னிறுத்திப் பார்ப்பார்கள். நான், என், எனது, எனக்கு, என்னுடைய, என்னால், என்னை போன்ற வார்த்தைகள் இல்லாமல் எந்த வாக்கியத்தையும் இவர்களால் ஆரம்பிக்கவும் முடியாது, முடிக்கவும் முடியாது. இந்தப் பூமியே தங்களை மையமாக வைத்துச் சுற்றுவதான எண்ணத்தில் ஆழ வேரூன்றியவர்கள்.
சுயமோக ஆளுமைக் குறைபாடுள்ளவர்கள் மற்றவர்களைப் பகடைக்காயாய்ப் பயன்படுத்தும் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள். அடுத்தவரை தங்கள் வலையில் விழவைப்பதில் வல்லவர்கள். தங்கள் அலாதியான திறமைகளையும் சாகசங்களையும் பற்றிப் பேசிப்பேசிக் கவர்ந்திழுப்பதில் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அதீத தன்னம்பிக்கையோடு கூடிய அபாரமான எதிர்காலத் திட்டங்களைக் கேட்டு எதிரில் இருப்பவரின் சுய மதிப்பீடு ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். இங்குதான் அவர்கள் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் வலையில் விழ ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து அவர்களால் மீளமுடியாமலேயே போய்விடுகிறது.
இவர்கள் தாங்கள் செய்த தவறை ஒருபோதும்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரவும் மாட்டார்கள்.
தவறை ஒப்புக்கொண்டால்தானே மன்னிப்புக் கேட்கத் தோன்றும்? தாங்கள்
பிழை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று நூறு சதவீதம் உறுதியாக நம்புவார்கள். அதனால்
இவர்களால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக்கொள்ள இயலாது. தம் மீது வைக்கப்படும்
விமர்சனங்களையும் குறைகளையும் பரிசீலிக்கவோ, நிதானமாக
அணுகவோ தெரியாது. ஆக்ரோஷமாக எதிர்கொள்வார்கள். எதிரிலிருப்பவரைப் பேசவிடவே
மாட்டார்கள். விதண்டாவாதம் செய்து விஷயத்தைத் திசைதிருப்புவார்கள் அல்லது அவசரமாக
அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள்.
இவர்களுக்கு வாதத்திறமை குறைவு என்பது
அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ள
மாட்டார்கள். தாங்கள் சொல்ல வேண்டியவற்றை எழுத்து, ஒலி
அல்லது ஒளி வடிவில் வெளிப்படுத்துவார்கள். அதன் மூலம் அவர்களது கருத்தையே இறுதிக்
கருத்தாக்கிவிட முடியும். எதிர்த்தரப்புக் கருத்தைக் கேட்கவேண்டிய அவசியம்
கிடையாது. எதிராளி கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவிக்க
நேரும் சூழலையும் தவிர்த்துவிடலாம்.
சுயமோக ஆளுமைக் குறைபாடுடையவர்கள்,
தவறு இழைத்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால்
அவ்வளவுதான். தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தாம் தூம் என்று
குதிப்பார்கள். அடுத்தவர்கள் தான் காரணம் என்று இறுதிவரை சாதிப்பார்கள்.
அடுத்தவர்க்கு உளரீதியான பாதிப்பை உண்டாக்கும் அவர்கள், பிரச்சனை
பெரிதாகும்போது சட்டென்று பாதிக்கப்பட்ட
நபராக தம்மை நிறுவுவதற்குப் (victim play) பெருமுயற்சி
மேற்கொள்வார்கள். பெரும்பாலும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.
எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்வார்கள். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் காரியத்தில் இறங்குவார்கள். நேரத்துக்கொரு பேச்சு பேசுவார்கள். உணர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார்கள். என்ன நினைக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. மர்மமான வாழ்க்கைமுறை இவர்களுடையது.
சுருக்கமாய்ச் சொல்லவேண்டும் என்றால்
தங்களைச் சுற்றி ஒரு மாய உலகை சிருஷ்டித்துக்கொண்டு தங்களைத் தாங்களே கடவுளாக
எண்ணி வாழ்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களும் அப்படியே எண்ண வேண்டும், எண்ணுவது மட்டுமல்ல, வணங்கித் தொழவேண்டும் என்று
எதிர்பார்ப்பவர்கள். அப்படிதான் நடக்கவேண்டும் என்று நாலாபக்கத்திலிருந்தும்
நிர்பந்திப்பவர்கள். அப்படி எண்ணப்படாத பட்சத்தில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி
தண்டனைகளை வழங்கத் தயங்காதவர்கள்.
சுயநலமிகளுக்கும் இவர்களுக்கும் என்ன
வித்தியாசம்? சுயநலமிகளுக்கு தங்கள் காரியம்
முக்கியம். யார் காலைப் பிடித்தாவது காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். யாரையும்
கெஞ்சவோ, முகத்துதி பண்ணவோ தயங்கமாட்டார்கள்.
ஈகோவையெல்லாம் ஓரங்கட்டி எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அவ்வளவு கீழே இறங்கி தாங்கள்
நினைத்தக் காரியத்தை முடிப்பார்கள்.
சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்கள்
அப்படியல்ல. சுயநலமிகளுக்கு எதிர்முனையில் நிற்பவர்கள். ஈகோவின் உச்சத்தில்
இருப்பவர்கள். மற்றவர்கள் தன்னை முகத்துதி பண்ண வேண்டும், தன்
காலைப் பிடித்துக் கெஞ்ச வேண்டும், ‘ஐயா, உம்மைப் போல இந்த உலகத்தில் யாருமே இல்லை’ என்று புகழாரம்
சூட்டவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள். சுயநலமிகளின் இலக்கு காரியம்
என்றால் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் இலக்கு சுயதிருப்தி. அதற்காக எதையும்
இழக்கத் தயாராக இருப்பார்கள், ஈகோவைத் தவிர.
சுயமோக ஆளுமைக் குறைபாடு உடைய
பிரபலங்கள் பலர் உண்டு. அவர்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் தாங்கள் பேசுபொருளாக
இருப்பதை விரும்புவார்கள். தாங்கள் மட்டுமே பேசுபொருளாய் இருப்பதை
விரும்புவார்கள். தங்கள் முகத்தில் ஊடக வெளிச்சம் தொடர்ந்து பாய்ச்சப்படும்படி
பார்த்துக்கொள்வார்கள். அல்லது ஊடக வெளிச்சம் பாயுமிடங்களில் தங்கள் முகத்தை
வலிந்துகொண்டுபோய் வைத்துக்கொள்வார்கள். பணம், புகழ்,
செல்வாக்கு இன்ன பிற சங்கதிகள் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப்
பெற்றிருப்பார்கள். என்ன விலை கொடுத்தும் அந்த இடத்தைத் தக்கவைத்திருப்பார்கள்.
தங்களைத் துதிபாடும் கூட்டமொன்றை எப்போதும் பக்கத்தில் வைத்திருப்பார்கள். போலியான
முகத்துதிகள் என்று அறிந்தபோதும் அவற்றை ரசித்து உள்ளுக்குள்
மகிழ்ந்திருப்பார்கள்.
(படங்கள் உதவி இணையம்)
நல்ல பதிவு. மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை புறம் தள்ள வேண்டும்.
ReplyDeleteஅடையாளம் கண்டுகொள்வதற்குள் பலருக்கு வாழ்நாளே முடிந்துவிடுவதுதான் கொடுமை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம்.
Delete